அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


போலீசும் பொது மக்களும்
“என்னங்க இது காயம்”

“காலிப் பயலுக கல்லை வாரி அடிச்சானுக”

“அட, காலிப்பயலுகளே! ஏன் இம்மாத்திரம் கோவம் வந்திருத்தாம்? போலீசாச்சேன்று மட்டு மரியாதû இல்லாமே, இப்படியா அக்ரமம் பண்றானுக.”

“அதை ஏன் கேக்கற, போ. பெரிய அமர்க்களம் செய்து போட்டானுக. பிறகு தடியாலே அடிச்சி துப்பாக்கியாலே சுட்டுத் தள்ளினோம். பிறகு பயலுக பெட்டிப் பாம்பானாங்க.”

“காலமின்னாலும் ரு ஒரு கண்ணறாவிக் காலமாப் போச்சு. எழுந்திருச்சி வாங்க. சாப்பாடு சில்லுன்னு போகுது”

கான்ஸ்டெபிள் கோபாலப் பிள்ளைக்கும், அவர் மனைவி அலமேலுவுக்கும், சாப்பாட்டுக்கு முன்பு, ஒரு இரவு இது போலப் பேச்சு நடக்கிறது, ஊரிலே ஒரு பகுதியில்,

மற்றோர் பகுதியில், மண்டையில் காயத்துடன் உள்ளே நுழையும் தன் கணவனைக் கண்டு கலங்குகிறாள் கன்னியம்மாள்.

“இது என்ன, ஆக்கிரமம்! சட்டை வேட்டி எல்லாம், இரத்தக் கறை, வண்டியிலேயிருந்து விழுந்து விட்டிங்களா? மாடு முட்டித் தள்ளிவிட்டதா? ஐனுங்க இது மாதிரி காயமாச்சி”

“கன்னி! ஏன் கேட்கிற அந்தக் கூத்தை. மனுஷனுங்களை மாடு போலத் துரத்தித் துரத்தி அடித்தானுக. கடை வீதியிலே

“ஒயோ! யாரு? யாரோ ஜப்பான்காரன் என்று சொல்லிக்கிறாங்களே ஆவுங்களா?”

“இல்லை, இல்லை, நம்ம ஊர் ஜவானுங்கதான், தடியாலே அடிச்சு துப்பாக்கியாலே கூடச் சுட்டாங்க, நான் போயித் தெரியாமே சிக்கிக்கிட்டேன். ஆனா எவ்வளவோ தேவலைன்னு சொல்லணும். வேறே சில சில ஆஸ்பத்திரிக்கே போய்ச் சேர்ந்தானுங்க, இரண்டொண்ணு செத்தும் போச்சு”

“”அடி அம்மாடி! ஏன் நடந்தது இது மாதி”

“அது பெரிய ராமாயணம், வா சாப்பிட்டுக்கிட்டே சொல்லறேன்”

இரண்டு இடங்களிலும் சாப்பாடு நடை பெறுகிறது.
***

கான்ஸ்டபிள் வீட்டில்
“செச்சே! ஏன் இப்படிக் கூழாக்கிட்டே, சோத்தை”

“நானா கூழாக்கிட்டேன் அந்தப் பாவிங்க தருகிற அரிசிதான், ஒரு கொதிக்குள்ளே இப்படிக் கூழாப் போவுதே.”

“நாத்தமாக்கூட இருக்குதே”

“குடலைப் புரட்டுது போங்க. அது எங்கே இருந்துதான் கொண்டு வந்தாங்களோ இந்தமாதிரி புழுத்தப்போன அரிசி, ஜனங்கள் இதைச் சாப்பிட்டுப் படாத பாடு படுறாங்க”
“நீ எந்தக்கடையிலே வாங்கினே?”

“எல்லாக் கடையிலும் ஒரே இலட்சணம்தான். இஷ்டமா இல்லையான்னு, பேசறாங்க கடைக்காரனுங்க”

“ரொம்ப மோசமாயிருக்கு”

“அவனுங்க நாசமாப்போக, ஏன் இப்படி ஜனங்களை இம்சை செய்யறாங்களே தெரியலையே”

“தா! மெதுவாகப் பேசுடி இது போலத்தான் அந்த ஜனங்கள் கூவினாங்க. மோசமான அரிசியைக் கொடுக்கறானுக, அவனுக நாசமாப் போகன்னு கூச்சலிட்டுத்தான், கலகமே ஆரம்பமாச்சி.”

“ஏன் கூவமாட்டாங்க, கலகம் செய்யமாட்டங்கன்னு கேக்றேன் கையிலே எடுத்துடைச்சா அரிசி மாவாப் போவுது, தண்ணி கொதிக்கிறதுக்குள்ளே குழைஞ்சி போகு, ஒரே அழுக நாத்தம், எப்படித்தான் இந்தப் பாழாப்போன அரிசியைப் பணம் போட்டு வாங்க மனம் ஒப்பும் ஜனங்க மேலே கொஞ்சம்கூடத் தப்பு இல்லை.

மண்டையில் அடிபட்டவன் வீடு
“கஷ்டப்பட்டு வேலை செய்தமாம், ஐதோ வயிறாரச் சாப்பிட்ட மாமன்னு இல்லையே, இந்தக் கர்மம் பிடிச்ச அரிசியை, அரிசியாகவே சாப்பிடலாம் போல இருக்கு, சோறா செய்துவிட்டா கிட்டே நெருங்கக்கூட முடியல்லை.”

“இமாங்க, ஏன் இப்படிப்பட்ட அரிசி கொடுக்கறானுக”

“அதைக் கேட்கப் போயிதாண்டி மண்டையிலே அடி”

“இது என்ன அக்ரமம்! எப்படித்தான் மனசு ஒப்ப இந்த அரசியைச் சமைக்கறது.”

“கேட்டா, கலகம் பிறக்குது, கலகத்தை அடக்க, போலீசு வருது, மண்டையிலே இரத்தம் ஒழுகுது”
சாப்பாட்டு இலட்சணம் இரு இடங்களிலும் இப்படியே இருக்கிறது. ரேஷன் அரிசி நன்றாக இல்லை என்று (கலகம் செய்து) அடிபட்டவனும் கூறுகிறான், (கான்ஸ்டபுள் என்ற முறையில்) அடித்தவனும் சொல்கிறான். ஜனங்களிலேயாவது, நிலபுலம் வைத்துக்கொண்டிருப்பவர்கள், பணம் நிறைய வைத்துக் கொண்டு கள்ளமார்க்கட்டை தேடுபவர்கள் ஆகியோருக்கு நல்ல அரிசி உண்டு, போலீஸ்காரருக்கு நல்ல அரிசி எது? நிலமா நீரா, இல்லை, நிறையச் சம்பளமா? இல்லை! ரேஷன் அரிசி நன்றாக இல்லையே என்று ஜனங்களாவது கிளர்ச்சி செய்கிறார்கள், அதிகாரிகளைக் கேட்கிறார்கள், கூட்டங்கள் நடத்துகிறார்கள், கலகம் பிறந்தால் நியாயமும் பிறக்கும் என்று கான்ஸ்டபிள்கள் என்ன செய்து! குறை கூறக்கூடாது. மற்றவர்கள் செய்யும் கிளர்ச்சி, கலகம் ஆகியவற்றை அடக்க அமர்த்தப்பட்டிருக்கும், அவர்கள், தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ள ஒருவழியும் கிடைக்காமல், மனத்துக்குள்ளேயே, எந்தத் தொல்லையும் மூடிவைத்துக் கொள்கிறார்கள். ரேஷன் தொந்தரவு ஒன்றுமட்டுல்ல. சாதாரண காலத்திலேகூட, போலீசாருக்குக் குறை உண்டு, நீக்கிக்கொள்ள முடிவதில்லை.

ஆலைத்தோழர்கள் முதற்கொண்டு அரசாங்க உத்தியோகஸ்தர் வரையிலே சம்பள உயர்வுக்காகவும், வாழக்கையின் அடிப்படைத் தேவைகள் தமக்கு அளிக்கப்பட வேண்டும என்பதற்காகவும், கிளர்ச்சி செய்து, கஷ்டநஷ்டத்தைப் பொறுத்துக்கொண்ட, சிற்சில சமயங்களில் தோல்வி அடைந்தபோதிலும், பொதுவாக ஓரளவு வெற்றி பெற்று வருகிறார்கள். பொருளாதார முறையிலே காணப்படும் பேதத்தின் பலனாக, உத்தியோக மண்டலங்களில், ஒருசிலர் உச்சியில் அமர்ந்துகொண்டு, கொழுத்த சம்பளம் வாங்குகின்றனர், அவர்கள் பிறப்பிக்கும் கட்டளைகளை அமுலுக்குக் கொண்டுவர உழைக்கும் எண்ணற்ற சிறு உத்தியோகஸ்தர்கள், குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, குடும்பபாரம் தாங்கமாட்டாமல், கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
போலீசாருக்குள்ள பொறுப்பும் தொல்லையும், வேலையும் வேதனையும் அதிகம், ஆனால் கிடைக்கும் உதியமோ மிகக் குறைவு. சில சமயங்களிலே அவர்கள் அதிகாரத்தைக் கண்டு பொறாமையாகக் கூட இருக்கும். “ஐ! நடுரோட்டிலே, நடக்காதே, ஓரமாகப் போ” என்று கான்ஸ்டபிள் கூறும்போது, நமக்கு, “எவ்வளவு அதிகாரம்! என்ன மிரட்டுகிறாங்க” என்ற கோபமாக இருக்கும். அதே கான்ஸ்டபிள், வெயிலில், பாதை நடுவே நின்று கொண்டு, வண்டிகளை இப்படிப் போ, அப்படிவா என்று கைகாட்டிக் கொண்டு, ஒழுகும் வியர்வையைக் கூடத்துடைக்க முடியாமல் கஷ்டப்படும் போது, நடுஇரவில், முள்ளும கல்லும் நிரம்பிய பாதையாக இருந்தாலும், ஆள் ஆரவம் கேட்டதும், ஐயா உத்தரவிட்டால், ஓடுகிறபோது, பார்த்தால், ஆயிரம் தருவதானாலும் நமக்கு வேண்டாமப்பா இந்த வேலை என்றுதான் கூறத்தோன்றும், வேலையும் மிகுதி, உதியமும் குறைவு, என்பது மட்டுமில்லை, வீணான பழி, அனாவசியமான விரோதம், இவைகள், அவர்கள் மீது ஏற்படுகிறது.

பொதுமக்களின் தேவைகளை உணராமலும் மனத்தை அறியாமலும், இப்படிச் செய்தல் இன்ன கேடு நேரிடும் என்பதைத் தெரிந்து கொள்ளாமலும் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒரு சில அதிகாரிகள் எந்தெந்தக் கட்டளை, திட்டம், பிறப்பித்தாலும், பொதுமக்கள் அவைகளின்படி நடக்கமுடியாமல் கிளர்ச்சியில் உடுபட்டால், போலீசே அடக்க அழைக்கப்படுகிறது. மக்கள் உடனே, சர்க்கார் செய்ததைக் கூடமறந்து போலீஸ் மீதே கோபிப்பர். இந்த ஆத்திரத்தையும் போலீசார் சமாளித்தாக வேண்டும். ஆகவே எந்த விதத்தில் பார்த்தாலும், போலீசாருக்குச் சம்பள விகிதம் அதிகப் படுத்தப்பட வேண்டும், வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்குக் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரையிலாது இலவசப் படிப்புக்கு வழி செய்தாக வேண்டும். இந்த அவசியமான காரியத்தைச் செய்யாததால் நேரிட்ட விளைவு விசித்திரமாக இருக்கிறது.

இதுவரை நாம் ஜனங்கள் கிளர்ச்சி செய்தனர். போலீசார் அடக்கினர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஜனங்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஊர்வலம் சென்றனர், உண்ணாவிரதம் இருந்தனர், போலீசார் தலையிட்டனர் என்று படித்திருக்கிறோம், இப்போது விசித்திரமான செய்தியைக் கேள்விப்படுகிறோம்.

டில்லி போலீசார் வேலை நிறுத்தம் செய்தனர், ஊர்வலம் நடத்தினர். இராணுவம், அவர்களை அடக்க வந்தது, எண்பது போலீசாருக்குமேல் கைது செய்யப்பட்டனர்.

கோரக்பூரில் தங்களுக்குத் தரப்படும் ரேஷன் அளவு குறைக்கப்பட்டதைக் கண்டிக்கப் போலீசார், உண்ணாவிரதம் இருந்தனர். என்ற செய்திகளைப் படிக்கிறோம்.

அதாவது, உத்தியோகத் துறையிலே போலீசாராக இருப்பதாலேயே, அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இருக்கும் பிரச்சனைகள், சம்பளக் குறைவு, வேலை நேரம் மிகுதி, ரேஷன் தொந்தரவு முதலியன இல்லாமல் போகவில்லை என்பதை இச்சம்பங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மத்திய சட்டசபையிலே விவாதிக்கப்பட வேண்டிய அளவு, இந்தப் பிரச்சனை பலமாகிவிட்டது. சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்கும் கடமையில் உடுபட்டுள்ள போலீசின் நிலைமையில் நிம்மதியும், வாழ்க்கையில் வசதியும் இருந்தாக வேண்டும் என்பதையும், சமாதானம் அடிக்கடி குலையக்கூடிய நிலைமையைச் சர்க்கார் தமது போக்கினாலும் உத்தரவுகளாலும், திட்டங்களாலும் உண்டாக்கிவிட்டு, பிறகு, இயற்கையாகப் பொது மக்களிடையே ஆத்திர உணர்ச்சி ஏற்பட்டால், அதனை அடக்கப் போலீசுக்கு உத்தரவு பிறப்பித்து, போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படும் நிலைமையை உண்டாக்கி விடக்கூடாது. சட்டமோ திட்டமோ ஏற்பாடு செய்யும்போது, அதனை அமுல் நடத்துவது சுலபமா, பொது மக்கள் மனம் எப்படி இருக்கும் என்பதைச் சார்க்கார் கண்டறிய வேண்டும். சட்டத்தைப் பிரயோகிப்போம், ஜனங்கள் தொல்லை தந்தால் போலீஸ் இருக்கிறது என்ற மனப்பான்மையைக் கொண்டால் பலனில்ல. போலீஸ் இலாக்காவிலே, செய்ய வேண்டியது, போலீசாரின் சம்பள உயர்வு, டில்லி போலீசார் மாதம் 80 ரூபாய் கேட்கின்றனர். பம்பாய் போலீசாரின் சம்பளத்தை அந்த மாகாணத்து சர்க்கார் உயர்த்திருக்கிறார்கள். சென்னை சர்க்காரும் போலீசாரின் சம்பளத்தை உயர்த்த யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆகவிலை காலத்திலே, இந்தச் சம்பள உயர்வு மிக மிக அவசியம் என்பதை நாம் வலியுறுத்துவதுடன், போலீஸ் இலாக்காவின் பொறுப்புகளையும் கடமைகளையும், வேலையையும், அனாவசியமான சோதனைக்கு ஆளாகும்படி செய்யும், சட்டமோ திட்டமோ செய்யும் போக்குச் சர்க்காருக்குக் கூடாது என்றும் வலியுறுத்துகிறோம். பொதுமக்கள் மனத்திலே ஆதிருப்தி வளராதபடி, ஆரம்பித்திலேயே சர்க்கார் கவனித்துக் கொண்டால், கலகத்தை அடக்கப் போலீசாரை உபயோகிக்கத் தேவையில்லை அல்லவா, போலீசாரின் போக்கைக் கண்டிக்கப் பொதுமக்களுக்கும் காரணம் இராதல்லவா?

கள்ளன், காமுகன், கொள்ளையிடுவோன், குடியன், முதலான சமூகக் கேடர்களை அடக்கிச் சமாதானம் நிலவச்செய்ய வேண்டிய பொறுப்பே, போலீசுக்குப் பெரும்பாராமாக இருக்கும்போது, அவசரக் கோலத்தை ஆள்ளித் தெளிக்கும் போக்கில், தினசு தினுசான புதுப்புதுத் திட்டங்களைச் சர்க்கார் அடிக்கடி வெளியிட்டு, அவைகளை மக்கள் அறிந்தார்களா? ஏற்றார்களா? என்பதையும் கண்டறியாமல், கலகம் பிறந்தால் போலீசை அனுப்புவோம் என்று இருந்துவிட்டால், போலீசாருக்கு ஏற்கனவே இருக்கும் பாரத்துடன், இந்தப் புதியபாரமும் ஏறுகிறது. உயர்தர அதிகாரிகள் கொஞ்சம் முன்யோசனையுடன் காரியங்களைச் செய்தால், குறைந்த சம்பளம் பெற்றுவரும் போலீசாருக்கு, வீணான வேலை, இருக்காதல்லவா! இர ஆமர யோசிப்பதும், அறிந்து திட்டமிடுவதும், பொது மக்களைக் கலந்து பிறகு புதுமுறைகள் வகுப்பதும் சர்க்காரின் போக்காக இருக்குமானால், போலீசார், பொதுமக்களின் நண்பர்கள் என்ற நிலை பெறுவார்கள். அதுதான் சிறந்த இலட்சியமுங் கூட.

(திராவிட நாடு - 31.3.46)