அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குடும்ப பாசம்
2

நினைவிருக்கிறதா, தம்பி, எனக்குச் செந்தேனாக இனிக்கிறது நினைவு - திருச்சிதான், திராவிட முன்னேற்றக் கழகமாக நாம் பணியாற்றத் தொடங்கியதும், நாம் நடாத்திய முதல் மாநாடு - மாவட்ட மாநாடு!!

திருச்சியில் அந்த மாநாடு நடத்த நாம் திட்டமிட்ட உடனே, உனக்குத் தெரியுமோ என்னவோ, திகிலூட்டினார்கள் - நம்மை நிந்திப்பதிலே நித்யானந்தம் காண்பவர்கள்.

திருச்சியிலா?
மாநாடா?
மக்கள் வருவார்களா?
எங்கே இருந்து கொண்டு வரப்போகிறார்கள்?
இடம் கொடுப்பவர் யார்?
இரண்டு நாள் தங்கிட வசதி உண்டா?
ஒரு வேளைச் சோற்றுக்கு வழியுண்டா?

திருச்சியிலா, மாநாடு! பேஷ்! பேஷ்! இங்கு தோல்வி தாக்கும் - மூலைக்கு ஒருவராக முக்காடிட்டுக் கொண்டு ஓடிவிடப் போகிறார்கள்!! - என்றெல்லாம் திகிலூட்டினர், எரிச்சலை மூட்டினர்.

என்னைத் தான் தம்பி, உனக்கு நன்றாகத் தெரியுமே! சிறு சங்கடமென்றாலும் பெருத்த குழப்பம் புகுந்துவிடுமே உள்ளத்தில். அதனால் நான் பயந்து போனேன். மாவட்ட மாநாட்டுக்கான கொட்டகை அமைக்கப்பட்டு விட்டது - மறுநாள் மாநாடு - முன்னாள் மாலை சென்று பார்க்கிறேன் - பசியுடன் உள்ள பெரும் புலி தன் அகன்ற வாயைத் திறந்துகொண்டிருப்பது போல, கொட்டகை காட்சியளிக்கிறது. இதோ என் மனக்கண்ணால் காணமுடிகிறதே அந்தக் கொட்டகையை.

"சாம்பு!''

"என்னண்ணா! . . . ''

"பந்தல் . . . . கொட்டகை . . . . ?''

"அவசரத்தில் போட்டது. இவ்வளவுதான் முடிந்தது. . . .''

"இவ்வளவுதான் முடிந்ததா. . . . என்ன சாம்பு, விளையாடுகிறாய்? இவ்வளவு பெரிய கொட்டகையை ஏன் போட்டாய்? யார் போடச் சொன்னது? இவ்வளவு பெரிய கொட்டகைக்கு, ஆட்கள் எங்கே இருந்து கொண்டு வந்து குவிப்பது? நாளைக்கு இதிலே கால் பகுதிக்குக்கூட தோழர்கள் வருவார்களோ இல்லையோ! இவ்வளவும் நாளைக்குக் "காலி'யாக இருக்குமே! எப்படி அந்த அவமானத்தைத் தாங்குவது? என்ன வம்பு செய்துவிட்டாய், சாம்பு!''

"அண்ணா! கொட்டகை பெரிது என்கிறாயா?''

"இதிலே சந்தேகம் வேறா உனக்கு. போ, சாம்பு. போய், பந்தல்காரர்களை அழைத்து வா. பந்தலில் பாதி அளவுக்கு மேல், தனித்தனி விடுதிகளாக மாற்றி அமைத்தாக வேண்டும். காலி இடமாகக் கொட்டகை தெரியக் கூடாது. இதிலேயே ஒரு இடத்திலே தொண்டர்கள் முகாம், மற்றோர் பக்கம் பிரதிநிதிகள் ஜாகை, இன்னோர் பக்கம் ஏதாவது ஓர் விடுதி, எதையாவது செய்து கொட்டகையின் அளவைக் குறைத்திட வேண்டும்.''

"வேண்டாம் அண்ணா!''

"சாம்பு! என்னிடம் விளையாடாதே! இதுதான் முதல் மாநாடு. நாம் கழகம் துவக்கி, காலை ஊன்றி வைக்க ஆரம்பித்திருக்கிறோம். இந்த நேரத்திலே, மாகாண மாநாட்டுப் பந்தல் போலக் கொட்டகை போட்டுவிட்டு, ஆள் கிடைக்காமல், நாளைக்கு அசிங்கப்படுவதா? வீண் விஷப் பரிட்சை வேண்டாம். காலையில் நான் பார்க்க வருவேன் - அதற்குள் கொட்டகையின் அளவு சிறிதாக்கப்பட வேண்டும். . .''

"சரி, அண்ணா. . . . ''

"தர்மு, இந்த வேலையை உடனே கவனி. பராங்குசம், என்னவோ ஏதோ என்று இருந்துவிடாதே! மணி, கவனமிருக்கட்டும்! சாம்பு! உடனே வேலை நடந்தாக வேண்டும்.''

கொட்டகை பெரிது, கூடிட ஆட்கள் வரமாட்டார்கள் என்ற சந்தேகம் குடைந்தது - சாம்புவிடம் சண்டைக்கு நின்றேன்.

அதே திருச்சியில், அதே சாம்புவே, இரண்டா யிரத்துக்கு ஆயிரம் என்ற அளவிலே கொட்டகை அமைத்துக் கொண்டிருக்கிறார்! தம்பி! இந்த இன்பம் எத்தகையது என்பதை எண்ணும்போது, ஆஹா! எப்படியிருக்கிறது என்கிறாய்!!

சாம்பு! சாம்பு!! என்று அழைத்துக் கொண்டு, அன்புக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சங்கரன் இல்லை, இந்த இன்பத்தை உடனிருந்து சுவைக்க - இயற்கையெய்தி விட்டார் - ஓடி ஆடி வேலை செய்து, சிறப்பினைக் கூட்டித் தந்திட நண்பர் இருதயராஜ் இல்லை, அணைந்து விட்டது அந்தத் திருவிளக்கு - இந்த வாட்டம் என்னை வதைக்கத்தான் செய்கிறது. தயக்கத்துடன் நாம் திருச்சியில் முதல் மாவட்ட மாநாடு துவக்கினோம் - தூய உள்ளத்துடன் பணியாற்றி வந்த வண்ணமிருக்கிறோம் - கொள்கையிலிருந்து வழுவினோமில்லை, கொடுமைகளைக் கண்டு கலங்கினோமில்லை, பாதை வகுத்துக் கொள்வதிலே பொறுப்புக் காட்டினோம், வகுத்துக் கொண்ட பாதையிலே நடந்து செல்லும் போது குறுக்கிட்ட இடையூறு கண்டு அஞ்சி அயர்ந்தோமில்லை - பயணம் துவக்குமுன்பு பல்வேறு மனக்குழப்பமிருந்தது - எண்ணித் துணிந்தோம் - இதோ இன்று இரண்டாவது மாநில மாநாடு, திருச்சியில் நடை பெறுகிறது - நகருக்குள் கிடைக்கும் திடல்கள் போதுமானவை அல்ல என்று, ஊர்ப்புறம் தேடி, விரிந்து பரந்து கிடக்கும் திடலை நாடினோம் - அந்த அளவுக்கு வளர்ச்சி கண்டோம். காரணம், தம்பி, நாம் - நாம் - அதனால்!!

நாத்திகர்கள் !
துவேஷிகள் !
குழப்பக்காரர்கள் !
கூவித் திரிவோர் !
வகுப்புவாதிகள் !

என்னென்னவோ ஏசுகிறார்கள் - கேட்கும் மக்களின் தொகை குறையக் குறைய, வகை மட்டமாக மட்டமாக, தூற்றலின் வேகம் அதிகமாகக்கூடத் தெரிகிறது.

கட்டைவிரலை வெட்டிவிடுவேன்.
கையில் கிடைப்பது கொண்டு அடிப்பேன்.
ஈ, எறும்புபோல நசுக்கிவிடுவேன்.
இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிடுவேன்.
கணக்கைத் தீர்த்துக் கட்டிவிடுவேன் !!

காமராஜரும் சரி, ஆச்சாரியாரும் சரி, இதுபோல உருட்டி மிரட்டிப் பேசத் தவறியதில்லை.

உருட்டல் மிரட்டலோடு நின்று விடவில்லை - "தேனீ' நடத்திக் காட்டிடவும் அவர்களுக்கு வசதி இருந்தது. நாவலர் மீது பெரும் பாறையைப் போட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த, உத்தமர் காந்தியாரின் பெயர் கூறி அரசியலில் உயர் இடம் பெற்றவர்கள் - தியாகராசர்கள் முனைந்தனர் !

144-ம் தடியடியும், சிறையும், சித்திரவதையும், துப்பாக்கியும், நம்மைத் தாக்கின - தாக்குதலின் வேகமான கட்டத்துக்குத் துரைத்தனம் தன்னைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று கூடச் சொல்லலாம்! கழகத்தின் முன்னணியில் நின்று பணியாற்றுவோர் அனைவருமே சிறை அனுபவம் பெற்று விட்டார்கள்!

சாமான்யர்களாகிய நாம், ஒரு விடுதலை இயக்கத்தை நடத்திச் செல்லும்போது, அலட்சியப் பார்வையால், ஏளனப் புன்னகையால், இரண்டோர் இழிமொழியால் நம்மை இருக்குமிடம் தெரியாமல் செய்திட முடியும் என்றுதான், கோட்டையில் கொடி நாட்டியவர்கள் எண்ணிக்கொள்வார்கள்.

நாம் வளர்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வதே தங்கள் பெருமைக்குக் களங்கம் என்ற அளவுக்கு ஆணவம் பிடித்தவர்கள், நமது மாற்றார்கள் - இதனையும் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது.

நாம் வளர்ந்துவிட்டோம், இனி மறைத்துப் பயனில்லை என்ற கட்டம் பிறந்ததும், முழு மூச்சுடன் நம்மை எதிர்ப்பர் -கடுமையாக எதிர்ப்பர் - என்பதும் எதிர்பார்த்ததுதான். இவை கட்கெல்லாம், நான் அஞ்சியதில்லை, "நாம்' ஓர் இலட்சியத் துக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆதலால்.

எனக்கு மட்டும் ஒரு அச்சம் இருந்தது - அது திராவிட கழகத்தைப் பற்றி.

ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருப்பினும், பகைத்துக் கொள்வதற்கான காரணம் பல கிளம்பிவிடினும், திராவிடர் கழகம் என்பது, நமது "பாசத்தைப்' பெற்ற இடமல்லவா!! சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சியே இனி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட வேண்டியதுதான் என்று "அண்ணாத்துரை தீர்மானம்' என்ற பெயரிட்டு பெரியார் திட்டம் தந்தாரல்லவா, அதற்கும் முன்பே, காஞ்சிபுரத்தில் திராவிடர் கழகம் என்பதாக அமைப்பு அரும்பிற்று. சேலத்துக்குப் பிறகு, சீமான்களின் சீற்றத்தைத் தாங்கிக் கொள்ளவும், பதவிப் பிரியர்களின் பகையை எதிர்த்து நிற்கவும், எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது, சேலத்தில் சிந்தை குழம்பிப் போன சீமான்கள், சென்னையில் முகாமடித்துக்கொண்டு, எவ்வளவு "சிண்டு' முடிந்து பார்த்தார்கள். தம்பி! அந்தக் காதை மிக மிகப் பெரியது. அப்போதெல்லாம் அன்புப் பாலூட்டி வளர்த்தோமே, அதற்கான அமைப்பு முறைபற்றி ஆயிரம் கனவு கண்டிருப்போம். அதற்கென ஓர் கொடி தேடிடப் பல முயற்சி - இவ்வளவு தொடர்பு பாசத்தை மூட்டாமலிருக்க முடியுமா! ஆகையினால், நாம் பெரியாரின் திருமணத்தால் திடுக்கிட்டுப்போன நிலையில் வெளியேறி, முன்னேற்றக் கழகமாகப் பணியாற்றத் தொடங்கியபோது, எனக்குப் பயமாகத்தான் இருந்தது - என்ன பயம் தெரியுமா தம்பி, எதிர்ப்பார்கள் என்ற பயமல்ல - பிரிந்து போனார்கள் பைத்தியக்காரர்கள், நல்ல பிள்ளைகள்தான், ஆனால் என்னவோ ஒரு தவறான காரணத்துக்காகக் கோபித்துக் கொண்டார்கள், அவர்களிடம் எனக்குக் கோபம் கிடையாது, சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பதுதானே கடன், அதுபோல, சிந்திக்கத் தெரியாத இந்தச் சிறுபிள்ளைகள் என்னவோ தனிக்குடித்தனம் வைத்துக் கொண்டார்கள், போகட்டும் பாபம், எங்கே இருந்தாலும் புத்தியோடு பிழைத்தால் போதும், எங்கே இருந்தாலும் என் சீடப் பிள்ளைகள்தானே, அவர்களுக்கு என்ன பெருமை வந்தாலும் அது அவ்வளவும் எனக்குத்தானே பெருமை, நன்றாகப் பேசுவார்கள், என்னிடமல்லவா பயிற்சி பெற்றார்கள், நன்றாக எழுதுவார்கள், ஈரோட்டுப் பள்ளியிலல்லவா படித்தார்கள், கொள்கையில் பற்று இருக்கும், என்னிடம் பெற்ற பாடம் வீண் போகுமா, நல்ல பிள்ளைகள் நமது சீடர் பிள்ளைகள் - என்று பெரியார் அன்புடன் பேசினால் - பிரிந்து வந்துவிட்ட பிறகும் நம்மீது பிரியம் காட்டினால், இன்மொழி பேசினால், என்ன செய்வது!! பெரியார் அந்தப் போக்கிலே நடந்துகொண்டால், நாம் யார்தான் அப்போது என்ன செய்திருக்க முடியும்?

என்ன இருந்தாலும் அவருக்கு நம்மிடம் அன்பு குறையவில்லை.

என்ன காரணத்தாலோ ஒரு திருமணம் செய்து கொண்டாரே தவிர, நம்மை இன்னமும் பிள்ளைகளாகவே பாவிக்கிறார்.

நாம் பிரிந்து வந்துவிட்டோம் என்ற போதிலும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதிலே அவருக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா! பெரியார் பெரியார்தான் !!

என்னவோ "விஷக்கடி வேளை' என்பார்களே, அது போல, திருமண மூலம் ஒரு பேதம் - பிளவு ஏற்பட்டது - அவரோ நம்மைப் பகைவர் என்று கொள்ளவில்லை - பரிவு காட்டுகிறார் - பாசம் வைத்திருக்கிறார்.

பிரிந்து, தனியாகிவிட்ட போதிலும், எதிரிக்கு நம்மைக் காட்டிக் கொடுக்கவில்லை. கொள்கையை நாம், நமது முகாமிலிருந்து பரப்புகிறோம் என்ற வகையில் மகிழ்கிறார் - ஆதரிக்கிறார். கோபம் கொண்டு நாம்தான் அவரை விட்டுப் பிரிந்து வந்து விட்டோமே தவிர, அவருடைய பொன்னான குணத்தைப் பார். துளியாவது நம்மிடம் துவேஷம், பகை, இருக்கிறதா? இப்போதும், நல்ல பிள்ளைகள், நம்ம பிள்ளைகள் என்று பாசத்தோடு பேசுகிறார். இப்படிப்பட்ட பெரியாரிடமிருந்து நாம் பிரிந்துவிட்டோமே! என்ன பேதமை! என்ன பேதமை!!

தம்பி! இவ்விதமெல்லாம் தானே நாம் எண்ணி இருந்திருப்போம் - கோபம் தணிந்து விட்டிருக்கும் - வெட்கம் கூட நம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்ககூடும் - மெள்ள மெள்ள, நம்மிலே சிலரே, போகட்டும், நண்பரே! ஏதோ நடந்தது நடந்து விட்டது - இனியும் நாம் பிரிந்திருக்க வேண்டாம். அவர் இவ்வளவு அன்பும் பாசமும் காட்டும்போது, நாம் பேதமும் விரோதமும் காட்டுவது சரியல்ல. திருமணம்பற்றித் திடுக்கிட்டுப் போனோம் - கோபத்தால் வெளியே வந்தோ - வெளியே வந்ததால், வேறு கட்சியாகப் பணியாற்றினோம், அவர் இவ்வளவுக்குப் பிறகும் நம்மிடம் பிரிவு காட்டும்போது, நாம் பழையபடி ஒன்றாகிவிட வேண்டியதுதான் - என்று கூறிடத் தானே செய்திருப்போம் - பிறகு முன்னேற்றக் கழகம் ஏது! ஒன்றாகிவிட்டிருக்க வேண்டியதுதான்! இடையிலே, ஓடியதும், ஆடியதும், பரணி பாடியதும், படை கூடியதும் வீண்! வீண்!!

இவ்விதமான ஓர் நிலைமை ஏற்பட்டுவிடுமா, என்ற அச்சம் மட்டும் எனக்குத் துவக்கத்தில் இருந்தது.

எதையும் தாங்கிக் கொள்ள முடியும், ஆண்டு பலவாக நம்மை நடத்திச் சென்றவர், நாம் அறிந்த ஒரே தலைவர், யாருடைய வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளை எல்லாம் தத்துவம் என்று கொண்டாடும் அளவுக்கு நாம் "பக்தி' செலுத்தி வந்தோமோ, அப்படிப்பட்ட பெரியார், அன்புக் கணைகளை ஏவியிருந்தால், அதனை மட்டும் நம்மால் எதிர்த்திருக்கவே முடியாது.

பாசத்துடன் கலந்த ஒரு பார்வை, பரிவான பேச்சு, பழைய நேசம் பாழ்படாது என்பதைக் காட்டும் சிறு நடவடிக்கை எழும்பியிருந்தால் போதும், முன்னேற்றக் கழகம் இல்லை!

பெரியாரின் போர்முறை இவ்விதம் அமைந்துவிடுமானால் தனிக் கழகம் தானாகவே வீழ்ந்துபடும் - இதற்கு, ஆயிரம் பாடுகள் படுவானேன் - என்று நான் எண்ணினதுண்டு.

ஆனால், அந்த என் அச்சம், பொருளற்றதாக்கப்பட்டு விட்டது.

அன்பினால் நம்மை வீழ்த்தியிருக்க முடியும் - ஆரம்பக் கட்டத்தில் - பாசத்தால் நம்மை இழுத்துக்கொண்டிருக்க முடியும் - நேசம் காட்டி இருந்தால், நம்மில் பலருக்கு நெறித்த புருவம் இருந்திராது. ஆனால், அந்த முறைக்கு இடமில்லாதபடி "சர்வ ஜாக்ரதை'யுடன், மிகத் திறமையாகக் கவனித்துக் கொண்டார், தூண்டிவிட்டு, துண்டு தேடிக்கொண்டு ஒடிவிட்ட உத்தமர்.

என்றென்றும் ஒன்று கூடவே முடியாத நிலையில் "இரு பிரிவுகளையும்' வைத்துவிட்டார், இடம் தேடி ஏங்கிக் கிடந்தவர். அன்பு எங்கே சுரந்து விடுகிறதோ - என்று பயந்து. நரகல் நடையை அள்ளி அள்ளி வீசியும், அபாண்டம் சுமத்தியும், பழி பாவத்துக்கு அஞ்சாத புகார்களை அவிழ்த்து விட்டும் பெரியாரின் பெருந்தொண்டுக்குரிய பலனை, "குத்தகை'க்கு எடுத்துக்கொண்டார் அந்தக் குணாளர்.

துரோகிகள்
காலிகள்
கூலிகள்
போக்கிடமற்றவர்கள்
வயிற்றுச் சோற்றுக்கு வக்கற்றவர்கள்
அப்பாவிகள்
சூதர்கள்
கொலைபாதகர்கள்
பொறுக்கிகள்

தம்பி! எழுதக்கூடக் கூச்சமாக இருக்கிறது, அப்படி யெல்லாமல்லவா ஏசத் தலைப்பட்டார்கள்!

ஒவ்வொரு தூற்றலும், பிரிந்தோர் பிரிந்தோரே என்பதை உறுதிப்படுத்தத்தான் உதவிற்று!! பிரிவினால் இலாபம் தேடியவருக்கு மகிழ்ச்சி பிடரியைப் பிடித்தாட்டிற்று.

"அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்' என்றார் வள்ளுவர். அந்த அன்புக்கு ஒரு துளியும் வேலையில்லாதபடி செய்து விட்டார் நீண்ட நாள் பசியால் வாடிக்கிடந்தவர்.

அந்த "இராஜதந்திரம்' அவருக்குப் பெருத்த இலாபம் என்று எண்ணி மகிழ்கிறார் என்கிறார்கள். மகிழட்டும்!

ஆனால், அந்தப் போக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை நிலைநிறுத்திவிட்டதுடன், அதன் மூலம், நாட்டிலே புதியதோர் "சக்தி' வளர வழி செய்துவிட்டது; திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கோபத்தினின்றும் முளைத்தது என்ற நிலை மாறி, கொள்கையைப் பண்புடன் பரப்பிடவும், ஆற்றலுடன் செயல்படுத்தவும், அஞ்சா நெஞ்சுடன் அறப்போர் நடாத்தவும், இறுதி இலட்சியம் ஈடேறும் வரையில், இன்பத் திராவிடம் காணும் வரையில், இடையறாது பாடுபடவும், இடையில் எவர் புகுந்து இளித்தாலும், கண் சிமிட்டினாலும், இது, அது என்று ஆசை மூட்டினாலும், எமது இலட்சியம் இன்பத் திராவிடம், அதைப் பெறவே எமது கழகம் என்று கூறி, ஏறு நடையுடன் இலட்சியப் பாதையில் நடந்திட ஓர் நேர்மையான படை, நேர்த்தியான குடும்பம் நிலைத்து விட்டது.

நிந்தனை நமது கழகக் கழனிக்கு உரமாயிற்று.

தூற்றல், நமது குடும்பத்துக்குள் தோழமை மலர்ந்திடச் செய்தது.

இழிமொழியும் பழிச்சொல்லும் வீசினர்; நமது இதயத்தில் ஈட்டி கொண்டு தாக்கினர். மனப்புண் போக்கிட மாமருந்து தேடினோம். குடும்ப பாசம், அந்த மருந்தாக அமைந்தது.

அத்தகைய குடும்பம் நடாத்தும் குதூகல விழாவல்லவா தம்பி, 17, 18, 19, 20 !! கண்கொள்ளாக் காட்சியாகத்தானே இருக்கும் வரலாறு, இத்தகைய சம்பவங்களைப் பொன்னெனப் போற்றுகிறது. வா, தம்பி, வா!! நண்பர் குழாத்துடன் வா!!

அன்புள்ள,

15-4-1956