அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


உன்னால் முடியும்! - (2)
2

எனக்குக் கழகத்திடம் பயம் இல்லை என்கிறார்; யாரும் இவரைப் பார்த்துக் கேட்கக்கூட இல்லை, கழகத்தைக்கண்டு பயமா உங்களுக்கு என்று; இவராகவே சொல்லுகிறார், ஏன்? இவரை மக்கள் பார்த்திடும். பார்வையே என்னமோ போல் இருக்கிறது இவருக்கு. நான் ஒன்றும் பயப்படவில்லை என்று கூறி, தனது "தைரியத்தை' வார்த்தை அளவிலாவது மெய்ப்பித்துக் காட்ட வேண்டிய நிலைக்குத் துரத்தப்படுகிறார்.

மற்றவர்களுக்குத் தைரியம் வருவிக்கும் நோக்கத்துடன்,

இந்தத் தடவை கழகத்தை ஒழித்துக் கட்டிவிடுவேன் என்றும்,

இந்தத் தடவை கழகத்துக்கு ஐந்து இடங்களுக்கு மேல் கிடைக்காது என்றும்,

கழகம் ஆடி அடங்கிவிட்டது. அலுத்துக் கீழே விழுந்து விட்டது என்றும், பேசுகிறார்.

அவ்வளவு பலம் இழந்துவிட்ட, மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் கழகம் இருப்பது உண்மை யானால், ஏன் இவர் நாள் ஒன்றிக்கு ஊர் பத்து என்ற கணக்கில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். பேசுகிற கூட்டம் அத்தனை யிலும், கழகம் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும், விளக்கக் காணோமே!

உருட்டி மிரட்டிப் பேசுகிறார், அடிபணிவோர் அகமகிழ; உள்ளமோ கொதிப்படைந்து கிடக்கிறது; நமக்கு இருப்பது போன்ற பதவிபலம், பணபலம், பத்திரிகைபலம் அற்றவர்கள், இந்த அளவுக்கு நம்முடன் போரிடுகிறார்களே, களத்திலே எந்த முனையிலும் அவர்கள் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்களே, அவர்களுக்கு மக்களின் ஆதரவு ஒவ்வொரு கட்டத்திலும் வளர்ந்தபடி இருக்கிறதே, அந்த வளர்ச்சியைக் குலைக்க நாம் எடுத்துக் கொண்ட சூழ்ச்சித் திறன் அவ்வளவும் பயனற்றுப் போயினவே, இப்படியே நிலைமை வளர்ந்தால், என்ன ஆகும், நாம் எங்குத் துரத்தப்பட்டு விடுவோம் என்று எண்ணுகிறார்; எரிச்சல் மூளுகிறது; அரிப்பைப் போக்கிக் கொள்ள, தேய்த்துக்கொள்கிறார், வேகவேகமாக.

தம்பி! இந்தத் தடவை விடமாட்டேன், வேரோடு பறித்துக் கீழே போட்டுவிடுவேன் என்று வீரம் பேசுகிறாரோ, இதுவாவது புத்தம் புதிதா? இல்லை! பழைய பல்லவி!!

1957-லும் இதைத்தான் சொன்னார்; 1962-லும் இதையே தான் சொன்னார்; இப்போதும் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலின்போது கூட இதனைச் சொன்னார். தெருத்தெருவாகக் கூட்டம் போட்டு மட்டுமல்ல, வீடுவீடாக நுழைந்து. நடந்தது என்ன? நாடறியும்!

ஆகவே, தம்பி! அவர் தூற்றுவது பற்றி எப்படி நான் கவலைப்படவில்லையோ அதுபோலவேதான் அவர் மிரட்டு கிறாரே இந்தத் தடவை ஒழித்துக் கட்டி விடுவேன் என்று, அதற்காகவும் நான் கவலைப்படவில்லை; தேவையுமில்லை.

அத்தனை பெரிய இடத்தைப் பிடித்துக் கொண்டவர், அத்தனை பணபலத்தைத் திரட்டியவர், பத்திரிகைகளின் பிரசாரபலத்தைப் பெற்றுக் கொண்டவர், நம்மை எதிர்த்து நிற்பதற்காக, எவ்வளவு பாடுபட வேண்டி நேரிடுகிறது : காடு மேடு என்று பாராமல், பகல் இரவு என்று பாராமல், சுற்றிக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது என்பதைக் கவனிக்கும் போதுதான், களிப்பு பொங்குகிறது! கழகம் அவரை அத்தனை "தண்டால்' போடவைக்கிறது என்பதை எண்ணிப் பெருமிதமே கொள்ளச் செய்கிறது.

ஐந்தே இடங்கள் தானாம், தம்பி! நமக்கு! 1967லில் !

அவ்வளவு திட்டவட்டமாகத் தெரிகிறது நமது எதிர் காலம் - இந்த அரசியல் ஆருடக்காரருக்கு!!

ஆனால், அவர் அலைவதையும் அரற்றுவதையும் பார்த்தால், எப்படி இருக்கிறது?

கொண்டுவா கூர்மையான வாள்! என்று கேட்டிடும் வீரனை எந்த எதிரியை வீழ்த்த? என்று நண்பன் கேட்க, இதோ இதை வெட்டிடத்தான் என்று கூறி, உருட்டி வைக்கப்பட்டுள்ள வெண்ணெய் உருண்டையை அவன் காட்டினால்? கை கொட்டிச் சிரிக்க மாட்டார்களா! அந்தச் சிரிப்பொலி எழுப்பித்தான் மக்கள் பழமொழி, சமைத்தளித்தனர், வெண்ணெய் வெட்டிச் சிப்பாய் என்பதாக.

ஆத்திர மூட்டத்தக்க முறையிலே பேசிக்கொண்டு வருபவர் - ஏன் சில கட்சிகள் காங்கிரசிடம் கோபித்துக்கொள்கின்றன என்ற ஒரு கேள்வியை அவரே எழுப்பி, அதற்கு அவரே விடை வீசி மகிழ்ந்து கொள்கிறார்- ஏன் காங்கிரசிடம் கோபம் கொள்கிறார்கள்?

ஊரிலெல் லாம் மின்சார விளக்குப் போட்டிருக்கிறோமே, அதனாலா. பள்ளிக்கூடங்களை நிறையக் கட்டியிருக்கிறோமே. அதனாலா? ஏழைகள் படிக்க வசதிசெய்து கொடுத்திருக்கிறோமே, அதனாலா? என்ன காரணத்துக்காகச் சில கட்சிகள் காங்கிரசிடம் கோபித்துக் கொள்கின்றன என்று கேட்கிறார்.

நன்றி கெட்டவர்கள்! புத்தி கெட்டவர்கள்! ரயிலே இவர்களுக்கு இப்படி இருக்குமென்று நாம்தான் காட்டினோம்!! ஆறுகளைக் கட்டுப்படுத்தினோம்! ஆஸ்பத்திரிகள் அமைத்தோம்! நெடுஞ்சாலைகளைப் போட்டுக் கொடுத்தோம்; கல்விச் சாலைகளையும் விஞ்ஞானக் கூடங்களையும் அமைத்தோம்; விஞ்ஞானக் கூடங்களையும் அமைத்தோம்; மின்சாரத்தைக் கொடுத்து இருளை ஓட்டினோம்; இயந்திரங்களைத் தந்து உழைப்பின் கடினத்தைக் குறைத்து உற்பத்தி பெருகிடச் செய்தோம். இவ்வளவும் செய்த நம்மிடம், ஏன் இவர்கள் கோபம் காட்டுகிறார்கள் என்று வெள்ளைக்காரன் கூடத்தான் வெகுண்டுரைத்தான்!

பாலமும் பள்ளிக்கூடமும், பகல் உணவும், சீருடையும், மருத்துவ மனையும் பிறவும், இவர் தந்தாராம்!! ஆகவே, தயாபரனே! போற்றி போற்றி என்று மக்கள் இவர் தாள் பணிந்து, தூபதீப நைவேத்தியம் படைத்துப் பூஜை செய்திட வேண்டுமாம்! இது இவருடைய அரசியல்!! இதற்கு அடிவருடிகள் வாய் பிளந்து கொண்டு நிற்கிறார்கள்.

கட்டினார், வெட்டினார், திறந்தார், ஊட்டினார் - சரி - எதனால். வரிப்பணம் கொட்டிக் கொட்டிக் கொடுக்கிறார்களே மக்கள், அதனால்.

இப்போது இவர் கட்சியை எதிர்த்து மக்களிடம் ஆதரவு கேட்கும் கட்சிகள் வெற்றி பெற்றதும்

பாலங்களை உடைத்தெறிவோம்
பள்ளிக்கூடங்களை இடித்துத் தரைமட்ட மாக்குவோம்
மருத்துவ மனைகளை மூடிவிடுவோம்

என்றா பேசுகின்றன! பைத்தியக்கார விடுதியிலே உள்ளவன் கூடப் பேசமாட்டான் அதுபோல.

மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி வாங்கி ஊழல், ஊதாரிச் செலவு, நிர்வாகச் சீர்கேடு, பாதகர்களுக்குப் பங்கு என்ற முறையில் பாழாக்கியதுபோக மிச்சம் இருப்பதைக் கொண்டு, நீங்கள் கட்டிடும் பாலம் பள்ளிக்கூடத்தைவிட அளவிலும் சரி, தரத்திலும் சரி, உயர்வானதாக நாங்கள் அமைத்துத் தரமுடியும் என்று கூறித்தான் மக்களிடம் ஆதரவு தேடுகின்றன.

இதுதான் ஜனநாயக முறை! பள்ளிக் கூடம் கட்டும் கட்சி என்று ஒன்றும், பள்ளிக்கூடத்தை இடித்திடும் கட்சி என்று மற்றொன்றுமா இருக்கிறது? இல்லை! இதனையா மக்கள் உணரமாட்டார்கள்! ஆனால், இவர் உயர் இடத்திலே இருந்து பேசுவதால், வாய்திற வாமல் கேட்டுக்கொள்கிறார்கள். அச்சம் அவர்களின் வாயைத்தான் பூட்டிவிடுகிறது, சிந்தனையை அல்ல!

உணர்வு பெற்ற மக்கள், பாலம், பள்ளி, படிப்பகம், மருந்தகம், மின்சாரம், பகலுணவு என்பனவற்றைத் தரவல்லது காங்கிரஸ் ஒன்றுதான் என்று நம்பிடின், எப்படி நூற்றுக்கு அறுபது என்ற அளவு மக்கள் மற்றக்கட்சிகள் இதே காரியத்தை இதைவிடத் திறமையாகச் செய்வார்கள் என்று நம்பி, ஓட்டு அளித்திருக்க முடியும்! அளித்திருக் கிறார்களே, என்ன பொருள் அதற்கு!

காமராஜர் பேசிடும் அரசியல், அபத்தம் என்பதுதான் மக்கள் காட்டிய போக்குக்குப் பொருள். வேறென்னவாக இருக்க முடியும். ஏன் இவர்கள் கட்டிய பாலம் பள்ளிக்கூடம் ஆகியவற்றைக் கண்ட பிறகும் காங்கிரசை எதிர்த்துப் பெரும்பான்மையினர் ஓட்டளித்தனர்?

ஆளும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியைவிடத் திறமையாக மற்றக் கட்சிகள் மக்களுக்குத் தேவையான நலன்களைச் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையால்!

தம்பி! மக்கள் நம்மிடம் இவ்விதமான நம்பிக்கையைத் தெரிவித்திருக்கும்போது, நாம் இவருடைய பேச்சை மதித்திடத் தேவையில்லை, அல்லவா!

பள்ளிக்கூடம் பார், பாலம் பார், பகலுணவு பார், மருந்தகம் பார், மின்விளக்கு பார்! - என்று இவர் காட்டுகிறார்; மக்களோ- பள்ளிச் சிறுவர்களின் ஏழ்மை நிலையைப் பார்!

ஆசிரியர்கள் படும் அவதியைப் பார்!
நடுக் கொள்ளைக்காரன் நடத்தும் தர்பாரைப் பார்!
நோயினால் நலிந்திடும் ஏழையைப் பார்!
வேலையற்றோர் படும் வேதனையைப் பார்!
ஊழலும் ஊதாரித்தனமும் பெருகி விட்டதைப் பார்!
கள்ளமார்க்கட்டைப் பார்!
கொள்ளை இலாபம் அடிப்பவனையும் பார்!
அவனுடன் கூடிக் குலாவும் காங்கிரஸ் தலைவர்களையும் பார்!
நாங்கள் கொட்டிக் கொடுக்கும் வரித் தொகையையும் பார்!
எமக்குக் கிடைத்திடும் வசதி எவ்வளவு குறைவு என்ற கணக்கையும் பார்!
பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதைப் பார்!
பஞ்சை, பராரியாகிடும் பரிதாபத்தையும் பார்!

என்று கூறுகிறார்கள். என்ன பதில் சொல்லுவது? என்ன பதில் சொல்கிறார்.

ஊரிலே ஏழடுக்கு மாடிக் கட்டடம் பல இருக்க அவைகளைக் கண்டு பாராட்டாமல், ஊர்க் கோடியிலுள்ள சாக்கடையைப் பார்த்துவிட்டு முகத்தைச் சுளித்துக் கொள்ளுவதா என்று கேட்டாராம்!

சாக்கடை ஓரத்திலே இருந்து தீரவேண்டிய நிலையிலே தள்ளப்பட்டவர்கள், வேறு இடத்திலே இருக்கும் ஏழடுக்கு மாளிகையை எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறாரா?

சேற்றிலே உழல்வார்கள் ஏழைகள், ஐயா! சேறு! என்று கூறினால், இதனையே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள், வேறு இடத்தில் பன்னீரில் குளித்துவிட்டு, பரிமளகந்தம் பூசிக்கொண்டு, பால் பாயாசம் சாப்பிட்டுவிட்டு, பஞ்சணையில் படுத்துக் கொண்டு சுகமாக இருக்கிறார்கள், அதனை எண்ணித் திருப்திப் பட்டுக்கொள் என்றா கூறுவது?

அவ்விதமான புத்திமதி கூறுகிறார், சோஷியலிசம் என்ற புனிதக் கருத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாகப் பேசுபவர்.

கை கால் ஊனம் இல்லை! காது செவிடு இல்லை. கண்ணிலே மட்டுந்தான் "பூ' விழுந்து விட்டது; பார்வை இல்லை; இருந்தால் என்ன; உடலிலே மற்றப் பகுதிகள் ஒழுங்காக இருக்கின்றன, அதுபோதும்; குறைபட்டுக் கொள்ளாதே; கண் பழுதானால் என்ன, காலைப் பார், கையைப் பார், காதைப் பார், என்று கூறிடுபவரை, பாராட்டவா செய்வார்கள். பாராட்டச் சொல்கிறார், இதுபோலப் பேசிடும், இவரை!!

காங்கிரசாட்சி மக்களிடம் கசக்கிப் பிழிந்து வசூலித்திருக்கும் வரிப் பணத்தின் அளவைக் கணக்குப் பார்க்கும்போது, அந்த ஆட்சி மக்களின் வசதிக்காகச் செய்திருக்கிற ஏற்பாடு மிக மிகக் குறைவு என்பது நமது குற்றச்சாட்டு!

காங்கிரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆட்சியை, மக்கள் மற்றவர்களிடம் ஒப்படைத்தால், காங்கிர சாட்சியால் ஏற்பட்டுள்ள கேடுகளை நீக்குவதுடன், ஏழைகளைக் கசக்கிப் பிழியும் வரிகளைக் குறைப்பதுடன் நலன்கள் மிகுதியாகும்படி செய்யமுடியும் என்பது நாம் அளிக்கும் உறுதிமொழி.

இதுபோல மக்களிடம் கூறிடும் உரிமையைத் தருவதே ஜனநாயக முறை.

ஒருமுறை மற்றவர்களிடந்தான் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துப் பார்ப்போமே.

என்ற முடிவெடுக்க வேண்டிய பொறுப்பும் உரிமையும், திறமையும் பெற்றவர்கள் பொதுமக்கள். அவர்களிடம், தமது கட்சியினர் ஆட்சி நடத்திச் சாதித்தவைகளை எடுத்துக் கூற வேண்டியவர் காமராஜர்.

மற்றவர்களுக்கு நாடாளும் தகுதியும் திறமையும் இல்லையென்று கூறுவது துடுக்குத்தனம். ஜனநாயகப் பண்பு மேலோங்கியுள்ள நாட்டினிலே அத்தகைய அரசியல் துடுக்குத்தனத்தை அனுமதிக்க மாட்டார்கள்.

இங்கு மக்கள் மனத்திலே, அதிகாரத்திலுள்ளோர் மூட்டிவிடும் அச்சமும், அவிழ்த்துவிடும் அடக்கு முறையும், இத்தகைய அரசியல் துடுக்குத்தனம் நடமிட இடமளித்து விடுகிறது.

ஆனால், மெள்ள மெள்ள அந்த "அச்சம்' கலைந்து கொண்டு வருகிறது. கேள்விகள் பிறந்துவிட்டன! கண்டனக் கணைகள் பறந்தபடி உள்ளன. விழிப்புணர்ச்சி தோன்றிவிட்டது.

இதை ஓரளவு உணருவதால்தான் காமராஜர், தூற்றித் துளைத்திடலாமா என்ற நப்பாசையைக் கடைசிக் கருவியாகக் கொண்டு பயணம் நடத்தி வருகிறார்.

நாடாள எமக்கன்றி வேறு எவருக்கும் தகுதி இல்லை என்று பேசிப் பார்க்கிறார்.

கடவுள் ஒழிப்பு, பிராமண எதிர்ப்பு என்று எதையாவது செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, ஏன், நாடாள விழைகிறீர்கள் என்று நம்மைக் கேட்கிறார்.

அதனைக் கண்டதால்தான் தம்பி! எனக்கு, நந்தனாரைப் பார்த்து வேதியர் கேட்டதாகப் பாடுகிறார்களே, அந்தப் பாடல் நினைவிற்கு வந்தது.

மற்றொன்றும் புரிந்தது. இவ்வளவு வசதிக் குறைவுகளுக்கு இடையிலேயும், நாம் ஏற்படுத்தி வைத்திருக்கிற மக்கள் எழுச்சி, காமராஜரை இவ்வளவு வேலை வாங்குகிறதே, தரக்குறைவாகப் பேசியாவது பார்க்கலாம் என்ற நிலைக்குத் துரத்திவிட்டிருக் கிறதே, நாம் இன்னமும் முழு அளவில், பணியாற்றினால் எவ்வளவு வேகமாகக் காங்கிரஸ் எதேச்சாதிகாரம் வீழ்ந்துபடும் என்பதும் புரிகிறது. அது புரிவதால்தான் தம்பி! உன்னைக் கேட்டுக்கொள்கிறேன்,

நிலைமை மிக நன்றாக இருக்கிறது.

உன் ஆற்றல் தக்க பயனைத் தந்திருக்கிறது.

உன் பணி காரணமாக எழுந்துள்ள விழிப்புணர்ச்சி காமராஜரைக் கடுமையாக வேலை வாங்குகிறது.

காங்கிரசாட்சியின் கேடுகள் பற்றி நீ தந்திடும் விளக்கங்களை மறுத்திட வக்கற்ற நிலையினில் காமராஜர், கடுமொழியும் இழிமொழியும் தவிர வேறு எதனையும் உமிழ முடியாத நிலைக்கு வந்துவிட்டார்.

ஆகவே, மேலும் உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் பணியாற்றிடப் புறப்படு என்பதாக.

கழகத் தோழர்கள் சீரிய முறையில் பணியாற்றுகின்றனர்; மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆனால், ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்,

மற்ற எந்தவிதமான ஆசாபாசங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பணியாற்றுகிறேனா?

என் ஆற்ற-ன் முழு வேகத்தையும் பணியாற்று வதிலே இணைத்திருக்கிறேனா?

தொடர்ந்து பணியாற்றுகிறேனா? தோழர்களை அணி திரட்டிக் கூட்டாகப் பணியாற்றுகிறேனா?

ஆத்திரப்படாமல், பொறுப்புணர்ச்சியுடன் பணியாற்றுகிறேனா?

ஜனநாயகக் கடமை உணர்ச்சியுடன் பணியாற்றுகிறேனா?

மக்களுக்கு நல்லாட்சி கிடைத்திடச் செய்யும் மகத்தான தொண்டு என்பதை உணர்ந்து பணியாற்று கிறேனா?

தம்பி! இந்தக் கேள்விகள், ஒருவரை மற்றொருவர் கேட்டுக் கொள்வதற்காக அல்ல; ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்வதற்காக. ஏன் இத்தனைக் கூறுகிறேன் என்றால், தம்பி! உன்னால் இப்போது செய்திடுவதைக் காட்டிலும் அளவிலும் தரத்திலும் உயர்வான பணியாற்றிட முடியும். நாளை! நாளை என்று எண்ணிக் கொண்டிருந்திடக் கூடாது. இன்று இன்று! - என்ற எழுச்சியுடன் புறப்பட்டாக வேண்டும். இழிமொழி உமிழ்ந்திடுகிறார் இடம் பிடித்துக் கொண்டவர்; அரசியல் ஆணவத்தை அடக்கிட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் உன்னிடம் கூறுகிறேன்; முறையிடுகிறேன்.

அண்ணன்,

8-5-66