அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இடியோசையில் கிடைக்காது இன்ப நாதம்
2

உண்மையான ஜனநாயகம், கூட்டு முயற்சியில் நம்பிக்கை கொள்கிறது.

புதிதாக விடுதலை பெற்ற நாடுகளிலே, அதன் தலைவர் களுக்கு மக்களின் அறிவாற்ற-லேயும், பொறுப்புணர்ச்சியி லேயும் நம்பிக்கை இல்லாதது மட்டுமல்ல, உடன் உள்ள தோழர்களிடம்கூட நம்பிக்கை இல்லை; அவர்களின் திறமையை ஒப்புக்கொள்ள மனம் இல்லை! உடனிருந்து அரசாளும் அலுவலிலே ஈடுபட்டுள்ளவர்கள் ஒவ்வொருவரும், தாமாக இயங்கிவிடும் ஆற்றலுமற்றவர்கள், நமது தயவால் வாழ்பவர்கள், நமது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி விட்டிருக்கிறது.

காவியச் சிறப்புக்குரிய வீரச்செயல் பல புரிந்த ஜோமோ கெனியாட்டா, தனது நாட்டு அமைச்சர்கள் வெளியிடும் உத்தரவுகள் ஒவ்வொன்றும், தன்னால் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகே, நாட்டுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்துள்ளார்! இப்படி ஒரு கட்டளையா! ஜனநாயகத்திலா!! என்று எவரும் கேட்கவில்லை. கேட்டிடின் என்ன நேரிடும் என்பது உணர்த்தப்பட்டிருப்பதால்!!

உண்மையான ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், தமது கருத்து மற்ற எவருடைய கருத்தைக் காட்டிலும் மேலானது, பயன் தருவது என்பதனை மெய்ப்பித்துக் காட்ட முடியும் என்பதில் தளராத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

மறுத்துப் பேசுவோரையும் மனம் மாறிடச் செய்திட முடியும் என்கின்றனர்.

எமது கருத்தினையா மறுக்கின்றீர் என்று எக்காளமிடும் தலைவர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை. கருத்துடன் கருத்து மோதட்டும், தங்கமானால் தணலால் அழிந்திடாது என்று கூறிடும் நெஞ்சுரம் அவர்களிடம் இல்லை. ஆகவேதான் அவர்கள், மாற்றுக் கருத்தைச் சந்திக்க அஞ்சுகிறார்கள்; தமது கருத்துக்காக வாதாடக் கூச்சப்படுகிறார்கள்; போட்டியற்ற பந்தய வீரர்களாக விரும்புகிறார்கள்!!

இம்முறையினால், சிலகாலம், சிலபல நலன்களைக்கூட நாட்டுக்குப் பெற்றளித்திடக்கூடும்; அளித்துள்ளனர்.

அரபுக் குடியரசுத் தலைவர் நாசர் தமது நாட்டுக்கு அஸ்வான் அணை அமைத்துத் தந்துள்ளார்; சூயஸ் கால்வாயின் ஆதிக்கத்தை வல்லரசுகளிடமிருந்து பறித்து எகிப்தின் உரிமையாக்கினார்.

ஆனால், அந்த நாசர் அவருக்கு இணையானவர் என்று பலராலும், அவருக்கு முன்னோடி என்றும் ஒரு காலத்தில் கருதப்பட்ட நகீப் என்பவரைக் கருத்தளிக்கும் உரிமையுடன் நடமாடவிடவில்லை. அவரைப் பூட்டி வைத்துவிட்டுத்தான், எகிப்துக்குப் "பொற்காலம்' அளித்திடுவேன் என்று கூற முடிகிறது. வேறு எந்தக் கட்சியும் கூடாது; தனது கட்சியிலும் வேறு கருத்தினைக் கூறிடத் துணிபவர் ஒருவர் இருத்தல் கூடாது; இது சட்டம்! மக்கள் சம்மதம் பெற்றுவிட்டேன் என்கிறார் நாசர்! இதுவா ஜனநாயகம்? என்று கேட்பவர்களுக்கு, அவருடைய ஆதீனத்தில் இடம் பெற்றுள்ளவர்கள், தைரியமாகக் கூறுகிறார்கள் - மனச்சாட்சியின்படி என்று கூறுவதற்கில்லை - இதுதான் நாசரிசம் என்று!

இந்தப் பாதையில் மேலும் வேகமாகச் செல்கிறார், ஹேஸ்டிங்ஸ் பண்டா எனும் தலைவர்! இவருடைய மோட்டார் நெடுஞ்சாலையில் போகும்போது, வேறு எவருடைய மோட்டாரேனும் முன்னே செல்ல முயன்றால், வழக்கு! தண்டனை! அபராதம்! ஆமாம்! நெடுஞ்சாலையில் அவர் என்றால், மற்றவர் ஓரம் நிற்க வேண்டும்.

கனடா நாட்டு அதிபர் நிக்ருமா இதிலே மேலும் உச்சிக்குச் சென்றுவிட்டார்.

கனா பல்கலைக் கழகத்தில், நிக்ரூமாவின் கருத்துக்கள். பாட நூற்களாகிவிட்டன!

ஜனநாயகம் - சோஷியலிசம் - விஞ்ஞானம் - மதம் - ஒழுக்கமுறை - சட்ட நுணுக்கம் எனும் எதற்கும் அந்தந்தத் துறை வித்தகர்கள் படைத்துள்ள ஏடுகள் என்ன கூறியிருந்த போதிலும், அவை பற்றி நிக்ரூமா என்ன கூறியிருக்கிறாரோ, அந்தக் கருத்துக்களே மேலானவை, ஒப்புக் கொள்ளத்தக்கவை, போற்றப்பட வேண்டியன! போதுமா தம்பி! அவர் சென்றுள்ள உயரத்தின் அளவினைத் தெரிந்துகொள்ள! மேலும் வேண்டும் என்கிறாயா! உண்டு! கேட்டிடு!

அவர் விரும்பியபடி கனா நாட்டு உயர்நீதிமன்றத்து நீதிபதிகள், அரசியல் எதிரிகளுக்குத் தண்டனை வழங்கவில்லை - சட்டம் இடம் கொடுக்கவில்லை - நீதிக்குப் புறம்பாக நடக்க முடியாது என்று கூறிவிட்டனர். என்ன செய்தார் நிக்ரூமா? அந்த நீதிபதிகளை வேலையினின்றும் நீக்கிவிட்டார்! தாமே, தமது அரசியல் எதிரிகளுக்கான புதிய தீர்ப்பினைப் பிறப்பித்தார்! இனி கடைசி தீர்ப்பளிக்கும் உரிமை நிக்ரூமாவுக்கே என்ற சட்டமும் பிறப்பித்து விட்டார்! எவ்வளவு உயரம் சென்றுவிட்டார் என்பதனை விளக்குவதுபோல ஒரு திங்களுக்கு முன்பு, நிக்ரூமா தம்முடைய உருவச் சிலையைத் தாமே திறந்து வைத்தார்! சிலையின் உயரம் 55 அடி என்கிறார்கள்!

அவ்வளவு உயரமான சிலையை, உயர்ந்தவரின் சிலையைத் திறந்து வைக்கத்தக்க தகுதி வேறு யாருக்கு இருக்க முடியும் - நிக்ரூமாவுக்குத் தவிர!! அதனால்தான் அவருடைய சிலையை அவரே திறந்துவைத்தார் போலும்!!

வேறு கட்சி, வேறு தலைவர்கள், வேறு முறை, வேறு கருத்து, தலைகாட்டக் கூடாது. எல்லாம் நிக்ரூமா மயம்!! ஏன்? வேறு கருத்து, வேறு தலைவர், வேறு கட்சி தோன்றினால் மக்கள் அதனை ஏற்கமாட்டார்கள், தனது தலைமை, தனது முறை, தனது கருத்து இவற்றை மட்டுமே ஏற்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை; அந்த நம்பிக்கை உண்மையான ஜனநாயகத்தைக் கொண்டிடுவோர் மட்டுமே பெறமுடியும்.

முறை எதுவோ இருக்கட்டும், மக்கள் வாழ்ந்திட வழி அமைத்துக் கொடுத்தால் போதும், அதனை இந்தத் தலைவர்கள் செய்கிறார்கள் அல்லவா என்று கேட்க நினைப்பார்கள், சிலர். துவக்கத்திலே முடியும்; ஆனால், நாளாகவாகத் தன்னிச்சையாக நடந்து கொள்ளும் தலைவர்களின் தர்பார், தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் காரியத்திலேயே பெரும்பகுதி நேரத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டிய நிலையை உண்டாக்கிவிடும். பிறகு நாட்டு நிலை சீர்குலைந்து போகும்.

கனா நாட்டுப் பொருளாதார நிலை பற்றி நிபுணர்கள் இப்போது கவலை தெரிவித்துள்ளனர்.

கனா நாட்டுக்கு வளம், அங்கு விளையும் கோகோவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலேதான் பெரும்பாலும் கிடைக்கிறது. பொருளாதார விளைவுகள், சிக்கல்கள் பற்றி எண்ணிப் பார்க்காமலும், சந்தை விரிவான முறையில் அமைவதற்கு ஏற்றவிதமான ராஜதந்திர உறவுகளைச் செம்மைப் படுத்திக் கொள்ளாமலும், கோகோ விளைச்சலை மட்டும் பல மடங்கு அதிகமாக்கிடும் திட்டமிட்டார் நிக்ரூமா! இந்தத் திட்டத்திலே ஏற்படக் கூடிய கெடுதல் பற்றி எவர் பேச முடியும்? அவர் திட்டத்தைக் குறை கூறலாமா! நாடு தாங்காது என்கிறதே சட்டம்! எனவே அவர் இச்சை திட்டமாயிற்று; திட்டம் காரணமாக கோகோ விளைச்சல் அதிகமாயிற்று; அந்த அளவுக்குச் சந்தை விரிவாகவில்லை; விலை விழுந்தது; எதிர்பார்த்ததில் பாதி அளவுக்கு வந்து விட்டது விலை; பொருளாதார நெருக்கடி கனாவில்?

தன்னிச்சையுடன் நடந்து கொள்ளும் "அதிபர்'களிடம் உள்ள பல நாடுகளிலே, இன்று இதுபோன்ற சிக்கல்கள்.

சிக்கல்கள் உள்ளன என்பது மட்டுமல்ல; அந்தத் தலைவர்கள் அடக்கி வைக்க வைக்க, எதிர்ப்பு மடிந்து விடவில்லை, மறைந்து கொள்கிறது; எதிர்பாராத வேளையில் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பி நாட்டிலே அமளியை, குழப்பத்தை மூட்டிவிடுகிறது; அமளி காரணமாக மேலும் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டு விடுகிறது. மக்களின் வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுப் போகிறது.

ஜனநாயகத்தை மதிக்க மறுக்கும் தலைவர்களுக்கு ஓர் நாள் ஆபத்து வந்திடும் என்பதுகூட அல்ல முக்கியமான பாடம், அத்தகையவர்களைத் தாங்கிக் கொள்ளும் நாடு, பிறகு தத்தளிக்க நேரிடுகிறது, மக்கள் வேதனைப்பட வேண்டி வந்துவிடுகிறது.

விதிவிலக்குப் போல சில நாடுகளில் நிலைமை இருக்கலாம்; ஆனால், பொதுவான உண்மை அதனால் பொய்த்துப் போய் விடுவதில்லை.

உண்மையான ஜனநாயகம் ஒரு மரபினை ஏற்படுத்தித் தருவதுடன், ஒரு தலைவர்கள் வரிசையை அமைத்துத் தருகிறது; அல்லது அமைந்திடத் துணை செய்கிறது. ஒரு தலைவர் மறைந்த பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ, அவர் செய்துவந்ததை, அதே முறையில் அதே அளவில், அதே தரத்தில் செய்ய முடியாமற் போயினும், மக்களின் நலனுக்கு ஏற்ற விதத்தில் தொடர்ந்து செய்து கொண்டு போகத் தக்க "மற்றவர்கள்' கண்ணுக்குத் தெரிகிறார்கள்.

சர்ச்சிலைப் போல ஒருவர் கிடைப்பாரா என்று வியந்து பாராட்டினார்கள், திகைத்துக் கூறிடவில்லை: ஏனெனில், ஈடன், மாக்மிலன் என்று பலர் கண்ணுக்குத் தெரிந்தனர் வரிசையில்!

தொழிற் கட்சியிலும் அவ்விதமே! அட்- இருந்து வந்த இடத்திற்கு ஒரு வில்சன் கிடைத்திருக்கிறார் - இடையிலே பெவான் - மாரிசன் - கெயிட்ஸ்கில் எனப் பலர்.

ஜனநாயகத்தில், ஓரோர் சமயம் வியப்பளிக்கத் தக்க நட்சத்திரங்களாகத் தலைவர்கள் சிலர் திகழ்கின்றனர் என்றாலும், தொடர்ந்து ஒளிதரத்தக்க திருவிளக்குகள் வரிசையாக உள்ளன. இடியோசையுடன் போட்டியிட முடியாது முரசு! ஆனால், முரசொலி தொடர்ந்து கிடைக்கும்; கரத்தின் தரத்துக்குத் தக்கபடி நாதம் எழும்! இடியோசை கிடுகிடுக்க வைத்திடும், ஆனால், ஓசை தொடர்ந்து இருந்திடாது. இடியோசையில் கிடைத்திடாது இன்ப நாதம்!

ஜனநாயக முறையை மாய்த்திட்ட முறை இடியோசை என்றால், ஜனநாயக முறையை முரசுக்கு ஒப்பிடலாம்!!

தம்பி! நாம் உண்மையான ஜனநாயகத்திலே பற்று மிகுதியாகக் கொண்டுள்ளதால்தான் அந்தக் கடமையைச் செய்வதிலே எத்தனை இன்னல் ஏற்படினும் பொறுத்துக் கொள்கிறோம். எத்தனை இழிமொழிகளை, பழிச்சொற்களைத் தாங்கிக் கொள்கிறோம்! பறந்து செல்லும் காக்கை எச்சமிடுகிறது; பாதையிலே செல்பவனின் பட்டுச் சட்டை பாழ்படுகிறது! அதனால் பயணம் நின்றுவிடுவதில்லை.

உண்மையான ஜனநாயகத்திலேதான் ஒவ்வொருவருக்கும் தத்தமது திறமைக்கேற்ப, பணியாற்றிடும் உரிமை கிடைக்கிறது, கிடைப்பதனால் சமுதாயத்துக்குக் கூட்டுப் பணியின் பலன் முழுவதும் கிடைக்கிறது; மேம்பாடு பெறுகிறது.

அல்ஜீரியாபோல விடுதலைபெற்ற நாடுகளிலே, பென்பெல்லா போன்றவர்கள், ஜனநாயக முறையை மேற்கொள்ளாததால் அந்த நாடுகளிலே உள்ள எத்தனையோ நல்லறிவாளர்கள் மூலம் கிடைத்திடக்கூடிய நலன் நாட்டுக்குக் கிடைத்திடாமல் போகிறது. யாழுக்குப் பல அன்றோ நரம்புகள்! இசை நேர்த்தியாகக் கிடைக்கிறது! ஒற்றைக்கம்பியிலும் இசைக்கருவி உண்டு! பெரிதும் பிச்சைக்காரரின் கருவியாகிவிடுகிறது.

டாக்டர் சுகர்ணோ உண்மையான ஜனநாயக முறையில் இந்தோனேμயர்ன்வ நடத்திச் சென்றிருப்பாரானால், அந்த நாட்டுப் பேரறிவாளர் என்று மதிக்கப்பட்டு வந்த டாக்டர் ஹட்டாவின் திறமை மிக்க பணியினால், நாட்டுக்குப் பயன் கிடைத்திருக்குமல்லவா இன்று?

உண்மையான ஜனநாயகம் அற்ற நாடுகளில், காட்டில் காய்ந்த நிலவாக, புழுதியில் புதையுண்ட மாணிக்கங்களாக, எத்தனை எத்தனை பேர்களோ? யாரறிவார்!! அதனால்தான் எத்தனை பளபளப்பினைக் கூட்டிக் காட்டினாலும், ஜனநாயகமற்ற நாடுகள், அந்தச் சமூகத்திலே கிடைக்கத்தக்க அறிவுச் செல்வம் முழுவதையும் பெற்றுத் திகழ்ந்திடும் நிலையினைப் பெற்றிடா, ஒவ்வொரு கதிரிலும் மணிகள் உண்டு! மொத்தம் கிடைத்தாலே செந்நெற் குவியல்!!

பொதுவாக ஏற்பட்டுவிடும் இந்த இழப்புடன், ஜனநாயகமற்ற நாட்டிலே உள்ள தலைவர்கள், எத்தனை வலிவான பாதுகாப்பு அரண் அமைத்துக் கொண்டிருந்தாலும், ஆபத்து அவர்களைத் தாக்கிட எப்போதும் மோப்பம் பிடித்தபடி இருக்கும்.

இதனைப் பயங்கரமான அளவில், தென் அமெரிக்க நாடுகளிலே காணலாம்.

இப்போது உலக முழுவதும் பேசிக் கொள்ளப்படும் டோமினிகன் நாடு, தென் அமெரிக்காவில் உள்ளது; நான் குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்ட இடம்.

இப்போது இங்கு அமெரிக்கப்படை தலையிடுவது பற்றிய கருத்தினை விளக்க இதனைக் கூறவில்லை. அமளியும் அதிர்ச்சியும், உள்நாட்டில் புரட்சியும் வெளியார் தலையீடும் ஏற்பட்டதற்கு அடிப்படையாக அமைந்துள்ள காரணத்தை மட்டுமே விளக்க முனைகிறேன். ஜனநாயக முறையற்ற நிலையே இத்தனை கோளாறுக்கும் அடிப்படை.

டோமினிகன் நாட்டிலே ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற நிலையில், முன்னம் ஓர் தலைவன் இருந்தான்; நாடு கொண்டாடும் நிலையில்; நானிலம் பாராட்டும் நிலையில்!

நமது ரட்சகன்; நமது வழிகாட்டி!! - என்ற விருதுகள் பெற்றிருந்தான்! சூட்டிக் கொண்டிருந்தான் என்று சொல்லலாம். எந்த அளவுக்குப் பைத்தியம் முற்றியிருந்தது என்றால், தம்பி! அந்த நாட்டிலே ஒவ்வொரு மருத்துவமனையின் நுழைவு வாயிலிலும் கொட்டை எழுத்தில் எந்த நோயையும் தீர்த்திடும் மருத்துவன் எனது தலைவன் ட்ரோஜில்லோ என்ற விளம்பரப் பலகை தொங்கவிடப்பட்டிருந்ததாம். இறுதி? மோட்டாரில் செல்கையில் சுட்டுக் கொல்லப்பட்டான்; பிணத்தை ஒரு குப்பை மேட்டிலே வீசி எறிந்துவிட்டுப் போயினராம் புரட்சிப் படையினர்.

இதுபோன்ற படுகொலைகள் பதைபதைக்கும் நிகழ்ச்சிகள் நெளிந்தபடி உள்ள இடம் டோமினிகன் நாடு.

இந்த நாடுகளில் பொதுவுடைமையாளர்கள் ஆதிக்கம் செய்ய முனைகிறார்கள், அமளி மூட்டுகிறார்கள்; ஆகவேதான் நாங்கள் தலையிட்டு அமைதி ஏற்படப் போரிடுகிறோம் என்று அமெரிக்கத் தலைவர்கள் பேசுகின்றனர்.

அது முறைதானா, காட்டும் காரணம் உண்மைதானா என்பது வேறு விஷயம்; ஆனால், நான் இப்போது, தம்பி! கூற விரும்புவது உண்மையான ஜனநாயகம் இல்லாததுதான், இதற்குக் காரணம் என்பதனைத்தான்.

காஸ்ட்ரோவிடம் உள்ள க்யூபாவில் வலிவான அரசு இருக்கிறது. ஆனால் அங்கும் ஜனநாயகம் இல்லாததால் கருத்து மாறுபாடு கொண்டவர்கள் கலகம் விளைவித்தபடியும், புரட்சி மூட்டிடும் திட்டம் வகுத்தபடியும், அதற்கு அமெரிக்க உதவியை நாடியபடியும் உள்ளனர். எப்போது வெடித்திடும்? எரிமலை கக்கும்? என்று கூறுவதற்கில்லை, இப்போதைக்கு, க்யூபாவுக்கு கண்கண்ட கடவுளாகக் காஸ்ட்ரோ இருக்கிறார். அவர்போல மற்றவர்கள் தொடர்ந்து கிடைப்பார்களா? ஜனநாயகம் இல்லையே, வரிசையைத் தந்திட!

இப்போதே, ஸ்பெயின் நாட்டில், பிராங்கோவுக்குப் பிறகு யார்? என்பதுப் பற்றி பீதியுடன் கேட்கத் தலைப்பட்டுள்ளனர். க்யூபாவிலும் சரி, சர்வாதிகாரத் தலைவர்கள் நடத்திச் செல்லும் நாடுகள் எவை எனினும் அங்கெலாம் இந்தக் கேள்வி எழத்தான் செய்யும் - அதற்கான பதில், அட்-க்குப் பிறகு வில்சன் என்ற முறையில் அமையாது. அத்தகைய நாடுகளில் அரசோச்சுபவர் களின் அரியணை எரிமலையின் முகட்டிலேதான் இருக்கிறது.

பொலீவியா நாட்டுத் தலைவர் ஜெனரல் ரெனேபாரியன் டோஸ் இராணுவ ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால், எதிர்ப்புகள் குமுறியபடி உள்ளன. பலமுறை அவரைக் கொல்ல முயற்சிகள். தப்பித்துக் கொண்டார். ஆனால், அவருடைய தலைமீது குறி வைத்தபடி உள்ளனர் அரசியல் பகைவர்கள்! ஏன்? அங்குதான், மக்களின் ஒப்புதலைப் பெற்று, ஆட்சித் தலைவரை மாற்றிடும் உண்மையான ஜனநாயகம் இல்லையே!

கவுடமேலா எனும் நாட்டில் துணைத் தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டுச் செத்தார்! சிறிதளவு வளமாக உள்ள நாடு வெனிஜுலா. அங்கும் அமைதி இல்லை; எதிர்ப்பு; அமளியின் அறிகுறிகள்.

கொலம்பியா நாட்டில் பகைப்புயல்! அதிபர் படை பலத்தைக் கொண்டு, ஆபத்தைத் தடுத்து வருகிறார். எத்தனை நாளைக்கு என்ற கேள்வி.

அத்ஜெண்டினா நாட்டில் விரட்டப்பட்ட சர்வாதிகாரி பெரான் மீண்டும் புகுந்துவிடக்கூடும் என்ற பீதி. பெரானின் கூட்டாளிகள், அரசினை எதிர்த்து அமளிகளை மூட்டியபடி உள்ளனர். ஈக்வடார் நாட்டிலும் உராகுவே நாட்டிலும் நிம்மதியான வாழ்க்கை நடத்த முடியவில்லை மக்களால்; வேலை நிறுத்தங்கள், பொருளாதாரச் சீர்குலைவு; அடக்குமுறை.

பிரேசில், சிலி, பெரு எனும் நாடுகளில் நிலைமை ஓரளவு கட்டுக்கடங்கியதாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

மொத்தத்தில், ஜனநாயக முறையும் மரபும் அமையாததால் தென் அமெரிக்க நாடுகள் பலவும் அமளிக்காடுகளாக உள்ளன.

அந்த நிலையில், அங்கு உள்ள மக்கள், எதற்கும் துணிந்த "பேர்வழிகள்' ஆகிடவேண்டி நேரிட்டு விடுகிறது. ரயிலை நிறுத்திக் கொள்ளை அடிப்பது, பாங்கிகளைக் கொள்ளை அடிப்பது, தலைவர்களைக் கடத்திச் செல்வது, வீடு புகுந்து கொலை செய்வது இவைகள் நடைபெற்றபடி உள்ளன, அரசு, துப்பாக்கியின் துணையில்!

இவ்விதமான நாடுகளில் மக்கள், நிம்மதி பெறுவது ஏது! வாழ்க்கை செம்மையடைவது எப்படி முடியும்? மக்களாட்சி இல்லை; மக்கள் மக்களாக இல்லை.

அமைதியான வாழ்வு கொண்ட சமூகந்தான், அறிவு வளர்ச்சியில் அக்கறை காட்டிட முடியும்; அதன் மூலமாகத்தான் உலகத்தின் பொதுச் சொத்தான அறிவுச் செல்வம் மேலும் மேலும் வளர்ந்து, மனிதகுல மேம்பாட்டினுக்கு உதவிட முடியும். மக்களாட்சி இல்லாத நிலையில், பெரும்பாலான மக்கள் ஓநாயிடம் சிக்கிய ஆடுகளாகவோ அல்லது பட்டியில் போட்டடைக்கப்பட்டவைகளாகவோ ஆக்கப்பட்டு விடுவர்; மனிதத் தன்மை மாய்ந்துவிடும். கற்காலத்திலே இருந்துவந்த நிலைமையை நோக்கி மனிதகுலம் துரத்தப்படும் கொடுமை படை எடுத்திடும்.

ஆகவே, தம்பி! ஜனநாயகம் ஒரு அரசுமுறை மட்டுமல்ல, வாழ்க்கை நெறி; மனிதத் தன்மையை மேம்பாடுடையதாக்கிட வல்ல மார்க்கம். ஆகவேதான்,

பயல்களுக்கு என்ன தெரியும்,
ஒழித்துக்கட்டிவிடுவேன்.
ஓடஓட விரட்டி அடிப்பேன்,
காலிகள் - கூலிகள் - கபோதிகள்,
பதவிப் பைத்தியங்கள், வகுப்புவாதிகள்,
நாட்டைக் காட்டிக்கொடுப்போர்,
கோழைகள், கோமாளிகள்

என்றெல்லாம், ஆளவந்துவிட்டோம் என்ற ஒரே காரணத்தால் சிலர் தூற்றித் திரிவதையும் தாங்கிக் கொண்டு, நாம் உண்மையான ஜனநாயகத் தொண்டாற்றிக்கொண்டு வருகிறோம். நமது நோக்கம் தூய்மையானது என்பது நமது நினைவிலே இருத்தல் வேண்டும்; நடையில் தளர்ச்சி ஏற்படாது; பார்வை பழுதுபடாது; வெற்றி பெற்றிடுவோம்.

அண்ணன்,

27-6-65