அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்


அப்போதே சொன்னேன்
1

“அப்போதே சொன்னேன், கவனமிருக்கிறதல்லவா? அந்தப் பயல் உருப்படமாட்டான் என்று தெரிந்து சொன்னேன். விளையும் பயிர் முளையிலே என்று பெரியவர்கள் வீணுக்கா சொல்லி வைத்தார்கள்!” என்று ஒவ்வொரு நாளும் நடைபெறும் குளத்தங்கரை மாநாட்டில், கொத்தனார் வேலையிலிருந்து வளர்ந்து ‘காண்ட்ராக்டர்’ ஆகிவிட்ட குத்தாலலிங்கம் அன்று கூறிவிட்டு, உடன் இருந்தவர்களைக் கம்பீரமாகப் பார்த்தார். உடன் இருந்தவர்கள் மூவர். ஒருவர் குத்தாலலிங்கம் தலையில் எப்படியாவது கரம்பு நிலத்தைக் கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த கலியபெருமாள் வாழ்ந்து கெட்டவர்; மற்றொருவர் தமது மகளை மருமகளாகக் கொள்ள குத்தாலலிங்கம் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு பூரித்துப் போயிருந்த பொன்னம்பலம்; மூன்றாவது பேர்வழி மாரியம்மன் கோவில் பரம்பரை பூசாரி. ஒவ்வொரு நாளும் - அதாவது குத்தாலலிங்கத்துக்கு வசதியும் ஓய்வும் கிடைத்திடும் நாள் - குளத்தங்கரையில் அவர்கள் கூடுவதும், தங்கள் தீரனூர் புள்ளிகளைப் பற்றிப் பேசுவதும் வாடிக்கை.

குத்தாலலிங்கம் கொத்தனாராக இருந்த வரையில், மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலை! காண்ட்ராக்டர் ஆனபிறகு, அவர் பேசுபவராகவும் மற்றவர்கள் கேட்டுக் கொள்பவர்களாகவும் நிலைமை மாறிவிட்டது.

தீரனூரில் நாட்டாண்மை வீட்டு ‘பெரிய ஐயா’ காலமாகி விட்ட பிறகு, அந்தக் குடும்பத்தைப் பற்றியும் குளத்தங்கரை மாநாட்டிலே பேச்சு அடிபட ஆரம்பித்தது. பெரிய ஐயா இருந்த வரையில் ‘அந்தப் பேச்சு’ நமக்கு எதற்கு என்று ஒதுக்கி விடுவார்கள்; அத்தனை மதிப்புப் பெற்ற குடும்பம்.

பெரிய ஐயா காலமாகி விட்ட பிறகு, ‘காவேரி’ அம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டு தன் இரண்டு பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் நல்ல முறையிலே வளர்த்து வந்தார்கள்.

பட்ட மரம் துளிர்ப்பது போல, இந்த இரண்டு மகன்களும் அந்தக் குடும்பத்தை மறுபடியும் வளமானதாக்குவார்கள், நாட்டாண்மையை நடத்திச் செல்லுவார்கள் என்ற நம்பிக்கை பலருக்கு. இரண்டு பிள்ளைகளில் மூத்தவன் சாத்தப்பன்; துடிதுடிப்பானவன்; அவன் தம்பி தங்கப்பன்; அமைதியானவன்; பெண்ணின் பெயர் வடிவு; நல்ல அழகி.

சாத்தப்பன் சுறுசுறுப்பாகவும் யாரிடமும் கலகலப்பாகப் பழகுவதையும் கண்டவர்கள், அவன் விரைவில் நல்ல முறையில் படித்துப் பட்டம் பெற்று முன்னுக்கு வருவான் என்று எண்ணிக் கொண்டனர்; பள்ளிக் கூடத்திலேயும் அவனுக்குத் தான் முதலிடம்! தங்கப்பனுக்குக் கிடைத்த மதிப்பே, அவன் சாத்தப்பன் தம்பி என்பதாலேதான்!!
* * *

எதைப்பற்றியும் நுணுகி ஆராய்ந்து, உண்மையைக் கண்டறிந்து கூறத்தக்கவர் என்ற பெயர் குத்தாலலிங்கத்துக்கு. சொத்து சேரச் சேர வளர்ந்து கொண்டிருந்தது. குத்தாலம் சொன்னா சொன்னபடி நடக்கும் என்றும் எப்போதோ நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து சொல்லுவார், அந்தத் திறமை உண்டு என்றும் பேசிக் கொள்வார்கள். அவனுடைய முப்பாட்டனார் பெரிய ஆரூடக்காரர் தெரியுமா! அந்த ‘அம்சம்’ துளியாவது இருக்கத்தானே செய்யும் என்று ஆதாரம் கூடக் காட்டினார்கள்.

ஊரிலே பலரும் சாத்தப்பனைப் பற்றிப் பாராட்டிப் பேசியபோது, குத்தாலம் மட்டும் தலையை அசைத்தபடி, “என் மனத்திலேபட்டதைச் சொல்றேன்... அந்தப் பய சாத்தப்பன் ஒழுங்கா இருக்கப் போவதில்லை. போகப் போகத் தெரியும் பாருங்க” என்று சொல்லி வைத்தார்.

அந்தப் பேச்சு நடந்து மூன்று வருஷங்களுக்குப் பிறகுதான் அன்றைய குளத்தங்கரை மாநாட்டில் குத்தாலலிங்கம் வெற்றிப் புன்சிரிப்புடன் சொன்னார், “நான் அப்போதே சொன்னேனே, கவனமிருக்கிறதா?” என்று. அன்று அந்தப் பேச்சு வந்ததற்குக் காரணம், தாழைப்பட்டி மிட்டாதாரர் மகள் தருமாம்பாளை, தங்கப்பனுக்குத் தருவது என்று நிச்சயித்துத் திருமணத்துக்கு நாள் குறித்து விட்டார்கள் என்ற செய்தி கிடைத்ததுதான்.

தாழைப்பட்டியார் தன் மகளைச் சாத்தப்பனுக்குத் தான் கொடுக்க விரும்புகிறார் என்று ஊரே பேசிக்கொண்டது. சாத்தப்பன் தங்கப்பன் இருவருமே தாரைப்பட்டியை அடுத்த புது நகரக் கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். தர்மாவும் கல்லூரி மாணவி.

சாத்தப்பனும் தர்மாவும் ஒன்றாக உலவுவதும் உல்லாச மாகப் பேசுவதும், பூப்பந்தாட்டம் ஆடுவதும் கண்டவர்கள், பொருத்தமான ஜோடி என்றே கூறினார்கள். தாழைப்பட்டியாரும் தமக்கு ஒரு தடையும் இல்லை என்பதை ‘ஜாடை மாடை’யாகத் தெரிவித்திருந்தார்.

ஊரெல்லாம் எதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோ அது நடைபெறவில்லை; சாத்தப்பனுக்கு என்று எந்தத் தருமாம்பாளைக் குறிப்பிட்டுக் கூறி வந்தார்களோ, அந்தப் பெண் தங்கப்பனுக்கு என்று நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது, அதிர்ச்சி பலருக்கு. சாத்தப்பன்? அவன் ஊரில் இருந்தால்தானே அவன் மனநிலை என்ன என்று தெரிந்துகொள்ள.

கல்லூரியில் திறமைமிக்க மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த சாத்தப்பன், என்ன காரணத்தினாலோ, கல்லூரி முதல்வரிடம் கடுமையாகத் தகறாரிட்டுக் கொண்டான்; அதன் காரணமாகக் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டான். ஊரை விட்டே ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டான். ஊரை விட்டுப் போகும் முன்பு தங்கப்பனைத் தனியாகச் சந்தித்து அன்புடன் அணைத்துக்கொண்டு. “தம்பி! குடும்பப் பொறப்பு இனி உன்னுடையது” என்று உருக்கமாகச் சொன்னதாகப் பேச்சு உலவிற்று. பொதுவாக ஊரிலே பரவிவிட்ட பேச்சோ, “குடும்பத்திற்கே தலை இறக்கமான காரியத்தைச் செய்து விட்டு சாத்தப்பன் ஓடிவிட்டான்” என்பது.

ஊரைவிட்டு ஓடாமல், எப்படி இங்கே இருப்பான். அவள் போட்ட சொக்குப்பொடி இலேசானதா? என்று ஒரு பேச்சு கிளம்பிற்று. அடியோடு ஆதாரமற்ற பேச்சு அல்ல அது.

“நான் கண்ணால் பார்த்தேன். அவளோடு சாத்தப்பன் ஆடிப்பாடி அலைந்ததை” என்று தருமாம்பாளே கூறியபிறகு சாத்தப்பன் மீது வந்த புகாருக்கு ஆதாரமே இல்லை என்று எப்படிக் கூறிவிட முடியும்.

மேலும் சாத்தப்பன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிட்டு ஓடி விட்டதற்கும் ‘ரசவாதம்’ ரங்கலால் தன் தங்கை மங்காவையும் அழைத்துக் கொண்டு அதே ‘இரயிலில்’ பயண
மானதையும், எப்படி ஒன்றாக இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியும்.

வழக்கமாக விடுமுறை நாட்களைத் தாழைப்பட்டி மாளிகையில் கழித்திடும் வாடிக்கையை மாற்றிவிட்டு, தம்பி தங்கப்பனை மட்டும் போகச் சொல்லிவிட்டு, சாத்தப்பன் ரங்கலால் ஆராய்ச்சிக்கூடத்தில் தங்கிவிட்டது, ஆராய்ச்சிக்காகாவா, அல்லது மைக்கண்ணீ என்று கல்லூரி மாணவர்களால் செல்லப் பெயரிடப்பட்ட மங்காவுக்காகவா!

இவ்விதமாகப் பலவிதமான பேச்சு.

சாத்தப்பன் வலையிலே விழுந்திருந்தால் என் மகள் கதி என்ன ஆகி இருக்கும். நல்லவேளை பயல் ஓடிவிட்டான், இனி தங்கப்பனே என் மருமகன் என்று தாழைப்பட்டியார் தெரிவித்து விட்டார். மகனுக்குப் பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைத்ததிலே அம்மாவுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் மூத்தவன் இப்படி ஆகிவிட்டானே, குடும்பத்துக்குக் கெட்ட பெயர் கொண்டு வந்துவிட்டானே என்பதை எண்ணி எண்ணிக் குமுறினார்கள்.

அந்த நிலையில்தான் குத்தாலம் கூறினார் “அப்போதே சொன்னேனல்லவா?” என்று.

இவ்விதமெல்லாம் நடக்கும் என்று அவர் விவரம் ஏதும் சொல்லவில்லையே; ஆனால் தங்கப்பனுக்குத்தான் நல்ல எதிர்காலம் இருக்கும், சாத்தப்பன் ‘சுழி’ நன்றாக இல்லை என்று பொதுப்படையாகச் சொல்லி வைத்தார். பார்க்கப் போனால் அவர் சொன்னது போலவே நடந்துவிட்டது; சாத்தப்பன் எவள் பின்னோடோ ஓடி விட்டான்; தங்கப்பன் தாழைப்பட்டியாரின் மருமகன் ஆகும் நிலையைப் பெற்றான்.

கல்லூரியில் புதிதாக ஒரு மண்டபம் கட்டும் ‘காண்ட்ராக்டு’ கிடைக்காது போனதற்குக் காரணம் சாத்தப்பன் என்றோர் சந்தேகம் குத்தாலத்துக்கு. ஆதாரமற்ற சந்தேகம். காண்ட்ராக்ட் குத்தலாத்துக்குக் கிடைக்கக் கூடாது என்று கூட சாத்தப்பன் நினைக்கவில்லை. கல்லூரி முதல்வரிடம் தனியாகப் பேசி ‘காண்ட்ராக்ட் தொகை’ எந்த அளவு இருக்க வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கிறார் என்று அறிந்து கூறும்படி குத்தாலம் கேட்டுக் கொண்டார். சாத்தப்பன் தன்னால் முடியாது என்றும், அது முறையல்ல என்றும் சொல்லிவிட்டான்.
இந்த விரோதத்துக்கும் தன் கணிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று குத்தாலம், கூறிவிட்ட பிறகு மறுப்புப் பேசுவார் யார், குளத்தங்கரை மாநாட்டில்!
* * *

ஆண்டுகள் மூன்று உருண்டோடின; குளத்தங்கரை மாநாடு வழக்கம் போல நடைபெற்று வந்தது; குத்தாலலிங்கமே தலைமை; மற்றவர்களிலே மட்டும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது; சம்பந்தியாகிவிட்ட பொன்னம்பலம் வேறு வேலைகளைக் கவனிக்கலானார்; கரம்பு நிலத்தை விற்க முடியாத கோபத்தில் கலியபெருமாள் மாநாட்டை வெறுத்துவிட்டார்; மாரியம்மன் கோவில் பூசாரி வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை; செங்கல் சூளை சின்னப்பனும், மரக்கடை மகமதுவும் புதிய அங்கத்தினர் களாகிவிட்டனர்.
* * *

தங்கப்பன் வக்கீலாகி, தர்முவுடன் திருச்சிராப்பள்ளி நகரில், தாழைப்பட்டியார் வாங்கிக் கொடுத்த மாடிக் கட்டித்தில் வசித்துக் கொண்டிருந்தார். தாழைப்பட்டியாரின் மருமகப்பிள்ளை என்பதாலே, கட்சிக்காரர்கள் வந்து குவிவார்களா! கோர்ட்டிலே வக்கீலுடைய திறமை எப்படி என்பதைப் பார்த்துத்தானே! வழக்கறிஞருக்கு வருமானம் கட்டையாவே இருந்தது. ஆனால் அவருக்காகத் திறமையாக வாதாடி தரும் தகப்பனாரிடமிருந்து தாராளமாகப் பணம் பெற்று வந்ததால் குடும்பம் வசதியாக நடந்து வந்தது.
* * *

“தங்கப்பன் கோர்ட்டிலே வாய் திறப்பதே இல்லை தெரியுமா. வக்கீல் வேலைக்கே அவன் இலாயக்கில்லை. எனக்கு அப்போதே தெரியும். நான் அப்போதே சொன்னேன். தங்கப்பன் திறமைசாலி அல்ல என்பதாக, கவனமிருக்கிறதா?” என்று கேட்டார், குத்தாலலிங்கம்.

சாத்தப்பன் மூலமாகக் கல்லூரி காண்ட்ராக்டை முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் சாத்தப்பனிடம் பழகி வந்தபோது குத்தாலம், சாத்தப்பன் திறமைசாலி, தங்கப்பன் ஒரு காரியத்திலும் திறமை பெறமாட்டான் என்று கூறியது உண்மை... மாரி கோவில் பூசாரிக்கு அது தங்கப்பன் திறமைசாலியாக மாட்டான் என்பதை” என்று கூறி மற்றவர்களின் பாராட்டுதலை வாங்கித் தந்தான் குத்தாலத்துக்கு. மாரி கோவில் பூசாரியின் அதிகாரத்தைக் குறைத்துவிட வேண்டுமென்று எவனெவனோ எழுதிப் போட்ட ‘மொட்டை’ பெட்டிஷனை ஒன்றுமில்லாமல் செய்வதாக வாக்களித்திருக்கிறார் குத்தாலம்! பூசாரி குத்தாலத்தைப் பூசை செய்துதானே ஆக வேண்டும், செய்தான்.
* * *

அந்த வருஷம் வடிவுக்கு நல்லபடி திருமணமாயிற்று. தாழைப்பட்டியார் ஏற்பாடுதான்; மாப்பிள்ளை சப்-இன்ஸ் பெக்டர்; சென்னை. வழக்கப்படி கண்ணைக் கசக்கியாயிற்று வாரம் தவறாமல் கடிதம் போடு என்று புத்தி சொல்லியாயிற்று. என் கண் போல மாப்பிள்ளே! என்று கொஞ்சியாயிற்று. வடிவு சென்னை சென்றாகிவிட்டது. அந்தத் திருமணத்திற்கும் சாத்தப்பன் வரவில்லை; இருக்கும் இடம் இன்னது என்றுகூட எவருக்கும் தெரியவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள், வழக்கப்படி மாநாடு குளக்கரையில், தொடர்ந்து மூன்று காண்ட்ராக்டுகளில் நஷ்டம் குத்தாலத்துக்கு; சின்னப்பன் யந்திரச் சூளை அமைத்து வளர்ந்துவிட்டிருந்தான். அவனுக்கே தலைமைப்பதவி. மரக்கடை மகமது ஆள் பார்த்துக் கொண்டிருந்தார் முதல் போட்டு வியாபாரத்தைப் பெரிதாக்க. மாரிகோவில் பூசாரி, கோவில்களிலே ஆடு வெட்டக்கூடாது, கோழி அறுக்கக்கூடாது என்று பிரசாரம் செய்தவர்களின் கூட்டத்தில் ஆட்களை ஏவிக் கலகம் செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்குத் தொல்லையில் சிக்கிச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

புத்தம் புதிய படகு மோட்டார், ஊருக்குள்ளே செல்லக் கண்டு, புதுத்தகவல் ஏதோ கிடைக்க இருக்கிறது என்ற ஆர்வத்துடன், மகாநாட்டை அவசர அவசரமாகக் கலைத்து விட்டு குத்தாலலிங்கம் ஊருக்குள் சென்றார்.
* * *

சாத்தப்பன் ஊரைவிட்டுச் சென்றுவிட்ட நாள் முதலாகவே காவேரி அம்மாளின் மனம் நொந்துவிட்டது. தங்கப்பன் தாழைப்பட்டியாரின் மருமகனான போதும் வழக்கறிஞரான போதும், மகள் வடிவுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்தபோதும், நொந்துகிடந்த மனத்துக்குச் சிறிது ஆறுதல் கிடைத்தது என்ற போதிலும் சாத்தப்பனைப் பற்றிய நினைவு அவர்கள் மனத்தைவிட்டு அகல மறுத்தது. தாய் உள்ளத்தின் தனித்தன்மைக்கு நிகராக வேறு எதுவும் இருக்க முடியாதே.

குடும்பத்தை மறந்து, பெற்ற தாயை மறந்து, எவளுடனோ சென்றுவிடத் துணிந்தவன் முகத்தைக்கூட நான் பார்க்க மாட்டேன் என்று பல முறை குமுறினார் காவேரி அம்மாள். ஆனால் அவர்களுக்கு மூண்ட கோபத்தைவிட அவன் என்ன ஆனான், எங்கு சென்றானோ, என்னென்ன இன்னலுக்கு ஆளானானோ என்ற வேதனைதான் அதிகமாக வளரலாயிற்று.
பெற்ற தாயையும் மறந்துவிடத் துணிந்தானே என்ற எண்ணியபோது மூண்ட கோபத்தைக்கூடத் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் பெற்ற தாயை மறந்து விட்டாலும் ஊரைவிட்டே போய்விட வேண்டும் என்ற அளவுக்கு அவன் மனத்திலே எதனாலே வெறுப்பு ஏற்பட்டது என்பதை எண்ணிடும் போது பீறிட்டுக்கொண்டு கிளம்பிய வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
காவேரிக்கு என்ன! மணிமணியாக இரண்டு பிள்ளைகள்! ஒருவனை வக்கீல் வேலைக்கும், மற்றொருவனை டாக்டர் வேலைக்கும் படிக்க வைக்க ஏற்பாடாகிறது. நாட்டாண்மைக்காரர் இருந்தபோது இருந்ததைக் காட்டிலும் செல்வாக்கு இந்தக் குடும்பத்துக்கு வளரும் என்று நல்லவர்கள் பேசியதைக் காதாரக் கேட்டுக் கேட்டுப் பூரித்திருந்தாள். இடி விழுவது போன்ற செய்தி அல்லவா கிளம்பித் தாக்கிற்று சாத்தப்பன் எங்கோ சென்றுவிட்டான் என்று.

தம்பி! சாத்தப்பன் இதுபோல ஏதாவது விபரீதமாகச் செய்வான் என்று உனக்கு ஏதாவது அறிகுறி தெரிந்ததா என்று கேட்டதற்குத் தங்கப்பன் சரியான பதிலேதும் கூறவில்லை. பாவம்! அண்ணன் இப்படிச் செய்துவிட்டானே என்ற வேதனையில் அவனால் எதுவும் பேசமுடியவில்லை என்று எண்ணம்கொண்ட காவேரி தன் வேதனையை அடக்கிக் கொண்டதுடன், தங்கப்பனுக்கு ஆறுதல் கூறும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவேண்டி வந்தது. எதையும் தாங்கிக் கொள்ளத்தானே பெண் ஜென்மம் என்று காவேரி அம்மாள் வீட்டு வேலை செய்பவனிடம் கூறும்போது கண்களில் நீர் பொலபொலவென உதிர்ந்தது.

உன் பேரிலே உயிர் தங்கம், சாத்தப்பனுக்கு! ஒரு வேளை நீ சரியாகச் சாப்பிடாவிட்டால் உடம்புக்கு என்ன? என்ன? என்று கேட்டுக் கேட்டுத் துடிதுடிப்பான். உன்னை விட்டுப் பிரிய எப்படித்தான் மனம் வந்ததோ, தெரியவில்லையே என்று காவேரி அம்மாள் கூறி உருகுவார்கள். அண்ணன் போக்கே ஒரு தனி தினுசு. தெரிந்ததுதானே! என்று தங்கப்பன் சொன்னபோது காவேரி அம்மாள், இதென்ன கூடப் பிறந்தவன் என்ற பாசம் துளியும் இல்லாமல் பேசுகிறானே என்று வருத்தப்பட்டார்கள். ஆனால் மறுகணம், நம்முடைய வேதனையைக் குறைக்கத்தான் தங்கப்பன் இதுபோலப் பேசுகிறான் என்று கருதி ஆறுதலடைந்தார்கள்.

காதல் என்பது பற்றி கவிகள் வருணனை தரும்போது வசீகரமாகத்தான் இருக்கிறது; ஆனால் அந்தப் பாழாய்ப் போன காதல் ஒரு குடும்பத்தை என்ன பாடுபடுத்திவிட்டது பார்த்தாயா! குடும்ப பாரத்தையே தாங்கக் கூடியவனாகத்தான் இருந்தான் சாத்தப்பன். ஆனால் ஒரு மைவிழியாளின் மையலில் சிக்கியதும், பெற்ற தாயையும் துடிதுடிக்கச் செய்துவிடத் துணிந்துவிட்டான். இதைப் பார்த்த பிறகாவது காதல் கீதல் என்றெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? என்று காதற் கலியாணம் செய்து கொள்ள உறுதி தெரிவிக்கும் வாலிபர்களை மடக்கி அடக்க முனைந்தனர் பெற்றோர்.

ஒரு வார்த்தை என்னிடம் அவன் சொன்னதில்லையே. தனக்கு ஒரு பெண்ணிடம் விருப்பம் இருப்பதாக. அவள் எந்த ஜாதியாக இருந்தாலும், என்மகனுடைய மனத்துக்குப் பிடித்தவள் என்றாகிவிட்டால், நானா குறுக்கே நிற்பேன்? எனக்கு ஜாதிகள் வேண்டுமா வேண்டாமா, நியாயமா அல்லவா? காலத்திற்கு ஏற்றதா இல்லையா என்பது பற்றி ஏதும் தெரியாது. ஆனால் மகன் வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால் தட்டாமல் தயங்காமல் பதில் சொல்லுவேனே, எனக்கு என் மகன்தான் வேண்டும் என்று என்னிடம் துளிகூட தன் எண்ணம் பற்றிச் சொல்லவில்லையே ஏன்...?

தங்கப்பா! ஏன் உன் அண்ணன் அந்தப் பெண்ணோடு ஊரைவிட்டுப் போய்விட்டான் தெரியுமா? குடும்பம் கெடக்கூடாது; நாமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும என்பதற்காகத்தான். ஏன் அவ்விதம் சொல்லுகிறேன் என்று கேட்பாய். என் மகனுடைய மனம் எனக்குத் தெரியும். அவன் எப்படியோ ஒருத்தியிடம் பாசம் கொண்டு விட்டான். என்ன குலமோ என்ன நிலையோ... அவளை என் மருமகளாக்கிக் கொள்ள என் மனம் இடம் தராது என்று எண்ணித் திகில் அடைந்திருக்க வேண்டும், முதலில், பிறகு என்னைச் சம்மதிக்கச் செய்தாலும், ‘தகாத’ திருமணம் செய்து கொண்டவன் குடும்பம் என்பதால், உனக்குத் தக்க இடத்தில் பெண் கிடைக்காது என்று எண்ணி இருக்கிறான்; வடிவுக்கு ஏற்ற மணவாளன் கிடைக்கா விட்டாலும் என்ன செய்வது என்று எண்ணி இருக்கிறான். நம்மாலே குடும்பத்திற்கு இழிவும் இடரும் வரவிடக்கூடாது என்று தீர்மானித்திருக்கிறான்... அதனால்தான், என்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு, அம்மா! அம்மா! அம்மா! என்று பாசம் பொழிந்து கொண்டிருந்த என் மகன், என்னையே, மறந்து விடத் துணிந்தான்... நீ வாழ, வடிவு வாழ, குடும்பம் வாழ, எப்போதும் தியாக உள்ளம் அவனுக்கு... தன்னைப் பற்றிய நினைப்பைவிட மற்றவர்களின் நலனைப் பற்றிய நினைப்பே அதிகம் அவனுக்கு என்றெல்லாம் காவேரி அம்மாள் கசிந்துருகிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, தருமாம்பாள் குறுக்கிட்டு “அத்தே! அவர் பரீட்சை எழுதத் தயாராகிக் கொண்டிருக்கும்போது, மனத்தைக் குழப்பிவிட்டு விடாதீர்கள்” என்று சொன்னாள் சாதாரணமான முறையில்தான். ஆனால் காவேரி அம்மாளின் நெஞ்சிலே ஒரு சம்மட்டி அடி விழுந்தது போலிருந்தது. எனக்கு இரண்டு பிள்ளைகள் ஒருவன் எங்கோ கண்காணா இடம் சென்று விட்டான்; மற்றவனை இவள் தன் உடைமை ஆக்கிக் கொண்டு விட்டாள்; இனி எனக்கென்று யார்... இரண்டு பிள்ளைகளுமே எனக்காக இல்லையா... பெற்று வளர்த்து மற்றவர்களிடமே ஒப்படைத்துவிடத்தானா பிள்ளைகள்...! என்றெல்லாம் எண்ணி வேதனை அதிகமாகி படுத்தப்படுக்கையாகி விட்டிருந்தார்கள். டாக்டர்கள் கவலைக்கிடமான நிலைமை என்று தெரிவித்தது கேட்டு, திருச்சியிலிருந்து மனைவியுடன் தங்கப்பனும் சென்னையிலிருந்து வடிவும் வந்திருந்தார்கள். பயந்ததுபோல ஏதும் நேரிட்டுவிடவில்லை; உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர் உறுதி கூறிவிட்டார். மகிழ்ச்சி துள்ளிட வேண்டிய அந்தச் செய்தியைக் கேட்டு, தர்மாம்பாள் டாக்டரிடம் சீறி விழுந்தாள். விவரம் தெரியாதவர்கள் வீண் பயம் கொள்ளுவார்கள். பதறுவார்கள்; “டாக்டர்! நீங்களுமா ஓர் ஆபத்தும் இல்லாதபோது அபாயச் சங்கு ஊதி, அவருடைய வேலையைக் கெடுப்பது, எவ்வளவு முக்கியமான பெரிய கேசை விட்டுவிட்டு வந்திருக்கிறார் தெரியுமா?” என்று கடுகடுப்புடன் கேட்டாள். தருமு பேசியதிலே சிந்திச்சிதறியது காதிலே விழுந்தது காவேரி அம்மாளுக்கு. வேதனை வெடித்துக்கொண்டு வந்தது. சாத்தப்பனை நான் பார்த்தாக வேண்டும்! உடனே வரச் சொல்லுங்க டாக்டர்... எங்கே இருந்தாலும் வரச் சொல்லுங்க... பேப்பர்லே போட்டா வருவானாம்... சொன்னார்கள் டாக்டர்! உங்களைக் கை எடுத்துக் கும்பிடுகிறேன். என் மகனைக் காட்டுங்கள் டாக்டர்... ஒரே ஒருமுறை... கடைசீ முறை... என்று கேட்டுக்கொண்டபோது டாக்டரின் கண்களோ கலங்கிவிட்டன. பத்திரிகைகளில் செய்தி விளம்பரமாக வெளியிட ஏற்பாடு செய்தார் டாக்டர். அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டுத்தான், பதறிக் கொண்டு சாத்தப்பன் வந்திருக்கிறானோ அவன் மோட்டார்தானோ அது. மோட்டாரில் வர வேண்டிய அளவு அவசரமான, ஆபத்தான நிலை வேறு யாருக்கும் இல்லையே, காவேரி அம்மாளின் நிலைதானே மோசமாக விட்டிருக்கிறது. ஆகவே படகு மோட்டாரில் வந்திருப்பது சாத்தப்பனாகத்தான் இருக்கும் பூசாரி சொன்னபோது, இருக்கலாம் என்று ஆமோதித்தார் குத்தாலம்!; எனக்குத் தெரியும் மறுபடியும் சாத்தப்பன் இந்த ஊருக்கு வருவான் என்பது. நான் அப்போதே சொன்னேனே மரக்கடை மகமதுவிடம் கேட்டுப் பாருங்கள்... எனக்கு அப்போதே தெரியும். சாத்தப்பன் பலே ஆள் என்பது- என்று சூளை சின்னப்பன் கூறிக்கொண்டே மற்றவர்களை அழைத்துக் கொண்டு நாட்டாண்மைக்காரர் வீடு நோக்கி வேகமாக நடந்தான்.

மகனைக் கண்ட மகிழ்ச்சியில் காவேரி அம்மாளுக்கு ஒரு புதிய துடிதுடிப்பு ஏற்பட்டது. அந்தத் துடிதுடிப்பே அவர்களின் உயிரையும் குடித்துவிட்டது. கால்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டபடி கதறிய சாத்தப்பனைக் கண்டு உருகாதவர்கள் இல்லை.