அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மற்றோர் மறைவு

“மாவீரனே, மறைந்துவிட்டீரே, எமைவிட்டு! தலைவனாக இருந்து, இருளில் ஒளிபோலிருந்தீர் – இன்று, போய்விட்டீர். நீர் காட்டிய பாதையில் செல்லும் நாங்கள் கலங்குகிறோம்! கண்ணீர் வடிக்கிறோம்! எனினும், உமக்கு நாங்கள் காட்டும் மரியாதை நீர் எதற்காக இத்துணை நாட்களும் பாடுபட்டீரோ அந்தக் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து காட்டுவதுதான். உமது சமாதியின் முன்னே இந்தச் சபதம் எடுத்துக் கொள்கிறேன்! ரஷ்யாவைப் போல செக்கோஸ்லேவியாவும் செழிக்கப் பாடுபடுவேன்!“

இவ்விதம் மாஸ்கோவில் மாவீரன் சமாதி முன்னின்று சபதமெடுத்துக் கொண்டார்.

ஆனால் சபதம் எடுத்துக் கொண்ட சின்னாட்களுக்கெல்லாம் அவரது சமாதி முன்னின்று, அவருடைய தோழர்கள் சபதம் எடுக்கவேண்டிய துயரச் சம்பவம், நேர்ந்துவிட்டது.

மாவீரன் ஸ்டாலினை, சமாதியில் கண்டார்! அழுதார்.

செயல்வீரன் கோட்வால்டை, சமாதியில் கண்டனர்! அழுதனர், செக் மக்கள்!

செஞ்சதுக்கத்தில் சிந்தை குழம்ப நின்றார், ஸ்டாலின் சமாதியைப் பார்த்த செக்கோஸ்லோ தலைவர் கோட்வால்ட்.

அவருடைய பிணத்தைக் கண்டு சிந்தை குழம்ப நிற்கின்றனர், செக் நாட்டுத் தலைநகரமாகிய பிரேக்கில்.

உலகத் தலைவனை இழந்த அதிர்ச்சி குறையுமுன் பேரிடிக்கு ஆட்பட்டனர், சேக்கோஸ்லோவேக்ய மக்கள். அவர்களது சர்க்கார் தலைவர் – கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் – கிளமெண்ட் கோட்வால்டு மார்ச் 14ம் தேதி இரவு, தனது 56வது வயதில் இறந்தார். இரண்டு நாள், உடல் நலமில்லை – சாவு மூச்சைக் கொய்து சென்று விட்டது.

மாஸ்கோ சென்றார்! மீண்டார்! - மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டுப் போய்விட்டார்.

முன்னேற்றப் பாதையில் பாடுபடும் தலைவர்களைப் போலவே, அவரும் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து – தச்சனாக வாழ்ந்து – மக்களின் தலைவனாக உயர்ந்தவர்தான்.

அவரால்தான், செக்நாட்டில் கம்யூனிசம் தழைத்தது. கம்யூனிச ஆட்சி நிலைத்தது. அத்தகைய மாபெரும் தலைவரை, செக்மக்கள் இழந்துவிட்டார்கள். நாம் பொது வாழ்வில் தியாகம் பல ஏற்று, முன்னேற்றப் பாதையில் மாவீரர்களின் உதாரணமாகயிருந்த ஒரு தலைவரை, இழந்துவிட்டோம். அவரது தன்னலங்கருதாச் சேவைக்கு நமது மரியாதைகளைக் குவிக்கிறோம். வாழ்க கோட்வால்ட்! வாழ்க அவர் பாடுபட்ட இலட்சியங்கள்!.

திராவிட நாடு 22-3-53