அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நாடகமாடிடலாம்...(2)
2

போர் : வேண்டாமுங்க.... மகாத்மாவைப் பத்தி இழிவாப் பேசாதிங்க.... பாவமுங்க....

புண் : டே! பாவ புண்யத்தைப் பத்தி நோக்கு என்னடா தெரியும், மண்டு! கூலி வேலை செய்து பிழைக்கிற உனக்கெல்லாம் ஏன் இந்தக் காரியம்னு அவர் சொன்னாரே தவிர, மகாத்மாவையா இழிவாப் பேசறார்?

செட் : (கோபமாக) என்ன ஐயரே? அந்தப் பயகிட்ட என்னமோ விளக்கம், சமாதானம் பேசறீர்! ஏ! ஏலே, டே! இதோ, இப்படிப் பாருடா! மகாத்மாவைக் கூடத்தான் கேவலமாய்ப் பேசறேன், என்ன செய்துவிடப் போறீங்க... தலையைச் சீவி விடுவிங்களா...? வெடிகுண்டு கொண்டுவந்து என் மோட்டார் மேலே போடுவிங்களா! வெட்டிப் பசங்களா! வெள்ளைக்காரனை ஓட்டிடப் போறிங்க இல்லே, வீரப்புலிக! துப்பாக்கியைத் தூக்கினா காதூரம் ஓடிப்போறிங்க, வாய் மட்டும் இருக்கு வந்தே மாதரக் கூச்சல்போட. சுயராஜ்யம் வரப்போகுது இல்லே, உங்களோட கூச்சல் கேட்டு? அறிவு கெட்ட பயலுக! அவன் வந்துதானேடா, இந்த நாட்டுக்கே "யோகம்' பிறந்தது... அவனிடம் போய் வாலாட்டினா, ஒட்ட நறுக்கி...

போர் : வெள்ளைக்காரன் கூட இப்படிப் பேசமாட்டான் போலிருக்குதுங்களே! அவனே கூட, இது உங்களோட தேசம்தான், நான் அந்நியன்தான். போகத்தான் போறேன், ஆனா கொஞ்சம் பொறுத்துப் போறேன்னுதான் சொல்றானாம். நீங்க ஒரே அடியா, எங்களை முட்டாளுக, காலிப் பசங்க, என்றெல்லாம் ஏசிப்பேசறிங்க... ஏனுங்க, வீணா ஊரெல்லாம் ஒரு வழியாப் போனா, நீங்க நேர்மாறாப் போகணும்....

(செட்டுக்காரர் கோபமாக போர்ட்டரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார். இரயில் புறப்படுகிறது. செட்டுக்காரர் ஏறிக்கொண்டு ஒரு நாலணா சில்லறையை வீசுகிறார். அதைப் பொறுக்கி எடுக்கவும் மனமின்றி, கண்கலங்கி நிற்கிறான் போர்ட்டர். பணிப்பெண் சில்லறையைப் பொறுக்கி எடுத்து, போர்ட்டரிடம் கொடுத்துவிட்டு...)

பணி : உனக்கேன் அண்ணேன், அவரோட விரோதம்... அவரோட சுபாவம் அறியாமப்படிக்குப் பேசி, வீணா தொல்லையைத் தேடிகிட்டயே....

புரோ : ஏண்டி குட்டி! இவன் எல்லோரிடமும் பேசறது போலே அவரோடு பேசலாமோ! ஒரு பெரிய மனுஷன், சர்க்கார் கட்சின்னு தெரிஞ்ச பிறகு, அவனண்டை எப்படி நடந்து கொள்ளணுமோ அப்படின்னா நடந்து கொள்ளணும்.

பணி : அண்ணனுக்குத் தெரியுமா உங்களுக்குத் தெரிஞ்ச நெளிவு சுளிவெல்லாம்... அது பாவம், மனசுலே பட்டதை பட்டுப்பட்டுன்னு பேசிடுது....

புரோ : செட்டுக்காரர், ராவ்பகதூர் வரும்னு பிளான்போட்டு வேலை செய்துண்டு இருக்கார்; இப்ப போறதுகூட கவர்னர் டீ பார்ட்டிக்குத்தான்; அவர் எதிரே வெள்ளைக்காரன் ஒழியணும்னு பேசினா கேட்டுண்டு இருப்பாரோ! கலெக்டரும் கவர்னரும், பொதுவா சர்க்காரே, அவருக்கு வேண்டியவா...

போர் : இருக்கட்டுமே.....அதனாலே.... நம்ம நாட்டிலே அந்நியன் ஆளக்கூடாதுன்னு கேட்கக் கூடாதா, கேட்காதவன் மனுஷ ஜென்மந்தானா! என்னமோ, பட்டம் பதவி, ஒரு பத்துப்பேருக்கு வீசிப் போட்டுவிட்டா போதுமா, மக்களெல்லாம் பஞ்சத்திலே அடிபட்டு தேஞ்சி போறாங்க, மாண்டு போறாங்க....

புரோ : அதுக்கு, இவரை என்னடா செய்யச் சொல்றே....?

போர் : இவரை என்ன செய்யச் சொன்னாங்க! என்ன செய்யத் தெரியும் இவருக்கு? என்னாட்டம் இளைச்சவன், ஏழை அகப்பட்டா, அடித்து கொடுமை செய்யத் தெரியும்... ஏனய்யா, செய்யமாட்டாரு... பக்கமேளம் அடிக்கத்தான் நீங்க இருக்கறிங்களே....

பணி : ஏன்யா, ஐயர்சாமி! ஐயாவுக்கு ஏத்தபடி பேசி, சுயராஜ்யமாவது கத்தரிக்காயாவதுன்னு சொல்லிவிட்டு இந்த அண்ணன், கதர் போடுது காலித்தனம் செய்யுதுன்னு சொல்றாரு, நீயும் கூடச் சேர்ந்துகிட்டு ஆமாம்னு சொல்றயே, உன் மகன், காந்தி தொப்பி போட்டுகிட்டு, கொடி தூக்கிகிட்டு, கடைத் தெருவிலே பாடிக்கிட்டுப் போவுது, ஊர்கோலத்திலே... என்ன செய்தே... ஏசினயா...?

புரோ : சரி, வாயை மூடித்தொலை. எவன் காதிலாவது விழப் போறது... நான் என்ன, சுயராஜ்யம் வேண்டாம்; மகாத்மாவை மதிக்கப்படாது; கதர் கட்டப்படாது என்றெல்லாம் துஷ்பிரசாரமா செய்யறேன். இதெல்லாம் விஷம்னு கருதிண்டு, இந்த விஷயத்திலே ஈடுபட்டவாளை விரோதின்னு எண்ணிண்டு இருக்கார் செட்டுக்கார் அவரோட அந்தஸ்த்து, ஐஸ்வரியம், செல்வாக்கு, இதெல்லாம் சாமான்யமோ! அப்படிப்பட்டவரோட விரோதத்தைத் தேடிண்டு கெட்டுப்போகலாமோ.... எப்பவும் சர்க்காரை எதிர்க்கிறவாளைக் கண்டா, பெரிய மனுஷா அப்படித்தான்...

பணி : அது நெசம்தான் - பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அவங்ககிட்டே இளிச்சி இளிச்சிப் பேசறவங்களுக்குத்தான், கேட்டது கிடைக்குது... அண்ணேன், ஐயர் ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரரு! எங்க செட்டுக்காரரை பாகு இருக்காளே, அடே அப்பா, மகா தளுக்குக்காரி, அவளாலேயே கூடச் சரிப்படுத்த முடியறதில்லே.... சண்டை போட்டுக்கறாரு... ஐயர் தெரியுமா, செட்டுக்காரரைச் சொக்குப்பொடி போட்டு வைச்சிருக்காரு.... சரியண்ணேன்! ஏன் இப்படி திகைத்து நிற்கிறே? பெரிய மனுஷனுங்க, அப்படித்தான்.

போர் : ஆமாம் குழந்தை! திருமலைகூடச் சொல்லியிருக்கான், பெரிய மனுஷனுங்க இப்படித்தான், சர்க்கார் தாசனுங்க ளாத்தான் இருப்பாங்க. கொள்கை, குணம், எதுவும் இருக்காது. என்ன செய்தா என்ன இலாபம் கிடைக்கும் என்கிறதிலேதான் குறி இருக்கும்னு... (கவலையுடன் செல்கிறான்)

புரோ : உலகம் போற போக்கு தெரியாத பய....பெரிய மனுஷாளோட பகையைத் தேடிண்டா, நல்லதா?

பணி : யார் சொல்லுவாங்க அப்படி! சாமி, நீ, ஒரு பள்ளிக் கூடமே வைச்சி நடத்தலாம்....

புண் : (கொஞ்சும் பாவனையில்) போக்கிரி! என்ன, கேசெய்யறே...

பணி : ஆளுக்குத் தகுந்தபடி பேசறது, வேளைக்கு ஏத்தபடி நடக்கறது, சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போடறது, அதாலே, என்ன இலாபம்ணு கணக்குப் போடறது, இந்த வித்தையைக் கத்துக்குடுக்க ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம், போ....

புண் : இரு, இரு... உன்னை வந்து....

(கொஞ்சும் பார்வை செலுத்துகிறார்)

பணி : (கேலியாக) ஐய்யே.... வாலிபம் திரும்புது... அழகு சொட்டுது.... அட ஏன்யா, இப்படி ஆடு திருடினவன் போல விழிக்கறே... அதுக்கு வேறே ஆளைப்பாரு....

(போகிறாள்)
திரையில்
1940
1941
1942
1943

என்று ஆண்டுகள் ஓடுவதைக் காட்டிவிட்டு 1953-க்கு வந்து சேருவதாக விளக்கமளித்துப் பின்னர், புதிய காட்சி)

இடம் :

கீரோடு

ரயில்வே ஸ்டேஷன்.

இருப்போர் :

செட்டுக்காரர்
பணியாள்
புரோகிதர்
போர்ட்டர்
பணிப்பெண்,

நிலைமை :
(செட்டுக்காரர், துல்லிய கதருடையை அணிந்து கொண்டிருக்கிறார்.

வைரம், வழக்கம்போல் மின்னுகிறது.

பெட்டி, படுக்கையைப் பணியாளிடமிருந்து வாங்கி வண்டியில் வைக்கிறான் போர்ட்டர் சின்னான்.

சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது.

பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான்.

புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார்.

ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)

புண் : போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிட மாட்டா, இந்தாருங்கோ.... (குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில் வைத்துக்கொண்டு)

செட் : போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும் இல்லையா....

புண் : ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே இல்லைன்னு சொன்னாராம்....

செட் : யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக் கொண்டிருந்தானாமா...?

புண் : கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர், பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி, அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது, அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்...

செட் : பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்...

புரோ : அதனாலேதான், முதல் மந்திரி, அவன் காதோடு காதாக, இரகசியமாச் சொன்னாராம், இப்படிப்பட்டவங்க, மந்திரியாகணும்னு....

செட் : (வெட்கப்படுவது போலாகி) போய்யா... அவர் அப்படியா சொல்லி இருப்பாரு... மந்திரி வேலைக்கு நானுன்னா சொல்லி இருப்பாரு.... நான் இன்னும் சரியா அவருக்குப் பழக்கம்கூட ஆகல்லே...

புண் : அதென்ன அப்படிச் சொல்றீர். பழக்கம்னா என்ன, வருஷக்கணக்கா பழகவேணுமா...?

செட் : அதல்லய்யா... மந்திரி வேலைன்னா, அது ஜெயிலுக்குப் போன பெரிய தலைவர்களுக்கு, தியாகம் செய்தவாளுக்கு ன்னுதானே சொல்லுவாங்க... நான், இப்பத்தானே காங்கிரசு.... நம்மைப் போயி மந்திரியாக்கணும்னா....

புண் : சரியாப் போச்சுப் போங்க! ஜெயிலுக்குப் போனாத்தானா? மத்தவாளெல்லாம், தேசத்துக்குப் பாடுபடலேன்னும் அர்த்தமோ! மந்திரி வேலையை வகிக்கறதுன்னா கீர்த்தி, செல்வம், செல்வாக்கு, அந்தஸ்த்து, கெம்பீரம், ராஜகளை, இலட்சணம், இதெல்லாம் வேணுமா, தடியடிபட்டேன், ஜெயிலுக்குப் போனேன், இது போதாதான்னு கேட்கறதா...?

(போர்ட்டர் சின்னான் கூலிக்காக வந்து நிற்கிறான்.)

இதோ, இந்த சின்னான் கூடத்தான் தடியடிபட்டவன், இவனை ரயில்வே மந்திரியாக்க வேணாமோ, உம்மோட வாதப்படி பார்த்தா.

செட் : போர்ட்டர்! என்ன, ஊர்லே காங்கிரஸ் எப்படி இருக்கு... அடே! என்ன இது கதர்ச்சட்டை காணோம்..

சின்னான் : கதர்ச் சட்டைங்களா.... இல்லைங்க.... அது நம்ம உடம்பிலே பொருந்தலிங்க....

செட் : கட்சி மாறிவிட்டாயா.. காங்கிரஸ் காங்கிரஸ்ன்னு தலைமேலே தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவாயே, முன்னை எல்லாம். இப்ப என்ன இப்படி கெட்டுப் போயிட்டே...

போர் : நான் கெட்டுப்போகலிங்களே, காங்கிரஸ் கட்சிதான் எங்களை விட்டுவிட்டுப் போயிடிச்சி....

செட்டு : உன் வாயாடிக் குணம்மட்டும், மாறமாட்டேங்குது.... இப்ப என்ன நீ, கழகமாயிட்டாயா?....

போர் : கழகம், எங்களவங்களுது ஆயிட்டுதுங்க...

புண் : என்னடா, இப்படி ஏட்டிக்குப் போட்டியாப் பேசிண்டிருக்கே. இப்ப, நம்ம எஜமானரு, காங்கிரசாயிட்டார், தெரியுமோன்னோ..

போர் : தெரியுமுங்க...

புண் : முன்னே அவருக்குக் காங்கிரஸ் பக்தி வேணும்னு சொன்னவனாச்சே நீ, இப்ப நீயே காங்கிரசைவிட்டுப் போயிட்டேன்கிறயே.... என்னடா காரணம்?

போர் : காரணம் என்னங்க? "எஜமானரு' காங்கிரசாயிட்டா ருன்னு நீங்களே சொல்லிவிட்டிங்களே, போதாதுங்களா! காங்கிரசும் "எஜமானருங்க கட்சியாயிட்டுது; நாங்க ஏழை பாழைங்க, ஏனுங்க இனி, இந்தக் காங்கிரசுக்கு....

செட் : (கோபமாக) ஓஹோ! மண்டைக் கர்வம் பிடிச்சாச்சு பயலுக்கு. காங்கிரசை ஒழிச்சிடப் போறாயோ... ஏண்டா! கழகம்! நீ, எதிர்த்தாச்சு, இனிக் காங்கிரஸ் தலை எடுக்காது, ஏண்டாப்பா, அதுதானே உண்னோட எண்ணம்.

புண் : கிடக்கிறான், விட்டுத் தள்ளுங்கோ, கழகம்னு எப்ப ஆச்சோ, அப்ப இவன், மட்டுமரியாதையா நடக்க மாட்டான். ஏதாவது துடுக்குத்தனமாப் பேசுவான்.

செட் : பேசுவான்... பேசுவான்.. இழுத்துக்கொண்டு போய் செம்மையா உதை கொடுக்க சொன்னா, என்ன செய்வானாம்! வயித்துச் சோத்துக்கு வக்கு இல்லை, மூட்டை சுமந்து பிழைக்க வேணும், இதுகள், அரசியலிலே புரட்சி செய்யப் போவுதாம், காங்கிரசைக் கவிழ்த்து விடப்போறானுங்களாம்.... அகில உலகமே நடுநடுங்குது நேரு பேர் கேட்டா...

போர் : (குத்தலாக) அது உண்மைதானுங்க.... அகில உலகம் என்னங்க, எங்களுக்கே கூட பயம்தானுங்க, நேரு பேர் கேட்டாலே... மனுஷன் என்னெல்லாம் சொன்னாரு, ஏழை எளியவங்கசார்பா, இப்ப, மாட்டிகிட்டி முழிக்கிறாரு முதலாளிங்ககிட்ட...

செட் : டே! வாயை மூடமாட்டே... மரியாதையா நடந்துக்கோ, தெரியுதா...

போர் : மந்திரி வேலை இப்பவே வந்த மாதிரியாத்தான் இருக்கு, ஐயா, பேசறது பார்த்தா...

(திருமலை வாழ்க!)

திராவிட நாடு திராவிடருக்கே!

சிறைக்கஞ்சா சிங்கம் திருமலை வாழ்க!

என்ற முழக்கம் கேட்கிறது. கிருச்சி வண்டியை நோக்கிப் பலர், ஆர்வத்தோடு செல்கிறார்கள்.)

போர் : யாருன்னு பார்க்கறிங்களா.... திருமலைதான்... நம்ம திருமலையேதான்.... முன்னாலே காங்கிரஸ் தொண்டனாக இருந்து ஜெயிலுக்குப் போனானே... இதோ, என் நெற்றியைப் பார்த்தா தெரியுமே... அவனேதான், கல்லக்குடி கிளர்ச்சியிலே ஜெயிலுக்குப் போய் திரும்பி வருகிறான்...

செட் : அவனும் இப்ப காங்கிரசிலே இல்லையா...?

போர் : இடம் கிடையாதுங்களே! ஏழை பாழை, தியாகம் செய்தவன், அடிபட்டவன், உதைபட்டவன், ஜெயிலுக்குப் போனவன், சீரழிந்தவன், இவங்களக்கெல்லாம், இப்ப, ஏதுங்க காங்கிரசிலே இடம்!! அதான் நீங்களெல்லாம், கொலு இருக்கறிங்களே....

புண் : கோபமூட்டி, வம்புக்கு இழுக்கிறதுன்னே, தீர்மானிச்சுண்டு பேசறியா....

செட் : பேசட்டும், சாமி, பேசட்டும். வேறென்ன தெரியும் இதுகளுக்கு கத்துகத்துன்ன கத்தத் தெரியும். பாருங்களேன் அதுங்க போடற கூச்சலை ஏண்டாப்பா, கல்லக்குடி கிடைச்சுடுச்சா, உங்க திருமலை ஜெயிலுக்குப் போய் வந்ததும்...

போர் : கல்லக்குடி இன்னும் கிடைக்கல்லிங்க. ஆனா மானத்தைப்பத்தின அக்கறை எங்களுக்கு இருக்குதுன்னு ஊர் உலகம் தெரிஞ்சுகிட்டுதுங்க. எங்கேயோ இருந்து வந்த வடநாட்டுக் கொள்ளைக்காரர் பேராலே இங்கே ஊர் இருக்கிறது அவமானம் என்கிறதை எல்லோருமே தெரிந்து கொண்டாச்சிங்க.... (போலீஸ்!) போலீஸ்! என்று புண்யகோடீஸ்வரர் கூக்குரலிடுகிறார் போலீஸ் வருகிறது செட்டுக்காரரைப் பார்த்துச் சலாம் வைக்கிறார்கள்.)

செட் : இந்தப் பய, கழகமாம்... காலித்தனம் செய்கிறான். (போலீஸ், போர்ட்டரை இழுத்துச் செல்கிறது. இரயில் புறப்படுகிறது, செட்டுக்காரரும் புரோகிதரும் வண்டியில் ஏறி அமருகிறார்கள். வண்டி சென்ற பிறகு.)

போலீஸ் : சரி, போய்யா... பெரிய மனுஷனுங்ககிட்ட ஏன்யா, வம்பு.... அவனுங்க பேச்சுன்னாதான் இப்ப காங்கிரஸ் வேதமா எடுத்துக்கிட்டு, உத்தரவு போடுதே- காலம் போறபோக்கு தெரியாமே....

போர் : பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அண்ணேன் அப்படித்தான்! முன்னே காங்கிரஸ் இருட்டிலே உலவின போது, கண்டபடி ஏசிகிட்டு, வெள்ளைக்காரன் காலைக் கட்டிப் பிடிச்சுகிட்டு கிடந்தானுங்க, இப்ப, காங்கிரசு துரைத்தனம் பண்ண ஆரம்பிச்சதும், அதைக் கட்டி பிடிச்சுகிட்டு கொட்டமடிக்கிறாங்க....

போலீஸ் : அதுக்கென்ன செய்யறது... பெரிய மனுஷனுங்க அப்படித்தான்... எப்பவும் சர்க்கார் பக்கமாத்தான் இருப்பானுங்க...

போர் : அவங்களை நான் குறை சொல்லலே, அண்ணேன்! இரத்தம் கொட்டி, கண்ணுக்குக் கண்ணா மதிச்சித் திருமலை போன்றவங்க உழைச்சி வளர்த்தது காங்கிரசு. அது இப்ப, ஊரை அடிச்சி உலையிலே போடறவங்க பக்கம் சேர்ந்துகிட்டு, திருமலை போன்றவங்களை, தேளாக் கொட்டுது...

போலீஸ் : சரி! சரி! போ! போ!

பணிப் பெண் : அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே, எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு... உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை வரப்போவுது இவருக்கு...

போர் : அது சரிம்மா, அது.... சரி. பணத்தைக் கொட்டறாரு இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே...

பணி : நீ ஒரு பைத்யம்..... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத் தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே, எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன், பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா, சீமானாவறாங்க...

போர் : ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான் காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனா கிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு...

பணி : நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது. பெரிய மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும் அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத் தெரியுது....

போர் : கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத் தெரியுது...

(போகிறான்)

தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படக் கூடும்.

எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று; கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து பேசினால் வேறு பல நாடகங்கள் உருவாகும். நாடகமாடி நாட்டுக்கு அறிவிக்கவேண்டிய உண்மைகள், அரசியல் நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. அவ்வப்பொழுது தெரிவிக்கிறேன். அத்தகைய நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று என்னைக்கேட்டு, இக்கட்டில் மாட்டிவிடாதே. பொதுச் செயலாளரைக் கேட்டுக்கொள்ளடா அப்பா, பொல்லாதவ னாயிற்றே, நீ.

அன்பன்,