அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

சந்திரோதயம்
1

“தங்கள் பெயர்...?”

“சாம்பசிவம்!”

“என் பெயர்..........”

“சந்திரோதயம் என்பேன்!”

காதல் அவனை ஒருகண நேரம் கவியாக்கிற்று.

ஆர்வமுள்ள இளைஞன் - அழகு ததும்பும் மங்கை - அந்தி வானத்தில் அழகு நிலா எழுகிறது - பிறகு...!! கூறவா வேண்டும். இதயகீதம் இவ்வளவு இனிமையாகக் கிளம்பிற்று என்பதை!

பொறி பறக்கும் கண்கள் - கனல் தெறிக்கும் பேச்சு - இவற்றை எதிர்பார்த்துத்தான் அந்த இளைஞன். பூந்தோட்டம் வந்தான். அங்கோ புள்ளிமான் ஆடிற்று. பூங்குயில் பாடிநிலா புதியதோர் உலகையே அவனுக்குக் காட்டிற்று.

ஊரின் பெரிய புள்ளி, சிங்காரவேலு முதலியார் - சிவபக்தர்! செல்வம் நிரம்ப இருந்தது, எனவே அவருக்குச் சிவ பக்தி செலுத்தவும், ஊரார் அதை அறியும்படி காட்டிக் கொள்ளவும், நேரம் இருந்தது, நேர்த்தியான முறையும் அமைந்திருந்தது.

பணம் படைத்த அவர், பிராமண பக்தியுடன் இருந்துவந்தார்! சிவன் கோவிலுக்கும் அவர்தான் தர்மகர்த்தா.

கோவில் குருக்கள் வாஞ்சிநாதர், முதலியாருடைய அத்யந்த நண்பர்!

பகவத் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற்றவர், பாக்கியவான், நம்ம முதலியார் -எதற்கும் கொடுத்துவைக்க வேண்டுமல்லவா... - என்று வாஞ்சிநாதர், முதலியாரின் அருமை பெருமை பற்றிப் பேசுவார். சிங்காரவேலரும், எல்லாச் சீமான்களையும் போலவே, “அய்யர வாளின்’ அபிலாஷைகளைப் பூர்த்திசெய்து வைப்பதிலே ஓர் அலாதியான ஆனந்தம் அடைந்தார்.

சிங்காரவேலரின், செல்வக்குமாரி, சந்திரா!

அவளைத்தான், சாம்பசிவம் அந்தி சாயும் வேளையிலே கண்டான், எந்த இளைஞனும் தவிர்த்திட முடியாத காதலால் தாக்குண்டான்.

“நான்... சிங்காரவேலரின் மகள்...” என்று சேயிழை சொன்னாள், அவ்வளவுதான், அவன் ‘காதலை’க் கடுங்கோபத் துடன் விரட்டலானான்.

காதல், அவ்வளவு எளிதிலே விரண்டோடிவிடவா செய்யும் - மறுத்தது.

சாம்பசிவம், சிறிதளவு வசதியான குடும்பத்திலே இருப்பவன் - மக்களின் வாழ்வு துலங்கவேண்டும், அதற்கான வழிவகையைக் கூறவும் காணவும் பணிபுரிய வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டவன். அவனுடைய வயோதிகத்தாய், மகனுடைய போக்கு கண்டு ஆச்சரியப் பட்டாள் - ஆகவே, அவனுக்கு ஒரு ‘கால்கட்டு’ போட்டு, சரிப்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டாள்.

இந்தத் திட்டத்தையும் வேதம்மாள், செல்வர் சிங்கார வேலரிடம் சென்று கூறினார் - ஊர்ப்பெரியவரிடம் தானே மனத்திலுள்ள குறையைக் கூற வேண்டும் - அதுதானே முறை! அதே முறைப்படி, வேதம்மாள், தம்மிடம் இருந்த சில ஆயிரம் ரூபாய்களையும், சிங்காரவேலரிடம் தந்தார்கள்.

“எனக்கேனம்மா, இந்த வீண் வேலை! பாங்கில் போட்டு வை - நான் சீட்டு தருகிறேன்!’ என்று முதலியார் மறுத்தார்.

“எனக்கு எந்தப் பாங்கி தெரியுமுங்க - அதிலே போட ஒரு மனுவாம், வாங்க ஒரு மனுவாம்! இதெல்லாம் யாராலே முடியும்.” என்று சமாதானம் கூறிப் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தார்கள்!

இப்படி, ‘விதவைகளின்’ கண்ணீர், முதலியாரின் பேழையில், ஏராளம்.

அவர் இதனை ‘வாழும் முறை’ என்று எண்ணினாரேயன்றி, தவறு என்றோ, பாபம் என்றோ கருதவில்லை. அவர் மட்டுமா, சிங்காரவேலர்களின் சித்தாந்தமே அது!

ஏழை புழுப்போலத் துடிக்கிறான் - அவன் வயிற்றிலடிக் கிறோமே, தவறல்லவா, பாபமல்லவா என்று எவனாவது கேட்டால் - யாரும் கேட்கமாட்டார்கள்! - அவனவன் எழுத்து அது, நாம் என்ன செய்யமுடியும், என்று தான் சிங்காரவேலர்கள் கூறுவர்.

ஜாதி ஆச்சாரம், மதாச்சாரம் கெடக் கூடாது - கெடும்படி நடந்து கொள்ளக் கூடாது - அப்படி நடப்பதுதான் தவறு, பாபம்!! சிங்காரவேலர் போன்றாரின் தத்துவம் அது!

சாம்பசிவம், ஜாதி, குலம், மதம் என்பவற்றின் காரணமாகச் சமூகத்திலே விளைந்துள்ள கேடுகளைக் களைந்தெறியவேண்டும் என்ற கொள்கை கொண்டவன் - கொள்கையில் உறுதிப்பாடு மிகுந்தவன்.

உழைத்துத்தான் பிழைக்கவேண்டும் என்ற நிலை இல்லை அவனுக்கு - வரைமுறையின் படி நடந்துகொண்டால், அவன் சிங்காரவேலர் போன்றாருக்கு, மருமகனாகி வாழ்வில் விருந்து காணமுடியும். ஆனால் அவனை, நாட்டிலே வீறுகொண்டு எழுந்த சீர்திருத்த இயக்கம் ஆட்கொண்டுவிட்டது. அவன் தொண்டாற்றும் பக்குவம் பெற முனைந்தான், தொல்லைகளைத் தாங்கிக் கொள்ளவும் பழகிக் கொண்டான்.

“என்ன போறாத வேளையோ! எந்தக் கிரகத்தின் கோளாறோ! எப்போது என் வயிற்றில் பால் வார்க்கப் போகிறானோ!” - என்று வேதம்மா விசாரப்படுகிறார்கள், அந்த வீர இளைஞனோ, எப்போதுதான் ஜாதிப்பித்தம் ஒழியப் போகிறதோ, சமத்துவம் மலரப் போகிறதோ, சமதர்ம மணம் பரவப் போகிறதோ, என்று எண்ணி எண்ணி ஏங்கிக்கொண் டிருந்தான்.

புத்துலகக் கழகம் அவனுக்குப் பாசறையாக அமைந்தது. சாம்பசிவம் போன்ற இளைஞர் பலர், அந்தக் கழகத்தில் பணியாற்றி வந்தனர். அவர்களை ஊக்குவித்தும், ஆக்க வேலைகளுக்கு அவர்களைப் பக்குவப்படுத்திக் கொண்டு வந்தான் துரைராஜ் - சாம்பசிவத்தின் நெருங்கிய நண்பன். நல்லவர்களை நாசப்பாதைக்கு அழைத்துச் செல்கிறான் - நாட்டின் புனிதமான ஏற்பாடுகளை அழிக்கிறான் - என்று பலர் தூற்றினர், துரைராஜ் என்பவனை. ‘நமது பணி, பலன் தருகிறது. நம்மை ஊரார் கவனிக்கிறார்கள். தூற்றலின் பொருள் அதுதான்! தொடர்ந்து பணியாற்றினால், தூற்றுபவர்களே தொண்டாற்ற முன்வருவார்கள்’ - என்று துரைராஜ் சொல்வதுண்டு. ஆம்! ஆம்! என்றனர் நண்பர்கள் - சாம்பசிவம் உட்பட. ஆனால் சாம்பசிவத் துக்கு மட்டும், தன்னலம் கருதாது தூய்மையும் வாய்மையும் தழைத்திடப் பணியாற்றும் தன் நண்பனை, சிங்காரவேலர் நிந்திக்கிறார் என்பது கேட்டுக் கொதிப்பு ஏற்பட்டது. “கொம்பா முறைத்திருக்கிறது! கோடீஸ்வரனாகக்கூட இருக்கட்டும் அந்தச் சிங்காரவேலர் - கொள்கையை எதிர்க்கட்டும் நாணயமாக - இழி மொழி பேசுவதா எங்கள் கழகத்தைப் பற்றி - இதைக் கண்டிப்பாகக் கேட்டுத் தீரவேண்டும் என்று சினந்தெழுந்தான் - இளம் கன்று! - எனவே சிங்காரவேலரைக் காணச்சென்றான்.

அவன் எரிமலையைக் காணச் சென்றான், குளிர் நிலவைக் கண்டான்!

தந்தையின் போக்கு என்ன என்பது தெரியும் சந்திராவுக்கு - அவள் மனமோ, முற்போக்குக் கருத்துகள் பூத்திடும் பூங்கா.

தாயிழந்த சந்திரா, நகரில் தன் அத்தை வீட்டில் வளர்ந்து வந்தாள் - அங்கு நல்ல சூழ்நிலை - நற்கருத்துகள் அவளிடம் உறவாடின. தந்தையின் பணத்தாசை, அதைப் பாதுகாக்க அவர் கொண்டிருந்த வைதீகக் கோலம், அதைக்கண்டு மக்கள் மயங்கிடும் தன்மை, எல்லாம் அவளுக்குத் தெரியும்.

அவள் அப்படிப்பட்டவள் என்பது, சாம்பசிவத்துக்கு எப்படித் தெரியும்!

அவள், தன்னை அவன் சரியாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, எதிர்பாராமல் ஏற்பட்ட சந்திப்பின் போதே, அவனைச் சில கேள்விகள் கேட்டாள் - பெண்களுக்கே உரிய சாமர்த்தியத்தின் மூலம், தன் நிலையை அவனுக்கு உணரத்த!

சேற்றிலே செந்தாமரை இருந்தால் என்ன செய்வீர் என்று கேட்டாள் - சேற்றிலே இருந்தால் என்ன! பறித்து வரத்தான் வேண்டும் என்று பளிச்செனப் பதிலளித்தான் சாம்பசிவம்.

பாவை மகிழ்ந்தாள். மற்றோர் கேள்விக் கணையை ஏவினாள்.

“வண்டு கொட்டுமே என்று பயந்தால், தேன் கிட்டுமா!” - என்றாள்.

காதல் வயத்தனான சாம்பவசிவம், வண்டுக்குவிரண்டு விடுவதா! - என்று வீரமாகப் பதிலளித்தான். இனிப் பயமில்லை என்று எண்ணிக் கொண்ட ஏந்திழை கூறினாள், “நான் சேற்றி லிருக்கும் செந்தாமரை! சிங்காரவேலர் மகள்!” என்றும்.

சாம்பசிவனுக்கோ, ஆயிரம் தேள் கொட்டுவது போலாகி விட்டது - ஆபத்து! பேராபத்து! இந்த அணங்கிகளிடம் காதல் கொண்டால், கொள்கை மாண்டுவிடும் என்று அஞ்சினான் - காதலைக் கடிந்து கொண்டான் - விரட்டி விட நினைத்தான்! அனுபவமற்றவன்!!

வாஞ்சிநாத சாஸ்திரி, வயோதிகர் - இளமையும் எழிலும் குலுங்கும் லலிதா அவர் மனைவி - இரண்டாந்தாரம்!

கோவில் வருமானம் - ஊரார் தரும் தட்சணை, சன்மானம், இவற்றுடன், செல்வச் சீமான்களின் தயவு - இவ்வளவு இருக்கும் போது இரண்டாந்தாரம், ஏன் கிடைக்காமற் போகிறது, ஐயருடைய கோலம் அருவருப்பைத் தருவதுதான், ஆனால் அழகான சிறு மாளிகை, அந்தஸ்து அளிக்கும் செல்வம், இவற்றைப்பெற, லலிதா விரும்பினாள் - பெற்றாள். இவற்றைப் பெற்றால் போதுமா - எதுவும் அந்த இன்பத்துக்கு ஈடாகுமா - வயோதிக வாஞ்சிநாதரிடம் அவள் பெறக்கூடியதல் லவே அந்த இன்பம், என்று, விஷயமறியாதார் பேசினர். லலிதாவுக்கு வரதன் கிடைத்தான் - ஐயர் மாளிகையிலேயே - அவன் அவர் மருமான் “அடிக்கடி வீட்டுக்கு வருவான் போவான்! நல்ல பயல்!” - என்பார் வாஞ்சி.

யார்டா அது வரதனா - என்று கேட்பார் வாஞ்சி - கண் சிறிது மங்கல் - பருவக் கோளாறு.

ஆமாம் - என்று வரதன் பதிலளித்தபடி, லலிதாவைப் பார்ப்பான் - எப்படி என்கிறீர்களா? எப்படிப் பார்க்க வேண்டுமோ, அப்படி!! அவள், “ஆமாம் கதை அளந்துண்டு காலத்தை ஓட்டிண்டு இருக்கீறே, கந்தப்பன் வீட்டு சிரார்த்தம் போகணும்னு சொன்னீரே -” என்று கூறி, ஐயரை விரட்டுவாள்! ஐயர் பாதுகாப்புக்காக, “வாயேண்டா வரதா! போயிட்டு வருவோம்” என்று அவனை அழைப்பார்! அவளுக்கு அந்த ஆபத்தையும் தடுத்துக்கொள்ளத் தெரியும் - “டேய், அப்பா! வராதா! மூணுநாளாச் சொல்றனே, முந்திரிப்பழம் பறிச்சிண்டு வான்னு, ஆகட்டும் ஆகட்டும்னு சொல்லி ஆசை மாட்டிண்டேதானே வர்ரே...” என்று துவக்குவாள், “இன்னக்கிக் கட்டாயம் ஆகட்டும் மாமி!” என்பான் வரதன்.

“ஏண்டா, இன்னமும் பொய் பேசறே, இப்ப நீ அவர் கூடப்போனா, நேக்கு, முந்திரிப்பழம் பறிச்சுத் தரப்போறது ஏது -” என்பாள்.

“சரி - மாமா - இதோ நான் போய், மாமிக்குப் பழம் பறிச்சிண்டு வந்துடறேன் -” என்று அவன் கிளம்புவான்.

அவர் தனியாக - சந்தேகத்தையும் சஞ்சலத்தையும் சுமந்து கொண்டு! சிரார்த்தம், கவனிக்கச் செல்வார்! வெற்றிப் புன்னகையுடன் கதவைத் தாளிட்டுக் கொள்வாள் லலிதா! முந்திரி! கமலா! ஆப்பில்! மா! பலா! வாழை! பழம் எல்லாம் கொண்டு வந்து குவிப்பான் வர தன்!! ஊஞ்சல் பாடும்! இன்பம், குதூகலிக்கும்! குமாரிக்கு விருந்து!! அங்கே, வேதசால இதிகாசாதி மேன்மையை மகிமையையும் ஆளக்கிக் கொண்டிருப்பார் - இங்கு வரதன் மெல்லிய குரலில்-.

“புது இன்பம் எனக்கு மிக தந்தவளே! கண்ணே! பூலோக மதைச் சொர்க்கம் ஆக்கினயே!! என்று பாடுவான்! அவள் அவனுடைய பாடலையும் ரசித்தாள் ஓரளவுக்குத்தான் - ஐயர் வருகிற வரையில் ஆலாபனம் கேட்டுக் கொண்டே இருக்கவா சம்மதம் இருக்கும்!

வரதன், புத்துலகக் கழகத்தில் புகுந்தான், புதியகொள்கை கள் தனக்கும் உடன்பாடுதான் என்று புளுகிவிட்டு! - ‘லலிதபவனம்’ அவனுக்கு விருந்து மண்டபம் - புத்துலகக் கழகம் அவனுக்குப் பொழுது போக்குமிடம்!!

கொள்கை பேசுவது மட்டும் கூடாது - செயலில் காட்ட வேண்டும் என்ற கட்டம் பிறந்தது. சாம்பசிவம், ‘சரி’ என்றான்! தன் வீட்டில் அப்பாவின் ‘திவசம்’ வருகிறது - அதற்குப் புரோ கிதர் வருவார் - அவரை விரட்டப் போகிறேன், என்று சூள் உரைத்தான். வரதன் வெகுண்டெழுந்தான் - அது அடாத காரியம் என்றான்! என்ன சொல்லுவாள் லலிதா! ஊஞ்சலி லிருந்து ஒரே அடியாகக் கீழே உருட்டியல்லவா விடுவாள்! புத்துலகக் கழகத்திலிருந்து ராஜினாமாச் செய்தான். ஒழிந்தது ஒரு பீடை என்று கூறினான் சாம்பசிவம். வாஞ்சிநாதர் வழக்கப்படி வந்தார், ‘திவச’ காரியத்துக்கு. சாம்பசிவனும் நண்பர்களும் விரட்டினர், வேதம்மாள் பதைபதைத்தாள், ஐயர் ஐதீகத்தை அழியவிடமாட்டேன் என்று ஆர்ப்பரித்தார், அடிதடியில் முடிந்தது சம்பவம் - போலீஸ் நுழைந்தது, சாம்பசிவமும் நண்பர்களும், சிறையில் தள்ளப்பட்டனர் - வாஞ்சிநாதர் வெற்றிச் செய்தியை லலிதாவிடம் கூற ஓடோடிச் சென்றார், அவள் “நேக்குத் தெரியுமே - வரதன் சொன்னான்” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு ‘ஸ்நானம்’ செய்யச் சென்றாள்.

‘என்ன பண்றது உடம்பை! என்னமோ போலிருக்கே” என்று அன்பாகக் கேட்கிறார் வாஞ்சிநாதர்.

“ஒண்ணுமில்லையே - எப்பவும் இருக்கற மாதிரியாத்தான் இருக்கறேன்” என்கிறாள் லலிதா.

“இல்லையே! என்னமோ ஒரு மாதிரியா, ஆயாசமா இருக்கிறது போலத் தோண்றது” என்கிறார். ஐயர்,

“ஆயாசமாத்தான் இருக்கு - அதுக்கு என்ன செய்யணும் என்கிறீர் -” என்று, வெடுக்கெனக் கூறிவிட்டு, வாஞ்சிநாதரின் உள்ளத்தில் கிளம்பிய கோபத்தை, ஒரு சிறு கண்வெட்டால் போக்கிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

‘விஷயம்’ பிறகு ஐயரவாளுக்குத் தெரிந்தது! தெரிந்து? தலை தலையென்று அடித்துக் கொண்டார். கொன்றுவிடுகிறேன் என்று கூறினார். குலத்துரோகி! நீ நாசமாப் போக! என்று வரதனைச் சபித்தார்.

கூக்குரல் கேட்டு, தெருவோடு போகிறவர்கள் உள்ளே நுழைந்து என்ன சேதி? என்று கூடக் கேட்டனர். என்ன சொல்லுவார்!

“உங்களுக்குக் கோடி புண்ணியம், போங்க வெளியே” என்றார் அவர்.

“அவருக்கு இப்படி அடிக்கடி காக்கா வலி வரும் - கூவுவர் - கொஞ்ச நேரத்திலே சரியாப்போகும் - நீங்க போங்கய்யா” என்று அவள் அமைதியாகச் சொன்னாள். ஐயர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாகத் தாவினார். அவள்’ “இப்படி எல்லாம் கூவிண்டிருந்தா, நான் பொறந்தாத்துக்குப் போறேன்” என்றாள், அவர் பெட்டிப் பாம்பானார்.

வீட்டிலேதான் பெட்டிப் பாம்பு! சிங்காரவேலர் மாளிகையிலே, அவர் சீறினார் - எப்படியாவது, புத்துலகக் கழகத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று. அதற்காகக் கோவிலிலே, முதலியாரும், ஐயரும், பிரமுகர்கள் சிலருமாகச் சேர்ந்து மந்திராலோசனை நடத்தினர். இது தெரிந்த துரைராஜ், மாறுவேட மணிந்து சென்று, அவர்களுடன் உறவாடினான். ஒட்டி உலர்ந்துபோன ஒரு பிச்சைக்காரன் இவ்வளவு தர்மப் பிரபுக்கள் இருக்கிறார்களே ஆளுக்கு ஒரு காலணா கொடுத்தால், தன் பசி நோயைத் தீர்த்துக்கொள்ளலாமே என்று எண்ணி, அவர்களை அணுகினான் விரட்டினார் முதலியார்! விதி! விதி! என்று காரணம் காட்டினர் கனதனவான்கள். கண்றாவியா இருக்கு இதுகளைப் பார்த்தால் - ஜெர்மனியிலே இப்படிப் பட்டதுகளைச் சுட்டுத்தள்ளி விடுவாளாம் - என்று கொடூரமாகக் கூறினார் வாஞ்சி - துரைராஜ் துடிதுடித்தான். தன்னை மறந்தான், மடமடவென்று பேசலானான்.

என்ன கன்னெஞ்சமய்யா உமக்கு!

அந்த ஏழையும் மனிதன் தானே! உம்மைப் போல!

அன்பே சிவம், சிவமே அன்பு என்று பேசுகிறீர்கள் - ஏழையைக் கண்டால் சுட்டுத்தள்ள வேண்டும் என்கிறீரே! அந்த ஏழைக்கும் ஒரு காலம் வரும்!

அந்த உலர்ந்த உதடுகளில் இருந்தும் உக்கிரம் பிறக்கும், கண்கள் கனலைக் கக்கும்!

புழுவும் போரிடும்!

அப்போது உங்கள் செல்வம், அந்தஸ்து, சாஸ்திரம், யாவும் மண்ணோடு மண்ணாய்ப் போகும்!

துரைராஜ் பேசிவிட்டான் - அவர்கள் புரிந்துகொண்டனர்- பிடித்துக் கொண்டனர் - வேஷம் கலைத்துவிட்டனர் - கம்பத்தில் பிடித்துக் கட்டி, கோவில் திருவாபரணம் ஒன்றை அவன் கையிலே கொடுத்துவிட்டு, போலீசுக்கு ஆள் அனுப்பிவிட்டனர்! துரைராஜ் கள்ளன் ஆக்கப்பட்டான்! காதகர்களின் போக்கைக் கண்டு மனம் குமுறிற்று - நீதி, அன்பு, அறம், இவற்றை எடுத்து வீசினான், தூணோடு சேர்த்துக் கட்டிவிட்டனர்.

காவலுக்கு ஐயர்! மற்றவர்கள் ‘ஆள் அம்பு’ தேடச் சென்றனர்.

முதல் தாக்குதல் - ஏதேதோ வகையான அச்சம் உள்ளத் திலே நச்சரித்தது!

எப்படியாவது, இப்போது தப்பித்துக் கொள்ள வேண்டும் - கள்ளன் என்று கயவர்கள் குற்றம் சுமத்திச் சிறையிலே தள்ளிவிட்டால் கழகத்தவருக்கே இழிவு.

என்ன செய்தாவது, இந்த இக்கட்டிலிருந்து தப்பிவிட வேண்டும், என்று எண்ணினான். எதையும் தாங்கும் பக்குவத்தை இதயம் பெறவில்லை!

களவாடியதாகச் சொல்லித் தன்னிடம் திணிக்கப்பட்ட திருவாபரணத்தை ஐயருக்குக் கொடுத்துவிட்டு, இனி ஜென்ம ஜென்மத்துக்கும் பகவத் நிந்தனையோ பாகவத அபசாரமோ, பிராமண தூஷணையோ செய்வதில்லை, எங்காவது ரங்கோன், பினாங்கு ஓடி விடுகிறேன், என்று கூறினான்; கட்டுகளை அவிழ்த்தார் ஐயர், ஓடிவிட்டான். அவன் நெடுந்தூரம் சென்றிருப்பான் என்று தெரிந்தபிறகு, ஐயர், “ஐயயோ! முதலியாரே! யாரங்கே! ஓடி விட்டானே” என்று கூவினாள்; அழுதார். ஆள் அம்புடன் வந்த முதலியாரிடம், “பய சிம்மம் போலக் கர்ஜித்துண்டு, ஒரு திமிரு திமிரினான் பாருங்கோ, கட்டியிருந்த கயிறு பொடி பொடியாயிட்டுது, பிடிக்கலாம்னு கிட்டெப் போனேன், விட்டான் ஓர் அறையும் குத்தும், நான் என்னசெய்ய முடியும், புலிப்போலப் பாய்ந்தான், ஒடியே போயிட்டான்... இந்தப் பக்கமா...” என்று, துரைராஜ் ஓடின தற்கு எதிர்ப்பக்கத்தைக் காட்டினார். மடியிலே, மாங்காய் மாலை! கண்களிலே தண்ணீர்கூட! தண்ணீருக்குப் பின்னாலே குறும்பு கூத்தாடிற்று, வஞ்சனை உள்ளே வெற்றிக் களையோடு இருந்தது. முதலியார், ஐயர் காட்டிய திக்கிலே ஆட்களை அனுப்பினார். எப்படியும் போலீஸ் பிடித்துவிடும், பத்து வருடத் தண்டனையாவது கிடைக்கும், கோவிலில் புகுந்து கொள்ளை யடிப்பது ‘மகாப்பெரிய பாபம்’ என்றார் முதலியார் சந்தேகமா அதற்கு என்று ஆமோதித்தனர் கனதனவான்கள், சர்வேஸ்வரா! எல்லாம் உன்னோட சோதனை என்று பக்தி பேசினார் வாஞ்சிநாதர்.

ஊரே திடுக்கிட்டுப் போயிற்று, சேதிகேட்டு.

ஆள், நல்லவனாப்பா - ஏதோ ஆச்சார அனுஷ்டானங்களைக் குறை சொல்லிக்கொண்டு இருப்பானே தவிர, பொய்புரட்டு, சூதுவாது, எதுவும் கிடையாதே. அவன் கோவிலில் புகுந்து களவாடினான் என்றால் நம்ப முடியவில்லையே என்று சிலர், கோவில் என்றால்தான் அந்தப் பயல் வைதீகக் கோட்டை, பார்ப்பனீயப் பாசறை என்றெல்லாம் பழிப்பானே, செய்திருப்பான், செய்திருப்பான் என்று சிலர், எப்போது பாவமில்லே புண்ணியமில்லே, மோட்சமாவது நரகமாவது, இதை எல்லாம் பார்த்தது யார் என்றெல்லாம் துடுக்குத்தனமாகப் பேசிக்கொண் டிருந்தானோ அப்போதே எனக்குத் தெரியும், பய, இப்படிப் பட்ட அக்கிரமம் செய்யப் போகிறான் என்பது; இப்படிச் சிலர். புத்துலகக் கழகம் எள்ளி நகையாடப்பட்டது.

“ஏண்டா தம்பீ டோய்! நீ எந்தக் கோவிலைக் பார்த்து வைச்சிருக்கே?” என்று கேலி பேசலாயினர் புத்துலகக் கழகத் தோழர்களைக் கண்டால். கொள்கைப்பற்று நல்ல அளவில் ஏற்படாத நிலையிலிருந்தவர்கள் பலர், புத்துலகக் கழகத்திலிருந்து விலகிக் கொண்டனர்! சாம்பசிவம், செய்தி கிடைத்ததும், பதறினான். துரைராஜ் ஒருபோதும் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்திருக்கவே முடியாது. இதில் ஏதோ சூது இருக்க வேண்டும்; கழகத்தை அழித்தொழிக்க இதைச் சந்தர்ப்பமாகச் சிலர் பயன் படுத்துவர், இது சகஜம். ஆனால் நான் கழகப் பணியை நிறுத்த மாட்டேன் - நிறுத்துவது கூடாது, என்று உறுதி கொண்டான், எப்போதும் போலப் பணியாற்றி வரலானான்.

துரைராஜ், ரங்கோனும் போகவில்லை, சிங்கப்பூருக்கும் செல்லவில்லை. தலைமறைவாகவே உலவலானாள். உள்ளத்தில் வேதனையுடன். தன்னைத்தானே நொந்து கொண்டான். எவ்வளவு கோழைத்தனம்! எத்தகைய பைத்தியக்காரத்தனம்! எத்தகைய பைத்தியக்காரத்தனம்! ஏன் நான் ஓடி வர வேண்டும்! ஐயோ! கொள்கையைப் பொறிபறக்கப் பேசக் கற்றுக் கொண்டேனே தவிர உலக அனுபவம் இல்லையே எனக்கு. கள்ளனென்று கூறித் தண்டித்துக் கொடுஞ் சிறையில் தள்ளி விடுவார்களே என்ற அச்சம் கொண்டேன். இதோ, சிறையைவிடக் கொடுமையை அல்லவா அனுபவிக் கிறேன். வழக்கு மன்றத்திலே வாதாடி இருக்கலாம்! நீதிக்காகப் பரிந்து பேசச் சிலராவது முன்வந்திருப்பர்! நான் ஓர் கோழை; அதிலும் ஏமாளி! ஓடிவிட்டால், பழியிலிருந்து தப்பித்துக் கொண்டேன். பழி என்னைப் பற்றிக்கொண்டதே. குற்ற மற்றவனானால், ஏன் ஓடி விட்டான்? ஏன் தலைமறைவாகத் திரிகிறான்? என்று கேட்கிறார்கள் - காதிலே விழத்தான் செய்கிறது. முதல் தாக்குதல், என் மூளையைக் குழப்பிவிட்டது. என் போக்கால், என் நண்பர்களுக்கு, கழகத்துக்கு எத்துணை இழிவும் பழியும் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது? என்ன செய்வேன்? என்றெல்லாம் எண்ணி எண்ணி மனம் குமுறினான், உருமாறிப்
போனான். ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊர், அங்கிருந்து வேறோர் இடம் இப்படி, அலைந்தபடி இருந்தான், அவன் சிறுவயதிலே மலேயாவிலே இருந்துவிட்டு, தமிழகத்துக்கு வந்து சில ஆண்டுகளே ஆயிருந்தன, எனவே அவனைச் சுலபத்திலே அடையாளம் கண்டு பிடிக்க அதிகமான வர்கள் இல்லை. அந்த ஒரு வாய்ப்பினால், துரைராஜ், தப்பித்திரிய முடிந்தது. மனமோ சுட்டவண்ணமிருந்தது.

புலன் விசாரித்து விசாரித்துப் போலீசும் ஓய்ந்து போயிற்று.

கோவிலுக்குப் பக்த சிகாமணி ஒருவர், புதிதாக மாங்காய் மாலை செய்து சமர்ப்பித்துவிட்டார்.
பழய மாங்காய்மாலையை லலிதாவுக்கும் காட்டாமல், வாஞ்சிநாதர், மறைத்து வைத்திருந்தார்.
“கோவில் திருவாபரணம்! அந்தப் பயலைப் பாபம் சும்மாவிடாது” என்பார் வாஞ்சிநாதர்.

“ஆமாம்-ஆமாம் -” என்று ஆமோதிப்பார் சிங்காரவேலர்.

“பயல், உருக்கி விற்று விட்டிருப்பான்” என்பார் பிரமுகர்.

“வாங்குபவனுடைய குலத்தையே நாசம் செய்துவிடாதோ?” என்று ஆவேசமாகப் பேசுவார் சிங்காரவேலர். ஐயருக்குத் தெரியும், எத்தனை கோவில் திருவாபரணங்களை முதலியார், உருக்கி எடுத்துச் சீமானானார் என்பது! வெளியே சொல்வதில்லை - மனத்திலேயே போட்டு வைத்திருந்தார்.

முதலியாரிடம், வாஞ்சிநாதர் பாசமும் நேசமும் கொண்டிருந்தார் என்றாலும், அவருடைய அட்டகாசம், அந்தஸ்து, இவை பல சமயங்களில் ஐயருக்கு அருவருப்பு தரும். தன்னை, மரியாதையாக சாமீ! சாஸ்திரிகளே! ஐயரவாள்! என்று முதலியார் அழைப்பார். ஆனால், தன் எதிரிலேயே, வேறு பிராமணர்களைப் பற்றிப் பேசும்போது பாப்பான் - என்று கேலியாகத்தான் பேசுவார். இது வாஞ்சிநாதருக்குக் கோபமூட்டும்; வெளியே பல்லைக் காட்டுவார், மனத்துக்குள், ‘திமிர்’ என்று சபிப்பார்.

“பணம் எப்படியோ சேர்ந்துவிட்டது, நிலம் இருக்கு நேர்த்தியான நஞ்சை, செல்வம் ஏராளமாயிருக்கு, ஊரை அடிச்சி உலையிலே போட்டுண்டான், சீமானாயிட்டான். யார் அவனோட செல்வம் எப்படி எப்படிக் கிடைச்சுதுன்னா கேட்க முடியும், தலைகால் தெரியாமல் ஆடுகிறான். உம்! மன்னாதி மன்னர்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாருக்கா, இவன் எம்மாத்திரம்” என்று வாஞ்சிநாதர், கூறலானார், அந்தரங்க நண்பர்களிடம். ஐயருடைய கோபத்துக்குக் காரணம் இல்லாமலில்லை - முதலியார் சமயம் கிடைக்கும்போதெல்லாம் மறைமுகமாக, லலிதா-வரதன் லீலைகள்பற்றிக் கேலிசெய்து வந்தார்!
கேலி, கண்டனம் எனும் கட்டங்களைத் தாண்டிவிட்ட காரணத்தால், லலிதா வரதன் காதலாட்டம் தங்கு தடையின்றி வளர்ந்து, இருவருக்கும் சலிப்புதரும் நிலைக்குச் சென்று, சரிவதற்கான கட்டத்தில் இருந்து வந்தது.

வறுமையர் உலகிலே கிடந்தான் துரைராஜ்.

கொள்கை பரப்பிக்கொண்டிருந்தான் சாம்பசிவம்.

காதல் கை கூடாததால் கலக்கமடைந்து கிடந்தாள் கட்டழகி சந்திரா.

பாட்டாளிகளிடம் பழகிய துரைராஜ் - அவர்களிடம் கிளர்ச்சி மனப்பான்மையை மூட்டுவான் - முதலாளிக்கு விஷயம் எட்டும், உடனே வேலையை விட்டு விரட்டப்படுவான். இங்ஙனம், கயிறு அறுந்த காற்றாடியானான் துரைராஜ். ஆனால் கழகம் - கழகம் - என்று மட்டும் அடிக்கடி எண்ணம் குடையும், ஒரு முறைதான் தவறி விட்டோம், வைதீகமும் பணக்காரத் தன்மையும் ஒன்றுகூடி, வாஞ்சிநாதரும் சிங்காரவேலரும் கூட்டு சேர்ந்து நம்மை இந்தக் கதிக்குக் கொண்டு வந்து விட்டனர். அவர்கள் மீது பழி தீர்த்துக்கொள்ள மட்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்... எண்ணும்போதே இனிக்கிறதே... நிறைவேறுமா...! - என்று எண்ணுவான், வறண்ட சிரிப்புடன் வழி நடப்பான்.

சிங்காரவேலர் போன்ற சீமான்களின் ஆதரவினால் தானே, வாஞ்சிநாதர் போன்றாரின் வஞ்சகத் திட்டம் வளர்ச்சி அடைகிறது... சிங்காரவேலர்கள் திருந்தினால்... திருத்தப் பட்டால்... வாஞ்சிநாதர்களின் வஞ்சகம் அவர்களுக்கு விளங்கி விட்டால்... என்று யோசிப்பான், கவலை குறையும்.

சிங்காரவேலர் போன்ற சீமான்களும் வாஞ்சிநாதர் போன்ற வஞ்சக வைதீகர்களும் சமுதாயத்தைச் சீரழிக்கிறார்கள். அவர்களின் புரட்டுகளை அம்பலப்படுத்த, அவர்களின் எதிர்ப்பு களைச் சமாளிக்க, வீண்பழிகள் சுமத்தப்பட்டால் அவற்றி லிருந்தும் விடுபட, நமக்குப் பணபலம் வேண்டும்! ஆமாம்! பணம் இருந்தால், அந்தப் பாதகர்களின் கொட்டத்தை அடைக்கலாம்!! முன்புகூட நான் அதற்கேற்றவனாக இல்லை - கோழைத்தனம் குடிகொண்டிருந்தது - இப்போது, வறுமையில் உழன்று அனுபவம் பெற்றிருக்கிறேன். பசி பட்டினி பழக்கமாகி விட்டது. கயவரின் கத்திக்குத்துக்கூட எனக்குக் கிலியூட்டாது, இந்த நிலையில், என்னால், சிங்கார வேலர்களை எதிர்த்து நிற்க முடியும்... எதிர்த்து நிற்க முடியும்... ஆனால் பணம் வேண்டும்!

எந்தச் சிங்காரவேலர் வாஞ்சிநாதர் கீறிய கோட்டினைத் தாண்டாமல் பயபக்தி விசுவாசத்துடன் நடந்து வருகிறாரோ, அவரே, வாஞ்சிநாதரின் வஞ்சகத்தை அறியும் நாள் வரவேண்டும் - அறியும்படி செய்ய வேண்டும்... அந்த நாள் தான், என் வெற்றி நாள்!

எந்தக் கழகத்துக்குக் களங்கம் ஏற்படும்படி நடந்துகொண்டு விட்டேனோ, அந்தக் கழகத்தின் பணி, முட்டின்றி நடந்திட என்னாலானதைச் செய்ய வேண்டும்! பணம் தாராளமாகக் கிடைத்தால் கழகத்தின் பணி பன்மடங்கு வளரும்! எத்தர்களின் புரட்டுகளை அம்பலப்படுத்தலாம்! ஏழையின் பக்கம் வாதாடலாம்! ஏற்றம் தரும் செயல் எவ்வளவோ செய்யலாம் பணபலம் கிடைத்தால்....!

இங்ஙனம் எண்ணுவான், பஞ்சையாகிவிட்ட துரைராஜ்!

“உம்மோட பணத்தைக் கட்டிக் கொண்டு அழும்; நான் பொறந்தாத்துக்குப் போறேன்; திரும்பிவரச் சொன்னா... வாரேன்” என்று கூறி விட்டு லலிதா கிளம்பிவிட்டாள்.

“நாலு பணம் காசு சேர்த்தாத் தாண்டியம்மா, நானும் ஊரிலே மதிப்போடு உலர்த்த முடியும். உன் பின்னோடு தாளம் தட்டிண்டு நானும் கிளம்பிவிட்டா நன்னாயிருக்குமா, நீ, போய்விட்டு வா. உடம்புகூட ரொம்ப இளைத்திருக்கு; ஓய்வா, நிம்மதியா, ஒரு வருஷமாவது போய் இரு; நான் மாதத்துக்கொரு முறை வந்து போவேன், சந்தேகப்படாதே” என்று வரதன் சமாதானம் கூறிவிட்டான்.