அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சிங்காரச் சிறை

நாலு வருடம் அவன் சிறையிலே இருக்கவேண்டும். கடுங்காவல். உலகின் ஒளி அவன் கண்முன் படாது. வானிலுள்ள விண்மீன், வாஞ்சனையுள்ளோரின் முகம், வாழ்க்கையின் மற்ற இன்பம் அவனுக்கு நாலாண்டுக்குக் கிடையாது. வேலை, சோறு, தூக்கம், காவல் என்பன தவிரப் பிறிதொரு சம்பவமும் ஆவனது நாலாண்டு வாழ்க்கையிலே இராது. கஞ்சிக்கலயமும், கம்பியிட்ட அறையும் காவலாளியின் சீற்றமும் அவனுக்கு விருந்து!

சட்டம் அவனைச் சிறையில் தள்ளிவிட்டது. ஏன்? அவன் குற்றம் செய்தான். ஒரு மாதை மண்டையிலே தாக்கினான். இடது கையைத் துண்டித்தான். எனவே அவன் சிறை சென்றான். ஆவனது சீற்றத்தினால் ஒரு மாதின் கையும் சிதைந்தது.

சட்டம் கூறுகிறது தவறு செய்தவனைத் தண்டி; தவறுக்கேற்ற தண்டனைக் கொடு என்று. ஆம்முறையிலே, ஒரு மாதின் கரத்தைத் துண்டித்தவனின் வாழ்க்கையிலே நாலாண்டைத் துண்டித்தது சட்டம். அதை நாம் குறை கூறவில்லை.

சம்பவத்தையும், அத்தகைய சம்பவங்கள் நகிழ இடமளிக்கும் சமுதாயத்தையுமே குறை கூறுகிறோம். அங்கம்மாள் என்ற மாதுக்குத்தான் அங்கம் சிதைக்கப்பட்டது. அருணாச்சலம் என்ற குள்ளவாளியினால், “தங்கம் போன்ற பெண். கண்டால் களிப்பாய், நல்ல அழகு” என்று அங்கம்மாள், அருணாசலத்துக்கு தான் பார்த்து வந்த பெண்ணைப் பற்றி வருணித்து, ஆவளை அப்பெண் மணந்து கொள்ளச் சொன்னதால், அருணாசலம் கட்டழகியைக் கலியாணம் செய்து கொள்ளலாம் என்று மனப்பால் குடித்தான். மணம் நடந்தது, ஆனால் அவனை மாலையிட்ட மங்கை ஆழகில்லை. அங்கம்மாள் சொன்னது அத்தனையும் மோசமெனக் கருதினான், கோபித்தான், ஆத்திரம் மூண்டது. அடித்தான் மண்டையில், கையை வெட்டினான், சட்டம் அழைத்துச் சிறையில் அவனைத் தள்ளிவிட்டது.
*****

திருமணத்துக்கு வேறொருவரின் ‘தரகும்’ வர்ணனையும், ஏற்பாடும் நடப்பதே தமிழ்நாட்டிலே வழக்கமாகி விட்டது. மணமக்கள் அதற்கு முன்பு ஒருவரையொருவர் சந்தித்து இருக்கமாட்டார்கள். சந்திப்பதே அழகல்ல என்பது சமுதாயத்திலே இன்றுள்ள கருத்து. யார் வீட்டுப் பெண்ணையோ யார் வீட்டுப் பிள்ளைக்கோ யாரோ இடையிலே இருந்து எதை எதையோ கவனித்து, ஏற்பாடு செய்து, ஏரி ஓம்பி, எவரும் அறியா மந்திரத்தை யாரோ ஒரு பார்ப்பனர் ஓதிக்கொண்டே, ஆலையிலே என்னென்ன பண்டம் வைக்கப்படுகிறது என்பதிலும், இடுப்பிலே எவ்வளவு தட்சணை ஏறிற்று என்பதிலும் கவனத்தைச் செலுத்த, கொட்டுமுழக்குடன் கூடித் திருமணத்தை முடித்து விடுகிறார்கள். பின்னர் (திரு) அழகும் இருப்பதில்லை (மணம்) நல்வாடையும் இருப்பதில்லை பெரும்பாலான குடும்பங்களிலே! புகுத்தப்பட்ட இடத்திலே புதைந்து கிடப்பது! அகப்பட்டவனிடத்திலே அடங்கிக் கிடப்பது! என்று முடிகிறதே தவிர, இருவரும் உடலும் உயிருமென, வீணையும் நாதமுமென, விளக்கும் ஒளியுமென வாழ்வதாகக் கூறுவதற்கில்லை. மனப்பொருத்தமோ, உடல் பொருத்தúô, நிலைமைப் பொருத்தமோ கவனிக்கப்படாமல், நடத்தப்படும், திருமணம் கடைசி வரையில் சிறைதானே! அத்தகைய சிறையில் அருணாச்சலம் இருப்பதைவிட நாலாண்டுச் சிறையே சென்றதிலே அதிக கோரம் இல்லை ஏன்போம்!

எத்தனையோ மாதர்கள் தமது மவினை தமக்கு மன மகிழ்வை அளிக்காது போயிற்று என்பதை உணர்கிறார்கள். எனினும் மனதிலே மகிழ்ச்சி இல்லாத குறையை, மாடி வீட்டிலிருக்கிறோம், மஞ்சமிருக்கிறது, மலர் கிடைக்கிறது, மரகத நிறச்சேலையும் மாதுள நிற ஜாக்கெட்டும், மின்னல் வளையலும், பின்னல் ஜடையும் லோலக்கும் பிறவும் இருக்கின்றன என்று எண்ணி, மாற்று மகிழ்ச்சியாகக் கொண்டு வாழுகின்றனர், மலராத அரும்புபோல், வெம்பிய பழம்போல!

திருமணம் என்பது வயது வந்த அறிவு வந்த ஒரு இணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட அவர்களின் சுகதுக்கம் இலாப நஷ்டம் - மனோ நிலை - ஆகியவற்றைப் பொறுத்ததே தவிர, பூவைத்துப் பார்த்தல், குறி கேட்டல், விளக்கு வைத்து வேண்டுதல், கயிறு போட்டுப் பார்ப்பது, செவிட்டுச் சுப்பராவையோ, குருட்டு கோவிந்த ஐயரையோ, பொருத்தம் பார்க்கச் சொல்லி முடிப்பது என்பதல்ல.

வாழ்க்கையிலே நிம்மதி சந்தோஷம் ஒய்வு முதலியவைகள் பரிமளிக்க வேண்டுமானால் திருமண முறை, ஆரிய மதப்புரட்டர்கள் புகுத்தி விட்டுப்போன, பொல்லாமையும் கேடும் நிறைந்த கருத்துக்களை அறவே நீக்கி, பகுத்தறிவு முறைப்படி அமையவேண்டும். தமக்கு எது ஏற்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் பருவமும் பருவத்துடன் அதற்கேற்ற மனப்பக்குவமும் பெற்ற இணோ, பெண்ணோ, தமது “மனதுக்கு ஆசைந்தவர் இவர்” என்று உணர்ந்து பின்னர் ஒருவரை ஒருவர் வாழ்க்கைத் துணையாகக் கொள்ளலே முறை. கடுகடுத்த முகமுடைய கணவனும், கலங்கிய கண்களையுடைய மனைவியும் கால்கை நார்போல் உள்ள மக்களும், கொண்ட குடும்பங்களும், குமுறுல், குத்து, வெட்டு, ஆண்டை ஆயலாரின் பஞ்சாயத்து முதலியனவற்றையே அரணாக கொண்ட குடித்தனங்களும், திருமண முறையை நாம் திருத்தியமைத்தால், குறையும்; சின்னாட்களில் கேடுகள் இல்லாமலே போய்விடும்.

ஆனால் இதற்கு நமது சமுதாயம் முதலில் திருமண விஷயமாகவும், பெண்கள் விஷயமாகவும் ஆரிய மதத்தினரால் நமக்குள் திணிக்கப்பட்டிருக்கும் கோரமான கருத்துக்களை வெளியே கக்கிவிடவேண்டும். ஆநதக் கருத்துக்கள் உள்ளே இருக்கும்வரை ஜøரம் இருப்பவனுக்குத் தலைவலியும் வாய்க்குமட்டலும் இருந்தே தீருவதுபோல, வாழ்க்கையிலே தொல்லையும் கவலையுமே மிகுந்து “மாயப்பிரபஞ்சம் - பிரமனின் எழுத்து - கொடுத்து வைத்தது அவ்வளவுதான் - மாரியாயிக்கு மனமிரங்கவில்லை” என்று கூறிக்கொண்டு இருக்கவேண்டியே நேரிடும்.

தமிழர்களுக்கும் ஆரியத்துக்கும் சம்பந்தம் வேண்டாம் என்று கூறுகிறோம். அந்த சம்பந்தம் வாழ்க்கையையே கெடுத்து விடுகிறது என்பதைத் திருமண முறையையும் அதனால் விளையும் பலன்களையும் கவனிப்போர் உணருவர். எனவே “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை” ஒழிக்கப்பட்டு வாழ்க்கை வண்டியின் ஒரு சக்கரம் போன்றுள்ள பெண்ணினத்துக்குப் பெருமையும் விடுதலையும் கிடைக்க வேண்டுமானால், அரியக் கருத்துக்களை அடியோடு நீக்கிவிட வேண்டும்.
விதவைகளின் துயரம் பற்றி விவரிக்கத் தேவையில்லை. ஆரியம் இணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொன்றுமாக அமைத்திருப்பதால் ஆண்கள் எத்தனைமுறை வேண்டுமாயினும் இளம் பெண்களை மணந்து கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர். பட்டுப்போகும் மரத்தில் பழம்தேடுவதுபோல அத்தகைய கிழவன் - குமரி திருமணத்திலே இன்பத்தைத் தேடினால் கிடைக்குமா? சிறைப்பட்ட பறவை சிங்காரமாக வாழ முடியுமா? கிழக் கோலத்துடனுள்ளவரைப் புருடனாகப் பெற்ற இளமாது இன்பமாக வாழ வழியுண்டா! மங்கைக்கு, புராண இதிகாச போதனை பல இருப்பினும், இளமை, இவைகளை எதிர்த்துப் புரட்சி செய்யுமே. பொங்கிய புரட்சி கண்டு பின்னர், புருவத்தை நெரித்துக் கொள்வதிலே பயன் என்ன?

தளிர் தவிக்க, பழுத்த ஓலைக்குப் பராமரிப்புத் தேடுவதா அறிவுடைமை. இளம் விதவைகள் ஏங்க, கிழவனார்கள் குமரிகளைத் தேடித் திரியும் கோரம் கூடாது என்றும், விதவைகளின் விம்மல் நின்றால்தான், நாடும் வீடும் நலம்பெறும் என்றும் நமது இயக்கத்தவர் பிரசாரம் பலமாகப் புரிந்தனர். தாரமிழந்தவன் தாலியிழந்தவளை மணப்பதுதானே. பருவத்துக்கேற்ற பாவையை அடையட்டுமே என்று பலகாலும் கூறிவந்தோம். மற்றும் கணவனையிழந்த மனைவியர் துன்புறுமாறு போல மனைவியரையிழந்த கணவன்மார்கள் துன்புறாமைக்கும் காரணம், தான் வேறு மனைவியை இழந்தவர்கள் மறுமணம் செய்து கொள்வதாயிருந்தால் விதவைகளைத்தான் மணம் செய்து கொள்ளவேண்டுமென்ற சட்டத்தால் விதவையர்கள் துயரம் ஓரளவிற்குக் குறைவதோடு, ஆண்களுக்கொரு நீதி பெண்களுக்குகொரு நீதியென்ற ஆநீதியும் ஒழிக்கப்படும் என்பது திண்ணம்.

பகுத்தறிவுடன் கூடிய காதல் மணம், கலப்பு மணம், விதவை மணம், நடக்கவேண்டும். இத்தகைய “தமிழ் மணம்” நடைபெறும் ஒவ்வொரு சமயமும் நாம் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலே வெற்றி பெற்றதற்கு ஒப்பாகும் என்று கருதுகிறோம்.

சமுதாயம் திருந்திவிட்டால் பின்னர் ஆட்சியைத் தானாக மக்கள், நமது நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்ற விதத்திலே அமைத்துக் கொள்ள எளிதில் முடியும்.

குடும்ப அமைப்பு விஷயத்திலேயே, கூடாத கோணாலான, அந்நிய ஆரிய முறைகளைக் கையாண்டு கொண்டுவிட்டால், சர்க்கார் அமைப்பைச் சரியாகச் செய்ய நமது மக்களால் எங்ஙனம் முடியும்? வீடு எங்ஙனமோ அங்ஙனமேதானே நாடு இருக்கும்! வீடு ஆரியர்க்கு அடிமைப்படாது போனால் நாடும் அடிமைப்படாது. வீடு இன்று சிங்காரச் சிறையாகத்தானே இருக்கிறது.

(திராவிடநாடு - 28.12.47)