அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


முடியும், முயன்றால்!
2

தோழமைத் தொடர்புகொண்டு, தொகுதி உடன்பாடு செய்து கொள்வதற்காக, பல கட்சிகள் கலந்து பேசும்போது, ஏமாற்றம், எரிச்சல் எழக்கூடும். இதனை எவரும் எதிர்பார்க்கத்தான் செய்வார்கள், ஆனால், கடுமையான விவாதம் நடத்திப் பார்த்து, இறுதியாக தோழமையான ஒரு முடிவுக்கு வர முடியும் என்று கழகம் நம்புகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் - பெருந் தலைவர்கள் - பேச்சு வார்த்தை வெற்றி பெறாது - மனக் கசப்பிலேதான் அதுகொண்டு செல்லும் என்று கருதுகிறார்கள்.

அதற்காக, தட்டிக் கொடுத்தல், தடவிக் கொடுத்தல், தூதுவிடுதல், தூபமிடுதல் ஆகிய முறைகளை இப்போதே அவர்கள் நடத்திக் கொண்டு வருகின்றனர்.

ஆயிரம் தடவை கூடிப் பேசினாலும் அண்ணாதுரை அசைந்து கொடுக்கமாட்டான் - என்று பிற கட்சிகளிடமும், உங்கள் அண்ணாதுரை அசடன் - பிற கட்சிகளின் பச்சைச் சிரிப்பிலே மயங்கிப்போய், பல இடங்களை விட்டுக் கொடுத்துவிடுவான். . . என்று கழகத் தோழர்களிடமும், காங்கிரசின் தலைவர்கள் - மாவட்ட அளவிலே உள்ளவர்கள் - இப்போதே பேசிக்கொண்டுள்ளனர். அறிந்திருக்கிறேன்.

நமது கழகத்திலே, தம்பி! வெள்ளை உள்ளம் கொண்டவர்கள், கள்ளங் கபடமற்றவர்கள் ஏராளம். அவர்களைத் தூண்டிவிடுவது எளிதான காரியம் என்று அந்தக் கலையிலே வல்லவர்களான காங்கிரசார் எண்ணிக்கொண்டுள்ளனர். நமது கழகத் தோழர் களுக்கு "ரோஷம்' எழச் செய்துவிடுவதன் மூலமே, நமக்கும் சுதந்திரக் கட்சிக்கும் உள்ள தோழமைத் தொடர்பைக் கெடுத்து விட முடியும் என்று கடைசி வரிசைக்காரர் அல்ல, முதல் வரிசைக்காரரான காமராஜரே நம்பித்தானே பேசி வந்திருக்கிறார்; "கழகத் தொண்டர்களே! எப்படி ராஜகோபாலாச்சாரியாருடன் நேசமாக இருக்க முடிகிறது? உங்களை அவர் குரங்கு என்று ஏசுகிறாரே!!'' என்று பேசினார். தாம் பெற்றுள்ள உயர்வான இடத்துக்கும் இவ்வளவு மட்டமான சிண்டு முடியும் பேச்சுக்கும் துளிக்கூடப் பொருத்தம் இல்லையே என்று யோசித்தாரா? இல்லை! ஏன்? இந்தப் பேச்சைக் கேட்டு, முன்னேற்றக் கழகத்திலே ஒரு பத்துப் பேர் "ரோஷம்' கொண்டு, சுதந்திரக் கட்சியுடன் "கூட்டு' கூடவே கூடாது என்று பேசமாட்டார்களா, எதிர்ப்புக் கிளப்பமாட்டார்களா! என்ற ஆசை. அப்படி எவரேனும் ஒருவர் எதிர்ப்புக் கிளப்பினால், ஒரு எட்டு நாளைக்கு அவர் "கொட்டை எழுத்து' விளம்பரம் பெறுவார்!! அதற்கு ஆசைப்பட்டுக்கொண்டு சிலர் கழக அணியிலிருந்து பிளந்துகொண்டு வெளிவருவார்கள் என்றெல்லாம் எண்ணம் அவருக்கு - காமராஜருக்கு!!

எங்களை ஆச்சாரியார் சொன்னதுபோலத்தானே ஐயா! உம்மைப்பற்றி, காங்கிரஸ் வட்டாரத்திலும், குறிப்பாக இதழ்களிலும் கூறுகின்றனர் என்பதை நான் கூறிச் சான்றுக்காக, ஆனந்தவிகடனில், காமராஜரை, அனுமார்போலவே படம் போட்டு வெளியிட்டிருந்ததை எடுத்துக் காட்டினேன். காமராஜர் வாய் மூடிக்கொண்டார். ஆனால் சில திங்களுக்குப் பிறகு மறுபடியும் அதே பேச்சு! அதே மூக்கினைச் சொரிந்துவிடுகிற வேலை!!

இப்போது "சிண்டு முடிந்திடும்' கட்டம் முடிந்துவிட்டது; பங்குச் சண்டை கிளப்பிடும் கட்டம் வந்துவிட்டிருக்கிறது. ஆகவே இப்போது காமராஜரும் அவரால் பயிற்சி அளிக்கப் பட்டவர்களும், கழகத்துடன் தோழமைத் தொடர்புகொள்ள முனையும் கட்சியினரைக் கண்டு, கனிவான ஓர் பார்வையை வரவழைத்துக்கொண்டு,

இவ்வளவு நேசம் காட்டுகிறீர்களே, உங்களுக்கு இல்லையா?
இவ்வளவு பாசம் காட்டுகிறீர்களே பதினைந்தே இடம்தானா உங்களுக்கு?
உங்களுடைய உதவியில்லாமல் கழகம், எண்ணி எட்டு இடத்திலேகூட வெற்றி பெற முடியுமா?
ஏமாந்துவிடாதீர்கள் - உங்கள் இடங்களை விட்டுக் கொடுத்துவிடாதீர்கள்?

என்ற இந்தவிதமான பேச்சினை அவிழ்த்துவிடுகிறார்கள். அதைக் கேட்டு, அந்தக் கட்சிகள், இடம் கேட்பதிலே பிடிவாதம் காட்ட வேண்டும், அதன் காரணமாகத் தொடர்பு முறிய வேண்டும், தோழமை கெட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். இத்தகைய கலகப் பேச்சுக்கு கட்டுப்பாட்டுடன் வளர்ந்து, அரசியல் நோக்குடன் நடத்தப்பட்டு வரும் கட்சிகள் ப-யாகி விடமாட்டா! ஆனால் வெறும் தேர்தல் வேலைக்காக மட்டும் வடிவம் கொள்ளும் கட்சிகளும். வலிவு காட்டும் தலைவர்களும், சுலபத்திலே பலியாகிவிடுவார்கள்.

ஆகவே, ஒவ்வொரு கட்சியும் தத்தமக்கு என்று இடம் கேட்டு, விவாதம் நடத்தும்போது, காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் நோக்குடனேயே இந்தத் தோழமைத் தொடர்பு உருவாக்கப்படுகிறது என்ற பொது உண்மையை மறவாமல் இருந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நமக்கே உரித்தானது என்று நாம் எண்ணிக் கொண்டுள்ள இடம் சில நமக்குக் கிடைக்காது போய்விடினும், அந்த இழப்பின் மூலம், காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் காரியத்துக்கு வலிவு கிடைக்கும் என்றால், தனிப்பட்ட இழப்புகளுக்கும் நாம் நமது மனதைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதிலும் தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் கொள்ள விரும்பும் கட்சிகள் ஒன்று இரண்டு அல்ல, பல.

துவக்க முதல் தோழமைத் தொடர்பு கொண்டிடும் நோக்குடன் கழகத்துடன் நேசமாக உள்ள கட்சிகள், முஸ்லீம் லீகும், சுதந்திரக் கட்சியுமாகும்.

அடுத்த கட்டத்தில், இடதுசாரி கம்யூனிஸ்டு கட்சியும் நம்முடன் தோழமைத் தொடர்புகொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தது.

அச்சம், கூச்சம், தயக்கம், தடுமாற்றம் ஆகியவைகளைக் கடந்து மெள்ள மெள்ள நம்மை நோக்கித் தோழமைத் தொடர்புக்காக வருவதற்கு, வலதுசாரிக் கம்யூனிஸ்டு கட்சிக்கும் நாட்கள் அதிகம் பிடித்தன. வந்துகொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் நினைப்பும் தொகுதிப் பங்கீட்டு உணர்வும் இல்லாத சூழ்நிலையிலேயே எனக்கும் தமிழரசுக் கழகத் தலைவர் ம. பொ. சிவஞானம் அவர்களுக்கும் நட்பு நெருக்கமானது.

தமிழரசுக் கழகத்தின் சார்பில், ம. பொ. சி. அவர்களும், தொகுதி உடன்பாடு நோக்குடன் கழகத்துடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

சோஷியலிஸ்டு கட்சியும் பிரஜா - சோஷியலிஸ்டு கட்சியும், தொகுதிகள் குறித்துக் கழகத்துடன் பேச விருப்பம் தெரிவித்து நாள் குறிப்பிடும்படி எழுதி இருக்கிறார்கள்.

தம்பி! தொகுதி உடன்பாட்டுக்காகவும் தோழமைத் தொடர்புக்காகவும் கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த இதுபோலக் கட்சிகள் பலவும், வேறு தனிப்பட்ட நண்பர்களும் விருப்பம் தெரிவிக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது என்றாலும்,

இத்தனை கட்சிகளுக்கு இடையில், இன்னின்ன கட்சிகளுக்கு என்று எப்படித் தீர்மானிப்பது என்பதை எண்ணும்போது திகைப்பு மேலிடத்தான் செய்கிறது.

காங்கிரசின் பெரிய தலைவர், இந்த நிலைமையில் எப்படியும் சிக்கல் எழத்தான் செய்யும், அதன் காரணமாக முறிவு ஏற்படும், அதன் விளைவாக மாச்சரியம் எழும் என்று எதிர்பார்க்கிறார், விரும்புகிறார்.

மும்முனைப் போட்டியைத் தவிர்க்க விரும்புகிறேன் என்பதனாலேயே, நாங்கள் கூறும் நிபந்தனைக்கு உட்படாவிட்டால், நாங்கள் மும்முனைப் போட்டியை மூட்டிவிடுவோம் என்று எவரும் மிரட்டிப் பணியச் செய்ய முயலக் கூடாது என்பதனைப் பணிவுடன், அதேபோது உறுதியாக நான் முன்பே தெரிவித்திருக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக என்று நான் எந்தத் தொகுதியைக் கேட்பதாயினும், அந்தத் தொகுதியில்,

கழகத்திற்கு ஏற்பட்டுள்ள தொடர்பு, செல்வாக்கின் அளவு, வகை,
சென்ற தேர்தலின்போது ஏற்பட்ட நிலைமை,
இடையிலே ஏற்பட்டுள்ள கழகப் பிரசார வளர்ச்சி,
கழகம் குறிப்பிடும் வேட்பாளரின் தகுதி, திறமை, வசதி, வாய்ப்பு

ஆகியவைப் பற்றிய விளக்கம் அளித்துத்தான் விருப்பத்தைத் தெரிவிப்பதாக முறை வகுத்துக்கொண்டிருக்கிறேன். மற்றவர்களும் அதுபோன்ற ஒப்புக்கொள்ளத்தக்க ஒரு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றேன்.

இந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு பேச்சு நடத்தினால் சிக்கல் குறைந்து, உடன்பாடு ஏற்பட வழி எளிதாகக் கிடைத்திடும்!

சிக்கல் குறையாது, உடன்பாடு ஏற்படாது என்று காங்கிரஸ் பெருந்தலைவர்கள் கருதுகிறார்கள். ஆகவே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

கழகத்துக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இடையிலே எழக்கூடிய கருத்து வேற்றுமை பற்றி மட்டுமல்ல, கழகத்துக்கு உள்ளேயும், ஒரே தொகுதியில், இரண்டு மூன்று வேட்பாளர்கள் கிளம்புவர், பிடிவாதம் வளரும். எந்தவிதமாகத் தீர்வு காண்பது என்பது குறித்து தலைமை திணறும், பிளவு வெடித்திடும், பேதம் உருவாகும். அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், காங்கிரசின் பெரிய தலைவர்கள் எண்ணிக்கொண்டுள்ளனர்.

ஒரே தொகுதிக்காக இரண்டு மூன்று வேட்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது சிக்கலுள்ள பிரச்சினை யாகக்கூடும் என்பதை நான் மறைக்க விரும்பவில்லை.

இந்த சிக்கலிலே, இறுதியான முடிவினை நானே தெரிவிக்கவேண்டுமெனக் கூறிடும்போது, மகிழ்ச்சியாகவும் பெருமையாகவுங்கூட இருக்கிறது. என்றாலும், பணிவன்புடன் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன், நிலைமையையும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பையும் நன்கு எண்ணிப் பார்த்து, என்னுடைய "முடிவு' வரட்டும் என்று என்மீதே முழுப் பளுவையும் போட்டுவிடாமல், வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பினை உணர்ந்து, தாமாகவே ஒரு சமரசம் கண்டு, ஒருமித்த முடிவு காண வேண்டும் என்று பணிவன்புடன் அவர்களை விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். மிக அருமையாக அமைத்துள்ள ஒரு அணியினை, நமக்கென்று ஏற்பட்டு விட்டுள்ள விருப்பத்தை மட்டுமே பெரிதாகக் கருதி, உடைபடும்படி விட்டுவிடக் கூடாது என்பதனை நினைவுபடுத்துகிறேன்.

அவ்விதம் நமது அணி உடைபட வேண்டும் என்பதே காங்கிரசின் நோக்கம் என்பதையும் நாம் உணர வேண்டும்.

ஆகவே நமது நோக்கம், நமது விருப்பம் நிறை வேறுகிறதா இல்லையா என்பதைக் காட்டிலும், நமக்காக உருவாகியுள்ள அணி, எந்தக் காரணத்தாலும் உடை படாமல் இருக்கிறதா என்பதிலேதான் இருந்திட வேண்டும்.

இந்த நேர்த்தியான நிலையை காண்பதற்காக நம்மிலே ஒவ்வொருவரும் தனது நலம், தனது வலிவு, தனது நோக்கம் என்பவைகளைப் பின்னணிக்குத் தள்ளிவைத்து, கழகத்தின் பொதுநலனை முன்னணியில் கொலுவிருக்கச் செய்திட வேண்டும்.

நமது கழகத் தோழர்களிலே மிகப் பெரும்பாலானவர்கள், அதிலும் வேட்பாளர்களாகத் தம்மை அறிவித்திருப்பவர்கள், இளமைப் பருவத்தினர். எளிதிலே கோபதாபத்துக்குத் தம்மை ஒப்படைத்துவிடக்கூடிய நிலையினர். ஆகவே அவர்கள் தமது பருவத்திற்கு ஏற்பட்டுள்ள இயல்பினையும் மீறிய, பொறுமை உணர்ச்சியையும், பொறுப்பு உணர்ச்சியையும் காட்டித் தீர வேண்டும்.

மிகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், ஆங்காங்கே தோன்றிடும் சிக்கல்களை அந்த அந்த இடத்திலேயே நீக்கிக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

எல்லாவற்றையும் மொத்தமாக்கி, உருட்டித் திரட்டி ஓர் பேருருவாக்கி, என் முன் கொண்டுவந்து நிறுத்தி விடாதீர்கள்.

எனக்குள்ள பொறுத்துக்கொள்ளும் உணர்ச்சி வலிவுள்ளது என்றாலும், சிக்கல்களை அறுத்து, எல்லோரும் ஒப்புக்கொள்ளத்தக்க தீர்வு அளிப்பதற்கான ஆற்றல் பெரிய அளவில் என்னிடம் இல்லை.

எனக்கென்று சொந்தத்தில் விருப்பு வெறுப்பு அதிக அளவிலே இல்லை என்றாலும், உடன் இருப்போரின் விருப்பு வெறுப்புகளை ஒரேயடியாகத் தள்ளிவிட்டு "முடிவு' காணும் "கண்டிப்பு' என்னிடம் போதுமான அளவு இருக்கிறதா என்பதிலே எனக்கே நிரம்ப ஐயப்பாடு உண்டு.

ஆகவே, சிக்கல் எழும் ஒவ்வொரு கட்டத்திலும், அந்தந்த வரிசையில் உள்ள பொறுப்புள்ள கழகத் தோழர்கள், அந்தச் சிக்கல்களை நீக்குவதற்கான காரியத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றிட வேண்டும்.

எல்லாம் என்னிடம் விட்டுவிடலாம் - என்ற பேச்சிலே எனக்கு இனிப்பும் கிடைப்பதில்லை, அதனை நான் விரும்புவதுமில்லை. எல்லாவற்றையும் ஏற்ற முறையில் தீர்த்துவைத்திடும் ஆற்றல் என்னிடம் நிரம்ப இருக்கிறது என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

ஆகவே, விரைவிலே, ஒரே தொகுதியில் விருப்பம் தெரிவித்துள்ள வேட்பாளர்கள், பொது நன்மையைக் கருதி, ஒரு சமரசம் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தம்பி! இப்போது நாம் மிகவும் முக்கியமான கட்டத்தில் அடி எடுத்து வைக்கின்றோம்.

நமக்குள்ளாகவே உள்ள போட்டிகளைத் தவிர்த்துக் கொள்வதும்,
நமக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டாகவேண்டிய உடன்பாடு பற்றிய ஏற்பாட்டினைச் செம்மைப்படுத்துவதும்.

இந்த இரு செயல்களிலும், நமது கழகத் தோழர்கள் வேறு எதிலும் மேற்கொள்ளாத அளவு பொறுப்புணர்ச்சியினை மேற்கொண்டாக வேண்டும்.

வெண்ணெய் திரண்டு வரும்போது எத்தனை பக்குவம் தேவையோ, அத்தனை நேர்த்தியான பக்குவம் தேவை.

மற்ற கட்டங்களிலே எப்படி நான் விரும்பிய விதத்திலும், மகிழத்தக்க வகையிலும், தம்பி! நீ உன் திறமையைக் காட்டினாயோ அஃதேபோல இந்தக் கட்டத்திலும், உன் திறமையினைக் காட்டிடுவாய், வெற்றியினைப் பெற்றளித்திடுவாய் என்பதிலே நான் உறுதிமிக்க நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

பண பலம், பிரசார பலம், பதவி பலம் மிக்க எதேச்சாதிகார வெறிபிடித்த கட்சியின் பிடியினின்றும் இந்நாட்டு மக்களை விடுவிக்கும் மகத்தான தொண்டிலே, உன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளாய். அதிலே குறிப்பிடத்தக்க அளவு சிறப்புள்ள வெற்றியும் ஈட்டியுள்ளாய்.

உன் சீரிய தொண்டு காரணமாகவே, நாட்டிலே இன்று காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை நல்ல அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது.

உன் வல்லமையிலே நம்பிக்கை மிகுதியும் இருப்பதாலேயே, பல கட்சிகள் இன்று நமது கழகத்துடன் "தோழமை' கொண்டிட ஆவலைத் தெரிவித்துள்ளன.

உன் ஆற்றலின் துணைகொண்டு ஆணவ அரசை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை மிகுதியினாலேயே, நமது தோழர்கள், "நான் - நீ' என்று ஒரே தொகுதிக்கே பலர் போட்டியிட்டுக் கொண்டு வேட்பாளர்களாக வந்துள்ளனர்.

உன்னால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிலைமை, மகிழ்ச்சி தருவதுபோலவே, இந்த நிலைமையுடன் சேர்ந்து சில சிக்கல்களும் தோன்றியுள்ளன. அவைகளை நீக்கும் பொறுப்பு உன்னுடையதே! அதற்கான ஆற்றலும் உன்னிடமே உள்ளது!

ரோஜா மலர்ந்திருக்கிறது; முள்ளும் உடன் இருக்கிறது! முள்ளை நீக்கி மலரினைப் பறித்தெடுத்திட வேண்டும். தோட்டம் கண்டு, பாத்தி கட்டி, பயிரிட்டு, மொட்டு மலராகும் வரையில் பாதுகாத்திட்ட உன்னால், முள்ளை நீக்கி மலரினைப் பறித்திடவா முடியாது! முடியும், முயன்றால்!!

அண்ணன்,

4-12-66