அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கடமையாற்றிட
2

ஒரு புற்று அழிக்கப்பட்டதும், வேறோர் புற்றிலிருந்து பாம்பு கிளம்பினால் என் செய்வது? புற்றுகளை ஒன்று விடாமல் அழித்திட வேண்டும். அது மட்டுமல்ல, இத்தனை புற்றுகளை மூடி மறைத்துக் கொண்டுள்ள புதர்களை அழித்தாக வேண்டும்.

லாகூர், சியால்காட், பார்மர் போன்ற இடங்களிலே துருப்புகள் எடுத்துவரும் நடவடிக்கை, புற்றுகள் உள்ள புதர்களை அழித்திடும் செயலுக்கு ஒப்பானதாகும்.

லால்பகதூர் மிகத் தெளிவாகத் கூறிவிட்டிருக்கிறார். நமது நோக்கம் பாகிஸ்தான் மீது படை எடுத்து, முறியடித்து அதனை நம்முடையது ஆக்கிக் கொள்வது அல்ல என்று.

பாகிஸ்தான் பகுதிக்குள் படைகள் சென்று போரிடுகின்றன என்றால், அந்த மண்ணுக்காக அல்ல; அங்கிருந்து தளம் அமைத்துக் கொண்டு பாகிஸ்தானியப் படைகள் இந்தியா மீது பாய்வதைத் தடுத்திட, அந்தத் திட்டத்தை வெட்டி வீழ்த்திட.

தடுப்பு நடவடிக்கையாகவே இது மேற்கொள்ளப்பட்டிருக் கிறதேயன்றி, நாடு பிடிக்கும் நப்பாசை காரணமாக அல்ல! இந்த நடவடிக்கையும், பாகிஸ்தான் பயங்கரமான திட்டத்துடன் இந்தியா மீது தாக்குதலை நடத்தி, காஷ்மீரில் புதிய இடங்களைப் பிடித்துக் கொண்டதனைக் கண்ட பிறகே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு முனையிலும், பாகிஸ்தானின் சதித் திட்டம் உருவெடுக்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானை நடத்திச் செல்லும் போர் வெறியர்கள், பெரிய அளவு படைகொண்டு தாக்கிப் பார்த்துத் தோற்றோடினார்கள். இப்போது ஒரே நேரத்தில் பல முனைகளிலே போர் துவக்கி, வெற்றி கிட்டுமா என்று பார்க்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சர் சவான் கூறியுள்ளார், எத்தனை போர் முனைகளை ஏற்படுத்திக் கொள்ளப் பாகிஸ்தான் துணிந்தாலும், அத்தனை முனைகளிலும், எதிர்த்து நின்று போரிட்டு வெற்றி பெற்றிடும் வலிவு நமது படைகளுக்கு உண்டு என்று.

சவான் கூறியுள்ளபடி, ஒவ்வொரு முனையிலும், பாகிஸ்தானே முதலில் வம்புக்கு வருகிறது. களத்திலே நமது வீரர்கள் காட்டிடும் ஆற்றலின் முன்பு தாக்குப் பிடிக்க முடியாமல் திணறுகிறது.

இரண்டாம் உலகப் போரின்போது, பெரும் பங்கேற்று, ஆற்றல் மிக்கவர்கள் என்ற புகழ் பெற்ற தளபதிகளும், படை வீரர்களும், இந்திய வரிசையில் நிரம்ப உள்ளனர். படைத் தலைவர் சவுத்ரி, டாங்கிப் போரில் நிபுணர் என்று கூறுகிறார்கள். இரண்டாம் உலகப் பெரும்போரில் 16-ஆம் எண் டாங்கிப் படையை நடத்தி வீர வெற்றிகள் பெற்றவர்; குறிப்பாக, பர்மா களத்தில் ஐதராபாத், கோவா நடவடிக்கைகளில் வீர வெற்றி பெற்றவரும் சவுத்ரியே! சீனப்படை நமது நாட்டைச் சின்னாபின்னப்படுத்திவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டபோது, சவுத்ரியைப் படைத் தலைவராக்கினர்.

அந்த நாட்களில், இன்று பாகிஸ்தானின் சர்வாதி காரியாக உள்ள அயூப்கான் கீர்த்திமிக்கவ ராகவோ, முதல் வரிசையின ராகவோ இருந்தவரும் அல்ல! எனவே, அவரால் நடத்திச் செல்லப்படும் படையினர் அழிவைத் தான் காண்கின்றனர்.

திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுப் போனதால் திகைத்துப் போயுள்ள அயூப்கான் இனி நாட்டு மக்களைப் பீதி கொள்ளச் செய்திடும், திடீர் தாக்குதல்களிலும், சதிகாரர்களை ஏவி நாசவேலை நடத்துவதிலும், பாதுகாப்பற்ற குடிமக்கள் மீது குண்டுகள் வீசிடும் விமானத் தாக்குதல் நடத்துவதிலும் மும்முரமாகக் கூடும். அந்தச் சமயத்தில் தம்பி! நாட்டு மக்களின் மனம் குழம்பாத நிலையை ஏற்படுத்தி, பாதுகாப்புத் தேடிடும் செயலில், சர்க்கார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உனது முழு ஒத்துழைப்பைத் தந்திட முன் வரவேண்டும். பணம் திரட்டித் தருவதும், குருதிக் கொடை அளிப்பதும், ஊர்ப் பாதுகாப்புப் படையில் பணியாற்றுவதும், நொந்தவர்க்கு இதமளிப்பதுமான தொண்டாற்றுவதில், நமது கழகத் தோழர்கள், கட்சிப் பாகுபாடு மறந்து மற்றவர்களுடன் கூடி நின்று நற்பணியாற்ற வேண்டும்.

நாடு பாதுகாத்திட வீரர்கள் உயிரையும் துச்சமென்று எண்ணிப் போரிலே ஈடுபட்டிருக்கும் வேளையில், போர்ச் சூழ்நிலையைச் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு, கொள்ளை இலாபம் அடிக்கவும், கள்ள வாணிபம் செய்யவும், விலைகளை ஏற்றிவிடவும் சிலர் ஈடுபடக்கூடும். இதுபோன்ற துரோகச் செயல், நமது வீரர்களின் முதுகிலே கத்தி கொண்டு குத்துவது போன்ற ஈனச் செயலாகும். இது விஷயத்திலே மிக விழிப்பாக இருக்க வேண்டும். விமானத் தாக்குதலின்போது, பீதி ஏற்படாது பார்த்துக் கொள்வதும், விளக்கணைப்பு முறைப்படி நடந்திடச் செய்வதும், பாதுகாப்புக் குழிகள் அமைத்துத் தருவதும், சிறு தாக்குதல் களுக்கு ஆளானவர்களுக்கு முதலுதவி பெற்றளிப்பதும், இன்று முதல் தம்பி! நீ மேற்கொள்ள வேண்டிய தொண்டு என்பதனை மறவாதே. சமூகத்தின் எந்தவிதமான சலசலப்பும், பரபரப்பும், ஒற்றுமைக் குலைவும் ஏற்படக் கூடாது. ஒரு உன்னதமான ஒற்றுமை உணர்ச்சி மலர வேண்டும். அதற்காவன செய்திட முனைந்திடு. வதந்திகள், வீண் விவாதங்கள், இட்டுக் கட்டுதல், இவை அறவே தவிர்க்கப்பட வேண்டும். இவை சமூகக் கட்டினைக் குலைத்துவிடக் கூடியவை. எல்லாவற்றுக்கும் மேலாக வெற்றி நமது பக்கமே என்ற நல்ல நம்பிக்கையுடனும் போர்முனையில் வெற்றி தேடித்தரப் படைகளும், ராஜதந்திர முனையில் வெற்றி ஈட்டிடத் தலைவர்களும் ஆற்றலுடன் உள்ளனர்; அவை பற்றி நாம் துளியும் கலக்கம் கொள்ளத் தேவையில்லை; நாம் சமூகமுனை செம்மையாக இருந்திடச் செய்திடல் வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றி வர வேண்டும்.

வீரர்கள் உயிரையே அர்ப்பணித்துவரும் நாட்களில், நம்மில் ஒவ்வொருவரும், வெற்றிக்காக, நமது நலன்களில் எதனை விட்டுக் கொடுக்க நேரிடினும் மகிழ்ச்சியுடன், அந்தக் கடமையை ஆற்றிட வேண்டும்.

போர் நீடித்திடின் பல பண்டங்கள் பற்றாக்குறையாகிடக் கூடும், வாழ்க்கை வசதிகள் குறையலாம்; தேவைக்கு ஏற்ற அளவு பண்டம் கிடைக்காமற் போகலாம். இவைகளைப் பொறுத்துக் கொள்ளப் பயிற்சி பெற்றிட வேண்டும் இது நாம் செய்யக் கூடிய குறைந்த அளவு தியாகம்! படை வீரர்கள், குண்டுக்கு மார்காட்டி நிற்கிறார்கள், மானம் காத்திட, மண்ணைக் காத்திட!

ஒளிவிளக்குகளும் ஒய்யார விழாக்களும், சுவைமிக்க விருந்துகளும் கேளிக்கைகளும் அறவே நீக்கப்பட வேண்டும்; வீரர்கள் களத்திலே நிற்கின்றனர், குண்டு வீச்சுக்கிடையில். இந்தச் சமயம் சொகுசான வாழ்க்கை தேடுபவன், மனித இதயம் படைத்தவன் அல்ல.

பற்பல நாடுகளில் ஒரு தலைமுறையில் இருமுறை போர் நடைபெற்றதைக் கண்டவர்களும், அதிலே ஈடுபட்டவர்களும், மகனை இழந்த மாதாவும் கணவனை இழந்த காரிகையும், கரமிழந்தோன், கண்ணிழந்தோன், முடமானோன் என்போர் உளர், நெருப்பாற்றில் நீந்தி வெளிவந்தோர். நமக்கு அதுபோன்றதோர் அனுபவம் இதுவரையில் ஏற்பட்டதில்லை. முன்பு நடைபெற்ற போர்கள் எங்கோ நெடுந்தொலைவில்! இப்போது இங்கேயே!

தோல்வி தாக்கிடும் நிலையில் அயூப்கானின் கண்கள் எந்தெந்த ஊர்களின் மீது பாய்ந்திடுமோ, கூறுவதற்கில்லை, ஆனால், எது நேர்ந்திடினும், ஆண்மையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற ஆற்றல் நம்மிடம் நிரம்ப உண்டு. தமிழ் இலக்கியம் இதற்கான சான்று பல காட்டுகின்றன.

போரினை விரிவான அளவில் தொடர்ந்து நடத்தியாக வேண்டும் என்பதல்ல நமது நோக்கம். பாகிஸ்தானைப் பிடிக்கவும் நடப்பதல்ல இந்தப் போர்; பாகிஸ்தான் மக்களிடம் பகை கொண்டுமல்ல; பாகிஸ்தானில் கொட்டமடிக்கும் கும்பலின் கெடுமதியை ஒழித்துக் கட்ட. போர் மூட்டி நமது நாட்டினைக் கெடுத்திட, பிடித்திட முனையும் போக்கினை ஒழித்திட, நடத்தப்படுவதே இந்தப் போர். இதனை அரசு சார்பில் லால்பகதூர் தெளிவுபடுத்திவிட்டார். எனினும், தெளிவு பெறாததுபோல நடிக்கின்றன வல்லரசுகள். போரை நிறுத்துக என்று புத்திமதி கலந்த வேண்டுகோளை விடுத்தபடி உள்ளன.

போர் நிறுத்தப்படும் - எப்போது? போரை மூட்டி விட்ட குற்றம் இழைத்தது பாகிஸ்தான் என்று உலக மன்றம் அறிவிக்க வேண்டும், கண்டன நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்; இனியும் இந்தப் போக்கில் நடந்து கொள்ளுவதில்லை என்ற உத்திரவாதம் பாகிஸ்தான் தர வேண்டும்; உலக நாடுகள் மன்றம் அதனை உறுதிப்படுத்த வேண்டும். இதனைத்தான் ஊதாண்டிடமும் லால்பகதூர் கூறியிருக்கிறார்.

காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவதாக ஒப்புக் கொண்டாக வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபரும், அவரை ஆட்டிப் படைப்பதாகக் கூறப்படும் புட்டோவும் கூறுகின்றனராம்.

இப்போது மூண்டுவிட்டுள்ள தாக்குதல் காஷ்மீர் வாக்கெடுப்புப் பிரச்சினை குறித்து ஏற்பட்டதல்ல.

காஷ்மீரில் பாகிஸ்தான் படை கொண்டு தாக்கிற்று. சர்வதேச எல்லைகளைப் பிளந்தது - இந்திய பூபாகத்தில் நுழைந்து கைப்பற்றிக் கொண்டது; இந்த அக்கிரமத்தை முறியடிக்க, ஆக்கிரமிப்பை அழித்திட, நாட்டு எல்லையைக் காத்திட, தன்மானம் காத்திட, இந்தியா "பதிலடி' கொடுத்திட முனைந்தது.

தாக்குதல் நிறுத்தப்பட வேண்டுமானால், ஒரே வழி, ஒரே நிபந்தனை, இந்தத் தாக்குதலை யார் துவக்கியது என்பது பற்றித் "தீர்ப்பு' அளித்து, அதற்கு ஏற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும். பாகிஸ்தானே குற்றம் இழைத்திருக்கிறது - தாக்குதலைத் துவக்கிற்று - பெரும்படை கொண்டு - அமெரிக்கா வேறு நோக்கத்துடன் தந்த வலிவு மிக்க போர்க் கருவிகளைக் கொண்டு தாக்குதலை நடத்திற்று.

இதுபற்றி இனித்தான் கண்டறிய வேண்டும் என்ற நிலை கூட இல்லை; ஏற்கனவே, எல்லைக் கோட்டின் பார்வையாளர் குழுத் தலைவர் ஜெனரல் நிம்மோ இதனைக் கண்டறிந்து, பாகிஸ்தானே தாக்குதலைத் துவக்கிற்று என்று தமது அறிக்கையில் தெளிவுபடுத்தி விட்டிருக்கிறார். இந்த அறிக்கை ஊதாண்டிடம் தரப்பட்டு விட்டிருக்கிறது. எனவே பாகிஸ்தானே குற்றம் இழைத்திருக்கிறது என்பது பற்றி ஐயம் எழக்கூடக் காரணம் இல்லை.

எனவேதான், தாக்குதலை நிறுத்திட ஒரே நிபந்தனை, நியாயமான நிபந்தனை, பாகிஸ்தான் குற்றம் இழைத்திருக் கிறது என்று அறிவிப்பதுதான், அதன் தொடர்ச்சியான நடவடிக்கை களை உலக நாடுகள் மன்றம் மேற்கொள்ளு வதுதான் என்று லால்பகதூர் அறிவித்திருக்கிறார்.

காஷ்மீரில் வாக்கெடுப்பு என்பது தனியான பிரச்சினை காலத்தால் தேய்ந்து மாய்ந்துபோன பிரச்சினை. அதனையும் இன்றைய தாக்குதல் பிரச்சினையையும் ஒன்றாக இணைப்பது உயிரற்ற சடலத்துக்கு ஒய்யார அலங்காரம் செய்வதற்கு ஒப்பாகும்.

போர் வெறி கொண்ட அதிபர்களிடம் சிக்கியுள்ள ஒரு நாடு, அண்டை நாட்டின்மீது அக்கிரமமாகப் பாய்கிறது, தாக்குகிறது; தாக்குதலை முறியடிக்க, தாக்குதலுக்கு ஆளான நாடு திருப்பித் தாக்குகிறது; இந்தத் தாக்குதல் பெரும் போராகி உலகுக்கே பேராபத்தை மூட்டி விடுமே என்று கவலை கொண்டு சமாதானம் பேச வருபவர்கள், இருநாடுகளில், எந்த நாடு தாக்குதலைத் துவக்கியது என்று அறிந்து அந்த நாட்டைக் கண்டிக்கக் கூடத் தைரியம் அற்றவர்களாக, அந்த அளவுக்குக் கூட நேர்மையில் நாட்டம் காட்ட முடியாதவர்களாக இருந்திடின், உலகில் அறம் தழைப்பது எங்ஙனம்? உலக நாடுகள் மன்றம் உருப்படுவது எவ்விதம்?

சிக்கலற்றுத் தெரிகிறது, பாகிஸ்தானே இந்தியாவைத் தாக்கிற்று என்பது; பாகிஸ்தான், முதலில் பசப்பிற்று, பிறகு ஆமாம்! தாக்கினோம்! என்று கூடக் கொக்கரித்தது. எனினும், உலக நாடுகள் மன்றம் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டு மற்ற நடவடிக்கையைத் தொடர்ந்திட, மனமற்று இருப்பது வியப்பை மட்டுமல்ல, வேதனையையும் தருவதாக இருக்கிறது.

தாக்குதலைப் பாகிஸ்தான் நடத்தத் தொடங்கிய போதே உலக நாடுகள் மன்றம் அந்தச் செயலைக் கண்டித்துக் கடும் நடவடிக்கை எடுத்தேனும் பாகிஸ்தான் திட்டத்தை முறியடிப்போம் என்று துணிந்து அறிவித் திருந்தால், இந்தத் தாக்குதல், போர் அளவு ஆகி இருந்திருக்காது.

அந்தத் துணிவும் உலக நாடுகள் மன்றத்துக்கு எழவில்லை. துணிவு எழாதது மட்டுமல்ல, தூய்மையான நோக்கமும் எழவில்லை. போர் முற்றிடும் வரையில் அக்கரையற்றுக் கிடந்துவிட்டு, அக்கிரமம் செய்தோன் அடிபட்டு அலறி, அக்கிரமம் செய்வதற்கான வலிவை இழந்து வெறிபிடித்து அரற்றும் வேளையில், ஊதாண்டை அனுப்பி, சமரசம் பேசச் சொல்லுகிறது.

தாக்குதல் துவக்கப்பட்டதும், உலகிலே பல்வேறு நாடுகளிலே உள்ள நாளேடுகளும் பாகிஸ்தானே குற்றம் இழைத்திருக்கிறது, அமைதியாக இருந்துவந்த முனையில் அமளியை மூட்டியிருக்கிறது, போர்க்கருவிகளைக் கொடுத்து, படையினரை, மாறுவேடத்தில் அனுப்பி வைத்திருக்கிறது என்பது பற்றித் தெளிவாகத் தெரிவித்தன; கண்டிக்கவும் செய்தன.

ஆகஸ்ட்டுத் திங்கள் 12-ம் நாளன்றே, சிகாகோ நாட் செய்தித்தாள் "பாகிஸ்தானியர், போர் நிறுத்த ஒப்பந்தக் கோடு அமைந்துள்ள 475 மைல் கொண்ட முனையில், பிடாரிகளை அனுப்பி வைத்திருக்கிறது. 1947-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்களில் இது மிகக் கவலை தருவதான சம்பவமாகும்'' என்று தெரிவித்திருக்கிறது.

ஆஸ்திரேலிய நாளேடான "சிட்னி டெயிலி டெலிகிராப்' ஆகஸ்ட்டு 13லில், எழுதும் போது, "நடைபெறுவது பாகிஸ்தானின் தாக்குதல் அல்ல, காஷ்மீர் மக்கள் புரட்சி நடத்துகிறார்கள் என்று பாகிஸ்தான் கூறுவதை நம்புவதற்கு இல்லை, ஏமாளித் தனம் மிகுந்திருந்தாலொழிய; காஷ்மீர நாட்டுப் பாமரர், உழவர்கள், எங்கிருந்து ஸ்டென் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் பெற்றிருப்பார்கள்! என்று கேட்டு கேலியால் தாக்கியிருக்கிறது.

ஆகஸ்ட்டு 14-ம் நாள் அமெரிக்க ஏடான "நியூயார்க் டைம்ஸ்' பிடிபட்டவர்கள் காஷ்மீரிமொழி பேசவில்லை. பஞ்சாபி மொழியோ அதுபோன்ற வேறு மொழியோ பேசுகிறார்கள் என்பதனைச் சுட்டிக்காட்டி, தாக்குதலை நடத்துபவர்கள் பாகிஸ்தானியரே என்பதனை வெட்டவெளிச்சமாக்கி யிருக்கிறது.

காஷ்மீர் மக்கள் புரட்சி செய்கிறார்கள், தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதற்குத் துளியும் ஆதாரம் இல்லை இந்தியாவுக்கும் காஷ்மீர் சர்க்காருக்கும் வேண்டாதவர்களாக உள்ள வட்டாரத்தினர்கூட, இதனை நம்பத் தயாராக இல்லை என்று பால்டிமூர்சன் என்ற ஏடு எழுதிற்று.

காஷ்மீர் மக்கள், தாக்குதல்காரர்களிடம் எவ்வளவு பரிவு காட்டுகிறார்கள் என்பது, அவர்கள் தந்துவரும் தகவல்களின் துணை கொண்டு, எத்தனை வேகமாக, "பிடாரிகள்' நித்தநித்தம் பிடிபட்டுவருகிறார்கள் என்பதிலிருந்தே விளங்குகிறதே! என்று நையாண்டி செய்திருக்கிறது கிருஸ்தியன் சயன்ஸ் மானிடர் எனும் ஏடு.

படைகொண்டுதான் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது என்பதிலே துளியும் ஐயமில்லை என்ற கருத்துப்பட லண்டன் டைம்ஸ் எழுதிற்று.

கிளாஸ்கோ ஹெரால்டு, "தாக்குதல் திட்டம் குலைந்து விட்டது, இந்தியாவில் மட்டுமல்ல, வேறு எங்கும் கூட, பாகிஸ்தானின் வாதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அயூப்கான் தன் மீது படிந்துவிட்டுள்ள கறையைத் துடைத்துக் கொள்ளவே முடியாது என்று எழுதிற்று.

பிடிபட்டவர்கள் தாம் பாகிஸ்தான் படையில் பல ஆண்டுகள் இருந்துவருபவர்கள் என்பதனை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பதனை பால்டிமூர்சன் எடுத்துக் காட்டிற்று.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நட்பு காட்டி வரும் எமக்கே கட்ச் ஒப்பந்தம் நேரிட்ட நேரத்திலேயே இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பது ஆத்திரமூட்டுகிறது. இந்தத் தாக்குதலுக்கு நான் பொறுப்பாளியல்ல என்று பாகிஸ்தான், கூறுவதை ஒப்புக் கொள்ளவே முடியாது பாகிஸ்தான், சமாதானத்தை விரும்பினால், உடனே இந்தப் பிடாரித் தாக்குதலைக் கைவிட்டுவிட வேண்டும், கட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஆஸ்திரேலிய ஏடான கான்பெரா டைம்ஸ் எழுதிற்று.

கட்ச் சம்பவத்திற்குப் பிறகு, தொடர்ந்து காஷ்மீரில் தாக்குதல்! இந்தியாவின் பொறுமை உணர்ச்சிக்கு மிகப்பெரிய சோதனை இது என்று பாரின் இதழ் லீமாண்டி எழுதிற்று.

கட்ச் பிரச்சினையில் நடுவர்கள் தீர்ப்பு தனக்குச் சாதகமாக இருக்காது என்று உணர்ந்த பாகிஸ்தான் கட்ச் ஒப்பந்தத்தை இந்தியப் பாராளுமன்றம் ரத்து செய்யட்டும். அந்த அளவு ஆத்திரம் எழத்தக்க ஒரு புதுத் தாக்குதலை நடத்திடுவோம் என்ற கெடுமதியுடன்தான் காஷ்மீரில் தாக்குதலை நடத்திற்று என்று மான்செஸ்டர் கார்டியன் ஆகஸ்ட்டு 12-லேயே எழுதிற்று.

இத்தனை ஏடுகளும், புது டில்லியில் அச்சிடப்படுபவைகளா! இவ்வளவு தெளிவாக அந்த ஏடுகள் பாகிஸ்தானே குற்றம் செய்தது என்பதனை, துவக்கத்திலேயே ஆகஸ்ட்டுத் திங்களிலேயே எடுத்துக் காட்டியுள்ள போது, பாகிஸ்தான் குற்றம் இழைத்தது என்று நேர்மையுடன் ஒப்புக் கொள்ள, உலக நாடுகள் மன்றம் தயக்கம் காட்டுவானேன்?

பாகிஸ்தான், சிறு சிறு தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தியபோது, உலகப் பெரு நாடுகள் வாய்மூடிக் கிடந்தன. கேட்பார் எவர்? என்ற எண்ணம் தடித்தது; அதன் பிறகே பாகிஸ்தான், "ச்சம்' முனையில் மிகப்பெரிய படையையே அனுப்பிற்று. இன்று அந்தப் படை முறியடிக்கப்பட்டு, நிலை குலைந்து ஓடுகிறது.

தம்பி! நான் ஏற்கனவே கூறியபடி, போர்முனையைக் கவனித்துக் கொள்ள வீரர்கள் உளர்; ராஜதந்திர முனையைக் கவனித்துக் கொள்ள அரசுத் தலைவர்கள் உளர். நாம் நமது முனையைக் கவனித்துக் கொள்ள வேண்டும். உலக நாடுகள் மன்றத்திலே இடம் பெற்றுள்ள வல்லரசுகள், நீதிக்குப் பரிந்து நிற்பவர்களாகக் காணோம். இந்தியா பெற்றுள்ள போராற்றல் அவர்களுக்கு ஒருவிதமான பொறாமை உணர்சியைத் தந்திருக்கக் கூடும் என்றுகூட எண்ணுகிறேன். எனவே, வல்லரசுகளான பிரிட்டனும் அமெரிக்காவும், தாங்கள் கூறிடும் யோசனையைக் கேட்டிட இந்தியா இணங்காவிட்டால், உதவிகளை நிறுத்தி விடுவதன் மூலம் ஒடுக்கி மடக்கி, இணங்கவைக்கலாம் என்று எண்ணுகின்றன. இதனை சோவியத் ஆதரிக்குமா என்பது பெரியதோர் கேள்விக்குறி. ஆதரிக்காது என்பதே என் கருத்து. எது எப்படி உருவெடித்திடினும், நாம் இங்கே நமக்குள்ளாகத் திரட்டிடும் வலிவும், சமைத்துக் கொள்ளும் ஒற்றுமை உணர்வும், உரிமைக்காக எதனை இழந்திடவும் துணிந்திட வேண்டும் என்ற உள்ளுணர்வும் சரியான விதமாக அமைந்துவிடுமானால், வல்லரசுகளின் போக்குக் குறித்துப் பெரிதும் கவலை கொள்ளத் தேவையில்லை.

பாகிஸ்தானின் ராணுவயந்திரம் நொறுங்கிக் கொண்டு வருகிறது.

வல்லரசுகள் துணிந்து ராணுவத் தளவாட உதவி தர முன்வராது என்றே எண்ணுகிறேன்.

ஒரே ஒரு நம்பிக்கை அயூபுக்கு இருக்கிறது; சீனா உதவிக்கு வந்துவிடும்; புதிய போர்முனை உண்டாக்கிப் புதிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று.

சீனா, தன்னலத்தில் மிகுதியும் நாட்டம் கொண்ட நாடு. வியட்நாமில், அமெரிக்கா இவ்வளவு வெளிப்படையாகத் தாக்குதல் நடத்தியும், வியட்நாம் களம்புகச் சீனா அஞ்சுகிறது. காரணம் சீனா நுழைந்தால், இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று அமெரிக்கா தயாராக இருப்பது சீனாவுக்குத் தெரியும்.

சின்னஞ்சிறு பார்மோசா தீவில் இருந்து கொண்டு சியாங்கேஷேக், சீனா என்னிடம்தான் என்று கூறுவதையே சகித்துக் கொண்டிருக்கிறது, சீனா! பார்மோசா மீது பாயவில்லை. காரணம்? அமெரிக்க கடற்படை தயாராக நிற்கிறது அகன்ற வாய்ப் பீரங்கிகளுடன் மட்டுமல்ல, அணுகுண்டுகளுடன்!!

எனவே, அயூபின் பக்கம் சீனா வந்துதான் தீரும் என்று கூறுவதற்கில்லை. அதிலும் அடிமேல் அடிவாங்கி, தன் ஆற்றலற்ற தன்மையை உலகுக்குக் காட்டிக் கொண்ட அயூபின் படைக்குப் பக்கம் நிற்க, சீனாவுக்கே மனம் வராது. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் எவர் பயணம் செய்ய முன்வருவர்!

தம்பி! இவை என்னுடைய எண்ணங்கள் இவைகளுக்கு முற்றிலும் மாறாகக்கூட நிலைமைகள் உருவாகலாம். எனவே, நாட்டுப் பாதுகாப்புக்கான கடமை நம்முடையது என்ற உணர்வு ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றக் கூடியதுட என்று அறிந்து அதற்கு ஏற்றபடி நடந்திட வேண்டுகிறேன். இப்போதே வடிவமெடுத்துள்ள ஒற்றுமையும், அமைந்துள்ள மக்கள் முன்னணியும் பாராட்டுதலுக்குரிய வகையிலுள்ளன, மாணவர் அணி வகுப்பு சென்னையில் நடைபெற்றதும், முதலமைச்சர் பக்தவத்சலம் தலைமையில் பேரணி நடந்ததும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

தம்பி! நாட்டுக்கு ஆபத்து என்ற நிலை பிறந்திடும் போது ஜனநாயகம் எத்தகைய ஒற்றுமை உணர்ச்சியைப் பெற்றுத் தருகிறது பார்த்தனையா! பக்தவத்சலம் தலைமையில் மாணவர் பேரணி! லால்பகதூர் தலைமையில் சர்வகட்சிக் கூட்டணி! இவைகளைத் தொடர்ந்து,

சமூகத்தில் ஒன்றுபட்ட உணர்ச்சி.

சர்வகட்சிக் கூட்டணி.

பாதுகாப்புப் படை அமைப்பு.

வதந்திகள், பீதிகள் தடுப்பு.

வீரர்கட்கு வாழ்த்து, அவர் குடும்பத்தினர் நலன் பேணுதல்.

பாதுகாப்பு நிதி திரட்டித் தருதல்.

இரத்ததானம் தருவதை மேற்கொள்ளுதல்.

ஆடம்பரம், விழா, களியாட்டம் தவிர்த்தல்.

விளக்கணைப்பு விதிகளைக் கடைப்பிடித்தல்.

தேவைகளைக் குறைத்துத் கொள்ளுதல்.

ஒவ்வொருவரும் ஏதாவதொரு பண்டம் உற்பத்தி செய்தளிக்க முன்வருதல்.

கட்சி மாச்சரியம் களைதல்.

விவாதத்துக்குரிய பிரச்சினைகளில் ஈடுபடாதிருத்தல்.

அமைதி! ஊக்கம்! தொண்டு! நம்பிக்கை!

என்பவைகளை வளரச் செய்தல்.

இம்முறையில் கட்டுப்பாட்டுடன் பணியாற்றி வந்திடுவோ மானால், தம்பி! வெற்றி நமதே என்பதில் ஐயமில்லை. காலம் உன்னை அழைக்கிறது, கடமையாற்றிட!

அண்ணன்,

19-9-65