அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


1957க்கு 1946ல் ஏற்பாடா?

“மிஸஸ் கார்ட்டர்! கப்பலில் இடம் தேடிக் கொண்டாகிவிட்டதா?” என்று கேட்டார் ஏட்வர்ட்ஸ்.

“ஏன்?” என்று ஆச்சரியத்துடன் அந்த அங்கில மாது கேட்டாள்.

“ஏனா! கல்கத்தா கெட்டுப்போய் விட்டது. இங்கு இனி, வெள்ளைக்காரப் பெண்மணிகள் வாழ முடியாது. ஆறுமாதத்துக்கு முன்பே நான் ஏன் மனைவியையும் குழந்தைகளையும் எருக்கு அனுப்பிவிட்டேன். நம்மவரில் அனேகர் அவ்விதமாகத்தான் செய்திருக்கிறார்கள்” என்று ஏட்வர்ட்ஸ் கூறினார்.

குதிரைப் பந்தய மைதானத்தில், குதிரைகள் ஓட்டத்தைப் பற்றிப் பேசவேண்டிய வேளையில், வெள்ளைக்காரர்கள் இதுபோல, எருக்கு ஓடிவிடவேண்டியதுதான், இனி இந்தியாவில் இருக்க முடியாது, இருப்பது ஆபத்து, முதலில் பெண்டு பிள்ளைகளை இங்கிலாந்துக்கு அனுப்பி விடவேண்டும், என்று பீதியுடன் பேசிக் கொண்டிருந்தனர். பீதிக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. வெள்ளையரின் பிடி தளர்ந்து விட்டது. வெறுப்பும் கோபமும் நிறைந்த கண்களே எங்கு நோக்கினும். எந்த நிமிடத்திலும புரட்சி ஆரம்பமாகி விடக்கூடும் என்ற பயம் உலவிற்று. புரட்சி வாடை அடித்தபடி இருந்தது. அங்கில ஆதிகாரிகள், வியாபாரிகள், போர்வீரர்கள், பொழுதுபோக்கிகள் அனைவருமே, அச்சத்து டனேயே உலவினர். குதூகல வாழ்க்கைக்கு இடமாக இருந்த கல்கத்தாவில், வெள்ளைக்காரர், குசுகுசு வென்று பேசிக் கொண்டிருந்தனர். மகத்தான புரட்சி ஒன்று ஏற்பாடாகி வருவதாகப் பலமான வதந்தி உலவிற்று. புரட்சி நடக்குமோ நடக்காதோ, ஒன்று மட்டும் நிச்சயமாக நடைபெற்றுவந்தது, தலைகுனிந்து நடந்து வந்த தாசர்கள், துரைமார்களை நிமிர்ந்து பார்க்கவும், புருவத்தை நெரித்துப் பார்க்கவும் தொடங்கினர். ஏட்வர்ட்ஸின் ஏக்கத்துக்கு அது போதும்!

போர்வீரன் உடையுடன் ஒரு ஆங்கிலேயன் அந்த மைதானத்தில் உலவிக்கொண்டிருந்தான். பலர் அவனையை உற்று நோக்கிய வண்ணம் இருந்தனர். சிலர் வணக்கம் செய்தனர் மற்றும் சிலர், கேலியாகப் பேசிக்கொண்டனர்.

“வியாபாரம் செய்பவனுக்கு ஏன் இராணுவ உடை?”

“இராணுவ உடைமட்டுமா? அவன் ஒரு பட்டாளமே அமைத்திருக்கிறான்”

“ஏன்?”

“ஏனா? இங்கே இரத்தக்களறி ஏற்பட்டால், நமது நாட்டு மக்களைக் காப்பாற்றி, நமது சாம்ராஜ்யத்தை நிலை நாட்ட”

“அவ்வளவு மோசமான நிலைமையா வந்து விட்டது. பிரிட்டிஷ் ஆட்சி இருக்கிறது. வெள்ளைக்கார வைசிராயும் கவர்னர்களும், சேனாதிபதிகளும் இருக்கும்போது, வியாபாரம் செய்ய வந்தவர்கள், உத்தியோகம் பார்க்க வந்தவர்கள், இராணுவ உடைதரித்துக் கொண்டு, உலவுவானேன்”

“உடை மட்டுமல்ல! கவாத்தும் நடத்துகிறது. ஆயுதங்களும் உள்ளன. பட்டாளம் அமைத்திருக் கிறார்கள். அதிலே, இந்நாட்டிலுள்ள வெள்ளைக்காரர்கள் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். கலவரம் நேரிட்டால், வெள்ளைக் காரனின் உடைமைக்கும் உரிமைக்கும் ஊடலுக்கும் உயிருக்கும் ஆபத்து நேரிடாதபடி பாதுகாத்துக் கொள்வதற்காகவே இப்பட்டாளம் அமைக்கப் படுகிறது. அந்தப் பட்டாளத்தை மிகத் திறம்பட அமைத்துக் கொண்டிருப்பவரே அதோ இராணுவ உடையுடன் காணப்படும் கர்னல் ஹார்டி.”

இதுபோன்ற உரையாடல், அந்த வெள்ளைக்காரனைக் கண்டதும், அவனைப் போலவே இராணுவ உடையுடன் வேறுபலரும் காணப்பட்டனர். வெள்ளைக்காரர்கள் வெகுண்டும் விரண்டும் போயிருந்தனர். புரட்சியைத் தடுக்கக்கூடிய நிலையிலே வைசிராயோ கவர்னர்களோ இல்லை என்றும், புரட்சியை அடக்கிவிடக் கூடிய நிலையிலே, சர்க்கார் வசமிருந்த இராணுவம் இல்லை என்றும், இராணுவத்திலேயே புரட்சி ஏற்பட்டுவிடக் கூடுமென்றும், அந்தப் புரட்சிக்கு, வெளிநாட்டு உதவியும் ஏற்பாடாகிவிட்டதென்றும், வெள்ளையர் வாழும் வட்டாரங்களில் பேசப்பட்டது.

கர்னல் ஹார்டி என்பவன், வெள்ளைக்காரர்களின் பாதுகாவலன் என்ற பதவியைச் சிருஷ்டித்துக் கொண்டான். சர்க்காராலும், இராணுவத்தாலும் புரட்சியை அடக்க முடியாது போகும், நாமேதான், வீரச்செயல் புரிந்து, புரட்சியை அடக்கவேண்டும் என்று அவன் திட்டமிட்டுச் சிரமப்பட்டு, ஆள் சேர்த்து, அவர்களுக்குப் போர்ப் பயிற்சியும் தந்து வைத்திருந்தான். கல்கத்தா நகரில் மட்டும் சுமார் 4000 வெள்ளைக்காரர், அங்கிலோ இந்தியர் கொண்ட பட்டாளம் திரட்டி வைத்திருந்தான். அவர்கள், கம்பெனிகள், உத்தியோக மண்டலங்கள் ஆகிய இடங்களில் உள்ளவர்கள். ஆனால் அபாய அறிவிப்பு தெரிவிக்கப்பட்டவுடன், அவர்கள் ஆயுதமெடுத்துக் கொண்டு கிளம்புவர், அரைமணி நேரத்திலே, பட்டாளம், உருவாகிவிடும். கர்னல் ஹார்டி இந்த ஏற்பாட்டை மிகச் சாமர்த்தியமாகச் செய்துவைத்திருந்தான்.

“கல்கத்தாவிலே, கர்னல் ஹார்டியின் பட்டாளம் இருப்பது, வங்க மக்களிடையே பெருத்த கோபத்தை, அத்திரத்தை மூட்டிவிட்டது.”

“பட்டாளமா? வெறும் உடைமட்டுந்தானா, இராணுவ முறையில்”

“படடாளமேதான்! கர்னல் ஹார்டி, ஒரு என்ஜினியர், ஆனால் இப்போது அந்தத வேலையைக் கவனிப்பதில்லை. மைதானத்திலே, ஆட்களைத் திரட்டிக் கொண்டு, அவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறான்”

“திறமையாக?”

“மிகத் திறமையாக”

“சரி! என்ன செய்வது அதற்கு?”

“செய்வதா! அந்தப் படையைக் கலைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் அத்திரத்துடன் ஏதாவது அமளியில் ஈடுபடுவர்.”

“அப்படியும் நடக்குமா?”

“எனக்கு, இங்குள்ள தேசிய வாதிகள் நெருங்கிய நண்பர்கள். அதனால்தான் சூக்ஷமத்தைத் தெரிந்து கூறுகிறேன்.”

“சரி! என்ன செய்வீர்?”

“வங்காள சட்டசபையில், கர்னல்ஹார்டியின் தனிப்பட்டாளம் இருக்கக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றி...”

“நிறைவேற்றி.....”

“அதன்படி, படையைக் கலைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கிறேன்.”

“கர்னல் ஹார்டி மறுத்தால்?”

“போலீஸ் இருக்கிறது!”

“போலீசால் முடியாவிட்டால்?”

“இராணுவம்!”

“அதனாலும் முடியாவிட்டால்?”

“வங்காளத்து மக்களே கிளம்பி விடுவார்கள் ஹார்டியின் படையை எதிர்த்து”

“அதவாது உள்நாட்டு யுத்தம் நடக்கும்”

“ஆமாம்! ஆனால் ஹார்டி அந்த அளவுக்குப் போகமாடடான். அவனுடைய படையைக் கலைக்க வேண்டுமென்ற ஏன் திட்டத்தை, இந்திய மந்திரியும், பிரிட்டிஷ் மந்திரி சபை முழுவதும், அங்கீகரித்து விட்டது. தங்கள் உத்தரவுதான் தேவை, தங்கள் ஆபிப்பிராயமென்ன?”

“படையைக் கலைக்ககூடாது”

“கலைக்காமலிருக்க முடியாது”

“ஹார்டியின் படையைக் கலைப்பது பைத்தியக்காரத் திட்டம். நான் அதற்குச் சம்மதிக்க முடியாது.”

படையைக் கலைக்க வேண்டுமென்று பேசியவர், வங்காளக் கவர்னர் படை கலைக்கக்கூடாது என்று சொன்னவர் வைசிராய், இருவரையும் நியமித்தது, பிரிட்டிஷ் தொழிற்கட்சி மந்திரிசபைதான். வைசிராய் கவர்னருடன் பேசிவிட்டு, பர்மா சென்றார், சுற்றுப் பிரயாணத்துக்கு.
வங்காள சட்டசபையில், சூடான விவாதம், ஹார்டியின் படை கலைக்கப்படவேண்டும் என்பது பற்றி, ஒரு தனி மனிதன், படை திரட்டுவது அக்ரமம், ஆகவே அந்தப் படை கலைக்கப்பட வேண்டுமென்று சட்டசபை உறுப்பினரில் பலர் ஊக்கிரமாகப் பேசினர். ஒரு ஆங்கிலேய உறுப்பினர், மேற்படி படை, ஆங்கிலேயரின் சொத்து சுதந்திரம், சூறையாடப்படாமலிருக்கவும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவுமே இருப்பதாக வாதாடினார். வங்கத் தலைவர் எழுந்தார். “டக்ளஸ் துரைபேசினது கேட்டேன். கல்கத்தாவில் வாழும் பிரிட்டிஷார் வங்க மக்களிடம் அன்றாடம் அஞ்சிவாழ வேண்டி இருக்கிறது என்றார், நான் அந்தப் பேச்சைக்கேட்டு ஆச்சரியமுடைகிறேன், வருத்தமும் கொள்கிறேன். ஏன் பிரிட்டிஷ் நண்பர்களுக்கு ஓர் உறுதி கூறுகிறேன். அவர்கள் கொண்டுள்ள அச்சத்துக்கு அதாரமே இல்லை. சர்க்காரின் உத்தரவின்படி ஹார்டி படைகலைக்கப்பட்டதும் வங்கமக்கள், ஆயுதம் தாங்குவர், அங்கிலருடன் போராட அல்ல. அவர்களைப் பாதுகாக்க அஞ்சவேண்டாம், நாங்கள் அங்கிலரைப் பராமரிப்போம். இரண்டு நூற்றாண்டுகளாகப் பிரிட்டிஷார் எங்களுக்குச் செய்துள்ள நன்மைகளுக்குப் பிரதி உபகாரம் செய்ய, எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தரச் சொல்கிறேன்” என்று பேசினார். அந்தக் குத்தல் பேச்சைக் கேட்டு சட்ட சபையினர் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். ஹார்டி படை கலைக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் பெரும்பான்மை ஓட்டுகள் பெற்று நிறைவேற்றிற்று. கல்கத்தா நகரமெங்கும், பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் ஒழிக! என்ற பெருங்கூச்சல் கிளம்பிற்று.

வங்கக்கவர்னரின் மாளிகைக்குள், ஹார்டி. தன் படையின் ஒரு பிரிவுடன் நுழைந்து, கவர்னரையும் உடனிருந்தோரையும் கைது செய்து, கவர்னர் மாளிகையைக் கைப்பற்றிக் கொண்டான். கவர்னரை மிரட்டி புதுசர்க்கார் அமைத்துக்கொண்டு, அதற்குத் தன்னைத் தலைவனாக்கிக் கொண்டு, கவர்னரை வெறும் பொம்மையாக்கினான் மறுத்தவர்கள், எதிர்த்தவர்கள், சிறைப்படுத்தப் பட்டனர். இராணுவச் சட்டம் பிறப்பித்து விட்டான். புரட்சிப்பொறிகளை நசுக்கும் காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டான். தலைவர்களûக் கூண்டிலடைத்தான். கல்கத்தா கார்பரேஷன் கலைக்கப்பட்டது. பத்திரிகை ஆபிசுகள் அடக்கப்பட்டன. ஹார்டியின் ஆட்சி கல்கத்தாவில் அட்டகாசமாகிவிட்டது. கல்கத்தாவில் கர்னல் ஹார்டி, தன்பிடியைப் பலப்படுத்திக் கொண்டான். கல்கத்தா மட்டுந்தான்! மற்ற இடங்கள்?

திகில் கொண்ட ஹார்டி எதிர்பார்த்திருந்த மகத்தான புரட்சி, மற்றோர் பகுதியில் ஆரம்பமாகி, வேக வேகமாகப் பரவத் தொடங்கிற்று. காட்டுத்தீ போல கூண்டில் தள்ளப்பட்ட புலிபோல கல்கத்தாவில் புரட்சி அடங்கிக் கிடந்தது. ஆனால் மற்றப்பகுதியில் புரட்சிப் புலி சீறிப் பாய்ந்து போரிட்டது.

பற்பல சாம்ராஜ்யங்களின் தலைநகராக விளங்கிய டில்லிக்குப் புரட்சி பரவிவிட்டது. பல்வேறு தடவை களமாகி இருந்த டில்லியில் அமளி ஆரம்பமாகிவிட்டது. புரட்சிக்காரர்கள் டில்லியைப் பிடித்துவிட்டனர். வெள்யைர், தலை தப்பினால போதும் என்று ஓடலாயினர். புரட்சிப் படை பிரம்மாண்டமான கும்பலாவிட்டது. இதனை நடத்திச் செல்லும் தலைவர்கள், வெளியிலிருந்து உதவியை - முக்கியமாக விமானங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக் குள்ளேயும், தகறாறு மூண்டுவிட்டது, இந்நிலையில், கர்னல் ஹார்டி, வேறோர் சுதேக சமஸ்தானாதிபதியுடன் ஏற்கனவே செய்து வைத்திருந்த ஈரகசிய ஏற்பாட்டின்படி, சுதேசமன்னனின் சேனை, டில்லிக்குக் கிளம்பிற்று, அதனுடன் சேர்ந்து கொள்ள ஹார்டியின் படையும் புறப்பட்டது. கல்கத்தாவைக் கோட்டையாக்கிக் கொண்டு அங்கே பாசறை அமைத்துக்கொண்ட ஹார்டி, அங்கிருந்து கிளம்பினான் டில்லி நோக்கி, புரட்சிப் படையைத் தோற்கடித்தான். புரட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். டில்லியில் மறுபடியும் பிரிட்டிஷ் கொடியைப் பறக்கவிடுகிறான்.
“புரட்சி அழிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் டில்லி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது. புரட்சித் தலைவர்களில் முக்கியமானவர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைக் கண்டுபிடித்துத் தக்க தண்டனை தரப்படும். பிரிட்டிஷ் ஆட்சி இனி தொடர்ந்து நடக்கும். இதுவரையில், டில்லி தலைநகரமாக இருந்துவந்தது. டில்லி தலைநகரமாக இருப்பதற்கு இலாயக்கற்றது என்பது இப்போது நன்கு விளங்கிவிட்டது. பனிரண்டு பரம்பரைகளுக்கு மேலாகவே டில்லியைத் தலைநகரமாகக் கொண்டு, பாழாகி உள்ளன. எனவே, இனி கல்கத்தாவே தலைநகராகும்” என்று வைசிராய் பிரசங்கம் செய்தார். டில்லியை விட்டுச் சர்க்காரர் கிளம்பினர். கல்கத்தா தலைநகராக்கப்பட்டது.

புரட்சிவாடை அடிக்கக்கண்டு, முன்னேற் பாடாகவே செள்ளைக்காரர்களைக் கொண்ட படையைத் திரட்டி, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, புரட்சியை அடக்கி, மறுபடியும் பிரிட்டிஷ் ஆட்சியை நிலை நாட்டியதற்காக கர்னல் ஹார்டி வங்காளக் கவர்னராக்கப்பட்டான்
***

இது ஒரு கற்பனைக் கதை நம்முடையதல்ல. ஒரு வெள்ளைக்காரரன் தீட்டியது. இப்போதல்ல 1930ல்

“இந்தியாவை” என்றென்றும் கட்டி அளவேண்டும் என்ற நோக்கமும், ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்ற எந்த ஏற்பாடாகிலும் செய்தபடி இருக்கவேண்டும் என்ற வெறியும், கடைசி முயற்சியாக, விடுதலைக்காக, இந்தியாவில் புரட்சி நேரிட்டால், அதனை, எப்படியாவது அடக்கி, ஒடுக்கி, பிரிட்டிஷ் ஆட்சியையே மீண்டும் அமைக்க வேண்டும் என்ற திட்டமும் கொண்ட வெள்ளையர்கள் பலர். அவ்விதமான ஏகாதிபத்திய வெறியைக் காட்டும் நூல் ஒன்றை 1930ஆம் ஆண்டு ஹாமீஷ்பிளேயர் என்ற வெள்ளைக்காரன் எழுதினான். இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது அந்த விஷமத்தனமான புத்தகம்.

இந்தியாவில் புரட்சி நடக்கும் அது சமயம் ஒரு சில ஆயிரம் வெள்ளையர்கள் கட்டுப்பாடாக இருந்து படை அமைத்துக் கொண்டு எதிர்த்தால், சட்டசபைகளிலே விடுதலை வேட்கையாளர்கள் முழக்கமிட்டாலும் கவர்னர்களும் வைசிராயும் தடுமாறிவிட்டாலும், பிரிட்டிஷ் ஆட்சியைக் காப்பாற்றிவிட முடியும், என்ற நோக்கத்தைப் பிளேயர், தனது கற்பனைக் கதைமூலம் தன் நாட்டவருக்குக் கூறினான். விஷ வாடை வீசும் இந்த நூலில், அந்த ஆசிரியர் கொண்ட கருத்து, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து 1857ல் சிப்பாய்க் கலகம் நடந்தது போலவே ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அதாவது 1957ல், புரட்சி நடைபெறும் என்பதாகும். அந்த ஆங்கிலேயன், அத்தகைய புரட்சியையும் அடக்கி, மறுபடி பிரிட்டிஷ் ஆட்சியை ஸ்தாபிக்க முடியும் என்ற ஆணவக் கருத்தைக் கொட்டுகிறான் அந்தப் புத்தகத்தின் மூலம்.

புரட்சித் தலைவர்களுக்கு இடையே பூசல் ஏற்பட்டுச், சக்தி சிதறிவிடும் என்பதையும், ஏதாவது ஒரு சுதேச சமஸ்தானத்திடம் ஈரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டால், புரட்சி மூண்டுவிடும் போது, அந்தச் சமஸ்தானப் படையை உபயோகப்படுத்திச் சரியும் ஆட்சியைத் தூக்கி நிறுத்திவிடலாம் என்றும் மனப்பால் குடித்து மகிழ்கிறான் பிளேயர். இந்தப் பித்தத்தைப் புத்தக வடிவாக்கி, லண்டனில் வெளியிட்டுமிருக்கிறான் 16 ஆண்டுகளுக்கு முன்பு. புத்தகத்தின் பெயர் 1957 என்பதாகும். புரட்சி செய்தால் பொசுக்கிவிடுவோம் என்று நம்மவரை மிரட்டவும், புரட்சி நடக்கும் பீதி அடைந்து பிடியைத் தளர்த்திவிடாதீர், சர்க்காரிலே சோர்வு ஏற்பட்டாலும், இந்தியாவிலே வாழும் வெள்ளைக்காரர்களிடையே கட்டுப்பாடும் திட்டமும் இருந்தால், பழையபடி பிரிட்டிஷ் கொடியைப் பறக்கவிடலாம் என்ற இசையை ஆங்கிலேயருக்கு எட்டவும் இந்த ஆசிரியர் மிகப் பிரயாசை எடுத்துக் கொண்டு 1957 என்ற தலைப்புடன் ஒரு ஏகாதிபத்திய எடு எழுதினான். யாரோ ஒரு பைத்தியக்காரரின் பேனாவின் கிறுக்கு என்றே இதனை எண்ணி, ஏளனம் செய்து வந்தேன் இன்று வரை. ஆனால்.....!
****

“1957”க்கு 1946ல் ஏற்பாடா? என்று கேட்க வேண்டிய நிலைமை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. எந்தக் கல்கத்தாவில், வெள்ளைக்காரரின் உடைமையையும் உயிரையும் பாதுகாக்க, ஒரு கர்னல் ஹார்டி என்ற வெள்ளையன், வெள்ளையக்காரர்களைக் கொண்ட பிரத்யேகப்படை திரட்டினான் என்று 1957 என்ற கற்பனைக் கதையில் எழுதப்பட்டிருக்கிறதோ, அதே கல்கத்தாவில் இப்போது, 1946ல் கல்கத்தாவில் வாழும், பிரிட்டிஷாரின் சொத்து சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, அங்கள்ள வெள்ளையர்கள் ஆரண் அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் ஆயுதங்களும், வெடிமருந்தும் சேகரித்துக் கொள்ள வேண்டுமென்றும் ஏதாவது கலவரமோ புரட்சியோ நேரிட்டால், வெள்ளைக்காரர்களெல்லாம் அந்தக் கோட்டைக்குள போய்ப்புகுந்துகொண்டு, ஆபத்தைத் தடுத்துக் கொள்ளவேண்டுமென்ம், 48-மணி நேரத்துக்குத் தேவையான உணவுப் பொருள் அங்கே சேகரித்து வைக்கப் படவேண்டுமென்றும், கல்கத்தா வெள்ளையர்கள் ஒரு திட்டம் தயாரித்திருக்கிறார்கள் என்று ஆமிர்த பஜார் பத்திரிகையில் ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது.

ஒரு பெரிய உபகண்டத்து மக்கள், உயிர்ப் பிரச்சினையான விடுதலைக்காகக் கிளர்ச்சி செய்தால். அதனைச் சூழ்ச்சியாலும் பலாத்காரத் தாலும் ஒடுக்கி விடுவதற்குத் திட்டம் தயாரிக்கத்துணிவதைக், கற்பனைக் கதைமூலம் பிளேயர் என்ற ஆங்கிலேயன் காட்டினான். இந்த இங்கலேயனுக்குத்தான் எவ்வளவு ஏகாதிபத்திய வெறி! சர்க்காரையும் வைசிராய் கவர்னர்களையும் நம்பிக்கொண்டிராதே, நீயே படைதிரட்டு, என்று தன் நாட்டவரை ஊசுப்பிவிடுகிறான் ஆணவத்துடன், எவ்வளவு இறுமாப்புடன், மீண்டும் “பிரிட்டிஷ்கொடி பறக்கிறது, புரட்சி ஒழிந்தது” என்று கதையிலே ஒரு வைசிராயைப் பேசவைக்கிறான். இப்படியும் ஒரு ஆதிக்கவெறி இருக்குமா, என்று ஆச்சரியப்பட்டேன். அந்தக் கதையைப் படிக்க நேரிட்டபோது வெகுண்ட - வெள்ளையரின் வீணாசையை அந்தக்கதை விளக்குகிறது என்று அலட்சியப்படுத்தினேன். இப்போதுவரும் செய்தியோ, கல்கத்தாவிலே கர்னல் ஹார்டியேக் கண்டுபிடிக்க, வெள்ளைக்காரர்கள் முயற்சி எடுத்துககொள்வதாகவன்றோ தெரிவிக்கிறது. ஆனால் கல்கத்தாவில் கட்டும் மனக்கோட்டை கலைக்குதவாது, காலம் மாறி விட்டது, ஏன் ஏகாதிபத்தியக் கடையை மூடு என்று நாடு முழுதும் கூறும் இந்த நாளிலே, 1957க்கு 1946ல் திட்டம் தீட்டுகிறார்கள் துரைமார்கள், அறிவுப்பஞ்சம் அவ்வளவு அதிகமாகிவிட்டது, அவர்களுக்கு எந்தக்கோட்டை சமாளிக்கும் எழுச்சிப் பெற்ற கோடிக்கணக்கான மக்கிள்ன எதிர்ப்பை - எவ்வளவு வெடி மருந்து சேகரித்து என்ன செய்வது? ஆளுக்கொரு கை தண்ணீர்வாரி இறைத்தாலே போதுமே, வெடிமருந்து கிடங்கு, சேறு நிரம்பிய குட்டைபோலவாகுமே! இதுதானா வெள்ளைக் காரர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கண்டு பிடிக்கும் மார்க்கம். வேறு, அறிவுக்குப் பொருத்தமான வழியே தெரியவில்லையா? ஏன் இவ்வளவு அச்சத்துக்கிடையே, ஆபத்துச் சூழந்த இடம் என்ற கருதும் இடத்தில், சட்டத்தையும் சமாதானத்தையும் நிலைநாட்டச் சர்க்காரிடம் போலீசும் இராணுவமும் இருந்தும், நமக்கு இவ்வளவு இருக்கும்போது பயம் என்ன என்ற நம்பிக்கையும் இழந்து, பதுங்கிக் கொள்ளக் கோட்டையும், காப்பாற்றிக் கொள்ள ஆயுதமும் வைத்துகொண்டு வாழவேண்டும்? இந்த நிலையைவிட, நிம்மதியாக, பிரிட்டன் போய்ச்சேரலாமே!
கல்கத்தாவிலும் சென்னையிலும், கிழக்கிந்திய கம்பெனி துவக்கப்பட்டபோது, வெள்ளைக்கார வியாபாரிகள், இப்படித்தான், சிறு சிறு கோட்டைகள் கட்டிக் கொண்டு அதற்குள்ளே வாசம் செய்தனர். கோட்டைக்குள்ளே உணவும் இருக்கும். யாராவது ஏதாவது எதிர்ப்பு நேரிட்டால் என்ன, செய்வது என்ற திகிலுடன் வாழ்ந்தனர். அதற்காகச் சிலபோர் வீரர்களைத் துணைக்கு அமர்த்திக்கொண்டனர். அந்த வியாபாரக் கோட்டைகளிலே ஒருபுறம் விற்பனைக்கான சரக்கு இருக்கும், வேறோர்புறம் ஆயுதமும் வெடிமருந்தும் இருக்கும். ஆரம்பித்திலே இருந்த நிலை அது. இந்திய காலத்திலும் அதேநிலைதான் பொருத்தம் என்று ஆங்கிலேயரில் சிலர் கருதுகிறார்கள் போலும். அவர்களின் திட்டம் சர்வதேசச் சபைகளிலே அமரும் தலைவர்களால், எவ்வளவு கேலியாகப் பேசப்படும் என்பதைக்கூட, அவர்களால் யோசித்துப் பார்க்க முடியவில்லை போலும்.

காலம் மாறிவிட்டதை உணரமுடியாத அளவு கண்ணில் கொழுப்புடன் உள்ள சிலர், எப்போதும் போலவே தமது அதிகாரமும் அட்டகாசமும் நிலைக்கும் என்று எண்ணி ஏமாறுவர். பிடி தளருவதையும் அடியிலே பள்ளம் வெட்டப் படுவதையும் உணர்ந்துகொள்ள முடியாதவன் புத்தியை இழந்தவன் உணர்ந்து கொள்ளாததுடன், தன்னுடைய ஊரத்தகுரல் கேட்டால் ஊரே அடங்கிவிடும் என்று கடைசி வினாடிவரை நம்பிக் கொண்டிருப்பவன். ஏமாளி, அந்த நினைப்பிலேயே, புதிய புதிய திட்டம் போடுபவன் கோமாளியாவான், வெள்ளைக்காரர்கள் சிலர், இத்தகைய இளித்தவாய்த் திட்டம் போடுகிறார்கள். அவ்வளவு மட்டரகங்களும் உள்ளன மதிநிறைந்த இந்நாள்களிலேயும்!
(திராவிடநாடு 31.3.46)