அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஆனால்... ஆகவே...!
2

இதைக் கண்டோர் கண் கலங்கினர்.

இது குறித்துப் பேசினோர், பரிதாபப்பட்டனர்.

தி. மு. க. க்களின் திட்டம் எங்களுக்குப் பிடிக்காது, ஆனால் அவர்கள் மீது சர்க்கார் ஏவிய அடக்கு முறையைக் கண்டிக்கிறோம்.

என்று நம்மோடு நேசமற்ற ஏடுகளும் எழுதின.
இதுகள் என்னைவிட்டுப் பிரிந்துபோய் தனிக் கட்சி வைத்துக்கொண்டன, ஆனால் பாவம், வடநாட்டு எதிர்ப்பு உணர்ச்சியைக் கைவிட வில்லை; நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டும் அளவுக்கு ஆர்வமும் ஆற்றலும் காட்டினர்; மகிழ்கிறேன்; அவர்களைப் போலீஸ் காட்டு மிராண்டித்தனமாக அடித்தனர்; கண்டிக்கிறேன்.

இதுபோல் பெரியார் கூறும் போக்கிலே இருந்தால், பாசம் பால்போல் பொங்குமல்லவா! இப்படித்தான் பேசுவது முறை என்று தானே பகைவரும் கூறுவர்! கட்சியிலிருந்து, பிரிந்து போனார்கள், ஆனால் கடுமையான அடக்குமுறைக்கு ஆளானார்கள், என்று பச்சாதாபம் காட்டத்தானே வேண்டும்.

அந்தச் சம்பவத்தின்போது, ஆனால் போட்டுத்தான் பெரியார் பேசினார், எழுதினார்; எப்படி? நம்மிடம் பச்சாதாபம் காட்டும் முறையில்!

அடக்குமுறையைக் கண்டிக்கக் கடற்கரையில் கூட்டம் கூட நடத்தினார்.

அந்த "ஆனால்' அவருடைய அவசரகாலத் திட்டம் என்பது இப்போது அவர் ஆனால் என்னும் பதத்தை வேறு நோக்குடன் பயன்படுத்துவதலிருந்து தெரிகிறது.

இப்போது பெரியார் பேசுகிறார், நான் கொடிகொளுத்து என்றேன்.

சர்க்கார் என்னிடம் நெருங்கவில்லை.

கருப்புக் கொடி பிடித்தோம்; போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது.

ராமர் படம் கொளுத்தினேன்; ஒரு துளி சர்க்கார் அடக்குமுறையும் கிடையாது.

நீ, நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டினாய் என்ன செய்தார்கள்?

பூட்ஸ் காலால் உதைத்தார்கள், உருட்டி உருட்டித் தள்ளினார்கள்.

என்று பேசியிருக்கிறார்.

நான் கிளர்ச்சி செய்தேன் அடக்குமுறை ஏவவில்லை, ஆனால் நீ கருப்புக் கொடி காட்டினாய், உதை உதை என்று உதைத்தார்கள்! என்று பேசுகிறார்.

ஆனால் எனும் சொல் இதற்குப் பயன்பட்டது!

ஒருமுறைக்குப் பன்முறை இந்தப் போக்கினை அலசிப்பார், தம்பி, தமிழகத்தின் அரசியலே புரியும்!

நம்மோடு சேர்ந்திருப்பவர்களுக்குப் பெரியார் பயமூட்டப் பார்க்கிறார்.

ஓ! தோழர்களே! அங்கே இருந்தால் உங்களுக்கு அல்லல், அவதி, அடக்குமுறை தாக்கும். என்னோடு இருந்தால், துளியும் தொல்லை இல்லை. துரைத்தனம் உங்களைத் தொடாது.

என்ன கிளர்ச்சி செய்தாலும், என்னோடு இருப்பவருக்கு இம்சை நேரிடாது. சந்தேகமிருந்தால், கொடி கொளுத்தும் திட்டம், பிள்ளையார் உடைப்பு, ராமர் எரிப்பு எதை வேண்டுமானாலும் பார். போலீஸ் நம்மை ஏதாவது செய்ததா? அதுகள் கதை தெரியுமா? அதுகள் கருப்புக் கொடி பிடித்தன! உதைத்தார்கள்! உருட்டினார்கள்! சுட்டுத் தள்ளினார்கள்.

ஆகவே அதுகளோடு சேராதே! என்னோடு வா! தொல்லை வராது! துரைத்தனம் தொடாது!
என்று அழைக்கிறார்.

பூட்ஸ் காலால் உதைபட்டோம் - உண்மை. உருட்டி உருட்டித் தள்ளப்பட்டோம், உதை உதை என்று உதைத்தனர்; மறுக்க வில்லை! துப்பாக்கியால் சுட்டனர் - பிணமாயினர் தோழர்கள்! ஆமாடா தம்பி ஆமாம். மிகமிக நாகரீகமான முறையில், நல்லாட்சியுள்ள எந்த நாட்டிலும் அனுமதிக்கப்படும் கருப்புக் கொடி காட்டும் முறையில் கிளர்ச்சி செய்தோம் - பெரியார் கூறுகிறபடி

பூட்ஸ் காலால் உதைத்தனர்.

உருட்டி உருட்டித் தள்ளினர்.

உதை உதை என்று உதைத்தனர்.

இல்லை என்று சொல்லவில்லை - இது இழுக்கு என்று பேசும் பெரியாரோடு நாம் இன்று இல்லை.

உதைப்பான்; பட்டுக்கொள்.

அடிப்பான்; பொறுத்துக் கொள்.

சுடுவான்; தாங்கிக்கொள்.

பத்துபேர் செத்தாலும் கவலைப்படாதே.

செத்தவர் போக மிச்சம் இருப்பவர், மானத்தோடு வாழட்டும்.

இப்படிப் போதித்த பெரியாருடன் நாம் இருந்தோம்.

அடக்குமுறை, வெறிக்கோலத்தில் துரத்தியபோது, நம் தோழர்கள் கலங்காது நின்றபோது, மனக் கண்ணால் அந்தப் பெரியாரைத்தான் கண்டனர்.

அடிபட்டோம், உதைபட்டோம், என்று கூறிக் கொள்வதிலே, வெட்கமில்லை, பெருமிதத்தோடு கூறுகிறோம்; தாயக விடுதலைக்காக இந்த அளவுக்காவது துணிவு பெற முடிந்ததே என்று மகிழ்ச்சியோடு கூறுகிறோம்; பெரியார் நம்மோடு இல்லாதிருக்கும் இந்நிலையில், அடக்குமுறை கண்டு அஞ்ச நேரிட்டுவிடுமோ என்று ஐயம் கொண்டிருந்த நாம், இல்லை, அவர் இன்று நம்மோடு இல்லாமற் போகலாம், அவர் ஊட்டிய ஆர்வமும் நம்மை விட்டுப் போய்விடவில்லை.

உதைக்கிறீர்களா? பட்டுக் கொள்கிறோம்.

சுடுகிறீர்களா? தாயகத்தின் தளை உடைத்திடும் பணிக்கு இன்னுயிர் தருகிறோம் என்று கூறினோம்.

இது, என்றென்றும், எண்ணுந்தொறும் நெஞ்சினை நெகிழச் செய்திடும் சம்பவம்.

இது கேலிக்கும் உதவும் என்று யார் எண்ணியிருப்பார்; ஆனால் - ஆகவே எனும் பொல்லாத சொற்களின் போக்கினால் தம்பி, எது கண்டு எவரும் பாராட்டுவரோ அதே கஷ்ட நஷ்டம் ஏற்ற சம்பவத்தையே, பெரியார், கேலிபேசப் பயன்படுத்திக்கொள்ளும், விசித்திரம் ஏற்படுகிறது.

தம்பி, பெரியாராவது, தம்மோடு இருந்தால் கிளர்ச்சி செய்யலாம், சர்க்கார் "கிச்சுகிச்சு'' மூட்டுவரேயன்றி கொட்ட மாட்டார்கள், தட்ட மாட்டார்கள் என்று ஆசைகாட்டி, அதன் மூலமாக நமது அணிவகுப்பிலேயிருந்து யாரையாவது இழுத்துக்கொள்ளலாமா என்று முயற்சிக்கிறார் என்று
வைத்துக்கொள்வோம்; ஆசைக்கு ஆட்படும் போக்கு நம்மிடம் இருந்தால், இதைவிட, காங்கிரஸ் சுவைமிக்க ஆசை காட்டுகிறதே.

பதவி கிடைக்கும் என்று! - அணி வகுப்பிலே, யார் இளித்தவாயராயினர்!

கொள்கைக்காக கொடிய அடக்கு முறைக்கு ஆளாகினார்கள் என்பது புகழின் சின்னமாயிற்றே! இதைக் காட்டியும் கேலி பேச முடிகிறதே!!

அடக்குமுறை கண்டு அஞ்சாமலிருக்கும் மனப்போக்கு பூண்போட்ட தடியால் அடித்தாலும், பூட்ஸ் காலால் உதைத்தாலும், தாங்கிக் கொள்ளும் வீர உள்ளத்தை, பெரியாரே! எமக்குத்தாரும்!! தாரும்!! - என்று கேட்டுக் கேட்டுப் பெற்றோம்.

இன்று அடிபட்டார்கள், உதைபட்டார்கள், ஆகையால் அங்கே போகாதீர்கள் - நான் நடத்தும் கிளர்ச்சியிலே புகை இருக்கும் நெருப்பு இராது; நெருப்பே தீண்டினாலும் சுடாது சுட்டாலும் புண்ணாகாது; புண்ணானாலும் மருந்தில்லாமலே குணமாய்விடும் என்று பேசுவது கேட்டா, தம்பி, நீ நமது கழகத்தைவிட்டுச் சென்றுவிடுவாய்! அப்படி நீ கேட்பதோ, தவறு அண்ணா!! என்று கேட்டிடும் எண்ணற்ற தம்பிமார்களின் கோபப் பார்வையை அல்லவா நான் காண்கிறேன்!

அடிப்பார்கள்! உதைப்பார்கள்! ஆகவே, என்னோடு வாருங்கள் - எந்தக் கிளர்ச்சி செய்தாலும் சர்க்கார் கிட்டே கூட வரமாட்டார்கள் என்று ஆசை காட்டும் பெரியார் ஒரு அரைமணி நேரம் மட்டும்தான் பேசுகிறார். உடனே உண்மைப் பெரியார் முழக்கமிடுகிறார், அதே கூட்டத்தில் 5000 பேர் தூக்குமேடை ஏறச் சித்தமாக இருக்கவேண்டும் தெரிகிறதா! - என்று கூறுகிறார்!

இதிலிருந்து உனக்கு என்ன, தம்பி, புரிகிறது! எனக்குத் தலை சுற்றுகிறது!

அங்கே இருந்தால் அடிப்பார்கள், ஆகவே அங்கு இராதே; ஆனால் இங்கே வா, தூக்குமேடை ஏற!!

இதிலே உள்ள ஆகவே ஆனால் - இவைகளின் போக்கு எப்படி இருக்கிறது, என்பதை ஆரஅமர இருந்து எண்ணிப்பார்!

அடிபட்டோரே! உதைபட்டோரே! அடக்குமுறைக் கொடுமைக்கு இலக்கானோரே! அவர்கள் எம்மை அடித்தபோது ஏற்பட்ட வேதனையைக் காட்டிலுமன்றோ, அது குறித்துக் கேலி பேசுவது கேட்டு வேதனை எழுகின்றது. அருந்தொண்டாற்றக் கிளம்பினோரையா அடித்திடக் கிளம்பினீர்! அறிவிலிகாள்! பிரிந்தோர் எனினும் அவரும் எம்மவர் என்பதை மறந்தா நிற்போம்! என்று கூறி, களம் வந்து துணிபுரிவர் நல்லோர். அந்த அளவுக்கு மனம் இடம் தராது போயினும், ஐயகோ! அடிக்கின்றனரே, அறியாச் சிறாரை! என்று கூறிக் கண்ணீர் சிந்தவேனும் இசைவர் இதயம் படைத்தோர். அடித்தனர், உதைத்தனர், உருட்டினர்! என்று கேலியல்லவா செய்கின்றனர் - என்று தோன்றும் தம்பி! இதையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.

போர்க்குறிக் காயமே
புகழின் காயம்!
யார்க்கது வாய்க்கும்!
ஆ! ஆ! நோக்குமின்!
அனந்தம் தலைமுறை
வருந்தனி மக்கள்
தினந்தினம் தாம் அனுபவிக்கும்
சுதந்திரம் தந்தது
தம்முனோர் நொந்த
புண்ணென் றெண்ணிச்
சிந்தை அன்புஉருகிச்
சிந்துவர் கண்ணீர்

என்றார் மனோன்மணீயம் ஆசிரியர்.

புகழின் காயம் பெற்றோம்! மேலும் மேலும் பெறுவதற்கான உள்ள உரம், இத்தகு கேலி மொழிகளால் ஏற்படும். ஆகவே, தம்பி, கவலைப்படுவானேன்!

ஆனால்... ஆகவே எனும் சொற்களின் சிலம்பம் தரும் சுவையான பாடம் கண்டு மகிழத்தான் இதைச் சொல்கிறேனே யல்லாமல், இதிலே குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்காக அல்ல.

"இந்த நாட்டை இன்றைய தினம் ஆளுகிறவர்கள் வடநாட்டார்கள்; பணியாக்கள், மார்வாடிகள்,
குஜராத்திகள்தானே! அவர்கள் இந்த நாட்டை ஆளுவதற்கு உள் உளவாய் இருந்துகொண்டு இருப்பவர்கள் நம் நாட்டுப் பார்ப்பனர்கள்; அவர்களுக்குக் கூலியாயிருப்பவர்கள்,

திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சில விபீஷணர்களும்,

அனுமார்களும் ஆவார்கள்.''

பெரியார் பேருரையில் அவர் பகுதி இது.

ஆகவே, விபீஷணர்களையும் அனுமார்களையும் தேர்தலில் ஆதரிக்கக்கூடாது. இந்நாட்டு காமராஜர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள்தான், உள் உளவு ஆட்கள் - என்று கூறத் தோன்றும் உனக்கு.

ஆகவே போட்டால் இந்தக் கருத்துத்தான் பிறக்கும்.

ஆகவே, ஆகவே போடாமல் ஆனால் போட்டு காமராஜர் காங்கிரஸ்காரர்தான், அந்த முறையில் வடநாட்டுக்குக் கங்காணிதான், ஆனால் அவர் நல்லவர், நம்மவர், ஆகவே அவரை ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம், அவர் ஒண்டிக்கட்டையாக வெற்றிபெற்றால் பலன் இல்லை, ஆகவே
காங்கிரஸ் மெஜாரடியாக வெற்றி பெறப் பாடு பட்டுத் தீரவேண்டும். ஆனால் காங்கிரஸ் நல்ல ஸ்தாபனம் என்று எண்ணிவிடாதீர்கள், அது முதாளிமுகாம், பார்ப்பனப் பாதுகாப்புச்சபை, வடநாட்டுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் கங்காணி ஸ்தாபனம் - என்று எடுத்துரைக்கப்படுகிறது.

இந்த அரசியல் தனி ரகமாக இருக்கிறதே என்பதற்காக அல்ல இதனைக் கூறுவது, இந்தக் கருத்தோவியத்தில், ஆனால் ஆகவே என்ற சொற்கள் அரசியல் போக்கையே தம் இஷ்டப்படி ஆட்டிப்படைக்கும் வேடிக்கையைக் கவனித்துக் களிப் புறுவதற்குத்தான்.

அண்ணா! உன் நோக்கம் இந்த இரு சொற்கள் நடத்தும் சிலம்ப வேலையின் வேடிக்கையை எடுத்துக்காட்டுவதாக இருப்பினும், இடையிடையே வரும் அரசியல் பிரச்சினைகளை அடியோடு எப்படி ஒதுக்கிவிட முடியும் - ஆகவே ஒரு கேள்வி கேட்கிறேன் - காங்கிரஸ் கெட்டதுதான், காமராஜர் போன்றவர்கள் வடநாட்டு ஆதிக்க வளர்ச்சிக்கு உடந்தைதான் ஆனால் காங்கிரசை இதற்காக ஒழிப்பது என்று நாம் முயற்சிக்கும்போது, அதனைச் சாக்காகக்கொண்டு சந்து கிடைத்ததும் பொந்து ஆக்கிக்கொள்ளும் நச்சுகள் இடம் பெற்றுவிட்டால் என்ன செய்வது சொல்லு கேட்போம் - என்று கேட்கத் தோன்றும், தம்பி.

பெரியார் இதை எண்ணிப் பார்க்காமலில்லை! இது பற்றி அவர் தீர்க்கமாக ஆலோசித்துப் பார்த்தார் பிறகு, சொல்லுகிறார் - சொல்லி இருக்கிறார்...

காங்கிரசை ஒழிப்பதற்கு முதல் வேலை காங்கிரஸ் எதிரிகளுக்கு வெற்றி உண்டாக்குவதேயாகும். உண்மை எதிரி கிடைக்காத இடத்தில் எதிரி வெற்றிபெறமாட்டார் என்று கண்ட இடத்தில், வசதிபோலப் பார்த்து யாருக்கு ஓட்டுப் போட்டால், காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதாகக் காணக்கிடைக்கிறதோ அந்தப் பெட்டியில் ஓட்டுப் போடுங்கள். வேறு அபேட்சகர் இல்லை என்றோ, வெற்றி பெறமாட்டார் என்றோ கண்ட இடத்தில், பார்ப்பனருக்கு ஓட்டுப் போட்டால்தான் காங்கிரஸ் அபேட்சகர் தோல்வியுறுவார் என்று கண்டால், பார்ப்பனருக்கு ஆவது ஓட்டு செய்து காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டியது அறிவுடமையாகும். கங்காணிகள் - துரோகிகள் - உண்மைச் சூத்திரர்கள் பேச்சைக் கேட்டு எந்தக் காரணத்தைக்கொண்டும் காங்கிரஸ் கங்காணிப் பெட்டியில் ஓட்டு விழும்படி நடந்துகொள்ளாதீர்கள். எப்படியாவது காங்கிரஸ் அழியவேண்டும், ஒழிய வேண்டும். ஏன் என்றால் அது நம் நாட்டுப் பார்ப்பனர் போல் தேவை இல்லாத ஸ்தாபனம் கேடானகேட்டை விளைவிக்கும் உள்மாந்தை போன்ற ஸ்தாபனம் என்பதே நமது முடிவு.''

தம்பி! இன்னும் என்ன விளக்கம் வேண்டும்?

அப்போதைக்கு இப்போதுள்ள நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்தால். சென்ற தேர்தலின்போது, அபேட்சகர்கள் நிறுத்தும் வேலையில் ஆச்சாரியார் ஈடுபடவில்லை, இப்போது டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் அந்தக் காரியத்தைக் கவனிக்கப் போகிறார்!

இந்தக் கட்டம் வந்ததும், மீண்டும் அந்தப் பொல்லாத சொற்கள் வந்துவிடுகின்றன! வளைவும் நெளிவும் தெரிகின்றன.

ஆனால், ஆகவே என்ற சொற்களின் சுவைமிகு காதையை நான் நமக்குச் சாதகமாக்கிக்கொண்ட கோபத்தில் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள், அதே பாணியில் தன்னால் எழுதும். படித்துச் சுவைத்திடுவதுடன், நாம் நமக்காகமட்டுமல்ல, நம்மைத் தாக்குவோருக்கும் உதவுகிறோம் என்று பெருமையும் கொள்ளலாம்.

நினைக்க நினைக்க வேடிக்கை வேடிக்கையாக இருக்கிறது இந்த இரு சொற்கள் நடத்தும் விளையாட்டு.

குமாரசாமிராஜா, வடக்கு பொருளைப் பாழாக்குகிறது ராஜ்ய சர்க்கார் விஷயத்தில் அனாவசியமாகக் குறுக்கிடுகிறது, அதன் இந்தப் போக்கை நாம் எதிர்க்கவேண்டும் - என்றெல்லாம்
பேசினாரல்லவா!

அந்தப் பேச்சுடன் அவர், "ஆகவே' எனும் சொல்லை இணைத்திருந்தால், இன்று, தென்னாட்டு விடுதலைப் போர்த் தலைவராகிச் செயல்பட வேண்டிவரும். அவருக்கு அது விருப்பமில்லை. ஆகவே, "ஆகவே' வை விட்டுவிட்டார். இப்போது "ஆனால்' பேச ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது.

வடக்கு அப்படிச் செய்கிறது, அது, இது என்று நான் சொன்னேன் - ஆனால் எனக்கு வடநாடு தென்னாடு பேதம் கிடையாது - அந்தக் காரியத்தை நான் ஆதரிக்கவும் மாட்டேன் - எதிர்க்கக் கூடச்செய்வேன் - நான் காங்கிரஸ் வாதியாக்கும்! - என்று நிருபரிடம் கூறுகிறாராம்.

பார்த்தாயா; தம்பி, ஒரே ஒரு சொல், ஒருவருடைய போக்கையே மாற்றிவிடுகிறது.

"ஆகவே'' என்று அவர் கூறினால் எப்படி இருந்திருக்கும் - ஆனால் என்று கூறும்போது எப்படி இருக்கிறது!

மைசூரில் முதலமைச்சராக இருந்த அனுமந்தைய்யாவும், காங்கிரஸ் கெட்டுவிட்டது

சுயநலமிகள் புகுந்து விட்டார்கள்.

இந்தியா, அமெரிக்காவுக்கோ ரμயாவுக்கோ அடிமை ஆகிவிடும்.

ஏதோ, நேருவின் புகழ், செல்வாக்கால் அந்த அவதி இன்னும் வரவில்லை.

என்பதாகப் பேசியிருக்கிறார்.

"ஆகவே'' - என்று பேசினால் ஒரு தினுசான அனுமந்தய்யாவும், "ஆனால்' என்று பேசினால் முற்றிலும் வேறுவிதமான அனுமந்தய்யாவும் தெரிவார்களல்லவா!

ஆகவே, தம்பி, ஆனால் என்பதற்கும் ஆகவே என்பதற்கும் உள்ள மகத்தான சக்தி, பிரச்சினைகளை, நிலைமையை, போக்கை எப்படி எப்படி எல்லாம் உருவாக்க, மாற்றி அமைக்க முடிகிறது என்பதுபற்றி எண்ணிப்பார்த்தேன், ஏ! அப்பா! ஏடு போதாது அவ்வளவு கருத்தலைகள் எழுகின்றன! ஆனால் அவ்வளவும் ஒரு இதழில் தரமுடியுமா? ஆகவே இத்துடன் இதனை நிறுத்திக்கொள்கிறேன். உறக்கமும் வருகிறது; காகம் கரைவது காதில் விழுகிறது.

அன்பன்,


17-9-56.