அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

குமரிக்கோட்டம்
1

“ஸ்ரீமான் குழந்தைவேல் செட்டியார்வாள். மகா உத்தமர். அவருடைய திவ்ய குணத்தைத் தேசம் பூராவும் போற்றுகிறது. இப்படிப்பட்டவர், ஒரு சிலராவது இருப்பதாலேதான், காலம் கலிகாலமா இருந்தாலும், மழை பெய்யறது! பூலோகத்தைச் சமுத்திராதி உற்பாதங்களால் அழிக்க முடியவில்லை என்று கூறலாம்.

உலகமே தலைக்கீழாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே பெரியவாளுடைய காரியங்களை நாசம் செய்யறதை, பிரமாதமான சீர்திருத்தம்னு பேசிண்டிருக்கு, ஒரு ராட்சசக் கூட்டம், அப்படிப்பட்டவாளெல்லாம், நம்ம செட்டியாரின் சர்வபரித் தியாகத்தைக் கேட்டாளானா, நடுநடுங்கிப் போவாள். லோகத்திலே, எல்லாவிதமான பாசத்தையும் ஒருவர் அடக்கலாம். ஆனா, இந்தப் புத்ர பாசம் இருக்கே அதனைச் சாமான்யமா அடக்க முடியாது. சக்ரவர்த்தி தசரதனாலேகூடப் புத்ரசோகத்தைத் தாங்க முடியவில்லை என்பது லோகப் பிரசித்தமான விஷயம். நம்ம செட்டியார், தமது குமாரன், ஒரே மகன், ஆச்சார அனுஷ்டானாதிகளுக்கு விரோதமான காரியம் செய்யத் துணிந்தபோது எவ்வளவோ கீதோபதேசம் செய்து பார்த்தும், அவன் பிடிவாதமாக இருக்கக் கண்டு, என்ன செய்தார்? மகன் என்ற பாசத்தைக் கூட உதறித் தள்ளிவிட்டார். அவ்விதமான தவச்சிரேஷ்டராக்கும், நமது செட்டியார்வாள். தமது ஒரே புத்திரன் ஏதோ கால வித்தியாசத்தாலும், கெட்டவா சகவாசத்தினாலும், பொதுவாகவே லோகத்தில் இப்போது தலைவிரித்து ஆடுகிற அதர்மக் கோட்பாடுகளை நம்பியதால், உத்தமமான வைசிய பரம்பரையிலே உதித்ததையும் மறந்து, கேவலமான காமாதி பாசத்திற்குப் பலியாகி, குல தர்மத்தைக் கைவிட்டு, வேறு குல ஸ்திரியை மணம் செய்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் செய்தது கண்டு, சோகம் கொண்டு, தன் மகனுக்குச் சாஸ்திராதிகளைச் சாங்கோ பாங்கமாக எடுத்துக் கூறித் தடுத்துப் பார்த்தும் முடியாததால், பெரியவா காலந்தொட்டு இருந்துவரும் புராதன ஏற்பாட்டுக்கு விரோதமாக நடந்து கொள்வதைக் கைவிட்டு விடாத பட்சத்தில், இனித் தன் கிருஹத்தில் காலடி எடுத்து வைக்கவே கூடாது என்று கூறிவிட்டார். உன் முகாலோபனமும் செய்யப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். அவனும் வீட்டைவிட்டுப் போய்விட்டான். புத்திரசோகம் மகா கொடுமை. அதனை நமது செட்டியார் தாங்கிக் கொண்டது, நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கு. ஆனா, ராஜரிஷிகளின் மனம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். அவருடைய தர்ம மார்க்கத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். அவருடைய புகழ் பாரத வர்ஷத்துக்கே ஒரு புகழ் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட தன்யரை, வரவேற்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்ததுபற்றி நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். பகவான், கீதையில் சுதர்மத்தைப், பற்றி அழகாகச் சொல்லியிருந்தார். அந்தச் சுதர்மத்தை, நிலைநாட்டத் தமது சொந்த மகனையும் விட்டுப் பிரியத் துணிந்த, மகானைத் தரிசித்தும், அவருடைய மன உறுதியைப் பாராட்டியும், மகாஜனங்கள் சீரும் சிறப்பும் பெறுவார்கள். இவருடைய புத்ரனும், கெட்ட கிரஹம் மாறி நல்ல கிரஹம் உதித்ததும், குலத்தைக் கெடுத்து, உத்தமமான தகப்பனாரின் மனத்தைப் புண்படுத்திய பாபத்தை எண்ணி வருத்தமடைந்து, பிறகு, தானாக வீடு வந்து சேர்ந்து, தகப்பனார் காலில் விழுந்து சேவிக்கத்தான் போகிறான். சத்தியம் ஜெயிக்கும் என்பது சாமான்யாளுடைய வாசகமோ! ஆகவே உத்தமோத்த மரான சீமான் செட்டியாரை, நான் ஆசீர்வதித்து, இந்த ஊர் சத்சங்கத்தார் சார்பில் அவருக்கு இந்த மாலையைச் சூட்டுகிறேன். ஜே, சீத்தாராம்! ஜே, ஜே!!”

ரோஜா மாலை, சாதாரணமாகக் கோவில்களில் மூலவருக்குப் போடுவதுபோல, மிகப் பெரியதாகத்தான் இருந்தது. நெற்றியிலே விபூதி தரித்துக் கொண்டு, மார்பிலே நூலுடன் விலையுயர்ந்த பட்டுக்கரை வேட்டி, உத்தரியம் அணிந்து கொண்டு, அந்த ரோஜா மாலையுடன் நின்று சபையோரை நோக்கிக் குழந்தைவேலச் செட்டியார் கும்பிட்டுக் கொண்டு நின்றபோது, நாயன்மார் போலவே இருந்தது. தாழையூர் சத்சங்கம், சனாதன மார்க்கத்தைப் பாதுகாக்க ஏற்பட்டது. அந்தச் சங்கத்தார், வெளியூரிலிருந்து வரவழைத்திருந்த வக்கீல் வாசு தேவசர்மா, உருக்கமான அந்தப் பிரசங்கத்தைச் செய்துவிட்டு, ரோஜா மாலையைச் செட்டியாருக்குப் போட்டதும், அவர் அடைந்த ஆனந்தம், இவ்வளவு என்று அளவிட முடியாது. வார்த்தைகள் சந்தோஷத்தால், சரியாக வெளிவரவில்லை.

“பிராமணோத்தமர்களே! பிரம்ம, க்ஷத்திரிய, வைஸ்ய, சூத்ர என்று பெரியவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஜாதி ஆச்சார முறைப்படி அடியேன் வைஜ்ய குலம். இந்தப் பாபியின் மகனாகப் பிறந்தவன், அந்த ஆச்சாரத்தைக் கெடுக்கத் துணிந்தான். பிரபஞ்சத்துக்கே நாசம் சம்பவிக்கக் கூடியது அதர்மம். அந்த அதர்மத்தைச் செய்ய ஒரு மகன் எனக்குப் பிறந்தான். நான் என்ன பாபம் செய்தேனோ பூர்வத்தில்? அவள் என்ன ஜாதியோ என்ன குலமோ, ஒரு பெண், அவளைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்றான், தடுத்தேன். எவ்வளவோ புத்தி சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. கடைசியில், இந்தப் பாபக்கிருத்யத்துக்கு உடந்தையாக இருக்கும் மகாபாபம் நமக்குச் சம்பவிக்கக் கூடாது என்று தோன்றிற்று. நமது சர்மா அவர்கள் சொன்னது சத்தியவாக்கு. எனக்குப் புத்ரசோகம் தாங்க முடியவில்லை. ஆனால், மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, அவனை வீட்டை விட்டுப் போய்விடச் சொல்லி விட்டேன். இனி அவன் எக்கேடு கெட்டாலும், உலகம் என்னைத் தூற்றாது. அவனுடைய முகாலோபனம் செய்யப் போவதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டது மட்டுமல்ல, என் சொத்திலே ஒரு பைசாகூட அந்த நீசன் அடையப் போவதில்லை. ஏதோ பகவத் சங்கற்பத்தால், நான் கொஞ்சம் சம்பத்து அடைந்திருக்கிறேன். அதை இனி சத்காரியங்களுக்கு உபயோகித்து, போகிற கதிக்கு நல்லது தேடிக் கொள்வது என்று முடிவு செய்துவிட்டேன். என் சொத்து, சுயார்ஜிதம். ஆகவே, அந்தத் துஷ்டன் என்னிடம் வரமுடியாது. என்னைப் பிரமாதமாகப் புகழ்ந்த சத்சங்கத்தாருக்கு, நமஸ்காரத்தைக் கூறிக் கொண்டு, இனி உங்களுடைய ஆசீர்வாத பலத்தால் அடியேன், தன்யனாவேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன். சிலாக்கியமான சேவை செய்து வரும் சத்சங்கத்தாருக்கு, என் சக்தியானுசாரம் ஏதாகிலும் தரவேண்டும் என்று ஆசை. ஆகவே, ஆயிரம் ரூபாய் கொண்ட இந்தப் பணமுடிப்பை, சத்சங்கத்தாருக்குத் தருகிறேன்” என்று கூறி பணமுடிப்பையும் தந்தார். அந்தப் பரம பாகவதரை, மறுபடி ஒருமுறை ஆசிர்வதித்தார் வாசுதேவ சர்மா. அன்று தாழையூர் மகாஜனங்கள், செட்டியாரைப் புகழ்ந்தனர். சத்சங்கத்திலிருந்து அவர் மேளதாளத்துடன் ஊர்வலமாக வீடுவரை அழைத்துச் செல்லப்பட்டார்.

தாழையூர் சத்சங்கத்தின் விசேஷக் கூட்டம், அன்று விமரிசையாக நடைபெற்றது. உள்ளூர், வெளியூர் பிராமணத் தலைவர்களும், சனாதனிகளான மற்ற வகுப்புப் பெரியவர்களும், இலட்சாதிகாரியும், வைதிகப் பிரியருமான ஸ்ரீமான் குழந்தைவேல் செட்டியாரைப் பாராட்டக் கூடினர். செட்டியார் மீது சத்சங்கத்தின் ஆசீர்வாதம் விழுந்ததற்குக் காரணம், அவர் சனாதனக் கோட்பாட்டைச் செயல்முறையிலேயே நிலைநாட்ட தம் ஒரே மகனையே, வீட்டை விட்டு வெளியேற்றியதுதான். மகன் பரம சாது. ஆனால் சீர்திருத்தவாதி. வேறோர் குலப் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்றான்; செட்டியார் தடுத்தார். மகன் கேட்கவில்லை. ஜாதி ஆசாரத்தைக் கெடுக்கும் பிள்ளை என் வீட்டுக்குத் தேவையில்லை என்று துரத்திவிட்டார்.

தாழையூர்
அன்புள்ள அம்சாவுக்கு,
உனக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று பல நாட்களாக யோசித்து யோசித்து, கடைசியில் இன்று எழுத உட்கார்ந்தேன். “உனக்காவது, கலியாணம் நடக்கப் போவதாவது. உன்னுடைய கொள்கைகளைக் கட்டிக் கொண்டு நீ அழவேண்டியவளே தவிர, ஊரிலே நாலு பேரைப்போல, காலா காலத்தில் கலியாணம் செய்து, கொண்டு சந்தோஷமாக இருக்கப் போவதில்லை. நீதான் எந்த ஜாதியானாக இருந்தாலும் சரி, காதலித்தவனைத்தான் கலியாணம் செய்து கொள்வது; அதிலேயும், ஐயர் இல்லாமல் செய்து கொள்வது என்று கூட்டங்களிலே பேசுகிறாயே! அது எப்படியடி நடக்கும்” என்று என்னைக் கேலி செய்தபடி இருப்பாயல்லவா. அடி முட்டாளே, கேள்! உனக்குக் காதலைப் பற்றிக் கடுகுப் பிரமாணமும் தெரியாது. இப்போதாவது தெரிந்து கொள்; என் சபதம் நிறை வேறிவிட்டது. அடுத்த வெள்ளிக்கிழமை, எனக்குக் கலியாணம்! ஐயர், நுழையவே முடியாத இடத்தில், சிங்காரபுரிச் சேரியிலே உள்ள சீர்திருத்தச் சங்கத்திலே கலியாணம்! யார் தெரியுமா? என் மாமனாரைப் பார்த்தால், பக்தையான நீ கீழே விழுந்து விழுந்து கும்பிடுவாய் - அவ்வளவு சிவப்பழமாக இருப்பார். தாழையூர் தனவணிகர் குழந்தைவேல் செட்டியார் என்றால் எந்தக் கோவில் அர்ச்சகரும், “மஹா பக்திமானல்லவா” என்று ஸ்தோத்தரிப்பார்கள். அப்படிப்பட்டவர் தவம் செய்து பெற்ற பிள்ளைதாண்டி, என் கணவர், பெயர் பழனி!

அவர் என்னை வெற்றி கொள்ள அதிகக் கஷ்டப்படவில்லை. எப்போதாவது ஒரு தடவை சீர்திருத்தச் சங்கத்துக்கு வருவார். அதிகம் பேசமாட்டார். மற்றவர்கள் பேசும்போது, மிகக் கவனமாகக் கேட்பார். அதிலும் நான் பேசும்போது, ஆனந்தம் அவருக்கு. மெல்ல மெல்ல நான் அவரைச் சீர்திருத்தக்காரராக்கினேன். ஆரம்பத்தில் அவர் ஜாதிச் சண்டை, குலச்சண்டை கூடாது; வேறு வேறு ஜாதியாக இருந்தாலும், சண்டை சச்சரவு இல்லாமல் வாழ வேண்டும். என்று மட்டுமே கூறி வந்தார். நாளாக நாளாக, தீவிரவாதியானார். நான் என் பேச்சினால் அவரை வென்றுவிட்டேன். அந்தப் பெருமையும், சந்தோஷமும் எனக்கு! அவரோ தன் பார்வையாலேயே என்னை வென்றுவிட்டார். குழந்தை போன்ற உள்ளம் அவருக்கு. சாதாரணமாகப் பல ஆடவருக்கு உள்ள குறும்புப் பார்வை, குத்தலான பேச்சு இவை கிடையாது. ‘மிஸ்டர் பழனி’ என்று நான் தைரியமாக அவரைக் கூப்பிடுவேன். அவரோ நாகவல்லி என்றுகூடத் தைரியமாக என்னைக் கூப்பிட மாட்டார். புன்சிரிப்புடன் என் அருகே வருவார். அவ்வளவு சங்கோஜம். ஆனால் அவருடைய காதலைக் கண்கள் நன்றாக எடுத்துக் காட்டியபடி இருந்தன. துணிந்து ஒரு தினம் கேட்டார். நான் திடுக்கிட்டேன்! அவர் கேட்டாரே என்பதால் அல்ல, அந்தக் கேள்வி என் மனத்திலே எழுப்பிய களிப்பைக் கண்டு!

‘நான் என்ன ஜாதி? நீங்கள் சைவச் செட்டியார் குலம்!’ என்று நான் கூறினேன். அவர், நான் அடிக்கடி சங்கத்திலே ஜாதியைக் கண்டித்துப் பேசுவேனே, அந்த வாதங்களை எடுத்துக் கூறினார். அன்று மாலை மணி ஆறு இருக்கும். “அம்சா! என்ன இருந்தாலும் இந்த ஆண்களே கொஞ்சம் அவசரக்காரர்கள்தான். பேச்சு நடந்துகொண்டே இருக்கையில் அவர், திடீரென்று என்னை ஆரத் தழுவிக்கொண்டார். எதிர்ப்பவர்களின் வாதங்களைக் கண்டு தவிடு பொடியாக்கும் திறமை கொண்ட நான், பைத்தியம்போல ஐயோ! விடுங்கள்! யாராவது வந்துவிட்டால்!’ என்று குழைந்து கூறினேன். நல்ல வேளை, பழனி, என் பேச்சைக் கேட்கவில்லை! எனது அதரங்கள்... சகஜந்தானேடி! பிறகு அவர் ஒவ்வொரு மாலையும் வர ஆரம்பித்தார். காலையிலே நான் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போதெல்லாம் அன்று மாலை அவர் என்ன பேசுவார். என்னென்ன விதமாக விளையாடுவார் என்று நினைத்தபடியே இருப்பேன். வங்காளத்துக்குத் தலைநகரம் எது என்று கேட்கவேண்டும்; நானோ கல்கத்தாவுக்குத் தலைநகரம் எது என்று கேட்பேன். என் வகுப்பிலேயே புத்திசாலி வனிதா. அவள் எழுந்திருந்து ‘கேள்வியே தவறு’ என்றாள். எனக்குக் கோபம் பிரமாதமாக வந்தது. பிறகு, என் தவறை உணர்ந்து நானே சிரித்துவிட்டேன். சிரித்ததும் எனக்கு அவருடைய கவனம்தான் வந்தது. ஏன் தெரியுமா? நீ குறும்புக்காரி; உன்னிடம் கூற முடியாது!

எங்கள் காதல் வளர வளர, அவர் வீட்டிலே, சச்சரவு வளர்ந்தது. ஜாதி, குல ஆச்சாரத்திலே, ஐயர்மார்கள் தவறி விட்டதாலேயே காலாகாலத்தில் மழை பெய்வதில்லை என்று எண்ணுபவர் என் மாமனார். அதற்குப் பரிகாரமாக மற்ற ஜாதியார் தத்தம் ஜாதியாச்சாரத்தைச் சரியாகக் கவனிக்கவேண்டும் என்று கூறுபவர். அப்படிப்பட்ட கைலாய பரம்பரைக்காரர், சிலுவையின் தயவால் கிருஸ்தவளான சேரிப் பெண்ணைத் தன் மகன் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிப்பாரா? வீட்டிலே புயல் அடித்தது. அவர் என் காதலர்; தகப்பனார் போடும் கோட்டைத் தாண்டுபவரல்ல. ஆனால் காதல் இராஜ்யத்திலே, என் மாமனாருக்குக் கோடு போடும் திகாரம் ஏது? தமக்குச் சம்பந்தமில்லாத இலாக்கா என்பதை அவர் மறந்துவிட்டார். அதன் விளைவு என்னென்ன தெரியுமா? தந்தை – மகன் என்ற சம்பந்தமே அறுபட்டுப் போய்விட்டது. ‘அந்தக் கிருஸ்தவச் சிறுக்கியைக் கல்யாணம் செய்து கொள்வதானால் என் முகாலோபனம் செய்யக் கூடாது. இனி நீ என் மகன் அல்ல. நட, வீட்டை விட்டு,’ என்று கூறிவிட்டாராம். பழனி எங்கள் கிராமத்துக்கே வந்துவிட்டார். இரண்டு மைல்தான் இருக்கும் தாழையூருக்கும் சிங்காரபுரிக்கும். ஆனால் இரண்டு மைலை அவர் தாண்டும்போது, ஓர் உலகத்தை விட்டு மற்றோர் உலகுக்கே வந்து சேர்ந்தார் என்றுதான் அர்த்தம், அடி, அம்சா! அந்த உலகிலே, என் காதலருக்கு மாளிகை இருக்கிறது; வைரக் கடுக்கன் இருக்கிறது; தங்க அரைஞாண் இருக்கிறது; இரும்புப் பெட்டியிலே இலட்சக்கணக்கிலே கொடுக்கல் வாங்கல் பட்டி இருக்கிறது. இரட்டைக் குதிரைச் சாரட்டும், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் ஆட்களும் உள்ளனர். இரண்டே மைல் தாண்டி இங்கே வந்தார்.. என்ன இருக்கிறது? என்னுடைய பழைய வீடு! தோட்டத்திலே பூசனிக்கொடி! தெருக்கோடியில் ஒரு வெறி நாய். இவ்வளவுதான்!

‘கண்ணாளா! என் பொருட்டு ஏனோ இந்தக் கஷ்டம்?” என்று நான் கனிவுடன் கேட்டேன். அவரோ, “ஒருவருடன் வாதாடிப் பாதி உயிர் போயிற்று; இனி உன்னிடமும் வாதாட வேண்டுமா?” என்று கேட்டார். எவ்வளவோ செல்வத்தை என் பொருட்டுத் தியாகம் செய்த அந்தத் தீரரை நான் என்ன போற்றினாலும் தகும். ‘உன் அன்புக்கு ஈடாகாது அந்த ஐஸ்வரியம்’ என்றார். ‘உன் கண்ணொளி முன் வைரம் என்ன செய்யும்’ என்று கேட்டார். ‘உன் ஒரு புன்சிரிப்புக்கு ஈடோ, என் தகப்ப
னாரின் பெட்டியிலே கிடக்கும் பவுன்கள்’ என்றார். ஒவ்வொரு வாசகத்துக்கும் முத்தமே முற்றுப் புள்ளி! காதலர் இலக்கணம் அலாதி அல்லவா! உன்னிடம் சொல்கிறேன் நான். நீயோர் மரக்கட்டை!

கடைசியில், சிங்காரபுரியிலேயே அடுத்த வெள்ளிக் கிழமை கல்யாணம் என்று நிச்சயமாகிவிட்டது. யாராரோ தடுத்துப் பார்த்தார்கள் அவரை; முடியவில்லை. தாழையூர் கொதிக்கிறது. என் மாமனார் தற்கொலை செய்து கொள்ளக் கூட நினைத்தாராம்! ஆனால் ஏதோ ஒரு சிவபுராணத்திலே, ஆண்டவன் கொடுத்த உயிரை அவராகப் பார்த்து அழைக்கும் முன்னம் போக்கிக் கொள்வது மகாபாவம் என்று எழுதியிருக்கிறதாம்! இல்லையானால் இந்நேரம் எனக்கு மாமனாரும் இருந்திருக்க மாட்டார். அவர் காலமாகி ஏறக்குறைய 5 வருஷங்களாகின்றனவாம். பழனிக்கு வயது 22. அதாவது என்னைவிட 3 வயது பெரியவர் (என் வயது 19 என்று அவரிடம் சொல்லி வைத்திருக்கிறேன்!) வெள்ளிக் கிழமை நீ அவசியம் வரவேண்டும் அதற்காகத்தான் இவ்வளவு நீண்ட கடிதம். இன்னும்கூட ஏதாவது எழுதலாமா என்று தோன்றுகிறது. முடியாது; அதோ அவர்....

உன் அன்புள்ள,
நாகவல்லி
“என்னைச் சித்திரவதை செய்வது, அதற்குப் பெயர், காதல் – ஏண்டா தம்பி! காதல்தானே! பெற்றெடுத்த தகப்பனைக்கூட எதிர்க்கச் சொல்கிறதாடா அந்தக் காதல்! ஊரிலே, உலகத்திலே, எவனுக்கும் ஏற்பட்டதில்லை காதல்; உனக்குத்தானே முதலிலே உதித்தது அந்தக் காதல் என் உயிருக்கு உலை வைக்க?

“நான் தங்கள் வார்த்தையை எப்போதாவது மீறி நடந்ததுண்டா?

“மீறி நடப்பவன் மகனாவானா?”

“இது எனக்கு உயிர்ப் பிரச்சனையப்பா?”

“படித்ததை உளறுகிறாய்? இல்லை, அந்தக் கள்ளி கற்றுக் கொடுத்த பாடத்தை ஒப்புவிக்கிறாயா? எனக்குக் கூடத் தெரியுமடா அழுவதற்கு! தலைதலை என்று அடித்துக் கொண்டு, ஒரு திருவோட்டைக் கையிலே எடுத்துக் கொண்டு எங்காவது தேசாந்திரம் போகிறேன். நீ திருப்தியாக வாழ்ந்து கொண்டிரு. அந்தத் திருட்டுச் சிறுக்கியுடன், ஈஸ்வரா! எனக்கு இப்படி ஒரு மகன் பிறக்க வேணுமா? மானம் போகிறதே! தாழையூரிலே தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லையே. அடே! நீ அவளைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா? ஒரே பேச்சு. சொல்லி விடு! என் சொல்லைக் கேட்கப் போகிறாயா, இல்லை, அவளைத்தான் கலியாணம் செய்தாக வேண்டும் என்று கூறுகிறாயா? இரண்டில் ஒன்று சொல்லிவிடு.”

“நான் நாகவல்லியைத் தவிர வேறோர் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள முடியாதப்பா.”

“செய்து கொண்டால் அவளைக் கலியாணம் செய்து கொள்வது. இல்லையானால் பிரம்மச்சாரியாகவே இருந்து விடப் போகிறாயோ? சரி! நீ பிரம்மச்சரியாகவே இருந்து தொலை. உனக்கே எப்போது பித்தம் குறைகிறதோ. அப்போ பார்த்தும் கொள்வோம்...”

“அப்பா! நான் நாகவல்லிக்கு வாக்களித்துவிட்டேன்.”

“தகப்பன் உயிரை வாட்டுகிறேன் என்றா?”

“இன்னும் ஒரு வாரத்தில் அவளைக் கலியாணம் செய்து கொள்வதா?”

“பழனி! நட இந்த வீட்டை விட்டு! என்னை இதுவரை சம்மதம் தரவேண்டும் என்று ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறாய்; அவளுக்கு வாக்குக் கொடுத்தபோது, உன் புத்தி எங்கே போயிற்று? நான் ஒருவன் இருக்கிறேன் என்ற நினைப்புக்கூட இல்லை உனக்கு. இனி நீ என் மகன் அல்ல; நான் உனக்குத் தகப்பனல்ல! அடே பாவி! துரோகி! குலத்தைக் கெடுக்கப் பிறந்த கோடாரிக் காம்பே! என்னை ஏன் உயிருடன் வதைக்கிறாய்? நான் தூங்கும்போது பெரிய பாறாங்கல்லை என் தலைமீது போட்டு சாகடித்துவிடக் கூடாதா? என் சாப்பாட்டிலே விஷத்தைக் கலந்துவிடக் கூடாதா? என் பிணம் வெந்த பிறகு நீ அந்தக் கிருஸ்தவப் பெண்ணை மணம் செய்து கொள்ளடா, மகாராஜனாக!”

“அப்பா! நான் இதுவரை தங்களிடம் இப்படிப்பட்ட கடுமையான பேச்சைக் கேட்டதில்லையே!”

“அடே! பேசுவது நீ அல்ல! போதையிலே பேசுகிறாய். நாகத்தைத் தீண்டியதால் மோகம் என்ற போதை உன் தலைக்கு ஏறிவிட்டது.”

“மோகமல்ல அப்பா! காதல்! உண்மைக் காதல்!”

“நாடகமா ஆடுகிறாய்?”

“என் உயிர் ஊசலாடுகிறதப்பா!”

இப்படிப்பட்ட கடுமையான உரையாடலுக்குப் பிறகுதான், பழனி, வீட்டை விட்டு வெளிக்கிளம்பினான். தகப்பனாரையும் அவருடைய தனத்தையும் துறந்து, நாகவல்லி தன் சினேகிதை அம்சாவுக்கு, தனக்கு ஏற்பட்ட காதல் வெற்றியைப் பற்றிக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது பழனி நைடதம் படித்துக் கொண்டிருந்தான். நளனும் தமயந்தியும் காதல் விளையாட்டிலே ஈடுபட்ட கட்டத்தைப் படித்தபோது அவனுக்கு, செய்யுளின் சுவையை நாகவல்லிக்குக் கூற வேண்டுமென்று எண்ணம் பிறந்தது. உள்ளே நுழைந்தான். கடிதத்தை எடுத்தான். படித்தான், களித்தான், பரிசும் தந்தான். வழக்கமான பரிசுதான்! அவனிடம் வேறு என்ன உண்டு தர? குழந்தைவேல் செட்டியார் கலியாணத்துக்குச் சம்மதித்திருந்தால், வைரமாலை என்ன, விதவிதமான கைவளைகள் என்ன, என்னென்னவோ தந்திருப்பான். இப்போது தரக் கூடியதெல்லாம் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை முத்தாரமன்றி வேறோர் ஆபரணம் தரவில்லை. அதுபோதும் என்றாள் அந்தச் சரசி! வயோதிகக் கணவன் தரும் வைரமாலை, இதற்கு எந்த விதத்திலே ஈடு?

நாகவல்லியின் கடிதம் முடிகிற நேரத்தில்தான், ஒரே மகனைக்கூட வீட்டைவிட்டு வெளியேற்றிவிடும் அளவுக்கு வைராக்கியம் கொண்ட சனாதனச் சீலர் குழந்தைவேல் செட்டியாரைத் தாழையூர் சத்சங்கம் பாராட்டிக் கொண்டிருந்தது. ஊர்வலமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருடைய எதிரிலே, நாகவல்லியும், பழனியும் கைகோர்த்துக் கொண்டு நின்று கேலியாகச் சிரிப்பதுபோலத் தோன்றிற்று. திடசித்தத்துடன், மகனை வீட்டை விட்டுத் துரத்திவிட்டாரே, தவிர, மனது கொந்தளித்தபடி இருந்தது. அவரையும் அறியாது அழுதார். ஆனந்தபாஷ்யம் என்றனர் அன்பர்கள்!

வெள்ளிக்கிழமை, பழனி – நாகவல்லி வாழ்க்கை ஒப்பந்தம் பத்தே ரூபாய் செலவிலே விமரிசையாக நடைபெற்றது. ஜில்லா ஜட்ஜு ஜமதக்னி தலைமை வகித்தார்.

பச்சை, சிவப்பு, ஊதா, நீலம் முதலிய பல வர்ணங்களிலே பூ உதிர்வது போன்ற வாணவேடிக்கை! அதிர்வேட்டு தாழையூரையே ஆட்டிவிடும் அளவுக்கு. அழகான தங்க நாயனத்தை அம்மையப்பனூர் ஆறுமுகப்பிள்ளை, வைர மோதிரங்கள் பூண்ட கரத்திலே ஏந்திக் கொண்டு, தம்பிரான் கொடுத்த தகட்டியை ஜெமீன்தார் ஜகவீரர் பரிசாகத் தந்த வெண்பட்டின் மீது அழகாகக் கட்டிவிட்டு, ரசிகர்களைக் கண்டு ரசித்து நிற்க, துந்தபிகான துரைசாமிப் பிள்ளை, விட்டேனா பார் என்ற வீரக்கோலத்துடன் தவுலை வெளுத்துக் கொண்டிருந்தார். பவமறுந்தீஸ்வரர் பிரம்மோத்சவத்தின் ஆறாம் திருவிழாவன்று. அன்று உபயம் ஒரே மகனையும் துறந்துவிடத் துணிந்த உத்தமர் குழந்தைவேல் செட்டியாருடையது. அன்று மட்டுமல்ல. செட்டியார் ஒவ்வொரு நாளும் அதுபோன்ற ஏதாவதோர் ‘பகவத் சேவா’ காரியத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணமும், பகவானுடைய சேவையினால் மளமளவென்று பெட்டியை விட்டுக் கிளம்பியபடி இருந்தது ஊரெங்கும் செட்டியாரின் தர்ம குணம் பகவத் சேவை இவை பற்றிய பேச்சு. “இருந்தால் அப்படி இருக்கவேண்டும். மகனென்றுகூடக் கவனிக்கவில்லை; ஜாதியைக் கெடுக்கத் துணிந்தான் பழனி! போ வெளியே என்று கூறிவிட்டார். இருக்கிற சொத்து அவ்வளவும் இனி பகவானுக்குத்தான் என்று சங்கல்பம் செய்து கொண்டார்” என ஊர் புகழ்ந்தது. பழனியின் நிலைமையோ?