அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவமதிக்கிறார்!

மக்களால் வெறுத்து வீசப்பட்ட மத்திய சர்க்கார் அமைச்சர் சந்தானத்தை, விந்நியப் பிரதேச கவர்னராக ஆக்கிய பற்றி கண்டித்தோமல்லவா? இதே கண்டனத்தை எழுப்பியிருக்கிறார்கள், புது டில்லியில்.

இந்தியப் பிரதமரை, பத்திரிகை நிருபர்கள், கேட்டிருக்கிறார்கள், ‘தோற்கடிக்கப்பட்டவர்கள், கவர்னராகலாமா? என்று அதற்குப் பண்டிதர் பதிலளித்திருக்கிறார் – ஜனநாயக உலகைக் கேலி செய்வது போல்!

‘மந்திரியாக இருந்தாலென்ன, மதியூகியாக இருந்தாலென்ன, மக்களை மதியா உன்னை நாங்களும் மதியோம்“ என்று, மாயூரம் தொகுதி லட்சக்கணக்கான மக்கள், முடிவு கூறினார்கள் – தேர்தலின்போது.

அந்த முடிவை, அவமதிக்கிறார் நேரு! முடிவு தந்த லட்சக்கணக்கான வோட்டர்கள் – யாரோ சிலராம் – செப்புகிறார். ஆசிய ஜோதி. “சென்னையிலுள்ள சில வாக்காளர்களால் அவர் தேரந்தெடுக்கப்பட்வில்லையென்பதற்காக, அவருடைய சேவையையா – இழப்பது,“ – என்று கூறியிருக்கிறார். ரயில்வே இலாகாவில் அருமையாக வேலை செய்தாராம், சந்தானம் – கூறுகிறார் நேரு. என்ன அருமையோ அது – நமக்கெல்லாம் தெரியாதது – நாட்டின் பிரதமருக்குத் தெரிகிறது! ரயில்வே இலாகா முழுமையைம் ‘நாமதாரி‘களாக ஆக்கிய தவிர, எந்த ‘அருமை‘யையும் காணவில்லை நாம் – ஆனால், முடிசூடா மாணிக்கம் கூறுகிறார்!

சந்தானத்தைப் பாராட்டிவிட்டுப் போகட்டும் – ஆட்சேபமில்லை நமக்கு. ஆனால் அவரைத் தேர்ந்தெடுக்காமல் விரட்டிய மக்களை அவமதிக்கிறார் – ஜனநாயத் தேர்தலை, அலட்சியமாகக் கருதுகிறார். நண்பருக்காக, நாவு, இவ்வளவு வேகமாக அசைவதா ஒரு பிரதமருக்கு? சிலராம் சிலர்! “Some electros in Madras” நேரு, கூறுகிறார் இப்படி! சந்தானத்தை வெறுத்து வீசிய மக்கள் தீர்ப்பைவிட, தனது தீர்ப்பே மேலென்கிறார் – ஜனநாயகம் பற்றிப் பேசும் காந்தீய வாரிசு கூறுகிறது. இவ்விதம்! தலைமைப்பதவி, இத்தகைய நெஞ்சுரத்தைத் தராது – இவருக்கு என எண்ணினோம் – ஆனால் சராசரி நிலையையும் தாண்டிவிட்டார்! “வேண்டியோருக்கு ஏற்படும் இழிவு“ காண, ஏனோதானோக்கள், குதிக்கலாம் – குளறலாம் – கொந்தளிப்போடு பேசலாம். ஆனால் இவரா பேசுவது? நேருவா! - ஜனநாயகம் பேசும் நேருவா!

திராவிட நாடு – 9-3-52