அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சுகஸ்தான் வாசி...
2

எனினும், சர்க்கார் நடத்திய இந்தத் திருவிளையாடலை, சொற்சிலம்பம் செய்து மறைத்திட முயற்சிக்கிறது!

பல் ஆஸ்பத்திரிக்குப் போவானேன் - பல ரூபாய் பாழாக்கிக் கொள்வானேன் என்பதற்காகத்தான், நாலைந்து அறை கொடுத்து இவனுடைய பற்கள் கீழே உதிர்ந்திடச் செய்தேன் என்று போதையில் உள்ள காலிகூடப் பேசமாட்டான். பொறுப்பு அறிந்த சர்க்கார், பொன்னாடாக இருந்த தென்னகம் தேய்ந்திருக்கிறது, மீண்டும் இங்கு திருவும் தெம்பும் ஏற்படப் புதிய தொழில்களை அமைத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டிய சர்க்கார்,

உங்கள் தொழிற்சாலை, "கட்டி வரக்கூடிய' முறையில் இல்லை என்று நாங்கள் கருதுவதால், இது நடைபெறு வதைக் குறித்துப் பலமாகச் சந்தேகப்படுகிறோம் என்று சாக்குக் கூறிவிட்டு, இது போன்ற வகையினதாகவே வேறோர் தொழிற்சாலை நடத்த, மற்றொருவருக்கு அனுமதி அளித்திருக்கிறது.

இதனை அறம் என்று கூற, யார் முன் வருவர்?

இதனை நேர்மையான அரசியல் என்று கூறும் துணிவு கூட எவருக்கும் எழாதே!

1953 இல் ஏற்பட்ட தொழிற்சாலை Caustic Soda தயாரிக்க; 1955 இல் அனுமதி பெற்றிருப்பது Soda Ash தயாரிக்க என்று சொல்லை வைத்துக்கொண்டு "ஜாலம்' செய்தார்கள்!!

உன் கடையில் இட்லி சாம்பார்! அவன் கடை உன் கடைக்குப் போட்டியாக நான் கிளப்பிவிடுவது என்று எண்ணிக் கொள்ளாதே, அவன் கடையில் இட்லி சட்னிதான், சாம்பார் கிடையாது, என்று சொன்னால், அதற்குப் பெயர் சமாதானமா!!

சிலநாள்தான் இந்தப் போலிவாதம் கூட!

இப்போது, 1955 இல் அனுமதி பெற்ற, புதிய தொழிற் சாலையினர் (Caustic Soda) சோடா உப்பு தயாரிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள்!

இப்போது நிலைமை என்ன என்பதை எண்ணிப் பார்த்திடலாம், வா, தம்பி!

ஒரு கோடி ரூபாய் மூலதனம் ஏற்பாடு செய்து, அதற்கான பங்கு பெற, என்னென்ன முயற்சிகளில் ஈடுபட வேண்டுமோ அவை யாவும் செய்து முடித்து, துவக்க விழா நடாத்தி, வேலையைத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது, 1953 இல் அனுமதி பெற்ற கம்பெனி.

இதற்குக் கழுத்தில் கத்திவைப்பது போல, அதே தூத்துக்குடி வட்டாரத்திலேயே, வேறோர் அமைப்புக்கு அனுமதி வழங்கிற்று, டில்லி.

வாழவைக்கும் வழியா இது? தொழிலை வளர்த்திடும் இலட்சணமா? மூன்று ஆண்டுகள் முயற்சியும் செலவான பணமும் குப்பைதானே!!

தம்பி! இனி, இந்தத் துயரச் சேதியின் உச்சத்தைக் கவனி.

1953 இல் அனுமதிப் பெற்று, இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கும் கம்பெனிக்கு அமைப்பாளர், ரோச் விக்டோரியா!

1955 இல் அனுமதி பெற்றுக் கிளம்ப வந்திருக்கும் கம்பெனி T.V. சுந்தரம் ஐயங்காருடையது!! பக்கத்திலே, யாராவது, "பாரத மாதாவின் பிள்ளை' இருந்தால், இந்தச் சேதியைக் கூறிவிட்டு, அவர் முகத்தைக் கவனித்துப்பார், தம்பி! ரோச்விக்டோரியா தூத்துக்குடித் தொழிலதிபர் - காங்கிரஸ்காரர், இப்போதைய M.L.A. முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்!

T.V. சுந்தரம் ஐயங்கார், காங்கிரஸ்காரராக இருந்ததில்லை!

ரோச் விக்டோரியாவின் முயற்சியில் மண்ணைப் போடுவானேன்? சுந்தரம் ஐயங்கார் கம்பெனிக்கு சந்தன தாம்பூலம் அளிப்பானேன்?

ரோச் விக்டோரியா மூன்றாண்டுகளாக எடுத்துக்கொண்ட முயற்சி என்ன கதி ஆவது? அஸ்திவார விழாவன்று அவர், பாபம், மைசூர் மகாராஜாவின் பக்கத்திலே நின்றுகொண்டு, பூரிப்புடன், புதிய தொழிற்சாலை பற்றிப் பேசியபோது, அவருடைய மனக்கண் முன்பு ஓங்கி நிற்கும் புகை போக்கிகளும், உருண்டு கிடக்கும் இருப்புச் சக்கரங்களும், உற்பத்தியாகும் சரக்குகளும், அவைகளை ஏற்றிச் செல்லும் பெட்டிகளும், கிடைத்திடும் இலாபத்தைக் கொட்டிவைத்திடும் கொட்டடியும், இலாபம் தேடித்தர உழைத்திடும் பல்லாயிரம் பாட்டாளிகளும், தோன்றி இருந்திருக்கக் கூடும்!

நாமே காங்கிரஸ்காரர், கழகம் அல்ல!

பிரமுகர் வரிசையிலே மட்டுமல்ல, தொழில் அதிபர் பட்டியலிலே, நமது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது!

காங்கிரஸ் அமைச்சராகவேகூட இருந்திருக்கிறோம்.

வல்லவனுக்கு, வடக்காவது தெற்காவது - எல்லாம் ஒன்றுதான்!!

டில்லியில் நமது குரலுக்கு மதிப்பு எப்படியும் இருந்தே தீரும் என்று பலப்பல எண்ணிக்கொண்டிருந்திருப்பார். எல்லாவற்றிலும் இடிவிழுவதுபோல, 1955 இல் T.V.S. கம்பெனிக்கு அனுமதி அளித்தது, இந்திய சர்க்கார்.

இப்படி ஒரு பேரிடி வந்து விழும் என்று, ரோச் எப்படிக் கருதியிருக்க முடியும்! தொழிற்சாலை அமைப்பிலே தீவிரமாக ஈடுபட்டார். தேவையான இயந்திரங்கள் அனுப்பப்படுவதிலே தாமதம் ஏற்படுகிறது என்பதால், ரோச் விக்டோரியா, சுவிட்சர்லாந்து நாட்டுக்கே சென்று, இயந்திரங்களைச் சேகரம் செய்தாராம்!

தொழிற்சாலையோ புதிது, ஆனால் தேவையானது; மூலதனமோ ஒரு கோடி: முயற்சியில் ஈடுபட்டவரோ தொழிலதிபர்; வளர்ச்சியோ குறிப்பிடத்தக்க அளவில்; எனினும் 1955 இல் T.V.S. கம்பெனிக்குப் புதிய அனுமதி கிடைக்கிறது! நிலைமையை, இப்போது ஆராய்ந்து பார்க்கலாம், நமது காங்கிரஸ் நண்பர்கள்!

வெட்கமாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது என்று கூறுவர் இரண்டோர் காங்கிரஸ்காரராவது; அவர்களைக் கண்ணீர்விடச் சொல்லாதே, தம்பி, இன்னுமோர் "சேதி'யைக் கேட்டுவிட்டு, பிறகு வேண்டுமானால், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளட்டும்.

ரோச் விக்டோரியாவின் முயற்சிக்கு உலைவைக்கத்தக்கதாக T.V.S. கம்பெனியார், புதிய தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றார்களல்லவா, அவர்கள் அந்த அனுமதியை தாரங்க தரா ரசாயன தொழிற்சாலை எனும் வேறோர் கம்பெனிக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார்கள்! இந்தக் கம்பெனி, வட நாட்டுக்காரருடையது!

தம்பி! சம்பூரணமாகிவிட்டதல்லவா, நாராயணம்! இப்போது, சொல்லச் சொல்லு வடநாடு என்ன போக்கில் தென்னாட்டை நடத்துகிறது என்று.

துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பர் தூய உள்ளத்தை இழந்திடாத, காங்கிரசார்.

சென்னை சர்க்காரிடம் முறையிடலாமே! காமராஜர் தமிழராமே! தமிழ் நாட்டுக்குந் தாழ்வு வரவிடமாட்டாராமே! அவரிடம் மனுச்செய்யலாமே! என்று முணுமுணுப்பர், சிலர்.

எல்லா முறைகளையும் செய்து பார்த்து மூக்கறுபட்ட நிலைக்கு வந்துற்ற பிறகுதான், மாஜி மந்திரியும், இன்றைய காங்கிரஸ் M.L.A. யுமான, ரோச் விக்டோரியாவே 1956 செப்டம்பரில், இந்தத் துயரச் "சேதி'யை அச்சிட்டு, அனைவருக்கும் வழங்கி இருக்கிறார்!

இப்படியெல்லாம் இடுக்கண் வந்துற்றதால், என் முயற்சியை விட்டுவிடுகிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் கூறவில்லை.

இப்படி எல்லாம் நடப்பதால், நண்பர்களே! நாட்டவரே விழிமின்! எழுமின்! இந்த விபரீதப்போக்கைக் களைமின்! என்று முழக்கமிடும் முறையிலே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் மாளிகையின் பெயர் சுகஸ்தான் என்று தெரிகிறது! தம்பி! சுகஸ்தானில் இருப்பவருக்கே, திராவிடஸ்தான் அமைந்தாலன்றி நாடு வாழ வழி ஏற்படாது என்று புத்துணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் - அவ்வளவு வேதனைக்குரல் தெரிகிறது அந்த அறிக்கையில்.

சென்னை சர்க்காரால் செயலாற்ற முடியவில்லை.

சென்னை சர்க்காருக்கு அதிகாரம் இல்லை.

மத்திய சர்க்காருடைய "லகா'னில் நாம் இருக்கிறோம்.

இந்த நிலை இருக்குமட்டும் இங்கு வாழ்வும் வளமும் கிடைக்காது.

எனவே அனைவரும் ஒன்றுகூடி எழுமின்.

இந்த இராஜ்யத்துப் பொருளாதார சுதந்திரம் பறிபோகாமல், தடுத்து நிறுத்த வேண்டும்.

உடனே! உடனே! அனைவரும் அனைவரும்!!

இந்த முறையிலே இருக்கிறது. சுகஸ்தானத்திலிருந்து வெளிவரும் அறிக்கை!

பட்டால்தான் தெரிகிறது பலருக்கும்.

உன் அண்ணன், துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறான் ரோச் விக்டோரியா காங்கிரஸ்காரர், அவர் இதுபோலெல்லாம் கூறியிருக்கமாட்டார் என்று, தம்பி, உன்னிடம், யாரேனும் சில காங்கிரஸ் நண்பர்கள் வாதாட வருவர் அவர்களின் மேலான பார்வைக்கு, இதோ இந்தப் பகுதியைக் காட்டு; இது ரோச் விக்டோரியா வெளியிட்ட ஆங்கில அறிக்கையில் உள்ள வாக்கியங்கள்:

The Madras Government have been approached several times, the Legislators of the Tinnevelly district have also made representations on behalf of the South Indian venture and the public were looking to the State Government to give an encouragement to the Scheme.

The Madras Government is however helpless in the matter, for the Government of India in the Commerce and Industries Department are dictating the policy as to what should be done or what should not be done in the State of Madras.

WE ARE TIED TO THE APRON STRINGS OF THE CENTRAL GOVERNMENT.

It is time therefore that all those who are interested in the Industrial Development of the South, should join hands and see to it that the economic freedom of the State in particular and the South as a whole, is not taken away from us.

சென்னை சர்க்காரிடம் பலமுறை முறையிட்டோம் - பயனில்லை, காரணம், இந்திய சர்க்காரிடமே இந்த அதிகாரம் இருக்கிறது, மத்திய சர்க்காரின் முந்தானையில் முடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறது சென்னை-தென்னகத்துத் தொழில் வளர்ச்சியில் அக்கரை கொண்டோரனைவரும் செயலாற்றி, இந்த இராஜ்யத்துக்கு சிறப்பாகவும், பொதுவாகத் தென்னகத்துக்கும் உள்ள பொருளாதார சுதந்திரம் பறிபோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை, காரசாரமான முறையிலே, ஆங்கில மொழியிலே, ரோச் வெளியிட்டிருக்கிறார்.

தாம் ஈடுபட்ட ஒரு தொழில் முயற்சியிலே ஏற்பட்ட இடுக்கண், அதிலே டில்லி சர்க்கார் காட்டிய போக்கு, அதிலே சென்னை சர்க்காரின் செயலற்ற தன்மை, அதிகாரமற்ற நிலை, இது மனதிலே உறுத்தியதும், ரோச் விக்டோரியா, தாமோர் காங்கிரஸ்காரர், அமைச்சராகக்கூட இருந்தவர், பாரத நாடு என்ற பரந்த மனப்பான்மையைக் கொள்ள வேண்டியவர் என்று எதற்கும் கட்டுப்படமுடியா நிலைபெற்று, கொதித்தொழிந்து, கேண்மின்! தோழர்காள்! கேண்மின்! என்று கூவுகிறார். எங்கே போயிற்று, டில்லி போதிக்கும் தேசியம்!! போலிதானே!! சமயத்திலே, அந்தத் தேசியம், தேய்கிறது மாய்கிறது, இயற்கை உணர்ச்சிதான் மேலோங்கி வருகிறது!!

ரோச் விக்டோரியா இந்த நிலையைக் கண்டதால், இனி நாட்டுக்கு மத்திய சர்க்காரின் ஆதிக்கப் போக்கை எடுத்துக்காட்டி, இந்த இராஜ்யத்துக்கும், தென்னகத்துக்கும், பொருளாதார சுதந்திரம் கிடைத்திடச் செய்யும் பணியில் ஈடுபட முற்படுவாரா என்று என்னைக் கேட்டுவிடாதே. நான் திருப்பி உன்னைக் கேட்பேன், கவர்னராக இருந்த நிலையிலேயே, கொதித்துப் பேசினாரே இதுபோல், குமாரசாமிராஜா, அவர் என்ன செய்தார் பிறகு, என்று!

இவர் போன்றாரின் பேச்சு, நாம் மேற்கொண்டுள்ள கொள்கை, அப்பழுக்கற்றது என்பதை நமக்கு உறுதிப்படுத்த உதவுவது, வேறு விளைவுகளை நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்த்துப் பயன் இல்லை.

சோடா உப்புக்கு அனுமதி கிடைத்தும் பயனில்லை என்றால், இத்தகைய முதலாளிமார்களுக்கு சுவை ஊட்ட டில்லியிடம் வேறு பண்டங்களா கிடைக்காது! இவர்களும், நாடு வஞ்சிக்கப்படுகிறது. நாங்கள் இதற்கு உடந்தையாக இருக்கமாட்டோம், உயர்பதவி தந்தாலும் வேண்டோம், இலாபச்சுவை ஊட்டினாலும் சீந்தமாட்டோம், என்றா சீறிப் போரிடக் கிளம்புவர்?

சுகஸ்தானத்தில் அல்லவா அவர்கள் வாசம்!

தம்பி! உனக்கும் எனக்கும், நம்போல, உள்ளவர்களுக்கும் தான் இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து பணியாற்றி வெற்றிகாணும் பொறுப்பு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்தப் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் இடையிடையே எரிச்சல் காரணமாகவோ ஏமாற்றம் கண்டதாலோ, இப்படிச் சிலர், உண்மை நிலைமையை எடுத்துக் கூறும்போது, நாம் மேற்கொண்டுள்ள பணி நியாயமானதுதான் என்று நமக்கு உறுதியும் உவகையும் ஏற்படுகிறது! அதுவரையில் அவர்கட்கு நாம் நன்றி கூறிக்கொள்ளத்தானே, வேண்டும்.

நாளைக்கே, ரோச் விக்டோரியாவுக்கு சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும்கூட அளித்திடும் சக்தி டில்லிக்கு உண்டு - பெற்றுத் தருவதாகச் சாகசம் செய்யும் திறம் காமராஜ் சர்க்காருக்கு நிரம்ப உண்டு! எனவே, மீண்டும் அவர்கள் இந்தியா - இந்தியர் - என்று பஜிக்கத் தொடங்கிவிடக்கூடும். ஆனால், அவர்களின் இந்தத் தேசிய பஜனை, உதட்டளவு என்பதும், உள்ளத்தில் இடம்பெற்றதல்ல என்பதும், அவ்வப்போது, பீறிட்டுக்கொண்டு வருகிற பேச்சுகளிலே தெரிகிறதல்லவா! அது நல்லதல்லவா, நமக்கும் நாட்டுக்கும்! அதனாலேயே, இந்தச் சம்பவத்தை எடுத்துக்கூறினேன், உனக்கும் உன் மூலம், நாட்டவருக்கும்.

ஆனால், இதுமட்டும் போதுமா! பிற இடங்கட்கும், உலகுக்கும். இந்தச் சம்பவங்களை எடுத்துக் காட்டி, நமது கழகத்தின் நோக்கத்தை விளக்க வேண்டாமா? ஆங்கில ஏடு மூலம்தானே அதனைச் செய்ய முடியும்.

ஆம்! அண்ணா! என்றுதான் சொல்கிறாய்! அன்புடன் சொல்கிறாய்! ஆனால், சந்தா? அது வரக்காணோமே!!

அன்பன்,

2-12-1956