அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஐந்தாண்டுத் திட்டம் தீட்டிப் புனிதப்போர் நடத்துக!
2

ஒதுக்கியது அதிசயமா?

இந்த ரூ.3 கோடி 35 லட்சம் ஒதுக்கியிருப்பது அதிசயமா என்றோ அல்லது அரிசனத் துறைக்குத்தான் இவ்விதம் அதிகமான அளவில் ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்களா என்றோ கூர்ந்து கவனித்துப் பார்த்தால் – ஆறு கோடி ரூபாய் போலீஸ் துறைக்கு ஒதுங்கியிருக்கிறார்கள். 6 கோடி ரூபாய் போலீஸ் துறைக்கு ஒதுக்கி வி்ட்டு 3 கோடி ரூபாய் அரிசனத் துறைக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.

ஒவ்வோர் துறையிலும் நாம் செலவு செய்கின்ற தொகையின் அளவு கூடிக்கொண்டே போகிறது. அந்த அளவில்தான் இந்தத் தொகையும் உயர்ந்திருக்கிறதே தவிர இந்தத் துறையில் மட்டும் விசேடக் கவனம் செலுத்தியதாக நான் கருதவில்லை. நான் எதிர்க்கட்சிக்காரன் என்ற முறையில் பேசவில்லை என்பதைக் கனம் அமைச்சர் அவர்கள் மறந்து விட்டுப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சென்றால் எவ்வாறு ஒழித்துவிட இயலும்?

பல தலைமுறை தலைமுறையாக வந்திருக்கின்ற தீண்டாமைப் பேயை ஒழிப்பதற்கு மெல்ல மெல்ல படிப்படியாக இப்படி போய்க் கொண்டிருந்தால் எத்தனையோ தலைமுறைகள் கழிந்தாலும் இந்தத் தீண்டாமைப் பேயை ஒழித்துவிட முடியாது.

அதற்கென்று தகுந்த – விரிவான – நிறைவேற்றத்தக்க – கட்சிகளுக்கு அப்பாற்பட்ட – பொருளாதாரத் துறையில் அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற ஓர் உடனடியான திட்டத்தை எடுத்து அதற்கென்று தனியாக ஒரு துறையை வேண்டுமானாலும் நிறுவி வேலை செய்ய வேண்டும்.

சுலபத்தில் தீர இயலாது!

“தீண்டாமையை ஒழித்தே ஆகவேண்டும்‘ என்ற அளவில் இந்தியத் துணைக்கண்ட பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் ‘வார் ஆன் பாவர்ட்டி, வார் அகெயின்ஸ்ட் அன் எம்பிளாய்மென்ட்‘ என்று சொல்வது போல் - வார் அகெயின்ஸ்ட் அன்டச்சபிலிடி – தீண்டாமைப் பேயை எதிர்த்து நடத்துகின்ற ஓர் அறப்போராட்டம் என்ற அளவில் இதைக் கருதி இதை ஏற்றுக்கொண்டால் ஒழிய ‘500 வீடுகள் கட்டப்போகிறோம்‘ என்று கூறி ‘ஐந்து வீடுகளை கட்டி விட்டோம்‘ என்று சொல்லுவதினாலோ, அல்லது ‘100 ஏர் மாடுகள் தேவைப்பட்டது அதற்குப் பத்து மாடுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறோம்‘ என்று சொல்வதினாலோ அடுத்தடுத்து ஒவ்வொர் ஆண்டும் 10 மாடுகள் வீதம் வாங்கிக் கொடுக்கப்படும் என்று சொல்வதினாலோ இந்தப் பிரச்சனை சுலபத்தில் தீர்ந்துவிடாது.

தனி முயற்சி அவசியம்

இதற்காகப் போடப்பட்டிருக்கும் திட்டங்கள் போதுமானவையாக இல்லை என்று இந்தத் தரப்பில் உள்ளவர்கள் எடுத்துக் காட்டி வருகிறார்கள். சேரிகள் திருத்தப்பட வேண்டும். சேரியிலுள்ளவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்தரம் ஏற்படவேண்டும் என்பதற்காக முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயே தகுந்த இடம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் நான். இரண்டாவது திட்டத்திலும் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால் சேரிகள் திருத்தப்படுவதைப் பொதுத்துத்தான் சுகாதார வளர்ச்சி இருக்கிறது. சேரிகள் திருத்தப்படுவதைப் பொறுத்துத் தான் கல்வி வசதி பெருகுவது இருக்கிறது. சேரிகள் திருத்தப்படுவதைப் பொறுத்துத்தான் நாட்டின் சட்டம், அமைதி, ஒழுங்கு இந்தப் பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றன. ஆகையினால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படையான பிரச்சனையாக அமைந்திருப்பது ஆதி திராவிடர் பிரச்சனையாதலால் இதற்கென்று தனியாக ஒரு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்..

நல்லெண்ணம் கொண்டு அக்கரை செலுத்தினீரா?

அப்படி ஏற்பாடு செய்யாமல் நான்கைந்து விதைப்பண்ணைகள் ஏற்படுத்திவிட்டோம், ஒவ்வொரு தாலுகாவிலும் 10 பொலி காளைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அல்லது பத்து கோழிப் பண்ணைகள் ஏற்படுத்தியிருக்கிறோம். அல்லது பத்து ஆதிதிராவிட மக்களுக்குப் பத்து வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்ற அமைச்சர் அவர்கள் தரப்பிலிருந்து சொல்வதும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தரப்பிலிருந்து கட்டிக் கொடுத்தது 10! அதில் விழுந்து போனது 8. மீதம் இருப்பது 2. இதை எப்படி பாதுகாப்பது என்பதற்கு கணக்கு போட்டுக் கொள்வதைப் பார்த்தால், உண்மையிலேயே நாம் வெட்கப்பட்டுக் கொள்ள வேண்டாமா? நாங்கள் ‘வெட்கப்பட வேண்டாமா? என்று கேட்கும்போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் பக்கமிருந்தும், அடிக்கடி ‘வெட்கப்பட வேண்டாமா?‘ என்று எங்களாலும் கேட்க முடியும் என்ற எண்ணத்தில் கேட்கிறார்கள். ஆனால் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் நல்லெண்ணம் கொண்டு இதில் அக்கறை செலுத்தியிருக்கிறார்களா என்று பார்த்து இதனால் யாருக்காவது குந்தகம் ஏற்படுகின்றதோ என்பதைப் பார்த்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

இவர்களுக்கே இந்த கதி என்றால் மற்றவர்களுக்கு

காலனிகளுக்கு மனைக்கட்டுகள் ஒதுக்குகின்ற விஷயத்தில் ஏற்படுகின்ற காலதாமத்தைப் பற்றிப் பல உறுப்பினர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். நம்முடைய சர்க்கார் எந்த அளவுக்கு இதில் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த அறிக்கையிலுள்ள சில வாசகங்கள் தெரிவிக்கின்றன. அரிசனங்களுக்காக நில ஆர்ஜிதம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகச் சில சமயங்களில் புகார் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. ‘புகார்‘ என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டால் அதை ஒப்புக் கொண்டதாக அர்த்தமல்ல. சில சமயங்களில் புகார் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து ‘ஆறு ஆண்டுகளாக இந்தச் சபையிலேயே இதற்கான நல்ல முறையில் நில ஆர்ஜிதம் செய்ய முடியவில்லையே என்று சொன்னவர்களைப் பார்த்து நான் உண்மையிலேயே பயந்தே போனேன். இவர்களுக்கே இந்த கதி என்றால் – மற்றவர்களுக்கு என்ன கதி என்பதை நினைத்து மலைத்தே போய்விட்டேன்.

குறைகள் சொல்லப்பட்டு வருவது இன்றா நேற்றா?

ஆகையினால் மனைக்கட்டு வழங்குவது – நடை பாதை போடுவது சுடுகாட்டுக்கு இடம் கொடுப்பது போன்ற விஷயங்களில் சட்டம் குறுக்கிடுவதாக இருந்தாலும் நம்முடைய அமைச்சர் அவர்கள் சட்ட நிபுணர்களை இதற்கென்று கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்தால் ஏன் இந்தத் தாமதம் ஏற்படுகிறது? இது இந்த ஆண்டு மட்டும் சொல்லுகிற குறை அல்ல – போன ஆண்டும் சொல்லப்பட்டது – அதற்கு முந்திய ஆண்டும் சொல்லப்பட்டது. இந்த மன்றத்தின் தலைவராக திரு.சிவ சண்மகம் !பிள்ளை) அவர்கள் இருக்கின்ற காலத்திலேயே நில ஆர்ஜிதம் செய்வதிலுள்ள குறைபாடுகளைப் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. பத்து ஆண்டுக் காலமாகக் தொடர்ச்சியாக இதை நீக்குவதற்க இதிலுள்ள கஷ்டங்களைப் போக்குவதற்கு ஏன் நடவடிக்கை எடுததுக் கொள்ளவில்லை.

இலட்சணம் இதுதான்

ஆனால் இப்போது கடைசியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். சட்டக் கமிஷனின் சிபாரிசகளை அனுசரித்து நில ஆர்ஜித நடைமுறையைக் குறைக்கச் சட்டத்தைத் திருத்தும் பிரச்சனையை அரசினர் ஆலோசித்து வருகின்றனர் என்பதையும் இங்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் என்கிற அளவுக்குத்தான் நிலைமை இருந்து கொண்டிருக்கிறது.

பத்து ஆண்டுக் காலமாக மனைக்ட்டு விஷயத்தில் சட்டம் குறுக்கிட்டு வருகிறது என்று தெரிந்திருந்தும் அதை நீக்குவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொள்ளாதற்குக் காரணம் என்ன? அதில் வெற்றி பெறுவதைப் பொறுத்துத்தான் மக்களிடத்தில் நீங்கள் வைத்திருக்கின்ற நல்லெண்ணத்தைப் பெருக்கிக் கொள்ள முடியுமே தவிர, வெறும் புள்ளி விவரக் கணக்கை மட்டும் நம்பி உங்கள் நல்லெண்ணத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாது.

உறவு ஏற்படும் வகையில் விரிவுபடுத்தப்படவேண்டும்

அதோடு இதில் பணம் ஒதுக்குவது மட்டுமல்ல. பெருமளவு பிரச்சாரமும் தேவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். பிரச்சாரத்திற்காக ‘அரிசன விழா‘ நடப்பதைப் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேசியபோது இது நலம் அளிப்பதாக இல்லை. இதை ஒரு பொது நாளாகக் கொண்டு, இதில் எல்லாக் கட்சிகளும் கலந்து கொள்கின்ற அளவில் ஊருக்கும் சேரிக்கும் நல்ல உறவு ஏற்படுகின்ற வகையில் இதை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்த மன்றத்தில் நான் பன்னிப்பன்னிச் சொன்னேன். ஆனால் இங்கே பேசப்படுவது வேறாக இருக்கிறது. எல்லாக் கட்சிகளுக்கும் இதில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதன் மூலம் ‘அரிசன விழா‘ கொண்டாடப்பட வேண்டும்.

அச்சம் இல்லையென்றாலும் ஐயப்பாடு ஏற்படுகிறது

எதிர்க்கட்சியினர் கலந்து கொள்வதில் அமைச்சர் அவர்களுக்கு அச்சம் இல்லையென்றாலும், வேறு சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது. வேறு சிலர் அச்சப்படுகின்ற அளவுக்குப் பேசினார்கள். அமைச்சர் அவர்களக்கு அச்சம் இல்லாவிட்டாலும் ஐயப்பாடு ஏற்படுகிறது – அந்த இடங்களில் வந்த இவர்கள் எங்கே நாட்டுப் பிரிவினையைப் பற்றிப் பேசிவிடுவார்களோ? என்று எண்ணுகிறார்கள்.

நாட்டுப் பிரிவினையைப் பற்றிப் பேசுவதற்க நேரம் கிடைக்காமல் காலம் கிடைக்காமல் இடம் கிடைக்காமல் இருந்தால் அல்லவா இந்த ‘அரிசன விழா‘வில் வந்து பேச வேண்டும்? ஆகவே அச்சமும் வேண்டாம் ஐயப்பாடும் வேண்டாம்.

நல்ல பலன் விளைய ஆவன செய்வீர்!

சேரியிலுள்ளவர்கள் ஊருக்குள் வருவதற்கும் ஊரில் இருக்கின்றவர்கள் சேரியிலுள்ள வீடுகளுக்குப் போவதற்கும் சேரியில் நடமாடும் குழந்தைகள் ஊரிலுள்ள குழந்தைகளோடு கைகோர்த்து விளையாடுவதற்கும், சேரிகளிலுள்ள முதியவர்கள் ஊரிலுள்ள முதியவர்களோடு அன்பு கனியப் பேசுவதற்கும் முடிந்தால் அன்றைய தினம் ஊரிலுள்ளவர்களும், சேரியில உள்ளவர்களும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துகின்ற முறையில் ‘சமபந்தி போஜனம்‘ நடத்துவதற்கும் வகைசெய்தால் அதற்கு எடுத்துக்காட்டாக இந்தத் திருநாள் என்ற முறையில் நடைபெறுவதற்கு வகை செய்திருந்தால் நிச்சயமாகச் சேரியிலுள்ளவர்களின் மதிப்பு உயரும். அதன் மூலம் நல்ல பலனையும் நாம் நிச்சயமாகக் காணமுடியும் என்பதை நான் வலியுறு்திக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

அமைச்சர் கடமை என்ன?

நம்முடைய அமைச்சர் கக்கன் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்ற நேரத்தில், அதிலும் பள்ளிக்கூடப் பிள்ளைகளிடத்தில் பேசுகின்ற நேரத்தில், கல்லூரி மாணவர்களிடத்தில் பேசுகின்ற நேரத்தில் நீங்கள் அறிவுரை சொல்லுங்கள். ‘நீங்கள் உங்கள் விடுமுறை நாட்களில் ஆதிதிராவிட மக்கள் சாதி இந்துக்கள் வீட்டிலும் சாதி இந்துக்கள் ஆதிதிராவிட மக்கள் வீ்ட்டிலும் விருந்தினராகத் தங்கியிருங்கள் என்று அவர்களிடத்தில் சொல்ல வேண்டும்.

இவ்விதம் அமைச்சர் பிரச்சாரம் செய்வது பொருத்தமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தக் காரியத்தைச் செய்வதில் அக்கறை இருக்கும் என்றால் இந்தக் காரியத்தை செய்தே ஆக வேண்டும்‘ என்று ஒவ்வொருவருக்கும் சொல்ல வேண்டும். அந்த அளவுக்குச் சமூகத்தில் மூடபனி போல் பரவி இருக்கிறது இந்தத் தீண்டாமை.

அவையல்லாமல் எங்கள் அமைச்சர் அவர்கள் இந்த இலாகாவில் வந்ததனால்தான் இவைகள் எல்லாம் நடந்தன. காங்கிரசுக் கட்சி இருப்பதினால் தான் இத்தனை எம்.எல்.ஏக்கள் இந்த மன்றத்தில் வரமுடிந்தது என்றெல்லாம் சொல்வதால் எந்த விதமான பலனும் இல்லை. அப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் நானும் சொல்லலாம் கார்ப்பரேஷனில் எங்கள் கட்சி வந்ததின் பின்னால் தான் எட்டு ஆதிதிராவிட மக்கள் கார்ப்பரேஷன் உறுப்பினர்களாக வரமுடிந்தது என்ற.

பெருமைப்படுவதால் எவ்வித நன்மையும் ஏற்படாது

இவ்விதம் பெருமைப்பட்டுக் கொள்வதால் எந்த விதமான நன்மையும் ஏறப்ட்டு விட முடியாது. ஆகையால் பெருமைக்காக மட்டுமல்லாமல் நியாய உணர்ச்சியோடு ஆதிதிராவிடச் சமுதாயத்திற்கும் மற்ற சமுதாயங்களுக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடுகளைக் கருதி அவர்களக்கிடையில் இருக்கின்ற பொருளாதாரப் பேதங்கள் சமுதாயப் பேதங்கள் ஆகியவற்றையெல்லாம் போக்குவதற்குச் சட்டத்தைவிட – நிர்வாகத்தில் செலவு செய்வதைவிட பிரச்சாரம்தான் முக்கியமானது. ஆகவே, இன்னின்ன விதங்களில் பிரச்சாரம் செய்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைப் படிக்கின்ற நேரத்தில் மற்ற என்னென்ன காரியத்திற்கெல்லாமோ இங்குப் பலர் சிரிக்கிறார்கள். இதைப் படிக்கிற நேரத்தில் எனக்குச் சிரிப்பு வந்தது.

மறைந்து வரும் முறை மூலமா தீண்டாமை ஒழியும்?

ஏனென்றால் இதிலே யாரோ கிராம சேவக்குகள் என்ற இருக்கிறார்களாம். அவர்கள் ஒவ்வோர் இடத்திற்கும் சென்று, வில்லுப்பாட்டு பாடி தீண்டாமை ஒழிக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வில்லுப்பாட்டே ஒழிந்து கொண்டு வருகிற ஒருமுறை. ஒழிந்து கொண்டிருக்கிற ஒரு முறையை வைத்துக் கொண்டு தீண்டாமையை ஒழிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிறகு வேறு ஏதாவது செய்கிறார்களா என்று பார்த்தால் இரண்டாவது ஐந்தாவண்டுத் திட்டத்தில் பார்த்தாலும் வில்லுப்பாட்டிலே பிரச்சாரம் செய்கிறார்கள் என்று முடிகிறது. ஒவ்வொருவரையும் எடுத்துக் கொண்டு போய் உங்கள் சார்பில் திருப்ப – அதற்கு முயற்சி செய்கிறீர்களே தவிர, தீண்டாமையை ஒழிக்க அத்தகைய பிரச்சாரத்தை நீங்கள் மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று இதிலிருந்து விளங்கவில்லை.

பிரச்சனையிலிருந்து நழுவாதீர்!

நிதிநிலை அறிக்கையிலே மட்டும் கலந்து பேசுவது என்று கருதாமல் அமைச்சர் கக்கன் அவர்கள் அவர்களுக்கு ஒய்வு கிடைக்கற ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு கட்சியில் இருப்பவர்களுடனும் கலந்து பேசி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அதற்கான வழி வகைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர எதையும் கட்சிக் கண்ணோட்டத்தோடு பார்த்துத் தன்னைப் பற்றியே தாழ்வாகக் கருதி மனவருத்தம் கொண்டு பிரச்சனைக்குப் பரிகாரம் தேடாமல், அந்த வேலையிலிருந்து நழுவ வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 15, 20.3.61)