அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மாநாடு முடிந்தது!

மாநாடு முடிந்துவிட்டது. இரண்டு வாரம் நடைபெற்றது. இடை இடையே விருந்து, வரவேற்பு, வாழ்த்து பாசுரம் போன்ற நட்பைப் பெருக்கும் நற்செயல்களும், ஏராளமாக நிகழ்ந்தன. இந்த மாநாட்டிற்கு, முக்கிய பொறுப் பேற்றுக் கொண்டிருந்த நாடு இங்கிலாந்து. இதன் வெற்றியிலும், மாநாட்டில் மனம் திறந்து பேசிக் கொள்ளப்பட்டபடி செயலாற்றுவதிலும், அதிக அக்கறை கொண்டிருப்பதும் இங்கிலாந்துதான்.

ஜவஹர், மன்னர் தம்பதிகளுடன் விருந்துண்டார். நாடகம் பார்க்கச் சென்றார். மவுண்ட் பாட்டன் மாளிகையில் ஓய்வு கொண்டார். அதனால் உற்சாகம் பெற்றார். சிறந்த சிற்பிக்குத் தன் உருவைக் காட்டினார் என்பன போன்ற செய்திகள் பத்திரிகையில் பிரமாதப் படுகின்ற அளவுக்கு இன்று இந்தியாவிற்குப் புதிய நிலை ஏற்பட்டிருக்கிறது, எந்த ஜவஹரை சிறையில் தள்ளி தரணியாண்டதோ, அதே பிரிட்டிஷ் சிங்கம் இன்று அவரை வரவேற்று உபசரிக்கிறது. இங்கிலாந்தின் பிரதமர் பீடத்தில் அட்லி இருக்கிற காரணத்தால் மட்டும் இந்தப் புதிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. இங்கிலாந் திலுள்ள பெருவாரியான மக்களின் மனத்தில் ஏற்பட்ட மாறுதலின் விளைவாகத்தான், சர்ச்சில் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் அட்லி அமர்த்தப் பட்டிருக்கிறார். மக்களுக்கு உண்டான இந்த மாற்றத்திற்கு காரணம், ஏகாதிபத்திய அரசாக இருந்த இங்கிலாந்து, அதனுடைய பொருளாதார அஸ்திவாரம் சரிந்துபோய், சமதர்மத்தை மேற் bhண்டாலன்றி, தங்களுக்கு வாழ்வு கிடைக்காது என்பதைச் சிக்கற மக்கள் தெரிந்து கொண்டதே யாகும். மாறும் உலகின் போக்கையும் எடுத்துக் கூறும் தலைவர்களும், அதனை நன்கு ஆராய்ந்து தெளிவு பெறவும், தெளிந்த வண்ணம் செய லாற்றத் துணிவும் கொண்டுள்ள அறிவாற்றல் மிகுந்தவர்களாக இங்கிலாந்தில் மக்கள் உள்ளனர். எந்தக் காலத்தில், எந்தெந்த வேலைக்கு, யார் யாரை அமர்த்தினால், மக்கள் நிலை கீழாகாமல் வளம் பெற்று வாழ்வார்கள் என்பதிலேயே அங்குள்ள மக்களின் கருத் தனைத்தும் படிந்திருக்கிறது. தங்களின் தேவையைத் தெரிந்து கொள்ளவும்,அந்தத் தேவைகளைத் தேடித்தரும் திட்டங்களைக் கொண்ட ஆற்றல் மிக்கவர்களை ஆட்சியில் அமர்த்தி அவர்களுக்கு ஆளும் உரிமையைக் கொடுத்து, அன்போடு ஆதரித்து, வாழ்வைச் செப்பனிட்டுக் கொள்ளும் சிறந்த கல்வியும், பண்பும் கொண்டவர்களாக அங்கு மக்கள் உள்ளனர். அனைவரும் வாழ்வு பெறுவதற்கு சமதர்மத்தைக் கைக்கொண்டாலன்றி, நெருக்கடி யான உலகச் சூழ்நிலையிலிருந்து இங்கிலாந்தை யும் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்னும் மறுக்க முடியாத உண்மையை, அந்த மக்கள் தெரிந்து கொண்டதன் விளைவாகத் தான் போர்க்காலத்தில் தங்களைத் திறமையாக காப்பாற்றின சர்ச்சில் துரையைத் துறவு பூணச் செய்துவிட்டு, அட்லியையும் அவர் சகாவான கிரிப்சையும் ஆதரித்தனர். பாசமும் பற்றுதலும் தான், பாராளுவோரைத் தேர்ந்தெடுப்பதற்குள்ள அளவுகோல் என்று, அந்த மக்கள் நம்பி இருந்தால், அதன்படி செயலாற்ற முனைந்திருந் தால், இந்தியாவிற்கு விடுதலையும்- பாகிஸ்தான் அமைவதும்- சிலோன் சிறப்படைவதும்- மனித சிந்தனைக்கே கட்டுப்படாது விஷயமாகப் போயிருக்கும். அதுவுமல்லாமல் மீண்டும் ஓர் பெரும் போர் ஏற்பட்டும் இருக்கும். சொந்த அனுபவத்தால் இந்த உயர்ந்த பண்பைப் பெற்றுள்ள இங்கிலாந்து மக்களை ஜவஹர் பெருமைப்படுத்திக் கூறினதில் வியப்பொன்றுமில்லை.

ஏகாதிபத்திய இங்கிலாந்து இன்று இல்லை, அந்த இடத்தில் சமதர்ம இங்கிலாந்துதான் இருக்கிறது- ஏட்டில் குறித்துள்ள அளவையைக் கொண்டு இங்கிலாந்திலுள்ள இன்றைய ஆட்சி முறையை அளந்து பார்ப்பது அவசியமுமில்லை, அது பொருத்தமற்றதும் ஆகும். மக்களின் மன வளத்தையும், அரசியல் அறிவாற்றலையும், முன்னர் ஆண்டவர்கள் போக்கினையும் பொறுத்திருக்கிறது. அந்தந்த நாட்டில் ஆட்சி முறை அமைவது, எவ்வளவு குறைபாடு உடையதாக இருந்தாலும், இங்கிலாந்து சமதர்ம லட்சியத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. சர்ச்சில் சர்வாதிகாரியாவதாக இருந்தாலும், கிரிப்ஸ் சர்வாதிகாரியாக ஆவதாக இருந்தாலும், இருவரின் லட்சியங்களிலும் பெரியதோர் முரண்பாடுகள் இருந்தபோதிலும், இங்கிலாந்து மக்களின் பண்பு இந்த இருவரின் சர்வாதிகாரப் போக்கை ஒருநாளும் மேற்கொள்ளாது.

மாநாட்டிலே பேசப்பட்ட விஷயங்கள் மூன்று என்று கூறப்படுகிறது. பொருளாதாரம், பாதுகாப்பு, உலகச் சூழ்நிலை ஆகிய மூன்று பொருள் பற்றி பேசப்பட்டிருக்கிறது. நியுஸிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, ஆஸ்த்ரேலியா, கனடா, சிலோன், தென் ரொடீஸ்யா ஆகிய காமன் வெல்த் நாடுகள் இங்கிலாந்து கூட்டிய இந்த மாநாட்டில் கலந்து கொண்டன.

இந்தியா, பாகிஸ்தான், சிலோன் ஆகிய மூன்று நாடுகள்தான் முன்பு இருந்து வந்த உறவு முறையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு, புதிய நிலை பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டன. இந்த நாடுகளுக்குத்தான், புதிய புதிய தொழில்களைக் கண்டு, மக்களின் வறுமையைப் போக்கி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நாட்டுக்கு நலம் பல தேட வேண்டிய நிலை இருக்கிறது. அதுவும் உடனடியாகச் செய்து தீர வேண்டிய நிர்ப்பந்தத் தில் இருக்கின்றன. மடமை, வறுமைய ஆகிய இரண்டுந்தான் இங்கு மக்களிடம் பெரிதும் குடி கொண்டிருக்கின்றன. புதுப்புதுத் தொழில்களைக் காணுவதின் மூலந்தான் இந்த இரு கெடுதி களையும் தொலைக்க முடியும். புதிய தொழில் களைக் காண வேண்டுமானால், அதற்கான இயந்திர சாதனங்கள் ஏராளமாக வேண்டும். இன்றையச் சூழ்நிலையில் அதற்கான சக்தி கொண்டிருக்கும் நாடு அமெரிக்காவும், இங்கிலாந்தும்தான். சென்றநாள் வேதனை மிக்க நிகழ்ச்சிகள் அனைத்தையும் மறந்து, பெருந் தன்மையோடு உறவு முறையை மேற்கொண்டால் தான் இது சாத்தியமாகும். இங்கிலாந்துதான் நம்மிரு நாடுகளுக்கும் கடன் கொடுக்க வேண்டி இருக்கிறதே. அதற்காகக் கிட்டிபோட்டு இயந்திர சாதனங்களைப் பெற்றுக் கொள்ளலாமே. அதற்கு முன்னால் பிரிட்டன் இழைத்த கேடுகளை மறந்து நடக்க வேண்டிய அவசியமென்ன என்று, ஆத்திரப்படும் தேசியவாதிகளும் இருநாடுகளி லும் உள்ளனர் என்பது நமக்குத் தெரியும். அவர்கள் இங்கிலாந்திலிருந்து இயந்திரங்களைப் பெறுவது மட்டும் போதாது. இங்கிலாந்து மக்கள் எந்த அளவிற்கு மனமாற்றம் பெற்றிருந்தால், முன்னர் நமது பிடியிலே சிக்கிக் கிடந்த இந்தியா விற்கு இத்துணை மரியாதை காட்டுவதா என்று கருதாமல், இந்தியாவின் பிரதிநிதியைக் கண்ணியப்படுத்துகிறார்கள் என்பதைக் கவனத்தில் வைக்க வேண்டும். இந்தச் சிறந்த பண்புதான் தேவைப்படுகிறது எடுத்துக்கொள் ளும் எந்தக் காரியத்தையும் வெற்றியாக முடிப்பதற்கு பண்டிதரின் பேச்சு, இங்கிலாந்துடன் ஒத்த நிலையில் நட்பு முறையுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பக்கூடிய முறையெனச் சுட்டிக்காட்டுகிறது.

தென்ஆப்பிரிக்காவில், இந்தியர்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள். இந்தியர்களின குடி வாழ் உரிமையைச் சட்டத்தின் மூலம், தென் ஆப்பிரிக்க சர்க்கார் தடுக்கிறது. அதுவும் காமன் வெல்த் நாடுகளிலே ஒன்றுதான் நிற வேற்றுமை காட்டிக் கொடுமைப்படுத்துவதும் மற்றவர்களுக் குள்ள உரிமையை இந்தியர்களுக்கு அளிக்க மறுப்பதும் தோழமைக்குப் பொருந்தாது. இந்த மாநாட்டில் இது குறித்தும் பேசப்பட்டுத்தான் இருக்க வேண்டும். விரைவில் இதற்குப் பரிகாரம் கிடைக்குமென்று நம்புவோம்.

அடுத்தபடியாக, பாகிஸ்தான் இந்தியா பிணக்கு, கசப்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கை இரத்தத்தால் நிரப்பிக் கொண்டிருக்கிறது. இரு நாட்டிலும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர் கள் உள்ளத்தில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும். பிரிட்டிஷ் மக்களின சிறந்த பண்பை பாகிஸ்தான் பிரதமர் லியாகத்தும், ஜவஹரும் பெருமைப் படுத்திப் பேசி இருக்கிறார்கள். அந்தப் பண்பை பேசுவதற்கு மட்டும் ஒரு பொருளாகக் கொள்ளா மல் சொந்த விஷயத்திலும் கையாள முயல வேண்டும். பாகிஸ்தான் ஏற்பட்டதில் இருக்கும் எரிச்சல் இன்னும் காங்கிரஸ் தலைவர்களுக்கு மாறி விட்டிருக்கும் என்று சொல்வதற்கில்லை. எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லையே. கேட்ட பொழுது, எவ்வளவு எதிர்ப்புக் காட்டினார்கள் என்பன போன்ற ஆத்திரம் பாகிஸ்தானி களுக்கும் இருக்கும். இருநாட்டிலும், ஆட்சிப் பீடத்திலும், தங்கள் தங்கள் சொந்த அரசியல் கட்சிகளிலும் முக்கியமான இடங்களிலே இருப்ப வர்களின் உள்ளக்கிடக்கையே இதுவன்றி, இரு நாட்டிலும் உள்ள மக்களின் மனநிலையும் இதுதான் என்று கூறிவிட முடியாது. அவர்கள் விரும்புவதெல்லாம், அரசியல் விடுதலை கிடைத்து பின்னரும் வயிறார உண்பதற்கு ஒன்றும் இன்னும் கிடைக்கவில்லையே என்பது தான். இந்ந்த நல்ல காரியத்தை மக்கள் அனைவருக்கும் தேடித் தருவதில்தான் இரு நாடுகளின் பாதுகாப்பும் அமைந்திருக்கிறது. ஒரு நாட்டின் பாதுகாப்பும் அமைந்திருக்கிறது. ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மக்களின் திருப்தியான வாழ்வுதான் என்னும் உண்மையை மறந்து வீட்டுக்கொரு போலீசும், தெருவிற்கு இரண்டு இராணுவ வீரரும், நகரெங்கும் நவீனப் படை களையும் வைத்துப் பாதுகாத்து விடுவதால் மட்டும், நாட்டின் பாதுகாப்பு அமைப்புப் பூர்த்தியாகி விட்டது.

காஷ்மீர் பிரச்சனை, அங்குள்ள மக்களின் முடிவிற்கு விடப்பட வேண்டும். போர்க்களத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாக அது இனியும் இருக்கக்கூடாது. இதுபற்றியும் இங்கி லாந்திலே பிரதமர் அட்லி, தம் முன்னிலையில் இரு நாடுகளின் பிரதமரையும் சந்தித்துப் பேசச் செய்தாராம். நல்ல முடிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இதோ சிங்களத்தில், அங்கு குடியேறி யுள்ள தமிழர்களுக்குக் கேடு பயக்கும திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் சேனாநாயக் தயாராகிறார். சிங்கள மக்களை வறுமையில் கிடந்துழலும் படி விட்டுவிட்டு, தமிழர்களுக்கு மட்டும் தனிச் சலுகை காட்ட வேண்டுமென்பதல்ல நமது கட்சி, சிங்களவர் மீது தமிழர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குத் தமிழர்களுக்கு, உரிமை வேண்டுமென்பதல்ல நமது வாதம். மனிதாபி மானத்தோடு சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டு மென்பதே நமது விருப்பம்.

இந்தியா, பாகிஸ்தான், சிலோன் ஆகிய மூன்று நாட்டுப் பிரதமர்களும், இங்கிலாந்தில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்திருப்பார்கள். அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் மட்டுமல்லா மல் மற்ற அறிஞர்களையும் சந்தித்திருப்பார்கள். இதிலிருந்து அவர்கள் எவ்வளவோ அனுபவம் பெற்றிருப்பார்கள். இதிலிருந்து அவர்கள் எவ்வளவோ அனுபவம் பெற்றிருப்பார்கள் என்றுதான் சொல்லவேண்டும். மக்கள் தயவால் ஆளும் உரிமை பெற்றவர்கள், அதிகார மயக்கத் தில் அறிவிழந்து நடந்து கொள்கிறார்களா அல்லது மேலும் மக்கள் ஆதரவைப் பெறவும், தேர்தலுக்கு முன்னர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவும் முனைகிறார்களா என்பதை இவர்கள் கற்றிருப்பார்கள் என்றே நம்புகிறோம். இது ஒன்றை மட்டும் என்றும் மறக்காமல் செயலாற்றுவதின் மூலம் காமன் வெல்த் மாநாட்டில் பேசப்பட்ட பேச்சுக்களையும் சொல்லிக் காட்ட முடியும்.

(திராவிட நாடு - 14.11.1948)