அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கனடா பயணம் - (2)
2

பிளவு மனப்பான்மை தோன்றிவிட்டது கண்டிக்கத்தக்கது என்று கூறுவதோடு அந்தக் குழு தன் வேலை முடிந்துவிட்டதாகக் கருதவில்லை. மாறாக க்யூபெக் மக்களிடம் இந்த எண்ணம் எழுந்ததற்குக் காரணம், ஆங்கில மொழியினர் மேற்கொண்டுள்ள போக்குத்தான் என்று கண்டிக்கத் தயங்கவில்லை.

கனடா ஆங்கில மொழியினரின் நாடு, அதிலே பிரஞ்சு மொழி பேசுவோர் சிறுபான்மையினர் என்று ஓர் கருத்து நிலவுகிறது. இது மிகத் தவறான கருத்து. கனடா, ஆங்கில மொழி பேசுவோர், பிரஞ்சு மொழி பேசுவோர் எனும் இரு சமூகங்களுக்கும் சொந்தமான நாடு; இதிலே பெருவாரியாக உள்ளவர்கள் என்ற காரணம் காட்டி, "எஜமானர்'களாகப் பார்த்திடும் ஆங்கில மொழியினரின் போக்கு, நியாயமுமல்ல, உண்மை ஜனநாயகமுமாகாது என்று குழு குறிப்பிட்டு, இப்போது கியூபெக் மக்கள் கேட்பது, சலுகை அல்ல; உரிமையைக் கேட்கிறார்கள்; கனடா ஒரே நாடாக எதிர்காலத்தில் இருக்க வேண்டுமானால், இந்த இரு சமூகங்களும் சரிசமமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கத்தக்க விதமான ஏற்பாட்டினை விரைவில் மேற்கொண்டாக வேண்டும் என்றும் குழு குறிப்பிட்டிருக்கிறது.

யார் பேசுவது நியாயம்? பிரஞ்சுமொழி பேசுவோர் கூறுவது நியாயமா? ஆங்கில மொழியினர் கூறுவது நியாயமா? இரண்டிலே எது நியாயம் என்பது அல்ல பிரச்சினை. இரு வேறு "நியாயங்கள்' உள்ளன; இவை இரண்டும் நியாயங்களே! இவை இரண்டும் ஒன்றோடொன்று முட்டி மோதிக் கொள்ளாமல், இணைந்து இருக்க வழி கண்டுபிடித்தாக வேண்டும் என்று அந்தக் குழு கூறுகிறது.

தம்பி! இங்கு இந்தியை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்பதற்கு இந்தி ஆதரவாளர் கூறிடும் காரணம், இந்தியாவில் மிகப் பெரும்பாலோர் பேசும் மொழி இந்தி என்பதாகும்.

மிகப் பெரும்பாலோர் இந்தி பேசுகின்றனர் என்ற வாதமே தவறு; அந்தக் கணக்கே தவறு என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியிலேயே பல்வேறு வகையான இந்தி உண்டு. ஒரு இந்திக்காரர் பேசுவது மற்றோர் இந்திக்காரருக்குப் புரியாது என்பதை, மறுத்திட முடியாது இந்தி ஆதரவாளர்களால்.

தம்பி! இந்தியிலேயே என்னென்ன வகை உண்டு என்பது பற்றி நாவலர் பேசுவது என் காதிலே ஒலித்தபடி இருக்கிறது.

இந்திதான் பொது ஆட்சிமொழி ஆக வேண்டும் என்று வாதாடுபவர்கள், இதற்கு எந்தவிதமான சமாதானமும் கூற முயல்வது கூட இல்லை.

மைதிலி என்ற மொழி தனிமொழி என்று வாதாடுகிறார்கள் விற்பன்னர்கள்; அந்த மொழி பேசுவோர்களின் எண்ணிக்கை யையும் சேர்த்துக் கொண்டு, இத்தனை கோடி பேர் இந்தி பேசு கிறார்கள் என்று இந்தி ஆதிக்கக்காரர் கணக்குக் காட்டுகிறார்கள். மைதிலி தனிமொழி, அதையும் இந்தி என்று கூறிவிடுவது சரியல்ல என்று மைதிலி மொழிப் புலவர்கள் கூறுகின்றனர்.

மைதிலி மொழிக்காக என்று தனிவகுப்பு அமைக்கப் பட்டிருக்கிறதாக அறிகிறேன், டில்லி பல்கலைக் கழகத்தில்.

கலாச்சாரக் கழகம் எனும் அமைப்பை இந்தியப் பேரரசு நிறுவி, ஒவ்வொரு மொழியிலும் வெளியிடப்படும் சிறந்த கருத்தோவியத்துக்குப் பரிசு தருகிறது, இந்தத் திட்டத்தின்படி, மராத்தி, குஜராத்தி, தமிழ், இந்தி என்று பல மொழிகளுக்குப் பரிசு இருக்கிறது.

மைதிலி, இந்தி அல்ல; அது ஒரு தனிமொழி என்பதை ஒப்புக்கொள்ளும் முறையில் இந்தியப் பேரரசு, இந்தி, வங்காளி, மராத்தி போன்ற மொழிகளுக்குப் பரிசு வழங்குவது போல, மைதிலிக்கும் தனியாகப் பரிசு வழங்கும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தி மிகப் பெரும்பான்மையினர் பேசும் மொழி என்ற வாதமே தவறு; கணக்கே தவறு.

இந்தியே மிகப் பெரும்பான்மையினர் பேசும் மொழி என்பது உண்மை என்று வைத்துக் கொண்டால்கூட, மிகப் பெரும்பான்மையினர் பேசுவது என்பதற்காக மற்ற மொழியினர் மீது அந்த மொழி ஆதிக்கம் செலுத்துவது அறமாகாது; அறிவுடைமையாகாது என்ற தீர்ப்பு அளிப்பார்கள், கனடாவில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுபோல ஓர் தகுதிமிக்க குழு இங்கு அமைக்கப்பட்டால்.

தம்பி! இப்போது இங்கே சொல்லுகிறார்கள் அல்லவா, வடக்கே உள்ளவர்கள் ஏதாவது ஒரு தெற்கத்தி மொழியைப் படித்துக் கொள்ள விரும்புகிறார்கள், முன் வந்துள்ளனர் என்று; அதுபோல, எதிர்ப்பும் எரிச்சலும் வளர்ந்துவிட்டிருப்பது கண்டு, ஆங்கில மொழி பேசுவோர், இனித் தங்கள் பிள்ளைகளுக்குப் பிரஞ்சு மொழியைக் கற்பிக்கப் போவதாகவும், பிரஞ்சு மொழிக்கான பள்ளிக்கூடங்களைத் தமது பகுதியில் இனி அமைக்கப் போவதாகவும் பேசுகின்றனர்.

இதைக் கேட்டு கியூபெக் மக்கள் புளகாங்கிதம் அடைந்து விடவில்லை. இது மயக்கும் பேச்சு, பயன் இல்லை என்று கூறுகின்றனர்.

கியூபெக்கில் உள்ள மக்களில் 100-க்கு 98 பேருக்கு ஆங்கிலம் தெரியாது; அங்கு அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் பிரஞ்சு மொழியில்.

ஆனால், கியூபெக்கில் வணிகக் கோட்டங்களையும் தொழிற்கூடங்களையும் அமைத்துக் கொண்டுள்ள ஆங்கில மொழியினர், தமது அலுவலக நடவடிக்கைகள் அனைத்தையும் ஆங்கில மொழியிலேயே அமைத்துக் கொண்டுள்ளனர்.

கியூபெக் மக்கள் அந்த அலுவலகங்களில் பணிபுரியும்போது, "அன்னியர்' போன்ற ஒரு உணர்ச்சி தன்னாலே ஏற்பட்டு விடுகிறது. நாம் அனைவரும் கனடியர் அல்லவா!! - என்று பேசுவது, அந்தச் சமயத்தில் எவ்வளவு பெரிய கேலிக்கூத்தாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்ளேன்.

அந்த அலுவலகங்களில் பெரும்பாலான நடவடிக்கை ஆங்கில மொழியிலேயே நடத்தப்படுவதால், ஆங்கில மொழி பேசுவோரே, பெரிய இடங்களில் அதிகாரிகளாக முடிகிறது. கியூபெக் மக்கள் "எடுபிடி' வேலை மட்டுமே பார்க்க முடிகிறது.

கியூபெக் நமது நாடு; இங்குத் தொழில் நடத்திப் பெற்றிடும் செல்வம் நம்முடையது. ஆனால், இங்கு நமக்கு "எடுபிடி' வேலை!! இது அக்கிரமம்! சொந்த நாட்டிலேயே நாம் அடிமைகளாக்கப் பட்டிருக்கிறோம்! இந்த அக்கிரமத்தை எப்படிச் சகித்துக் கொள்வது; ஏன் சகித்துக் கொள்ள வேண்டும் என்று கியூபெக்கில் எழுச்சி பெற்ற மக்கள் கேட்கின்றனர். அந்தக் கேள்வி கோபத்தை மூட்டவில்லை கனடா அரசுக்கு, சிந்தனையைக் கிளறி விட்டிருக்கிறது.

இந்திதான் ஆட்சி மொழி என்ற நிலை வந்தே தீரும் என்று பேச்சு வலுவடைய வலுவடைய, டில்லி போன்ற வடநாட்டுப் பெருநகர்களில், அரசாங்க அலுவலகங்களிலே மட்டுமல்ல, தனியார் துறையில் உள்ள அமைப்புகளில், வணிகக் கோட்டங்களில், மிகப் பெரும்பாலான நடவடிக்கைகளை இந்தியிலேயே நடத்த முற்பட்டுவிட்டனர். ஆங்கிலம் தெரிந்தவர்கள்கூட இந்தியிலேயே பேசுவது, இந்தியிலேயே அலுவலகக் குறிப்புகளைத் தயாரிப்பது என்ற முறையில் மும்முரமாகிவிட்டனர்.

படிப்பில், பயிற்சியில், செயல் திறமையில் தகுதி மிக்கவர் களாக உள்ள தென்னகத்தார், அத்தகைய அலுவலகங்களில், இந்திப் படை எடுப்பின் காரணமாக இப்போது இடர்ப்படுகின்றனர்.

இங்கே தரப்படுவதில் அரைப்பகுதி கிடைக்கும் என்றாலும், இதை விட்டுவிட்டுத் தமிழ் நாட்டுக்குத் திரும்பி வந்துவிடலாம் என்று பார்க்கிறோம்: இங்கே இனி அதிக நாட்களுக்கு இருக்க முடியாது போலிருக்கிறது என்று இப்போதே அவர்கள் குமுறிக் கூறி வருகின்றனர்.

இந்தி மட்டுமே ஆட்சிமொழி; ஆங்கிலம் அறவே அகற்றப்படும் என்ற நிலையில் இன்னும் எவ்வளவு தத்தளிக்க வேண்டி நேரிடும் என்பதை எண்ணிப் பார்க்கும் போதே திகில் மூண்டுவிடுகிறது, நிச்சயமாக.

தம்பி! இருமொழித் திட்டத்தை மேற்கொண்ட நிலையிலேயே மறைமுகமான அநீதி இழைக்கப்படுவதாக, க்யூபெக் மக்கள் கூறி எதிர்க்கிறார்கள்; இங்கோ காமராஜர் துணிந்து கூறுகிறார், போனால் போகட்டும் என்று. ஆங்கிலமும் சிறிது காலம் இருந்துவரட்டும் என்று ஏற்பாடு செய்கிறோம்; ஆனால் ஒன்று மட்டும் இப்போதே கண்டிப்பாகக் கூறி விடுகிறேன்; இந்த ஆங்கிலம் என்றென்றும் இருந்து வரும் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்; இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்ற நிலை எப்படியும் ஏற்பட்டே தீரும், என்பதாக.

அந்த நிலையில், என்னென்ன விதமான ஆதிக்கம் அநீதி அக்கிரமம் நெளியும் என்பதை எண்ணிப் பார்த்திடும் எவர்தான், இன்றிருந்தே இந்தியை எதிர்த்தாக வேண்டும் என்ற உணர்ச்சி கொள்ளாமலிருக்க முடியும்?

அந்த உணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அச்சமூட்டி அதனை அழித்திட முடியவில்லை; கனிவாகப் பேசி அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை? அந்த உணர்ச்சி, கட்சிக் கட்டுகளைக்கூட இடித்துத் தள்ளிக் கொண்டு, பரவிக் கொண்டிருக்கிறது. துரைத்தனம் மேற்கொள்ளும் அடக்குமுறை அந்த உணர்ச்சியை மேலும் மேலும் வளர்த்திடச் செய்து வருகிறது.

ஆனால், தம்பி! அந்தவிதமான உணர்ச்சியைக் கனடா அரசு மதித்து, பரிகாரம் தேடிட முயல்வதுபோல இங்கும் இந்தியப் பேரரசு தக்க முறையை மேற்கொள்ள வேண்டுமானால், அந்த உணர்ச்சியை எதற்குப் பயன்படுத்தி, எவ்விதமாகப் பணியாற்றி, வெற்றி பெற்றிட வேண்டும் என்பது பற்றித்தான் இப்போது அனைவரும் தீவிரமாகச் சிந்தித்தாக வேண்டும்.

குழப்பம், கலகம், பலாத்காரம், நாசவேலை என்பவைகள் மூலம், இந்தி எதிர்ப்புணர்ச்சியை இந்தியப் பேரரசு உணர வேண்டும் என்று எண்ணுவதும், அம்முறையில் செயலாற்று வதும், நிச்சயமாகப் பயன் தராது. மாறாக, இந்தி எதிர்ப்புணர்ச்சி யையே அது அழித்தொழித்துவிடும்.

பலாத்காரத்துக்குப் பணிய முடியுமா? சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டாமா? என்று துரைத்தனம் கேட்கும்; பொதுமக்கள் "ஆம்' என்றுதான் கூறுவார்கள்; இதிலே சந்தேகம் வேண்டாம்.

ஏனெனில், மிகத் தூய்மையான கொள்கைக்காகக்கூட பலாத்காரம் - அவிழ்த்து விடப்பட்டு, அது தன்னுடைய கோரத் தாண்டவத்தை நடத்திட ஒரு அரசு அல்லது ஒரு சமூகம் அனுமதித்து விடுமானால், பிறகு அதேவிதமான பலாத்காரத்தை மிக மோசமான காரியத்துக்காக, நச்சு நினைப்பினர் மேற்கொண்டிட முடியும். பிறகு நாடு, காடு ஆவது தவிர வேறு வழியில்லை.

க்யூபெக் கனடாவில் ஒரு பகுதிதான் என்றாலும், இன்று ஒரு கமிஷன் நியமித்துப் பிரச்சினைக்குப் பரிகாரம் தேடியாக வேண்டும் என்ற அளவுக்குக் கனடப் பேரரசு எதனாலே வந்திருக்கிறது? பலாத்கார நடவடிக்கையினால் அல்ல!

உணர்ச்சியை வகைப்படுத்தி, அந்த உணர்ச்சி கொண்ட சர்க்காரை க்யூபெக்கில் அமைத்ததால்!!

இந்தி எதிர்ப்புணர்ச்சியையும் இந்தியப் பேரரசு மதித்து, இந்தி பேசாதாரின் உரிமைகளை வழங்கிடத்தக்க ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டுமானால் - பலாத்காரத்தால் அல்ல - இந்தி எதிர்ப்புணர்ச்சி கொண்ட சர்க்காரை இங்கு அமைத்துக் காட்ட வேண்டும். அது மட்டுமே இந்தியப் பேரரசின் மமதையை மாய்க்கும்' பிடிவாதத்தைப் போக்கும், பிரச்சி னையைத் தீர்த்து வைக்கும்.

கனடப் பேரரசு கொண்டுள்ள முறையினை அப்படியே ஒப்புக்கொள்ளும் அரசு இருந்து வந்தது, க்யூபெக்கில், முன்பு.

க்யூபெக் மக்கள் மட்டும், ஆங்கில மொழியினரின் ஆதிக்கத்தை எதிர்த்து வந்தனர்; கிளர்ச்சி செய்தனர்; வேலை நிறுத்தங்கள், சச்சரவுகள் நடைபெற்றன.

வேலை நிறுத்தங்களை உடைக்கவும், சச்சரவுகளை அடக்கவும்தான் கனடா பேரரசு முனைந்தது, அந்த நாட்களில்.

பிறகு, தெளிவு பெற்றவர்கள், ஆங்கில மொழியினரின் ஆதிக்கத்தை எதிர்க்கும் உணர்ச்சி மக்களிடம் வெளிவந்தால் மட்டும் போதாது, அந்த உணர்ச்சியின்மீது கட்டப்பட்ட அரசு க்யூபெக்கில் அமையவேண்டும் என்று திட்டமிட்டுப் பணியாற்றினர்.

அத்தகைய அரசு அமைந்தது க்யூபெக்கில்; இனி இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்க முடியாது என்று கனடப் பேரரசு, கைகூப்பிய நிலை பெற்றது.

இப்போது க்யூபெக்கில், மக்களின் எண்ணம் வேறு, அரசின் எண்ணம் வேறு என்பது அல்ல நிலை.

தம்பி! இதனை மறந்திடலாகாது; எத்தனை வலுவுள்ளது என்று நாம் கூறினாலும், இந்தி எதிர்ப்புணர்ச்சி என்பது தமிழ் மக்களிடையில் - அதிலும் தெளிவும் துணிவும் பெற்ற, தன்னலம் மறந்த பகுதியினரிடையில் - காணப்படுவதேயன்றி, தமிழக அரசுடையது அல்ல.

தமிழக அரசு, இந்தி ஆதரவாளர்களின் முகாம்; இது கண்டு அருவருப்புக் கொண்டிடுவதால் மட்டும் ஆகப் போவது ஒன்றும் இல்லை.

அரசு என்ன அரசு! மக்களின் சக்தியின் முன்பு இந்த அரசு எம்மாத்திரம்! என்று பேசலாம்! சுவையும் சூடும் மிகுந்திருக்கும். ஆனால், உலகம் ஒரு கேள்வி கேட்கும், அதற்குப் பதில் தர முடியாமல் திணறுவோம்.

அரசினையே துச்சமென்று கருதத்தக்கவிதமாக இந்தி எதிர்ப்பு உணர்ச்சி தமிழக மக்களிடம் இருப்பதாக வீரம் பேசுகிறாயே ஐயா! அந்த வலிவினைக் கொண்டு, இந்தி எதிர்ப்பு உணர்ச்சி கொண்ட அரசு அமைத்திட ஏன் முடியவில்லை உம்மால்? என்று கேட்கும்!! அது. . . அது. . . என்று இழுத்துப் பேசினால் பயன் இல்லை.

இந்தி எதிர்ப்பு உணர்ச்சி என்பது மக்களில் ஒரு பகுதியினரின் உணர்ச்சி மட்டும் அல்ல, தமிழக முழுவதும் ஊடுருவிப் பாய்ந்துள்ள உணர்ச்சி என்பது உண்மை என்றால் அந்த உணர்ச்சி கொண்ட அரசு ஏன் அமைக்கக் கூடாது, தமிழகத்தில்?

கலயங்களிலே வண்ணக் குழம்புகளை நிரப்பி வைத்துக் கொண்டு, தூரிகை கொண்டு, ஓவியம் தீட்டிட வேண்டும் அது ஓவியன் வேலை. வண்ணக்குழம்பினை மனம் போன போக்கிலே அள்ளித் தெளிப்பது ஓவியக் கலையல்ல.

உணர்ச்சியைப் பயன்படுத்துவதும், தம்பி! ஒப்பற்ற திறமை தேவைப்படும் ஒரு நுண்கலை.

தமிழகத்தில் இன்று காணப்படும் உணர்ச்சியைத் திறமையுடன் பயன்படுத்தி, இந்தி எதிர்ப்புணர்ச்சியின் மீது கட்டப்பட்ட அரசு காணவேண்டும் தமிழகத்தில்.

இந்தி எதிர்ப்புணர்ச்சியைத் தமிழகத்தில் அரியணை ஏறச் செய்வதிலே வெற்றி பெறாமல், இந்தியப் பேரரசின் துணையுடனும் தமிழகக் காங்கிரஸ் அரசின் ஒப்புதலுடனும் அரியணை ஏறிடும் இந்தியை எப்படி விரட்ட முடியும்? கேட்க மாட்டார்களா, இந்தியப் பேரரசினர் உன்னுடைய இந்தி எதிர்ப்புணர்ச்சிக்கு உன்னுடைய தமிழகத்திலேயே தரவேண்டிய மதிப்பினை மக்கள் தந்திருந்தால், தமிழக அரசு இந்தி எதிர்ப்பு அரசாக அல்லவா வடிவம் பெற்றிருக்கும்; காணோமே; உன்னுடைய இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை ஒப்புக்கொள்ளும்படி உன்னுடைய மக்களையே உன்பக்கம் கொண்டுவர முடியவில்லை உன்னால், நான் உனக்குப் பணிய வேண்டுமா! கூரை ஏறிக் கோழி பிடி ஐயா! முதலில்!! பிறகு கோபுரம் ஏறி வைகுந்தத்திற்கு வழி அமைக்கலாம்!! என்றெல்லாம்.

எனவேதான் தம்பி! க்யூபெக் மக்கள், முதலில், தம் வழி நடந்திடும் அரசு அமைப்பதில் வெற்றி கண்டனர்; அந்த வெற்றியைக் கண்டபிறகு கனடப் பேரரசு, க்யூபெக்கின் கேள்வி களைப் புறக்கணிக்க முடியவில்லை.

கனடாவின் பிரச்சினை இந்தக் கருத்தினை நாம் பெற்றிடவும் பயன்படுகிறது. ஆனால் தம்பி! இதனை நான் உணர்ந்து என்ன பலன்! நீ உணர்ந்து மட்டும் என்ன பலன்! இந்தி எதிர்ப்பு உணர்ச்சி கொண்ட அனைவரும் உணர்ந்து தமிழக அரசினை மாற்றி அமைக்கும், உறுதி கொண்டால்தானே பலன் கிடைக்கும்?

இந்தியைத் தமிழக மக்களிலே ஒரு பகுதியினர் எதிர்க்கிறார்கள், தமிழக அரசு இந்தியை ஆதரிக்கிறது என்ற நிலை இருக்குமட்டும், இந்தியப் பேரரசு இறுமாந்து நிற்கும்; உலக ஜனநாயக நாடுகள்கூட, இந்தியப் பேரரசின் போக்கைக் கண்டிக்கத் தயங்கும்.

ஆனால், தமிழக அரசு இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்க்கிறது என்ற நிலை பிறந்திடும்போது இந்தியப் பேரரசு, அந்த உணர்ச்சியைப் புறக்கணிக்கத் துணியாது; துணியுமானால், இந்தியப் பேரரசை ஜனநாயக உலகு கண்டித்திட முனைந்திடும்.

பிரஞ்சு மொழியினரின் கிளர்ச்சியை இன்று கனடப் பேரரசு மதித்தாக வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரணத்தைக் கருத்துடன் ஆராய்ந்து பார்த்தால், தம்பி! இந்தி எதிர்ப்பு உணர்ச்சி வெற்றி பெறுவதற்கான வழி அந்த உணர்ச்சிமீது கட்டப்பட்ட அரசு தமிழகத்தில் அமைவதுதான் என்பது புரியும். இதனைப் புரிந்திடச் செய்திடும் பணியினைத்தான் தம்பி! நீ மேற்கொண்டிருக்கிறாய். உன் வெற்றியைப் பொறுத்துத்தான் இருக்கிறது, நாட்டின் எதிர்காலம்.

அண்ணன்,

20-6-65