அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இதுவா சுதந்திரம்?

காங்கிரஸ்காரர்கள், சுதந்திரம் என்று பெயர் சொல்லி ஆட்சி பீடத்தமர்ந்து ஆண்டுகள் நான்கு ஆகிவிட்டன.

வெள்ளையன் காலத்தில் நடக்காத அளவு, விந்தையும் விபரீதமும் கலந்த வேதனைப் பாணங்கள் வீசப்பட்டிருக்கின்றன.

பொதுக்கூட்டம் போடவேண்டுமென்றால், முதலில் போலீஸ் அனுமதியைப் பெறவேண்டும்.

ஒலிபெருக்கி வைக்கவும் அவர்களது உத்திரவையே பெறவேண்டும். ஊர்வலமா? அதற்கும் ‘அனுமதி’ அவசியம்.

ஒவ்வொரு ஊரிலும் இத்தடை!

ஒருமுறை அல்ல. பத்துமுறை அல்ல, தொடர்ந்து போட்டுக் கொண்டே உள்ளனர்.

இந்த வெட்கக்கேடு நீளுவதை இந்நாட்டிலன்றி வேறெங்கும் காண முடியாது.

வெள்ளையன் காலத்தில் இதுபோன்ற அக்கிரம நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது இல்லை.

ஆனால், இவர்களாட்சிப் பீடம் ஏறின நாள் முதல் இன்று வரை இந்த அலங்கோலமே நடைபெற்று வருகிறது-விட்டு விட்டுக்கூட அல்ல; தொடர்ச்சியாக.

இந்த நிலையில், பொதுத் தேர்தல் ஒன்று வரப் போகிறது. எப்படித் தான் பேச்சுரிமை கிடைக்கப்போகிறதோ எதிர்க்கட்சிக்காரர்களுக்கு?

இந்த அக்கிரமம் தொடர்ந்து நடைபெறுகிறது. நமது கழகத் தோழர்கள் கூட்டம் நடத்த முயன்றால், பல ஊர்களில் அவர்களுக்கு அனுமதியும் மறுக்கப்படுகிறதாம்.

144 வீசி, நமது கழகக் கூட்டங்கள் நடைபெறாமல், காங்கிரஸ் ஆளவந்ததாக தந்திரோபாயங்களை வீசியே வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சித்தையன் கோட்டை, சின்னாளம்பட்டி, நாங்குனேரி, தென்தாமரைக் குளம் ஆகிய ஊர்களில் நமது கூட்டங்கள் நடத்த அனுமதி மறுத்திருக்கின்றனர்.

இந்த அக்கிரமத்தை அடக்கவும் மனித உரிமையை நிலை நாட்டவும் நமது கழகம் செய்திருக்கும் முடிவையொட்டி நமது கழக முன்னணி வீரர்கள், அறப்போரிலீடுபட்டிருக்கிறார்கள்.

இதற்கான அறப்போரி லீடுபட்டது முதல் நம்மைத் துப்பாக்கிக் குண்டுகளால் பதம் பார்த்தனர் தடியடி தர்பார் நடத்தினர்!

ஜனநாயகத்தை சமாதிக்கனுப்பும் இந்த அக்கிரமத்தை ஒழிக்க, நாம் நம் கடமையைச் செய்தோம். இனியும் செய்வோம்.

(திராவிடநாடு 16.9.51)