அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இழந்த இன்பம்!
பத்தாண்டுகளுக்கு முன்பு என்னைப் பார்த்திருந்தால தானே தெரியும்! அந்த பளபளப்பும், வனப்பும், வசீகரமும், இப்போது மங்கிவிட்டது. இன்று நடையிலே தளர்வு! தாடையிலே சுருக்கம்! இடையிலே பிடிப்பு! உடையிலே அலட்சியம்! சடையிலே நரை! என்றாகிவிட்டது, என முன்னாள் பருவ மங்கையாக இருந்து இன்று மாதாகி, வயது முதிர்ந்த அம்மை கூற, இன்று இளமங்கையாக, இன்ப வாடையை எங்கும் பரப்பும் இயந்திரமாக, பிடியிடையும், குழல் மொழியும், பெடைநடையும் கொண்டவள், நாளை நமக்கும் ஈக்கதிதானோ, என்று ஏங்க அது கண்டு நகைத்துக் கொண்டே உலகு நகர்ந்து கொண்டே போகிறது.

நேற்று - இன்று - நாளை! ஆம், இந்த மும்மொழி, முப்பருவத்தை, முன்று நிலையை, மூன்று முக்கிய சகாப்தத்தைக் காட்டுகின்றன.

நேற்று அலர்ந்திருந்த ரோஜா, இன்று, கூந்தலை விட்டுக் கீழே இறங்கி குப்பைமேடு போகிறது. இன்று மொக்காக இருப்பது, நாளை மலரும்; மணம் வீசும், மனதுக்கு ஊல்லாசத்தைத் தரும்! இது பருவ மாற்றத்தினால் நிலையுங் குணமும் மாறும் இயற்கையைக் குறிப்பதாகும்.

நாட்டு நிலையை மாற்ற முடியும் ஆனால் இயற்கையின் போக்கைச் செயற்கை முறை கொண்டு செப்பனிட்டு, வர இருக்கும் மாற்றத்தைத் தடுக்க மக்கள் முற்படுகின்றனர். பத்தாறு ஆண்டு சென்ற பழந்தோழர் மாளவியா தமது வாலிபப் பருவத்தை மீண்டும் பெறப் பரம சாதுவின் அருள் தேடினாரன்றோ!

நேற்று முற்றிய கதிருடன் இருந்த நிலம் இன்று அறுவடை காரணமாக வெறும் வெளியாகி விடுகிறது. ஆனால் நாளை மறுநாள், சின்னாள் பலநாள் சென்றேனும் நிலமங்கை பச்சைப் பட்டாடை அணிந்து கொண்டு பார்ப்பவரை உற்சாகப்படுத்துகிறாள். காரணம் மனிதனின் உழைப்பு!
மக்கள் பருவத்தை மருந்து வகைகளாலும், பண்டங்களின் இயல்பை மக்கள் தம் உழைப்பாலும், மாற்றுவது சரிவர, குறைவர நடப்பினும் நடக்காது போயினும், மக்கள் தம் அறிவினால், தம் நாட்டு நிலைமையை மட்டும் நிச்சயம் மாற்ற முடியும். நேற்று இருந்தது, இன்று இருப்பது, இந்நிலை என்பதை ஆராய்நதறிந்து, குறை களைந்து குணங்கொண்டு நாட்டு நடப்பை அமைப்பின், நாளை, நாட்டு நிலையை நல்லதாக்க முடியும்.

நேற்றுக் குளிர், இன்று காய்ச்சல், ஊடனே மருந்து உட்கொள்ளாதுவிட்டால் - மருந்து உட்கொள்ளாததுடன் குளிர் இல்லை. காய்ச்சல் இல்லை, எல்லாம் மனப்பிராந்தி என யாரோ கூறக்கேட்டு - குளிர் நீர் அருந்திக் கூத்தாடித் திரிந்தால் ஜன்னி கண்டு இறப்பதும் இயல்பன்றோ! அதே போலத்தான் இன்று பலர் காங்கிரசில் உள்ளனர்.

நேற்று நாட்டில் அசோகரின் சாம்ராஜ்யமும் பிந்துசாரரின் பிரபல ஆட்சியும், கனிஷ்கரின் கவர்ச்சி தரும் கோலாட்சியும், அக்பர் ஆட்சியும், சிவாஜியின் சிறப்பும், சேர சோழ பாண்டியர் செங்கோலும் இருந்தன. ஆனால் இந்த நேற்றைய நாட்களில் ஒரு வகுப்பு முடியரசர், கொடையரசர், இசையரசர், யாருக்கும் மேலோராய் இருந்தனர். அழகிய தன்மையினர் எனக்கூறிக் கொண்டனர். ஆண்டவனின் அருள் பெற்றோர் எனச் செப்பினர், மற்றையோரை அடக்கினர், மறையோர் எனக் கூறினர். பிறர் பொருள் எமது என்று புகன்றனர். பிராமணர், பூசுரர் என்றனர். இது “நேற்று” இருந்தது என்பதை எந்தச் சரித்தராசிரியரும் மறைக்க முடியாது. எந்த அரசியல்வாதியும், அந்தக் கால முதற்கொண்டு பார்ப்பன ஆதிக்கம் பல்வேறு துறைகளிலும் இருந்து வந்ததையோ, அதன் காரணமாக நாட்டுப் பழம் பெருங்குடி மக்கள் அடிமைகளானதையோ, இந்த அடிமைத்தனத்தைச் சகித்துக் கொண்டு இருந்தால்தான், நாட்டு மக்களிடை சுயமரியாதையற்றுப் போயிற்று என்பதையோ, சுயமரியாதையை இழந்ததாலேயே சுயாட்சி செத்தது என்பதையோ, அதாரங்காட்டி, இல்லை எனக்கூற முடியாது. கூறத் துணபவர் உண்டேல், வாரும் மன்றே மேறுவோம், என அறைகூவி அழைக்கிறோம்.

நேற்று நாம் நாடாண்டவர்களை எல்லாம், காட்டைக் காட்டி ஏய்த்தோம், இன்று நம்மை ஈன்னவர் எனக் கண்டு கொள்ளும்படி வெள்யைன் செய்து விட்டான். எனவே அவனை விரட்டிவிட்டால் நாளை நாம் மீண்டும் பூசுரராக வாழலாம் என்பதுதான் காங்கிரசைக் கையாயுதமாகவும், காந்தியாரைக் கையாளாகவும் கொண்டுள்ள பார்ப்பனீயத்தின் நினைப்பு.

நேற்று நாம் பார்ப்பனீயத்தினிடம் சிக்கி, பலப்பல தொல்லைகள் பெற்றோம், இன்றுதான் சற்று விழிப்படைந்துள்ளோம், நாளை நம் நாட்டை நாமே அளவும் நம்மைப் பார்ப்பனீயம் மீண்டும் பற்றாதிருக்கவும் இன்றே பாதுகாப்புத் தேடிக் கொள்வோம் என்று நாம் கூறுகிறோம்.

நேற்று இருந்தது போலவே பல ஜாதிப் பிரிவினை நாளை சுயராஜ்யமடைந்த இந்தியாவிலும் இருக்கட்டும் என அவர்கள் கூறுகின்றனர். அதற்கேற்றபடியே காரியங்கள் செய்கின்றனர். ஒரு தோட்டத்தில் பல புஷ்பங்கள் இருப்பது அழகல்லவா என அதற்கு ஆச்சாரியார் குட்டிக்கதை கூறுகிறார்.

நாம் நேற்று இருந்த ஜாதிபேதக் கொடுமை நாளை இருத்தல் ஆகாது. இன்றே அதைப் போக்கும் முறைகள் தேவை எனக் கூறுகிறோம்.

இந்த விஷயத்தில் நமது கெள்கையை ஆதரிப்பவரின் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
கண்டவர் வியக்கும் விதமாகக் கட்டமைந்த ஊடல் படைத்தவன் காலத்தின் கோளாறினால், தன் பலமிழந்து தளர்ந்து போனால் முன்னாளில் தனக்கிருந்த பலத்தை எண்ணி ஏங்கிப் பெருமூச்சுவிடுதல் இயற்கை.

கைநிறையப் பொருளும், பொருள் பெறும் வகையும் பெற்று வாழ்ந்து வந்தவன், திடீரெனத் தன்பொருளைப் பிறர் பறித்துக் கொண்டுபோக, வறுமையில் சிக்கி வாடும் போது முன்னாளில் தான் இருந்த, நிலையை எண்ணி வருந்தாது இரான்.

கருத்துக்கிசைந்த கட்டழகனைப் பெற முடீயாது போய், சமுதாயக் கட்டுப்பா;டடின் காரணமாக யாருக்கோ வாழ்க்கைப்பட்ட வனிதை, சாலையிலும் சோலையிலும், சாய்கால வேளையிலும், தன் காதலனைக் கண்டுகளித்த காலத்தை நினைத்தும், எடுத்ததற்கெல்லாம் இடியும் அடியும், ஊதையும் தரும் முரடனுக்கு பெண்டானோமே என எண்ணியும் எங்குவது உண்டல்லவா!

இழந்த இன்பத்தை எண்ணிடும்போது, உள்ளம் வேதனைப்படும். இன்பத்தை இழந்ததுடன் துன்பத்திலும் சிக்கிவிட்டால் அந்த வேதனை பன்மடங்கு அதிகமாவதுடன், இழந்த இன்பத்தை மீண்டும் எப்படியேனும் பெறவேண்டுமென்ற எண்ணம் வலுத்துப் பெருத்து, வீறிட்டு எழும்.
இதுவே இன்றைய தமிழர் நிலை.

தமிழ்நாடு என்றுமே தலைவணங்கி வாழ்ந்ததில்லையே! தனிநாடாக, திருநாடாகவன்றோ தழைத்து வந்தது. ஆரியமன்றோ அதனை அடுத்துக் கெடுத்தது.

அசோகர், அக்பர், ஆகிய மன்னாதி மன்னர்கள் காலத்திலும், மண்டியிட்டதில்லை தமிழ்நாடு. அசோகரின் கல்வெட்டு, கலிங்கத்தை, கடும்போரில் அவர் வென்றதைக் காட்டுகிறது. அசோகரின் படைபலம் கலிங்கத்துப் போரில் நாடு, இரத்தக்காடாகப் போரிட்ட வீரம் ஆகியவற்றைக் காட்டுகிறது. ஆனால், மற்றுமென்ன இதில் விளக்கமாகிறது. இவ்வளவு கடுமையாகப் போரிட்டு வெற்றி பெறக்கூடிய அசோகர் திராவிட நாட்டை வெல்ல முடியவில்லை என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்நாடு தனித்தே இருந்தது
சேர, சோழ, பாண்டியர்கள் மண்டலாதிபதிகளாக வாழ்ந்தனர், அக்காலத்திலும், அசோகர் காலத்தில் இவர்கள் அரசுரிமை இழக்காது தமிழ்நாட்டைத் தனிநாடாகச ஆண்டு வந்தனர் எனில், இது தமிழரின் தனிச்சிறப்பைக் காட்டவில்லையோ எனக் கேட்கிறோம்.
ஐம்பத்து ஆறு மன்னர்கள், ஐம்பத்தாறு தனித்தனி நாடுகளை ஆண்டு வ்நத வரலாற்றைக் கூறும் சமஸ்கிருத நூல்கள் காலமுதற்கொண்டு, தமிழ்நாடு தனித்துத்தான் வாழ்ந்து வந்தது.

கிறிஸ்து பிறப்பதற்கு 6-நூற்றாண்டுகளுக்கு முன்னர் “தமிழர் என்ற ஆரியரல்லாதார் தனி நாகரிகம், தனிமொழி, தனி வரலாறுடன் தனி நேஷனாக வாழ்ந்து வந்தனர்” என்று ஆசிரியர் பார்கீத்தர் கூறியுள்ளார்.

கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, “திராவிட நாட்டு மன்னர்கள் தங்கக் கொப்பரையில் சந்தனத் தைலத்தை எற்றி வைத்துக் கொண்டு வாழ்ந்தனர்” என்று கூறப்படுகிறது.
மூன்றாவது நூற்றாண்டில் திராவிட நாட்டின் அமைப்புப் பற்றிய வரலாற்றை அக்காலத்திலிருந்த வரலாற்று நூல்களில் வரைந்திருக்கின்றனர்.

திருநெல்வேலிக்குத் தென்கிழக்கே 15-வது மைலில் உள்ள, இதிச்சநல்லூரில் ஆராய்ச்சியாளர்கள், கல்வெட்டுகளையும், திராவிடச் சின்னங்களையும் கண்டுபிடித்து எடுத்துனர், இதேவிதமான திராவிடச் சிறப்புச் சின்னங்கள், பஞ்சாப்பில், மாண்டகாமரி ஜில்லாவிலுள்ள ஹரப்பா என்ற (ஐஹழ்ஹல்ல்ஹ) இடத்திலும் சிந்து மாகாணத்தில், லார்க்கானா ஜில்லாவிலுள்ள, மகன்ஜதாரோவிலும் கண்டு எடுக்கப்பட்டன.

திராவிட நகாரிகத்தின் சிறப்பு எனவே ஒரு காலத்தில், திராவிட நாகரிகம், திராவிட ஆட்சி, நெல்லையில் தொடங்கி நெடுக நெடுகச் சென்று, சிந்து, பஞ்சாப் வரையிலும் அதற்கு அப்புறமும் சென்றது என்று விளங்குகிறது.

பதஞ்சலி எழுதிய புத்தகம், அசோகர் கல்வெட்டுகள், மெகஸ்தனிஸ் எழுதிய புத்தகங்கள், சிலோன் நாட்டுச் சரித சம்பந்தமான புத்தகங்களான மகாவம்சம், தீபவம்சம் ஆகிய எத்தனையோ சான்றுகள், திராவிடச் சிறப்பை விளக்குகின்றன.

அதனால்தான் சர். ஜான்உவான் என்பார். “மனித சதாயத்திற்கே நாகரிகத் தொட்டிலாகத் திராவிட நாடு இருந்தது” - அதாவது திராவிட நாட்டில்தான் நாகரிகம் முதல் முதலாகத் தோன்றிற்று என்று கூறியுள்ளார்.

திராவிட நாட்டின் இந்தப் பண்புகள் ஏன் மறைக்கப்ட்டது? ஆரிய சூழ்ச்சியால்தான்!

ஆனால், சரித்திரத்தைத் துருவிப் பார்த்தால் ஆரியத்தின் அலங்கோலமும் திராவிடத்தின் தனிச்சிறப்பும் திராவிடத்தை அடக்க அழிக்க ஆரியர் செய்த சூழச்சியும், விளங்காமற் போகாது.
மஹா அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்தார் எனச் சரித்திரம் கூறுகிறது. ஆனால் திராவிடம் தலை நிமிர்ந்து வாழ்ந்து வந்தது அந்தக் காலத்திலும்.

அதற்குப் பிறகு ஏற்பட்ட எந்த சாம்ராஜ்யத்திலும் திராவிடநாடு சேர்ந்திருக்கிவில்லை. தனித்தே இருந்தது. எந்த வல்லரசும் திராவிட நாட்டை வென்றதாகச் சரிதம் கூறவில்லை.

இந்தியாவிலேயே ஈணையற்ற மன்னர்கள் என்ற அட்டவணை போடுவதானால், அதில் அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர், சந்திரகுப்த மௌரியர், சமுத்திரகுப்தர், அக்பர், என்ற பெயர்கள் பொறிக்கப்படும். இவர்கள், சாம்ராஜ்யங்களை ஏற்படுத்தி, கீர்த்தியுடன் வாழ்ந்தவர்கள். ஆனால் இத்தனை மன்னாதி மன்னர்கள் இருந்தபோதும், திராவிட நாட்டை அவர்கள் அளவில்லை. திராவிடநாடு திராவிடருக்கேதான் இருந்தது.

இடிந்த கோட்டைகள், விந்திய மலைக்கு மேலேயே தவிரக் கீழே அல்ல! தோற்ற மன்னர்கள், நர்மதை நதிக்கரைக்கு அப்புறமே தவிர இப்புறமல்ல.

இழந்த இன்பத்தை எண்ணித் துக்கமடைகிறோம், இனி என்றாவது மீணடும் அந்த இன்பத்தை, திராவிடத் தனி அரசை நாம் பெற முடியுமா என்று ஏக்கமும் பிறக்கும் போது, துக்கமோ, ஏக்கமோ வேண்டாம், இந்திய துணைக்கண்டம் முழுவதுமே வெள்ளை ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கியதால், துக்கமும் ஏக்கமும் கொண்டு, மீண்டும், என்றேனும் விடுதலை கிடைக்குமா எப்படி அவனை எதிர்ப்பது, அவன் நவீன யுத்த தளவாடங்கள் உள்ளவனாயிற்றே நம்மிடம் இல்லையே, நாம் எப்படி அவனிடமிருந்து ஆட்சி உரிமையைப் பெற முடியும் என்ற திகைப்பு இருந்ததும் மாறி, ஆகஸ்ட்டு பதினைந்தில், வெள்ளையன் ஆட்சி ஒழிந்தது என்று கூறும் நிலை வந்திருக்கிற சம்பவம், நமக்கு மகிழ்ச்சி எட்டுவதுடன், நாமும், நாம் சில ஆண்டுகளுக்கு முன்பு உணர்ந்து கொண்டு, மக்களுக்கு உரைக்கத் தொடங்கிய, திராவிடத் தனி அரசை, நாம் இழந்த இன்பத்தை, மீண்டும் பெற முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவோம். எனவே, திராவிடத் தனி அரசாகிய, நமது இழந்த இன்பத்தை எண்ணும்போது துக்கம் பிறந்தாலும், அதனை நாம் மீண்டும் பெற முடியும் என்ற நம்பிக்கையை, வெள்ளையனின் ஆட்சி ஒழிகிறது என்ற மகிழ்ச்சியின் மூலம் பெற முடியும் - பெறுவோம். ஆகஸ்ட் 15, அறுவடை தினம் மட்டுமல்ல, விதை தூவும் நாளும்கூட!

நாம் மேலே குறிப்பிட்ட, ‘திராவிடத் தனி அரசு’ வரலாற்று உண்மை, நெடுங்காலமாக, நமது மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வந்தது. மக்களும் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணங்கூடக் கொள்ளமாலிருந்தனர். அதற்குக் காரணம், நாம், “இழந்த இன்பம்” - பழங்கதையாகும்படி, வேறோர் சம்பவம் இங்கு நடைபெற்றுவிட்டது - அதுதான், வெள்ளையர், திராவிடம் உட்பட, இந்திய துணைக்கண்டத்தின் சகல பகுதிகளையும் பிடித்துக் கொண்டது. திடீரென நேரிட்ட, இந்தச் சம்பவம், நமது மக்களைத் தமது பழைய நிலைபற்றிக்கூட மறக்கச் செய்து விட்டதுடன், புதிதாக வந்த விபத்தான, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மீதே தங்கள் முழுக்கவனத்தையும் செலுத்த வைத்ததுடன், சுதந்திரம், விடுதலை என்றால் வெள்ளையரிடமிருந்து நாட்டை மீட்பதுதான் என்று எண்ணச் செய்தது. அந்த எண்ணத்தின்படி, இங்கு, விடுதலை பெறுவதற்கான கிளர்ச்சி, ஏகாதிபத்தியத்துக்கு எதிரிடையான நடவடிக்கைகள், ஆரம்பமானபோது, ‘திராவிடத் தனி அரசு’ பற்றிய எண்ணம், மறையலாயிற்று. விடுதலை விரும்பிகளின் முழுநேரமும், முழுச் சக்தியும், ஏகாதிபத்திய ஒழிப்பு என்பதிலேயே சென்றது - அதனால், திராவிடர் தனி ஈனம் - அவர்களின் நாடு, அசோகர் முதலான சாம்ராஜ்யாதிபதிகள் காலத்திலும் தனித்தே இருந்து வந்தது, அவர்களின் ஆட்சியை அவர்களே பெறுவதே முறை, என்ற உண்மைகள், மறையலாயின. அடியோடு மûற்நதே விடுமோ என்று அஞ்சக்கூடிய அளவு இந்திய ஒரே நாடு - அதற்கு ஒரே அரசு - அது இன்று வெள்ளையர் எனும் அன்னியரின் அரசாக இருக்கிறது - அந்த இழிநிலையை மாற்றி, நமது நாட்டை நாம் அளவேண்டும் என்று பொதுவாகப் பேசப்பட்டது.
*****

நமது நாட்டை நாம் அளவேண்டும் - என்றால், திராவிடர்களாகிய நாம் திராவிட நாட்டை அளவேண்டும் என்ற உண்மைப் பொருளிலே, பேசப்படவில்லை - இந்தியாவை இந்தியர் அளவேண்டும் என்று பேசப்பட்டது. அந்த முரசொலியின் காரணமாக, மக்கள் முழு உண்மையை உணரும் வாய்ப்பு ஏற்படாமல் போய்விட்டது. திராவிடர் உட்பட - அனைவரும் வெள்ளை ஆட்சி நீங்கிய பிறகே வேறு வேலைகளைக் கவனிக்க முடியும் என்று கூறிக் கிளர்ச்சி செய்தனர் - அந்த நீண்ட கிளர்ச்சி முடிவடைகிறது ஆகஸ்ட் பதினைந்துடன். இனித்தான், நாம் கூறும், திராவிடத் தனி அரசு எனும் வரலாற்று உண்மையை உணரும் மனப்போக்கு, மக்களிடை அதிகமாக ஏற்பட முடியும். இழந்த இன்பம் - முழுவதையும் நாம் பெற்றுவிடவில்லை - இழந்த இன்பம், என்றால் இந்தியாவை வெள்ளையரிடம் இழந்தது மட்டுமல்ல - திராவிடத்தைப் பிறரிடம் இழந்ததுமாகும் - முதற்பகுதி, வெள்ளையரை நீக்கிய பகுதி முடிவடைந்தது - இனி மற்றப் பகுதி, திராவிடத்தை, வடநாட்டார் பிடித்தாட்டுவதை நீக்கும் பகுதி, இனித்தான் ஆரம்பமாக இருக்கிறது என்பதை ஆகஸ்டு பதினைந்து மக்களுக்கு அறிவிக்கிறது. இதுவரை இருந்து வந்த மூடுபனி - விலகுகிறது ஆகஸ்ட் 15ல் - இனி நாம் கூறும் வரலாற்று உண்மைகள் மக்களின் கண்களுக்குப் பிளச்செனப்படும்.

நேற்று நாம் வெள்ளையரிடம் அடிமைகளாகி நொந்தோம், இன்று அவர்களிடமிருந்து விடுதலை பெற்றோம் என்று ஆகஸ்ட் பதினைந்தாம் úதி, அகமிகிழ்வுடன் பேசியான பிறகு, நாளை என்ன? என்ற கேள்வி எழும் - அந்தக் கேள்விக்குப் பதில்தான், திராவிட நாடு திராவிடருக்கு ஆகவேண்டும் என்பது - இழந்த இன்பத்தை நாம் மீண்டும் பெற்றாக வேண்டும் என்பது.

இழந்த இன்பத்தை நாம் நிச்சயம் பெறுவோம், ஆகஸ்ட்டு பதினைந்திலே ஆங்கிலேயனால் பறிக்கப்பட்ட சுதந்திரத்தை நாம் மீட்டதைப் போலவே.

ஆகஸ்ட் பதினைந்து நமக்கு, அந்த மகிழ்ச்சியுடன் கலந்த நம்பிக்கையைத் தருகிற நாள் - பெற்றோம் இழந்ததை - பெறுவோம் இழந்ததை -என்பது நமது கீதமாகட்டும்.

(திராவிட நாடு - 10-8-47)