அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே! - (2)
2

தம்பி! தர்பார் எப்படி நடத்தப்பட்டு வருகிறது என்பது புரிகிறதல்லவா?

இந்த இலட்சணத்தில் கொள்ளைச் சம்பளம் கோலாகல தர்பார், வீண் செலவு!

அமைச்சர் சுப்பிரமணியம் மெத்தவும் துணிச்சல் உள்ளவர், புட்டுப்புட்டுக் காட்டிவிட்டார் என்றும் கூறிவிடுவதற்கில்லை.

நிர்வாக யந்திரம் பற்றிய கண்டனம் இருக்கிறதே, "பத்தாம்பசலி'ப்போக்கு இருக்கிறதே, அதனைக் கண்டறிந்து கூறின முதல் "தீரவான்' என்ற "விருதும் அமைச்சர் சுப்பிரமணியத் துக்குக் கொடுத்து அவரை மகிழ்ந்திடச் செய்ய முடியவில்லையே என்று எனக்கு வருத்தந்தான். ஏனெனில், இவர் இவ்விதம் பேசுவதற்கு ஆண்டுகள் பலவற்றுக்கு முன்னாலே, பிரதம மந்திரி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இதே கண்டனத்தை அவருக்கே உரிய பாணியில் அழகுபட எடுத்துக் கூறி இருக்கிறார்.

1960-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 22-ம் நாள் பேசுகிறார் பண்டிதர்,

நாம் நமது பிரச்சினைகளின் வேகத்தை உணர்ந்து கொள்ளாமல், விக்டோரியா மகாராணியார் கால மனப்போக்குடன் (நிர்வாக) வேலை செய்து கொண்டு வருகிறோம். வாதாடிக் காலந்தள்ளிக் கொண்டிருக் கிறோம். பந்தாட்டத்தில் இவர் அவரிடம், அவர் இவரிடம் பந்தை வீசிவிடுவது போல, பிரச்சினைகளை ஒருவர் மற்றொருவரிடம் தூக்கிப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

அதே "பந்தாடும்' போக்கினைத்தான் அமைச்சர் சுப்பிரமணியம் காணுகிறார்; காட்டுகின்றார். ஆனால் "ஓட்டுகள்' மட்டும் எமக்கு வேண்டும் - எமக்கே வேண்டும் என்று மட்டும் கூசாமல் கேட்கிறார்கள்!

பண்டித நேரு நிர்வாக யந்திரத்தை அந்த விதமாகக் கண்டித்ததற்குக் காரணம் தம்பி! அமெரிக்க அறிஞரொருவர், உலகின் பல இதழ்களில் நேர்த்தி மிக்க விளக்கக் கட்டுரைகளை வெளியிட்டு, கருத்துக்களை வடிவமெடுக்கச் செய்திடும் வல்லவர், வால்ட்டர் லிப்மான் என்பவர் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்:

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் சாதிக்கப்பட வேண்டிய புரட்சிகரமான வேலைகளைச் செய்திடக்கூடிய நிலையிலா, விக்டோரியா கால மனப் பான்மையுள்ள அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதை எண்ணி நான் வியப்படைந்தேன், சமூகம் முழுவதும் எழுச்சி பெற்று நின்றாலொழிய மிகப்பெரிய பொருளா தாரப் புரட்சியை, பாராளுமன்ற அரசியல் வாதிகளாலும், நிர்வாக அதிகாரிகளாலும் சாதித்திட முடியுமா என்று ஐயம் கொள்கிறேன்.

வால்ட்டர் லிப்மான் கூறியதை ஒப்புக் கொள்ளுகிற முறையிலே தான் பண்டிதர் அதுபோலப் பேசினார்.

வீண் செலவு, நிர்வாகத் திறமைக் குறைவு, கர்னாடக மனப்பான்மை என்பவைகள் திடீரென்று முளைத்து விட்டவைகள் அல்ல, இன்று கண்டு பிடித்துக் கண்களைக் கசக்கிக் கொள்ள. அவற்றுடன் சேர்ந்தே காங்கிரஸ் அரசு வளர்ந்து கொண்டு வந்திருக்கிறது; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டும் காங்கிரஸ் வளர்ச்சியைத் தேடிக் கொண்டிருக்கிறது.

நிர்வாகத் திறமைக் குறைவு காரணமாகத்தான் உணவுத் துறையில் நெருக்கடி ஏற்பட்டு விட்டது என்பதைச் சுட்டிக் காட்டாதவர்கள் இல்லை.

சொன்னதும், காங்கிரஸ் அமைச்சர்கள் தமது முகத்தைக் கடுகடுப்பாக்கிக் கொண்டு, போ! போ! தெரியும்! தெரியும்! என்று கையை அசைப்பதும், கனைத்துக் காட்டுவதுமாக உள்ளனரே யன்றி, எங்கே நிலைமைகளைத் திருத்த முற்பட்டனர்?

புதுமுறைக் கருத்துகள் கிடைக்காமலில்லை, போதுமான பணவசதி கிடைக்காமற் போகவில்லை. எனினும், சரியான முறையிலே நிர்வாகம் நடத்தி, எதை எப்போது செய்வது, எதற்கு முதலிடம் தருவது என்ற வகை தெரிந்து நடந்து கொள்ளாததால்தான், உணவு உற்பத்தித் துறையிலே நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இதுதான், வெளிநாட்டு நிபுணர்கள் கண்டறிந்து கூறியது. கடுங்கோபம்தான் பீறிட்டுக் கொண்டு வந்தது காங்கிரஸ் அமைச்சர்களுக்கு; இப்போது உணவு அமைச்சர் சுப்பிரமணியம் சொல்லுகிறார் நாங்கள் "ரப்பர் ஸ்டாம்புகள்' என்று!!

நிலச் சீர்த்திருத்தச் சட்டத்தின் மூலமாகத்தான் உழவன் உள்ளம் மகிழ்ச்சி கொள்ள முடியும்.

உழவன் உள்ளம் மகிழ்ச்சி அடைந்தால்தான், உற்பத்திப் பெருக்கம் ஏற்படும்.

அதனால் நிலத்துக்கு உச்சவரம்பு கட்டுகிறோம் என்று காங்கிரஸ் அமைச்சர்கள் பேசியபோது, மகிழ்ச்சியும் எழுச்சியும் பொங்கி வழிந்தது. இப்போது?

உச்சவரம்புச் சட்டத்தினால் உருப்படியான பலன் கிடைக்கவில்லை.

சட்டம் ஏட்டிலே இருக்கிறது; நடைமுறையில் இல்லை.

அப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்ற நினைப்போ, அதைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டுமே என்ற கடமை உணர்வோ அதிகாரிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படிக் கூறியுள்ளார் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த விவசாயத்துறை நிபுணர்.

சட்டம் உருவாக்கப்பட்ட போதே, அதிலே உள்ள "ஓட்டைகளை'யும், அந்த ஓட்டைகளை அடைக்காமல் சட்டமாக்கினால், ஒரு பலனும் கிடைக்காது என்பதையும், நாம் தம்பி! எடுத்துக்காட்டாமலா இருந்தோம்?

உங்களோடு சேர்ந்து விட்டுள்ள நிலப்பிரபுக்கள் உச்ச வரம்புச் சட்டத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு, அதை நேர்மையாக நிறைவேற்றி வைப்பார்களா? என்று நான் கேட்டபோது, எத்தனை கேலிப் பார்வை என்மீது பாய்ந்தது.

இம்முறை டில்லிப் பேரரசில், உணவு அமைச்சராக இருக்கும் சுப்பிரமணியம் அவர்களையே கேட்க வாய்ப்புக் கிடைத்தது.

உங்கள் கட்சியினர் உள்ள பக்கமாகத் திரும்பி வெகு கம்பீரமாக கை அசைத்துச் சொன்னீரே, ஐயா! எம்முடன் உள்ள நிலப் பிரபுக்கள் "தேச பக்தர்கள்' - அவர்கள் இந்தச் சட்டத்தை ஒழுங்காக நிறைவேற்றிக் கொடுப்பார்கள் என்றீர்களே? இப்போது என்ன நடந்திருக்கிறது? என்று கேட்டபோது, பொருள் மிகுந்த ஒரு புன்னகைதான் பதிலாகத் தவழ்ந்திடக் கண்டேன். என்னை விட்டுத் தள்ளு தம்பி! காங்கிரஸ் கட்சியினரிலேயே எத்தனைபேர் அப்போதே சுட்டிக் காட்டினார்கள். இந்தச் சட்டம் சரியான முறையில் உருவாக்கப்படவில்லை. உழவனுக்கு இதனாலே உருப்படியான பலன் கிடைக்கப் போவதில்லை என்று கேட்டார்களா காது கொடுத்து? மதித்தார்களா துளியாவது? இல்லையே! தமது பக்கம் உள்ள ஆள் கணக்கை எண்ணி எண்ணி இறுமாந்து கிடந்தார்கள். இப்போது பேரரசில் கொலுவிருக்கும் டி. டி. கிருஷ்ணமாச் சாரியாரே ஒப்புக் கொள்கிறார், "நிலச்சுவான் தார்கள் ஏமாற்றி விட்டார்கள், என்று. நமது மாகாணத்தை எடுத்துக் கொண்டால் உள்ள நிலத்தில் மூன்றில் ஒரு பாக நிலம் கோவில்களுக்கும் தர்ம ஸ்தாபனங்களுக்கும்தான் சொந்தமாக இருக்கிறது. அவைகளின் வரலாற்றைத் திரையிட்டு மறைக்கப் பார்க்கிறார்கள். தர்ம ஸ்தாபனங்களின் பெயரில் நிலத்தை வைத்துக் கொண்டு இலட்சக் கணக்கான ரூபாய்கள் கொள்ளையடிக்கப்படுகிறது இந்த நாட்டில் என்பதை எடுத்துக் காட்ட முடியும். இப்பொழுது ஒரு வருஷத்திற்குள்ளாக ஏற்பட்டிருக்கிற பாலிடெக்னிக், காலேஜ்கள், ஹைஸ்கூல்கள் இவைகளுக்கு எவ்வளவு நிலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். அதன் டாகுமெண்ட்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஒரு ஹைஸ்கூலை நிர்வகிக்க 2000 அல்லது 3000 ரூபாய்கள் வருடம் ஒன்றுக்குக் கொடுப்பது என்ற முறையில் அதற்கு 200 ஏக்கர் நிலம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. நான் கேட்கிறேன். 200 ஏக்கர் நிலத்தின் வருமானம் 2000மா! இவ்வளவு நிலம் இதற்காக எழுதிவைக்க என்ன அவசியம் இருக்கிறது?

அரசாங்கத்தை ஏமாற்றி லாண்ட் சீலிங்கைத் தவிர்க்க வேண்டுமென்று நினைக்கிற தஞ்சை ஜில்லாவிலுள்ள பணக் காரர்களின் பட்டியலை நான் கொடுக்க முடியும்.

தண்ணீர்ப்பந்தலுக்காகப் பத்து வேலி எழுதி வைத்திருக்கிறார்கள். தண்ணீர்ப்பந்தல் வைப்பதற்கே 10 வேலி அவசியமா? ஒரு பிள்ளையார் கோவிலுக்குப் பத்து வேலி எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு பிள்ளையார் கோயிலை வைத்து நடத்த 10 வேலி அவசியமா? ஒரு எலிமெண்டரி ஸ்கூல் நடத்துவதற்கு 20 வேலி எழுதி வைத்திருக்கிறார்கள். அதற்கு 20 வேலி அவசியமா?

இப்படி அரசாங்கம் ஏமாற்றப்படுமானால் இந்த லாண்ட் சீலிங் வருவதும் வராமல் இருப்பதும் ஒன்றுதான்.

இதைப்பற்றிச் சொல்லும்போது, ஆண்டவன் தலைமேல் கை வைக்காதே என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன். அசைய முடியாத ஆண்டவனுக்க 20 வேலி நிலத்திலுள்ள வருமானம் தேவையா? அப்படி அசைய முடியாத ஆண்ட வனுக்கு 20 வேலி வேண்டுமென்றால், ஒடி ஆடி உழைக்கிற மனிதனுக்கு எவ்வளவு வேண்டும்; ஓடி ஆடி உழைத்துப் பாடுபட்டு உழைப்பவனுக்குக் கஞ்சிக்குக் கூட போக்கில்லாமல் இருக்கும்போது, ஆண்டவனுக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது? பாடுபட்டு உழைத்தும் கூட ஒன்றும் கிடைக்காமல் மனிதன் அழிந்து போவது நல்லதா, அல்லது ஒன்றும் செய்யாமல் ஆடாமல் அசையாமல் இருக்கும் ஆண்டவன் அழிந்து போவது நல்லதா என்று ஆலோசிக்க வேண்டும்.

ஆண்டவன் தனக்கிருப்பதற்காகச் சிதம்பரத்தில் தங்கக் கூரையும், சீரங்கத்தில் தான் அணிந்து கொள்வதற்கு வைர மாலைகளும் கேட்கவில்லை. ஆண்டவனின் பெயரைச் சொல்லிக் கொண்டு மனிதர்கள் மனிதர்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டவன் பெயரைச் சொல்லிக் கொண்டு மக்களை இதுவரை ஏமாற்றியது போதும். இனியாவது மனிதனே கடவுள் என்றும், எவன் ஒருவன் உழைக்கிறானோ அவனே இந்த நாட்டின் கடவுள் என்ற எண்ணத்திலும் லாண்டு சீலிங் கொண்டு வர வேண்டும்.

இம்மாதிரி அரசாங்கத்தை ஏமாற்றிக் கொண்டிருக் கின்றவர்களை - அரசாங்கத்தை மட்டுமல்ல - இந்த நாட்டிலுள்ள தொழிலாளிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக் கின்றவர்களுக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் போதாது. அவர்களுக்குத் தூக்குத் தண்டனை ஒன்றுதான் கொடுக்க வேண்டும்.

இவ்விதம் பேசினார் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் K.B.S. மணி என்பவர்; 1959-ல் உச்சவரம்புச் சட்டம், தேவையற்ற, தீமை பயக்கும் விதிவிலக்குகள் நிரம்பியதாக, ஓட்டைகள் நிரம்பியதாகக் கொண்டு வரப்பட்டபோது.

ஆகவே எதிர்பாராதது நேரிட்டு விட்டது. இப்படி நடக்கும் என்று நாங்கள் நினைக்கவேயில்லை என்றெல்லாம் இதுபோது ஆட்சியாளர் வாதாட முடியாது.

ஆகவே தம்பி! நாட்டிலே அமைந்துள்ள துரைத்தனத்தின் "திருக்க-யாண' குணத்தைப் பற்றி ஒரு பட்டியல் போட்டுப்பார்!

கொள்ளைச் சம்பளம்
கோலாகல தர்பார்
ரப்பர் ஸ்டாம்பு மந்திரிகள்
பத்தாம்பசலி நிர்வாகம்
"ஒட்டை'ச் சட்டங்கள்!

இப்படி இருக்கிறது இவர்களின் இலட்சணம். ஆனால், மேடை அதிரப் பேசுகிறார்கள், கேட்கிறதல்லவா?

ஆஹா! எங்கள் அருமை என்ன! பெருமை என்ன! ஆற்றல் என்ன! சாதனை என்ன! எத்தனை பாட்டன் டாங்கிகள் நொறுங்கிவிட்டன தெரியுமா! எத்தனை சாபர் ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன தெரியுமா! என்றெல்லாம்!

இந்த நிலையில், யாரோ ஒருவராகிலும், அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே! இப்போது ஆலாய்ப் பறக்க விட்டு விட்டாயே! என்று மக்கள் கேட்பார்களே என்று நினைவு பெற்று, உள்ள குறையை ஓரளவு ஒப்புக் கொண்டுப் பேசியிருக் கிறாரே என்பதிலே எனக்கோர் மகிழ்ச்சி; அதனால் தான் இதனை எழுதினேன்.

ஆனால், இப்படி ஒருவர் இருவர் பேசிவிட்டால் போதுமா!

அழகுத் தேமல் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன்; இப்போதுதான் தெரிகிறது இது ஆகாத நோய் என்று எனக் கூறிவிட்டால், நோய் போய் விடாதே. மருந்திட வேண்டுமே!

மக்களிடம்தான் அந்த மாமருந்து இருக்கிறது. அவர்கள் தெளிவையும் துணிவையும் பொடியாக்கி, நேர்மையுடன் குழைத்துத் தந்திடின் ஆட்சியிலே ஏற்பட்டுள்ள வலிப்பு, இழுப்பு, படபடப்பு போன்றவை ஒழியும். அந்தக் கடமை, மக்களுடையது. அதனை நினைவுபடுத்த வேண்டிய பொறுப்பு, தம்பி! உன்னுடையது.

நாம் வேண்டுமென்றே, பதவி விரும்பி, பதை பதைத்து ஏதேதோ பேசுகிறோம் என்று எவரேனும் கோபித்துக் கொண்டால், தம்பி! ஐயா! வீணாக எம்மீது வெகுண்டெழ வேண்டாம். காங்கிரசாட்சியின் போக்கினைக் கண்டிப்பது, எதிர்க்கட்சியினரான நாங்கள் மட்டும் அல்ல; இன்றும் உங்களால் "ஞானாசிரியர்' என்று கொண்டாடப்பட்டு வரும் வினோபா பாவே மிகப் பலமாகக் கண்டிக்கிறார் என்று கூறி, அவர் தந்துள்ள கண்டனத்தை எடுத்துக்காட்ட வேண்டுகிறேன்.

மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களுக்குப் பிறகும் வெளியிலிருந்து உணவுப் பொருள் வரவழைக்க வேண்டி இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

விவசாய நாடான இந்தியாவில் முதலில் செய்திருக்க வேண்டியது குறைந்த பட்சம் உணவு "போதுமானதை' உற்பத்தி செய்துவிட்டு பிறகு மற்ற எதையாவது செய்து கொள்வது என்பதாக இருந்திருக்க வேண்டும்.

வாரன் ஹேஸ்டிங்ஸ் (பிரிட்டிஷ் வைசிராய்) மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு பற்றிய புத்தகம் என் நினைவிற்கு வருகிறது.

உணவு, கல்வி, பாதுகாப்பு ஆகிய மூன்று துறைகள் குறித்த வரையில், இந்தச் சர்க்கார் மீது அதுபோல குற்றம் சாட்டி வழக்குத் தொடரப்பட்டால், அந்தச் சர்க்கார் எங்கே செல்ல வேண்டி வரும்!

இந்தச் சர்க்கார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது, மக்களின் சம்மதத்தின் பேரில் நடந்து வருகிறது; ஆகவே, நடைபெற்று விட்டவற்றுக்கு மக்களே பொறுப்பு என்று ஒருவேளை சொல்லக் கூடும்.

ஜனநாயகத்தில் உங்கள் பங்கு என்ன? கடமை என்ன? என்பதனை உணர வேண்டிய காலம் வந்துவிட்டது.

டில்லியை நம்பிக் கொண்டு வீட்டிலே சோம்பிக் கிடப்பதிலே பொருள் இல்லை.

டில்லியில், யமுனை நதி மட்டுமல்ல, சாராயமும் சீமைச் சரக்கும் ஆறாக ஓடுகிறது.

வெளிநாடுகளிலிருந்து டில்லிவரும் நண்பர்கள் கண்களை மூடிக் கொண்டு வியப்படைகிறார்கள். நாம் இந்தியத் தலைநகருக்கு வந்திருக்கிறோமோ அல்லது நம்முடைய பாரிஸ், அல்லது லண்டன் நகரில் இருக்கிறோமா என்று!

இதைவிட "மனம் நொந்து' வேறு எவராலும் பேச முடியாது! தம்பி! வினோபா சொன்னதை நான் வேண்டு மென்றே கூட்டிக் குலைத்துச் சொல்லிவிட்டேன் என்று கூறிவிடப் போகிறார்கள். அவர் பேசியிருப்பதனை வடநாட்டு ஆங்கில இதழ் வெளியிட்டிருப்பதனை அப்படியே தருகிறேன், அதனையும் மறவாமல் காட்டு.

It is very unfortunate that after 3 five year plans the country should import food from abroad. The least that ought to have been done in an agricultural country like India was to make her self-sufficient in food and then do anything else.

I am reminded of the book Impeachment of Warren Hastings. If this Government were to be impeached on these Counts of food. Education and defence let go my fourth charge of ignoring the poor, where would it be? Perhaps it may be said that the Government is elected by the people and it is being run with their consent and the people themselves should be held responsible for what has transpired.

The time has now come when you should become conscious of your role in democracy. There is no sense in relying on Delhi and sitting idle at home. In Delhi flows not only the Jamuna but also the river of wine and liquor. Friends from abroad coming to Delhi close their eyes in amazement and wonder whether they are in the Indian Capital or in their own city of

Paris or London.

Dec.

Bihar - Dalmianagar.

அந்த ஆங்கிலத்தினை நான் தமிழாக்கும்போது, "சூடு' அதிகமாக்கவில்லை; சொல்லப்போனால்! குறைத்தே தந்திருக் கிறேன்; அதனையும் கவனிக்கச் சொல்லு, அதற்கும் ஆதாரம் கேட்டிடின் தம்பி! வினோபாவின் பேச்ச ஆங்கிலத்தில் உள்ளதில் ஒரு இடத்தில்,

'no sense'

என்று இருக்கிறதே, அதனை நான் அறிவீனம் என்றோ புத்தி இல்லை என்றோகூட தமிழாக்கவில்லை; பெரிய இடத்தில் உள்ளவர்கள் மீது சிறுசொல் விழக்கூடாதே என்பதற்காக, அதனால் no sense என்பதற்கு, பொருளில்லை என்ற தமிழையே தந்திருக்கிறேன்;

மக்களின் ஜனநாயகக் கடமையைக் கவனப்படுத்துகிறார் வினோபா!

காலம் வந்துவிட்டது என்றும் கூறியிருக்கிறார்.

கடமையாற்றிடச் சொல்லியும் கேட்டுக் கொள்கிறார்.

இதனைக் கண்ட பிறகேனும் பொதுமக்கள் விழிப்படையா மலிருக்கலாமா? இதனை எடுத்துக்காட்டாமலிருப்பது நமக்கு முறையாகா தல்லவா! அதனால் எடுத்துக் காட்டினேன், தம்பி! நீ இதனை நாடெங்கும் எடுத்துச் சென்று அளிப்பாய் என்ற நம்பிக்கையுடன்.

அண்ணன்,

2-1-66