அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

ஒளியூரில் ஓமகுண்டம்
1

“ரதி மதன்’ நாடகம் நடத்தவேண்டுமானால், இராமப் பிரசாதனும், வாசமல்லிகாவும் அப்படியே அரங்கம் ஏறி நின்றால் போதும்; தத்ரூபமாக இருக்கும்! எப்படித்தான் கிடைத்ததோ அந்த எழில்! இருவருக்கும் எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது அந்த ஜோடி” என்றான் சத்ருசங்காரன்.
“அமைந்திருக்கிறது என்று கூறாதே, அமைய இருக்கிறது என்று சொல்” என்று திருத்தினான் காவியபூபதி.

“தடை என்ன இருக்கிறது, அவர்கள் தம்பதிகளாவதில்? ராமப்பிரசாதன் தகப்பனார் ரங்கராஜ பண்டிதர் தன் மகன், அழகில் சிறந்தவனை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதே ஆசீர்வதித்தாரே - அழகான மங்கை என்பதற்காக மட்டுமல்ல, ஐஸ்வரியமும் ஏராளமாக இருக்கிறது என்ற காரணத்தால். வாசமல்லிகாவின் தகப்பனாருக்கு வாணிபத்திலே ஏராளமாக இலாபம் குவிகிறது. பல அரசாங்கங்களுக்குப் பண்டங்கள் வாங்கித்தரும் பொறுப்பும் கூட அவரிடம் தரப்பட்டு இருக்கிறது. மண்டலாதி

பதிகள், தம்முடன் சரிசமமாக அல்லவா நடத்தி வருகிறார்கள் பாஞ்சசன்ய பூபதியாரை! அவ்வளவு நல்ல செல்வாக்கு அவருக்கு” என்று விளக்கமளித்தான், சத்ருசங்காரன்.

அந்த இருவர் மட்டுமல்ல, மாளிகை பலவற்றிலேயும் நிகழ இருக்கும் இந்த நேர்த்தியான திருமணத்தைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.

காதல் கைகூடுகிறது என்ற நிலை ஏற்படும்போது, அலாதியாகப் பிறந்திடும் பேரழகுடன் வாசமல்லிகா விளங்கினாள். எந்த அரசரும் அவளை அதுவரையில் சிறை எடுத்துச் செல்லாததற்குக் காரணம், அவள் அப்படிப்பட்ட அழகி அல்ல என்பதல்ல. அந்தக் காலம், ருக்மணியைத் தூக்கிக் கொண்டோடிய கிருஷ்ணன் காலமல்ல; அந்த இடமும் உருமாறிக் கூடிடும் வித்தை அறிந்தவர் வாழும் விசித்திர உலகமுமல்ல.

வாசமல்லிகாவின் அழகு மணம், ராமப்பிரசாதனைக் கவருவதற்கு முன்பே, ரங்கராஜ பண்டிதரின் மனம் பூபதியாரிடம் இலயித்திருந்தது. பண்டிதருக்குப் போதுமான ‘தொழில்’ கிடைக்காத காலம் அது. அரச அவைகள் இருந்தன. ஆன்றோர் கூடிடும் அரங்குகளும் இருந்தன. மக்கள் மன்றங்களும் இருந்தன. எனினும், அங்கெல்லாம் முன்பு போலப் பண்டிதர்களுக்கு கம்பீரக் குரலெழுப்பி, பகவானின் பல்வேறு திருவிளையாடல்களைக் குறித்துப் பாடியும் பேசியும், பக்திரசம் ஊட்டி, பரிசும் பவிசும்பெறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. பூஜா மடங்களிலே, எப்போதும் போல முரளிதரன் இருந்தான்; கோதண்டபாணி கோவிலில் ஆறுகால பூஜை, எப்போதும்போல நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. துளசி மாடங்களைச் சுற்றிவந்து தத்தம் நாயகர்கள், குறைவற்ற செல்வத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ அருள் புரியும் என்று வேண்டிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் எல்லாவற்றிலும் தரக்குறைவோ, ரசக் குறைவோ இருப்பது போலக் காணப்பட்டது. ஆலயமணி ஓசையிலே கூடக் கம்பீரக் குறைந்து சோகம் ஒலித்தது.

“பத்து நாள் போகட்டும்; பிறகுதான் நிச்சயமாக எதையும் சொல்லமுடியும். இப்போதைக்குப் பிராணபயம் உடனடியாக இல்லை. நாடியிலே கோளாறு இல்லை. ஆனால் நாளை மறுநாள் என்ன ஆகிறதென்று எப்படிக் கூறமுடியும்? எதற்கும் ஒரு பத்து நாள் கழியட்டும்!” என்று மருத்துவர் கூறுவது கேட்ட இல்லத்தார். நோயாளியை எந்த நோக்குடன் பார்ப்பார்களோ, அந்தப் பார்வையிலேயே, ஆலயப் பூஜாரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஸ்வாமிகளே! எப்படி க்ஷேம இலாபங்கள்?”

“இருக்கிறேன், தங்கள் யோக க்ஷேமம் எப்படியோ?”

“எல்லாம் அவ்விடம் உள்ளது போலத்தான்.”

“பகவத் கடாட்சம் எப்படியோ, பார்ப்போம்.” இவ்வளவு தான் அவர்களிடையே பேச்சு - அதுவும் சுற்று முற்றும் பார்த்து விட்டு, வறட்சி நிறைந்த குரலில், மிரட்சி பொங்கிடும் கண்ணினராய்.
பொன்னொளி பரப்பிக் கொண்டிருந்த காலம் அது - எனவே புரட்டர்களும், புல்லர்களும் மனம் புழுங்கிப் போயினர். புனித மார்க்கம், புராதன மார்க்கம் என்று பல காலமாகப் பக்தி பூர்வமாக எந்த மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்களோ, வந்தனை வழிபாடுகளை அன்புடனும், அக்கறையுடனும் செய்து வந்தனரோ, அவர்களே ஏதோ வேண்டா வெறுப்பாக ஈடுபாடு கொண்டிருந்த காலம்.

“மன்னா!” என்று மகரிஷிக் கோலத்திலிருப்பவன் அழைத்தவுடன் அடியற்ற நெடும்பனையெனக் கீழே வீழ்ந்து, அடிபணியும் மன்னர்களின் மனப்போக்கு மாறிவிட்டது; ‘எந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவர்! என்ன கோரி வந்திருக்கிறீர்? இதற்கு முன்பு எந்த மண்டலத்தில் தங்கியிருந்தீர்?” என்று ‘விசாரணை’ நடத்திய காலம்! இந்நிலையில், புராண இதிகாசங்களைக் கூறிக் கொண்டு, வாழ்க்கையில் மேம்பாடு பெற, எப்படி முடியும் ரங்கராஜ பண்டிதரால்! நெஞ்சு நெக்குருகக் கேட்ட காலம், கசிந்து கண்ணீர் மல்கிய காலம், கைகூப்பித் தொழுத நாட்கள், பக்திப் பரவசத்தால் மெய்மறந்துபோய் கைத்தாளம் கொட்டி ஆடிய காலம் - இவை போயேவிட்டன - கதை என்றுகூடத் கூறத் தொடங்கிவிட்டனர் மக்கள்.

ஆண்டவனுடைய லீலா விநோதங்களை விஸ்தாரமாக எடுத்துச் சொல்லும்போது, சிலர், சிரிப்பதை அடக்கிக் கொள்கிறார்கள்; வேறு சிலர் சிரிக்கவே செய்கிறார்கள். சிவலீலை, விஷ்ணு மகாத்மீயம், கருட புராணம், அனுமத் பிரபாவம் ஆகியவை பற்றிக் கூறும்போது, முன்பெல்லாம், வெற்றிக்கொடி பிடித்து வீரர் முன்செல்ல, வெண்சாமரம் வீசிடும் வேல்விழியார் உடன் வர, கோலாகலமாகப் பவனி வரும் ‘ராஜாதி ராஜன்’ போல, ‘சபை’ செல்லுவர். பகவத் நாம சங்கீர்த்தனம் சொல்லுவார்; மக்கள் இலயித்துக் கிடப்பார்கள்.

தொட்டார் வில்லினை
தொடுத்தார் அம்பு
விட்டார் எதிரே
அறுந்தது நாண்
ஒடிந்தது வில்
மலர்ந்தது இதயம்

என்று அவர் சீதாகலியாணத்தின் சிறப்பினைச் செப்பியபோது மக்கள் எவ்வளவு ஆனந்தப் பரவசமடைவார்கள்! ஆடவரெல்லாம் ஸ்ரீராமராவர், ஆரணங்குகளெல்லாம் சீதா தேவியாவர்! கோபால கிருஷ்னுடைய ரசலீலாக்களைக் கேட்டுப் புளகாங்கிமடைந்தனர்! பத்தினிகள் பட்ட துயர் கேட்டு, விழி சிவந்திடும் அளவுக்குக் கதறுவர்! அப்படியிருந்து வந்த மக்களைக் கபில வஸ்துவிலிருந்து கிளம்பிய புதுப்புயல், புத்த மார்க்கம், சிந்திக்க வைத்து விட்டது. கதைகளிலே ‘ரசம்’ இருக்கிறது எனினும், பயன் உண்டோ அவற்றை கேட்பதால்! அறிவுக்குத்தான் பொருந்தி வருகிறதோ! நடைமுறைக்கு ஏற்றது என்று சொல்லத்தக்கதாகவாவது இருக்கிறதா! பல விஷயங்கள் வெளியே சொல்வதற்கே வெட்கப்பட வேண்டிய வகையிலல்லவா உள்ளன என்று பேசிய மக்களைவிட, சிந்தித்துக் கொண்டிருந்த மக்களே அதிகம். இத்தகைய சந்தேகம் புகுந்து குடைந்து கொண்டிருந்த நிலையிலேயே அவர்கள் புனிதமானவை என்று நெடுங்காலமாக நம்பிக்கொண்டிருந்த முறையிலே, பற்றற்று நடந்து கொண்டிருந்தார்கள்.

சங்கு சக்ரதாரியாக விஷ்ணு பகவான் கோவிலில் நின்று கொண்டிருந்தார் எப்போதும்போல; வழக்கப்படி அவருக்கு ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு வந்தன. எதிரே நின்று எப்போதும்போல, கைகூப்பித் தொழுதனர் பக்தர்கள். ஆனால் அவர்கள் உள்ளத்தில் இருந்த பக்தி, பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. சுடர் விட்டெரியும் திருவிளக்கு தரும் ஒளியில், ‘கமலக் கண்கள்’ தெரிந்தன. முன்பெல்லாம், விழியைத் திறந்து அவர் பார்ப்பது போன்றே ஒரு ‘பிரமை’ தோன்றும் பக்தர்களுக்கு - இப்போது அப்படித் தோன்றவில்லை.

“என்ன கனிவு! எவ்வளவு கவர்ச்சி! அந்தக் கண்களில் அருள் ஒழுகிடக் கண்டேன்; புளகாங்கிதம் கொண்டேன்!” என்று உருகி உரைப்பர் - முன்பு. இப்போது மனு கொடுத்தவன் வந்து நிற்பதைக் கவனியாமல் குறிப்பேட்டினைப் புரட்டிக் கொண்டிருக்கும் கொத்தவால் முன்பு நின்றுகொண்டு ஆர்ப்பாட்டத்துக்குக் குறைச்சலில்லை. அலுவலகத்தில் அமுலுக்குப் பஞ்சமில்லை; ஓயாது வேலை செய்வது போலத்தான் காணப்படுகிறார். என்றாலும் என்ன பலன்? களவு போன என் பொருளைக் கண்டுபிடித்துத் தரும் திறமை மட்டும் இல்லை - இப்படி ஒரு கொத்தவால் இருக்கிறார், நாமும் இவரிடம் வந்து வந்து குறையைக் கூறிவிட்டுப் போகிறோம்’ என்று சலிப்புடன் எண்ணிக் கொள்ளும், கிராமத்துக் கிழவன் போலக் கடவுளின் சன்னதியில் நின்று கொண்டிருந்தனர். முன்பெல்லாம் தவறி எங்கே தவறான, கேவலமான, ஆசாபாச உணர்ச்சிகள் ஆண்டவன் ஆலயத்திலே இருக்கும்போது உள்ளத்தில் தலை தூக்கிவிடுமோ, தேவனுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்று திகில் கொண்டு, “தேவ தேவா! எம்மைக் காத்தருளும்; சத்ய நெறியினின்றும் தவறி நடக்காத மன உறுதியைத் தாரும்; தீய எண்ணங்கள் எம்மைத் தீண்டாதபடி தடுத்தாட்கொள்ளும்; சகல பாவங்களையும் சம்ஹரிக்கும் தங்கள் திருப்பார்வையை, நாயினும் கடையராம் எம்மீது சிறிது செலுத்தும். பிரபோ! பித்து மனம் கொண்ட நான், செய்துள்ள பிழைகளைப் பொருத்தருளும்; சாசுவதமான இன்பம் பெறும் மார்க்கத்தை சர்வேஸ்
வரா! எனக்குக் காட்டும்” என்று கேட்டு வந்த பக்தர்களிலே மிகப் பலருக்கு, ஆலயத்திலே காணப்படும் அலங்காரமும் ஆடம்பரமும், அர்ச்சகர்களாகி அரசோச்சும் பூசுரரின் பேராசையும் ஆதிக்க வெறியும், அவர்களைப் பற்றி ஆபாசம் நெளியும் கதைகளும் கண்ணிலும் கருத்திலும் உறுத்தின; இந்த இடத்தில் தூய்மையான கருத்து எங்ஙனம் துளிர்விடும்! வாடைக் காற்றடிக்கும் இடத்திலே மல்லிகையின் நறுமணம் தேடுகிறோம் - வீண் வேலை! என்று தோன்றிற்று.

எவ்வளவு அழகான சிலைகள்! எத்துணை நேர்த்தியாகச் சமைத்திருக்கிறான் சிற்பி. அந்தக் கண்கள் கவிதை பாடுவது தெரிகிறதே! கன்னங்கள், கனிந்த பழம் போலல்லவா உள்ளன! அதரம் துடிப்பது போலவே தோற்றமளிக்கிறது. தன் கைவண்ணத்தைச் சற்றே சரிந்த குழலின் பாரம் பின்னுக்கு இழுக்க, கனகப் பந்துகளின் கனம் முன்னுக்கு அழைக்க எப்பக்கம் என் நிலை என்று துடிப்பதுபோல் இடை நெளிய, இந்தக் காட்சியிலே சொக்கி நிற்கும் என் நாதனைக் காணீரோ என்று கேட்பதுபோல் கண்பேச, ஆஹா! கல்லைக் கொண்டு இவ்வளவு அழகாக அளித்திருக்கிறானே, பேசும் பாவையர் கண்டு காமுறத் தகும் சிலை வடிவச் சிங்காரியை. ஸ்ரீதேவி என்றழைக்கட்டும், சிவகாமி என்றுரைக்கட்டும், மீனலோசனி, விசாலாட்சி, விரூபாட்சி, கமலலோசனி என்று பெயர் எது வேண்டுமானாலும் சொல்லட்டும்; கதை எப்படி வேண்டுமானாலும் கட்டட்டும்; கல்லிலே இந்த எழிலைக் காட்டினானே, அவனைத்தான் நான் தேடுகிறேன், புகழ்பாடிட; கொண்டாடி மகிழ.

இப்படி ‘சிலை’யிலே காணப்படும் சிற்பியின் கைத் திறனைப் புகழ்ந்தனர் சிலர்.

சீற்றம் பிறக்கவில்லை, ஆலயத்து மேலோருக்கு. அவர்கள் பக்திப் பரவசத்தால் கனிவு வழிய தரிசிக்கிறார்கள் என்று எண்ணி, தேவ மார்க்கம் தழைத்து நிற்கும், புத்த புயலிலே வீழ்ந்து போகாது, சிறிதளவு தாழ்ந்து போக நேரிடலாம். ஆனால் அடி பெயர்த்திடாது - இதோ வைத்த கண் வாங்காது நிற்கிறார்களே, இவர்களெல்லாம் புராதன மார்க்கம் புதுமுறைக்காரர்களால் அழிக்கப்படுவதற்கு இடமளிப்பார்களா? ஒருபோதும் இல்லை! - என்றெண்ணினர், மகிழ்ச்சி பெற்று, மலரால் மகேசனை அர்ச்சித்தனர், பிரசாதமளித்து மகிழ்வித்தனர் பிறரை.

தேவனைத் தரிசிக்க வந்தனர் பக்தர்கள் என்று அர்ச்சகர்கள் எண்ணிக் கொண்டனர். வந்தவர்களோ ‘சிலை’யைக் கண்டு களித்திடும் கலா ரசிகர்கள். பூஜை செய்கிறார்கள் என்று பூஜாரிக் கூட்டத்தினர் எண்ணிக் கொண்டனர். சிலையை ரசித்தார்களோ, சிற்பியைப் புகழ்ந்துரைத்தனர். அருள்பெறும் இடம் என்று கூறி ஆலயத்துக்கு அழைத்தால், அழகொழுகும் கலைக்கூடம் இது என்று கூறிப் பாராட்டினர். ரசிகர்களைப் பக்தர்கள் என்று எண்ணிக் கொண்டனர்; - ஏமாந்தனர்.

ஆரிய மார்க்கம் இங்ஙனம் அடித்தளம் தாக்குண்ட நிலையில் இருந்த காலத்தில் ரங்கராஜ பண்டிதருக்குத் தொழிலில், பொருளும் புகழும் மிகக் குறைந்த அளவுக்குத் தானே கிடைக்க முடியும்.

புத்த மடாலயம் சென்று விட்டவர்கள் - நிராசை - நிருவாணம்- நிருமலம் எனும் இலட்சிய சித்திக்கான முறைகளிலே ஈடுபட்டனர் - புத்த மடலாயம் சேராதவர்களும், புத்த மார்க்கத்தில் புகாமலும், புத்த மார்க்கப் பிரசாரமூலம் பெற்ற தெளிவினால், ஆரிய மார்க்கத்திலே உள்ள ஆபாசங்களை அறிந்து கொண்ட ‘இந்துக்கள்’ ரங்கராஜ பண்டிதரின் கதைகளைக் குறித்து அவரைக் கேட்ட கேள்விகள் அவருக்குக் கோபமூட்டின. கேள்விகள் தவறானவை என்பதால் அல்ல; பதில் கண்டறிவது கடினமாக இருந்தது. கடுங்கோபம் பிறந்தது பண்டிதருக்கு. எனினும் தனியே இருந்து, அதே கேள்விகளைப் பற்றிச் சிந்திக்கும்போது அவருக்குச் சிரிப்புக்கூட வரும். ஆமாம்! அந்தப் போக்கிரியப் பயல்கள், சொல்வதைக் கேட்டுக் கேட்டு எனக்கே இப்போது சந்தேகம் பலமாகிக் கொண்டுதான் வருகிறது என்று தனக்குத் தானே கூறிக் கொள்வார்.

வாசமல்லிகாவுக்குப் பூட்டி அழகு பார்க்கவும், பெருமைப் படவும். தம்மிடம் பொன்னும் பொருளும் இல்லையே என்று பண்டிதர் ஏங்கிக் கிடந்தாரே தவிர, அந்த வனிதை இயற்கையிட மிருந்து எழிலைச் செல்வமாகச் குறைவின்றிப் பெற்றிருந்தாள்; ஆபரணச் சுமைதாங்கிகள் அரண்மனையில் அசைந்தாடிக் கிடந்தனர் - இந்த அழகு மயிலுக்கு அவை தேவையற்றன! இருக்க வேண்டிய இடமறியாததால், முத்து மாலையும் மோகராக்குவியலும், மரகதமும் பிறவும், சீமாட்டிகளிடம் சிறைப்பட்டுச் சீரழிந்தன. இந்தச் சிங்காரிக்கு அவை ஏன்? முத்தும், பவழமும் அளித்தனை, இயற்கையே! எனினும் அவற்றை அணிந்து மகிழவா செய்தனை? பேழையிலிட்டுப் பாதுகாத்து வரும் வேளையில் அல்லவா என்னை விட்டிருக்கிறாய்; பேழையிலுள்ளதை அவ்வப்போது சிலர், களவாடிச் செல்கிறார்கள் - ‘ஓ’வெனக் கூவி, அவர்களைப் பிடித்திடத் துரத்திச் சென்றாலும், என்னைத் தடுத்து நிறுத்துகிறாள், நிலமடந்தை. என் செய்வேன்! கொடுத்தும் கெடுத்தாய், இருந்தும் பயனேதும் நான் பெற்றேனில்லை என்றல்லவா கடல் ஒலிக்கிறது, இயற்கையின் வஞ்சனையைக் கண்டு. இதோ சம்பவத்தை அதரமாக்கி, முத்துக்களை அழகான பற்களாக அமைத்து, பொன்னைப் பொடி செய்து குழம்பாக்கி உடலெல்லாம் பூசி. தேயாத் திங்களாக முகத்தினைத் தீட்டி, நினைக்கும் போதெல்லாம், கனிச்சாறு ஊற்றெடுக்கும் வகையும் தந்து, வாசமல்லிகாவைத் தன் செல்லப் பெண் ஆக்கிக் கொண்டனையே என்று கத்துங் கடலொலி கேட்கிறது.

அவனல்லவா அதை அறிந்திருக்கிறான்! அந்தி நேரத்தில், ஆற்றோரத்தில், “எண்ணமதைக் கொள்ளையிட்ட வண்ணப் பூவே! எங்குப் பெற்றாய் இத்தனை எழிலை எல்லாம்” என்று கேட்கிறான்! போதும் உமது பரிகாசம் என்று அவள் சிணுங்கினாள். வண்ணப்பூ மேனிக்கு இந்த வான்காற்று ஆகாது; பண்ணொத்த மொழியாளே! வாராய் இங்கு என்று அழைத்து, நீண்ட இரு கையைப் போர்வையாக்கி, பிறை நெற்றிக்கு முத்த மெனும் பொட்டிட்டு, வெட்கத்தால் முகம் சிவக்க ‘விடுங்கள்’ என்றே வீணைமொழியிலே அவள் கூறும்போது, தலைசாய்த்துத் துயிலுவதற்குத் தக்கதன்றோ, எந்தன் தடந்தோள்கள் என்றே மிக்கவும் கோபமது கொண்டான் போலே அவனும் கேட்க, மஞ்சமிதை வேறு அஞ்சகமும் கொள்ளப் போமோ! என்று அவள் கூறி நெஞ்சம் நிறைந்துள்ள இன்பத்தேனை, அதரம் தன்னில் வைத்து, மகிழ்வூட்டி மகிழ்கின்றாளே, அங்கு அல்லவா தெரியும், பொருளையும் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை என்னும் பேருண்மை.

‘கொண்டலைத் தழுவிடும் மேகம், கூறுவதென்ன கோகிலமே!’ என்று அவன் கேட்கிறான்; அவள் காதற்புலமை யுடன் “தழுவிடச் சென்ற மேகமங்கை, பின்னர் அழுதிடும் காரணம் அறிவீரோ?” என்றல்லவா கேட்கிறாள்! செல்வம் நிரம்ப இருந்தால் வாசமல்லிகாவின் திருமணத்தை மிகச் சிறப்பாக, கோலாகலமாக நடத்தலாம்; அதற்கான காலமா இது? இல்லையே என்று ஆயாசப்படுகிறாரே இந்தப் பண்டிதர். இதோ, வண்டுகள் யாழை மீட்ட, வரிக்குயில் பண்ணிசைக்க, அண்டையில் அருவி பாய்ந்து அழகாய் முழவொலிப்ப, கெண்டைகள் துள்ளியோடிக் கேளிக்கை நடத்திக் காட்ட, வெண்முகில் கருத்துப் பன்னீர்த் துளிகளை வாரிவீச, வாச மல்லிகா - ராமப்பிரசாதன் கடிமணம், பல ஆயிரம் வராகன்களைக் கொட்டிச் செலவிட்டாலும் பெறமூடியாத அழகுடன் நடைபெறுகிறது. பண்டிதர் இதனை அறியாமல், பணமில்லை பணமில்லை என்றெண்ணிப் பதைக்கிறார். பேழைக்கல்லவா, பணம் தேவை! இந்த ஆணழகன் தேடுவது, இந்த வடிவழகை, வண்ணமலரை, மண்ணகத்து மதியை, பொன்அவிர்மேனியாளை, புது வாழ்வை! வாசமல்லிகா கிடைக்கும் போது, அவன் அவளுடன் வந்துள்ள பேழைகள் எத்தனை என்று ஏன் கேட்கப்போகிறான்! அவன் உள்ளத்தை “முத்து வைத்து நற்பவழப் பெட்டி” கவர்ந்து விட்டது!

“அங்கே சென்று, நட்சத்திரங்களை எல்லாம் எடுத்துப் பூப்பந்துகளாக்கி விளையாடினால் எப்படி இருக்கும்?”- என்று குழந்தைபோலக் கேட்டாள் மல்லிகா; குறும்புப் புன்னகையுடன், ராமப்பிரசாதன், “அங்கு நீ சென்றால், தேவலோகத்தில் பெரும் போரல்லவா மூண்டுவிடும்” என்பான்.

“அங்குப் போர் எழ என்ன காரணமிருக்கிறது? இங்கு தான் புத்தமார்க்கத்துக்கும் புராதன மார்க்கத்துக்கும் போர் மூண்டு கொண்டிருக்கிறது என்கிறார்கள். அங்குப் போர் எழ என்ன காரணம்?” என்று அவள் கேட்க,“அன்பு மலரே! அமரர் உலகிலே நீ சென்றால், எனக்கா உனக்கா என்று அவர்களுக்குள் போட்டி கிளம்பி பெரும்போர்மூண்டு விடாதோ!” என்று அவன் குறும்பாகச் சொன்னான்.

“எனக்கென்ன அச்சம் அதனால்!” என்கிறாள் வாசா. பயந்து போகிறான் ராமப்பிரசாதன்! கோபமாகக்கூட இருக்கிறது. “அதென்ன மல்லிகா, அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்கிறான். “ஏன்! அமரர்கள், என் பொருட்டுப் போரிட்டுக் கொண்டால் எனக்கென்ன? அமரர்க்கரசனே குறுக்கிட்டாலும் புறமுதுகிட்டோடச் செய்து என்னை உம்மவளாக்கிக் கொள்ளும் என் ஆற்றலரசர் இருக்கும்போது எனக்கென்ன அச்சம்?” என்று அவள் கூறுவாள்; வாரி, அணைத்துக் கொள்வான்; அவர்கள் காலடியில் மகதம் மாவளம், கூர்ஜரம், மாரடம், வங்கம்... எல்லாம் உருண்டோடும்; விண்ணகத்து மண்டலங்களை எல்லாம் கூடக் கடந்து, அவர்கள், காதல் உலகு செல்வர் - கண்
களைத் திறந்தாலோ, பசும் புற்றரையும், பழமுதிர் சோலையும், நீரூற்றும், இது கலிங்கம் என்பதை நினைவிற்குக் கொண்டுவரும்.

பண்டிதர் பொருள் தேடிட எந்த மண்டலம் சென்றும் பயனில்லை என்று அறிந்திருந்தார்; ஆனால் சம்பந்தியிடம் சற்றுக் கௌரவமாகத்தானே பேசி வைக்கவேண்டும்! அதனை வணிகர் அறியாமலில்லை. அவர் பல மண்டலங்கள் சென்று வருகிறார். எங்கும் மாறுதல் உருவாகிக் கொண்டிருக்கிறது. எல்லா மண்டலங்களிலும் புத்த மதம் பரவிவிடவில்லை; இந்து மார்க்கத்தினருக்குப் பல கொடுமைகள் இழைத்துக் கொண்டும் பல மண்டலங்கள் இருந்தன. என்றாலும், அங்கெல்லாம்கூட இந்து மார்க்கத்திலேயே காலத்துக்குப் பயந்து மாறுதல்கள் செய்து வந்தனர். பேரிரைச்சலுடன் ஓடிவரும் ஆற்றைத்தாண்டி அக்கறை செல்ல வேண்டுமானால், தட்டுமுட்டுச் சாமான்களையும் உடன் தூக்கிக் கொண்டா செல்ல முடியும்?

மகதம் இவ்வளவுக்கும் வழி செய்துவிட்டது என்று மறையவர்கள் அடிக்கடி ஆத்திரத்துடன் பேசுவர். அந்தப் பாப பூமியில்தான் இப்போது, கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டுள்ளனர் புத்த மார்க்கத்தினர். அங்குப் புத்த மார்க்கத்துக் கான படிப்பும், பயிற்சியும் பெற்று, பாரெங்கும் சென்று பௌத்தத்தைப் பரப்பும் பண்டிதர்களைத் தயாரிக்கிறார்கள்.

புத்த மார்க்கத்தின் புனிதத்தைப் புகட்டும் ஏடுகள் அங்கு மலைமலையாகக் குவிந்து கிடக்கின்றனவாம். ஒரு பெரிய பல்கலைக் கழகமே ஏற்படுத்திவிட்டிருக்கிறார்கள்.

இவ்விதமாகவெல்லாம், அந்த மண்டலம் போய் வந்த வர்கள் வியந்து கூறுவார்; வைதீக மார்க்கக் காவலர்களுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும்.

இவ்வளவுக்கும் ஆதரவு அளிக்கும், மகத நாட்டு மன்னன் ரௌரவாதி நரகமல்லவா போய்ச் சேருவான்?”

“அப்படி நாம் கூறுகிறோம்; நம்புகிறோம். அவர்கள் மோட்சம், நரகம் என்ற பேச்சே ஆரியச் சூழ்ச்சி என்கிறார்களே!”

“மேதாவிகளே! யுகயுகமாக இருந்துவரும் ஐதீகத்தைப் பொய்யென்று கூறும் இவர்கள் வாய் புழுத்துப் போகும் - பார் -பார்.”

“அந்த ஐதீகங்களெல்லாம் வீணுரை என்று விளக்கிடவே, அங்குப் பேராசிரியர் பலர் பாடம் தருகிறார்களாம்.”

“அதைக் கேட்க ஒரு கூட்டமும் சேருகிறது போலும்!”

“அவ்வளவு அலட்சியமாக நீர் கூறுகிறீர். அந்த நலந்தா பல்கலைக் கழகத்தில் 10--,000க்கு மேற்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் 1500க்கு மேல்.

“பொய்! பொய்! வீண் புரளி! பத்தாயிரம் பேர் அங்குப் படிக்கிறார்களாம் - அது என்ன பாடசாலையா அல்லது பாடலிபுத்திரமா?”

“நீர்கேட்பது நியாயம்தான். பாடலிபுத்திரம் போன்ற ஒரு நகரமே அங்கு எழுப்பப்பட்டுத்தான் இருக்கிறது. அங்கு மாணவர்களும், ஆசிரியர்களும், தங்கியிருந்து அறநெறி பற்றிய அறிவு வளர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்விதமெல்லாம் கேள்விப்பட்டு ஆரிய மதக் காவலர்கள், மனம் புழுங்கிப் போயிருந்தனர்.