அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


படமாம் படம்!
2

ஆட்சி என் கரம் வரட்டும், அப்போது நான் செய்தளிக்கும் சாதனைகளைக் காணலாம்; உன் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று கழகம் கூறுகிறது. உடனே காமராஜர் கடுங்கோபம் கொண்டு, "மூஞ்சியைப் பார்! முகரக் கட்டையைப் பார்!'' என்று பேசுகிறார். உலகிலே பாதி சுற்றிவிட்டாரல்லவா! அதற்கு அடையாளம்போல விளங்கும் உயர்தரமான பேச்சு!!

இவர்கள் இந்த நினைப்புடன் இருப்பது மட்டுமன்றி, மக்களிடம் சென்று, நாடாள காங்கிரஸ் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் யோக்யதை கிடையாது என்று பன்னிப் பன்னிப் பேசி வருவதைக் கேட்ட பிறகுதான் நான் சென்னை சூளையில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்டேன், வேறு எந்தக் கட்சிக்கும் நாடாளும் யோக்யதை இல்லையென்றால், எதற்காக 8 கோடி ரூபாய் செலவிட்டு, பொதுத் தேர்தல் நடத்துகிறீர்கள் என்று. உடனே "பத்து ஆண்டுகளுக்கு முன்பே "சஷ்டியப்த பூர்த்தி'யைக் கண்ட பேட்டையார் சே! சே! இது கூடவா தெரியவில்லை! மக்களுடைய கருத்தை அறியத்தான் பொதுத் தேர்தல் நடத்துகிறோம் என்று பேசுகிறார். திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்துகிறார்.

நாடாளும் யோக்யதை எந்தக் கட்சிக்கும் இல்லை என்ற பேச்சு, ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல என்பது என் வாதம்.

அதனைப் புரிந்துகொள்ளவிடவில்லை. பதவி! எதை எதையோ பேச வைக்கிறது. எது பேசினாலும் "ஜீரணமாகும்' - பதவி காரணமாக!!

சாதனைகளைக் கணக்கிட, மதிப்பிட, தேவையான சூழ்நிலை இல்லாதபோது, காங்கிரஸ் தன் சாதனைகளை படமாக்கினாலும் சரி, பாட்டு ஆக்கினாலும் சரி, அது பாதிக் கதையே தவிர, "முழுவதும்' ஆகாது.

ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பைப் பெற மக்கள் இம் முறை முனைந்திருக்கிறார்கள் என்பது என் கருத்து.

மற்றோர் கட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத நிலையிலும், இந்தச் சாதனைகளை மதிப்பிட, ஒரு வழி இருக்கிறது. என்ன அவ்வழி எனில், இவர்கள் அரசாண்டு வரும் இதே காலத்தில், பிற நாடுகளிலே அரசாள்பவர்கள் பெற்றுள்ள சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பிடலாம்.

அதற்கு அழைத்தாலோ, அவர்கள் அதெப்படி ஒப்பிட லாம்! வேறு நாடு! வேறு சூழ்நிலை! அந்த மக்களே வேறு! அவர்களுக்கு இருந்த சூழ்நிலையே வேறு! என்று பேசுகிறார்கள் சிலர்; சில வேளைகளில்.

இவர்கள் குறிப்பிடுவனவற்றையெல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து, இந்த நாட்டிலே இவர்கள் மூலமாகக் கிடைத்த சாதனைகளை மதிப்பிட்டவர்கள் என்ன கூறி இருக்கிறார்கள்? அவர்கள், ஆட்சியைப் பிடித்திட அலைபவர்கள் அல்ல!

நாற்காலிப் பைத்தியம் பிடித்தவர்கள் அல்ல!! மேற்கத்திய நாடுகளைக்கூட கணக்கில் எடுக்காமல் புதிதாக விடுதலைபெற்ற கிழக்கத்திய நாடுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு மதிப்புப் போட்டதில், இந்ன்தர்ஊμயர் தவிர பிற எல்லா நாடுகளையும்விட, நம் நாடு எல்லாத் துறைகளிலும் ஒரு சேர, பிற்போக்காக இருக்கிறது என்றும், இதே வேகத்தில் முன்னேற்றம் இருந்திடுமானால், ஜப்பான் அளவுக்கு இந்தியா வளம்பெற 130 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமென்றும், புது டில்லியில் சில திங்களுக்கு முன்பு கூடிய, பல்வேறு நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதற்கென்ன சொல்லுகிறார்கள்? சாதித்தோம், சாதித்தோம் என்று சொன்னால் போதுமா? சாதித்திடும் திறமை இருந்தால் இவர்களைப்போலவே, ஏகாதிபத்தியப் பிடிப்பில் இருந்து விடுதலை பெற்று, சுதந்திர வாழ்வு பெற்று, ஆட்சி நடத்திய பல கிழக்கத்திய நாடுகள் பெற்ற வளர்ச்சியை ஏன் இங்கு பெற முடியவில்லை? திறமைக் குறைவுதானே காரணம்? பொருத்தமான திட்டம் இல்லாததுதானே காரணம்?

அந்த ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொண்ட எந்த நாட்டிலாகிலும் போட்ட திட்டங்கள் ஏழைகளுக்குப் பலன் அளிக்கவில்லை; பணக்காரர்களுக்கே அந்தப் பலன் போய்ச் சேர்ந்தது என்று கூறிக் கைபிசைந்து கொள்கின்றனரா?

இங்குதானே, காமராஜரே கூறுகிறார், "ஆமாம்! திட்டத்தின் பலன் ஏழைக்குக் கிடைக்கவில்லை'' என்று. வேறு யாரோ, திட்டத்தை நடத்தியதுபோலவும் இவர் வேறு மண்டலங்களிலே சஞ்சரித்துவிட்டு இப்போதுதான் இங்கு வந்திருப்பதுபோலவும்!!

சமைக்கவே தெரியாதவள்; அவள் தயாரித்த சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு, கணவன் சலித்துப் போனான்; முகத்தைச் சுளித்துக்கொண்டான். அப்போது அவள் சொன்னாளாம். "நான் சமைப்பது நன்றாகத்தான் இல்லை! எனக்கேகூடத்தான் பிடிக்க வில்லை. அதற்காக நான் உங்களைப்போலவா முகத்தைச் சுளித்துக்கொள்கிறேன்'' என்று.

அது கணவன் - மனைவி கதை! இவருமா அதுபோலப் பேசுவது?

ஆமாம்! திட்டத்தின் பலன், ஏழைக்குக் கிடைக்க வில்லை. எனக்கேகூடத்தான் தெரிகிறது. ஆனால் அதற்காகக் குறை கூறுவதா? நான் குறை கூறுகிறேனா?

என்று. ஆனால் பேசுகிறாரே! அதைச் சாதனை என்றும் காட்டுகிறாரே! ஆய்வாளர்களோ, வேறு எந்த நாட்டிலும் இல்லை, இந்த அளவுக்குத் திறமைக் குறைவு என்கிறார்கள்.

இத்தகைய ஆய்வுரைகளை உரைகல்லாகக் கொள்ளலாம்; இவர்களின் சாதனைகளை மதிப்பிட!

இந்த முறையிலே மதிப்பிடத் தேவைப்படும் அரசியல் தெளிவு அதிக அளவில் இங்கு இல்லை என்ற ஒரே தைரியத்திலா, இத்தனை பதட்டமாகப் பேசிக்கொண்டிருப்பது?

நான், தம்பி! நமது நாட்டு மக்களுக்கு அரசியல் தெளிவு வளரவில்லை என்ற எண்ணம் கொண்டவன் அல்ல. தெளிவு இருக்கிறது, அது வளர்ந்துகொண்டும் வருகிறது என்று நம்புகிறேன்.

அந்த நம்பிக்கையுடனேயே மக்களை அணுகி, கழகக் கருத்தைக் கூறி வருகிறேன்.

சாதனைகளைக் கணக்கில் எடுங்கள் - மற்ற இடங்களின் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் - அப்போதுதான் உண்மையான மதிப்பீடு தெரியும் என்று கூறி வருகிறேன்.

என் சொல் அவர்களின் செவி புகாமலில்லை.

அவர்கள் இதயத்திலே உண்மை பதியாமலில்லை.

பிற நாடுகளுடன் ஒப்பிடவும் மனம் இல்லையென்றால், தம்பி! இவர்களின் சாதனைகளை மதிப்பிட மற்றும் ஓர் வழி இருக்கிறது. இதற்காவது இவர்கள் இணங்குகிறார்களா என்று பார்த்தால் காணோம்.

இவர்கள் காட்டும் சாதனைகளை, இவர்கள் செய்தளிப்பதாகச் சொன்ன சாதனைகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, எந்த அளவு வெற்றி கிட்டிற்று என்பதையாவது கணக்கிடக்கூடாதா? அது ஒரு விதமான மதிப்பீடாக இருக்குமே! செய்வார்களா? செய்தார்களா? இல்லையே! உணவுப் பிரச்சினை பற்றிய, ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்தின் போதும், என்னென்ன சாதிப்பதாகச் சொன்னார்கள்? இன்று அந்த முறையிலே இவர்கள் பெற்றுள்ள சாதனை எப்படிப் பட்டது? எலியைக் காட்டி, எமது வேலை முடிந்தது என்று சொல்லும் அளவுக்கு அல்லவா ஆகிவிட்டது!

இதுவரையில், ரூபாய்க் கணக்கிலே உணவுப் பொருள் விலைக்குக் (கடனுக்கு) கொடுத்துக்கொண்டு வந்த அமெரிக்கா, இனி டாலர்தான் தர வேண்டும் என்று சொல்லி நிர்ப்பந்தப்படுத்தும் நிலை வந்திருக்கிறதே. இது சாதனைக்குச் சான்றா?

கடன் கொடுக்கத் தயக்கமாக இருக்கிறது; ஏனெனில் கடனைத் திருப்பித் தந்திடும் சக்தி இந்தியாவுக்கு இருக்கிறதா என்பதிலே எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று ஜப்பானியப் பொருளாதார நிபுணர்கள் கூறிவிட்டிருக்கிறார்களே, இது சாதனைக்குச் சான்றா?

ரூபாயின் மதிப்பைக் குறைத்தாலொழிய நெருக்கடியைச் சமாளிக்க முடியாது என்று இவர்களே கூறி விட்டார்களே! சாதனைக்குச் சான்றா?

செல்வம் - வருவாய் - ஒரு சிலரிடம் சிக்கிக் கொண்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனரே - இது சாதனைக்குச் சான்றா?

இல்லை! இல்லை! இல்லை! - என்று ஏழையின் இதயம் கூறுகிறது. இதை மாற்ற, அவர்களை மயக்கத்தில் ஆழ்த்த, வளைவுகள், வண்ணங்கள், உலாக்கள், உற்சவங்கள், பேரணிகள், முழக்கங்கள்! இவை போதாதென்று படங்கள்!!

புனுகு பூசுகிறார்கள், புண் மறையும் என்று!!

அதிலே மிகவும் மணமுள்ளது என்ற நினைப்புடன் காமராஜர் புகழ் பாடுகிறார்கள். அது போதும், மக்களை மயக்க என்று!

இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜெர்மன் நாட்டவர் ஒருவர் வந்து பேசிக்கொண்டிருந்தார். இந்தப் பிரச்சினை எழுந்தது. நான் சொன்னேன்.

எங்கள் நாட்டில் இப்படி ஒருவரைப் புகழ் பாடி பூஜிக்கும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஆனால், அதே மக்கள் தங்கள் இன்னல் போகவில்லை என்று தெரியும்போது "பூஜா விக்ரஹங்களை'த் தூக்கிப் போட்டுவிடுவார்கள். இதுவும் நெடுங்காலமாக இங்கு இருந்து வருவதுதான் என்று கூறினேன்.

தம்பி! நேருவைப்போலக் காமராஜரை வடிவம் கொள்ளச் செய்திடுவோம்; அந்த வடிவத்தைக் கண்டு, மக்கள் மயங்கிடும் சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஓட்டுகளைப் பறித்துக் கொள்வோம் என்று கருதுகின்றனர்.

நெடுங்காலமாக யாராவது ஒரு வடநாட்டுக்காரரே பெருந் தலைவராக - உற்சவ மூர்த்தியாக - இருந்து வருகிறார் என்பதிலே தென்னாட்டவருக்கு இயல்பாகவே இருந்துவரும் மனக்குறையை காமராஜரை அகில இந்தியப் பெருந்தலைவர் ஆக்குவதன் மூலம் போக்கிக்கொள்ளலாம் என்ற ஆசைகூட உலவிக்கொண்டிருக்கிறது.

ஆனால், ஒரு தலைவரின் புகழ் பாடி, ஒரு கட்சியோ, அதனால் நடத்தப்படும் ஆட்சியோ, மக்களுக்கு என்றென்றும் மயக்கத்தை ஊட்டிட முடியாது.

சுகர்ணோவின் புகழ் பாடப்பட்டதைவிடவா?

கானா நாட்டு அதிபர் நிக்ரூமாவின் புகழ் பாடப் பட்டதைவிடவா?

இவர்கள், அந்த நாட்டு மக்களால் மட்டும் அல்ல, வெளி நாட்டு மக்களாலும் பாராட்டப்பட்ட நிலையில் இருந்தனர் முன்பு! இப்போது? இவர்கள், அடிக்கடி நிலைமை மாறக்கூடிய ஜனநாயகச் சூழ்நிலையில்கூட அல்ல, "ஒரே கட்சி' என்ற கவசம் அணிந்துகொண்ட நிலையில் இருந்து வந்தனர்! அவர்களே, மக்கள் தெளிவு பெற்று சீறி எழுந்தபோது நிலைகுலைந்து போயினர்.

ஒரு நாட்டு ஆட்சியிலே என்றாலும் சரி. ஒரு கட்சியிலே என்றாலும் சரி, புகழ் மிக்க இடம் கிடைத்துவிட்டால் மட்டும் போதும், அது என்றென்றும் அவர்களை "வல்லவர்களாக' வைத்திருக்கும் என்று கூறிவிடவும் முடியாது.

சந்தனம் பூசிக்கொள்ளப் பயன்படும், தாக விடாய் தீர்க்க அல்ல.

கடுகு தாளிக்கப் பயன்படும், அதனையே தின்று கொண்டிருக்க முடியாது.

பெருங்காயம் குழம்புக்கு மணமளிக்கும்; அதனையே கரைத்துக் குடித்துக்கொண்டிருக்க முடியாது.

ஆனால், காங்கிரசார், காமராஜரின் புகழ் பாடினால் போதும், மக்கள் தமது மனக்குறை எல்லாம் தீர்ந்து போய்விட்டதாகக் கருதிக்கொள்வார்கள் என்று நம்புகிறார்கள்.

அவருக்கே அந்த நம்பிக்கை வந்துவிட்டதாகவும் சொல்லுகிறார்கள்! புகழ் பொழியப் பொழிய, ஒருவிதமான மன மயக்கம், புகழ் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏற்பட்டுவிடும்போது அவர்கள் தம்மைப்பற்றிப் போடும் கணக்கு, நாளாவட்டத்தில் - உடனே அல்ல - பொய்த்துப் போகும். அதிலும், பலனை எதிர்பார்த்து செய்யப்படும் அர்ச்சனைக்கு மயங்கிவிடுவது மிகவும் ஆபத்தை மூட்டிவிடக்கூடும்.

அதனால்தான் ஆன்றோர் ஒருவர், கழுகு பிணத்தைத் தான் கொத்தித் தின்னும். "முகஸ்துதி' செய்பவர்கள் உயிருடன் இருக்கும்போதே கொத்தித் தின்பார்கள் என்று கூறி எச்சரித்தார்.

நெடுங்காலத்திற்குப் பிறகு, தமக்குக் கிடைத்துள்ள "புகழ்' "நிலை' "செல்வாக்கு' காமராஜருக்கு, ஒரு மயக்கத்தைத் தந்திருக்கிறது என்பது, அவருடைய பேச்சிலேயே தெரிகிறது; எதிர்க் கட்சிகளை ஏசுவதிலும், மக்கள் படும் இன்னலைப்பற்றி அக்கறையற்றுப் பேசுவதிலும் புரிகிறது. இந்த நிலையை அவருடைய கட்சியே எத்தனை நாளைக்குத் தாங்கிக் கொள்ளப் போகிறது என்பது, அலட்சியப்படுத்த முடியாத ஒரு கேள்வியாகும். இவர்மீது பொழியப்படுவதைக் காட்டிலும் மிக அதிகமான அளவு புகழ் பொழியப்படும் நிலையில் இருந்த தலைவர்கள், திடீரென்று, நமது கட்சியினராலேயே, "கை கழுவி' விடப்பட்ட காதைகள் நிரம்ப உள்ளன; கருத்துள்ளவர்கள் பாடம் பெற்றிடலாம்.

எல்லோராலும் விரும்பத்தக்க ஒரு திறமையான தலைவர். அவரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற அமெரிக்கர்கள் அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை ஒப்புக்கொள்வார்கள். இதை யாரும் மறுப்பதற்கில்லை.

இவ்விதம் புகழ்ந்தார், அமெரிக்க குடியரசுத் தலைவர் ஐசனோவர், செப்டம்பர் 39, 1959-ல்.

அவருடைய குரல் உண்மையிலேயே சமாதானத்தின் குரலாகும்

என்று நெஞ்சு நெக்குருகப் பேசினார் கானா நாட்டு அதிபர், 1961 ஜூலை 24-ம் நாள்.

அவர் சாதாரண மனிதரல்ல! அவர் மிகவும் ஆற்றலும், அஞ்சா நெஞ்சமும், ராஜதந்திர அனுபவமும், உறுதியும் படைத்தவர்.

இவ்விதம் புகழ் பாடினார், பின்லந்து ஜனாதிபதி 1963, டிசம்பர் நாலாம் நாள்.

அறிவுக் கூர்மையும், விஷய ஞானமும், திட சித்தமுமுள்ள மனிதராகக் கருதுகிறேன். மேலும் அவரது நாட்டைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் படைத்த ஒரே மனிதர் அவர்தான்!

என்று அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் புகழ்ந்து பேசினார் 1964 ஜனவரி 8-ல்.

மேதாவிலாசமும், நிதானமும், விடாமுயற்சியும் மிக்கவர். அதோடு விழிப்புணர்வும் அசைக்க முடியாத உறுதியும் படைத்தவர் என்று புகழ்ந்தார் அமெரிக்க இதழ் அதிபர் ஒருவர் - 1959 பிப்ரவரி 22-ல்.

அவர் மக்கள் மத்தியில் இருந்து வந்தவராதலால், ஜனரஞ்சகமான ஞானத்தை அறிவார்.

என்று ஜப்பானியப் பத்திரிகையாளர் ஒருவர் புகழ்ந்து எழுதினார் - 1963 டிசம்பர் 27-ல்.

அவரது விவேகத்தையும் பெருந்தன்மையையும் புகழ்வதற்கு உண்மையில் எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.

தத்துவப் பேராசிரியர், பெர்ட்ராண்டு ரசல், 1962 அக்டோபர் 28-ல் இதுபோலப் புகழ்ந்துரைத்தார்.

இவ்வளவும், யாரைப் பற்றித் தெரியுமா? தம்பி! இன்று எல்லாம் இழந்து எவருடைய பார்வையிலும் படாமல் இருந்துவரும் குருஷேவ் பற்றி!

அதிபராக இருந்தபோது இத்தனை புகழ் மாலைகள்! இவ்வளவு புகழ் கிடைக்கும்போது நமக்கென்ன குறை, என்றென்றும் நாம்தான் அதிபர், நாம்தான் தலைவர் என்றுதானே குருஷேவ் எண்ணிக்கொண்டிருந்திருப்பார்!

அத்தனை புகழும், அவரைக் காப்பாற்றிற்றா? இல்லையே!

அத்தனை புகழ்மாரி பொழிந்தவர்களும், அவருக்கா இந்தக் கதி என்று ஒரு வார்த்தை கேட்டிட முன்வந்தனரா? இல்லையே!!

ஆகவே புகழ் பொழியப்பட்டால் போதும் நமக்கு, அசைக்க முடியாத நிலை என்றென்றைக்கும் உண்டு என்று யாரும் இருந்துவிட முடியாது, கூடாது.

பெறுபவர் நிலை எப்படியாயினும், ஒரு தலைவர் பெற்றுவிடும் புகழ், மக்களுக்கு, செவிக்கு உணவு, அதுவும் சிறிது காலத்துக்கு!

மக்கள், வாழ்வு கேட்கிறார்கள், உழைத்துவிட்டு!

கேட்பது ரொட்டி! கிடைப்பது கல்! - என்றார்கள் கவிக்குயில் சரோஜினி அம்மையார்.

புசித்திட மக்கள் உணவு கேட்கிறார்கள், புகழ் புசித்து அவர்கள் வாழ்ந்திட இயலாதே!!

அவர்கள் வாழ்வு கேட்கிறார்கள், வண்ணப் படங்கள் அல்ல!

படம் காட்டி, மக்களை மயக்கிட முனைகிறார்கள்! நாமும் படம் எடுக்க முடியும் தம்பி! மக்கள் கண்டு உண்மையை உறுதியாக உணர்ந்திட மட்டுமல்ல, ஊராளும் காங்கிரசாரே, பார்த்துவிட்டு, உண்மைதானே! உண்மைதானே! என்று கூறிக் குமுறிடும் நிலை பெற்றிடக்கூட!

ஐயோ! உன் மகனை. . .
என் மகனை. . .
அநியாயக்காரப் பாவிகள், பாவிகள்!. . .
சுட்டுக் கொன்றுவிட்டார்களடி
அம்மா! அய்யய்யோ!
என் மகனையா. . .
எங்கே? எங்கே?. . .

தம்பி! மொழிக் கிளர்ச்சியின்போது மூண்டுவிட்ட விரும்பத் தகாத நிலைமையின்போது சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனைப் பெற்றெடுத்த தாய், சேதி கேட்டு, துடியாய்த் துடித்து, எங்கே? எங்கே? என்று அலறி ஓடிடும் காட்சி போதாதா? அனுமதி கிடைக்குமா? ஒரு ஐம்பது அடி, இந்தக் காட்சி!!

தமிழ் வாழ்க!
தமிழ் வாழ்க!
இந்தி ஆதிக்கம் ஒழிக!
இந்தியை எதிர்த்துச் செந்தீயில் சாகிறேன்!

இந்த முழக்கம்! ஒரு தீக்குளிப்புக் காட்சி! கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவும் இயலாமல் மக்கள் திகைத்து நிற்பது! எடுத்துக் காட்டவிடுவார்களா?

படம் எடுக்கிறார்களாம் படம்! சாதனைகளை விளக்கிட!

சாதனைகள்தான், ஏழையின் முகத்தில் கவலைக் கோடு களாகப் பதிந்து கிடக்கின்றனவே! படம் வேறு வேண்டுமா?

அண்ணன்,

2-10-66