அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தன்னை வெல்வான் தரணியை வெல்வான்!
2

இந்நிலையில், காங்கிரஸ் அரசு கலக்கம் கொண்டு விட்டிருக்கிறது; எந்த நேரத்திலும் தனது செல்வாக்கு சரிந்து போய்விடக்கூடும் என்ற அச்சம் பிடித்தாட்டுகிறது.

இத்தனைக்கும் காரணம் இந்தக் கழகம் அல்லவா! தேசியக் கட்சி, சுயராஜ்யத்துக்காகப் போராடிய புனிதக் கட்சி என்ற பாசத்துடன் ஆதரித்து வந்த மாணவர்கள், இன்று எதிர்ப்புச் செய்கிறார்களே! நாட்டின் பெரிய கட்சி, நிலையான ஆட்சியை நடாத்திடும் திறமை பெற்ற கட்சி என்பதற்காக நம்மை ஆதரித்து வந்தவர்கள் வழக்கறிஞர்கள் - அவர்கள் அல்லவா வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டிருக்கிறார்கள், இந்தியை எதிர்க்க!!

நிர்வாகத் திறமைக் குறைவு, ஊழல் ஊதாரித்தனம், ஆகாத சட்டங்கள், ஆர்ப்பரிப்பு அமுல்கள் என்பவைகளைக்கூடப் பொறுத்துக்கொண்டு, இன்றைய நிலையில், அமைதியான ஆட்சி நடத்திச் செல்லக்கூடிய பக்குவம் பெற்றுள்ள கட்சி காங்கிரஸ் கட்சிதான், மற்றவை நாட்டைக் கெடுத்திடும் நச்சுக் கொள்கை கொண்டவை என்று கூறி ஆதரவு அளித்து வந்த இதழ்கள் இன்று இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டிடும் பணியிலே மும்முரமாகி விட்டுள்ளனவே! இந்த முனைகளிலே கிடைத்துக்கொண்டு வந்த ஆதரவை இழந்துவிட்டோமே! இனி எதிர்காலம் எவ்விதமோ!! என்று எண்ணும்போது பதவிச் சுவையைப் பருகிப் பழகிவிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மனம் பதறுகிறது, பார்வையில் பொறி பறக்கிறது, பேச்சிலே தடுமாற்றம் ஏற்படுகிறது.

இத்தனைக்கும் காரணம்? கழகம்! கழகம் ஒழிக்கப்பட்டால், மற்ற முனைகளில் கிளம்பியுள்ள எதிர்ப்பு தன்னாலே முறிந்து விடும்; ஆகவே, பிடி! அடி! சுடு! என்ற ஆர்ப்பரிப்பு முறையில் அரசு, கழகத்தைத் தாக்கும் செயலில் முனைந்து நிற்கிறது.

கழகம் கூறிடும் பேச்சை யார் மதிக்கிறார்கள்? எவர் பொருட்படுத்துகிறார்கள்? எவர் ஏற்றுக் கொள்கிறார்கள்? என்று பேசிய இறுமாப்பு இன்று இல்லை; எதை எதையோ பேசுகிறார்கள், மக்கள் நம்பித் தொலைக்கிறார்களே! எப்படி எப்படியோ பேசுகிறார்கள்; மக்கள் மனம் மாறிவிடுகிறார்களே!! என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.

கழக ஏடுகளிலே வரும் சொற்கள், ஆட்சியாளர்களின் ஆணவக்கோட்டைமீது வீசப்படும் வெடிகுண்டுகள் என்றாகி விட்டன, இன்று. அன்று? சொற்களா? பொருளற்ற பிதற்றல் என்று பேசினர் ஆளவந்தார்கள். அன்று கழகம் எழுப்பிய முழக்கங்களைக் காட்டி, எந்தப் பிரிவின்படி வழக்குத் தொடுக்கலாம் என்று துடித்தபடி உள்ளனர்.

இன்று காங்கிரஸ் அமைச்சர்களின் மேஜைமீது, காந்தியாரின் ஏடுகளும், பண்டித ஜவஹர்லாலின் சுய சரிதமும் இல்லை, பாதுகாப்புச் சட்டத்தின் பிரதிகள்!

பிடி 30லில்! தொடு 41லில்! போடு 54! ஆகட்டும் 147, 148 வீசுக! - இவ்விதம் உள்ளனர்.

கழகத்தின் ஒவ்வொரு அசைவும் அச்சம் தருகிறது ஆட்சியாளர்களுக்கு.

இவர் இவ்விதம் பேசியது எதற்காக? இவர்மீது என்ன விதமான வழக்குத் தொடரலாம்? என்ற இதே நினைப்புடன் உள்ளனர் இன்று - அன்று? கழகமா? தூ! தூ! அதை ஒரு பொருட்டாக மதிப்போமா! யார் இருக்கிறார்கள் கழகத்தில்? ஒரு பத்துப் பேர்! இவர்களை நாடு சீந்துமா!! என்று பேசிக் கிடந்தார்கள். கழக ஏடுகளிலே வெளியிடப்படும் கேலிப் படங்கள், ஆட்சியாளர்களின் கண்களைக் குத்துகின்றன, மனத்தைக் குடைகின்றன; நெஞ்சை அச்சம் பிய்த்து எடுக்கிறது.

இருக்கவே இருக்கிறது பாதுகாப்புச் சட்டம் - அதனை வீசு! பிடித்துப் போடு உள்ளே!! என்கிறார்கள்.

கருணாநிதியை ஏன் சிறைபிடித்தீர்கள்?

அவர் வெளியே இருந்தால் அமைதியைக் கெடுத்து விடுவார்; அதனால்!!

இப்படி அஞ்சி அஞ்சிச் சாவார்பற்றிப் பாரதியார் அழகாகப் பாடுகிறார்:

அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே!

என்றார். கழக ஏட்டிலே வரும் ஒவ்வொரு எழுத்தும், கவிதையும், படமும் கண்டு அஞ்சி அஞ்சிச் சாகின்றார். யார்? எம்மை வீழ்த்தவல்லாரும் உளரோ! நாடே எமது பக்கம் திரண்டு நிற்கிறது! எமது வீரதீர பராக்கிரமம் எப்படிப்பட்டது! வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தையே கிடுகிடுக்க வைத்தவர்கள் நாங்கள்! பிரிட்டிஷ் சிங்கத்தை அதனுடைய குகைக்குள்ளேயே நுழைந்து அதன் பிடரியைப் பிடித்தாட்டியவர்கள்! நாங்களா இந்தக் கழகப் "பொடியன்'களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் பயப்படுவோம்? சிற்றெறும்பைக் கண்டு சிங்கம் அஞ்சுமோ! எலிக் கூட்டம் கண்டு புலி கிலி கொள்ளுமோ!! என்றெல்லாம் பேசி வந்தவர்கள் இன்று என்ன ஆனார்கள்? கழகப் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஈடுகொடுக்க முடியாத நிலையினராகி, சட்டத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, அதிலும் பாதுகாப்புச் சட்டத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு காப்பாற்று! காப்பாற்று! என்று கதறி நிற்கின்றார்கள். அச்சம் விடுக! அலறலை நிறுத்துக! இதோ உமது பக்கம் யாம் நிற்கிறோம், - என்று அபயம் அளித்துக்கொண்டு, நிற்கிறது அடக்குமுறை! அதன் துணையுடன் துரைத்தனம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்; எமது காங்கிரஸ் அரசு, அன்பு வழியை, அகிம்சை வழியை, காந்தியின் சாந்தி வழியைக் கடைப்பிடிக்கும் என்று கூறி வந்தவர்கள்.

உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!!

என்று கூறிவந்தவர்கள். . . பாடி வந்தவர்கள் - இன்று கழகத்தின் அச்சகங்களிலிருந்து வெளிவரும் எழுத்துக்களைக் கண்டு, கிலிகொண்டு, பாதுகாப்புச் சட்டத்தின் துணையைத் தேடிக்கொண்டு ஓடுகிறார்கள்.

எங்கே போனார்கள், ஆட்சியாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட, ஆற்றல் மிக்க எழுத்தாளர்கள்? இம்மென்றால் இருநூறு ஏசலைக் கக்கக்கூடிய பேச்சாளர்கள்! அவர்களிடம் இருந்த "சரக்கு' தீர்ந்துபோய்விட்டதா! மகாப் பிரபோ! அம்பறாத்தூணியில் கணைகள் இல்லை! வில்லும் ஒடிந்து விட்டது! இனி உமக்குத் துணை நிற்க இயலாது! ஆகவே மணிமுடியை மறைத்துக்கொண்டு மறைவான இடம் சென்று விடும்; சிக்கினால் சீரழிவு ஏற்படும்; சென்றுவிடும் பாதுகாப்பான இடம்! என்று களத்திலே நின்று படை நடாத்தியவன் கை பிசைந்துகொள்ளும் காவலனுக்குக் கூறிய கதை போலாகி விட்டதோ! இந்த ஆட்சியாளர்களுக்கு அவர்களை ஆதரிக்கும் எழுத்தாளர்கள் அவ்விதம் கூறிவிட்டார்கள் போலிருக்கிறது.

கழகத்தாரின் பேச்சையும் எழுத்தையும் வலிவற்ற தாக்க, பொருளற்றதாக்க நாங்கள் எங்களால் ஆனமட்டும் பார்த்தோம்; உரத்த குரல் எடுத்தோம், உருப்போட்டவை களை ஒப்புவித்துப் பார்த்தோம், உருட்டி மிரட்டிப் பார்த்தோம், இழிமொழி பொழிந்து பார்த்தோம், பழிச்சொற்களை வீசிப் பார்த்தோம், இட்டுக்கட்டிப் பார்த்தோம், பொய்யும் புனை சுருட்டும் பொழிந்து பார்த்தோம், கலகப் பேச்சை மூட்டிப் பார்த்தோம். வன்முறையைத் தூண்டிடும் பேச்சையும் கொட்டிப் பார்த்தோம்; இத்தனையும் பயன்படவில்லை; இத்தனைக்கும் கிடைக்காத மதிப்பு, அந்தக் கழகத்தாரின் பேச்சுக்கும் எழுத்துக்கும் கிடைத்து வருகிறது; எங்கள் பேச்சை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். கழகப் பேச்சும் எழுத்தும் மக்களிடம் எழுச்சியை, விழிப்பை, வீரத்தை, தியாக உணர்வை ஊட்டிவிட்டிருக்கிறது, மேலும் ஊட்டியபடி இருக்கிறது; ஆகவே, இனி எமது பேச்சையும் எழுத்தையும் நம்பிவிடுவது கூடாது; அவை உம்மைப் பாராட்ட, வாழ்த்துக்கூற, வரவேற்பளிக்க மட்டும் வைத்துக்கொள்ளலாம் இப்போது உடனடியாக எந்தச் சட்டத்தைக் கொண்டாகிலும் கழகப் பேச்சும் எழுத்தும் தடுக்கப்பட வழி செய்யுங்கள்! உடனே! அவசரம்! அவசரம்!

என்று ஆளவந்தார்களின் அன்புக்குத் தம்மைப் பாத்திரமாக்கிக் கொண்ட சண்டமாருதப் பேச்சாளர்களும் வழுக்கி விழும் அளவுக்கு ஆத்திரப் போதையினை ஏற்றிக் கொண்டுவிட்டுள்ள எழுத்தாளர்களும், முறையிட்டுக்கொண்டார்கள் போலும்!

இல்லையென்றால், கழக எழுத்துக்கு மறுப்பளித்து மக்களைத் தமது பக்கம் அழைத்துச்செல்ல காங்கிரஸ் கட்சி ஏன் தமது ஆதரவாளர்களான எழுத்தாளர்களைப் பயன்படுத்தாமல், பாதுகாப்புச் சட்டத்தைத் தூக்கி வீசுகிறது!

மற்றெல்லாப் படைக்கலன்களும் தீர்ந்துபோய்விட்டன என்பதையன்றோ இந்தப் போக்கு காட்டுகிறது?

நிலபுலம் விற்றுச் செலவாகியான பிறகு, தட்டு முட்டுச் சாமான்களை விற்றாகிலும் வயிறு கழுவிக்கொள்ள முனைவது போன்ற நிலைக்கல்லவா காங்கிரஸ் கட்சி வந்து விட்டிருக்கிறது.

சாதாரணச் சட்டம் போதவில்லையே காங்கிரஸ் அரசுக்கு! பாதுகாப்புச் சட்டமே அல்லவா தேவைப்படுகிறது, நிலைமையைச் சமாளிக்க!! நெறித்த புருவமே போதும் எதிரிகளை முறியடிக்க என்று முடுக்குடன் பேசித் திரிந்தவன், பிறகு அடி ஆட்களைத் தேடி அலைந்த கதை போலாகிவிட்டதே.

முரசொலியில் வெளிவந்த கட்டுரை, படம், இவைகளைக் கண்டு மக்கள் கொண்டிடும் எண்ணத்தைப் போக்கிடவும் மாற்றிடவும், வக்கு வழியற்றுப் போன நிலைக்குக் காங்கிரஸ் பிரச்சார யந்திரம் வந்துவிட்டதைத்தானே காட்டுகிறது கருணாநிதி, மாறன் ஆகியோர்மீது பாதுகாப்புச் சட்டத்தை வீசியிருக்கும் செயல்.

எண்ணிப் பார்த்தாரா, எழுபதாம் ஆண்டுக்கு நடைபோடும் பருவத்தினரான பக்தவத்சலனார்; கருணாநிதியைச் சிறை வைத்திருப்பது பற்றி மக்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பது பற்றி!

என்ன குற்றம் செய்தான் அந்தப் பிள்ளை? குற்றமா! இவர்களின் குணத்தை அம்பலப்படுத்தினான். எழுதினான்.

எழுதினால் என்ன? ஆட்சியாளர் குடியா முழுகிவிடும்.

ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு வெறுப்பு, பயம், கோபம். . .

கருணாநிதி எழுதினால் என்ன? அதை மறுத்து இவர்கள் எழுதுவதுதானே! மக்கள் இருசாராரின் எழுத்தையும் பார்த்து எது நியாயமோ அதனைக் கொள்ளட்டுமே.

எழுதியும் பார்த்தார்கள், காங்கிரசிலே உள்ள எழுத்தாளர்கள். . .

மக்கள் சீந்தவில்லை போலிருக்கிறது!!

இப்படியும் இதுபோல வேறுபலவும் பேசிக்கொள்வார்களே! இது ஆட்சியில் உள்ளவர்களின் புகழினையா வளர்த்துவிடும்!! ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பார்கள். அதன் விளைவோ இந்த அடக்குமுறை!!

இவைபற்றி எண்ணிடும்போது, சிறையில் தம்பி அடைக்கப்பட்டிருப்பது குறித்து இயற்கையாக எழும் சோகம்கூட மறைகிறது; கருணாநிதியின் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஆட்சியாளர் எத்துணை அஞ்சுகிறார்கள் என்ற நினைப்பு எழுகிறது; ஒரு வெற்றிப் புன்னகை தன்னாலே மலருகிறது.

கழகத்தின் வளர்ச்சி கண்டு காங்கிரஸ் அரசு கதிகலங்கிப் போயுள்ளதை எடுத்துக்காட்டி, கழகத் தோழர்களுக்கு மேலும் எழுச்சியைத் தரவல்ல நிகழ்ச்சி, கருணாநிதியைச் சிறைப்படுத்தி இருப்பது என்பது புரியும்போது மகிழ்ச்சிகொள்ளக்கூட முடிகிறது,

கழக வளர்ச்சியை அரசினர் கண்டு கலங்கிடும் வண்ணம் பேச்சாலும் எழுத்தாலும் பணியாற்றியதற்காக கழகம் என்ன விதத்தில் நன்றியைத் தனது கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்வது?

ஒன்று இருக்கிறது. கற்கோட்டையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதிக்குக் கழகத் தோழர்கள் காட்டக்கூடிய நன்றியறிவிப்பு! தருமபுரித் தேர்தலில் கழகம் வெற்றி பெறவேண்டும் அந்தச் செய்தி செந்தேனாகி எத்தனை கொடுமை நிறைந்த தனிமைச் சிறையினையும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாக்கிடும். அந்த வெற்றிச் செய்தி, காடு மலை வனம் வனாந்திரங்களைக் கடந்து, காவல்கட்டு யாவற்றினையும் மீறி கருணாநிதியின் செவி சென்று மகிழ்ச்சி அளித்திடும். அப்போது முதியவர் முதலமைச்சர் பக்தவத்சலனார் யோசிப்பார், இதுவும் பயன்தரவில்லையே என்பதாக.

இந்த நோக்கத்துடன் கழகத் தோழர்களும் ஆதரவாளர் களும், தருமபுரி இடைத்தேர்தலில் கழகம் வெற்றி பெற உடனடியாக முனைந்திட வேண்டும்.

கவலையுடன் தம்பி என்னைத் தருமபுரி பற்றிக் கேட்டபோது, நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறிவிட்டு வந்திருக்கிறேன், தருமபுரியில் கழகம் நிச்சயம் வெற்றிபெறும் என்று.

அந்த வெற்றியைப் பெற்றுத் தருவதைவிட, அடக்கு முறையால் தாக்கப்பட்டு நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைச் சிறையில், பாஞ்சாலங்குறிச்சிச் சீமையில், அடைக்கப் பட்டிருக்கும் கருணாநிதிக்குக் கழகம் தரக்கூடிய மகிழ்ச்சிப் பொருள் வெறெதுவும் இருக்க முடியாது.

அடக்குமுறையை வீசி அறப்போர் வீரர்களை அடக்கி விடவோ, அவர்தம் பாசறையை ஒழித்துவிடவோ முடியாது. இது மிக எளிதாக எவருக்கும் புரிந்திடும் உண்மை என்றாலும், அரசாள்வோர், அதிலும் தமது பிடி தளர்ந்து வருவதை உணர்ந்து பீதிகொண்டுள்ள நிலையிலுள்ள அரசாள்வோர், உண்மையினை மறந்துவிடுகின்றனர்.

சிறைக்கோட்டம் தள்ளப்படும் இலட்சியவாதிகளோ, உறுதி பன்மடங்கு கொண்டவர்களாவது மட்டுமல்ல, தன்னைப் பற்றிய எண்ணம், தனது நலனைப் பற்றிய நினைப்பு, தனது குடும்பம்பற்றிய எண்ணம், இவைகளைக்கூட மறந்துவிடவும், தான் தனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவே என்ற நெறியினை உணர்ந்து மகிழ்ந்திடவும், தன்னைப்பற்றிய எண்ணம் எழுப்பி விடும் ஆசை, அச்சம், கவலை, கலக்கம், பிரிவாற்றாமை போன்ற உணர்ச்சிகளை வென்றிடவுமான ஒரு துறவு நிலையைப் பெற்றளிக்கிறது, இதுபற்றியே ஆன்றோர், சிறைச்சாலையை அறச்சாலை என்றனர்.

பாளையங்கோட்டைச் சிறைவாயிலில், கண்டேன், இந்தப் பேருண்மையை உணர்த்தும் எழுத்தாரத்தை. அங்குப் பொறிக்கப்பட்டிருப்பது என்ன? "தன்னை வெல்வான் தரணியை வெல்வான்!''

அண்ணன்

4-4-1965