அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மாமியார் வீட்டில்...
2

டாமிட் நான்சென்ஸ் இடியட் கூஸ்

என்றெல்லாம் "வசைமொழி, கேட்டுக்கொண்டும், வேலையை விட்டு விட்டால் வேட்டிதுவைத்துப் பிழைக்கவும் முடியாதே என்றெண்ணி, நம் விதி! துரை, ஏதோ கோபத்தில் இருக்கிறார்! என்று சமாதானம் கூறிக்கொண்டு வேலை பார்த்துவரும் தாசில்தார் போலல்லவா, நிதி அமைச்சர் நடந்துகொண்டார் - சேதுபதியுமல்லவா அவர் வழி சென்றார்!

ஏட்டிலேயும் சரி, நாட்டு நடப்புகள் பற்றிக் கூறிடும் நாளிதழ்களிலும் சரி, ஒரு முதலமைச்சர் இவ்வளவு வெளிப்படையாக, உதவாக்கரைகள் - பதவிக்காக அலைபவர்கள் - என்று பேசிய பிறகும், பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும், மந்திரிகளை, நான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை!

நானறிந்தவரையில் நாக்கில் நரம்பின்றிப் பலர் எந்த ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை இழித்தும் பழித்தும் பேசினரோ, அவர்களில் ஒருவரிடமாவது, "சொரணை கெட்டத் தனமும்'', "பதவிக்காக மானத்தை இழந்திடும் கெடுமதியும்'' இருந்ததில்லை.

யாரோ ஒரே ஒரு உறுப்பினர்தான், "நம்பிக்கையில்லை' என்று முணுமுணுத்தார் - அது கேட்ட நமது மறைந்த மாவீரர் பாண்டியன், அந்நாளே, மாவட்ட ஆட்சி மன்றத் தலைவர் பதவியை உதறித் தள்ளிவிட்டு, தமிழ்ப் பண்புக்கு உள்ள, உரத்தை உலகறியச் செய்தார்!

இதோ இரு அமைச்சர்கள்!! முதலமைச்சர் வீசிய சிறு சொல்லைக் கவனித்தால் பில்லைபோட்ட சேவகன் எங்கிருந்து கிடைப்பான் என்று கேட்கிறார்களே! இந்த இலட்சணத்தில், எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்ய நாக்கு வேறு நீளுகிறது!!

"சரி, சரி, சந்தடி சாக்கிலே கந்தப்பொடி விற்கக் கிளம்பிவிடாதே! நாங்கள் உதவாக்கரைகள். பதவிக்காகப் பல் இளிக்கிறோம் என்று அவர் கூறிவிட்டார் - சரி என்றே வைத்துக்கொள்வோம் - இப்படிப்பட்ட எங்களை, ஏனய்யா, இந்த வீராதி வீரர் விரட்டக்கூடாது? நாங்கள் இன்னமும் மந்திரிசபையில்தானே இருக்கிறோம்! உதவாக்கரைகளை ஏன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? தைரியமிருந்தால், எங்களை போகச் சொல்லட்டும்! பார்ப்போம்! போகச் சொல்லட்டும். அப்போது, நமது சக்தி என்ன, நமக்கு இருக்கும், "ரதகஜ துரகபதாதிகள் "எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவோம்! முதலமைச்சர் பதவி இவருக்கு நிலைக்கிறதா என்பதையும் பார்த்து விடுவோம் என்றுதானே நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று நிதி அமைச்சர் பேசக்கூடும்.

இதிலும், உண்மை இல்லாமற் போகவில்லை!

இந்த அமைச்சர்கள், உதவாக்கரைகள், ஊறு செய்தேனும் உயர்ந்த பதவி தேடுபவர்கள் என்பது முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கும் போது, அதை மக்களுக்கே தெரிவித்தாக வேண்டும் என்று அவருக்குப் பொறுப்புணர்ச்சி பொங்கி வழிந்திருக்கும்போது, அவர் நிச்சயமாகச் செய்திருக்க வேண்டியது, ஊசல் பண்டத்தைக் குப்பையில் போட்டு விட்டேன், உடைந்த பாண்டத்தை வீசி எறிந்து விட்டேன், உதவாக்கரைகளை விரட்டி விட்டேன், என்றல்லவா ஊராருக்கு அறிவித்திருக்க வேண்டும்? செய்யவில்லையே!! ஏன்? சிந்தையில் நடுக்கம் என்கின்றனர் சிலர்.

அது எப்படியோ போகட்டும், மக்கள் என்ன எண்ணிக் கொள்வார்கள்? உதவாக்கரைகள் என்று முதலமைச்சரால் ஏசப்படுபவர்கள் நிதி, மதி ஆகியவற்றின் காவலர்களா!! என்ன அக்ரமமய்யா இது! இவர்கள் இத்தகைய பதவிப் பித்தர்கள், பயனில் மாந்தர் என்று தெரிந்தும், இவர்களை ஏன் ஆளச்சொல்கிறீர்கள்? - என்று கேட்கமாட்டார்களா? கேட்கிறார்கள்!!

ஆனால் ஏன் இந்தக் கூத்து நடைபெறுகிறது - டில்லியில் யாருக்கு மதிப்பு என்பதைக் கண்டறியும் பலப்பரீட்சையில் இருதரப்பினரும், ஈடுபட்டுள்ளனர். இதில் எந்தப் பக்கம் டில்லி சாய்கிறதோ, அந்தப் பக்கம் வலிவு பெறும் - இதுதானே இன்றுள்ள நிலைமை!!

டில்லிக்கு இந்த "வாய்ப்பு' இருப்பதனால்தான், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், டில்லியின் மதிப்பினைப் பெற, பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் - சில சமயங்களில் கதையில் கண்டோமே "மாப்பிள்ளை' - அது போன்ற கண்றாவியும் நேரிட்டு விடுகிறது.

காந்தியார் காலத்தில், ஒரு முறை, ஆச்சாரியார் காமராஜர் தகராறு கிளம்பி, ஊர் சிரிப்பாய்ச் சிரித்தது. தம்பி! கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது என்று அப்போது நான் ஓர் தலையங்கம் தீட்டினேன்.

ஆச்சாரியார், அப்போது காந்தியாரின் மதிப்பினைப் பெற்றிருந்தார் - எனவே, காமராஜர்மீது காந்தியார் கண்டனத்தை வீசினார்!!

சூழ்ச்சிக்காரக் கும்பல் - என்ற பொருள்பட, காமராஜர் மீது காந்தியார் கண்டனம் வீசினார்.

சின்ன தலை படைத்த பெரிய தலைவர்! - என்று காமராஜர் குறித்து, கல்கி எழுதினார் - படமும் தீட்டினார். அது பழங்கதை! ஆனால் முற்றுப் பெறாதது!!

இப்போதும் அதே போன்ற "சூழ்நிலை' உருவாகிக் கொண்டு வருகிறது என்பது சிறு சிறு செய்திகள் மூலம் தெரிகிறது! அப்போதுபோலவே இப்போதும், டில்லியில் மதிப்பு எப்படிப் பெறுவது? என்பதுதான் போர் முறையாகவும், வாழும் வழியாகவும் இருந்து வருகிறது.

இதிலே, யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதல்ல முக்கியம் - நாம், தம்பி, எந்தத் தரப்புக்கும் முட்பொறுக்கி வேலைக்காக முந்திக்கொண்டிருக்கவில்லை - நான் இதிலே தொக்கி நிற்கும் வேறோர் பிரச்சினையைக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வெற்றி மாலையும் வீரகண்டாமணியும் யாருக்குக் கிடைக்கிறது என்பதல்ல பிரச்சினை - டில்லியிடம் மதிப்புப் பெறுவதுதான், இங்கு செல்வாக்கு நிலைத்திருக்கச் செய்வதற்கான வழி என்ற கேடான, கேவலமான, சூழ்நிலை இருக்கிறதே, இதைக் கவனிக்க வேண்டும் - இதுதான் மக்கள் கூர்ந்து பார்த்திடவேண்டிய பிரச்சினை.

எத்துணைதான் "தேசியம்' கொண்டிருப்பினும், நாட்டின் பல்வேறு துறைகளிலும், குறிப்பாக, மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் வாய்ப்புகளாக உள்ள எந்தத் துறையினைக் கவனிக்கும்போதும், வடநாடு தலைமைப்பீடமாகி ஆதிக்கம் செலுத்துவதையும், தென்னாடு அடிமையாகி அடங்கி ஒடுங்குவதையும், காணாமலிருக்க முடியாது! காங்கிரஸ்காரர்கள் கூடத்தான்!! அந்த வெட்கக்கேடு நமக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதிலே அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி, நம் எதிரே, ஏதும் வேதனையற்றோர் போல நடிக்கிறார்கள் - உள்ளூர அவர்கட்கும் வேதனை பீறிட்டு எழத்தான் செய்கிறது.

"அகில இந்தியா' - என்ற அடைமொழியுடன் இயங்கும் எந்த அமைப்புக்கும், தம்பி, தலைமை வடக்கிலேதான்.

இங்கே பேரறிவாளர் உளர் - வீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! ஆனால் அவர்கள் செக்கிழுக்க! தலைமை தாங்கவோ, வடநாடுதான் அருள்கிறது!

அகில இந்திய, காங்கிரசுக்குத் தலைவர் - தேபர் - வட நாட்டார்!

அகில இந்திய முதலமைச்சர் - நேரு பண்டிதர் - வட நாட்டவர்.

அகில இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தலைவர், அஜாய் கோஷ்!

அகில இந்திய பிரஜா சோஷியலிஸ்டுகளை நடத்திச் செல்ல ஜெயப்பிரகாஷ் நாராயண், கிருபளானி, அசோக் மேதா!!

அகில இந்திய சோஷியலிஸ்டுக் கட்சிக்கு, டாக்டர் லோகியா!

அகில இந்திய இந்து மகாசபையை நடத்திச் செல்ல கோல்வால்கர்!

இராமகிருஷ்ண மடாலய இயக்கம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், அகில இந்திய இந்தி பிரச்சார சபா எதிலும், தலைமை அமைந்திருப்பது வடக்கேதான்!

உன்னிடம் உண்மையைச் சொன்னால் என்ன, தம்பி - நான் சின்னாட்களுக்கு முன்பு வினோபாவைக் கண்டேனல்லவா - பெருமதிப்பு கொண்டேன் - எனினும் என் உள்ளத்திலே ஓர் எண்ணம் தோன்றி என்னை உறுத்தத்தான் செய்தது.

ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறார் வினோபா.

மொழியால், மாநிலத்தால் பழக்க வழக்கங்களால், வேறு பட்டவர் எனினும், அவர் ஈடுபட்டுள்ள காரியம் மக்கள் தொண்டு என்று தெரிந்தவுடன், நம் தமிழகத்துச் சிற்றூரில், அவர் வருகையை விழாவாக்கி, அவர் பேச்சை உபதேசமாகக் கொண்டு, அவர் காட்டும் வழி நடக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழகத்துச் சிற்றூர்களிலெல்லாம், சொந்தத்துடன் பந்தத்துடன், அவர் வருகிறார் - வரவேற்கும் பெரிய உள்ளம் நமது மக்களுக்கு இருந்திடக் காண்கிறேன்.

இதைக் கண்டபோது, நான் எண்ணிக்கொண்டேன், கடந்த நூறு ஆண்டுக் காலத்தில் இதுபோல ஒரு தமிழர் - வடநாட்டில், குக்கிராமங்களிலும் வரவேற்கப்பட்டு, "பவனி' நடத்தியதுண்டா? இப்போதாவது முடிகிறதா!

திருக்குறளையும் திருவாய்மொழியையும் தாம் கற்றறிந்ததைத் தமிழரிடம், தமிழகத்தில், வினோபா எடுத்துக் கூறுகிறார் - போற்றுகிறோம் - பூரிக்கிறோம் - புனிதனே! என்று மக்கள் கொண்டாடுகின்றனர்.

இதே திருக்குறளையும் திருவாய்மொழியையும் - மாமேதை என்று புகழ்பெற்றுத் துலங்கும் ஆச்சாரியார், வடநாட்டிலே, (களக்காட்டூர், காட்டூர், தம்மனூர், வயலூர் போன்ற) சிற்றூர்களில் சென்று எடுத்துக் கூற இயலுமா? அங்கு உள்ள வடநாட்டு மக்கள், அவரை வாழ்த்தி வரவேற்க இசைவரா?

அங்கு இருந்துதான் அறிவு ஒளியும், அன்பு நெறியும், அரசியல் முறையும், பொருளாதார வழிவகையும் அளித்திட இங்கு "தலைவர்கள்' - வருகின்றனர் - இங்கிருந்து, அங்கு? ஏக்கமன்றி பிறிதென்ன பதிலுள்ளது!

வினோபாவைக் கண்டபோது, என் மனதில் இந்த எண்ணம் எழத்தான் செய்தது.

எந்தத் துறையிலும், வடக்கு தலைமை தாங்க, நடத்திச் செல்ல, ஆதிக்கம் செய்ய இடமளித்தான பிறகு, டில்லியில் மதிப்புப் பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம், ஏற்பட்டு விடத்தானே செய்யும், எனவேதான் காங்கிரஸ் தலைவர்கள், டில்லியின் தயவைப்பெறத் தவங்கிடக்கிறார்கள்.

பாரேன் ஒரு சம்பவத்தை.

தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழருக்குத்தான் என்று எவ்வளவு அறிவாற்றலுடன், ஆர்வத்துடன், மக்களிடம் பேசினர் - காமராஜரும் அவருடைய உதவாக்கரைகளும்!

மார்தட்டிப் பேசினார்கள், எங்களுக்கு யாரும் எடுத்துக் கூறவேண்டியதில்லை - யாமறிவோம் - எமக்குத் தெரியும் - எம்மால் ஆகும் - என்றெல்லாம் முழக்கமிட்டன்ர்.

தேவிகுளம், பீர்மேடு தமிழருடையதுதான் - இவை கிடைத்தாக வேண்டும் - கிடைத்தே தீரும் - பெற்றே தீருவோம் - பெற்றிட எம்மால் முடியும் - எம்மால்தான் முடியும் - இதைச் சாக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஊளையிட வேண்டிய தில்லை என்றெல்லாம் "கர்ஜனை' புரிந்தனர், காங்கிரஸ் மந்திரிகள்!

சட்டசபைகளிலே தீர்மானம் நிறைவேற்றினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் குழு தீர்மானம் நிறைவேற்றிற்று!

எல்லாவற்றினையும் வழித்தெடுத்துச் சாக்கடையில் போட்டது டில்லி!

என்ன செய்தனர்? காமராஜரும் சரி, உதவாக்கரைகளும் சரி, என்ன செய்தனர்? என்ன செய்ய முடிந்தது?

குளமாவது, மேடாவது - என்று பேசினார் காமராஜர்.

கேட்டுப் பார்த்தோம், கிடைக்கவில்லை - என்றார் நிதி அமைச்சர். மற்ற அமைச்சர்கள், இதைத்தான் சொல்வானேன் வாய்தான் வலிப்பானேன் என்று இருந்துவிட்டனர். ஏன்? டில்லியின் தயவு வேண்டும்!

நல்ல பிள்ளைகள்! நமது சொல் தட்டாதவர்கள், குட்டினாலும், கும்பிடுபோடும் குணாளர்கள், - என்று டில்லி அறிந்திட வேண்டும். அந்த நல்லெண்ணம், ஆயிரம் தேவி குளத்துக்குச் சமானம்! - என்றுதான் எண்ண முடிந்தது.

அதோ, வடக்கே பார் தம்பி. அங்கேயும் காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள் - காங்கிரசை மீறியும் தலைவர்களானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! என்ன சொல்லுகிறார்கள், கேட்கிறதா?

ஒரு கணம், காட்கிலின் முழக்கத்தைக் கேட்டால் கோழையும் வீரனாவான்!!

"கட்சி பெரிதுதான், ஆனால் உரிமை அதனினும் பெரிது' என்கிறார்.

"நேரு என் தலைவர் சரி, ஆனால் மராட்டியம் என் தாயகம்! அதற்கு நான் துரோகம் இழைக்கமாட்டேன்' என்கிறார்.

கிளர்ச்சி ஓயவில்லை - அறப்போர் நடந்தவண்ண மிருக்கிறது - ஆயிரக்கணக்கிலே அணிவகுத்து நிற்கின்றனர்.

தேஷ்முக் - பம்பாய் மராட்டியருக்கு இல்லை என்றால், நான் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது - நான் மராட்டியன்! - என்று முழக்கமிடுகிறார்.

பஞ்சாப், வங்காளம், பீகார் - எங்கும், தம்பி, உரிமை பறிபோகிறது என்று தெரிந்ததும் துடித்தெழுந்து, தடுத்து நிறுத்துவோம் என்று முழக்கமிடத் தலைவர்கள் இருக்கிறார்கள். இங்கோ, தாசர்புத்தி தலைக்கேறிவிட்ட நிலையில், குளமாவது மேடாவது, எனக்குப் பதவிபோதும் என்று கூறிடத்தான் "தலைவர்கள்' இருக்கிறார்கள்.

அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் அங்கே!

கெஞ்சிக் கூத்தாடி பஞ்சைப் புத்தியைக் காட்டுவோர் இங்கே!!

பொதுவாக, தென்னாட்டில் வடநாட்டு மக்களும் வட நாட்டுத் தலைவர்களும் அடைந்துள்ள கௌரவம் வடநாட்டில் தென்னாட்டு மக்களும் தென்னாட்டுத் தலைவர்களும் அடைய வில்லை. நம் நாட்டைப் பற்றியும் நமது பண்பாட்டை பற்றியும் வடநாட்டில் உள்ள பொதுமக்களுக்குப் பொதுவாக ஒன்றுமே தெரியவில்லை என்று சொன்னால் மிகையாகாது. அப்படி நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பவர்களும் நல்ல முறையில் தெரிந்து கொண்டிருக்கவில்லை என்பதைப் பார்க்கும் போது மனத்துக்குச் சலிப்பாகத்தான் இருந்தது.

12-2-56-ல் கல்கியில் காணப்படும் மணிவாசகம் தம்பி. சலிப்பு, வெறுப்பு, கசப்பு, - எல்லாம் ஒரே வழி எழுகிறது - எனினும், ஆட்டிப்படைக்கும் அதிகாரம் டில்லியில் இருக்கிறதே என்பதை எண்ணும்போது, அச்சம் பிறக்கிறது, அதனால் அடிபணிகிறார்கள்.

அவர்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்குவதும் நமது அருந்தொண்டிலொன்றாகத்தான் அமைய வேண்டும்.

டில்லியின் ஆதிக்கத்தை எதிர்த்து, நாம் நடாத்தும் அறிவுப் பிரசாரம், மக்களை மட்டுமல்ல, மருட்சியால் கட்டுண்டு கிடக்கும் இந்தத் தலைவர்களையும், அச்சத்தை விட்டொழிக்கச் செய்யும்.

ஏதுமிலாதார், இவர்கட்கே டில்லி ஆதிபத்தியத்தை எதிர்த்திடும் துணிவு பிறக்கிறதே, நாம் மட்டும், ஏன் கோழைகளாய், கோடிட்ட இடத்தில் கையொப்பமிட்டுக் குற்றேவல் புரிபவராய் இருந்திட வேண்டும் - கொற்றம் நடாத்த நம்மால் ஆகாதா என்று அவர்கள் எண்ணிடும் நிலைமை பிறந்திட வேண்டும். அந்த நன்னாளை எதிர்பார்த்தே, தம்பி, நீயும் நானும், நாளெல்லாம் உழைக்கிறோம். நமது உழைப்பு வீண் போகாது! நிச்சயமாக!!

அன்பன்,

8-7-1956