அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


'தங்கம்' தணலில்!
தரகர், கோபுரத்தில்!!

“சிந்தாமணியாம் என் செந்தேனே! திருப்பதியை நாம் ‘கண்டோமே“

“துர்க்காதேவி – என்சொகுசு நாயகி! துளசி, கொஞ்சம், வாங்கிகோ!“

இவ்விதம் கீதம் பாடினார்களா, எனும் விபரத்தை, ‘இந்து‘ இதழ் தெரிவிக்கவில்லையே தவிர, ஏனைய நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றுவிடாமல் பிரசுரித்திருக்கிறது.

திருமலை நோக்கி வந்தார் –

தியாகராஜன் வரவேற்றார் –

அண்ணாராவ், மாலை, சூட்டினார் –

பூரணகும்பம் எடுத்தனர் –

பந்தலுக்கு அழைத்துச் சென்றனர் –

வெங்கடேசனைக் கண்டார் – அர்ச்சனை செய்தார் !

சமீபத்தில் தம்பதிகளான நிதி மந்திரி சிந்தாமணி தேஷ்முக்கும் – திட்டக்கமிஷன் உறுப்பினரான துர்க்காபாயும், ஷேத்திராடனம்‘ கிளம்பியிருக்கிறார்கள். துர்க்காபாய், ஆந்திரஅம்மை அல்லவா? ஆருயிர்க்காதலனுக்கு ஐயன் அருள் கிடைக்கச் செய்யும் ஆசையோடு, திருப்பதிக்கு இழுத்துச் சென்றிருக்கிறார். அங்கே நடைபெற்ற விபரங்களனைத்தையும் ‘இந்து‘ நன்றாகப் பிரசுரித்துள்ளது. இதுபோல நிகழ்ச்சிகளுக்காகத்தானே, ‘இந்து‘ போனற் இதழ்கள் இருப்பது? திருமலை சென்ற தேஷ்முக், வெங்கடேசப் பெருமாள் சந்நிதானத்தில் விழுந்து கும்பிட்டுவிட்டு, அர்ச்சனையெல்லாம் கண்டுவிட்டு ஆரத்தி பெற்று, அன்புடையாளுடன் திரும்பியிருக்கிறார்.

“புதுக்காதலர்களின் குதூகலத்தைக் காணப் பொறுக்கவில்லையோ உன் நெஞ்சம்?“ என்று கேட்கத் தோன்றும், உங்களுக்கு.

அவர்களது காதலையோ அல்லது அதன் விளைவாக ‘ஷேத்திராடனம்‘ ஆடுவதையோ, அல்ல – நான் குறிப்பிட விரும்புவது.

வந்தவர், நிதி அமைச்சர்! - அதிலும் பணம் கேட்டால், “இல்லை! ஏது பணம்?“ என்ற பல்லவி பாடுவதில் கைதேர்ந்த நிதி அமைச்சர், அவர் வந்தார் – திருப்பதியைக் கண்டார் – வெங்கடேசப் பெருமாளைத் தரிசித்தார்! அவர்கூட, இந்தியாவை எழில்மிகும் பூமியாக்க ‘கிளம்பியிருக்கும்‘ திட்டக் கமிஷனில் அங்கம் வகிக்கும் துர்க்காபாயும் கணவனோடு வந்து, காணிக்கை செலுத்திவிட்டுப் போயிருக்கிறார்.!

அவர்களுக்குத் திருமலையின் பெருமையைக் கோயில் பரிபாலனத்தார் விளக்கியிருப்பார்கள்.

வெங்கடேசப் பெருமானின் வைரமுடியையும், காட்டத் தவறியிருக்க மாட்டார்கள்.

அவைகளையெல்லாம் காணும், அமைச்சர், இன்னும் நாலுமுறை கன்னத்தில் போட்டுக் கொண்டிருப்பாரே தவிர, தேசீயச் செல்வம், எங்கே போய் முடங்கிக் கிடக்கிறது என்பதையா நினைத்திருக்கப் போகிறார்? அப்படி நினைத்தால், அவர் மந்திரியாக இருக்க முடியாதே!

அவர்என்ன நினைத்தாரோ, என்னவோ – ஆனால், அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் மட்டும், மிகமிகக் கண்ணீர் சிந்தக்கூடிய காரியமாகும்.

அந்தக் காரியம் அரசாங்கத்தின் அனுமதி பெற்றே, செய்யப்படுகிறது.

பொக்கிஷம் வழிய, பொங்கும் இன்பத்தில் கிடக்கும் அரசாங்கம் அல்ல, அந்தக் காரியத்தை அனுமதிப்பது. தேஷ்முக்கிடம் கையேந்தும், சென்னை அரசாங்கம்.

அதன் அனுமதியின் பேரில் 12 லட்சம் ரூபாய்களை வீணாக்குவதென முடிவு செய்திருக்கின்றனர், கோயில் பெருச்சாளிகள்.

திருமலை வெங்கடேசப் பெருமான் வீற்றிருக்கும் இடத்துக்கு மேலிருக்கும் விமானத்தைத் தங்கத்தால் அழகு செய்யப் போகிறார்களாம். அதற்கென ரூபாய் பன்னிரண்டு லட்சத்தைச் செலவிடப் போகிறார்களாம்.

அதற்கான முதல் காரியமாக வரும் 15ம் தேதி “பாலாலயம்“ செய்யப் போகிறார்களாம்! இதென்ன? – என்று கேட்கிறீர்களா? வெங்கடேசப் பெருமானின் “சக்தி“யை ஒரு கும்பத்தில் அடைக்கப் போகிறார்களாம்!!

தங்கம் போடுவதென்றால், ஆண்டவனுக்கு மேல், ‘அடிமைகள்‘ ஏறி நின்றுகொண்டுதானே, அந்தக் காரியத்தைச் செய்யும்படி நேரும. அடிமைகள் சூத்திரர்களன்றோ? அர்ச்சர்களாயிருப்போருக்கு, அக்கார வடிசலை ருசிக்கவும், சூடுதீபம் காட்டவும் தெரியுமேயொழிய, கோயில் உச்சயிலேறவும், வர்ணம் பூசவுமான ‘இலேசான தொழில்கள் தெரியாதே! ஆகவே, இந்த ‘ஏழைகள்‘ ஏறிப்பூசப் போகிறார்கள், தங்கத்தை!

ஆண்டவனருகில் இந்தக் கீழ்ஜாதி மக்கள் நெருங்கலாமா? என்ன ஆவது ஆசாரம்! ஆண்டவனுக்கே அடுக்காதே! ஆதலால், வெங்கடேசப் பெருமாளுக்கு !உருவமல்ல, சிலைதான்) இருக்கும் ‘சக்தி‘யை எடுத்து, தற்போதிருக்கும் அவரது சிலையைச் சக்தியில்லாததாக்கி, பிறகு அவரருகில் கீழ்சாதியினரை நெருங்கச் செய்து, தங்கம் போடப் போகிறார்களாம்!

இங்ஙனம் பெருமாளின் சக்தியை, அந்தச் சிலையிலிருந்து பிரித்து, அதனை ஒரு ‘கும்பத்தில்‘ விட்டு வைக்கப் போகிறார்களாம். இப்படி சக்தி மாற்றும் உத்சவத்துக்கு ‘பாலாலயம்‘ எனப் பெயராம். பெருமாளுக்கு இதுவரை செய்யப் பட்டு வந்த அபிஷேக ஆராதனைகள் யாவும் இந்தக் கும்பத்துக்கே செய்யப்படுமாம்.

ஆண்டவன் சக்தியென்ன, இவ்வளவு, அற்பமாயிருக்கிறதே – எடுக்கவும் பின்பு வைக்கவுமான, நிலையில்? என்றெண்ணுகிறீர்களா? ஆம், அர்ச்சகர்கள் மனது வைத்தால், எதுதான் நடக்கழ! ‘சிலையிலிருந்து, கும்பத்துக்கு‘ கூடுவிட்டுக் கூடபாயப் போகிறது! வெங்கடேசரின் மகிமை!

ஆண்டவன் உயிர், கும்பத்துக்குப் போய்விட்டால் அவருடைய பத்தினி அலர்மேலு மங்கை, என்ன செய்வாரோ? பாபம் இந்தப் பக்தர்கள், என்னென்ன பாடுபடுத்த வைக்கிறார்கள்!.

அமைச்சர் தரிசித்துச் சென்ற ஆண்டவன், ‘உயிரை‘ அப்புறப்படுத்தி வைக்கப் போகிறார்கள் – பக்தர்கள் காரணம், அவரிருக்குமிடத்துக்குமேல் தங்கம் பூச!

இந்தக் கைங்கரியம், மிகமிகச் செலவு பிடிக்கும் காரியம் என்பதாக தேவஸ்தானத்தார் தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்வளவு செலவுடன், தங்கம் பூசப் போகிறார்கள் – உலகெல்லாம் ஆளும பெருமாளுக்கு.

“எங்கேடா, உன் கடவுள்?“ என்று கேட்ட இரணியனைப் பார்த்து, ‘தூணிலுமிருக்கிறான்! துரும்பிலுமிருக்கிறான்! அவனன்றி ஓரணுவும் அசையாது“ என்றானாம், பிரகலாதன். தூணை உதைக்க, அங்கிருந்து நரசிம்மவதாரமாக, விஷ்ணு வந்தாராம்!.

இந்தக் காலட்சேபத்தை நடத்தும் பக்தர்களே கூறுகிறார்கள் – பெருமாளின் ‘சக்தி‘ அந்தச் சிலையிலிருப்பதாகவும், அதை கும்பத்தில்‘ மாற்றப் போவதாகவும்.

இந்த விந்தையை, சிந்தையுள்ள மானிட ஜாதிக்கு விட்டுவிடுவோம்!

ஆண்டவனுக்குத் தங்கக்கூரை வேயப் போகிறார்கள்.

அதே நேரத்தில், அந்தத் தங்கத்தை, ஆழ்ந்த சுரங்கத்தில் இறங்கி வெட்டியெடுத்து, உயிரையும் ஒரு பொருட்டேன் மதிக்காது பாடுபடும் தொழிலாளர்களின் நிலை எப்படி இருக்கிறது தெரியுமோ?

கோலார் – உரிகம் தங்கச் சுரங்கத்தை, மேற்படி கம்பெனியார் மூடிவிடப் போகிறார்கள்.

சுமார் 3500 தொழிலாளர்களை அனாதைகளாக அலைய விடப் போகிறார்கள்.

எத்தனையோ ஆண்டுகளாக இருந்துவந்த தங்கச் சுரங்கம் மூடப்பட போகிறது! இதற்கு வெங்கடேசப் பெருமாளைத் தெரிசித்துச் சென்றாரே நிதியமைச்சர் அவருடைய சர்க்காரும் அனுமதி தந்துவிட்டது.

உயிரை இழந்தனர்! எத்தனையோ பேர் கைகால்களையும் தத்தம் செய்திருக்கின்றனர், அந்தச் சுரங்கத்தில்! அவ்விதம் இலாபம் தேடிச் தந்த தொழிலாளர்கள் வயிற்றிலடித்துவிட்டு, சுரங்கத்தை, வெள்ளைக் கம்பெனியார் மூடப்போகிறார்கள்.

3500 உயிர்கள், தமிழகத்தில் வீதிகளிலே, ‘வேலையில்லை‘ என்று அலையப் போகிறார்கள்.

அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர்வழிய ஆரம்பித்து விட்டது! திருப்பதியாரோ, அவர்கள் தேடித் தந்த தங்கத்தை, கூரைக்குப் பூசுகின்றனர்!.

தங்கம் தந்தோர் தவிக்கிறார்கள் – தாசர்கள் ‘பாலாலயம்‘ நடத்துகிறார்கள்!.

ஆண்டவனும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறார்! அமைச்சரும் வந்துபோகிறார்! அரசாங்கமோ, அதிசிரத்தையுடன் இந்தக் காரியங்களை நடத்தி வைக்கிறது!.

‘தங்கம்‘ தந்தோர் தணலில்! தரகர்கள் கோபுரத்தில்!

இந்த விசித்திரத்தை என்னவென்றுரைப்பது?

திராவிட நாடு – 14-6-53