அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘ஜோதி ஜொலித்ததாமே!‘

சந்திர பிம்பமோ!

மலர்ந்த சரோஜமோ!
என்ன தேஜஸ்!
எவ்வளவு தேவைகளை!

“ஜோதி, ஜொலிக்கிறது – முகவிலாசம் பார்த்தாயா? – என்ன காரணம், இவ்வளவு பொலிவிற்கு!“

“தூக்கம், அழகைத் தரும் நன்றாகத் தூங்கியிருக்கிறார். அதனால், முகம் தெளிவாக இருக்கிறது.“

“ஆமாம்! ஆமாம்!“

“வெள்ளையனின் விதண்டாவாதப் புத்தி போகவில்லை பாரும்! முகஜோதி, தூக்கத்தால் வந்ததாமே – எவ்வளவு துணிவுடன் கூறுகிறான். இதனை அவருடைய முகஜோதி யாருக்குவரும்? உலகிலுள்ள எவருக்கு அவருடைய பிரகாசமான முகம் இருக்க முடியும்?“

விமானத்தை விட்டிறங்கினார்! முகவிலாசம் கண்ட நிருபர்கள், திகைத்தார்கள். அவ்வளவு ஒளி வீசிற்று ‘முகஜோதி‘ குறித்து வந்திருந்த நிருபர்கள் எல்லாம் பேசிக் கொண்டனர். “விமானத்தில் நன்றாகத் தூங்கியிருப்பார்‘ என்று ஒரு நிருபர் சொன்னார். மறுத்தார், மற்றொருவர்! - என்று இவ்விதம், இலண்டனுக்குச் சென்றுள்ள இந்திய பிரதமர் பண்டித நேருவைப்பற்றி தேசீய ஏடுகள், தீட்டியுள்ளன.

பண்டிதரின் முகஜோதிக்கு, ஈடு இணையுண்டோ? – என்று பல இதழ்களுக்குள்ள அன்பையும் அபிமானத்தையும், அவை தீட்டியுள்ள விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

காக்கைக்கும் தன் குஞ்சு, பொன் குஞ்சுதான்! தன்னாட்டுப் பிரதமர், பிறநாட்டுப் பிரதமர்களை விடப் பொலிவுடன் விளங்குகிறார் என்று பூரிப்போடு கூறிக் கொள்வதில் தவறொன்றுமில்லை சராசரி, மனித இயல்பு இது.

ஆனால், அவரது முகஜோதியின் பெருமையைக் குறித்து இவ்வளவு பிரமாதமாகப் பத்திரிகைகள் புகழ்ந்து எழுதியுள்ளனவேயென்று, எலிசபெத் முடிசூட்டு விழா சம்பந்தமாக வெளி வந்திருக்கும் படங்களையெல்லாம் துருவித்துருவிப் பார்த்தோம்.

பண்டிதர் கலந்து கொண்டதாக வெளிவந்திருக்கும் படங்களிலெல்லாம் அந்த ‘ஜோதி‘யைத் தேடினோம்.

சந்திர பிம்பமோ! மலர்ந்த சரோஜமோ! - எனும், பாடலைக் கவனத்தில் மறவாது, தேடிப் தேடிப் பார்த்தோம்.

ஜோதி, தென்படவில்லை! ராணியார் அளித்த கருத்தையொட்டி, காமன்வெல்த் பிரமுகர்களோடு, பண்டிதர் நிற்கும் படம் ஒன்று எல்லா இதழ்களிலும் வெளிவந்துள்ளது. அதனை நோக்குமாறு தோழர்களை வேண்டிக்கொள்கிறோம்.

ஜோதியா தென்படுகிறது? – இல்லை துயரம் படர்ந்தத முகத்தோடு நிற்கிறார்! கம்பீரமா, காட்சி அளிக்கிறது? இல்லை! கவலைத் தோற்றமே உருவாக நிற்கிறார்!

அவர்கூட நிற்கும், ஒவ்வொரு காமன்வெல்த் பிரதமரையும், பார்த்துவிட்டு பண்டித நேரு அவர்களின் முகத்தையும் பார்த்தால், அந்தக் கூட்டத்தில் நிற்கப் பண்டித நேருவின் முகம் எவ்வளவு வேதனைப்படுகிறது என்பதை விளக்குகிறது.

நமது தேசீய இதழ்கள், தமது தலைவரைப் புகழ்வதாக நினைத்து, பெருமிதமாக வருணித்துவிட்டன.

ஆனால் அவர் எத்தகைய இடருக்கு மத்தியிலிருந்திருக்கிறார் என்பதை, இவை அறிய முடியுமா?

பண்டிதர், இந்தியாவின் முதல்வர்! - மறுப்பாரில்லை. பிரிட்டன், அவரை மரியாதையோடு வரவேற்கும் – அதிசயமுமல்ல. ஆனால், இந்த வரவேற்பையும் விருந்தையும் நேரில் அனுபவிக்கும்போது, அவருடைய உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்?

காமன்வெல்த் பிரதமர்களின் புகைப்படத்தை உற்றுப் பார்த்தேன் – ஏனையோர் முகத்திலிருக்குமளவுக்கு மகிழ்ச்சி, இவர் முகத்தில் இல்லை. எப்படியிருக்க முடியும்?

புகைப்படத்தில், குறும்புச் சிரிப்போடு, ஆப்பிரிக்க மலான் காட்சியளிக்கிறான்! அவரருகில் நிற்கும் பண்டிதருக்கு, எப்படி மகிழ்ச்சி வரமுடியும்? மனித வேட்டையாடுகிறான், ஆப்பிரிக்காவில் – நிறவெறியைக் காட்டி இந்திய மக்களைச் சித்ரவதை செய்கிறான், மலான். அவனருகில், நிற்கிறார்! யார்? இந்தியாவின் முடிசூடா மாணிக்கம்! எப்படியிருக்கும், அவரது உள்ளம்! இதோ பக்கத்தில் சிரித்த முகத்தோடு பார்க்கிறார், சேனாநாயகா! சின்னஞ்சிறு தீவாம் இலங்கையின் பிரதமர். அவருடைய கண்களில் காணப்படும் ஒளி, பண்டிதர் இதயத்தைக் குதூகலத்திலா ஆழ்த்தும்? பாகிஸ்தான் பிரதமர், முகம்மது அலி, புன்முறுவலோடு பார்க்கிறார் பழைய பாசமும், புது நேசமும் அவரது பார்வையில் தென்பட்டாலும் அதில் ஓரளவு கலந்திருக்கும் கேலி பண்டிதருக்குப் புரியாதா? எத்தனை மேடைகளில், ‘பாகிஸ்தான் ஏற்பட முடியுமா?‘ என்று கர்ஜனை யெழுப்பியிருக்கிறார்! இத்தனை இடருக்கு மத்தியிலே சர்ச்சில் துரைமகனார் நிற்கிறார் – வழக்கமான தோற்றத்துடன், சர்ச்சில் சாதாரணமானவரா? “இந்தியர்கள் சுதந்திரம் கேட்கிறார்கள்? எம்மிடம் துப்பாக்கியும் பீரங்கியும் அதைவிடப் பெரிய ராஜதந்திரமும் இருக்கிறதென்பதை அவர்களுக்கு உணர்த்துகிறேன்!‘ என்று கர்ஜனை எழுப்பியர் பண்டிதரைப் பதைக்குமாறு, நான்காண்டுகள், ஆபத் நகர் சிறையில் அடைத்துப் போட்டவர் அவரது, அருகில் நேரு! பண்டிதரின், முகத்தில், ஜோதி எப்படி ஜொலிக்கும்? மனித வேட்டையாடுபவன் ஒரு பக்கம் மனித உரிமை மறுப்பவர் ஒரு பக்கம், மமதையோடு காணும் கண்கள் ஓரிடத்திலிருந்து – இந்தச் சிலந்திக் கூட்டில் சிக்கியவர் முகத்தில், மகிழ்ச்சி எங்ஙனம் அரும்ப முடியும்?

தேசீய இதழ்கள், இலண்டனுக்கு நேரு சென்றதும், எலிசபெத் அரசியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டதையும், விருந்து விழாக்களில் கலந்து கொள்வதையும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகின்றன.

பெருமைக்குரிய விஷயமா இது? சிரிக்கும் சிலந்தி, கொத்தும் கழுகு, கொடுமைப்படுத்தும் ஓநாய், கேலி செய்யும் புலி, இவைகளுக்கு மத்தியில் அகப்பட்ட மானின் நிலைலிருக்கிறார் பண்டிதர்! என்பதை அவரன்றி, வேறு யார் உணரமுடியும்?

“வெள்ளைக்காரர்களை, மூட்டை முடிச்சுகளோடு விரட்டுவேன் என்றாயே தம்பி முடிந்ததா! இன்னும் எமது ஆட்கள், எத்தனை பேர், தோட்ட முதலாளியாகவும் ஆலையரசர்களாகவும், அங்கே இருக்கின்றனர் – இந்தியா, சுதந்திரக் குடியரசு என்கிறாய்! மறுக்கவில்லை – ஆனால், அந்தக் குடியரசில், எமது ராணியின் பிரஜைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பட்டமளித்திருக்கிறோம்? தடுக்க முடியுமா, உன்னால்! சுயராஜ்யம் பெற்றாய் – ஆனால் எமது கரத்தோடு உனது கைகள் கட்டுண்டுதான் இருக்கின்றன. தெரிகிறதா?“ என்று சர்ச்சில் கேட்கவேண்டாம், “குட்மார்னிங், மிஸ்டர் நேரு!“ என்று அழைக்கும் குரலில் இந்த மிடுக்கு தென்படாமலா இருக்கும்! ‘அரசு விடுதலை பெற்றாய். ஆனால், உன் ஏனைய நடவடிக்கைகள் யாவும் எமது கைகளுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றன. என்ன செய்ய முடியும் உன்னால்? எமது வர்த்தகப் பிரபுக்களின் பிடி, இன்னும் நீங்கவில்லை! நாணய மதிப்பை நான் குறைத்தால், நீயும் குறைக்க வேண்டிய நிலைதான்‘ என்று சர்ச்சில் கூறவா வேண்‘டும்? “காமன் வெல்த்தின் ஒரு உறுப்பினர் – மாபெரும் இந்தியாவின் பிரதமர் நேரு அறிமுகம் செய்து வைக்கப்படலாம், பிறருக்கு. அதைக் காணும், ஆப்பிரிக்க மலான் என்ன செய்வான்? சர்ச்சிலைப் பார்த்துப் புன்சிரிப்பை வீசுவான்! ஆஸ்திலேலியா சகோதரா, கனடாவின் பிரதமரே, நியுசிலாந்து நண்பரே, நமது வெள்ளை இனத்தில் ராஜதந்திரம் மிக மிக மேலானதுதான். நீங்கள், வாணிப வேட்டையாடுகிறீர்கள். இந்தியாவில்? நான் மனித வேட்டையாடுகிறேன், ஆப்பிரிக்காவில்! இந்தியர்களை நாயைப்போலச் சுட்டு வீழ்த்துகிறேன்! - நானும் நீங்களும் சகோதரர்கள், நமது மத்தியில் இந்தக் கோழை!“ என்று தனியாகச் சந்திக்கும்போது கேலி பேசாமலா இருப்பான்? பேசவேண்டாமே, மற்றப் பிரதமர்களின் கைகளைக் குலுக்கி விட்டு, நேருவின் அருகில் வரும்போது, இருவரின் நிலையும் நினைப்பும் எப்படி இருக்கும்? இத்தகைய சூழ்நிலையில் சிக்கி இருக்கும் பண்டிதரின் முகத்தில் ஆனந்தஜோதியா அரும்பும்! ஒளியா வீசும்.

இதனை, தேசீய ஏடுகள், சிந்தித்துப் பார்க்கவில்லை – அதனால் தான் ஆர்வத்தோடு, தீட்டிவிட்டேன். அவரது முகம் சந்திரபிம்பமோ! மலர்ந்த சரோஜமோ! என்று வெள்ளை நிருபர்களால் போற்றப்பட்டதாக.

பண்டிதர் இலண்டனுக்குச் செல்லுமன் கெய்ரோவில் இறங்கி, எகிப்தின் புரட்சிவீரர் நகீபுடன், சிறிதுநேரம் அளவளாவிவிட்டுச் சென்றாராம்.

எகிப்தின் நகீபைச் சந்தித்துவிட்டுச் சென்ற தியாக வீரர், சுதந்திர ஜோதி பண்டிதரின் முகத்தில் எப்படி ஆனந்தமிருக்க முடியும்?

“ஹலோ, பண்டிட்ஜீ – எங்கே பயணம்?“

“தெரியாதோ, தளபதி? இங்கிலாந்துக்குத்தான்!“

“இங்கிலாந்துக்கு! உங்களை அடிமைப்படுத்தி வாட்டியது மன்றி இன்னும் தன் வேண்டைக்காடாகக் கருதும் வெள்ளைக்காரப் பிரபுக்கள் வாழும் இங்கிலாந்துக்கா?“

“என்ன நகீபி என்னமோ சொல்லுகிறிர்களே!“

“ஒன்றுமில்லை – இந்த முடிசூட்டு விழாவில் எகிப்து கலந்து கொள்ளவில்லை, தெரியுமோ?“

“ஏன், நகீப்?“

இவ்விதம், இருவர்க்குள்ளும், உரையாடல் நடத்தியிருக்கா விட்டாலும், ஒருவரையொருவர் சந்திக்கும்போது, ஒவ்வொருவர் உள்ளத்திலும் இந்த எண்ணங்கள் எழும்பாமலா இருந்திருக்கும்.

நகீபைச் சந்தித்துச் சென்ற நேருவின் முகத்தில், மகிழ்ச்சி எப்படி இருக்க முடியும்.

“மாவீரன் போல் இருந்தேன் – இன்று, யாரை எதிர்த்தேனோ, அவர்களுடன் குலாவ வேண்டியவனானேன்! கரங்களிலே சங்கிலி பூட்டிய சர்ச்சில், புன்சிரிப்போடு பார்க்கிறார். சுயராஜ்யம் பெற்றும் அவர்களது தொடர்பை இழக்கமுடியவில்லை, என்னால் நேற்று வந்த நகீப் முரசு கொட்டுகிறார்! முடிசூடிகளை அழிக்கும் முன்னேற்றக் கருத்துள்ளவன் நான் என்று அடிக்கடி பேசியிருக்கிறேன். ஆனால், இன்றோ? முடிசூடும் விழாக் காணும் நிர்பந்தத்துக்காளனேன்! ஏனெனில், இந்தியாவிக்கும் இங்கிலாந்துக்கும் இடையில், நான் வராவிடில், மனமாச்சரியம் ஏற்படும். அத்தகைய நிலைக்கு ஆளாகிவிட்டேன். அருகே மலான்! இதோ, சேனாநாயகா! என்னை முகம்மது அலி, பார்க்கிறார்“ என்று பண்டித நேருவின் இதயம் துடிக்காமலா இருந்திருக்கும்? இதயம் குழம்பிக் கிடந்ததென்பது புடைப்படத்தைக் காணும் போது தெரிகிறதே இதைப்புரிந்து கொள்ளவில்லை, தேசீய ஏடுகள்.

பெருமிதமாகத் தீட்டினர், பிரதமரின் விஜயத்தை.

மாபெரும் விடுதலை நாட்டின் வீரனின் மதிப்பு, முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதன் மூலம்தான் சிறக்க முடியுமா? – ஆம் என்போர் உண்டு.

ஆனால், நாம், வெட்கப்படுகிறோம்! அந்தளவுக்கு, வெள்ளை வர்த்தகர்களின் பிடியில் சிக்கி நேரு போன்றோரைக் கண்டு.

பண்டிதர், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மாளிகையில் வாசம் செய்கிறார்! மான்செஸ்டர் பிரபுக்களின் கைலாகு பெற்றார்! லங்காஷயர் பிரபுக்கள் வாழ்த்தினர்! - எனும் சேதிகள் அல்ல. பண்டிதரின் புகழ் ஜோதிக்குக் கிடைக்க வேண்டியவை.

பிரபுக்களின் விருந்து கிடைப்பதும், உல்லாச விடுதிகளில் உணவருந்தும் ‘பாக்யம்‘ கிடைத்தாக மகிழ்வதும் – பண்டித நேரு போன்ற மாபெரும் உபகண்டத்துத் தலைவனுக்கு பெரியதோர் விஷயமல்ல.

ஆனால், அவையே பெருமைக்குரிய விஷயம் என்ற, தேசீய ஏடுகள் கருதுகின்றன.

நீக்ரோவின் கையிலிருந்து ரோஜா மாலையல்ல – சாதாரண கனகாம்பர மாலை – நேருவின் கழுத்தில் சூட்டப்படுகிறதென்றால் அது கோடி விருந்துகளுக்குச் சமம்! ஆலையில் உழலும் ஆங்கிலேயத் தொழிலாளியின் கரம், கைகுலுக்கியது என்றால், அது, சர்ச்சில் தந்த விருந்தைவிட எவ்வளவோ சிறந்தது.

பண்டிதர், அவைகளைப் பெறவில்லை! காரணம், அவர்களை அல்ல, அவர் சந்திப்பது!

எத்தகைய வீழ்ச்சி, இது? மான், புலிக்கூண்டில்! விரோதியின் அருகில் வீரன் – துரோகியின் அருகில், ஒரு நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகி! - வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் – ஆனால், தமது ஏடுகளோ, பெருமைக்குரிய விஷயம் என்கின்றன!

மலை, மடுவில் வீழ்ந்தது! பண்டிதர், பண மோகினியின் வலையில் வீழ்ந்தார்! - சரிதம், இச்சம்பவத்தைக் கண்ணீரால் எழுதத் தொடங்கி ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன.

அதன் ஒரு காட்சிதான், வெள்ளையரிடம், பண்டிதர் விருது பெறுவது.

இந்த ஆசை, இவருக்கா எழும்புவது? என்று, நாட்டு வாழ்வுக்காகப் போராடும், முற்போக்கு உள்ளங் கொண்டவன், கேட்பான்.

ஆனால், அன்றைய பண்டித நேருவா, இன்று இருப்பது?

சுயராஜ்ய காலத்தின் பண்டிதர் என்றால், இதுபோன்ற சூதுக் குழுவில், பங்கா, ஏற்பார்?

இன்றைய பண்டிதர், பிரதமராக இருப்பவர்! வளைந்து கொடுத்து வாழவேண்டியவராகி விட்டவர்!

அதனால்தான், இலண்டன் பிரபுக்களிடம் உலவுகிறார்.

இலண்டன் புறப்பட பம்பாயில் விமானம் ஏறுமுன் பம்பாய்க்கு ஐந்து மைல் தொலைவிலுள்ள டாடாவின் மாளிகைக்குச் சென்றுவிட்டுப் புறப்பட்டார்.

இங்கே, டாடாவின் விருந்து!

அங்கே வெள்ளைப்பிரபு விருந்து!

ஐயோ, வீரரே, உமக்கா, இந்த வீழ்ச்சி? – என்று சரிதம் கண்ணீர் சிந்துகிறது.

நமது தேசீய ஏடுகளோ, ‘ஆனந்த ஜோதி – இதைப்பாரீர்‘ என்று தீட்டித் தள்ளுகின்றன!

திராவிட நாடு – 14-6-53