அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அப்போதே செய்த முடிவு
2

எவ்விதமான பத்தியம் இருந்தாகிலும் நோய் போக்கிக் கொள்ள வேண்டும் என்பது போன்றதோர் நிலை.

அந்தச் சூழ்நிலையில் பல கோடிக்கணக்கான மக்களின் பிறப்புரிமையைப் பாதிக்கக் கூடிய மொழிப் பிரச்சினை பற்றி ஒரு முடிவு எடுக்க முற்பட்டதே தவறு. அந்தச் சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவு எந்தெந்தச் சூழ்நிலை மாறி மாறி ஏற்படினும் நிலைத்து நிற்கும் என்று நினைப்பது அறிவுடைமை ஆகாது; நிலைத்து நின்றாக வேண்டும் என்று வாதாடுவது, சகித்துக் கொள்ள முடியாத கொடுமையாகும்.

இதை உணராமல்தான் காமராஜர், "அப்போதே செய்த முடிவு' என்று வாதாடுகிறார்! வாதாடுகிறாரா? அவர் ஏன் வாதாடப் போகிறார் - தீர்ப்பு அளிக்கிறார், வரச்சொல்லு இந்திராவை என்று கேட்கிறானே கதையில் வரும் இளைஞன் அதுபோல! கதையிலே வரும் இளைஞன் அடிபடுகிறான், அக்ரமம் பேசுகிறான் என்பதால்; இவர் நாடாளும் பெரியவரல்லவா, இவர், இந்த அக்ரமம் ஏனய்யா என்று கேட்பவர்களை, அடி! உதை! சுடு! என்று உத்தரவு போடுகிறார், பக்தவத்சலனாருக்கு.

அப்போதே செய்த முடிவு என்கிறாரே, அரசியல் நிர்ணய சபை தீர்மானத்தை மனத்திலே வைத்துக் கொண்டு, அப்போது செய்யப்பட்ட அரசியல் சட்ட திட்டத்தில், இதுவரை 17 முறை திருத்தங்கள் - மாற்றங்கள் செய்திருக்கிறார்கள்; அப்போதே செய்த முடிவாயிற்றே, அதனை மாற்றலாமா என்று இதே அறிவாளர்கள் கூறவில்லை, தயங்கவில்லை; அப்போது சில முடிவுகள் செய்தோம், இப்போது சில மாற்றம் செய்கிறோம், இதிலே என்ன தவறு என்று வாதாடுகிறார்கள்; அதே நேர்த்தியான நாக்கேதான்!!

அப்போதே செய்த முடிவுகள் பலவற்றை இவர்களே இப்போதைய நிலைமைக்காக மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், அப்போது மொழி பற்றிச் செய்த முடிவு, எமது உரிமையை அழிக்கிறது, நிலைமையைக் கெடுக்கிறது என்று பல கோடி மக்கள் முறையிட்டாலும், அறிவாளர் மன்றாடிக் கேட்டுக் கொண்டாலும், ஆர்வமிக்கவர்கள் அதற்காகப் போராடினாலும் அப்போதே செய்த முடிவு, மாற்ற முடியாது என்று பேசுவது நியாயமாகுமா - நாடு இத்தகைய பிடிவாதத்தைத் தாங்கித் தவித்திடத்தான் வேண்டுமா, தம்பி! இதுதான் நான் கேட்பது.

வாதம் செய்கிறாரே, அப்போதே செய்த முடிவு என்று, அவர் மறுக்க முடியுமா, அப்போதே இதனை வன்மையாகக் கண்டித்தவர்கள், கடுமையாக எச்சரிக்கை விடுத்தவர்கள் உண்டு என்பதையும், அவர்கள் ஒவ்வொருவரும் நாட்டு விடுதலைக்காக இவர் அளவுக்கேனும் "தியாகம்' செய்தவர்களே என்பதனையும்,

விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை. விபரீதம் இது என்று எச்சரித்துவிட்டுப் பிறகு வருகிறவர்கள் இது பற்றிக் கவனித்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்துடன் ஒப்புதல் அளித்தார்கள் என்பதை மறுக்க முடியுமா!

அரசியல் நிர்ணய சபை நடவடிக்கைக் குறிப்புகள் இதனை நன்றாகத் தெளிவுபடுத்துகின்றனவே.

இந்தி பேசாத பகுதியிலிருந்து வந்திருந்தவர்கள் அனைவருமே, இந்தி ஆட்சிமொழி என்ற திட்டத்தைத் தாக்கி யிருக்கிறார்கள்; சிலர் மனக்கசப்பை வெளிப்படையாகவே எடுத்துக் காட்டியுமுள்ளனரே, அப்போதே!! அதனை மறுப்பார்களா, பிடிவாதக்காரர்கள்.

இன்று போலவே அன்றும், இந்தி பேசும் பகுதியினர் ஒன்று கூடிக்கொண்டு, எண்ணிக்கை பலத்தைக் காட்டி இந்தி பேசாதோரின் வாதங்களை மறுக்க முடியாத நிலையில், கொடுமைப்படுத்தி, இந்தி ஆட்சி மொழி என்ற விதியைப் புகுத்தி விட்டார்களேயன்றி, நாட்டின் பல்வேறு பகுதியினரும் மனமுவந்து இந்தி ஆட்சி மொழி ஆவதை ஏற்றுக் கொண்டனரா? அரசியல் நிர்ணய சபைக் குறிப்புகளைக் காண்போர், அப்போதே எழும்பியிருந்த எதிர்ப்புணர்ச்சியினை நன்கு அறிந்து கொள்ளலாமே!

இவ்வளவையும் மறைத்துவிட்டு, அப்போதே செய்த முடிவு என்று பேசுவது அறமாகாது, ஆனால் ஆளவந்தார் களான பிறகு அறம் தேவையில்லை, பாதுகாப்புச் சட்டம் போதும் என்ற துணிவு பிறந்துவிட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன்.

கொங்கு நாட்டவர், தமிழகமெங்கணும் மதிக்கத்தக்க நிலை பெற்றவர். டி.ஏ. இராமலிங்கம், செட்டியாரவர்கள், இந்தி மொழியாளரின் இறுமாப்பினை இடித்துக் காட்டி,

தில்லியிலே நானோர் அன்னியன் என்பது போன்ற உணர்ச்சி கொள்ளும்படிச் செய்கின்றனரே, இந்தப் போக்கு எங்குக் கொண்டுபோய் விடுமோ என்றெண்ணும் போதே கவலை பீறிட்டுக் கொண்டு வருகிறதே, எதிர்காலத்தில் என்னென்ன ஆபத்துக்கள் எழுமோ என்றெண்ணும்போதே நடுக்கமெடுக்கிறதே என்று பேசினார்.

மராட்டியத்தின் தலைவர் சங்கர் ராவ் இந்தி ஆதிக்க நோக்கம் கொண்டோரைக் கடிந்துரைத்திருக்கிறார்.

பி. தாஸ் அவர்கள், வெள்ளையர்களிடம் கொண்டிருந்தது போன்றதோர் அச்சம் இந்தி மொழியாளரிடம் கொள்ள வேண்டி வந்துவிட்டதே, அத்துணை அகம்பாவத்துடன் அவர்கள் உள்ளனரே என்று குமுறியிருக்கிறார்.

எவ்வளவு படித்தாலும் தென்னாட்டவர், இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுடன் சரி சமமான நிலையிலிருந்து, போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்று எச்சரித்துப் பேசினார் துர்காபாய் அவர்கள் (பிறகு தேஷ்முக்கானவர்).

இந்திப் பிரச்சினையை இப்போது எடுத்துக் கொள்ளவே வேண்டாம். பிறகோர் சமயம் பார்த்துக் கொள்ளலாம்; பிறகு அமையும் பாராளுமன்றம் இதுபற்றி கவனம் செலுத்தட்டும் என்று (இன்றைய பாராளுமன்ற துணைத் தலைவர்) கிருஷ்ண மூர்த்திராவ் முறையிட்டுக் கொண்டார்.

இந்த முறையீடுகள், எச்சரிக்கைகள், கண்டனங்கள் யாவையும் "அப்போதே'தான் இருந்தன. ஆனால், அதனை மறந்துவிடச் சொல்லுகிறார்கள் போலும்.

அப்போதே முடிவு செய்ததாகக் கூறுகிறார்களே, அதேபோது எழுந்த எதிர்ப்பு, நாளுக்கு நாள் வளர்ந்தது; குறையவில்லை.

அரசியல் நிர்ணய சபை கூடியபோது, இந்தப் பிரச்சினையில் போதுமான அக்கறை காட்டாமலிருந்தவர்கள் கூட, பிறகு இந்தி ஆட்சிமொழி ஆக்கப்படுவதனால் ஏற்படக் கூடிய பேராபத்தினை உணரத் தலைப்பட்டனர்; இந்திக்கு எதிர்ப்பு வலுவடைந்தது, பரவிற்று.

டாக்டர் சுப்பராயன், இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் கதை போலிருக்கிறதே இந்திக்காரர் போக்கு என்று இடித்துரைத்தார்.

இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழிதான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று கருதுவதே அறிவீனம் என்று வங்க முதல்வர் பி.சி. ராய் முழக்கமிட்டார். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு இயக்கமே உருவெடுத்து விட்டது. இந்தியைக் கட்டாய பாடமாக்கி, வெற்றி கிட்டாததைக் கண்ட ராஜகோபாலாச் சாரியார் இந்தி எதிர்ப்பில் முன்னணியில் நின்றிடலானார்.

அப்போதே செய்த முடிவுக்கு இப்போது இவ்வளவு எதிர்ப்பு பல முனைகளிலுமிருந்து கிளம்பிவிட்டிருக்க, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து அறப்போர் நடாத்தி இன்னுயிரையும் இழந்திடும் உறுதி ஓங்கி வளர்ந்திருக்க, காமராஜர் இப்போது, "அப்போதே செய்த முடிவு' என்று பேசுவதிலே பொருளுமில்லை, பொருத்தமுமில்லை.

அப்போதே செய்த முடிவு பற்றிப் பேசிடும் காமராஜருக்கு ஒரு கேள்வி - அப்போது செய்த முடிவுகளின்படியா இப்போது அவருடைய கட்சியினர் - மிகப் பெரியவர்கள் கூட - நடந்து கொள்கிறார்கள். நானும் "அப்போது செய்த முடிவுகள்'' சிலவற்றைக் காமராஜருக்குக் கவனப்படுத்தலாமா!

"அப்போதே செய்த முடிவு மதுவிலக்கு! சட்டமும் செய்தாயிற்று. அப்போதே செய்த அந்த முடிவு இப்போது எந்தக் கதி அடைந்திருக்கிறது?

கேரளாவில் கள்ளுக் கடை!

மராட்டியத்தில் "பீர்' கடை!

புதுவை காரைக்காலில் சாராயக் கடை!

டில்லியில் குடிப்பதற்கென குறிப்பிட்ட நாட்கள்!

இவ்விதம் மதுவிலக்கு கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறதே!

வெட்கப்படுகிறாரா, காமராஜர்! வெகுண்டெழுந்து "அப்போதே செய்த முடிவு' மதுவிலக்கு, அதனை இப்போது மாற்றும்படிச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று முழக்கம் எழுப்புகிறாரா! அடியோடு மறந்து விடுகிறாரே, "அப்போது செய்த முடிவு' பற்றி. நியாயமா!

அசோக்மேத்தா அச்சம் கூச்சமின்றிக் கூறுகிறார், மதுவிலக்குத் திட்டத்தை ஒழித்து விடுங்கள். ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று!

"அப்போதே செய்த முடிவு' மதுவிலக்கு, அதனை மாற்றும்படிச் சொல்வது கூடாது என்று இந்தக் காமராஜர் அசோக் மேத்தாவைப் பார்த்துச் சொல்கிறாரா! அந்தத் துணிவு இருக்கிறதா!! இல்லையே! இந்தி விஷயமாக மட்டுந்தானா, அப்போதே செய்த முடிவு பற்றிய வீராப்பு! மற்றவற்றுக்கு?

மற்றோர் "அப்போதே' கூட இருக்கிறது, நினைவிற்குக் கொண்டுவர!

அப்போதே செய்த முடிவு, காங்கிரஸ் அமைச்சர்கள் மாதம் 500 ரூபாய் மட்டுமே சம்பளம் பெற வேண்டும் என்று! என்ன ஆயிற்று அந்த "அப்போது?' மகாத்மாவின் ஆசீர்வாதம் பெற்று அப்போதே செய்த முடிவாயிற்றே, அதற்குக் கட்டுப்பட்டு நடந்திட வேண்டும் என்ற கடமை உணர்ச்சி இருந்ததா காங்கிரசின் பெரிய தலைவர்களுக்கு?

கராச்சி காங்கிரசில் "அப்போதே' செய்த முடிவு மாதம் 500! இப்போது இந்தி விஷயமாக அப்போதே செய்த முடிவு பற்றிப் பேச அகன்ற வாய் திறந்திடும் அறிவாளர், அப்போது செய்த முடிவை மதித்தாரா! இவர் வரையிலாகிலும்!! இல்லையே!! அப்போதே செய்த முடிவைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டு, மாதம் 1000, 1500 என்று சம்பளம் பெற்றுக் கொள்ளத் துணிந்தனர். "அப்போது' என்ன ஆயிற்று.

ஆகவே அப்போதே செய்த முடிவு என்று பேசுவது அர்த்தமற்றது மட்டுமல்ல அக்கிரமமானது.

எப்போது செய்யப்பட்ட முடிவாக இருப்பினும், மக்களின் கருத்து வழி நின்று முடிவுகளை மாற்றிக் கொள்வது, திட்டங்களைத் திருத்தி அமைப்பது, ஜனநாயகக் கடமை, ஜனநாயகத்துக்கு விழா கொண்டாடிக் கொண்டே ஜனநாயகத்தைப் பழித்திடும் பாதகத்தினைச் செய்வதிலே சுவை காண்கின்றனர்.

இவர்தம் பொருத்தமற்ற பேச்சினையும் அகம்பாவப் போக்கினையும் மாற்றிட வழி என்ன? கடுமையாகத் தாக்குவதா! இழித்தும் பழித்தும் பேசுவதா! இல்லை. இல்லை! அஃதல்ல நாம் மேற்கொள்ள வேண்டிய முறை.

தம்பி! கடுமொழியும் கனல் கக்கும் பேச்சும் பேசின பலர் என்னுடன் இருந்தனர் - ஏ! அப்பா! இந்த இந்தி விஷயமாகவும், அதனைப் புகுத்திடத் துணை செய்யும் காங்கிரஸ் தலைவர் களையும் என்னென்ன கூறினர், எத்துணைக் கடுமையாகத் தாக்கினர், கேட்பவர் இரத்தம் கொதித்திடும் விதமாக! எங்குளார் அவரெலாம்!! இந்தியின் காலடி தொழுதிடும் இடத்தில்!! ஏன்? அவர் அங்கு காணும் சுகம் யாதோ, எங்ஙனம் நான் அறிந்திட இயலும்?

ஒன்று மட்டும் தெரியும் எனக்கு - துள்ளும் மாடு பொதி சுமப்பதில்லை - தூற்றித்திரிவோர் எந்த முனையிலும் நிலைத்து நிற்பதில்லை.

இந்தியை எதிர்க்கும்போது, நாம், தம்பி! இழிமொழியால் எவரையும் தாக்கத் தேவையில்லை. தமிழ் அத்தகைய தகாத செயலுக்குப் பயன்படுதல் கூடாது. நமது உள்ளத்தைத் திறந்து காட்ட, உறுதியை வெளிப்படுத்தவே, தமிழ் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

எம்முறையில் பணியாற்றி இந்தி ஆதிக்கத்தினை ஒழித்திட வேண்டும் என்பதிலே நமது நோக்கம் செல்ல வேண்டுமேயன்றி இழிமொழியை எத்தனை வேகத்துடன் பொழிந்து நமது எரிச்சலைக் காட்டிக் கொள்ளலாம் என்பதிலே செல்லுதல் கூடாது.

தென்னவர் இந்தி கற்கச்
செப்புவோன் தமிழனல்லன்
அன்னையை வடவர்கூடி
ஆக்கிய கருவே அன்னான்!

எப்படித் தம்பி! இருக்கிறது. இந்தத் தாக்குதல்! இப்படி யல்லவா சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று பக்குவ மற்றோர் பாராட்டுவர். ஆனால் இத்தனை துணிவுடன் இந்தியைத் தாக்கினோர் - இந்தியையா, இந்தி ஆதரவாளர்களை - இன்று எங்கு உளர்! இந்தி, கெக்க- செய்கிறது! இந்தி ஆதரவாளர் கூறுகின்றனர், அந்த நாவுக்கரசர்கள் நம்மிடம் அடைக்கலமாயினர் என்று.

தம்பி! இந்தி மொழியை நீயும் நானும், இலக்கண வரம்பற்ற மொழி, இலக்கிய வளமற்ற மொழி, நேற்றுப் பிறந்த மொழி என்று மட்டுந்தானே கூறுகின்றோம், இந்தியும் இந்தியாவின் ஒரு பகுதியினரின் தாய்மொழி. ஆகவே அம்மொழியை இழித்துரைப்பது அம்மொழியாளரின் மனத்தினைப் புண்ணாக்கும் என்று எண்ணுகின்றோம்.

இது அல்ல போர்முறை! இஃதன்று வீரம்! தாக்க வேண்டும், அவர்கள் தமது நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகும் விதமாக என்று கூறிச் சிலர் இந்தியைத் தாக்கினர்;

வங்காள நாயகனை ஓடிப்பிடித்தாய்!
மராட்டி ஆடவனின் கூடப்படுத்தாய்!
எங்கேனும் யாரேனும் கைகாட்டினாலும்
எப்போதும் செயலாகும் தப்பாத கற்பின்
பங்காளியன்றோ? உன் பட்டாடையெல்லாம்
பல்லோரும் தொட்டாண்ட புத்தாடையன்றோ?
வங்காளம் மராட்டி எல்லாமிப்போது
வாலாட்டும் உன் வாழ்வை வீழ்த்தல் தப்பாது.

ஆமாம் தம்பி! பொறி பறக்கிறதல்லவா!! பறந்தது! பறந்தே போயினர்! புதிய பிறவிகளாயினர் - பிறவிகளா? - புதிய தொழி-னை மேற்கொண்டு விட்டனர்.

எனவேதான், தம்பி! கடுமொழி பேசிடுவோர் குறித்து நான் சற்றுக் கண் விழிப்புடன் இருந்திட வேண்டும் என்பது.

பொங்கி வழிந்திடும், நெடுந்தூரம் நெடி பரப்பிடுங்கள் - பால் அல்ல!

வீரன், தாங்கிக்கொள்ள அறிந்தவன், தாக்கும் முறையிலும் ஒரு தரம், வரம்பு, இவைகட்குக் கட்டுப்படுபவன் - மேலே வீழ்ந்து கடித்துக் குதறிடுபவன் அல்ல.

முழக்கம்! ஆணையிட்டுக் கூறல்! சூள் உரைத்தல்! - கொஞ்சமா!! இந்தியை ஒழித்திடாமல் இருப்பேனா - அதனை எவர் செய்திடத் தவறிடினும், நானே அப்பணியினை மேற்கொள்வேன், பகை வெல்வேன் என்று உரத்த குரலெழுப்பிக், கேட்போர் உள்ளத்தை, உலுக்கினர்! உருமாறிப் போயினர் இன்று!!

இழி செருப்பனைய இந்தியைக் கா-ல்
இட்டழித் தொருதுகள் எடுத்து
விழி குருடான கொடியவர் முகத்தில்
விட்டெறி வேனிதும் உண்மை!
கழிபெரும் உவகை கனித் தமிழ் மொழியில்
காணுவன் காணுவன் உண்மை!
அழிவதென்றாலும் இந்தியை அழித்தே
அழிவன் நான்! உண்மையினுண்மை!

தம்பி! நான் உன்னிடமிருந்து இத்தகைய "வாணங்களை' எதிர்பார்க்கவில்லை! இடியோசை அல்ல நான் விரும்புவது - உன் இதயத்தை!!

"அப்போதே செய்த முடிவு' என்று பேசிடும் காமராஜரின் வாதத்தின் பொருளற்ற தன்மையினை நாடு அறிந்திடச் செய்திடு, நாம் மேற்கொண்டுள்ள இந்தி ஆதிக்க ஒழிப்புத் திட்டத்துக்கு நாட்டினரின் நல்லாதரவு உண்டு என்பதனை உலகறியச் செய்திடு. அதற்கான பொன்னான வாய்ப்பாகப் பொதுத் தேர்தல் வருகிறது. பொறுப்புடனும் பொறுமையுடனும், பணியாற்றி வெற்றி தேடித் தந்திடு! உன்னையல்லால் வேறு எவருளர் இச்செயலை முடித்திட!

அண்ணன்,

18-7-65