அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ராம ராஜ்யம்

அன்றும் இன்றும்
144 இல்லை.
எங்கும் கூடலாம்.
ஒலிபெருக்கி வைக்கலாம்
எவரும் பேசலாம்
கூட்டத்துக்காக போலீஸ்
அனுமதி தேவையில்லை
எப்போது வேண்டுமானாலும்
கூட்டங்கள் நடத்தலாம்

வெள்ளையன் வெளியேறா முன் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது, இந்த உரிமைகள் இருந்தன. மக்களுக்கு ஆனால், இன்றைய சுதந்திர ஆட்சியில்! பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றால், சர்க்கார் அனுமதி வேண்டும். ஒலிபெருக்கி வைக்க விரும்பினால், சர்க்காரின் மேலதிகாரியிடம் ஓடவேண்டும். பேசப்போவது இன்னின்னார் என்கிற பட்டியல் ஒப்புவிக்கப் படவேண்டும். கூட்டம் போடும் இடத்தையும் நேரத்தையும் சர்க்காருக்குத் தெரிவிக்க வேண்டும்.
வெள்ளையன் வழங்கிய உரிமைகள் இந்த ‘வீராதி வீரர்’கள் ஆட்சியில் இல்லை! பறிக்கப்பட்டவிட்டன!!

“ஏய்! என்ன, இது?”

“ஒலி பெருக்கி...”

“அதிகப் பிரசங்கி, ஒலிபெருக்கி வைக்க அனுமதி வாங்கினாயா?”

“நீங்கள் தானே தந்தீர்கள்”

“தந்தேனா?.... சரி... இப்போது அதை ரத்து செய்கிறேன். எடு! எடு!!”

இதுபோல சிலபல இடங்களில், பொதுக் கூட்டங்களிலே இடையூறுகள். ஒலிபெருக்கிவைக்காமலே கூட்டத்தை நடத்தும்படி தொல்லைகள்! ஒலிபெருக்கி முன்நின்று பேசிக்கொண்டிருக்கும் போதே, அனுமதி ரத்து செய்யப்பட்டு அவல நிலை.

இன்னும் பல இடங்களில், பேசிக் கொண்டிருக்கும் போதே, ‘குரல்’ நெரிக்கப்படுவதுபோல, சட்டம் பாய்கிறது.

“ஒன்பது மணி வரையில் தான் கூட்டம் நடத்த அனுமதி தந்தேன். மணி ஒன்பது அடித்து ஒரு நிமிடம் அதிகமாகிவிட்டது. ஆகவே, நிறுத்து!”

இவ்விதம் கெடுபிடி, பலபொதுக் கூட்டங்கள் பரபரப்போடு முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

கூட்டம் நடத்த விரும்புவோர் சர்க்காரின் அனுமதியைப்பெற அலைவதையும் திரிவதையும் பார்த்தால், ஜனநாயகம் மருளும், சுதந்திரம் வெட்கித்தலை குனியும்.

காங்கிரஸ் ஆளவந்தார்கள் பேச்சுரிமை சம்பந்தமாக விதித்திருக்கும் தடைகள் சிறிதும் தளரவில்லை இப்போது பொதுத் தேர்தல்!

பொதுத் தேர்தலின் போது தமது நோக்கங்களைத் தங்கு தடையின்றி எடுத்துச் சொல்லும் உரிமை எல்லோருக்கும் எக்கட்சியினருக்கும் இருக்கவேண்டும்.

அந்த உரிமையோடு நடைபெறும் பொதுத் தேர்தலையே ஜனநாயக முறைப்படி நடைபெற்றதாக நல்லோர் கூறுவர்.

ஆனால், இப்போது அந்த ஜனநாயக உரிமைகளை சர்க்காரின் ‘அனுமதி’ பெற்றே அனுபவித்துத் தீரவேண்டிய நிர்ப்பந்தம், நீடிக்கிறது.

‘அனுமதி’ பெற்றே, தத்தமது எண்ணங்களை எடுத்துக்கூறும் நிலை. எதிர்க் கட்சிகளுக்கு இருந்து வருகிறது.

ஆட்சி புரிவோர், காங்கிரசார் அவரது ‘அனுமதி’யின் மீதே எதிர்க்கட்சிகள் தத்தமது எண்ணங்களை வெளியிட வேண்டும்.

இந்த நிலையில் பொதுத்தேர்தல் எத்தகைய இலட்சணம்!

அண்மையில், இந்தியக் குடியரசுத் தலைவர் ராசேந்திர பிரசாத் பேசுகையில், “பொதுத் தேர்தலின் போது எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் வேண்டிய நியாயமான வசதிகள் கிடைக்குமென நம்பலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், அடிப்படை நியாயம் இன்னும் அலங்கோலத்தில்! அவலட்சணம் நிரம்பிய அடக்குமுறை நீடிக்கிறது-சிறிதும் தளரவில்லை.

வெள்ளையன், இந்திய விரோதி. அவனிருந்தபோது நடைபெற்ற தேர்தலின்போது கிடைத்த உரிமைகள் இன்றில்லை! இந்நிலையில் பொதுத் தேர்தலாம்-வாக்கெடுப்பாம்!

இந்த நிலைபற்றி முதலில் எண்ண வேண்டும். தேர்தலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள், குரலின்றேல் கொள்கையை உணர்த்த முடியாது.

குரலெழுப்பவோ, தடைகளை நிரப்பியிருக்கிறது. காங்கிரஸ் அரசாங்கம்.

இந்தக் கொடுமை நீங்கவேண்டும் கருத்தலைகள், மக்கள் மனதில் பரவ; எதிர்க் கட்சிகள், சங்கடமின்றி உலவ; ஜனநாயகம் கேலிக்குறியாக ஆகாமலிருக்க!

அட்லி செய்யவில்லை!
சின்னஞ்சிறுகார்! அதனை ஓட்டிச் செல்வது, அவரது மனைவி! அவர் அமர்ந்து செல்கிறார்! ஊர் ஊராக அதே காரில்தான் சென்று, பேசினார்! பிரச்சாரம் செய்தார்! திரும்பியதும் அந்தச் சிறிய காரில் தான்!

காரோ சிறியது! டிரைவரும் கிடையாது! அதில் ஒரு நாடு முழுவதும் சுற்றுப் பிராயணம்!

அவர் சாதாரண சுற்றுப் பிரயாணம் செய்யவில்லை! பிரச்சாரம் செய்திடவே சென்றார்! பிரச்சாரமென்றால், வெறும் பிரசங்கம் செய்ய அல்ல; பிரசங்க தூண்டியால், ஓட்டு மீன“ பிடித்திட!

அதற்குத்தான் அந்தச் சிறிய காரில், மனைவியே ஓட்டிட, ஊர் ஊராகச் சென்றார்.

அவர், தேர்தல் பித்தம் மட்டும் பிடித்து, பண சத்தமே கேட்காத பேர்வழியோ என்று கருதவேண்டாம் அல்லது, இதற்குப் புதிய ஆசாமியென்றும் எண்ண வேண்டாம்.

அவர்தான் இன்றைய ஆங்கில நாட்டுப் பிரதமர் அட்லி. அண்மையில் நடைபெறும் தேர்தலுக்காக, தொழிற்கட்சி சார்பில் பிரச்சாரம் செய்யப்போன பொழுது, தன் சொந்த செலவில் சிறிய காரில் ஊர் சுற்றினார்!

அவர் நினைத்தால், சர்க்கார் செலவில், வெகு எளிதில், எங்கும் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு, கட்சிப் பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால் செய்யவில்லை.

ஆனால் ராம ராஜ்யத்தில், சர்க்கார் செலவில், மந்திரிகள் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யத் தவறுவதில்லை. ஆட்சி சம்பந்தமான வேலையென்று பேசுவார்கள். ஆனால் தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள்.

ஆட்சியிலே இருப்பது தொழிற்கட்சிதான். இங்கிலாந்தில்! ஆனால், அட்லி, செய்யவில்லை அங்கு!
ஆட்சியிலிருப்பது, காங்கிரஸ், இந்தியாவில்! சாதாரண முனிசிபல் தேர்தலிலிருந்து காங்கிரஸ் தனக்குக் கிடைத்துள்ள ப்பதிகாரத்தைக்கொண்டு என்னென்ன செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்கிறது.

இதனை டெல்லியில் கூடிய பாரதீய ஜன சங்க முதல் மாநாட்டில், தீர்மானம் போட்டே, கண்டித்திருக்கிறார்கள்.

சர்க்கார் பணம், காங்கிரஸ் கட்சிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

ரயில், விமானம் எல்லாம், அவர்கள் வசதிக்கே உபயோகப்படுத்தப் படுகிறது.

படக் காட்சியிலும், அவர்கள் பிரதாபம், வானொலியில் அவர்கள் பிரபல்யம் பேசப்படுகிறது! ஆளவந்தார், தமது உத்தியோகஸ்தர்கள் அனைவரையுமே கட்சிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

ஜனநாயக ஆட்சியிலே, நடைபெறக்கூடாத, முடியாத காரியத்தை, காங்கிரஸ் இயக்கம் கவலையின்றி செய்கிறது! கேட்பார் இல்லையென்ற தைரியத்தில்! ஆனால் கேட்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை இடித்துரைப்பதுதான், பொதுத்தேர்தல்! அவர்கள், ஓட்டு கேட்க வருகிற பொழுதாவது, அந்த உண்மை தெரியுமோ, தெரியாதோ! எல்லாம், ராமராஜ்யம் என்றால் போதும், மக்கள் எல்லாம் அடங்கிவிடுவார்கள் என்று நம்பினால், அவர்கள் ஏமாந்து போவார்கள்!

அட்லி, செய்யவில்லை! நேரு சர்க்காரில் அது நித்திய நிகழ்ச்சியாகிவிட்டது! அதனால்தான் இது நீடிக்காது என்று மக்கள் கூறுகின்றனர்.

மாதவனார் புலம்பல்:
நீதி மன்றத்தை நிர்வாகம் புறக்கணிக்கும் மனப்பான்மை வரவர அதிகரித்து வருகிறது. பல விஷயங்கள் நீதி மன்றத்திற்குக் கொண்டு வரப்படாமலேயே முடிவு செய்யப்படும் முறையில் தற்கால சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

இவ்வாறு பேசியது, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளில் ஒருவர். அரசியல் சட்டத்தின் அங்கங்கள், பழுதாகாமல் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நீதிபதிகளில் ஒருவர்தான், இவ்வாறு பேசினார். சில மாதங்கட்கு முன் சென்னையில்.

இக் கருத்து, நமது சென்னை சட்ட மந்திரி மாதவமேனனாருக்குக் கசப்பாயிருக்கிறது. கசப்பில்லாத கருத்துக்கள் மாதவனாரிடமிருந்து கிளம்புவதும் மிகமிக அபூர்வந்தான்!

உத்தரப் பிரதேசத்தினருக்கு மாத்திரம் ஏன் அதிக உணவு ரேஷன் கொடுக்கவேண்டும். மற்றப் பகுதியினர் பட்டினியால் மாளிகையில்? என்ற கேள்வி எழுந்தபொழுது, “அவர்கள் அதிக உணவு உற்பத்தி செய்கின்றனர். ஆகவே அவர்களுக்கு ஏன் அதிக ரேஷன் கொடுக்கக் கூடாது? என்று திருப்பிக்கேட்டவர்தானே நமது மாதவனார்!

இப்பொழுது, மாதவனாரின் கவனம், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மீதும், உயர்நீதிமன்ற அதிகாரத்தின் மீதும் பாய்ந்திருக்கிறது.

முக்கிய சட்டங்களின் பிரிவுகள் செல்லாதெனத் தீர்ப்பளிக்கும் அதிகாரம். நீதி மன்றங்களிடம் அளிக்கப்பட்டிருப்பது, மிக துர்ப்பாக்கியமான நிலைமை.

இந்த முறையில் வேலை செய்கிறது. மாதவனாரின் சிந்தனா சக்தி! தன் கருத்துக்குப் பலம் தேடும் முறையில், பிரிட்டிஷ் பார்லிமெண்டின் அந்தஸ்தை எடுத்து அவர் விளக்குகிறார்.

உண்மைதான். ஆணைப் பெண்ணென்றும், பெண்ணை ஆணென்றும் கருதவேண்டும் என்று கூட பிரிட்டிஷ் பார்லிமெண்ட் சட்டம் செய்யலாம்! அதாவது பார்லிமெண்டின் சட்டமியற்றும் அதிகாரத்திற்கு எல்லையே கிடையாது. மாதவனார் இதைச் சுட்டிக்காட்டி, நமது பார்லிமெண்டிற்கு இம்மாதிரி வரம்பற்ற அதிகாரம் இல்லையே, என்று அங்கலாய்க்கிறார். ஆனால் அவர் பிரிட்டிஷ் அரசியலமைப்பின் ஒருமுக்கிய அம்சத்தை ஏனோ எடுத்துக்காட்ட மறந்துவிட்டார்!

பிரிட்டிஷ் அரசியலமைப்பு சட்டத்தால் கட்டுப்பட்டதல்ல, அது ஏட்டில் எழுதப்படாத சட்டம்.

அது, இன்று நேற்று முளைத்ததல்ல; அரசியலறிஞர்களின் மூளையிலிருந்து உதித்ததல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன், அந்நாள் சூழ்நிலை காரணமாக உருவெடுத்து, அவ்வப்போது நிகழ்ந்த சந்தர்ப்பங்களின் சீதோஷண நிலைகளுக்கேற்றவாறு வலுப்பெற்று அரசியல் புயல்களுக்கு வளைந்து கொடுத்து இன்று மரமாக வளர்ந்து நிற்கிறது. அதன் ஆணிவேர் ஜனநாயகம்.

அது, சட்டப் புத்தகத்தில் எழுதப்படாமையாலும், சந்தர்ப்ப அவசியத்திற்கும், மக்கள் மனநிலைக்கும் தக்கவாறு வளர்ந்து வலுப்பெற்றாலும், தனது எல்லையற்ற அதிகாரத்தைப் பகுத்தறிவுக்கு ஏற்றமுறையில், மக்கள் நன்மைக்குவந்த வழியில், தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மை பெற்றுள்ளது.

ஆனால், உலிகன் மற்ற நாட்டு அரசியல் சட்டங்களெல்லாம் அவ்வாறு ஏற்பட்டவையல்ல அவை, சட்ட அறிஞர்களால் எழுதப்பட்டவை.

எழுத்தால் ஏற்பட்ட சட்டத்தில் எல்லாவற்றையும் எழுதியே தீர வேண்டும்.

மக்களின் அடிப்படை உரிமைகள் யாவை? சட்டசபையின் அதிகார எல்லை எது? நிர்வாகம் எந்த இடத்திற்கப்பால் போகக் கூடாது?

நீதிமன்றம் எதைக்குறித்துத் தீர்ப்புச் செய்யலாம்? எழுத்து மூலம் தோன்றிய சட்டத்தில், இவ்வினாக்களுக்கு விடைகள் எழுதியே தீர வேண்டும் எழுதும்பொழுது, நிர்வாகம், சட்டசபை, நீதிமன்றம், இவற்றின் எல்லைக்கோட்டை வரையறுத்தே ஆகவேண்டும்.

இதை மாதவனார் உணர்ந்திருந்தும், உணராததுபோல் பேசியதைத் தான் நாம் கவனித்தல் அவசியமாகிறது.

அர்த்தமற்ற, பொதுமக்கள் வெறுக்கத்தக்க சட்டங்களை இயற்றவும் பிரிட்டிஷ் பார்லிமெண்டிற்கு அதிகாரம் உண்டு. ஆனால், இந்த அதிகாரம் உபயோகப்படுத்தப்படுவதில்லை. அதே மாதிரி நமது இந்திய பார்லிமெண்டும் நடந்து கொள்ளுமென மாதவனார் உறுதி கூறமுடியுமா?

எழுத்தால் ஏற்பட்ட அரசியல் சட்டத்தில், மக்கள் உரிமைகளைப் பற்றிய பகுதிதான் அஸ்திவாரம் போன்றது. இந்த உரிமைகளை அரசாங்கம் (நிர்வாகம்) மீறினால், கண்டித்துத் திருத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இருக்கவேண்டும். எழுத்தால் எழுப்பப்பட்ட சட்டத்தில் இவற்றைச் சொல்லித்தானே ஆக வேண்டும்!

மாதவனார் கூறுகிறபடி நீதி மன்றத்தின் பல்லைப் பிடுங்கி விட்டால், மக்கள் உரிமைகளைக் காற்றாடியில் கட்டி விட வேண்டியது தான்!

ஒரு சூடு
பறந்து சென்றனர் மந்திரிகள், பதறித் திரும்பினர்!

பிரதமர் குமாரசாமி ராஜா, மராமத்து மந்திரி பக்தவத்சலம் இருவரும் டெல்லிக்குச் சென்றனர். திரும்பி வந்தனர்.

ஏன் சென்றனர்? எப்படித் திரும்பினர்? கேட்க வேண்டிய கேள்விகள்!

அணைக்கட்டு திட்டங்கள், சில அரை குறையாகக் கிடக்கின்றன. அவைகளை தொடர்ந்து முடித்தாக வேண்டும்! ஆனால் பணமோ இல்லை! பணம் பெறும் வழியே தெரியவில்லை!

பணம் இல்லை யென்றால் துங்கபத்ரா தூங்கிவிடும்! மற்றவைகளோ மங்கி விடும்! என செய்வார் பக்தவத்சலனார்! பாஞ்சசைன்யம் எடுத்தா முழங்குவார்? முழங்கினால் மட்டும் என்ன நடந்துவிடும்!

பக்தவத்சலம், பிரதமர் ராஜாவிடம் கேட்டார். அவர் இவரைப் பார்த்தார்! இவர் அவரைப் பார்த்தார்! இருவரும் வடக்கு நோக்கி தெண்டனிட்டனர்!

பறந்தனர் டெல்லிக்கு! பதைபதைப்போடு கூறினார்! முடியுந்தறு வாயில் உள்ளன திட்டங்கள், இப்பொழுது நிறுத்துவதோ, தள்ளி வைப்பதோ முடியாது! ஆகவே, அபயம் அளியுங்கள் என்று அஞ்சலி செய்தனர்!

வரம் வேண்டிய பக்தர்களைப் பார்த்து, டெல்லி தேவதை, அதற்கு என்ன வேண்டும் என்று கேட்க, பக்தர்கள் 19 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்று கூறினார்கள்.

19 கோடியா, என்று டெல்லி பயந்தது கண்டு, கனம் பக்தவத்சலனார் தேற்றினார். 3 கோடி ஏற்கனவே கடன் வாங்கியிருக்கிறோம் என்று கூறினார்.

இன்னும் 15 கோடி தந்தால் போதும் என்றார் கனம் ராஜா.

ஆனால் கேட்ட வரம் கிடைக்கவில்லை. பாதிகூட அல்ல. அதிலேயும் குறைவு. 6 கோடி தருவதாக வாக்களித்தவுடன் திரும்பி விட்டனர்.

சென்னை, இப்படி டெல்லியிடம் போய்ப் போய் ஏமாந்து திரும்பியும் ஏன் புரியவில்லையென்று கேட்கத் தோன்றும். என்ன செய்வது? பல தடவைகளாகியுந்தான் பயனில்லை. ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு மந்திரி போய், மூக்குடைபட்டுத்தான் திரும்புகிறார்கள்! அட்சய பாத்திரமேந்தி கனம் ரோச் விக்டோரியா சென்றாலும், காலி சட்டியுடன்தான் திரும்புகிறார்! நூல் கேட்டு கனம் பெருமாள்சாமி ரெட்டியார் சென்றாலும், நூலில்லையென்றே வருகிறார்! பக்தவத்சலம் சென்றும் பாதிவரம் கூடப்பெற முடியாமல் திரும்புகிறார்! இருந்தும் டெல்லியுடன் இருக்கிறார்கள். ஏன்? நல்ல மாட்டுக்குத்தானே ஒரு சூடு என்று சொல்லிவைத்தார்கள், நம் பெரியவர்கள்.

(திராவிடநாடு 28.10.51)