அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பொம்மை மனிதர்கள்

தங்களைப் போன்ற மக்களை வெறும் பொம்மைகளாக்கி விடத் தங்களால் முடியும் என்று தெரிந்து கொண்டுள்ள மனிதர்கள் பலர் இருக்கிறார்கள்.

இதை உணர்ந்து எதிர்க்கக்கூடிய பகுத்தறி வுள்ள மக்கள் மொத்த ஜனங்களில் பத்துக்கு ஒருவர் வீதம்தான் இருக்கிறார்கள்.

இந்த அபாயத்தைக் கண்டு எதிர்த்துப் போரிட வேண்டிய மக்களெல்லாம் பெரும்பாலும் இதைக் காண்பதில்லை. கண்டாலும் என்ன செய்வதென்று அவர்களுக்குப் புரிவதில்லை.

மக்களாட்சி எனும் மாண்புள்ள கொள்கை- நடைமுறைத் திட்டமாக்கும்போது, நயவஞ்சகம் கொண்டவர்கள், பொதுமக்களை எளிதில், தந்திரமாக ஏமாற்றிவிட முடிகிறது- ஏமாற்றத்து டன், பொதுமக்களை, தலையாட்டிகளாக்கி விட முடிகிறது என்ற நிலையை விளக்கி, மேற்குறித்த கருத்தை வெளியிட்டார். பிரபல ரஷிய தத்துவ நூலாசிரியர் டாக்டர் சர்ஜ் சாகோடின் ``பொதுஜனச் சீரழிவு'' என்னும் தமது நூலில்.

முடியாட்சியின்போது, மக்கள் ஏதுமறியார், மக்களுக்குத் தக்கது எது என்பதைக் கண்டறியும் பண்பு வேந்தருக்கே உண்டு, எனவே, ஆட்சிப் பொறுப்பு முழுவதும் வேந்தரிடமே இருத்தல் வேண்டும், மக்கள் தங்கள் தனி வாழ்க்கையைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டுமே ஒழிய, ஆட்சித் துறை பற்றியோ, திட்டங்கள் பற்றியோ கவலை கொள்ளக்கூடாது என்ற கோட்பாடு, வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோட்பாட்டினைக் கோல்கொண்டோர், வாள் முனையின் துணை கொண்டு, நிலை நாட்டினர்.

குடியாட்சி முறையின்போது, மக்களுக்கு ஏதும் தெரியாது என்றல்ல, மக்களுக்கு எல்லாம் தெரியும், என்று புகழுரை கூறி, ஏய்க்கப்படுகிறது. மன்னர்களின் வாள் முனைக்குப் பதில், தாள் முனை- `பேனா முனை' பிரசாரம் பயன்படுத்தப்படுகிறது.

வாள்முனையைக் காணும் போதாவது மக்களுக்கு ஆத்திரம் உண்டாகும்- பொறுத்துப் பார்த்துப் பார்த்து இனிச் சகிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. வாளுக்கு வாள் என்ற பயங்கர நிலைமைக்கும் தயாராகி விடுவர்- வரலாறு இது போன்ற பல சம்பவங்களைக் காட்டுகிறது.

ஆனால், ஆளவந்தார்கள், மக்களுக்கு மன்னர்கள்போல ஆத்திரமூட்டாது. அவர்களை அன்புரை கொண்டு அர்ச்சித்து, நல்வாக்குகளை வீசி நேசர்களாகக் கொண்டு, எம்மை நம்புக! உமது ஊழியரன்றோ யாங்கள்! உமக்கு எது தேவை, எங்ஙனம் அதனைச் செய்தல் வேண்டும் என்ற அறிவும் அக்கறையும் எமக்கு இல்லையோ! எமது ஆற்றலிலே உமக்குச் சந்தேகமோ என்று பசப்புரை கூறி, பிரச்சாரப் புகைப்படலத்தை ஏவியதும், பொதுமக்களுக்கு, கோபமும், கொதிப்பும் அல்ல, மயக்கம் ஏற்படுகிறது- அவர்கள் சர்ஜ்சகோடின் கூறுவது போல, பொம்மைகளாகி விடுகின்றனர்.

பொதுமக்களை இதுபோலாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையும் இது போலாக்கி விடக்கூடிய தந்திர பலமும் பெற்றவர்கள். ஜார்களை விடக் கொடுங்கோலாட்சியை அமைத்துவிட முடியும், குடிஅரசு முறையிலே . எனவேதான், குடி அரசு முறை வெற்றி பெற வேண்டுமானால், பொதுமக்கள் இடைவிடாது, விழிப்பாக இருக்க வேண்டும், தலையாட்டிகளாகி விடக்கூடாது நம்ம சர்க்கார் என்ற பாசத்துக்கும், பயத்துக்கும் இடமளித்து விடக்கூடாது. ஆளவந்தார்கள் ஆட்சிப் பீடம் அமருமுன்னம் சொன்னதைச் செயலில் காட்டுகிறார்களா, இல்லையா, என்பது பற்றிக் கவனித்து வர வேண்டும், தவறாகச் செல்லத் துணிந்தால் கண்டிக்கவும், திருத்தவும் அதனால் பலன் கிடைக்காது என்று ஏற்பட்டால், அடியோடு நீக்கிப் புத்தம் புதிதாக ஆட்சி முறை ஏற்படுத்தவும் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வளவும் செய்ய உரிமை இருக்கிறது பொதுமக்களுக்கு- இந்த உரிமையைப் பொது மக்கள், உல்லாசப் பயணத்திலே பெறவில்லை. தானமாக அவர்களுக்குத் தரப்பட்டதல்ல, இதைப் பெற, உருண்ட தலைகள்- ஓடிய இரத்த ஆறுகள், ஏராளம்- பாடுபட்டுத் தேடிய இந்த உரிமையைப் பாழாக்கிக் கொள்ளும்போது, பயங்கரமான பாசீசம் உருவெடுக்கிறது. - முடிசூடா மன்னர்கள் மூர்க்கராகின்றனர், முசோலினிகளாகின்றனர். இந்த நிலையை வரவிடாது தடுக்கத்தான் மக்கள் எப்போதும் கருத்தைக் குருடாக்கிக் கொள்ளா மல், சிந்தனையை முடமாக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று, பேரறிவாளர்கள் பலரும் கூறி வந்திருக்கின்றனர். மக்கள் தமது உரிமையின் மேன்மையை மறந்துவிட்டால், பொதுஜன சீரழிவு ஏற்படுகிறது என்பதைத்தான் டாக்டர் சர்ஜ் சகோடின் என்பவர் கூறினார்.

நம்ம சர்க்கார் என்ற பாசத்தின் காரணமாக, இன்றைய ஆட்சியாளர்கள் செய்யும் பல சீரழி வான காரியங்களை, மறைக்கவே, பல காங்கிரஸ் நண்பர்கள் முயற்சிக்கிறார்கள்- இதன் விளை வாகப் பொதுஜனச் சீரழிவு ஏற்படுமே என்பது பற்றி கவலையுமற்று, திருச்சிற்றம்பலத்தார், கவி பாடினார். நாட்டிலே உள்ள நிலை கண்டு- கேட்டினைக் களைந்து, நாட்டு மக்களின் வாழ்விலே புதியதோர் நலனைப் புகுத்துவோம் என்று சூளுரைத்து ஆட்சிப்பீட மேறியவர்கள், கவிராயர் காட்டும் காட்சிகள் உண்மையல்ல என்று மறுத்துக்கூற முடியாது. மக்கள் கவியல்ல, பாட- கபோதிகளல்ல, அந்தக் காட்சிகளைக் காணாதிருக்க. காட்சிகளைக் காணுகின்றனர், ஆனால், அவை பற்றி எண்ணிட மறுக்கின்றனர்- எண்ணும்போதோ, கவிகள் பாடுகின்றனர்- வேறு சிலர் கண்ணீரே சொரிகின்றனர்.

நம்ம சர்க்கார் ஏற்பட்டதும் புதியதோர் நம்பிக்கையும் பிறந்தது- காரணமும் இருந்தது அந்த நம்பிக்கைக்கு.

நாட்டிலே உள்ள நலிவுகள் போக்கப்படக் கூடியன, கேடுகளைக் களைந்துவிட முடியும், வறுமையை ஒழித்து விட முடியும், மக்களுக்கு நன்மைகள் ஏற்படச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள், புள்ளி விபரங்களைக் காட்டிப் பேசக் கேட்டனர் பொது மக்கள்- எனவே அந்தக் காங்கிரஸ் தலைவர்கள் ஆளவந்தார்களா னதும், நம்ம சர்க்கார் வந்துவிட்டது, நாட்டுக்குப் புதுவாழ்வு கிடைத்துவிட்டது என்று பூசித்தனர்.

ஏழைக்கு வரி மேல் வரி போடப்படுகிறது- அவன் வாழ்வும் வளைந்தே போகிறது. பணக் காரர் மீது ஏற்ற வேண்டிய பாரத்தை ஏழையின் மீது போடுவது அக்ரமம் அநீதி. ஆனால், பாழும் வெள்ளையனுக்கு, நிதியைப் பற்றி என்ன கவலை- ஏழையின் அழுகுரல் எங்கே அவன் செவியில் விழப் போகிறது அவன் செவியிலே சீமான்களின் சிரிப்பும், பதவி வேட்டைக்காரர் களின் பசப்பும்தானே ஏறுகிறது! ஏழையின் வாழ்வைக் கெடுக்கும் வெள்ளையராட்சி ஒழிந்து நம்ம சர்க்கார் ஏற்பட்டால், வரிப் பளவு ஏழையின் மீதா இருக்கும்! கொள்ளை அடிப்போருக்கு இடம் இருக்குமா? பணமூட்டைகள் எங்கெங்கு மறைந்து வைக்கப்பட்டுள்ளன என்று கண்டறிந்து வெளியே கொண்டுவந்து, நாட்டுக்குச் செலவிட மாட்டோமா! நம்ம சர்க்கார் வரவேண்டும், ஏழை சுகப்பட வேண்டும் கதிரவன் உதிக்க வேண்டும், காரிருள் நீங்கிப் போகும்! என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே ஆர்ப்பரித்தனர். தலைவர்கள்- மக்கள், இவைகளைக் கேட்டுக் கேட்டு இன்புற்றது மட்டுமல்ல, இந்தத் தலைவர்கள் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தால்- அதாவது, நம்ம சர்க்கார் ஏற்பட்டால், நாட்டுக்குப் புது வாழ்வு நிச்சயமாகக் கிடைக்கும், என்று நம்பிக்கையும் கொண்டனர்.

ஏழை தரும் வரிப் பணம் எப்படி எப்படிப் பாழாகிறது தெரியுமோ? நினைத்தாலே, நெஞ்சு வேகும். இங்கு சராசரி வருமானம் ஒன்றே காலணா! ஆமாம் நண்பர்களே! பீமனும், விஜயனும், ராமனும், கண்ணனும், சேரனும், சோழனும், ஆண்டு வந்த இந்தப் புண்ய பூமி யிலே, பொன் விளையும் பூமியில், ஆளுக்குச் சராசரி வருமானம், ஒன்றேகாலணா! வயிறு எரியாதா! ஒன்றே காலணா வருமானம், ஏழை இந்தியருக்கு- ஆனால் இவர்களுக்கு ஒரு வெள்ளைக்கார வைசிராய் இருக்கிறார். இந்தச் சீமைத் துரைக்கு தரப்படும் கொள்ளைச் சம்பளம் என்ன தெரியுமோ, மாதம் இருபத்தைந்தாயிர ரூபாய்! இது மட்டுமா! படி செலவு வேறு! கவர்னர் களுக்குப் பத்தாயிரம் கணக்கிலே, சம்பளம், ராணுவத்துக்கு பெரும் செலவு, ஏழையின் பணம் இப்படிக் கொள்ளை போகிறது. எப்படி அவன் வாழ முடியும்? அவனிடமிருந்து வசூலிக்கப்படும் பணம் இப்படிக் கொள்ளைச் சம்பளத்துக்கு செலவாகிவிட்டால், அவனுடைய கல்விக்கும், சுகாதாரத்துக்கும், பணம் ஏது? செலவிட நம்ம சர்க்கார் ஏற்பட்டால், இப்படியா கவர்னர்களுக் கும், கவர்னர் ஜெனரல்களுக்கும், மேஜருக்கும், சுபேதாருக்கும், கலெக்டருக்கும் மற்றவருக்கும், கொள்ளை கொள்ளையாகச் சம்பளம் கொட்டி கொடுப்பார்கள்! நடைபெறுமா இந்த அநியாயம்! நம்ம சர்க்கார் ஏற்பட்டால் ஐந்நூறு ரூபாய்க்கு மேல் சம்பளமே இராது! கவர்னரானாலும் சரி, கவர்னர் ஜெனராலானாலும் சரி! சம்பளத்தின் பேரால் பாழாகும் பணத்தை மிச்சப்படுத்தி, ஏழையின் நன்மைக்குச் செலவிடுவோம். இதற்குத்தான் நம்ம சர்க்கார் ஏற்பட வேண்டும் என்று கூறுகிறோம்- என்று காங்கிரஸ் தலை வர்கள் முழக்கமிட்டனர்- பொதுமக்களுக்கு, நம்ம சர்க்கார் மீது பாசம் வரத்தானே செய்யும்.

நாடு காடானால் அவனுக்கு என்ன! நமது மக்கள் நடைப் பிணமானால் அவனுக்கு என்ன? தேயிலை, ரப்பர் தோட்டத்துக்குக் கூலிகளாகச் சென்று சீரழிவுபடுகிறார்கள் நமது மக்கள். அவனுக்கு என்ன, இவைகளைப் பற்றி அக் கறையும் அன்பும் எப்படி அவனுக்கு ஏற்பட முடியும்! அவன் அன்னியன்தானே! வெள்ளைக் கார சர்க்காருக்கு நமது மக்களைப் பற்றி அன்பு ஏற்பட முடியும்! கொள்ளை அடித்துக் கொண்டு போய் சீமையிலே கூட கோபுரம் கட்டிக் கொள்ளத்தானே இங்கே வந்திருக்கிறான். இங்கு ஆறுகள், வெள்ளைப் பெருக்கெடுத்தோடி, நாட்டையும் பாழாக்கி பயிருக்கும் தேவையான போது உபயோகமாகாது நாசவேலை செய்கிறது. அணைகள் கட்டலாம்- தேக்கங்கள் அமைக் கலாம்- காடு கரம்புகளைத் திருத்தலாம்- ஆனால் இதற்கெல்லாம், நம்ம சர்க்கார் ஏற்பட்டால் தானே முடியும்! என்று எண்ணற்ற முறை பேசக் கேட்டுக் கேட்டு, மக்கள்ள் நம்ம சர்க்கார் ஏற்பட்டாக வேண்டும் என்று `தவம்' கிடந்ததிலே, ஆச்சரியம் என்ன?

இவ்வளவு இன்பக் கனவுகள்! சுவையுள்ள சுலோகங்கள்! எழுச்சி தரும் முழக்கங்கள்! தித்திக்கும் திட்டங்கள்! பிரமிக்கச் செய்யும் புள்ளி விவரங்கள்!! மேடைகளிலே பேசப்பட்டன.

இவைகளை எல்லாம் கேட்ட மக்கள், எழுச்சி கொண்டதில் நம்பிக்கை கொண்டதில், ஆச்சரியமென்ன! எனவேதான் நம்ம சர்க்கார் என்ற சேதி கேட்டுச் சொக்கினர்.

நம்ம சர்க்கார் என்ற உடனே மக்களின் மனக் கண் முன்பு, மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளம் வாங்கும் கவர்னர் ஜெனரல் முதற்கொண்டு, பசியார உண்டு பண்பாடிக் களிக்கும் பாட்டாளி வரையிலே, வரிசை வரிசையாகப் பல காட்சிகள் தோன்றின. இருண்ட வீட்டிலே ஓர் மணி விளக்கு ஒளிதரக்கண்டான், களிதான். நாட்டுச் செல்வம் மேட்டுக் குடியினரின், பூட்டிய பெட்டியிலே தூங்கிக் கிடக்காமல், பொது நலனை வளர்த்திடக் கண்டான். தேயிலைத் தோட்டம் சென்று வாழ்வு தேய்ந்து போனவர்கள், தாயகம் திரும்பி வந்து, மணிக்கொடியைக் கண்டு மகிழ்ந்து, புது வாழ்வு பெறக் கண்டான். இவ்வளவும், இவற்றினுக்கு மேலாகவும் பல இனிய காட்சிகள் மனக்கண் முன் தோன்றின. நம்ம சர்க்கார் என்ற உடனே பொதுமக்களின் ஆர்வம் பொங்கிக் கொண்டி ருந்த அந்த நேரத்திலே, யாராவது ஒருவர் ``தம்பி நம்ம சர்க்கார் ஏற்படப் போவது உறுதி''- ஆனால் அது நாட்டுக்கு நல்லது செய்யுமென்பதற்கு உறுதி கூற முடியாது- நம்ம சர்க்கார் ஏற்பட்டு அப்போதும் மாதம் 20 ஆயிரம் சம்பளம் பெறும் கவனர் ஜெனரலும் மற்றபடி பெரும் பெரும் தொகை சம்பளம் வாங்கும் பெரிய அதிகாரி களும் இருக்கத்தான் போகிறார்கள். துரைமார் களுக்குப் பதில், நம்மவர்கள் இருப்பார்கள் அந்த அலங்காரப் பீடங்களில்- ஆனால் நீ எதிர் பார்க்கிறபடி சம்பளக் கொள்ளை மட்டும் குறைந்து விடும் என்று எண்ணாதே- அது நடவாது'' என்று சொன்னால் ஆத்திரமே கொள்வர் பொதுமக்கள். ``இவன் ஆங்கிலே யனின் ஏஜண்டு'' என்று தூற்றுவர் தூற்றினர். ஆனால் இன்று நம்ம சர்க்காரிலே நம்ம ராஜ கோபாலாச்சாரியார் கவர்னர் ஜெனரலாக இருக்கிறார்- சம்பளம் எவ்வளவு? 499 ரூபாயா? நம்ம நேருவே முதல்வர்! சம்பளம் எவ்வளவு! நம்ம நேருவின் சகோதரியார் தூதுவர்! சம்பளம் எவ்வளவு! இந்தியாவின் ஏழ்மையையும், சம்பளக் கொள்ளையால் அந்த ஏழ்மை அதிகப் படுத்துவதையும், அறியாதவர்களல், இவர்கள் அறிவித்தவர்கள் நாட்டுக்கு! இன்று என்ன நிலை! நம்ம சர்க்காரிலே, நம்ம தலைவர்கள், சம்பளம் எவ்வளவு பெறுகிறார்கள்- நாம் எதிர் பார்த்தபடியா- ஏழையின் மனம் குளிரும்படியா- அல்ல! அல்ல! அவர்களின் வாசகத்தின் படி கூறுகிறோம், ``அந்தந்தப் பதவிகளுக்குள்ள அந்தஸ்த்துக்கு ஏற்றபடியான சம்பளம்'' பெறுகிறார்கள்!! இதையா, மக்கள் எதிர்பார்த்தனர் நம்ம சர்க்காரில்?

எண்ணிப் பார்க்க வேண்டாமா காங்கிரஸ் நண்பர்கள், சொல்லும் செயலும் முரண்பட்டுப் போகும் காரணம் என்ன, எப்படி இதை நியாயம் என்று ஒப்புக்கொள்ள முடியும்- நம்ம சர்க்கார் என் இப்படிப்பட்ட போக்கிலே செல்கிறது என்றெல் லாம், யோசிக்க வேண்டாமா, தமது கட்சி யினருக்குக் கூற வேண்டாமா? கடிவாளம் அறுபடும் சத்தம் கேட்ட பிறகும் கவலையற்று வண்டிக்குள் அமர்ந்து கொண்டு கிளிக் கண்ணி பாடுவதா! ``பாடுகிறீரே நண்பரே! கடிவாளம் அறுந்துவிட்டதே!'' என்று பாதை ஓரம் நின்றபடி எச்சரிப்பவரைக் கண்டு, எச்சில் துப்புவதா! வண்டி நம்ம பட்டறையில் தயாரிக்கப்பட்டது- குதிரையோ, குட்டியாக இருக்கும் போதிருந்தே என்னால் வளர்க்கப்பட்டது. இதைக் குறை கூறும் துணிவு கொண்ட உலுத்தனே யார் நீ! விலகிச் செல்! வேலையைப்பார்!'' என்று வெகுண்டு ரைத்து, உன் பயணத்துக்கு ஆபத்து வரக் கூடுமய்யா குதிரையின் கடிவாளம் அறுந்து விட்டது என்று எச்சரிப்பவர் மீது சவுக்கால் வீசுவதா!

காங்கிரஸ் நண்பர்கள் இன்று இதே காரியம் தானே செய்கிறார்கள். நம்ம சர்க்காரிலே இன்னின்ன - குறைகள் உள்ளன என்று எடுத்துக் காட்டினால், இன்னின்ன தவறுகளைச் செய்கிறது என்று விளக்கினால் அதனால் இத்தகைய ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தால், சீறியன்றோ விழுகிறார்கள். இந்தப் போக்கு, எங்கு கொண்டு போய் விடும் பெர்லினுக்குத்தானே!

காங்கிரஸ் விடுதலைப் போர் நடத்திய போது, சொல்லொண கஷ்ட நஷ்டத்துக்கு உட்பட்ட ஆயிரமாயிரும் இளைஞர்கள். இப்படிப்பட்ட ``நம்ம சர்க்கார்'' ஏற்படுமென்றா எண்ணினார்கள்! இன்று அவர்களிலே, நேர்மை யாளர்கள் யாவரும், வெட்கமும் துக்கமும் அடையக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வெளிப்படையாகப் பேச முடிகிறதா! பேசினால், உடனே கட்சியின் தூண்கள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கின்றன! தொண்டர்கள், தியாகிகள் எப்படிப்பட்ட இலட்சணம் கொண்ட வர்களாக இருக்க வேண்டும் தெரியுமா என்று, பதவிக்காரரின் பஞ்சாங்கங்களாகி விட்ட ஏடுகள், உபதேசம் செய்கின்றன. பிறகு உருட்டல் மிரட்டல் நடையில் எழுதுகின்றன. தொண்டர், என் செய்வர்!

பல நாட்களாகக் காங்கிரஸ் கட்சியின ராகவே இருந்து வந்தோம், அந்தக் கட்சியின் மேன்மையை நாட்டு மக்களுக்கு நாமே பன்முறை எடுத்துக் கூறிவந்தோம். நம் சர்க்கார் அமைக்கப்பட்டதும், இன்னல்கள் மாய்ந்து போகும். துன்பம் தீய்ந்து போகும். நன்மை வந்தெய்தும், என்றெல்லாம் நல்வாக்குக் கொடுத்து வந்தோம். இப்போது, நாமே `நம்ம சர்க்காரின் போக்கு பொது மக்களின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்பதையும், சர்க்காரை நடத்தும் `நம்ம கட்சியிலே, ஊழலும், சுயநலமும் தலை விரித்தாடுகிறது என்பதையும் எடுத்துக் கூறினால், நம்ம கட்சியைப் பற்றி மக்கள் என்ன எண்ணுவார்கள்- நம்மைப் பற்றியும் என்ன எண்ணுவார்கள்- ஏன் நமக்கு இந்த வேதனை- வெளியே சொன்னால் வெட்கக் கேடு, என்றெண்ணி ஏக்கமடைகின்றனர். சிலர் மனமுடைந்தும் போயினர்.

தொண்டர்களும், தியாகிகளும் கட்சியின் போக்கைக் கண்டு கலங்க, கதற முடியுமே தவிர, கட்சியைத் திருத்தி அமைக்கவோ, கட்சி, தவறான பாதையிலே செல்லுகிறது என்பதை நாட்டு மக்கள் உணரும்படி செய்யவோ, முடியாது- அவர்கள் அதற்கான வலிவும் வசதி யும் இல்லாதவர்கள்.

ஏடுகள், நாடாள்வோரின் கேடயங்களாகி விட்டன.

தலைவர்களே இருவகை- ஒரு சாரார் இப்போது பதவியில் உள்ளவர்கள்- மற்றோர் சாரார், இனிக் கிடைக்கும் என்ற ஆசைக்கு அடிமைப்பட்டவர்கள்- எனவே இருசாராரும், கட்சியின் மீது `மாசுமரு' இல்லை என்றே மக்கள் கருத வேண்டும் என்பதிலே நிரம்ப அக்கறை கொண்டவர்கள்- அவர்களின் பேச்சு, தியாகி களின் பெருமூச்சு மக்களின் செவியிலே விழ ஓட்டாதபடி தடுத்துவிடுகிறது.

மாற்றாந் தாய் கொடுமை புரிகிறாள். சிரித்த முகத்துடன் கொடுமைக்காளாகும் சிறுவனோ வேதனைப்படுகிறான். ஆனால் விளக்கமாக விஷயத்தைக் கூறமுடியாது. ஊமை! தகப்பனோ செவிடு. இந்நிலையில், குடும்பம் எவ்விதம் இருக்கும்! பொதுமக்களின் இன்றைய நிலை. இப்படிப்பட்ட குடும்ப நிலைபோன்றே இருக் கிறது.

இன்னமும், இதனை நம்ம சர்க்கார் என்று நம்பிக்கொண்டு, பாத்யதை கொண்டாடும் காங்கிரஸ் நண்பர்களுக்கு, திருச்சிற்றம்பலத் தாரின் கவிதையைவிட உள்ளத்தை உருக்கக் கூடிய வேறோர் சம்பவத்தையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். கவிதையே மனதைக் கலக் கிற்று. ஒரு பெருங்கிழவனாரின் கண்ணீர். உண்மையில், காண்போருக்கு, எவ்வளவு வேதனையைத் தரும். இன்றைய காங்கிரசின் நிலைமையைக் கண்டு பாபு புருhத்தமதாஸ் தாண்டன் கண்ணீர் சொரிந்தார் என்று காங்கிரஸ் ஏடுகளே எழுதின.

``காங்கிரசாரிடம் ஊழலும், இலஞ்ச இலாவண்யமும் மிக அதிகமாகப் பரவிவிட்டது.

பதவி வேட்டை உத்யோக வேட்டை அரசியல் செல்வாக்கை உபயோகித்து, வியாபார வசதிகள் பெறுவது, அதிகாரிகளை மிரட்டி சுயநலக் காரியத்தில் ஈடுபடுவது ஆகிய கெட்ட குணம் குடிகொண்டுவிட்டது.

ஊர்மக்கள் இந்தவிதமான நடவடிக்கை களில் காங்கிரசார் ஈடுபடுவது கண்டு, இதுதானோ தியாகம்! இதுதானா தேச பக்தர்களின் திருக் கலியாண குணம்! என்றெல்லாம் கேவலமாகப் பேசுகிறார்கள்.

இப்படிக் காங்கிரசாரைப் பொது மக்கள் கேவலமாகப் பேசுவது கேட்டு, எனக்குத் தலை இறக்கமாக இருக்கிறது- வெட்கமும், துக்கமும் என்னைப் பிடித்தாட்டுகிறது.

என் காங்கிரஸ் நண்பர்கள் இப்படிப்பட்ட கேவலமான நிலைமைக்கு வருவார்கள் என்று நான் துளியும் எண்ணினதில்லை.

இவ்விதம் இவர்களாகி விடுவார்கள் என்று முன்கூட்டியே எனக்குத் தெரிந்திருந்தால், நான் இந்த நிலைமையைவிட, முன்பு இருந்த அடிமைத் தனமே மேல் என்று கூடக் கருதியிருப்பேன்.''

இவ்வாறாகவெல்லாம் கூறிக் கதறினார் காங்கிரசின் பெருங்கிழவனார் பாபு புருஷோத் தமதாஸ் தாண்டன், ஒரு பொதுக் கூட்டத்தில்.

இந்தச் செய்தி, காங்கிரஸ் ஏடுகளிலேயே வெளிவந்தது.

`நம்ம சர்க்கார்' நடைபெறுகிறது, நமக் கென்ன பெருமைக்கும், பூரிப்புக்கும் குறைவா, இந்தச் சர்க்காருக்கு எதிரிடையாக எவனாவது நாக்கை வளைக்க முடியுமா என்று வீம்பு பேசும் நண்பர்கள், தாண்டன் உதிர்த்த கண்ணீர் எப்படிப் பட்டது என்பது பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். தியாகிகள் கண்களிலே நீர் வழியும் படியான நிலை, `நம்ம சர்க்காரில் இருப்பானேன்?- என்பது பற்றிக் காங்கிரஸ் நண்பர்கள் எண்ணிப் பார்த்தனரா? இனியேனும் எண்ணிப் பார்ப்பார் களா? எண்ணத் தொடங்கினால், `நம்ம சர்க்கார்' என்ற பாசப் பேச்சு, பற்பல ஊழல்களை மூடி போடவும், சுயநலத்துக்கு வழி செய்யவும், இறுதியில் பாசீசத்துக்கு ஏற்பாடு செய்யவும், பயன்படுமேயொழிய, பொதுப்பண்பை வளர்க் கவோ, நாட்டைத் திருத்தவோ, ஜனநாயகத்தைத் துவக்கவோ பயன்படாது என்பது விளங்கும்.

பாபு தாண்டன் கதறுவதற்கு முன்பே, இந்த நிலைமையை வெளிப்படையாகவே எடுத் துரைத்தார் கிருபளானி- காங்கிரஸ் அக்ரா சனராக இருந்த வண்ணம்.

அதற்கும் சில நாட்களுக்கு முன்பு, காந்தியாருக்கு, இந்த நிலைமை விளக்கிக் கடிதமே எழுதினார். ஆந்திர நாட்டுப்பழம் தேச பக்தர் கொண்டாவெங்கடப்பா.

சமயம் கிடைக்கும்போதெல்லாம், ஜெயப் பிரகாசும், அவர் சகாக்களும் இந்த நிலைமையை நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறியபடியே உள்ளனர்.

இவ்வளவு பேரும், இளித்தவாயர்களா, காங்கிரசின் எதிரிகளா, விடுதலைப் போரிலே புறமுதுகிட்டவர்களா, தியாகத் தீயிலே குளிக்காத வர்களா, பதவிப் பித்துக் கொண்டவர்களா, பாரத மாதாவின் வைரிகளா! அல்லவே! காங்கிரசின் மகத்தான வெற்றிக்காகப் பாடுபட்டவர்கள்- நம்ம சர்க்கார் ஏற்பட உழைத்தவர்கள்- அவர்கள் கூறுகிறார்கள் மனம் நொந்து நம்ம சர்க்கார் அமைந்தது, பயன் ஏற்படவில்லை, ஊழல் உள்ளம் ஏற்பட்டு விட்டது நமது காங்கிரஸ்காரர் களிலேயே பலருக்கு என்று, இந்த நிலையில் `நம்ம சர்க்கார்' என்று பாத்யதை கொண்டாடு வதிலே, என்ன பலன்! மக்களாட்சி தக்க விகிதத் தில் அமைக்கப்பட்டு, நாட்டுக்கு நல்லதோர் நிலை வரவேண்டும் என்பதிலே அக்கறை கொண்டவர் கள். இனியும் `இது நம்ம சர்க்கார்- நாமும் குறைகூறக் கூடாது. பிறர் கூறினாலும் கேட்டுக் கொண்டிருக்க முடியாது' என்று பேசுவது, அழகு மல்ல, அறமுமாகாது, அறிவுடைமையுமல்ல.

`நம்ம சர்க்கார்' என்பதற்கு, நம்முடன் இருந்த ஒரு சிலர் நடத்தும் சர்க்கார், என்று மட்டும் பொருள் கொள்வது, அரசியல் தத்துவமல்ல. குடும்பக் கொஞ்சு மொழி. அந்தக் கொஞ்சுமொழி, செங்கோலுக்கு வழி செய்யாது.

நம்ம சர்க்கார் என்றால், நமது இலட்சி யங்கள், இன்பக் கனவுகள் ஆகியவற்றை நடைமுறைத் திட்டங்களாக்கும் நல்லாட்சி என்று பொருள் அமைத்து, அந்தப் பொருளுக்கு ஏற்றபடி சர்க்காரின் போக்கு இருக்கிறது என்று பரிசீலனை செய்து பார்ப்பதுதான். ஜனநாயகவாதி யின் கடமை. இந்த கடமையை மறந்திடும் அளவுக்கு, `நம்ம சர்க்கார்' என்ற பாசம் படருமானால், பிறகு பேரறிஞர் கூறியது போல, ``தங்களைப் போன்ற மக்களை பொம்மைகளாக்கி விட முடியும்'' என்ற தந்திர அரசியலே வெற்றி பெறும்.

எனவே, நம்ம சர்க்கார் என்பதற்கு, தக்க பொருளைக் கண்டறிவதும் அந்த இலட்சணத் துக்கு ஏற்றபடி, அமைப்பும் போக்கும் அன்றாட நடவடிக்கையும் அடிப்படைத் திட்டங்களும் உள்ளனவா என்று அலசிப் பார்ப்பதும், தவறுகள் தெரியும்போது கண்டித்துத் திருத்துவதும் காங்கிரசிலே உள்ள நேர்மையாளர்களின் கடமையாகும். நாட்டிலேயோ வேறு கட்சிகள் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது போன்ற வசதி களுடன் இல்லை. இந்தச் சூழ்நிலையில் சர்வாதிகாரப் போக்கு சுலபத்திலே சாத்தியமாகி விட முடியும். காங்கிரசிலேயே நேர்மையாளர்கள் சிலரேனும், பாசத்தை மறந்து விழிப்புணர்ச்சி கொள்ளாவிட்டால் தங்களுக்கு, ஏற்பட்டு விடும் வலிவைக் கொண்டு, பிற கட்சிகளை மிரட்டவும், அடக்கவும், அழிக்கவும், ஆர்வம் பிறப்பதும், அதிலே ஒரு அலாதியான ஆனந்தம் ஏற்படு வதும் சகஜம். ஆனால் அந்த ஆனந்தத்தையே சிலாக்கியமானது என்று எண்ணிக்கொண்டு, ஜனநாயகத்தைச் சித்திரவதை செய்து, தற்கொலைத் திட்டம்.

நம்மை விட நமது நாடு, நமது மக்கள், நல்லாட்சி, என்பவைகளுக்கு மாண்பு அதிகம் என்பதை மறக்கக் கூடாது.

உச்சிக் கிளையில் நாம் வீற்றிருக்கிறோம். வேலிப்பக்கம் இருந்து பேசுபவனை நாம் உதாசீனம் செய்யலாம் என்று எண்ணுவதும், தோணியிலே நாம் பயணம் செய்கிறோம், கரை ஓரமிருந்து ஏதோ கூவுபவனைப் பற்றி நமக் கென்ன கவலை என்று எண்ணுவதும், மேலெ ழுந்தவாரியாகப் பார்க்கும்போது, சகஜமாகத் தான் இருக்கும் - கூர்ந்து பார்த்தால்தான், உச்சிக்கிளை முறியும் போலிருக்கிறது என்பதைக் கண்டறிந்த பிறகே, வேலி ஓரத்திலிருப்பவன் எச்சரிக்கை செய்கிறான். தோணி செல்லும் பாதையிலே பாறை உண்டு என்பதை எச்சரிக்கவே கரை ஓரம் உள்ளவன் கூவுகின்றான் என்பது விளங்கும். அது போலவேதான் இன்று தட்டிக் கேட்க ஒரு கட்சியும் இல்லாத நிலையில் தர்பார் செலுத்தும் நண்பர்கள், அந்தத் தர்பார் போக்கிலே உள்ள தவறுகளை, `சாமான்யர்கள்' எடுத்துச் சொல்லும் போது, இவர்கள் யார்! என்று அலட்சியமாகக் கருதுகிறார்கள். அந்த அலட்சிய சுபாவந்தான் ஆட்சிமுறையைக் கெடுத்து, பொதுஜனச் சீரழிவை உண்டாக்கும் என்று அறிந்தோர் உரைக்கின்றனர். அவனியில் வேறு பல இடங்களிலே இதுபோல் நடந்த சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு.

நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தப் படும் கிளர்ச்சிகளெல்லாம் கூட அடக்கு முறை யினால் அழிக்கப்பட்டு விடுகின்றன என்பதைக் காங்கிரஸ் நண்பர்களே அறிவார்கள். - அவர்களிலே, சிலர் அதனைத் தமது கட்சிக்கும், சர்க்காருக்கும் உள்ள மகத்தான பலத்துக்கு அத்தாட்சி என்று கூடக் கூறிப் பெருமைப் படுகிறார்கள். ``அடி அம்மா! அதுக்குக் கோபம் வந்தா, மனுஷசுபாவமே இராது. அடி ஒவ்வொன்றும், உடம்பிலே, அப்பளமாகத் தழும்பு உண்டாக்கிவிடும். முரடு'' என்று அடிபட்ட பத்தினி, மறுநாள், தன் பர்த்தாவின் வலிவைப் பற்றியும், முரட்டுச் சுபாவத்தைப் பற்றியும், பெருமையோடு பேசிக் கொள் வதுண்டல்லவா- அதுபோன்ற போக்கு, அரசிய லிலே இருந்திடக் காண்கிறோம்.

காங்கிரஸ் மகத்தான சக்தியின் முன்பு இந்த எதிர்ப்புகள் எம்மாத்திரம். கிளர்ச்சிக்காரர் களுக்குப் பூஜை சரியாக இரண்டு தடவை கொடுத்தால் தீர்ந்தது. ``இருக்குமிடமே தெரியாது, என்ற பேச்சு, கதருடையினருக்கு மிக மிகச் சாதாரணமானதாகிவிட்டதுடன், அவர்களுக்குச் சந்தோஷமும் தருவதாகிவிட்டது. இந்தப் போக்கின், முழுவிளைவு, என்ன என்பது பற்றிய எண்ணம் ஏற்படுவதில்லை. கிளர்ச்சிகள்- வேறு வட்டாரத்திலிருந்து கிளம்பி அழிக்கப்படும் படலம் முடிந்ததும்- காங்கிரசிலேயே உள்ள நண்பர்கள் தங்கள் கொள்கைக்காக உள்ளபடியே ஏதேனும் கிளர்ச்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால்- அந்தக் கிளர்ச்சிக்கும் இதே கதி தான் ஏற்படும். இந்தச் சூட்சுமம் துவக்கத்திலே, தூபமிடும் நேரத்திலே, தெரிவதில்லை.

கருத்து வேற்றுமை இயல்பாக ஏற்பட்டு, காங்கிரஸ் சர்க்கார் செய்யும் ஏதோ ஒரு திட்டம், காங்கிரசாரில் ஒரு பகுதியினருக்குப் பிடிக்க வில்லை என்று வைத்துக்கொள்வோம்- தமது கருத்தை கமிட்டி மூலம், கடித மூலம், மந்திரி களைப் பேட்டி காணுவதன் மூலம், கண்டனக் கூட்ட மூலம் வெளியிட்டுப் பார்த்து வெற்றிக் கிட்டவில்லை என்றால், கிளர்ச்சியில் இறங்கத் தானே தோன்றும்- அப்போது, எந்த அழிக்கும் சக்தியைக் கண்டு காங்கிரஸ் நண்பர்கள் புளகாங்கிதமடைந்தனரோ, அதே சக்தியைக் கண்டு ஆயாசமடையவும், அச்சப்படவும் நேரிடும். அந்த நிலைமை வருவதற்கு முன்னமேயே, ஜனநாயகத்துக்கு அரண் அமைக்க வேண்டும்.நியாயமான கிளர்ச்சிகளை ஒடுக்க அட்க்குமுறையை வீசும்போது, ``நம்ம சர்க்கார்'' செய்கிறதுஎன்று வாளாயிருந்துவிடுவது, எதிர்கால ஆபத்துக்கு இன்றோ அச்சாரம் தரும் செயலாக முடியும். எனவேதான், நமது காங்கிரஸ் நண்பர்களுக்கு நம்ம சர்க்கார், என்ற பாசம் இருப்பதுதான் முறை, அறம் என்று எண்ணி எத்தர்களின் வலையிலே வீழ்ந்து விடாதீர்கள் என்று கூறுகிறோம்.

காங்கிரஸ் நண்பர்கள் என்னென்ன இன்பக் கனவுகள் கண்டு, `நம்ம சர்க்கார்' ஏற்பட உதவி புரிந்தனரோ, அந்தத் திட்டங்களையும் நிறை வேற்றாமல், நாட்டின் நிலைமையையும் வளமாக் காமல், `நம்ம சர்க்கார்' இருப்பதும், நம்ம சர்க்காரா யிற்றே நாமே எப்படிக் கண்டிப்பது என்ற காங்கிரஸ் நண்பர்கள் இருந்து விடுவதும் குறை கண்டு கூறிட வேறு கட்சியினர் முன்வந்தால், இந்தக் குறை கூறும் குப்பன்களுக்கு இதை விட்டால் வேறென்ன வேலை என்று பேசுவது மாக, இருந்துவிட்டால், நம்ம சர்க்காரின் போக் கைத் திருத்தும் வழிதான் என்ன, சக்திதான் எது? இந்த நிலைமையும் போதாது என்று, ``நம்ம சர்க்காரை'' நடத்தும் காங்கிரஸ் தலைவர்களும் அவர்களை நடத்தும் வேறு சிலரும் சேர்ந்து, காங்கிரசிலே உள்ள கண்ணியவான்களின் கவனம், எங்கே, தப்பித் தவறி, `நம்ம சர்க்காரின்' போக்கிலே உள்ள குறைபாடுகளைக் கண்டு கண்டிக்கப் பயன்பட்டு விடுகிறதோ என்று எண்ணி, அவர்களின் கவனத்தையும், சக்தியை யும் வேறு பக்கம் திருப்பிவிடும் நோக்கம் கொண்டு, ``அதோ பார், பார், காங்கிரஸ் விரோதி, நம்ம சர்க்காரைக் குறை கூறுகிறான். விடாதே பிடி'' என்று காங்கிரஸ் நண்பர்களை, மற்றக் கட்சியினர் மீது பாயவிடும் தந்திரத்தை வெற்றி கரமாகக் கையாண்டு வருகிறார்கள். இது நாம் துவக்கத்திலே குறிப்பிட்ட அரசியல் அறிஞர் கூறியதைவிட, கேடு பயக்கும் நிலை. அவர் தந்திரசாலிகள் தங்களைப் போன்ற மக்களையே பொம்மைகளாக்கி விடுகின்றனர் என்று மட்டுமே சொன்னார்- அதாவது சிந்தனையும் செயலுமற்ற வர்களாக்கி விடுகின்றனர் என்று கூறினார்- இதனைத்தான் பொதுஜனச் சீரழிவு என்று குறிப்பிட்டார். இங்கு நடைபெறுவதோ இதனினும் கேடு பயப்பது, பொம்மைகளாக்கி விடவில்லை- கருவிகளாக்கி விடுகின்றனர்- நோக்கத்தை மாற்றி, சக்தியை வேறுபக்கம் திருப்பி அவர் களை, மற்றக் கட்சி மீது மோதவிட்டுவிட்டு, தமது ஆட்சியைத் தமது இஷ்டம் போல் நடத்தும் தந்திரத்தைக் கையாண்டு வருகின்றனர். யாருக்கு, நல்ல ஆட்சி அமைக்கவும், அமைந்துள்ள ஆட்சியை நல்லாட்சியாக்கவும், உரிமையும் வசதியும், வலிவும் இருக்கிறதோ, அவர்களை- காங்கிரசில் உள்ள நேர்மையாளர்களை, ஆர்வம் ததும்பும் இளைஞர்களை- தியாகம் புரிந்த தீரர் களை- வேறு அலுவலில் ஈடுபட வைத்து விட்டு, அவர்களையும் ஜனநாயக ஆட்சி முறையையும் அதனாலான நற்பலன்களையும் நாடு பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை யும், விரோதிகளாக்கி விட்டு, அந்தச் சச்சரவு நடைபெறுகிறவரையில், தங்களுக்கு இலாபம், தங்கள் ஆட்சிக்கு பலம், என்ற நோக்கத்துடன் பதவி தேடும் காங்கிரஸ் தலைவர்கள் வேலை செய்கின்றனர்- வெற்றியும் பெறுகின்றனர். அந்த வெற்றியின் விளைவுதான், வயோதிக தாண்ட னுக்கு, வேதனையும் தருகிறது- கண்ணீரை வழிய வைக்கிறது. இந்த நிலையை உண்டாக்கும் அமைப்பு, `நம்ம சர்க்காரா!' ``நம்ம சர்க்காரில்'' நம்ம பாபு புருஷோத்தமதாஸ் தாண்டனின் கண்களில் நீர் பெருகுவது ஏன்? என்பது பற்றி, எண்ணிப் பார்க்க வேண்டும், இலட்சிய நோக்குடைய காங்கிரஸ் இளைஞர்கள்.

(திராவிட நாடு - 3.10.1948)