அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

மக்கள் கரமும், மன்னர் சிரமும்
1

மார்க்கத் துறையிலே, மன்னன் வற்புறுத்திய முறைகளை ஏற்க, ஸ்காட்லாந்து மக்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். ‘என் ஆணைக்கா எதிர்ப்பு’ என்று மன்னன் ஆர்ப்பரித்தான். ‘எமது கொள்கையை இழக்க மாட்டோம்’ என்று மக்கள் முழக்கமிட்டனர். மன்னன், ‘போர்’ என்றான். மக்கள், ‘தயார்’ என்றனர்! மன்னன்தான் தயாராக முடியவில்லை; பணமில்லை!!

ஆண்டொன்றுக்கு 9,35,000 பவுன் தேவை என்றனர் படைத்தலைவர்கள். 30,000 வீரர்களாவது தேவை, மலைவாசிகளான ஸ்காட்லாந்துக்காரரை முறியடிக்க! இந்தப் பெருந்தொகையைப் பெறுவது எங்ஙனம்? பழைய சங்கடம் மீண்டும் தலைதூக்கிற்று. சூள் உரைத்துவிட்டான் மன்னன், ஸ்காட்லாந்துக்காரரை அடித்து நொறுக்கி அறிவு புகட்டுவதாக; பணம்? மன்னன், திண்டாடினான்.

அங்கே, ஸ்காட்லாந்தில், தாயகத்தைக் காக்க வீரப்படை திரண்டுவிட்டது. பல ஆண்டுகள், ஸ்வீடன் நாட்டிலே போர்ப் பயிற்சி பெற்றுச் சிறந்து விளங்கிய லெஸ்லீ என்பான், தாயகத்துக்கு ஆபத்து என்பதறிந்து வெளி நாட்டிலிருந்து, தாயகம் வந்து சேர்ந்தான். தணலென்று ஆகிவிட்டது, வீரம்; எண்ணற்ற வீரர்கள்! எதற்கும் அஞ்சாத துணிவு! மக்கள், பெண்டிர் உட்பட, படை எடுப்பை முறியடிக்கக்கூடிப் பணியாற்றினர்.

ஸ்காட்லாந்து நாட்டுப் பிரபுக்களில் ஒருவர், ஹாமில்டன் இவர் சார்லஸ் சார்பில்.

இவர் ஒரு பிரிவுப்படையுடன் ஸ்காட்லாந்து செல்வது என்றால், வேறோர் பிரிவு வேறு பக்கமிருந்து செல்வது என்றும் ஏற்படலாயிற்று. ஹாமில்டன் சென்றார்; தாயகத்தின் போர்க் கோலத்தையே கண்டார்! காலடி எடுத்து வைத்தால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று வீரமும் நாட்டுப் பற்றும் வீறிட்டெழும் உள்ளத்துடன் கூறிக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் காட்சி தந்தார், ஹாமில்டனின் அன்னை.

ஓடினான் மன்னனிடம். ‘விபரீதமாகிவிடும்! வேண்டாம் இச்சமர்! பகையை விடுக’ என்று மன்றாடினான்; மன்னன் மயங்கினான் - சமரசப் பேச்சுக்கு இடமளித்தான். ஆனால், வென்ட்ஒர்த் விடவில்லை தூண்டினான்; ஒரு கை பார்த்தே ஆகவேண்டும்; ஸ்காட்லாந்து மக்களுக்கு இப்போது பணிந்து விட்டால், நாளை பிரிட்டிஷ் மக்களும் கிளம்பிவிடுவர். எனவே சமரிட்டே ஆகவேண்டும் என்று வலியுறுத்தியதுடன், மாமன்றத்தைக் கூட்டி, போர் இருக்கும் காரணத்தைக் காட்டி, பணம் பெறலாம் என்று யோசனை கூறினான். பேழையைத் திறந்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று மன்னனிடம், வென்ட்ஒர்த் கூறினான். ஆனால் அந்தப் பேழையில் இருந்தது என்ன? வஞ்சம் தீர்த்தாக வேண்டும் என்ற உறுதி காட்சி அளித்தது.

மக்கள் சார்பாகப் பேசி, வீடெல்லாம், நல்லோர் நெஞ்சகமெல்லாம் நிரம்பியிருந்த பிம் ஆளும் முறையாக அமர்ந்தான் மாமன்றத்தில்; நாட்டைக் கலக்கிய வழக்குகளை நடத்திய ஹாம்டன் அரச வழக்கறிஞர்களைத் திணறடித்த அறிவாற்றல் மிக்க செயிண்ட்ஜான், அனைவரும் மாமன்றத்தில், தேர்தல் மூலம் உறுப்பினராயினர்! மன்னனுடைய கோபத்துக்கு ஆளானவர்களை மக்கள் மலர் மாரி பொழிந்து வரவேற்கிறார்கள். மாமன்றம் கூடிற்று, மன்னனுக்கு முடிவுகட்ட! பதினோராண்டுகள் மாமன்றம் கூட்டாமலேயே ஆளமுடியும் என்று எண்ணியிருந்த சார்லஸ், நெருக்கடி நேர்ந்ததும், மாமன்றத்தைக் கூட்டித்தான் கரை சேர வேண்டும் என்று எண்ணினான் - இஃதொன்றே போதாதா மாமன்றத்தின் வலுவை விளக்கிட என்று மக்கள் கூறிக் கொண்டனர். பதினோராண்டுகளாக நடைபெற்ற எதேச்சாதிகார அடக்கு முறை ஆட்சி, மாமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்து நிற்கும்! மக்களைக் கசக்கிப் பிழிந்து, சிறையில் தள்ளி, வெளிநாடுகளுக்குத் துரத்திச் சித்திரவதை செய்து. ஆட்சி தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தது. மக்கள் பயந்தனர். பணியவில்லை.

அடக்குமுறை தலைவிரித்தாடிற்று! எனினும் அடிமை மனப்பான்மை ஏற்பட்டுவிடவில்லை. அஞ்சாநெஞ்சினர் சரண் புகுந்து வாழ்வதை, சாவைவிடக் கொடியது என்று கருதினர் - எலியட்டுகள் எத்துணை! லில்பர்ன்கள் பலப்பலர் இவர்களுக்கு ஆட்சியாளர் இழைத்த கொடுமைகளுக்கெல்லாம் பதில் கூறித் தீரவேண்டும். மாமன்றம் நோக்கி வருகிறான் மன்னன், திரு ஓடு ஏந்தியபடி! அவன் சிரத்தில் முடி இருக்கிறது. கரத்தில் சிறைக்கதவின் திறவுகோல் இருக்கிறது. அவரைச் சூழ இருக்கின்றன, மக்களைக் கடித்துக் கொடுமை செய்யும் வேட்டை நாய்கள்! மன்னன், மாமன்றத்தை நாடுகிறான்! ‘இந்த மன்றமன்றி ஆட்சி நடவாதோ!’ என்று ஏளனப் புன்னகையுடன் கேட்ட மன்னன் வருகிறான். ஸ்காட்லாந்து மக்களால் கிளம்பியுள்ள கடும்போரை, லாட் அறிந்துள்ள வெறிச்செயலும், வெண்ட் ஓர்த்துக்குப் பழக்கமான அடக்குமுறையும் ஒழித்து விடாது - மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். அதனைப் பெற்றுத்தர மாமன்றத்தால் மட்டுமே முடியும்! மன்னன் மாமன்றத்தை நாடுகிறான்; மாமன்றம் மன்னராட்சி முறைபற்றி மக்கள் கொண்டுள்ள கருத்தை எடுத்துரைக்கும். மன்னன் தோல்விப் பாதையிலே காலடி எடுத்துவைக்கிறான், மக்களின் துணையின்றிப் பகை முடிப்பது முடியாது என்பதை உணருகிறான். கிள்ளுக்கீரையல்ல மக்கள்! அரசுக்குப் பேராபத்து ஏற்படும்போது, அதைத் தடுக்கும் ஆற்றலைத்தர வல்லவர்கள்! அரசன் இதைச் சாதாரண நாட்களிலே ஏற்க மறுத்தான். ஸ்காட்லாந்து மக்கள் போரிடத் துணிந்தனர்; உண்மையை உணர வேண்டிய கட்டத்துக்கு மன்னன் வந்திருக்கிறான். வாழ்க ஸ்காட்லாந்து மக்கள் என்று கூறிப் பூரித்தனர். மக்கள் மாமன்றம் கூடுவதை, நாடு பெரியதோர் வாய்ப்பு என்று எண்ணியதில் தவறென்ன!

அடக்கு முறையினால் உள்ளம் நொறுங்கிப் போயிருக்கும், பதினோராண்டுக் காலம் சட்டை செய்யாதிருந்ததால், மாமன்றத் தார் மனம் உடைந்து போயிருப்பர், கேட்ட தொகை தரச் சம்மதிப்பார், போடும் வரியைக் கட்டும்படி மக்களுக்குக் கூறுவர், மேலும் நாடு போரில் ஈடுபட்டிருக்கிறது, ஸ்காட்லாந்துக்காரர் படை கொண்டு வருகின்றனர், பிரிட்டன் மீது பாய்கின்றனர். எனவே நாட்டைக் காக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, எவ்வளவு கஷ்டநஷ்டமும் ஏற்க மாமன்றம் இசையும். இந்த நேரத்தில், மன்னனுக்கும் மாமன்றத்துக்கும் முன்னம் மூண்டு கிடந்த பகையை மறந்து விடுவர்; நாட்டுப்பற்று வீறிட்டெழும் என்ற எண்ணம் கொண்டான் மன்னன் - அவன் உடனிருந்து, ஊறுதேடிய உலுத்தர்கள், இக்கருத்தினையே அவனுக்கு ஊட்டினர். மாமன்றம் கூடுவது, காட்டிய இடத்தில் கையொப்பமிட அல்ல. பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்ததும் வெளிவரும் சிறுத்தை அது! வளைந்தும், சிறிது ஒடிந்தும், பிடிகழன்றும், முடி அற்றும் உள்ள போர்க் கருவிகள் கொண்ட படையைக் காணும் ஏமாளி, “கருவிகளின் அழகு காணீர்! ஓட்டை ஒடிசல்கள்! இப்படை என்ன செய்யும்” என்று எண்ணுவான். ஆனால் கூர்த்த மதிபடைத்தோனோ “இவர்கள் கொண்டு வரும் படைக் கருவிகளே இதற்குச் சான்று” என்று கண்டறிவான். அதுபோன்றே, சவுக்கடிபட்டவனும், சொத்து பறிகொடுத்தவனும், தொழுவத்தில் மாட்டப்பட்டவனும், துரத்தியடிக்கப் பட்டவனும் பெரும்பொருள் அபராதம் கொடுத்தவனும், சிறையில் உழன்றவனும், மாமன்றம் உறுப்பினரானது கண்டு, ஆட்சியாளர் என்னென்ன செய்ய முடியும் என்று தெரிந்தவர்கள் இவர்கள், அல்லலை அனுபவித்தவர்கள், நெருப்புச் சுடும் என்பதைத் தெரிந்து கொண்டவர்கள். எனவே இவர்கள் மீண்டும் வாதிட்டுப் போரிட்டு அவதியை வரவழைத்துக் கொள்ள மாட்டார்கள், நல்லவர்களாகிவிட்டவர்கள் என்று மன்னன் எண்ணியிருப்பான், உண்மையோ அது அல்ல, கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளும் உள்ளம் படைத்தவர்கள்! எனவே எதற்கும் இனி இவர்கள் அஞ்சப்போவதில்லை என்பது தான் உண்மை, இதை மன்னன் உணர முடியவில்லை துவக்கத்தில்.

மாமன்றம் கூடிற்று மன்னன் சார்பில், போர்ச்செலவுக்காகப் பெருந்தொகை தேவை என்று எடுத்துக் கூறப்பட்டது. இதைக் கேட்டுக் கொள்ளவா, மாமன்றம் கூடிற்று? பதினோராண்டு
களாகச் சேர்ந்துள்ள பழங்கணக்கைக் கொண்டு வந்து, மாமன்றம், ஏடேடாகப் புரட்டி விவாதிக்கலாயிற்று. பிம், மாமன்றத்திலே, உரிமை பற்றி அரியதோர் சொற்பெருக்காற்றி, உணர்ச்சி வயத்தவராக்கினார். மாமன்றத்தை மட்டுமல்ல, மக்களையே! மக்கள் பணியிலேயே காலமெல்லாம் செலவிட்டு, சொந்த வாழ்க்கை நொடித்துப் போயிருப்பவர் பிம். அவருடைய வீர உரை. மாமன்றத்துக்குப் புது உறுதி தந்தது.

எலியட் சிறையில் மாண்டார்! மக்களுக்காக உழைத்த மாவீரனைச் சிறையில் - தள்ளிச் சாகடித்தனர். இந்தப் பாதகப் படுகொகைக்கு என்ன சமாதானம் கூறமுன்வருகிறார்கள், ஆட்சியாளர்கள்.

கப்பல்வரி என்ற பெயரால் பெரும் பொருளை மக்களிட மிருந்து அடித்துப் பிடுங்கினார்கள் ஆட்சியாளர்கள் - இந்த அக்கிரமத்துக்கு என்ன சமாதானம்?
கப்பல் வரிகட்ட மறுத்த ஹாம்டன் மீது வழக்கு. வழக்கிலே, மக்கள் உரிமைக்கு நீதிக்கும் விரோதமாகத் தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்! நீதி இங்ஙனம் நெறி தவறுகிறது. இதற்கு என்ன சமாதானம்?
படை வீரரை, வீடுகளிலே கட்டாய விருந்தினராக்கும் முறையால் நேரிட்ட கொடுமைகளுக்கு என்ன பரிகாரம்? கண்ணீர் துடைக்கக் காவலன் முன்வருவானா?

வெளிநாடுகளுக்குத் துரத்தப்பட்டவர்கள் சார்பிலே, வெஞ்சிறையில் செத்தவர் சார்பிலே, அழுத கண்ணீருடன் நிற்கும் மக்கள் சார்பிலே, வீர மரணமடைந்த எலியட்டின் சார்பிலே, பிம் பேசினார் - அல்ல; அல்ல, எழுச்சி பெற்ற மக்கள் முழக்கமிட்டனர்.

கூட்டியது பணம் கேட்க! இவர்கள் குற்றப் பட்டியல் அல்லவா தயாரிக்கிறார்கள். இவ்வளவு அல்லல் பட்டும் இவர் களுடைய துடுக்குத்தனம் பட்டுப் போகவில்லையே என்று மன்னன் எண்ணினான். கூடினோம், கணக்குக் கேட்க! பரிகாரம் தேவை! கப்பம் கட்டக் கூடவில்லை, கழுவாய்த் தேடும்படி கட்டளையிடக் கூடியுள்ளோம் என்று மாமன்றம் எண்ணிற்று.

பிரபுக்கள் சபைக்கும், பிம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

‘மக்களின் உரிமைகளை நசுக்கும் ஆட்சிமுறையைக் கண்டிக்க முன்வருக! மன்னனிடம் உள்ள கொடியவர்களை அகற்றிவிடும்படி அறிவுரை தருக!’ என்று பிம் கூறினார்.

மன்னனோ, “பணம்! பணம்!” என்று கேட்ட வண்ணம் இருக்கிறார் - ஆட்கள் அவசர அவசரமாக வருகிறார்கள். “உரிமை பற்றிப் பிறகு பேசுங்கள்; இப்போது பணம் தேவை” என்கிறார்கள். “முதலில் உரிமைப் பிரச்னை”. என்று உறுதியாக மாமன்றம் கூறிவிட்டது.

மன்னன் பிரபுக்கள் சபைக்குச் சென்றான்; மாமன்றத்தின் போக்கைக் கண்டித்தான். “அந்த மதியிலிகளுடன் கூடிப் பழகாதீர். பெரும் போருக்குத் தேவையான பணம் கிடைக்க வழி செய்யுங்கள்” என்றான். பிரபுக்கள் மன்னனே நேரில் ‘பிரசன்னமாகி’க் கேட்கும்போது, மறுப்பது கண்ணியமாகாதே என்று மழுப்பினர். மாமன்றம், “இனம் இனத்தோடு சேரும், வேறென்ன!” என்றனர். நெருக்கடி முற்றும்போது, பிரபுக்கள் அரசன் பக்கம்தான் நிற்பர் என்று மக்கள் முடிவு செய்தனர்.

கப்பல் வரி செல்லுபடியாகக் கூடியதுதான் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யவேண்டும். என்று மாமன்றம் கூறிற்று. மன்னன், ‘அதை வேண்டுமானால் செய்கிறேன். பணம் எவ்வளவு தருகிறீர்கள்?’ என்று கேட்டான். “பணம் தருவதற்கும் அநீதியைத் துடைப்பதற்கும் முடிபோட்டுப் பேசலாகாது” என்று மாமன்றம் கூறிற்று. கப்பல் வரி கட்ட முடியாது என்று வழக்காடிய ஹாம்டன் இருக்கும் மாமன்றம், மன்னனுடைய மிரட்டும் மொழிக்கோ, மயக்கு மொழிக்கோ இடம் அளிக்குமா! மன்னன், மாமன்றத்தை ஏன் கூட்டினோம் என்று ஆயாசப்பட்டான். முறிந்துபோகும் நிலை நன்றாகத் தெரியலாயிற்று. மன்னனுடைய கோபம் மேலும் வெடிக்கும்படி, மாமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றிற்று.

மாமன்றத்தை மன்னன் கூட்டியது, ஸ்காட்லாந்துப் போர் நடத்தப் பணம் தேவை என்பதற்காக; மாமன்றம் உடனடியாக ஸ்காட்லாந்துக்காரருடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. மன்னனால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எவ்வளவு ஆணவம் இந்த மாமன்றத்தாருக்கு! என் ஆணையை மீறும் ஸ்காட் மக்களைத் தண்டிக்கப் போர் தொடுக்கிறேன். மன்னனுடைய கீர்த்தியைக் காப்பாற்றப் பொன், பொருள் தந்து, படையில் குதித்து இரத்தம் கொட்டி வெற்றி தேடித்தர முன்வர வேண்டிய மக்கள், சமர் கூடாது என்று எனக்கா புத்தி கூறுவது? எவ்வளவு மண்டைக் கர்வம்! மன்னனின் மகிமை அறியாத மண்டுகங்கள்! என்றெல்லாம் எண்ணியிருப்பான் மன்னன். அவன்தான், பாவம், ஓர் அர்த்தமற்ற, ஆனால், ஆபத்தான தத்துவத்தால் ஆட்டிப் படைக்கப்பட்டவனாயிற்றே! மாமன்றத்தைக் கலைத்துவிட்டான்! மூன்று கிழமைகளே மாமன்றம் நடைபெற்றது! கலைத்துவிட்டான், காவலன்! இந்தக் குறுந்தொகை பிறகு நெடுநல்வாடையாகப் போவதை மன்னன் கண்டானா!!

“கூடினோம் - கலைந்து செல்கிறோம்; மீண்டும் கூடுவோம்; அப்போது, இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குச் சமாதானம் கேட்க அல்ல, பழிதீர்த்துக் கொள்ளக் கூடுவோம்” என்று எழுச்சியுடன் உரைத்தார், செயின்ட் ஜான் எனும் மாமன்ற உறுப்பினர். அவர் கூறியது உண்மையாயிற்று.

மாமன்றம் கூடுகிறது! கொடுமை களையப்படும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு, மன்னன் செயல் மிகுந்த கோபத்தை மூட்டிற்று. தலைவர்கள் முன்வந்தால், இரத்தப் புரட்சிக்கே மக்கள் தயாராகிவிடுவர். நிலைமை அங்ஙனம் இருந்தது. ஆத்திரம் கொண்ட மக்கள் சிறுசிறு கலகம் விளைவிக்காமல் இல்லை. ஆத்திரத்தைக் குறைத்துக் கொள்ள, வேறு மார்க்கமில்லை. ஐந்நூறுக்கு மேற்பட்ட மக்கள், லாட் மாளிகையைச் சூழ்ந்து கொண்டனர்; துருப்புகளை விட்டுத்தான் அடக்க முடிந்தது.

ஆயிரக்கணக்கானவர்கள் அரசன் ஆணையை நிறைவேற்றும் நீதிமன்றத்திலே புகுந்து கலகம் விளைவித்தனர். நாடு, வெடிமருந்துச் சாலையாகிவிட்டது.

மன்னனோ, மாமன்றத்தைக் கலைத்துவிட்டு, பொருள் திரட்ட வேறு வழி என்ன என்று யோசிக்கலானான்.

இலண்டன் நகரப் பிரமுகர்களைக் கடன் தரும்படி கேட்டான் - மறுத்தனர் பலர்.
லாட், “இவர்களுக்குத் தக்கபாடம் கற்பிக்க வேண்டும் மானால், சிலரையாவது தூக்கிலிடவேண்டும்” என்று கூறினான். மன்னன் அந்த அளவு செல்ல விரும்பாமல் சிலரைச் சிறையில் அடைத்தான். தூக்குமேடை, மன்னர்களால்தான் அமைக்க முடியும் என்று லாட் எண்ணிக் கொண்டான்!
படை கூடி நிற்கிறது - பணம் தேவை, கம்பளம் தரப் போர் என்றால் வீரமுழக்கம் மட்டுமா! ஆண்டவன் அருளால் அரசனானேன் என்று தத்துவம் பேசினான். போர் நடத்தப் பணத்துக்கு, அருள் போதுமானதாக இல்லை முறை தவறிய செயல்களில் ஈடுபட்டாவது பணம் திரட்டியாக வேண்டும். எதிரிகள், பிரிட்டன் மீது பாய்ந்து வருகிறார்கள்; பிரிட்டிஷ் மக்களோ ஸ்காட் படையை எதிரிப் படை என்று கருத மறுக்கிறார்கள். ஆணவம் பிடித்த அரசனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வருகிறார்கள் நம் நண்பர்கள் என்றே எண்ணிக் கொண்டனர்.

ஸ்காட் படையிலே எழுச்சி, உறுதி; மன்னன் படை வரிசையிலே பிளவு, பணமுடை, குழப்பம்!

இந்நிலையில் மன்னன், ஸ்பெயின் நாட்டு வணிகர்கள், பாதுகாப்புக்காக அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்த தங்கப் பாளங்களைக்கூட எடுத்துக் கொண்டான். கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குச் சொந்தமான மிளகு முழுவதையும் பணம் கொடுக்காமல் எடுத்துக் கொண்டு, அதை விலை தள்ளி விற்றுப் பணம் திரட்டினான். உடன் இருந்த உல்லாசப் பிரபுக் களிடமெல்லாம் பணம் திரட்டினான்.

ஸ்காட் படை முன்னேறியவண்ணமிருக்கிறது! ‘மன்னனைக் கண்டு எமது மக்களின் குறைகளை எடுத்துக்கூறச் செல்கிறோம். எம்மைத் தடைசெய்யாதீர்’ என்று மன்னர் படையினருக்குக் கூறியவண்ணம் முன்னேறுகிறது. எதிர்த்துப் பார்த்த மன்னன் படை தோல்வியே கண்டது! முன்னேற்றத்தைத் தடுக்க முடியவில்லை! நகரங்கள், ஸ்காட் படைகளிடம் சிக்குகின்றன! ஓரிடம்விட்டு மற்றோர் இடம் பின்னோக்கி ஓடுகிறது மன்னன் படை! தோல்வி! கேவலமான தோல்வி! மன்னன், இனி நிலைமை மிக மோசமாகிவிடும் என்றறிந்து, சமரசத் தூது அனுப்பினான். சமாதானம் நிறைவேற்றப்படும் வரையில், மன்னன் தன் படைக்கும், ஸ்காட் படைக்கும் சேர்த்து பணம் தர வேண்டுமென்று ஏற்பாடாயிற்று. இதற்காகப் பெரும் பொருள் தேவைப்படுகிறது. என்ன செய்வான் வேந்தன்! நாட்டிலுள்ள பிரபுக்களை எல்லாம் கூட்டிக் கேட்டான். அவர்களோ, நெருக்கடியைப் போக்க மாமன்றத்தால் மட்டுமே முடியும். எனவே மன்னன் மாமன்றத்தைக் கூட்டியாக வேண்டும் என்று கூறிவிட்டனர்.

எங்குச் சுற்றி வந்தாலும், மீண்டும், மீண்டும், மாமன்றத்துக்கே வந்து சேரவேண்டி இருப்பது கண்டு மன்னன் வாட்டமடைந்தான் - தேர் தன் நிலைக்கு வந்து தீர வேண்டியது தானே என்று மக்கள் எண்ணி மகிழ்ந்தனர்.

மாமன்றம் கூடிற்று! பிரிட்டிஷ் வரலாற்றை மாற்றி அமைக்கும் ஆற்றலைக் கொண்ட மாமன்றம் கூடிற்று! மன்னராட்சி முறையின் கேடுகளைக் களைந்து தீருவது என்று உறுதி பூண்ட மாமன்றம் கூடிற்று! மன்னன், வாயடைத்துக் கிடந்தான். தன் ஆதிக்கம் அழிந்துபடும் என்று அச்சம் குடிகொள்ளலாயிற்று. நாட்டை ஆளும் மன்னன், நடுச்சந்தியில் நிற்பவன்போலாகிவிட்டான்! இருபடைகள், ஒன்றை ஒன்று தாக்க வேண்டியவை; ஆனால் அவை இரண்டும் சேர்ந்து மன்னனைத் தாக்குகின்றன, பணம், பணம் என்று! மக்களோ, தங்களுக்கு ஒரு மன்னன் உண்டு என்பதை எண்ணவும் வெட்கமும் வேதனையும் அடைகின்றனர். மாமன்றமோ, நாட்டு மக்களின் முழு நம்பிக்கைக்கும் இருப்பிடமாக விளங்குகிறது.

மாமன்றம் கூடியதும், மன்னனிடம் மனுசெய்து கொள்ளும் நிலை கூட அல்ல, கண்டிக்கும் நிலை பிறந்தது.

கெஞ்சினோம், மிஞ்சினான்; பணிவு தெரிவித்தோம், பஞ்சைகள் என்றான்; அன்பு குழையச் சொன்னோம், அலட்சிய மாக நடத்தினான்; கோரிக்கைகளை விடுத்தோம், கொடுமை களை ஏவினான்; இனி மாமன்றம் மன்னனுக்கு மனுசமர்ப்பிக்காது; மக்களின் தீர்ப்பை வழங்கும். நிலை இதுவாகிவிட்டது.

மாமன்றம், மக்கள் இல்லம், தேவாலயம், சிறைக்கூடம், பாசறை, வணிகர்கோட்டம், கப்பல் தட்டுகள், எங்கும் கண்டனம்!

“யோசனை கூறும்படி மன்னன் நம்மை அழைத்திருக்கிறார்.

மக்களோ, தங்களுக்கு உற்ற குறைகளை எடுத்துரைக்கும் கட்டளையிட்டு நம்மை மாமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.

அச்சம் கூடாது! நாம் நமது கடமையைச் செய்யத் தவறக் கூடாது” என்று ஒருவர் கூறினார்.

“பெர்ஷியாவிலே ஒரு காலத்திலே உருட்டி மிரட்டி ஆண்டு வந்த மன்னன் ஒருவன் இருந்துவந்தான். அவன் காலத்தில் நீதிபதிகள் நடுங்கும் குரலில் பேசினர். சட்டம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் மன்னன் தன் விருப்பம் போல நடந்து கொள்ளலாம் - அவர் உரிமை அது என்றனர். நாம் அத்தகைய கேடான பேச்சுப் பேசலாகாது. நடுங்கும் குரல் கொள்ளக்
கூடாது. நாம் நாட்டின் உறுப்பினர். மக்களின் உரிமைக்குரல்!” என்று எடுத்துரைத்தார் வேறோர் உறுப்பினர்.

“உயிர், உடைமை, உரிமை யாவும் பறிபோகிறது. வாளா இருப்பவன் மனிதனாகான்!” என்று இடித்துரைத்தார் இன்னொருவர்.

“அரசியல் முறைக்கு ஒரு திட்டம், சட்டம்! உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் ஓர் ஒழுங்குமுறை! நீதி வழங்கும் இடங்கள்! இவையெல்லாம் இருக்கின்றன நமக்கு! ஏன், இவைகள்? இவற்றால் இம்மி அளவேனும் பலன் உண்டா? மன்னன்தான் இவற்றை எல்லாம் கேலிக் கூத்தாக்குகிறானே. நமக்கேன் இந்தக் காகிதக் கேடயங்கள்?” என்று கேலியைக் கொட்டினார் மற்றோர் உறுப்பினர்.

ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு பேசுபவர் போல, உரிமை முழக்கமிட்டனர். ஒன்று, இரண்டு, மூன்று என்று, பட்ட கஷ்டங்களைக் கணக்கெடுத்தனர். எல்லோரும், இருவரைச் சுட்டிக்காட்டி, அகற்றப்படவேண்டிய விரோதிகள் என்றனர். அவர்கள் குறிப்பிட்டது, லாட், ஸ்டாராபோர்டு எனும் இருவரையும்.

மன்னன் அரண்மனையில்தான் இருக்கிறான்! அவனைச் சுற்றிப் பிரபுக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கோலும் முடியும், கொலு மண்டப உடையும் அழகு குன்றாமல் தான் உள்ளன. இங்கே மாமன்றம், அரசனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பணியில் ஈடுபடுகிறது. ‘கூடு’ என்றால் கூடி, ‘கலை’ என்றால் கலைந்துபோக வேண்டியதல்லவா, மாமன்றத்தின் கடமை, மன்னன் தத்துவத்தின்படி. இந்த முறை கூடிய மாமன்றம், வேலையை முடிக்காமல் கலைந்து போவதில்லை என்று சூள் உரைத்துவிட்டது.

ரோம் நாட்டிலே ஒரு விழாவாம்! ஆண்டுக்கோர் நாள் அடிமைகள் அனைவரும் கூடுவராம். மனத்திலே குமுறிக் கொண்டிருக்கும் குறைகளை எல்லாம் எடுத்துப் பேசுவராம். தங்களைக் கொடுமை செய்யும் ‘எஜமானர்’களைக் கண்டித்துப் பேசுவாராம்! எஜமானர்கள், அதற்கு உரிமை தந்தனராம்! ஒருநாள்! மறுநாள், பழையபடி! அடிமைகளாவர்!! குறைகளுக்குப் பரிகாரம் கிட்டாது! - இதுபோல, மாமன்றம் எப்போதாவது கூடுவது, இதயத்தில் உள்ளதை எடுத்துரைப்பது, பின்னர் கலைவது என்பது இனி முறையாக இருத்தலாகாது; கூடினோம், கொடுமை களைவோம்! என்று முழக்கமிட்டார், ஓர் உறுப்பினர்.

அரண்மனைக்குச் செய்தி சென்றது! மக்கள், மாமன்ற நடவடிக்கைகளை மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தனர். எல்லா வேலைகளையும் மறந்தனர். மாமன்ற அலுவலைக் கவனிப்பதே, வேலையாகிவிட்டது மக்களுக்கு. திரள் திரளாகக் கூட்டம், மாமன்ற வாயிலில்! பிடிவாதம் பேசும் பிரபுவைக் கண்டால், ஆர்ப்பரிப்பர்! மக்கள் சார்பாகப் பேசுபவரைக் கண்டால் வாழ்க என்று முழக்கமிடுவர்! அமுல் செய்யும் அதிகாரிகள், வெளியே உலவ அச்சம் கொண்டனர்! அரண்மனைக்குள்ளேயே, அச்சம் படை எடுத்தது. போர்க்கள வாடை நாட்டிலே வீசலாயிற்று! நடைமுறைத் திட்டங்கள் தீட்டக்கூடிய தல்ல இந்த மாமன்றம்; மன்னராட்சி முறையே தேவைதானா, என்ற பெரும் பிரச்சனைக்கு முடிவு கூறவே வந்திருக்கிறது என்று மக்கள் கூறினர்.