அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மூவர் முரசு
2

காமராஜர், பெரியார்மீது அன்பும் பொழிவதில்லை, வம்புக்கும் நிற்பதில்லை.

கனம், சுப்பிரமணியனாரோ, தனக்குப் பெரியார்மீது மட்டுமல்ல திராவிட இயக்கத்தின்மீதே உள்ள, "துவேஷத்தை'க் கூட்டம் தவறாமல் கக்குகிறார், கூட இருப்பவர்கள், மெத்த நாற்றமடிக்கிறது என்று கூறித் தடுக்கும் வரையில் கக்கித் தீர்க்கிறார்.

அவர் இருக்கிறாரே, பக்தவத்சலனார் - சொல்லத் தேவை இல்லை! மக்கள் பார்த்து, சட்டசபைக்கும் செல்லவிட மாட்டோம் என்று கூறி, தேர்தலில் தோற்கடித்தார்கள். எம்.எல்.எ. ஆகத்தானே கூடாது என்றீர்கள், இதோபாருங்கள் மந்திரியே ஆகிவிடுகிறேன் என்று ஜனநாயகம் செய்து காட்டிய பெருந்தகையாளர்!

இந்த மூவரும் முரசுகொட்ட, ஊர்பல சென்றனர். உள்ளத்துக்கு உற்சாகம் பொங்குமளவுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏசினர் - நான்தான் இருக்கிறேனே ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பார்களே, அதுபோல; என்னை எடுத்து அலசி, ஆராய்ந்து, உரைத்து, நிறுத்து, தூக்கி எறிந்து விட்டார்கள், கீழே!

வடக்கு தெற்கு என்று பேசுவது அபத்தம் - ஆபத்து - தீது - அப்படி ஒரு பிரச்சினை கிடையாது.

அப்படியே ஒன்று இருந்தாலும் அதைக்கண்டு அச்சம் கொள்வது கோழைத்தனம்.

இந்த தி.மு.க. கோழைகள்; வெள்ளைக்காரனுக்குக் குலாம்கள்!

இவர்களை ஒழித்துவிடுவோம், அழித்துவிடுவோம்.

மூவர் முரசும் இதைத்தான் ஒலித்தன! இதை ஒலிக்கமட்டுமே இவர்கள் பயின்றுள்ளனர்.

ஆனால் மக்கள் வேறுபல இசைகளைக் கேட்டுப் பழக்கப்பட்டுப் போய்விட்டனர்.

"அண்ணாத்துரை கிடக்கிறானய்யா, அமைச்சர் பெருமக்களே! உங்கள் சங்கதி என்ன? நாடு ஆளும் வாய்ப்பு அளித்தோம், நாங்கள் கண்டது என்ன? வரிச்சுமையைத் தாங்கித் தத்தளிக்கிறோம், வாட்டம் ஓட்டிட நீவிர் வகுத்தளித்தது என்ன? தி.மு.க. இதைச் சொல்கிறது கேளாதீர், அதைக் கூறுகிறது நம்பாதீர் என்று எங்களுக்குப் போதனை புகட்டியது கிடக்கட்டும் - நாங்கள்,

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எனும் குறள்வழி நடக்கத் தெரிந்தவர்கள் - எனவே எந்தக் கழகமும் இல்லாதது கூறி எம்மை ஏய்த்திட முடியாது! உண்மையை நாங்கள் தெரிந்துகொண்டோம்.

உமது ஆட்சி எமக்குத் திருப்தி தரவில்லை.
ஊழல், நாற்றமடிக்கிறது.
உழைப்பாளிக்கு உரிமை மறுக்கப்படுகிறது.
விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வக்கும் உமக்கு இல்லை.
அடக்குமுறையை அவிழ்த்துவிடுகிறீர்கள்.
வரிமேல் வரி போட்டு வாட்டி வதைக்கிறீர்கள்.
வடநாட்டிலே அதிகாரத்தைக் குவித்திருக்கிறார்கள்.
எதற்கும் காவடி தூக்கிக்கொண்டு டில்லி போகிறீர்கள்.
வளமும் செல்வமும் வடநாட்டில் பெருகிக் கிடக்கிறது.
தென்னகம், தொழில் வளர்ச்சியற்றுத் தேய்கிறது.

புதிய புதிய தொழில் திட்டம் தீட்டும் உரிமை சென்னையிடம் இல்லை, - டில்லியின் கரத்தில் இருக்கிறது.

அணையும் தேக்கமும் அங்கு, பிரம்மாண்டமான அளவு.

இங்கு பாசனத்துக்காகச் சிறு அணைகள் - அதற்கும் மக்களிடம் அதிகாரப் "பிச்சை' எடுத்தீர்கள்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில், தென்னகத்துக்குச் செய்யப்பட்ட அநீதியை, "தேசீய' ஏடுகளே காட்டின - கட்டுரை, கவிதை, படம், போட்டு; நீங்களேகூடச் சில நேரங்களில் கண்ணைக் கசக்கிக்கொண்டும் கையைப் பிசைந்து கொண்டும், சொல்லியிருக்கிறீர்கள்!

தமிழகத்தின் உரிமையைக்கூடக் காப்பாற்றும் ஆற்றல் உமக்கு இல்லை; தேவிகுளம் பீர்மேடு இழந்தீர்கள்.

உம்முடைய வார்த்தைக்கு டில்லி மதிப்பளிக்கவில்லை; மானம் பெரிது என்று கருதி பதவியைத் துறக்கப் போவதாக "பாவனை'க்குச் சொல்வதற்கும் பயந்தீர்கள்!

ஒரு முதியவர், சாவது தெரிந்தும், ஈவு இரக்கமற்று இருந்தீர்கள்.

தமிழ்நாடு என்று பெயரிடும் அளவுக்கும் உமக்குத் தன்மான உணர்ச்சி இல்லை!

ஆகவே அமைச்சர்களே! அண்ணாத்துரை கிடக்கிறான், அற்பன், அவனுக்கு அரசியல் என்ன தெரியும், சினிமா வசனம் எழுதுபவன்; பிளேட்டோவுக்குப் பெயர் கிடைத்ததே, நீவிர் அவர் காலத்தில் இல்லாததால்; அரிஸ்டாடிலுக்கு அறிவாளி என்ற பெயரே, உம்மை மறந்ததால் தந்தனர் - அது தெரியும் எமக்கு - எனவே, அவனைத் தள்ளிவிட்டு, தயவுசெய்து இதோ நாங்கள் கேட்கிறோமே, எங்கள் உள்ளத்தில் குமுறிக்கொண் டிருக்கும் பிரச்சினைகளை, இவைகளுக்கு, ஒளிவு மறைவு இன்றி, உள்ளத் தூய்மையுடன் பதிலளியுங்களேன் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.

மக்களைக் காணும்போதே இந்தச் சூழ்நிலை புரிந்துவிடுகிறது, மூவருக்கும் சுரீல் என்று கோபம் கிளம்புகிறது, கோபத்தைக் காட்ட வேறு வழி? நம்மீது காய்ந்து விழுகிறார்கள்.

மூவர் முரசு, சென்ற கிழமை மிக மும்மரமாக வேலை செய்தது - இம்முறையில்.

இதிலே, காமராஜர், இப்போது ஒரு புதிய கட்டிடத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறார். நான் இதனை எதிர்பார்த்தேன், ஆனால் இவ்வளவு விரைவில் நடைபெறும் என்று நினைக்கவில்லை.

இதுநாள் வரையில், அவர், தமது கோபப் பார்வையையும், அலட்சியமான கண்டனத்தையும், நம்மீது மட்டும்தான் செலுத்தி வந்தார். இப்போது, காலம் கனிந்துவிட்டது என்று எண்ணுகிறாரோ, என்னவோ, மெதுவாக பெரியார் மீதும், திராவிட கழகத்தின்மீதும் கூடத் தமது தீ நாவைச் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

காமராஜருக்கு, நமது கழகத்தின்மீது கசப்பும் கொதிப்பும் இருக்கக் காரணம் இருக்கிறது - சீச்சி! இந்தப் பழம் புளிக்கும்! என்று நரியே சொல்லிற்றாமே, (கதையில்) இந்த நாடாளும் நாயகர் சொல்லாமலா இருப்பார்! நாம், தனியாக எம்மிடம் ஒரு கட்சி இருக்கும், கொடி இருக்கும், ஆனால் உமக்குத்தான் அவ்வளவும் பயன்படும் - என்று கூறி "குத்தகைக்கு' விடவில்லை, நமது கழகத்தை!!

கண்ணீரும் செந்நீரும் கொட்டி வளர்த்த இந்தக் கழகம், விசுவாமித்திரனிடம் ராஜ்யத்தைத் தானமாக்கிவிட்டு, சுடலைகாக்கச் சென்றானாமே அரிச்சந்திரன், அவ்விதம், காமராஜருக்குக் காணிக்கையாக்கிவிட்டு, அவருடைய திருவைப் பாராட்டும் பஜனை வேலையை மேற்கொள்ளும், துணிவு பெறவில்லை.

முடிகிறதோ இல்லையோ, மூலைக்குச் செல்கிறோமோ, காலத்தின் துணைபெற்று வெல்லுகிறோமோ, அது வேறு பிரச்சினை - அது குறித்துக் கவலையற்று, தேர்தலில் "போட்டி யிடவே முடிவு செய்திருக்கிறோம். எனவே, காமராஜருக்கு சென்றேன், கண்டேன், வென்றேன், என்று கூறுவதற்கான வாய்ப்பும் பாழாகிவிட்டதே என்பதனால், கோபம் கொப்பளிக்கக் காரணம் இருக்கிறது - சுடு மொழி பேசுகிறார். பேசட்டும். பெரியார்மீது, இழிமொழி வீசக் காரணம் இருக்கிறதா! செய்நன்றி மறப்பவர்பற்றி வள்ளுவர் கூறியதைக் காமராஜருக்குக் கவனப்படுத்தும் ராஜவேலர்கள் கூடக் கிடைத்திருக்கிறார்களே! நான் எந்த நன்றியையும் கொல்வேன் என்று துணிந்து கூறுபவர் போலல்லவா, காமராஜர் பெரியார்மீதே கேலி வீசுகிறார்.

திராவிடர் கழகத்தின் வளர்ச்சியே பாழாவதானாலும் கவலையில்லை, நான் காமராஜரை ஆதரித்தே தீருவேன் என்று பெரியார் பேரார்வம் காட்டி வருகிறார். அவருக்குக் காமராஜர் காட்டும் மரியாதை, நன்றி, என்னவிதமாக இருக்கிறது?

ஆச்சாரியார்மீது காமராஜருக்குக் கோபம் வந்தது. ஆச்சாரியார், காங்கிரசில் சர்வாதிகாரப் போக்கு வளர்ந்து விட்டிருக்கிறது, சீரழிவு ஏற்பட்டுவிட்டது என்று பேசுவது மறை முகமாகத் தன்னைக் கண்டிப்பது என்று காமராஜர் கருதுகிறார், அதற்காக ஆச்சாரியாரைக் கண்டிக்கக் கிளம்புகிறார்.

நாம் கண்டிக்கக் நேரிடும்போது, என்ன சொல்கிறோம்,
குல்லூகபட்டர்
சாணக்கியர்
வர்ணாஸ்ரமி
சனாதன வெறியர்

என்று பல கூறுவோம். தம்பி! நினைவில் வைத்துக்கொள்.

ஒரு குழந்தையைக் கொஞ்சுகிறோம் - செல்லப் பெயரிட்டு அழைத்துக் கொஞ்சுகிறோம், என்னென்ன சொல்கிறோம்,

வாடா என் குரங்கே!
கிட்டே வாடா கோட்டானே!
என்று சொல்வோமா!
தங்கக் கட்டியே
வைர மணியே
வண்ண நிலாவே
பேசும் ரோஜாவே

என்று ஏதேதோ பேசுகிறோம். அதுபோலவே, கண்டிக்கும் போது, பயன்படுத்தப்படும் சொற்களையும், நினைவிலே கொண்டு, வா.

தம்பி! இனிக்கேள், இந்த வேதனை தரும் விஷயத்தை. ஆச்சாரியாரைக் கண்டிக்கக் காமராஜர் கிளம்பினார்; என்ன கூறிக் கண்டித்தார், தெரியுமா?

என்ன இந்த ராஜகோபாலாச்சாரியார் இப்படிக் கெட்டுவிட்டாரே! வர, வர, இராமசாமிப் பெரியார் தரத்துக்கு கீழே இறங்கிவிட்டாரே!

என்று கண்டிருக்கிறார். எல்லா இதழ்களிலும், வெளியிட்டனர்; ஒன்றுக்கேனும் காமராஜர் மறுப்பு அளிக்கவில்லை.

பெரியார் பற்றிக் காமராஜரின் எண்ணம் எப்படி இருக்கிறது என்பது தெரிகிறதல்லவா!

எவ்வளவு ஏளனம் தொனிக்கிறது, அந்த ஏசலில் என்பதைப் பார்த்துவிட்டு, பெரியார் எத்துணை மும்முரமாக இந்தக் காமராஜருக்கு ஆதரவு திரட்டுகிறார் என்பதையும் பார்க்கும் போது, எனக்கு வேதனையாக இருக்கிறது, முன்னேற்றக் கழகத்தின்மீது இருக்கும் கோபம் காரணமாகக் கருத்துக் குழம்பியுள்ள தோழர்களுக்குத் தவிர, மற்ற தி.க. வட்டாரம், உள்ளபடி வேதனையும் வெட்கமும் அடையத்தான் செய்கிறது.

பெரியார் என்பதற்குக் காமராஜர் கொள்ளும் பொருள், கெட்டுவிட்ட ஆச்சாரியார்! நியாயந்தானா! சகித்துக்கொள்ள முடிகிறதா! என்று கேட்கத் தோன்றுகிறது. எனக்குத்தான் அந்த வாய்ப்பும் உரிமையும் இல்லையே, நான் என்ன செய்வது! யாருக்கேனும் இருக்கக்கூடும், அவர்களேனும், கேட்கட்டும்.

ஆச்சாரியார் தரம் கெட்டநிலையில் இருக்கிறார் - இதை விளக்கக் காமராஜர் கூறுவது, பெரியார் அளவுக்கு இறங்கிவிட்டாரே, என்பது.

இன்னும் வெளிப்படையாகவே பேசத் துணிந்து காமராஜர், தஞ்சையில் சென்ற கிழமை பேசும்போது சொல்கிறார்.

திராவிடர்கழகம் தேர்தலில் ஈடுபடாமலிருப்பது, என்மீது கொண்ட அன்பு காரணமாக அல்ல! தேர்தலில் நின்றால் தோற்றுவிடுவோம் என்று திராவிட கழகத்துக்கு நிச்சயமாகத் தெரியும். அதனால் பயந்துபோய், புத்திசாலித் தனமாக, தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று திராவிடர் கழகம் சொல்லுகிறது.

இந்தக் கேலி மொழியா, கருப்பஞ்சாறாக இனிக்கிறது, என் அருமை தி.க. தோழர்களுக்கு! நண்பர்களே! நீங்கள் வலிய வலியச் சென்று வழங்கும் ஆதரவு, காட்டும் பரிவு, சொரியும் அன்பு, மொழியும் பாசம், படைத்திடும் நேசம், என்னவிதமான மனப்போக்கைக் காமராஜருக்கு ஊட்டிவிட்டது, பாருங்கள்! என்மீது உங்களுக்கு நிரம்பக் கோபம் இருக்கிறது, நான் அதனை உணருகிறேன், உள்ளம் வருந்தாத நாள் இல்லை - ஆனால் அதன் காரணமாக, காமராஜரிடமிருந்து இத்துணை இழி மொழிகளைக் கேட்டுக்கொள்ள வேண்டுமா!! எண்ணிப் பாருங்கள்.

ஏதோ நான் தமிழருக்குப் பாடுபடுபவன் என்பதால், பெரியார் என்னை ஆதரிக்கிறார் என்று காமராஜர் பேசியிருக்கக்கூடாதா! பெருந்தன்மை தெரிந்திருக்குமே! கேட்க, இனிக்குமே! அவர்களுக்குத் தேர்தலில் தோல்வி ஏற்படும் என்பது தெரியும் - அதனால் என்னை ஆதரிக்கிறார்கள் என்றல்லவா ஏசுகிறார்.

மருதப்பன், மாப்பிள்ளைத் தோழனாக இருப்பது ஏன் தெரியுமா? இந்த மணப் பெண் மருதப்பனைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி விட்டாள் - எனவே, மருதப்பன், எனக்கு, மாப்பிள்ளைத் தோழனானான்.

இப்படிக் கலியாண வீட்டிலே பேசினால், போலீஸ் வந்து, கலகத்தை அடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் - நாட்டிலே காமராஜர் இதனைப் பதட்டத்துடன் பேசி வருகிறார் நண்பர்களே! நீங்களோ, நெறித்த புருவத்தினராகிறீர்கள், என்னைக் காணும்போது!!

யார் அழைத்தார்கள்?

தானாக வந்தார்கள்!

வேறு வழி என்ன இருக்கிறது?

வேறு வேலை என்ன இருந்தது?

சும்மாவா, வந்தார்கள்!

என்று, இந்த ஏச்சு, மளமளவென்று வளரும் - ஒரு நாள் உட்கார்ந்து இதற்காக உளம் வருந்த நேரிடும்.

மூவர் முரசு அறைந்ததில், என்னைப் பொறுத்தமட்டில், இந்தப் புதிய கட்டத்தில் காமராஜர் காலடி எடுத்து வைப்பது தெரிகிறது.

இவ்வளவு அதிகமாக நம்மோடு பயணம் நடத்தியாகி விட்டது. இனி இவர்களை என்ன கண்டித்தாலும் கோபித்துக்கொண்டு எங்கே போகமுடியும்!

என்று, காமராஜர் எண்ணிக்கொள்வதாகத் தெரிகிறது.

தம்பி! உள்ளபடியே, காமராஜரின் இந்த இரு தாக்குதலையும் எடுத்துக்காட்டி சில காங்கிரஸ் நண்பர்களே ஏளனம் செய்தனர்; நான் தலையைத் தொங்கவிட்டுக் கொள்ளாமல் என்ன செய்வது!

எனவேதான், இத்தாலி நாட்டிலே இரு வெறியர்கள் பல சிறார்களைச் சித்திரவதை செய்யக் கிளம்பியபோது, வீரமாகப் போரிட்ட வனிதைபற்றிப் படித்தபோது, எனக்கு, இங்குள்ள அரசியல் சூழ்நிலையும், அதிலே நாம் மேற்கொண்டுள்ள பணியும், நினைவிலே வந்தது. உன்னிடம் சொன்னேன்; வேறு யார் தம்பி, இருக்கிறார்கள் நான் கூறுவதைக் கேட்க!

அன்பன்,

11-11-'56