அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வாகையூர்
2

மெய்காப்பாளர்களும் காவலிருக்கின்றனர்.

காலத்தைக் கணக்கிட்டு, "நாழிகை' கூறி நின்றனர், சிலர்.

இருக்கையில் உள்ளான் மன்னன் - நடுநிசிக்குப் பிறகும் உறக்கம் கொள்ளவில்லை! பள்ளி அறை அல்லவே! பாசறை! அடர்ந்த காட்டினை அழித்து, அமைக்கப்பட்ட பாசறை! அங்கு உலவிய கொடிய மிருகங்களையும், கொடியோரையும், அழித்தும் அகற்றியும், முள்வேலி அமைத்துக் காவலாக்கிய நிலையில் உள்ள பாசறை!

உறக்கம் கொள்ளாதது ஏன்? கடும்போர் நடந்திருக்கிறது! அதிலே படுகாயமுற்றனர், தன் படையினர்! அதனை எண்ணி, வெற்றிபெற்று, தன் கொற்றத்தின் சிறப்பினை நிலைநாட்டிட, அவ்வீரர், பட்ட கஷ்டங்களை எண்ணி, உள்ளம் உருகுகிறான் மன்னன்!

போர்வீரர்கள் குறித்து மட்டுமல்ல, பகைவரின் தாக்கு தலால் புண்பட்ட, கரிபரி குறித்தும் கவலையுறுகிறான்! ஒரு கரம் படுக்கையில்! மற்றோர் கரம்கொண்டு கண்களைத் தடவிக்கொண்டுள்ளான் மன்னன்!

காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் அளித்துள்ள முல்லைப்பாட்டு, பாசறையில் இருந்த மன்னனைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

வீரத்தையும் வீழ்ந்துபடாக் கொற்றத்தையும் தமிழர் பெற்றிருந்த காலை, பாசறையில் இது நிலைமை.

தமிழகத்தைக் காட்டிடும் இக்காட்சியை, நினைவிற் கொள்ளும் நாம், மறந்துகிடப்போருக்கு நினைவூட்டும் நாம்; எங்ஙனம், நாம் மேற்கொண்டுள்ள பயணத்திலே, வழி நெடிதா, கொடிதா என்பதுபற்றிக் கலங்க முடியும்?

தம்பி! நெடுஞ்செழியன் பாசறையில் இருந்த "பாங்கு' காண்போம்! நக்கீரர், காட்டுகிறார், நெடுநல்வாடையில்.

பாசறையில், தூக்கம் வரவில்லை, பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு. களத்திலே, களிறுகளின் துதிக்கைகளை வெட்டி வீழ்த்திக் கடும்போரிட்டுக் களைத்துக் கிடக்கின்றனர் வீரர்கள்!

வாடைக்காற்று அடித்துக்கொண்டிருக்கிறது.

விளக்கின் சுடர்கள், வாடை காரணமாகத் தென் திசையாகச் சாய்ந்து காட்டுகின்றன!

பாண்டியன் நெடுஞ்செழியன் தன் தோளின்மீதுள்ள ஆடை நழுவிடுவதை, இடப்பக்கத்தில் இறுக்கிப் பிடித்தபடி, பாசறைப் பகுதியில், விழுப்புண்பெற்றுப் படுத்துக் கிடக்கும் வீரர்களைச் சென்று பார்க்கிறான்.

வேம்பு அணிந்த வேந்தன், தன் கொற்றத்தின் ஏற்றத்தைக் குறைத்திடத் துணிந்த மாற்றாரின் கொட்டத்தை அழித்திட, களம் புகுந்து கடும் போரிட்டு, விழுப்புண்பெற்று, வீரராய்த் திகழ்ந்திட இத்துணை ஆற்றலர்கள் உள்ளனர் என்பதைக் காண்பதால்போலும், முகமலர்ச்சியுடன் காணப்படுகிறான்!

இது மன்னன் நிலை - பாசறையில்.

அழகான அரண்மனை! அந்தப்புரம்! படுக்கை அறை!

யானையின் கொம்பினால் வேலைப்பாட்டுடன் செய்யப் பட்ட கட்டில்,

தந்தக் கட்டில்தானே என்று கருதிவிடக்கூடாது, தம்பி! நக்கீரர் வெகுண்டெழுவார்! அந்தக் கட்டில், செல்வ நிலையை மட்டும் காட்டுவது அல்ல.

போரிலே ஈடுபட்டு இறந்துபட்ட, யானையின் கொம்புகள்! நாற்பது வயதானதாக இருக்குமாம், யானை!

முத்தாலே சாளரங்கள்! புலி வடிவமும், பூவேலைப்பாடு முடைய திரைகள்! முல்லையும் பிற மலர்களும் அன்னத்தின் தூவியும் தூவப்பட்ட படுக்கை!

அதிலே, படுத்திருக்கும்போது, துயில் வரவில்லை!

அவள் அடியினை, அழகு மகளிர், மெல்ல வருடுகிறார்கள், துயில் கொள்ளட்டும் என்று; பயன் இல்லை!

தலைவன் இல்லை, துயிலும் இல்லை.

தலைவன் இல்லாததால், துயில் மட்டுமா இல்லை! மார்பிலே முத்து மாலைகள் இல்லை! கரங்களிலே பொன் மணி வளைகள் இல்லை; சங்கு வளையல்களே உள்ளன! நூற்புடைவை தான் - அதிலும் மாசு நிரம்ப! அணிபணி அகற்றிவிட்டு, பிரிவாற்றாமையால், பெருந்துயர் உற்று, கண்களிலே துளிர்த்திடும் நீர்த்துளியைத் தன் கைவிரலாற் போக்கி, கலங்கித் தவிக்கிறாள், அரசி.

தந்தக் கட்டிலில் படுத்துத் துயில்கொள்ளாது துயரம் மிகுந்து, தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்த அரசியைப் பிரிந்து தான், பாண்டியன் நெடுஞ்செழியன் பாசறையில் உலவிக் கொண்டிருக்கிறான்.

"நெடுநல்வாடை' காட்டும் பாடம், மறக்கப்போமோ!!

நமது பொதுச் செயலாளருக்கு நெடுஞ்செழியன் என்ற பெயர் அமைந்திருப்பதும், அவரும் பிரிவு பற்றிய கலக்கமற்றுத் தான் நமக்காக அரும்பணியாற்றுகிறார் என்பதனையும் எண்ணும்போது, எப்படி இருக்கிறது, உனக்கு, எனக்குத் தம்பி! செருங்கரும்பின் சாற்றிலே, நம் குழந்தையின் உமிழ்நீரும் கலந்திருப்பதுபோல் இனிக்கிறது!

களம் செல்வதெனின், காதலையும் மறந்திடும் ஆற்றல் கொண்டவர், தமிழர்.

காதலின்பம் பற்றிய கருத்தற்றவரோ, மனை மாண்பு அறியாதாரோ, எனின், அகம் கேலி செய்யும், அதற்கென்றே ஓர் களஞ்சியமாக நிற்கிறேன், அறிவிலிகாள்! ஏன் உமக்கு, அர்த்தமற்ற ஐயப்பாடு என்று கேட்கும்.

வறிய நிலத்திலே, உள்ளது நெரிஞ்சி. சிறிய இலைகள் கொண்டது; கண்ணுக்கினிய பூக்கள்கொண்டது. பூ உதிர்ந்ததும், காய் காய்க்கும், அது முள்ளாகிக் காலில் குத்தும்.

நெரிஞ்சியோ, புதுமலர் தருகிறது. கண்ணுக்கு இனிமை கிடைக்கிறது.

அதே நெரிஞ்சியே முள்ளும் உதிர்க்கிறது, காலில் தைக்கிறது. இதனை எடுத்துக் காட்டி, என் காதலர் எனக்கு இனியது செய்தும் மகிழ்விக்கிறார்; அவரே பிறகு இன்னலை விளை விக்கிறார் எனைப் பிரியும்போது; நெரிஞ்சிபோல!! - என்று பிரிவுத்துயரை விளக்கிடத் தமிழணங்குக்குத்தான் தெரிகிறது!

நோம்என் நெஞ்சே!
நோம்என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற
சிறிஇலை நெரிஞ்சி
கட்குஇன், புதுமலர்,
முள்பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல், நோம்என் நெஞ்சே!

கண்ணுக்கு இனிமை தரும் புதுமலர் கிடைப்பதும் நெரிஞ்சியில்! - முள் பயந்து குத்துவதும் நெரிஞ்சியால்! என்று இயற்கை உவமையைக் காட்டி தன் உள்ளத்து நிலையை விளக்கிடும் தமிழணங்கு காண்கிறோம்.

இத்துணை அளவுக்குப் பிரிவாற்றாமை ஏற்படுகிறது என்பது அறிந்துந்தான், களம் சென்றனர் - உரிமை காத்திட, மரபு வாழ்ந்திட!

களம் செல்லாக்காலை, எத்துணை கவர்ச்சி கண்டனர் காதலில்!!

கார் காலம் கண்டான் தலைவன்! மயில் ஆடுகிறது! முல்லை மலருகிறது! உடனே, தலைவியின் நினைவு வந்து குடைகிறது. மேகத்தைவிட விரைந்து வருகிறான்; காதலியிடம் கூறுகிறான்.

மயிலைக் கண்டேன், உன்னைப்போலவே இருந்தது!

முல்லை மலர்ந்திருக்கக் கண்டேன் - உன்னை எண்ணினேன்!

ஒளி பொருந்திய நெற்றியை உடைய அரிவையே! விரைந்து வந்தேன்! - என்று காதல் பொங்கிக் கவிதை வடிவாகிறது!

நின்னே போலும்
மஞ்ஞை!

என்று "ஐங்குறுநூறு' அழகாகக் கவிதை அளிக்கிறது.

காதலில் இத்துணை ஈடுபாடும், அதன் மாண்பினிலே சிறந்த பற்றும் கொண்டோரெனினும், நாடு காத்திடப் போர் எழுந்ததெனின், நள்ளிரவிலும் தூக்கம் வராமல், பாசறையில், பணியாற்றினர் தமிழர். அவர் வழிவந்தோம் - பழிச்சொற் களாகவா மாறிவிடுவது! வேண்டாம், தமிழர்காள்! வேண்டாம்! வீழ்ந்துபடுவதாயினும், வெஞ்சமர் புரிந்தான் பிறகு என்று உறுதிப்பாடு கொள்வோம்.

தமிழகம், தனி அரசோச்சிய நாட்களிலே, வீரம் குன்றாமல், அறமும் அடுபோரிற் காட்டவேண்டிய ஆற்றலும் குறைவற இருந்ததால், கொற்றம் தழைத்தது, இயற்கையுடன் உழைப்பும் கலந்து, வளம் கொழித்திருந்தது! வாரி வாரி வழங்கிடவும், வண்ணம் பல கண்டிடவும், வாணிபத்தில் சிறந்திடவும், இலக்கியச் செல்வத்தை ஈன்றெடுத்து வளர்த்திடவும் முடிந்தது.

கடலிலே கிடக்கிறது, தம்பி, காவிரிப்பூம்பட்டினம். எனினும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் தந்துள்ள பட்டினப் பாலையில், அந்நகர் அழியாது நின்று தன் அழகை எடுத்தளிக்கிறது, காண்போம்: இதோ பார் சோழ நாடு!

மாரி பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி ஓடுகிறது.

கழனிகளில் விளைச்சல் அமோகமாக!

கழனிகளில், கரும்பை அடும் ஆலைக் கொட்டில்கள் உள்ளன; ஆதலால் அந்த நெருப்பினால் ஆம்பல் பூக்கள் கருகிவிடுகின்றன.

நெற் கதிர்களைத் தின்று தெவிட்டிப்போன நிலையில் எருமைக் கன்றுகள் துயிலுகின்றன!

கதிர்களை, அவை தின்று தீர்த்ததால், குறை வந்ததுற்றதோ என்றால், அதுதான் இல்லை! நெற்கூடுகளின் நிழலிலேதான், எருமைக்கன்றுகள் துயில்கொள்ளுகின்றன!

தெங்கு, வாழை, கமுகு, மஞ்சள், மா, பலா, இஞ்சி இவை, எங்கும்!

நெல்லை உலர்த்தி இருக்கிறார்கள் வீட்டு வாசலில்,

கோழிகள் தின்ன வருகின்றன.

அந்தக் கோழிகளை, மகளிர் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டுகிறார்களாம்!

இந்த வளம் உள்ளது சோழநாடு!

இங்கிருந்து, கடல் கடந்து சென்றுள்ளனர் தமிழர், இற்றை நாளில், சோற்றுக்கு இங்கு வழியற்று!!

இனி, காவிரிப்பூம்பட்டினம் காணப் போவோம்.

உப்பு விற்றுவிட்டு அதற்கு ஈடாக, நெல்கொண்டு வந்த படகுகள் வரிசையாகக் கட்டி நிற்கவைக்கப்பட்டுள்ளன.

சோலைகள், பொய்கைகள், ஏரிகள்!

மதில் சூழ்ந்த நகரம்!

மதிலின் வாயிலில் இரட்டைக் கதவுகள்!

மதிலிலே, புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

சோறிடும் சாலைகள் ஏராளம்!

அங்கு வடித்த கஞ்சி ஆறென ஓட, அதிலே ஏறுகள் புகுந்து சண்டையிட, சேறாகி, பிறகு உலர்ந்து, புழுதியாகிறதாம்!

கடல் வழி வந்த குதிரைகள்
நிலவழி வந்த மிளகுப் பொதிகள்
இமயச் சாரலின் மணியும் பொன்னும்,
குடகு மலைச் சந்தனமும், அகிலும்,
தென்கடல் முத்து
கீழ்க்கடல் பவளம்
ஈழ நாட்டுப் பொருள்
காழக நாட்டுப் பொருள்

இவைகளெல்லாம் மலைமலையாகக் குவிக்கப்பட் டிருந்தன; ஒவ்வோர் நாளும் விழாக்கோலமாம்! ஆடலும், பாடலும் அழகியதாய் அமைந்திருந்தனவாம்! கடலடி சென்று விட்டது காவிரிப்பூம்பட்டினம், கவிதை வடிவில் உள்ளது இன்றும்! நாமோ, நிலமிசை நின்றுவிட்டோம்; நீங்காப் பெரும் பழியை ஏற்று நிற்கிறோம்.

வளம், தமிழகமெங்கணுமே கொழித்திருந்தது, நன்கு தெரியத்தக்க கவிதைகள் இருந்துகொண்டு நம்மை இன்று, வேதனைக்கும், வெட்கும் நிலைக்கும் தள்ளியபடி உள்ளன! தமிழில் என்ன உண்டு என்றெண்ணிடும் பெருமதியேனும் பெற்றோமா! இல்லையே! தமிழின் இனிமையும், தொன்மையும், உள்ளத்தைத் தொட்டுத் தொட்டு அவ்வப்போது நம்மைத் தமிழனாக்கிவிடுகின்றன!

பெருங்குன்றூர்ப் பெரும்புலவரொருவர் பாடியுள்ள மலைபடுகடாம், நம்மைத் தம்பி, படாதபாடு படுத்துகிறது! இவற்றினை நாடாமல், தேடாமல், நமக்கென்று கிடைத்துள்ள இலக்கியக் கருவூலம் என்று எண்ணாமல் எல்லாம் ஒன்றுதான் - எதில் எது இருந்தால் என்ன - எது போனால் என்ன - என்று எண்ணிக்கொள்ளத்தக்க துணிவினைப் பெற்றிட முடியவில்லை - கல்லாமை எனும் செல்வத்தை நாம் பெறாததால்! சில பல கற்றுத் தொலைத்தோம் - கருத்துகள் குடைகின்றன! அக்காலத்து அழகும் இக்காலத்து இடரும் இழிவும் ஒருசேரத் தெரிகின்றன!

மலைபடுகடாம் காட்டிடும் வளம், காண்போம், வா, தம்பி!

மழை, வேண்டியபோது பொழிந்து வளமளிக்கிறது. எல்லாம் செழித்து வளருகின்றன!

விண்ணகத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கீழே சிதறிக் கிடப்பதுபோல, கொல்லைகளிலே, முசுண்டைக் கொடியின் பூக்கள் உள்ளன.

எள்ளு, எத்துணை வளமாக இருக்கிறது என்கிறார், புலவர்! ஒரு கைப்பிடியில் ஏழே காய்கள்தான் அடங்குமாம்! தொட்டதும் நெய் மணம்.

தினைக்கதிர்களைக் காண்கிறார் - கண்டதும், யானைக் கன்றுகள், விளையாடும்போது, துதிக்கைகளை ஒன்றோ டொன்று பிணைந்துகொண்டு நிற்பது நினைவிற்கு வருகிறது; அவ்விதம் உள்ளதாம், தினைக்கதிர்கள்.

அவரைப் பூக்கள் சிதறி இருப்பது, தயிர்க்கட்டிகள் வீழ்ந்து கிடப்பதுபோல் இருக்கிறதாம்!

கரும்பு கண்டதும், புலவர் களமே சென்றுவிடுகிறார்!

மிக வளர்ந்துள்ள கரும்புகள், காற்றினாலே ஒரு பக்கமாகச் சாய்ந்து அசைகின்றன. வேற்படைச் சேனைகள் ஓடுவதுபோலத் தெரிகிறது புலவருக்கு!

வேண்டாம், தம்பி, வேண்டாம்! அந்த வளமத்தனையும் விளக்க விளக்க, இன்றைய வெறிச்சிட்ட நிலை தரும் வேதனை அதிகப்படும்.

இன்று இடர் படர்ந்துள்ளது, இல்லாமை கொட்டுகிறது; கல்லாமை அரசாள்கிறது.

தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லை.

உயிர் தருகிறேன், உரிய பெயரை, உரிமைப் பெயரை, முன்னோர் நானிலமெங்கணும் சென்று பெருமிதத்துடன் கூறிய பெயரினைத் தாருமய்யா என்று கேட்டுக் கேட்டு, மடிந்தார், வீரத் தியாகி சங்கரலிங்கனார்! அதனாலென்ன - என்று கேட்டிடும் அன்பர் அரசாள்கிறார்!

இடருக்கு இடையிலும், மின்னிடும் செல்வமோ, சிலரிடம் சிக்கிச் சீரழிகிறது.

செப்பனிட்டுத் தீரவேண்டியன ஓராயிரம் உள்ளன!

எதற்கும், செயல்படும் உரிமைபெற்ற கொற்றம் வேண்டுமே, அது மறுக்கப்பட்டுக் கிடக்கிறது.

மனை அறம் கண்டு மகிழ்ந்திடும், இந்நாளில், தமிழகம் புதிய பொலிவு பெறுவதற்கான வழிவகை கண்டிடுவதே, எம் வாழ்வின் குறிக்கோள், என்று கொண்டிட வேண்டுகிறேன்.

அதற்கான பாசறையே தி. மு. க.

அதன் செயல்படுதிறன் உன் ஆற்றலைப் பொறுத்தது!

தம்பி, நீ விரும்பினால், இந்நாட்டைப் பொன்னாடு ஆக்க முடியும் - அதற்கு ஒன்று தேவை - பொன்னும் பொருளும் நமக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்று எண்ணும் தன்னலம் சுட்டெரிக்கப்படல் வேண்டும்.

முத்து முத்தாக, உன் திங்கள் முகத்தழகி, வியர்வையைச் சிந்தி, வெந்தழலின் வெப்பத்தைத் தாங்கிக்கொண்ட பிறகுதான், உனக்கு, இந்தப் பாற்பொங்கலும் பல்வகை உண்டியும் சுவை தந்து மகிழ்விக்கிறது! சுந்தரியின் "தியாகம்' எனும் தேன் அதிலே கலந்திருக்கிறது.

அந்த உண்மையை உணரச் செய்யும் உன்னத நாள் இன்று.

மகிழ்ந்திரு! இன்புற்று உரையாடு! எவரிடமும் இன்சொல் பேசு, ஏற்புடைய நாட்டவர் நாம் என்பதனை மறந்திடாது இருந்திடச் சொல்லி, மற்றையோர்க்கும் சொல்லு.

அனைவரும் சீரும் சிறப்பும் பெருக்கெடுக்கத்தக்க செல்வ ராய்த் திகழ, தமிழகம் புதிய பொலிவு பெறவேண்டும், அதற்கான முயற்சியிலே ஒரு கட்டம் இந்தப் பொதுத் தேர்தல், இதிலே ஈடுபட்டுள்ள தி. மு. க. வெற்றிபெறவேண்டும்; வாகையூர் சென்று வளமெல்லாம்பெற்று, தமிழர் வாழ்ந்திட, அது தான் வழி - என்பதனை எடுத்துக் கூறு.

வாழ்க தமிழர்!
வாழ்க தமிழகம்!

இந்த என், வாழ்த்துரையை உனக்கு இல்லத்தார் தரும் இன்சுவைப் பண்டங்களுடன் கலந்துண்டு; இன்புற்று இரு - என் அருமைத் தம்பி! இன்புற்று இரு! வாகையூர் சென்றிடத்தக்க வலிவினை, உள்ளத் தூய்மையினை, இவ்விழா வழங்கிடுமாக!

அண்ணன்,

14-1-1957