அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2
2

தம்பி! எதைச் செய்தேனும், எவ்விதமாக உருமாறியேனும், உள்ளதை மறைத்தல், இல்லது புனைதல், இளித்துக் கிடத்தல் எனும் எதைச் செய்தேனும், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இழிதன்மையை நாம் கொள்ளமாட்டோம்!

தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டுமே என்ற அரிப்புக்கொண்டு எதையும் செய்திடும் கீழ்நிலைக்கு நம்மைக் கெடுத்துக்கொள்ள மாட்டோம். மாறாக, தேர்தலில் ஈடுபடும் போதும், தூய்மை கெடாமல் பணியாற்ற முடியும் - கொள்கை வழுவாமல் குறிக்கோளுக்காகப் பாடுபட முடியும் என்ற பொறுப்புணர்ச்சியுடனேயே ஈடுபடப் போகிறோம்.

யாரைப் பிடித்தால் வெற்றி கிட்டும் - யாரைப் பிடிக்க என்ன வழி - இது அல்ல நாம் மேற்கொள்ளப்போகும் தேர்தல் முறை.

எந்தத் தாழ்நிலை சென்றால் வெற்றி கிட்டும், என்ன இழி செயல் புரிந்தால் வெற்றி ஏற்படும் என்ற எண்ணத்துக்கு ஏகபோக உரிமைக்காரராக, ஆளும் கட்சியே இருந்து போகட்டும்; நாம் தேர்தலையும் ஓர் தூய பணியாக்கிக் காட்டுவோம்.

எம்முறையில், தேர்தலில் ஈடுபட்டால், நாம் இதுபோது பெற்றுள்ள உள்ளத் திண்மையும் தூய்மையும் கெடாதிருக்கும் என்பதிலேதான் நாம் மிகமிக விழிப்பாக இருக்க வேண்டுமே யல்லாது முறைகேடுடையதாக இருப்பினும், நெறியை இழந்திடினும், வெற்றி கிட்டினால் போதும் என்ற எண்ணம் நம்மிடம் தலைதூக்கவிடோம்!

தேர்தல் வெற்றிகூட எனக்கு முக்கியமல்ல!

தேர்தலில் என் கட்சி தோற்றாலும் கவலைப்பட மாட்டேன்.

தேர்தலில் வெற்றிபெற வேண்டுமே என்பதற்காக எதையும் சகித்துக் கொள்ள வேண்டும், எதற்கும் இடமளிக்க வேண்டும், எவர் செய்யும் இழிசெயலையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, எவருக்கும் எழலாகாது.

தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, நாட்டில் தலைவிரித் தாடும் நாச சக்தியை, பலாத்காரத்தை, வெறியாட்டத்தை, ஒடுக்குவது, ஒழிப்பதுதான் எனக்கு முக்கியம்.

ஓகோ! இதை விளக்கவும் வேண்டுமா! கையாலா காதவர்கள்தானே, சிச்சீ! பழம் புளிக்கும் என்பார்கள். அதுதான் இது - என்று கூறுவர், சிலர், விளக்கம் பெறு முன்பு.

டாட்டாவும் பிர்லாவும் காத்துக்கிடக்க, ஐசனோவர் டாலர் மழை பொழிய, பிரிட்டன் பரிவு காட்ட, மாஜி மன்னர்கள் சாமரம் வீச, கோடி கோடியாகப் பணம் காலடியில் கொட்டிக் கொடுக்க, கனதனவான்கள் மந்தை மந்தையாக முன்வர, கொலு வீற்றிருக்கும் நேரு பண்டிதர் கூறுகிறார் இதுபோல்!! சென்ற கிழமை!!

அவர் எந்தச் சூழ்நிலையில் கூறினார் என்பது வேறு விஷயம். அவர் நோக்கம் உண்மையில் இதுதானா என்பதும் விவாதத்துக்கு உரிய பிரச்சினை. இதே கருத்தை, நேரு, வழக்கப்படி, வேகமாக மாற்றிக்கொள்ளாமலிருக்கப் போகிறாரா என்பதும் வேறு விஷயம். நாம் இங்கு கவனிக்க வேண்டிய தெல்லாம் ஒருவர், மிக முக்கியமான பிரச்சினைக்கு மனதில் இடம் கொடுக்கும்போது, தேர்தல் வெற்றிபற்றிக்கூட இரண்டாந்தரம், மூன்றாந்தாரமாகத்தான் எண்ணுவார் என்பதுதான்.

கற்கள் பறந்தன! கார்கள் நொறுங்கின!!

செருப்புகள் பறந்தன! பற்கள் உதிர்ந்தன!!

போலீசார் தாக்கினர்! மக்கள் போலீசைத் தாக்கினர்!

தலைவர்கள் புத்தி கூறினர்!!மக்கள் அவர்களுக்கே புத்தி புகட்டக் கிளம்பினர்!!!

நேரு பேசினார்! மக்கள் அவரை ஏசினர்!!

பம்பாயில் சென்ற கிழமை, இவ்விதமான "ரகளை' நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்குச் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர்கள், தலை தப்பியது தம்பிரான் புண்யம் என்பார்களே, அந்நிலை பெற்றனர்.

உங்களை என்ன செய்ய விரும்புகிறோம் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் என்று எடுத்துக் காட்டுவதுபோல, கதர்க்குல்லாய் தரித்த காங்கிரஸ்காரர்போல் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை நெடுஞ்சாலைகளில் தூக்கிலிட்டுத் தொங்கவிட்டனர்!

பட்டீல் பட்டபாடு சொல்லி முடியாது.

மொரார்ஜிக்குப் பலத்த அடி. காந்திக் குல்லாய் போட்டவர்களுக்கெல்லாம் பெரும் ஆபத்து!

வெடிகுண்டுகளைக்கூட வீசினர்! வெறி பிடித்தவர்போல், போலீஸ் வளையங்களைப் பிய்த்துக்கொண்டு, தலைவர்களைத் தாக்க ஓடினர்.

ஐம்பதினாயிரம் மக்களுக்கு மேல் இருக்கும், ஆர்ப்பாட்டக்காரர் தொகை.

பம்பாய் மராட்டியருக்குக் கிடையாது என்ற அநீதியை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் கிளர்ச்சி பலாத்கார உருவெடுத்தது - காங்கிரஸ் தலைவர்கள் கதிகலங்கிப் போயினர்.

நேரு பண்டிதர் மட்டும்தான் தாக்கப்படவில்லை - என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. இவ்வளவு கொந்தளிப்பு, எரிச்சலுக்கிடையேயும், நேரு பண்டிதரிடம் அன்பும் மரியாதையும் காட்டத் தவறவில்லையே மக்கள் மொரார்ஜியும் பட்டீலும் படாதபாடு படுத்தப்பட்டனர், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இழிவாக நடத்தப்பட்டனர், என்றாலும், ஆத்திரம் கொண்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட நேரத்திலேயும், பண்டிதர், பார்புகழ் தலைவர், அவரிடம் பரிவும் மதிப்பும் காட்டத் தவறக்கூடாது என்று மராட்டிய மக்கள் கருதினரே. இஃதன்றோ செல்வாக்கின் மகத்துவம் என்று நான் எண்ணி மகிழ்ந்தேன், நேரு பண்டிதருக்குத்தான் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை என்று செய்தி படித்தபோது. ஆனால், தம்பி, அடுத்த வரியைப் படித்ததும், மகிழ்ச்சி அல்ல, சிரிப்பே வந்தது; நேரு பண்டிதருக்கு மட்டும்தான் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை - என்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? கலகம் ஆரம்பமாவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே நேரு கொட்டகைக்குச் சென்றுவிட்டாராம்!

மக்கள் ஏமாந்தனர் என்று வேறோர் இடத்தில் பத்திரிகைச் செய்தி கூறுகிறது. கருப்புக்கொடி காட்ட மக்கள் கூடினராம், நேரு பண்டிதரோ, அவர்கள் நுழைவு வாயிலில் இருந்தது தெரிந்து, கொல்லைப்புறமாகக் கொட்டகைக்குள் நுழைந்து, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டக்காரர்களை ஏமாற்றி விட்டாராம்!

இவ்விதமெல்லாம் இடர்ப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும், மனம் நொந்த நேரு பண்டிதர், "உலகத்துக்கு உபதேசம் செய்கிறேன் நான்! வெளிநாடுகள் சென்று சாந்தம், சீலம் போதிக்கிறேன்! என் நாட்டிலேயோ நிலைமை இங்ஙனம் இருக்கிறது. இந்த இலட்சணத்தில் நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாடுகள் சென்று பேசுவது? என்று கேட்கிறார்.

இந்த நிலையில் பேசும்போது, நேரு பண்டிதர், தேர்தல் வெற்றி பற்றிக் கவலை இல்லை, பலாத்கார வெறி உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டும் - அதுதான் முக்கியம் என்று கூறுகிறார்.

காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும் - ஒரு குறிப்பிட்ட இலட்சியம் நமது நன்மதிப்பையும் அக்கறையையும் பெற்று விட்டால், தேர்தல் வெற்றியிலே ஆர்வம் காட்டுவதைவிட, அந்த இலட்சியத்திடம்தான் அதிகமான அக்கறை காட்ட வேண்டும் என்ற தத்துவத்தை நேரு பண்டிதரே கூறுகிறார்.

தம்பி! நாம் மேற்கொண்டுள்ள இலட்சியம் மகத்தானது.

அதனை எடுத்து விளக்கவும், அதற்கு வலிவு தேடவும், அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு வளரவும், தேர்தல் காரியம் பயன்பட வேண்டும் என்பதிலேதான், நமக்கு மிகுந்த அக்கறை இருத்தல் வேண்டும்; வெறும் தேர்தல் வெற்றிக்காக, இலட்சியத்தை மாற்றிடும் போக்கு ஆகாது - கூடாது - எழாது.

எத்தனை எத்தனை இல்லங்களிலும் இதயங்களிலும் நமது இலட்சியத்தைப் பதியவைப்பதற்கு, இந்தத் தேர்தலைப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, என்னென்ன சூது, சூழ்ச்சி, வளைதல், நெளிதல் நடாத்தி வெற்றி தேடுகிறோம் என்பது அல்ல. ஆம், தம்பி! இதை நிச்சயமாக்கிக் கொள்ள வேண்டும், இந்தப் புதிய கட்டத்தில்.

தேர்தலில், எப்படியேனும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஆசைக்கு நாம் ஆட்பட்டுப்போய், அதற்கான வழி தேடுவது என்று இறங்கினால், தம்பி, நிச்சயமாகக் கூறுகிறேன், மாற்றார்கட்கும் சொல்கிறேன், இயலாத காரியம் அல்ல.

நாளையிலிருந்து துவங்கி தட்சிணப் பிரதேசம் எனும் திட்டத்துக்கு ஆதரவு காட்டுவது என்று ஆரம்பித்தால் போதும், மெயிலும், இந்துவும், மித்திரனும், மணியும், மேல் விழுந்து கொண்டு ஆதரவு காட்டும், நமது தோழர்களின் படங்கள் பளிச் சிடும், நமது ஊர்வலக் காட்சிகள் படமாகும். நமது பேச்சுகள் அந்த ஏடுகளின் தலையங்கங்களுக்கு உயிரூட்டும்! திடீர்ப் பிரமுகர்களே ஆகிவிடலாம்! இந்த நிலைமையை நாம் அறியாமலும் இல்லை, இந்த வித்தை செய்திட அதிகச் சிரமமுமில்லை!

ஆச்சாரியாரும் ஆசைத் தம்பியும், சுப்ரமணியமும் சிற்றரசும், ஒரே மேடையில்!

கல்கியில், நமது கழகத்தின் புத்தி கூர்மைக்குப் பாராட்டும், ஆனந்த விகடனில் நமது ஆற்றலுக்கு நற்சான்றும், கட்டுரையாய், கவிதையாய் வடிவம் காட்டும். இம்மட்டோ! கருநாடகக் கனதனவான்களும், கேரளத்துப் பெரியவர்களும், ஆதரவு தருவர். பணமா? ஏ! அப்பா! திகட்டும் அளவுக்கு!! வெற்றி - பல முனைகளில்.

தேர்தலில் வெற்றி கிட்டச்செய்வது ஒன்றுதான் நமது வேலை என்றால், இதுபோல் எண்ணற்ற ஏற்பாடுகள், கண்சிமிட்டிக்கொண்டு, நிற்கின்றன. நாம் கை காட்டினால், இடை நெறிய, ஆடை நெகிழ, புன்னகை பூத்திட ஓடிவரும் "மாய மோகினிகள்' ஏராளம். ஆமாம், தம்பி, நாம் மட்டும், சபலத்துக்கு இடமளித்திடச் சம்மதித்தால் போதும்.

ஆனால் நாம், தேர்தலில் வெற்றி பெற வழி என்ன என்று மட்டும் ஆராயும், அற்ப ஆசைக்காரரல்ல; நமது நோக்கம், நாம் எந்த இலட்சியத்துக்காகப் பணியாற்றுகிறோமோ அஃது, கைகூடும் வாய்ப்பு வளரத்தக்க வகையில் எப்படி இந்தத் தேர்தல் நேரத்தைப் பயன்படுத்தலாம் என்பதுதான். இதனை நாம் மறக்கவும் கூடாது - மறைத்திடவும் தேவையில்லை.

தேர்தல் வெற்றி ஒன்றை மட்டுமே, நமது நோக்கமாகக் கொண்டால், எத்தனையோ எதிர்பாராத அணைப்புகளும் ஆதரவுகளும் பெற முடியுமே.

எடுத்துக் காட்டுக்காகக் கூறுதற்குக்கூட எனக்குத் தம்பி, கூச்சமாக இருக்கிறது, எனினும் மந்தமதியினருக்கும் விளங்கட்டும் என்பதற்காகக் கூறுகிறேன், நாளையிலிருந்து தொடங்கி அமெரிக்காதான் அகில உலக ஜனநாயக ரட்சகன். அந்த நாட்டுடன் இந்திய சர்க்கார் பட்டும் படாத முறையில் உறவு கொண்டாடுவது சரியல்ல, நேசமும் பாசமும் வளரவேண்டும், ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் - என்று பிரசாரம் செய்கிறோம் என்று வைத்துக்கொள், தம்பி! அமெரிக்க ஏடுகள் அவ்வளவுமல்லவா, நமது பிரச்சார சாதனங்களாகிவிடும்! ஒரே கிழமையில், நாம் அகில உலக அறிமுகம் பெற்றவர்களாகிவிடலாமே!

நெடுந்தொலைவுகூடப் போக வேண்டாம்; தொழில்களைச் சர்க்கார் நடத்தினால், உற்பத்தி ஒழுங்காகப் பெருகாது, செல்வம் வளராது, தரம் இருக்காது - எனவே தனிப்பட்ட முதலாளி களிடமே இருக்க வேண்டும் என்று பேசினால் போதாதா, சென்னையில் இன்றுள்ள "அறிவகம்' ஏன் நமக்கு, கோவையில் "லட்சுமி கிரஹம்' கட்டிவிடலாமே!

தேர்தலில் வெற்றி பெறுவதுதான், நாம் இந்த ஏழெட்டு ஆண்டுகளாகப் பாடுபட்டதற்கு ஈடாக நாம் எதிர்பார்க்கும் பலன் என்றால், வழி இல்லாமற் போகவில்லை தம்பி! அந்த வேலையும் மெத்தக் கடினமானதல்ல.

நாம் அதற்காக அல்ல அரும் பணியாற்றி வருவது; தந்தையர் நாடு தனி அரசு பெறவேண்டும் என்பதற்காகப் பணியாற்றி வருகிறோம் - தேர்தலையும் இந்தப் பணியிலே ஒரு கட்டமாகக் கொள்கிறோம்.

தேர்தலை, தம்பி, பல அரசியல் கட்சிகள் அறுவடைக் காலம் என்று கொள்கின்றனர். நாமோ, தேர்தலையும் உழவுக் காலமாகவே கொள்கிறோம்; தேர்தலை வாய்ப்பாகக்கொண்டு, மக்களின் நெஞ்சத்தில் நற்கருத்துக்களைத் தூவிடும் நற்பணியில் ஈடுபடப்போகிறோம். எனவே நமக்கு தேர்தலில், நாம் எத்துணை இடங்களைக் கைப்பற்றுகிறோம் என்பதல்ல, பார்க்க வேண்டிய கணக்கு - நாம் ஏதோ அந்தக் கணக்கு காணவே துடிப்பது போலவும், அந்தக் கணக்கப் பொய்த்துப்போனால் நமது கழகத்தின் உயிர் போயேவிடும் என்றும், வெகுண்டெழுந்தான் பிள்ளை வீறாப்புப் பேசுகிறாரே, அது, நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை, திகிலால் அவர் இழந்ததன் விளைவு - வேறென்ன!

தேர்தல் என்றால் என்ன சாமான்யமா?
பண பலம்
பத்திரிகை பலம்
ஜாதி அபிமானம்
வலைபோட்டுப் பிடிக்கும் வித்தை.

இப்படி எத்தனையோ தேவைப்படுமே - இவர்களிடம் ஏது? என்று கேட்கிறார், வெகுண்டெழுந்தான் பிள்ளை. நாம் தம்பி, கூறத்தக்க பதிலெல்லாம்,

அப்பழுக்கற்ற கொள்கை, அசைக்கொணா ஆதாரங்கள், சேர்க்க இதனை எடுத்துரைக்கும் ஆற்றல்.

ஓயாது உழைத்திடும் பண்பு. விளைவுபற்றி அஞ்சாமை.

இந்தப் பலம் எம்மிடம் இருக்கிறது - போதும் என்பதுதான்.

வானம் இடிவதுபோலக் கூவுகிறார்களல்லவா கீதா வாக்கியமென்று, வடமொழியில், நிஷ்காமியகர்மம் என்று - (பலனைப்பற்றிய கவலையற்று கடமையைச் செய்வது) அது இதுதான்! இதற்கு இந்துவில் இருபது தலையங்கம் ஆதரவாக வந்தே ஆகவேண்டும் என்று "விதி' யொன்றும் இல்லை! "மெயில்' தன் தலையங்கத்தில் "தி.மு.க. தேர்தலில் ஈடுபடுகிறது - இது கவனிக்கத்தக்க புது பிரச்சினை. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வசதிகள் தி.மு.க. வுக்கு என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாம் - என்று ஏளனமும, எரிச்சலும், திகிலும் ஏககாலத்தில் தொனிக்கும் விதமாக எழுதுகிறது.

வசதிகள்!! தம்பி! பொருள் தெரிகிறதா? போடியும் போலாவரமும், ஜெமீனும், ஆலையும், பாங்கும், பாரத் சேவா சமாஜமும், எம்மிடம் - பைத்தியக்காரர்களே! உம்மிடம் இந்த வசதிகள் உண்டா என்பதுதான் பொருள்.

நமது ஏழ்மையும் எளிமையும் - இவற்றினாலும் பாழ்படாத நமது தூய்மையும் நமக்கு வெற்றிதரப் போதுமானவை என்று நான் திடமாக நம்புகிறேன், என்பதைக் கூறினால், தம்பி, பணத்தையும் பண்புகெட்ட தனத்ûயும் நம்பிக் கொண்டிருக்கும் அவர்கள் நம்பமாட்டார்கள். ஆனால், நமக்கு நமது ஏழ்மைதான் வலிவளிக்கப் போகிறது!

ஐயோ! இவ்வளவு இலட்சத்தை வாரி வாரி இறைத்து விட்டோமே, வெற்றியோ தோல்வியோ, என்ன ஆகிறதோ? - என்ற பதைப்பு நமக்கு ஏற்படவே செய்யாது. நாம் செலவிடப் போவது எதுவுமில்லை - அந்த வசதி நிச்சயமாக நம்மிடம் இல்லை.

நாம் ஊராருக்கு உண்மையை எடுத்துரைக்கப் போகிறோம்.

அதனை ஓயாது எடுத்துரைக்கப் போகிறோம்.

ஆளவந்தார்கள் செய்துள்ள அக்ரமங்களை அம்பலமாக்கப் போகிறோம்.

இதனை அஞ்சாது, அயராது செய்திடப்போகிறோம். மக்களை, நித்த நித்தம் சந்திக்கப் போகிறோம் - நமக்கும் மக்களுக்கும் இடையே தேர்தல் தரகர்கள் இருக்கப் போவதில்லை.

ஊராள வந்தவர்கள் நடத்திடும் ஊழலை விளக்கப் போகிறோம் - அதனால் கோடிக்கணக்கில் பணம் விரயமாவதை எடுத்துக் காட்டப் போகிறோம்; அந்தப் பணம், தமது வியர்வை, இரத்தம், கண்ணீர், என்பதை மக்கள் அறியும்படிச் செய்யப் போகிறோம்.

தமிழ் மரபுக்கு மாசும், இனத்துக்கு இழுக்கும், உரிமைக்கு ஊறும், உடைமைக்குக் கேடும் விளைவித்த துரோகச் செயலை எடுத்துக் காட்டப் போகிறோம்.

மக்களைக் காணவே இந்த மகானுபாவர்கள் அஞ்சிடத் தக்கதோர் நிலையை உருவாக்கிக் காட்டப் போகிறோம். இதற்கு நமக்கு இரும்புப் பெட்டியும் கரும்புத் தோட்டமும் தேவையில்லை; இதய சுத்தியும் அஞ்சாத தன்மையும் போதும் - அக்கருவூலம் நம்மிடம் ஏராளம்!

தம்பி! பணம் இல்லாததாலேயே, பட்டுப்போவோம் என்று மனப்பால் குடிக்கட்டும் - பட்டால்தான் அவர்களுக்குத் தெரியும்!!

காந்தியார் பெயர் கூறிக் "கனம்' ஆனவர்கள், காந்தீயத்தைக் கொன்றொழித்த காதையை மக்கள் அறியச் செய்வோம்.

"அகில இந்தியா' எனும் அலங்காரம் பேசுவார்கள், திரு இடத்துக்கு, ஐந்தாண்டுத் திட்டத்தில் இழைத்துள்ள வஞ்சகத்தை, வரண்ட தலையினர் அனைவரும் உணர்ந்திடச் செய்வோம்.

தொட்டது துலங்காத துரைத்தனம் நடாத்துபவர் களல்லவா நீங்கள். தோலிருக்கச் சுளை விழுங்கிப் பேர்வழி களல்லவா நீங்கள். சிந்தையில் கள்விரும்பி சிவசிவா என்பதுபோல், வந்தே மாதரம் என்பார் வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதியார் பாடியது உங்கள் பொருட்டல்லவோ, நீங்கள் குடிபுகுந்துவிட்டீர்கள் என்பதறிந்துதானே, "காங்கிரசைக் கலைத்துவிடுக' என்று காந்தியாரே கட்டளையிட்டார். ஐந்தாண்டுத் திட்ட மூலம், பக்ராநங்கல், சிந்திரி, ஹீராகுட் என்றெல்லாம் அமைத்து, வடநாட்டைச் சீமையாக்கி திராவிடத்தைத் தேய வைக்கும் தீயோரல்லவா நீங்கள். வடக்கே விஞ்ஞானம், இங்கே பஜனைஞானம், வடக்கே ஆலைகள், இங்கே அம்பர் ராட்டை, வடக்கே அணு ஆராய்ச்சி இங்கே அப்பளத் தொழில். வடக்கே அதிகாரம், இங்கே காவடி தூக்குவோர். இப்படி ஓர் இழி நிலையை ஏற்படுத்தியவர் களல்லவா நீங்கள். தேவிகுளம் பீர்மேடு தமிழருக்குரியது என்று நாடே கூற, நல்லோர் எடுத்துக் கூற, ஆமாம் என்று தலையையும் அசைத்துவிட்டு, பிறகு இஞ்சி தின்றுவிட்டு இளித்திடும் மந்திபோல் உம்மை வடவர் ஆக்கிட, மேடாவது குளமாவது என்று கேலி பேசிய, தமிழ் இனத் துரோகிகளல்லவா நீங்கள்! தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கூட, சூடு சொரணையற்றுப் போனவர்களல்லவா நீங்கள்! ஓட்டா வேண்டும் ஓட்டு! ஏனாம்? எம்மை ஓட்டாண்டியாக்கினது போதாதா - என்று மக்கள் கேட்கப் போகிறார்கள் - கேட்கச் செய்வோம்.

இதற்கெல்லாம் தம்பி, நமக்கு இலட்சங்கள் தேவையில்லை, கொள்கையில் உறுதி இருந்தால் போதும்.

"தி.மு.கவில் நல்ல இளைஞர் பலர் இருக்கிறார்கள், உற்சாகமும், நல்ல நாவன்மையும் அவர்களுக்கு இருக்கிறது' மேடையிலே கொட்டி முழக்கவும் அவர்களுக்குத் திறமை இருக்கிறது. இது மட்டுமல்ல, கட்டுக்கோப்பும் படை பலமும் கூட அவர்களுக்கு இருக்கிறது. தேர்தலில் கலந்துகொள்ள இதற்குமேல் என்ன வேண்டும் என்று சுலபமாகக் கேட்டுவிடலாம். விடைகொடுப்பது அவ்வளவு சுலபமல்ல. இவை எல்லா வற்றிற்கும் மேலாக பெரிய தடை ஒன்று இருக்கிறது என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.''

"தி.மு.க. வின் முடிவு காங்கிரசுக்கு ஏற்பட்ட எதிர்க்கட்சிப் போராட்டம் மட்டுமல்ல. தி.க. வுக்கும், ஏற்படும் பலப்பரீட்சை போராட்டமாகவும் விளங்கப் போகிறது.''

சிவாஜி எனும் ஓர் காங்கிரஸ் ஏடு எழுதுவது இது.

பலருடைய ஆசை இது. பலர் இதற்காகத் தவமாய்த் தவமிருக்கிறார்கள்.

தி.மு.க.வைத் தாக்குவது என்ற ஒர் நப்பாசை இருந்து வருகிறது.

இதிலும் வெகுண்டெழுந்தான் பிள்ளை ஏமாறத்தான் போகிறார்.

பட்டம் பதவிக்காகவோ, பணத்தாசை பகட்டுக்காகவோ இவர்கள் தேர்தலில் ஈடுபடாமல், பொதுமக்களுக்குப் பணி புரிவதற்காகவே தேர்தலுக்கு நிற்கிறார்கள் என்று எனக்குப் பட்டால், நான் ஆதரிப்பேன் - என்று தி.மு.க. குறித்துப் பெரியார் பேசியதாக "தமிழ் நாடு' இதழில் காண்கிறேன்.

நாம் தேர்தலில் ஈடுபடுவது, தூய நோக்குடன்தான் என்பதை நாம், விளக்கமாக எடுத்துக் கூறியபடி இருப்போம் - பெரியாரின் பேராதரவு நமக்குக் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் பணிபுரிவோம்.

நப்பாசைக்காரர்கள் தூபமிட்டு, பெரியாரின் தி.க.வைக் கொண்டு நம்மை எதிர்க்க வைக்கிறார்கள் என்றே வைத்துக் கொள், தம்பி நமக்கென்ன, அதனால் இழிவு என்றா எண்ணுகிறாய்!! இல்லை! இல்லை! நான் அதனைப் பெறற்கரிய பேறு என்றே கொள்வேன்.

பெரியார், நமது போர்த்திறனைக் கண்டு களிப்படையினும், அடையாது போயினும், காணவேண்டும் என்றே நான் பெரிதும் விழைகிறேன்! காங்கிரசுடன் நாம் தேர்தல் களத்தில் போரிடுவதைக் கண்டிடும்போது, பெரியார், என்னதான் நம்மிடம் பெருங்கோபம் கொண்டிருப்பினும், நாம் திறமையுடன் காங்கிரசை எதிர்த்து வீழ்த்தினால் மகிழாதிருக்க முடியாது! அவர் அளித்த ஆற்றலையன்றோ, நாம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம்!!

தித்தன் எனும் ஒருவன் தன் தந்தையிடம், மனவேறுபாடு கொண்ட கோப்பெருநற்கிள்ளி எனும் மன்னர் மகன் பற்றிய செய்யுளொன்று புறநானூற்றில் உளது.

தந்தையும் மகனும் வேறாயினர் - கோப்பெருநற்கிள்ளி யிடம் தந்தை தொடர்பு கொள்ளாது தனித்திருந்தனன்.

கோப்பெருநற்கிள்ளி கட்டிளங்காளை. போரில் வல்லான். அவன் ஒரு சமயம், முக்காவல் நாட்டு ஆமூர் எனும் இடத்தே, மல்லன் ஒருவனைப் போரில் வென்றான்! அதனைப் பாராட்டி, சாத்தந்தையார் எனும் புலவர் பெருமகனார் பாடியது, என் நினைவிற்கு வருகிறது - தேனாய் இனிக்கிறது.

மற்போரினைக் கண்டு களித்தார் அப்புலவர். மல்லன் வலிவுமிக்கவன்; கோப்பெருநற்கிள்ளியின் மார்பின்மீது உட்கார்ந்துகொண்டு அழுத்துகிறான்; கிள்ளி அந்த அழுத்தத்தை அகற்ற, மல்லனுடைய தலையையும் காலையும் வளைத்திழுத்து ஒடித்துத் தோற்கடித்தான். பசி மிகுந்த யானை, மூங்கிலைப்பற்றி இழுத்து ஒடிக்குமே, அதுபோலிருந்ததாம், கிள்ளியின் மற்போர் வகை, அதைப் பாராட்டிய புலவர்,

நல்கினும் நல்கானாயினும்

"காண விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.'

வெல்போர்ப்போர் அருந் தித்தன் காண்க!

போரில் வெல்லும் திறன் படைத்தவனும், எதிர்ப்பாரற்ற வலிவுடையோனுமாகிய, கிள்ளியின் தந்தையாம் தித்தன் காண்பானாக!

என்று பாடுகிறார்.

தந்தையும் மகனும் மனவேறுபாடு கொண்டவர்தாம் - ஆயினென்!

தத்தனும் கிள்ளியும் வேறு வேறு இடத்திலேதான் வாழ்கின்றனர். எனினும், மகனுடைய மற்போர் வெற்றியைக் காண்பதன்றோ, தந்தைக்குக் கிடைத்தற்கரிய பேறு! எனவே, கிள்ளியின் வெற்றியைத் தந்தை காண வேண்டும் -அவருக்குக் காட்சி களிப்பளிப்பினும், அளித்திடாது போயினும், கவலையில்லை, கண்டால் போதும் என்கிறார் சாத்தந்தையார்!

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவ- முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்ஒதுங் கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்
போரருத் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப்பணை முயலும் யானை போல
இருதலை ஓசிய ஏற்றிக்
களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே -
-புறநானூறு 80

தம்பி! கடினமாக இருக்கிறதா - சிறிதளவு எளிதாக்க முயல்கிறேன்.

ஆமூரில் வலிமைமிக்க மல்லனின் ஆற்றலை அடக்கி, அவன் மார்பில் ஒருகாலை ஊன்றி, மற்றொரு, காலால் அவன் எதிர்ப்புக்களை விலக்கி, பச்சை மூங்கிலை வளைத்து ஒடித்துத் தின்ன முயலும் யானையைப்போல, அம்மல்லனின் காலும் தலையும் முறிய அவனைக் கொன்று வெற்றி மாலை புனையும் இவனை (போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை) போர் வெல்லும் திறமைமிக்க தித்தன் என்னும் இவன் தந்தை, மகிழ்ந்தாலும் மகிழாவிட்டாலும் காண்பானாக.

மைந்து - வலிவு-; முருக்கி - கெடுத்து; போர் அரும் - போரில்மிக்க; பணை- மூங்கில்; இருதலை - தலையும் காலும் ஒசிய - முறிய;

தித்திக்கிறதல்லவா! தித்தன் - கிள்ளி - மல்லன்! தி.க.- தி.மு.க. காங்கிரஸ் என்று எண்ணிப் பார்த்திடும்போது, எனக்கு மட்டும் இனிப்பாகவா இல்லை?

தித்தன் போல் "அவரும் காணட்டும் அகமகிழட்டும்' என்று எண்ணி, தேர்தல் களத்திலே இறுமாந்து நிற்கும் மல்லனுடன் போரிட்டாக வேண்டும்.

தமிழ் மரபினை மறவாத உன் ஆற்றல், பலன் தராமலா போகும்!

அன்பன்,

10-6-1956