அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?
2

வாதிக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் பிரதிவாதிக்கும் தோல்வி ஏற்படக்கூடாது என்கிறார்கள்!

முட்டையும் உடையக் கூடாது அடையும் சுட்டாக வேண்டும் என்கிறார்கள்!

புயலும் அடிக்க வேண்டும் மரமும் விழக் கூடாது என்கிறார்கள்!

பணம் படைத்தவர்களும், பணம் திரட்டிக் குவிப்பவர்களும் இருப்பார்கள்; ஏழையும் நிம்மதியான வாழ்வு பெறுவான் என்கிறார்கள்!

பணக்காரர்கள் என்று சமூகத்தில் ஒரு பகுதியினரும், ஏழைகள் என்று மற்றோர் பகுதியினரும் இருக்கும் நிலைமை சோஷியலிசம் ஆகாது.

ஆனால் இதைத்தான் சோஷியலிசம் என்று காங்கிரஸ் கட்சி பேசுகிறது.

திருப்பதி செல்லும் பஜனைக் கோஷ்டியும், கோவிந்தா! கோவிந்தா! என்று முழக்கம் எழுப்புகிறது.

பிணத்தைச் சுமந்து செல்லும்போதும், கோவிந்தா! கோவிந்தா! என்று கூச்சல் எழுப்புகிறார்கள்.

இரண்டு நிலைமைகளின்போதும், "கோவிந்தா!' கேட்கிறது. ஆனால் அந்த இரண்டு "கோவிந்தா'வும் ஒன்றா?

அதுபோலத்தான், சமூகத்திலே ஒரு பகுதி பணம் படைத்தோர்களாகவும், பெரும் பகுதியினர் வாழ முடியாமல் தத்தளிக்கும் ஏழைகளாகவும் இருக்கக்கூடாது. இந்த நிலைமையை மாற்றியாக வேண்டும் என்ற புரட்சித் திட்டம் மேற்கொள்பவர்களும், சோஷியலிசம் பேசுகிறார்கள்.

பணக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சிலர் பணம் திரட்டுவது நடந்துகொண்டுதான் இருக்கும். அதனை அனுமதித்துக்கொண்டுதான் இருப்போம். ஆனால் ஏழைக்கும் நல்லது செய்வோம், வாழ்வு கொடுப்போம் என்று பேசும், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற போக்கினராக உள்ள காங்கிரஸ் கட்சியினரும் சோஷியலிசம் பேசுகிறார்கள்!

இந்த இருவகை சோஷியலிசப் பேச்சில், எது பொருள் உள்ளது, பயன் தருவது, நேர்மையானது என்பதுதான் நாட்டின் முன் உள்ள கேள்வி.

காடும் மேடும் கழனியாகவேண்டுமானால், கள்ளியும் முள்ளும் களைந்தெறியப்பட்டாக வேண்டும்; மேடு பள்ளம் சமமாக்கப்பட வேண்டும்.

ஒழுங்குபடுத்தப்பட்ட "பள்ளம்' பயன்படும், குளமாக, குட்டையாக.

சமப்படுத்தப்பட்ட இடம் வயலாகும், விளைச்சல் இடமாகும்.

எமது வயலில் ஆங்காங்கு சிறு சிறு பள்ளங்களும் இருக்கும், கேடுகளும் இருக்கும், ஒருபுறம் கள்ளி கிடக்கும், மற்றோர் புறம் புற்றும் இருக்கும், அதிலே பாம்பும் இருக்கும், வேறோர் புறம் புதர் இருக்கும், அதிலே நரியாவது இருக்கும், சேறு இருக்கும், அதிலே எருமை புரளும், இந்தச் சூழ்நிலையிலும், விளைச்சல் மட்டும் அமோகமாகக் கிடைக்கும். அப்படிப்பட்ட அற்புதமான வயல் எம்முடையது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

இன்று உள்ள முறைப்படி சமூகத்தில் பணக்காரர்களும் இருப்பார்கள், அவர்கள் பணம் தேடிட, குவித்திட, சேமித்திட, உரிமையும் இருக்கும்; அதேபோது ஏழைக்கு வாழ்வும் உயரும் என்பது, சோஷியலிசம் அல்ல என்பது மட்டுமல்ல, தம்பி! அது நடைமுறைக்கு வர இயலாததுமாகும்.

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவேண்டு மானால், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகத் தேவைப்படும் பணம், நாட்டின் பொது வருவாயில் இருந்துதான் எடுத்தாக வேண்டும். நாட்டின் பொது வருவாயைத் தமக்காக என்று பணக்காரர்கள் மடக்கிக் கொள்ளுகிற வரையில் ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வாழ்வைச் செம்மைப்படுத்துவதற்குத் தேவைப் படும் பணம் கிடைக்காது.

காங்கிரஸ் ஆட்சியோ பணக்காரர்கள் செல்வம் தேடிடும் உரிமையை இழக்கமாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டிருக்கிறது.

அப்படியானால், ஏழையின் வாழ்வை வளப்படுத்தத் தேவைப்படும் பணம் எங்கிருந்து கிடைக்கும்?

விளக்கம் காணோம். கேட்டால் கோபம்தான் பொத்துக்கொண்டு வருகிறது.

ஏழையை வாழவைக்கப் போகிறோம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகிறோம், நாட்டிலே பல்வேறு துறைகளிலே உற்பத்தியாகும் செல்வம், அதற்கே பயன்படும் என்று பேசுவது, நடைமுறைக்கு வரவேண்டுமானால், அந்தச் செல்வத்தைச் சிலர் தமதாக்கிக்கொள்ளும் முறை மாற்றப்பட்டாக வேண்டும்.

அந்த முறையை மாற்றாமல், ஏழையை வாழவைக்கப் போகிறோம் என்று பேசுகின்றனர் காங்கிரசார்.

இந்தப் பேச்சு புதுமையானது, புரட்சிகரமானது என்றும் புகழ்ந்து பேசிடச் சிலர் உளர்; சீமான் கொட்டாவிவிட்டு எழுப்பும் சத்தத்திலேயே "சங்கீதம்' கேட்பதாகத் துதி பாடிக் காசு தேடும் "தின்று தீர்த்தான்கள்' போன்றார்!

எல்லோரும் வாழ வேண்டும் என்ற பேச்சுக்கா பஞ்சம்! அதை எப்படி நடைமுறையாக்குவது என்பதுபற்றிய செயலுக்குத் தானே தொடர்ந்து பஞ்சம் இருந்து வருகிறது.

Our task is to use rightly and to best advantage her great economic assets not to increase the wealth of the few but to raise the many from poverty to a decent standard of comfort.

We must lift the poor man of India from poverty to security, from ill-health to vigour, from ignorance to understanding.

And our rate of progress must no longer be at the bullock - cart standard but atleast at the pace of the handy and serviceable jeep.

இந்தியாவின் பொருளாதார வளத்தை, தக்க முறையில், பலன் தரத்தக்க வகையிலே பயன்படுத்துவதுதான் நமது பணியாகும் - ஒரு சிலருடைய செல்வத்தை அதிகப்படுத்து வதற்காக அல்ல; ஆனால் பெரும்பாலோர்களை வறுமையி லிருந்து எழச்செய்து, வசதியுள்ள, நாகரிகமான வாழ்க்கைத் தரம் பெறும்படிச் செய்வதற்காக.

இந்தியாவிலுள்ள ஏழையை வறுமையிலிருந்து நிலையான வாழ்க்கைக்கு உயர்த்திட வேண்டும்; நலிவை நீக்கி ஆற்றலுள்ள வனாக்கிட வேண்டும்; அறியாமையிலிருந்து தெளிவுள்ள நிலைக்கு உயர்த்த வேண்டும்.

நமது முன்னேற்ற வேகம் இனி, கட்டை வண்டி அளவினதாக இருந்திடக்கூடாது, குறைந்தபட்சம் கைக்கு அடக்கமாக பயன்படுகிற ஜீப் (மோட்டார்) வேகத்தின் அளவாவது இருக்க வேண்டும்.

இலக்கிய நயமேகூட இருக்கிறதல்லவா, தம்பி! இந்தப் பேச்சில்.

இந்தியாவிலே இயற்கையான பொருளாதார வளம் இருக்கிறது.

அந்த வளத்தைத் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும்.

அப்படிப் பயன்படுத்துவது ஒரு சிலர் செல்வம் சேர்ப்பதற்காக இருக்கக்கூடாது.

மிகப் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அந்தப் பொருளாதார வளர்ச்சி பயன்பட வேண்டும்.

ஏழை, வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்டாக வேண்டும்.

ஏழையின் வாழ்விலே ஒரு நிம்மதியும், நிலையான தன்மையும் ஏற்பட வேண்டும்.

ஏழையின் நலிவு நீங்க வேண்டும்; வலிவு மிக வேண்டும்.

அறியாமை போக வேண்டும்; தெளிவு பிறந்திட வேண்டும்.

அதற்கான முன்னேற்றம் கட்டை வண்டி வேகத்தில் இருக்கக்கூடாது. முன்னேற்ற வேகம், குறைந்தது ஜீப் மோட்டாரின் வேகத்தின் அளவுக்காவது இருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் மெருகு கூட்டிப் பேசமாட்டார் எங்க காமராஜர், மனதிலே பட்டதை அப்படியோ மெருகு கலவாமல், சுத்தமாகச் சொல்லுவார், வேறு சிலர்போல அவர் தமது பேச்சுக்கு அழகு கூட்டிக்கொண்டிருக்கமாட்டார், ஆனால், இப்போது உங்கள் அண்ணாதுரை எடுத்துக்காட்டினானே, இதையேதான் "எங்க தலைவர்' ஒவ்வொரு நாளும் சொல்லுகிறார், ஓயாமல் சொல்லுகிறார், ஒருவருக்கும் அஞ்சாமல் சொல்லுகிறார், உள்ளன்போடு சொல்லுகிறார், உணர்ந்து சொல்லுகிறார் - என்றெல்லாம், தம்பி! காங்கிரஸ்காரர்கள் கூறக்கூடும்.

அதிலேயே சிலர், இதுபோல இலக்கிய அழகு சொட்டச் சொட்டப் பேசினாரே, எமது பண்டிதர், அறிவாயா!! - என்று கேள்வியைக் கிளப்புவார்கள்.

தம்பி! நான் இந்தப் பேச்சை எடுத்துக் காட்டுவது, காமராஜர் "கொச்சை'யாகக் கூறுவதை, ஏன் இதுபோல இலக்கிய அழகுடன் கூறக்கூடாது என்று கேட்கவுமல்ல; இலக்கிய நடைப் பேச்சில் பண்டிதர் வல்லவர் என்பதை மறுப்பதற்கும் அல்ல. என் நோக்கம் வேறு. மறுமுறையும், அந்தப் பேச்சைப் படித்துப் பார், தம்பி! அதிலே ஒரு இடத்திலாவது சோஷியலிசம் என்ற வார்த்தை இருக்கிறதா என்று பார்! இல்லையல்லவா!

இப்போது காங்கிரஸ் கூறுவது அவ்வளவும் அந்தப் பேச்சிலே இருக்கிறது.

பொருளாதார முன்னேற்றம்.

அது பத்துப் பணக்காரர்களுக்கு மட்டும் பயன் படுவதாக இருந்துவிடக்கூடாது, ஏழையை வாழ வைப்பதாக இருக்க வேண்டும்.

முன்னேற்றம் வேகமாக இருக்க வேண்டும்.

இவை யாவும் காங்கிரஸ் பேச்சிலே உள்ளவையே!

ஆனால் இந்தப் பேச்சிலே சோஷியலிசம் என்ற சொல்லே இல்லை.

இதே பேச்சைப் பேசிக்கொண்டு, இதுதான் சோஷியலிசம் என்று காங்கிரஸ்காரர்கள் பேசுகின்றனர்.

பேசுவது மட்டுமல்ல, இதைக் காமராஜர் பேசும் போது கேட்டாலும் கேட்டேன், உன் பேச்சைப்போலக் கேட்கல்லே; - என்றும் பாடுகிறார்கள்!

இதனைப் புதிய கண்டுபிடிப்பு என்கிறார்கள்!

இதற்குக் காமராஜர் தந்தையாம்! சிற்பியாம்!!

ஜனநாயகம் - சோஷியலிசம் என்ற வார்த்தைகளைச் சொல்லத் துணிவின்றி ஜவஹர்லால் நேருகூட இருந்து விட்டுப் போய்விட்டார், இப்போது "தேசப் பிதா' வந்துதான் இதனைப் பேசுகிறார் என்கிறார்கள்.

அர்ச்சனை செய்வது என்று கிளம்பிவிட்ட பிறகு, "சஹஸ்ர நாமம்' வரையில் போகவேண்டியதுதான்! போகிறார்கள்.

அதற்காக அல்ல, தம்பி! நான் இதனைச் சொல்வது. நான் காட்டிய பேச்சுதான்; இப்போதும் காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது.

அந்தப் பேச்சிலும் சரி, இப்போது பேசப்படுவதிலும் சரி, பணக்காரர்கள் என்ற ஒரு வர்க்கம் இருக்க அனுமதிக்க மாட்டோம் என்ற திட்டவட்டமான அறிவிப்பு இல்லை.

நாட்டு வளம், ஒரு சிலர் செல்வத்தைக் குவித்திடப் பயன்பட விடக்கூடாது; ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அது சோஷியலிசம் அல்ல என்பதால்தான், நான் எடுத்துக் காட்டிய பேச்சில், சோஷியலிசம் என்ற வார்த்தை இணைக்கப்படவில்லை.

சிறகை விரித்தாடும் பறவை என்பதற்கும் மயில் என்பதற்கும், வித்தியாசம் இல்லையா, தம்பி!

மயில் மட்டுமா சிறகை விரித்தாடுகிறது? வான்கோழி கூடத்தானே!

மயில் என்று கூறினால், மயிலாக இருக்க வேண்டுமேயன்றி, சிறகை விரித்தாடுவது மயில், இதோ இதுவும் சிறகை விரித்தாடு கிறது; ஆகவே இதற்கு மயில் என்றே நான் பெயரிடுகிறேன் என்று கூறி ஒரு துணிந்த பேர்வழி, வான்கோழியைக் கொண்டு வந்து காட்டினால், தம்பி! என்ன எண்ணிக்கொள்வது? அந்த நெஞ்சழுத்தத்தை வியந்திடத்தானே வேண்டும்! சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?

நான் எடுத்துக் காட்டிய பேச்சிலே, ஏழையை வாழ வைத்தாக வேண்டும் என்ற விருப்பம் தெரிவிக்கப்பட்டிருப்பினும், அதிலே சோஷியலிசம் என்ற வார்த்தை காணப்படாததற்குக் காரணம், இதனைச் சோஷியலிசம் என்று கூறினால், நம்மை விவரமறியாதவன் என்று அறிவாளர் எண்ணி எண்ணி நகையாடு வார்களே என்ற அச்சம் கூச்சம்.

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே; அறிந்தோர் தொகை நூற்றில் ஒரு முப்பதே என்பதனாலே! என்று காங்கிரசின் பெருந் தலைவர்கள் துணிந்துவிட்டார்கள்; அதனால்தான் அந்தப் பழைய பேச்சுக்கே "சோஷியலிசம்' என்று பெயரிட்டுவிட்டார்கள்.

பெயர் முக்கியமல்ல, நோக்கம்தான் முக்கியம் என்று வாதாடுவார் உளர். உண்மை! ஒப்புக்கொள்வோம், தம்பி! ஆனால் ஒரு பொருந்தாத பெயரைத் தேடி எடுத்து ஏன் சூட்ட வேண்டும்? அந்தப் பெயர் மக்களைச் சொக்கவைக்கும் என்பதால்தானே! அந்த நோக்கம் நேர்மையானதுதானா?

பூவோ பூ! - என்று முருங்கைப் பூவை விற்பாரைப் பார்த்ததுண்டா? பார்த்திருக்க முடியாது! இதோ! விற்கிறார்களே ஜனநாயக சோஷியலிசம் என்று - ஐயோ! பாவம்! ஏழையும் வாழட்டும் என்ற பழைய பேச்சை, புதிய "லேபிள்' ஒட்டி. பாரேன்!

ஏழையை வாழ வைப்பதே எமது நோக்கம்

என்ற இந்தப் பேச்சு, புரட்சிப் பேச்சாக, புதுமைப் பேச்சாக, சோஷியலிச கீதமாக விளம்பரப்படுத்தப்படுகிறதே, தம்பி! இதே கருத்தைக் கொண்ட பேச்சு நான் எடுத்துக் காட்டினேனே, அது யாருடையது தெரியுமா?

ஜவஹர்லால் நேருவுடையதா?
லால்பகதூர் சாஸ்திரியுடையதா?
லாலா லஜபதிராயுடையதா?
மோதிலால் நேருவுடையதா?

என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்க வேண்டாம் தம்பி! இது எந்தக் காங்கிரஸ் தலைவருடைய பேச்சும் அல்ல; சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட எவருடைய பேச்சுமல்ல. சொல்லப் போனால் "பாரத புத்திரர்' எவரும் பேசியது அல்ல; ஏகாதிபத்திய ஏஜண்டு பேச்சு.

ஆமாம்! தம்பி! பதறுவர் காங்கிரஸ்காரர். ஏழை வாழ வேண்டும். பணக்காரனுக்காக நாட்டுச் செல்வம் இல்லை, ஏழைக்காக, அவனுக்கு நல் வாழ்வு அளிக்க! - என்று பேசும் திறமையும் நேர்மையும், உரிமையும், உணர்ச்சியும் எமக்கன்றோ உண்டு! நாட்டு விடுதலை வீரர்களாம் நாங்கள் மட்டுமே பேசக்கூடிய இந்த உருக்கமான பேச்சை, எழுச்சியூட்டக்கூடிய பேச்சை, ஒரு ஏகாதிபத்திய ஏஜண்டா பேசினான்? யார் அவன்? - என்றெல்லாம் கேட்பர். பதறிப் பயன் இல்லையே! தம்பி! உள்ளபடி, இன்று இவர்கள் பேசும் இதே பேச்சை, இவர்களைப் போல லேபிள் ஒட்டாமல் பேசியவர், இந்தியாவின் வைசிராயாக இருந்தவர்; வெள்ளையர்! 1944-ம் ஆண்டு வைசிராய் பேசிய பேச்சு இது.

1944லில் - இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ளைக்கார வைசிராய் பேசியதை, அதே கருத்தை 1964லில் போலி லேபிள் ஒன்று ஒட்டி, இவர்கள் பேசுகிறார்கள்.

இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு கேட்ட அதே பேச்சு, இன்று சோஷியலிசம் என்ற பெயர் ஒட்டப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஒரு வெள்ளைக்கார ஏஜண்டு, எதைச் சொன்னானோ அதை இருபத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் சொல்லுகிறார்கள்; இதிலே புதுமை இருக்கிறதாம், புரட்சி இருக்கிறதாம்; நம்பச் சொல்லுகிறார்கள்!

அவன் சொன்னான்! நாங்கள் செய்கிறோம்! புரிகிறதா வித்தியாசம் என்று பொறி கிளப்புவோர் பேசுவர்; பேசட்டும், தம்பி! அடுத்த கிழமை இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் கூறுகிறேன். இந்தக் கிழமை, இவர்கள் இன்று பேசுவதிலே புதுமையும் இல்லை, புரட்சியும் இல்லை, இதைப் பேச அபாரமான ஆற்றலோ ஏழைகளிடம் ததும்பி வழியும் அன்போகூட இருந்திடத் தேவையில்லை. இதுபோல ஒரு வெள்ளைக்கார ஏகாதிபத்திய ஏஜண்டினாலேயே பேச முடிந்தது - இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே - என்பது வரையில் கூறினால் போதும் என்று கருதுகிறேன்.

அண்ணன்,

14-8-66