அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தி. வேலரா! நினைவிருக்கட்டும்

எந்த ஒரு கட்சியாயினும், அது அதிகாரத்திற்கு வந்துவிட்டால், அதற்கு மதிப்பும் ஓரளவு செல்வாக்கும் இருப்பது சகஜம். அதிலும், அதிகாரத்திற்கு வருமுன், பொது மக்களுக்கு அளவு கடந்த ஆசைகளைக் கூறி, அவர்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்ற ஒரு கட்சி அதிகாரத்துக்கு வந்துவிடுமானால், அந்தக் கட்சிக்கு மேலும் சிறிது செல்வாக்கு அதிகமாகும்.

இந்தச் செல்வாக்கு, நிரந்தரமாகாது - அழிக்க முடியாதது என்று கருதிக்கொண்டு, அதிகாரத்தில் அமர்ந்துள்ள ஒரு கட்சி, அதிகார போதையில் தன்னுடைய பழைய வாக்குறுதிகளை எல்லாம் மறந்து, காரியமாற்றத் தொடங்குமாயின், அதிகார பீடம் ஆட்டங் கொடுத்து விழுந்து விடும்.

பொது மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தன் பக்கம் இருந்தாலன்றித், தன்னுடைய அதிகார பீடம் நிலைத்திருக்காது என்பதை மறந்து, கண்மூடித் தர்பார் நடாத்தும் எந்தக் கட்சியும் நீடித்திருந்து அதிகாரம் செலுத்த முடியாது. அப்படிப்பட்ட கட்சிக்கு அவ்வப்போது ஆட்டம் ஏற்படுவதும், அதிகார பீடம் மாறுவதும், பின்னர் அந்தக் கட்சி அதிகாரத்துக்கே வரமுடியாத நிலை ஏற்படுவதும் நாட்டின் பல பகுதிகளிலும் நடக்கும் சம்பவங்களாகும்.

இந்த நிலைமையையே இன்று ஆட்சிப் பீடத்திலுள்ள சென்னை சர்க்காரும் ஏற்படுத்திக் கொள்ளும் முறையில் தன்னுடைய அதிகாரத்தைப் பிரயோகித்து வருகின்றது. எந்தப்பக்கம் திரும்பினாலும், மக்களுடைய கொதிப்பையும், குமுறலையும், கொந்தளிப்பையுமே சர்க்கார் காணும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. எந்த ஆட்சியாளர் காலத்திலும் ஏற்படாத வேலை நிறுத்தங்கள் இன்றைய ஆட்சியில் ஏற்பட்டு விட்டன.

ஆலைத் தொழிலாளர்கள்
ஆரம்ப ஆசிரியர்கள்
என்.ஜி.ஓ.க்கள்
போலீஸ் சிப்பந்திகள்
இன்னும் எத்தனையோ பேர், தங்கள் தங்கள் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதற்காகக் கிளர்ச்சிகளும் வேலை நிறுத்தங்களும் செய்தனர் - செய்கின்றனர். இவையெல்லாம் சர்க்காரின் இன்றைய ஆட்சி முறை எப்படி இருக்கிறதென்பதையே எடுத்துக்காட்டுவதாக உள்ளன.

பொது மக்களின் கிளர்ச்சிகள் ஒருபுறம் இருக்க, அதிகார பீடத்திலுள்ள மந்திரி சபைக்குள்ளேயே ஒத்துழையாமை இயக்கம் தோன்றி விட்டது. மந்திரி சபை ஆரம்பத்திலிருந்தே இந்த இயக்கம் வளர்ந்து வருகிறது. மந்திரி சபை ஏற்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே, அதில் மாறுதல் உண்டாகும் அளவுக்கு ஆட்சி முறையிலே அலங்கோலம் ஏற்பட்டுவிட்டது.

பிரகாசம் மந்திரி சபை கலைக்கப்பட்டு, ஓமந்தூரார் மந்திரி சபை ஏற்படுத்தப்பட்டது.

ஏன் இந்த நிலை ஏற்பட்டது? பிரகாசம் மந்திரி சபை வேறு கட்சி; ஓமந்தூரார் மந்திரி சபை வேறு கட்சியா? இல்லை. இரண்டும் ஒரு கட்சிதான். என்றாலும், அதிகார பீடத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தக்கூடிய அறிவைப் பெற்றுள்ள ஒரு கட்சியையே சார்ந்துள்ள மந்திரிகளுக்குள்ளேயே ஒத்துழையாமை இயக்கம் புகுந்து விட்டதென்றால், அவர்களுடைய ஆளும் திறனும், அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளும் எந்த அளவு உருவான பலனைத் தருமென்று, அவர்களை ஆட்சிப் பீடத்தில் அமர்த்திய பொது மக்கள் எண்ணிப்பார்க்கும் காலம் வந்து விட்டது.

மந்திரி சபையில் ஏற்பட்டுள்ள மாறுதல் இந்த அளவோடு நின்று விடுமென்றும் சொல்வதற்கில்லையே! ஓமந்தூரார் மந்திரி சபையையும் கவிழ்த்துவிட்டு, வேறு புதிய மந்திரி சபையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற அளவுக்கு நிலைமை வளர்ந்துவிட்டதே! மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்று ஆட்சிப் பீடம் ஏறிய ஒரு கட்சிக்குள் திடீர் திடீர், “பச்சோந்தி” மாற்றம் ஏற்படக் காரணம் என்ன? இந்த மாற்றம், மக்களின் செல்வாக்கு மந்திரி சபைக்கு இருக்கிறதென்பதைக் காட்டுகின்றதா? அல்லது மக்களுக்கு மந்திரி சபையிடம் மதிப்பில்லை என்பதைக் காட்டுகின்றதா? மக்களிடமிருந்து பெற்ற செல்வாக்கை மந்திரி சபை இழந்து விட்டதென்பதைத்தானே இந் நிகழ்ச்சிகள் நன்கு எடுத்து காட்டுவனவாக உள்ளன. மந்திரி சபை யின் ஆட்சி முறை, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வ தாகவோ, பூர்த்தி செய்யாவிட்டாலும், மக்களுக்கு மனமாறுதலை உண்டாக்காததாகவோ இன்றைய மந்திரி சபை வேலை செய்ய வில்லை என்பதையே இம்மாறுதல்கள் எடுத்துக் காட்டுகின்றன.

எந்தக் கட்சியினுடைய எதிர்ப்பும் இன்றி, ஏகபோகமாகத், தேர்தலில் வெற்றிபெற்று, அதிகாரத்தில் அமர்ந்துள்ள எம்மை எவர் என்ன செய்துவிட முடியும் என்ற எக்களிப்போடு, அதிகார போதையையும் அளவுக்கு மிஞ்சிக் கொண்டுவிட்டால், எந்த அசைக்கமுடியாத கட்சிக்கும் அழிவு ஏற்படும் என்பது திண்ணம். இதனை அதிகாரத்தில் இருக்கும் எந்தக் கட்சியும் மறந்துவிடக் கூடாது. அது, எவ்வளவு பலம் பொருந்திய கட்சியாய் இருந்தாலும் சரி, மக்களுடைய ஆதரவை அமோகமாகப் பெற்றுள்ள கட்சியாய் இருந்தாலும் சரி, மக்களின் ஒத்துழைப்பை இழக்கும் முறையில் தன்னுடைய ஆட்சி முறையை நடாத்திச் செல்லுமானால், அந்தக் கட்சிக்கு அதிகார பீடத்தில் இடம் கிடைக்காது. இதற்கு ஓர் உதாரணம்.

இங்கிலாந்தின் பிடியிலிருந்து விடுபட்ட அயர்லாந்தை தி - வேலரா என்பவர் தன்னுடைய அதிகாரத்துக்குக் கீழ்கொண்டுவந்து, கடந்த பதினாறு ஆண்டுகளாக ஏகபோகமாய் ஆண்டு வந்தார். இன்று தி-வேலராவின் நிலை என்ன? பதினாறு ஆண்டுகளாக மக்களின் செல்வாக்கையும் ஒத்துழைப்பையும் பெற்று ஆட்சி புரிந்துவந்த தி - வேலரா இன்று ஆட்சியில் இல்லை. மக்கள் அவருக்கு எதிராகக் கிளம்பி அவரை விரட்டி விட்டனர்.

அயர்லாந்து, நம் நாட்டைப் போல், பலதிறப்பட்ட அரசியல் கட்சிகளையோ, சாதி மதவேறுபாடுகளையோ கொண்ட ஒரு நாடன்று, என்ற போதிலும் அந்நாட்டின் தலைவன், பொதுமக்களின் செல்வாக்கையும் ஒத்துழைப்பையும் பெற்று ஆட்சி செலுத்த முடியவில்லையென்பதை, பலதிறப்பட்ட அரசியல் கட்சிகளையும் சாதிமதங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு நாட்டைத் தாங்களே ஆளலாம் - ஆள முடியும் என்று எண்ணிக்கொள்ளும் இன்றைய நம் ஆட்சியாளர்கள் தங்கள் நினைவுக்குக் கொண்டுவந்து பார்ப்பார்களானால் அவர்களுடைய ஏகபோக ஆட்சி முறையால், இந்நாட்டு மக்களின் நிரந்தரமான ஒத்துழைப்பை எந்தக் காலத்திலும் பெற முடியாதென்பதை உணர்வார்கள்.

எனவேதான், காரணம் எதுவுமின்றிக், கிடைத்த செல்வாக்கை வைத்துக்கொண்டு, அடக்குமுறையை அள்ளி வீசுவது போன்ற முறை தவறிய காரியங்களைச் செய்யத் தலைப்பட்டிருக்கும் சென்னை சர்க்காருக்கு, தி-வேலரா, நினைவிருக்கட்டும் என்று எச்சரிக்கிறோம்.

14.3.1948