அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

சிங்களச் சீமாட்டி
1

“நாகரிக நாட்கள் என நீ கூறுகிறாய் பெண்ணே! இன்றுங்கூட நடையிலே, உடையிலே, நாகரிகத்தைக் காண்கிறோமே தவிர, எண்ணத்திலே பழைய விஷயம் இருந்தபடிதான் இருக்கிறது. உன்னை வலைபோட்டுப் பிடிக்க விரும்பும் அந்தச் சொகுசுக்கார சங்கரன் கூட நாகரிக நாயகனாக நடிக்கிறானே தவிர, உள்ளம் பழைய எண்ணம் நிரம்பித்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று மங்கம்மாள் கூறினாள்.

மலர்க்கொடி நகைத்தாள்! அவள் சிரித்தபோதுதான் தெரிந்தது, பற்கள் எப்படி இருந்தால் பாவையருக்கு அழகு தரும் என்பது.

சிவந்த இரு அதரங்களையும் கொண்டு மலர்க்கொடி தனது முத்துப் பற்களை மூடி வைத்திருந்தாள். உண்மைதானே! விலையுயர்ந்த வஸ்துக்களைச் சற்றுப் பத்திரமாக வைத்துக் கொண்டுதானே இருக்க வேண்டும். வைர மோதிரத்தை வெல்வெட்டுப் பெட்டியிலும், வரகரிசியை வாசலிலும்தானே போட்டு வைப்பார்கள்.

மலர்க்கொடியின் அங்கங்கள் ஒன்றை ஒன்று சண்டைக்கு இழுத்தபடி இருந்தன. கண் சொல்லிற்று “நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் பார். கடல் அலைபோல நான் பாய்வதை நோக்கு. அந்த மோகன மிரட்சியைக் காணு” என்று. புருவங்கள் “சும்மா கிட கண்ணே! நான் மதனன் வில்போல வளைந்து கொடுக்கும் காட்சியன்றோ உன் அழகை எடுத்துக் காட்டுகிறது! நானில்லாவிட்டால் நீ எங்கே, தங்கப் பெட்டிக்குத் தகதகப்பு. வைரத்திலே உள்ள ஒளி - இவைபோலக் கண்ணின் வனப்புக்கு நானன்றோ காரணம்” என்று சொல்லிற்று. நெற்றி சும்மா இருந்ததா? நான் பரந்து பளபளத்து பேழை என இல்லாவிடில், இந்தப் புருவமோ, கண்களோ எங்கு தங்கும் என்று வினவிற்று. “என்னைக் கண்டு காதகரும் காமுறும் அளவு உள்ளேன். நானின்றி நல்ல கண்ணோ, புருவமோ--, நெற்றியோ ஏது” என்று கன்னங்கள் கொஞ்சின. ‘மன்னனுக்கு முடிபோல, மாலைக்கு மணம் போல நான் இருக்கும் வனப்பு என்ன பாருங்கள்” என்று கூந்தல் கூவிற்று. இப்படி ஒவ்வோர் அங்கமும் ஒன்றை ஒன்று வம்புக்கிழுக்கும் அளவு வனப்புள்ள மங்கை, மலர்க்கொடி.

எனவே அவளால், மனத்துக்கும் வாலிபருக்கும் நேரிட்ட போராட்டங்களோ இவ்வளவு அவ்வளவல்ல.

எத்தனையோ அதிகாரிகள் தமது பீடத்திலமர்ந்து இந்தப் பெண்ணை எண்ணியபடி, தமது கடமையை மறந்ததுண்டு. எத்தனையோ இளைஞர்கள், இவளன்றோ வாழ்க்கையின் வழிகாட்டி, இன்பத்தின் இல்லம், இவளன்றி நாம் ஏன் இருப்பது உலகில்” என்று எண்ணி ஏங்கியதுண்டு.

மலர்க்கொடியின் மனம், பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு, சங்கரன் மீது சென்றது. நினைத்தது அவனையே மணப்பது என்று அவளும் எண்ணினாள். அவள் எண்ணத்தை அறிந்ததும் அவன் துள்ளினான். படிப்பு முடிந்து பரீட்சை தேறியதும் மணம். எனவே நாளை எண்ணிக் கொண்டும், ஏட்டைத் தள்ளிக் கொண்டும், “என்று வரும் அந்நாள்?” என்று மந்திரம் ஓதியபடி இருந்தாள். மங்கம்மாளுக்கு, மலர்க்கொடிதான் செல்வம். அந்தப் பூஞ்சோலையில் விளைந்தது அது ஒன்றுதான்! ஒன்றே போதுமே. அது ஒப்பற்ற கொடியன்றோ!

மங்கம்மாளுக்கு நவநாகரிகத்திலே விருப்பம். அதனுடைய மேற்பூக்சுக்களில் மட்டுமல்ல. கருத்துக்களில் வேட்கை. தன் வாழ்க்கையிலே நாகரிகக் கோட்பாடுகளைப் புகுத்தி வாழ்ந்தனர். மலர்க்கொடியும் அப்படியே.

சங்கரன் பார்வைக்கும், பேசும்போதும் நாகரிக புருஷனாகவே காணப்பட்டான். ஆனால் உள்ளத்திலே வைதீகம் குடிகொண்டிருக்கிறது என்பது மங்கம்மாள் கருத்து. அதனையே தன் மகளுக்கும் எடுத்துக் கூறினாள். மலர்க்கொடி அதனை நம்பவில்லை. நம்பாதுதான் நகைத்தாள்.

“சிரிக்கிறாயா? ஏனோ?” என்று மங்கம்மாள் கேட்டாள்.

“இல்லையம்மா! அவனைக் கூட சந்தேகிக்கிறாயே என்று தான் சிரித்தேன். நேற்று கூட அவர் தமது கல்லூரி மாணவர் சங்கத்திலே “மூடநம்பிக்கையும் முற்போக்கும்” என்பதைப் பற்றி மிகத் தீவிரமாகப் பேசினாராம்” என்றாள் மலர்க்கொடி.

“பேசலாம். அதை யாரம்மா இல்லை என்று சொன்னது? காரியத்திலே காட்ட வேண்டுமே. அதுதான் தேவை. உங்கள் பள்ளி வாத்தியாருக்குக் கிரகணம் எப்படி உண்டாகிறது என்பது நன்றாகத் தெரியும். அதை உங்களுக்குச் சொல்லியும் கொடுக்கிறார். ஆனால் கிரகணத்தன்று அவர் எங்கே இருக்கிறார்” என்று மங்கம்மாள் கூறினாள். மலர்க்கொடி “ஆமாம்! அர்த்த நாரீசுவர ஐயர் அவசியம் குளத்தங்கரைக்குத்தான் செல்வார். மறக்கமாட்டார்” என்றாள்.

“அதைத்தான் சொல்கிறேன் நானும்” என்றாள் மங்கம்மாள்.
* * *

பாழாய்ப் போன சூரியன் ஏன் இப்படிப் பாடுபடுத்து கிறானோ தெரியவில்லையே. நெருப்பிலே போட்டு வாட்டுவதைப் போல வாட்டிவிடுகிறான். கால் கொப்பளித்து விடும்போல இருக்கிறது என்று காலை முதல் மாலை வரை கூறுபவரிடம், அதே சூரியன் மாலையிலே மறைகிற நேரத்திலே ஓர் அரைமணி நேரம், அளவு கடந்த புகழ்ச்சியைப் பெற்று விடுகிறது. வானத்திலே சூரியன் மறையும்போது கிளம்பும் அந்தச் செந்நிறம் எவ்வளவு சொகுசு! கண்களுக்கு அதுதரும் குளிர்ச்சி எவ்வளவு! காவியக்காரரையும் ஓவியக்காரரையும் அந்தக் காட்சி தூண்டி விடுகிறது காதலருங்கூட அவ்வேளையில் மிக ‘குஷாலாக’ இருப்பதுண்டு. “ஏண்டி மாரி, எடுத்துக்கோ கூடையை; அரிவாளைப் போட்டாயா. ஆகட்டும் புறப்படு வீட்டுக்கு” என்று கொஞ்சினபடி குப்பன் மாரியுடன் களத்தை விட்டுப் புறப்படும் நேரம்.

“அதோ பார் கோடியிலே உம்! அப்பா, வருகிறார் பார். கூப்பிடு, “அப்பா - அப்பா!” என்று தனது குழந்தையைத் தபாலாபீசாக வைத்துக் கொண்டு, வேலையினின்று விடுபட்டு வீடு திரும்பும் கணவருடன் மாதர் கொஞ்சும் வேளை.

அந்த வேளையிலே, பங்களா தோட்டத்திலே, “தம்பி! ஏன் இந்தக் கிளாஸ்கோ பிஸ்கட்டு பிடிக்கவில்லையா” என்று மங்கம்மாள் கேட்க, அதுவரை, மலர்க்கொடியின் கண்களிலே கோடிப் பொருளைக் கண்டு கண்டு களிப்படைந்து கொண்டிருந்த சங்கரன், “ஏன் பிடிக்காது! எனக்கு ரொம்ப இஷ்டமாச்சே” என்று கூறியபடி ஸ்பூனை தவறாக எடுத்து வாய்க்கு அருகில் கொண்டு போக, மலர்க்கொடி நகைக்க, மங்கம்மாள் புன்சிரிப்பு கொள்ள, சங்கரன் முகத்திலே அசடு தட்ட வீற்றிருக்கும் காட்சி காணப்பட்டது.

“மாலை நேரத்திலே தம்பி, மனது குளிர்ந்து இருக்குமல்லவா?” என்றாள் மங்கம்மாள். “மனது குளிர்ந்ததோ இல்லையோ! டீ! குளிர்ந்தே போய்விட்டது” என்றாள் மலர்க்கொடி.

“ஆமாம்! ஆமாம்!” என்று இரண்டிற்கும் பதிலளித்தான் சங்கரன். “நாளைக்கு நாம் மூவரும் நத்தம் ஜெமீன்தாரின் விருந்துக்குப் போகவேண்டும். மாலை 5 மணிக்கெல்லாம் இங்கே வந்துவிடு. காரில் மூவருமாகப் போவோம்” என்று மங்கம்மாள் கூறினாள். “சரி” என்றான் சங்கரன். பிறகு மூவருமாகப் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டனர். இரவு 7 மணிக்குக் கலைந்தனர். மறுதினம் மாலை குறிப்பிட்ட நேரத்தில் சங்கரன் வந்து சேர்ந்தான். விருந்து நடக்கும் நத்தம் ஜெமீன்தாரின் மாளிகைக்குச் சென்றனர்.

விருந்துக்கு, அநேக சீமான்களும் சீமாட்டிகளும் வந்திருந் தனர். நகை அணிந்திருக்கிறாளே அந்த அம்மைதான் அகிலாண்டேஸ்வரி. அதோ சிரிக்கிறார் பார். பல்லிலே கொஞ்சம் தங்க முலாம்கூட இருக்கிறதே, அவள் யார் தெரியுமா, அன்னம்மாள். மணபுரி ஜெமீன்தாரரின் மருமகள். அவள் கணவன் சீமைக்குப் போயிருக்கிறான். அதோ அவர்தான் வைர வியாபாரி வரதராஜ செட்டியார். அது சுபேதார் சுந்தரம் - டாக்டர் ரகுராமன் - என்று விருந்துக்கு வந்தவர்களை எல்லாம் மங்கம்மாள். வந்தவர்களும் இந்த மூவரையும் அறிந்து கொண்டு, உபசார மொழிகள் உரைத்தனர். விருந்து முடிந்து போகும் நேரத்திலே, ஒரு நடுத்தர வயதுடையவர் மங்கம்மாளை அணுகி வந்தார்.

“சௌக்கியந்தானா, சுந்தரம்! சௌந்தரவல்லி எப்படி இருக்கிறாள்” என்று மங்கம்மாள் கேட்டாள். “சுகந்தான் மங்கு! சௌந்திரம் ரங்கூனுக்குப் போனாள். அங்கு நாடகம் நடக்கிறது. முடிந்துதானே வருவாள்” என்றான் சுந்தரம். “இதுதான் என் தங்கை புருஷன் சுந்தரம்” - என்று மங்கம்மாள், அவரைச் சங்கரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். சங்கரன் கைக்குலுக்கினான். மலர்க்கொடியைச் சுந்தரம் தட்டிக் கொடுத்து, “ஏ! அப்பா இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாயா நீ” என்று கேலி செய்தான். கொஞ்ச நேரம் சென்றதும் விருந்துக்கு வந்தவர்கள் வீடு திரும்பினர். நமது கதாபத்திரங்களும் தத்தமது வீடு சென்றனர். வீட்டிற்குப் போனதும் மங்கம்மாள் மலர்க்கொடியைப் பார்த்து, “ஏன் பெண்ணே! நாம் சௌந்திரத்தைப் பற்றிப் பேசும்போது, உன் சங்கரன் முகம் எப்படி இருந்தது கவனித்தாயோ” என்று கேட்க, மலர்க்கொடி, “ஒரு மாதிரியாகத்தான் இருந்தது” என்றாள் மங்கம்மாள். “போகப் போகத் தெரியும்” என்று கூறினாள். உள்ளபடி, சௌந்திரம் என்ற நாடகக்காரியின் அக்காள் மகள் மலர்க்கொடி என்ற சேதி சங்கரனுக்கு விசாரத்தைத்தான் கிளப்பிவிட்டது. அவன் அதுவரை எண்ணிக் கொண்டிருந்தது, சிங்களச் சீமாட்டி மங்கம்மாளின் மகள் மலர்க்கொடி என்பதே. அது ஒரு நாடகக் குடும்பம் என்பது தெரியாது. சிங்கள நாட்டிலே பல ஆண்டுகள் இருந்துவிட்டு சென்னைக்கு வந்த குடும்பமென்றும், அதிலே மணம் புரிந்து கொள்வது தனக்குப் பெருமை என்றும் எண்ணினான் சங்கரன். அன்றைய விருந்தின்போதுதான் தெரிந்தது விஷயம். நாடகக்காரி சௌந்திரம்! அவள் தமக்கை மங்கம்மாள். இவளும் ஒரு நாடகக்காரிதானே. இவள் மகளா மலர்க்கொடி! ஐயோ இவளை நான் மணம் புரிந்து கொள்வதா, நாடு நகைக்காதா, கூத்தாடிச் சிறுக்கியை, கொங்கு நாட்டு வேளாளக்குடியில் பிறந்த நானா மணப்பது? என் குடிப்பெருமை என்னாவது. சீச்சி! ஐயோ! என்று விசாரப்பட்டான் சங்கரன். ஜாதி உணர்ச்சி அவனுக்கு அவ்வளவு இருந்தது.
* * *

சிங்களச் சீமாட்டி என்று பலராலும் அழைக்கப்பட்ட மங்கம்மாள் நல்ல நாயுடு வகுப்பு. சிறுவயதிலேயே விதவையாகிவிட்டாள். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மங்கம்மாளுக்குப் பாட்டிலும் நடிப்பிலும் அதிக பிரியம். பள்ளிக் கூடத்தில் நடக்கும் எந்த விழாவுக்கும் மங்காதான் பாட வேண்டும். மங்காவும் தங்குதடையின்றிப் பாடுவாள். வந்த பிரமுகரும் தட்டிக் கொடுத்துவிட்டு, ‘சாரீரம் ரொம்ப ஜோர். பாடும்போதே காது குளிருகிறது என்று சொல்லாமற் போவதில்லை. விதவையாகும் வரையிலே, மங்கம்மாள் பாடுவது கிடையாது. பாட்டு பாடினால் பதி தன்னைப் பற்றி என்ன எண்ணுகிறாரோ என்ற பயம். விதவையான பிறகு பிழைப்புக்கு வழியாகப் பாட்டுத்தான் உதவிற்று. அண்டை அயலார் வீட்டுக் குழந்தைகளுக்கு நலங்கு பாட்டு கற்றுக் கொடுப்பது, சின்ன சின்ன சிங்காரப் பாட்டு தங்கமே, தங்கம், கும்மி முதலிய பாட்டுகள் கற்றுக் கொடுத்து வந்தாள், ஒரு தினம் ஒரு வீட்டுக் குழந்தைக்கு.

“திருவெற்றியூர் தேர் வருகுது திரும்பிப் பாரடி!
கண்ணே திரும்பிப்பாரடி, உன் மடியில் இருக்கும்
மக்காச்சோளத்தைத் தின்னு பாரடி”

என்று பாட்டு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வீட்டுக்கு வந்திருந்த ஒருவர், பாட்டைக் கேட்டு சொக்கி விட்டார். பலே பேஷ் என்று கொண்டாடினார். பிறகு மெதுவாக மங்கம்மாளிடம பேச ஆரம்பித்து, கடைசியில் தமது நாடகக் கம்பெனியில் நடிகையாகச் சேர்த்துக் கொண்டார். மங்கம்மாளின் புகழ் மலேயா, சிங்கப்பூர் பூராவும் பரவிற்று. பாட்டிலும் நடிப்பிலும் இணையில்லை என்று பெயர் எடுத்தாள். மதனசுந்தரி அது மங்கம்மாளின் நாடகப்பெயர். பணமும் சேர்த்துக் கொண்டாள். பணத்துடன் பிறந்ததுதான், மலர்க்கொடி இத்தனை சேதியும் சங்கரனுக்கு முதலில் தெரியாது. சிங்கள நாட்டிலிருந்து விட்டு சென்னை திரும்பி ஒரு பிரபல குடும்பம் என்பதுதான் இவன் முதலில் கேள்விப்பட்டது. சங்கரன் பெற்றோரை இழந்த ஒரு கொங்குவேளாளன். பெருங்குடி, செல்வம் கொஞ்சம் இருந்தாலும் தனது ஜாதி உயர்விலே மட்டற்ற நம்பிக்கை உண்டு. அந்த உணர்ச்சி உள்ளத்திலே எங்கேயோ தூங்கிக் கொண்டிருந்தது. அன்று விருந்திலே மங்கம்மாள், ஒரு நாடகக்காரி என்பது தெரிந்த உடனே, உணர்ச்சி பொங்கி மேலிட்டு வெளிவந்தது.
* * *

சேற்றிலே செந்தாமரை போல, இந்த மலர்க்கொடி கடைசியில் ஒரு நாடகக்காரியின் மகளாகவா இருக்க வேண்டும்? என்னென்பேன் என் அதிர்ஷ்டத்தை? அந்தப் பேரழகியை நான் மணந்தால் ஊரார் என்னை நேரில் ஏதும் கூறாவிட்டாலும் மறைவாகவேனும் நாடகக்காரியைக் கல்யாணம் செய்து கொண்டவன் என்றுதானே தூற்றுவார்கள். நான் எங்ஙனம் அதைக்கேட்டு சகிப்பேன் - என்று எண்ணி சங்கரன் விசாரப்பட்டான். மலர்க்கொடியின் அழகு. அவள் மீது அவன் கொண்ட காதல், ‘ஜாதியாவது பாழாவது சங்கரா, அவளை நீ நேசிக்கிறாய். அவள் உன்னை நேசிக்கிறாள் - நல்ல ஜோடி. அவ்வளவுதானே கலியாணத்திலே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்’ என்று சொல்லிற்று. ‘சீச்சி! கூத்தாடி பெண்ணையா மணப்பது! கேவலமல்லவா? ஒரு மாடு வாங்கவதானாலும் எத்தனை குறிகள் பார்த்து வாங்குகிறோம்’ என்று எச்சரித்தது ஜாதி உணர்ச்சி.
எனவே, சங்கரன், மலர்க்கொடியின் புகைப்படுத்தைப் பார்ப்பதும், சிந்திப்பதுமாக ஒரு வாரங் காலந்தள்ளினான். அந்த ஒரு வாரமும் அவனுடைய முகத்தைக் காணாத மலர்க்கொடி வாடினாள். மங்கம்மாள், “என் பேச்சு சரியெனத் தோன்றுகிற தல்லவா குழந்தாய்! சங்கரன், எப்படி ஒரு டிராமாக்காரியின் பெண்ணை மணப்பது என்று எண்ணுகிறான் பார்! அவனை விட்டதா அந்தப் பழங்காலக் கொள்கை!” என்று கூறினாள்.

“இவ்வளவுதானா! நான் ஒரு நாடகக்காரியின் மகள் என்ற காரணத்திற்காக என் மீது இவர் வைத்திருந்த காதல் எப்படி மாறுவது? என் தாய் நாடக்காரி என்றதால் எனது (3-9-39இல் சங்கரன் எனும் கொங்குவேளாள இளைஞர், மலர்க்கொடி எனும் மங்கையைக் காதலிக்கிறார்.) இலட்சணத்திலே எது மாறிவிட்டது? என் உள்ளத்திலே இவர் என்ன தவறு இருப்பதாகக் கருதுகிறார். என்னே ஜாதிப்பித்து!” என்று எண்ணி எண்ணி ஏங்கினாள் மலர்க்கொடி.

ஜிலுஜிலுவென்ற காற்றும், சிறு தூறலும் இருந்தால்தானே பூஞ்சோலை பூத்துப் பூரித்து நிற்கும். அதைப்போல காதலில் சிக்குண்டவர் முன்பு காதலை ஊட்டியவர், நின்று பேசினால்தானே அவர்களுக்கு இன்பம்.

சங்கரனோ, மலர்க்கொடியின் மாளிகைக்கு வருவதில்லை. மலர்க்கொடியோ வாடி வதைபட்டாள் பாவம். சங்கரனுக்கு வருத்தந்தான். ஆனால் அவன் அதனைத் தீர்த்துக் கொள்ள வேறு மார்க்கத்தைத் தேடினான். நண்பர்களிடம் சென்று முறையிட்டான். அவர்களிலே சிலர், “ஒரு டிராமாக்காரிக்காக ஏனப்பா இப்படி ஏங்குகிறாய்” என்றும், “என்னடா பித்தனாக இருக்கிறாய்? ஆகட்டும் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லேன்! காரியம் முடியட்டுமே. பிறகு பார்த்துக் கொண்டால் போகிறது” என்றும், “பைத்தியக்காரப் பேர்வழி, இத்தனை நாளாக ஒரு ‘சான்ஸ்’ கூட அகப்படவில்லையா?” என்றும் சொன்னார்களே யொழிய ஒருவராவது, “நீ காதலிக்கும் மங்கையை மணக்க ஜாதி ஏன் குறுக்கிடுவது” என்று உண்மையைக் கூறவில்லை.

இன்பம் வேண்டும்; ஆனால் அதைப் பெற இடர்மட்டும் வரக்கூடாது. போகம் வேண்டும்; ஆனால் பொறுப்பு இருக்க லாகாது என்ற எண்ணம் அந்த இளைஞர்களுக்கெல்லாம்.

மலர்க்கொடியைத் தனது காமக்கிழத்தியாக்கிக் கொள்வது என்று சங்கரன் எண்ணினான். மணஞ்செய்து கொண்டால்தானே ஊரார் ஏசுவார்கள். கூத்தி என்று கொண்டால் என்ன சொல்லப் போகிறார்கள். என்னமோ பிள்ளையாண்டான் சற்று துடியான ஆள். அவள் வலையிலே விழுந்து விட்டான். இது சகஜந்தானே! அவனும் சந்நியாசியல்ல. அவளும் பத்தினியல்ல என்று சொல்வார்கள். அவன் வேறு ஜாதியாச்சே - இவள் வேறு ஜாதியாச்சே! அவளை இவன் கூடுவதா என்று கவலைப்பட மாட்டார்கள். அது சகஜமானதாகி விட்டது. ஆனால் அதே மங்கையைக் கலியாணம் செய்து கொண்டால் மட்டும் ஐயோ எனப் பதைப்பார்கள். ஆகுமா என்று அலறுவார்கள். இது என்ன கோலம் என்று கேட்பார்கள். உலகத்தின் போக்கு இது!
* * *

மெல்ல மெல்ல சங்கரனின் உள்ளத்திலே கள்ளத்தனமான எண்ணங்கள் எழ ஆரம்பித்தன. ஜாதீய உணர்ச்சி அவனை மலர்க்கொடியை மணக்கக் கூடாது. ஆனாலும் அவளை அடையவேண்டும் என்ற எண்ணத்தைத் தந்துவிட்டது. எனவே, அவன் சாகசமாகத் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டுமெனக் கருதினான். நல்ல காரியம் செய்வதென்றால் அவ்வளவு விரைவில் யோசனைகள் வருவதுண்டு. எனவே சங்கரன் எப்படியோ மிகத் தாழ்ந்த விதமான சூது செய்யவுந்
துணிந்து விட்டான். ஒரு நாள் மாலை மலர்க்கொடியும் மங்கம்மாளும், தோட்டத்திலே உலவிக் கொண்டிருக்கையில் ஓர் ஆள் அங்கு வந்து சங்கரன் தந்ததாக ஒரு கடிதம் தந்தான். மலர்க்கொடி அதைப் பிரித்துப் பார்த்தாள்.

அன்பே,
எனக்குத் திடீரெனக் காய்ச்சல் வந்துவிட்டது. ஆகவே நான் அங்கு வரமுடியவில்லை; இன்றிரவு எட்டு மணிக்குத் தயவு செய்து என் அறைக்கு வர வேண்டும். கண்ணே, உன்னைக் காணாது எனக்குப் பெரிதும் கவலையாக இருக்கின்றது! தேவி உன் தரிசனத்தைக் கொடு. தவறாது வா. தவறக் கூடாது. தவறவே கூடாது.

இப்படிக்கு,
உனது காதலன்,
சங்கரன்

என்று எழுதப்பட்டிருந்தது. மலர்க்கொடி-, கடிதத்தைத் தாயிடம் தந்தாள். மங்கம்மாள் படித்துவிட்டு, “சரி! சங்கரன் சூது செய்வான். இனி அவன் மனம் கெட்டுவிட்டது. இனி நான் சொல்வது போல் நட மகளே. உன்னைச் சங்கரன் கெடுத்து விடுவான். இங்கே வா” என்று கூறி, நெடுநேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

இரவு எட்டு மணிக்கு, சங்கரன் அழைத்தபடி, மலர்க்கொடி சென்றாள். ஆனால், அவளுக்கு முன்பு இருந்த உற்சாகம் இல்லை. சங்கரனின் உண்மைச் சுபாவத்தைத் தெரிந்து கொள்வது என்ற யோசனையிலேயே அங்குச் சென்றாள்.

சங்கரன், அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். மலர்க் கொடியைக் கண்டதும் நகைத்தான். ‘மயிலே, குயிலே, மானே தேனே’ எனக் கொஞ்சினான். மலர்க்கொடி பழையபடி சிரிக்க வில்லை. முன்புபோலப் பேசவில்லை. இவ்வளவும் வெளிவேஷந்தானே என்று எண்ணும்போது அவளுக்குத் துக்கம் பொங்கி எழுந்தது. அதனை அடக்கிக் கொண்டு மங்கை பேசினாள். “உடம்பு காய்ச்சல், என்று எழுதினீர்களே.”

“உள்ளத்தில் காய்ச்சல், உடம்பில் அல்ல.”

“உம்! சரி, உள்ளத்துக் காய்ச்சலுக்குக் காரணம் யாதோ?”

“உல்லாசி! உன்னால் வந்ததுதான். வா இங்கே. என் பக்கத்திலே அமரு. எதா ஒரு முத்தம், ஒரே ஒரு முத்தம் கொடு. பார்ப்போம்.”

“பலே! சங்கர், இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டதா உமது சாகசம். திடீர் வளர்ச்சியாக இருக்கிறதே.”

“காதலி! இதிலே சாகசமேது. உன்னைக் கண்டால் என் மனம் அவ்வளவு பூரிக்கிறது. ஒரு முத்தம் தாராயா? நான் யார்? உன் காதலன் அல்லவா!”

“நீர் யார்! ஒரு வேளாளர்! அழகுள்ள மங்கை எவளேனும் அகப்பட்டால் அவளைச் சேர எண்ணும் சொகுசுக்காரர்.”

“கோபமேன் பெண்ணே!”

“கோபம் ஏன், உள்ளபடி! ஒரு நாடகக்காரியின் மகள் கோபிக்கலாமா! அதிலும் ஒரு வேளாள இளைஞர், படித்தவர், முத்தம் கொடு என்று கேட்பதே அவளுக்குப் பாக்கியமல்லவா? கிடைக்குமா, அவளுக்கு இவ்வளவு பெரிய பாக்கியம்!”

“மார்க்கொடி! நீ ஏதோ சந்தேகங்கொண்டு பேசுகிறாய். நீ நாடக்ககாரியின் மகளானாலென்ன, உன்னைத்தானே நான் மணம் செய்து கொள்ளப் போகிறேன்! என் காதலியின் கரத்தைப் பிடித்திழுத்துக் கட்டில்மீது தூக்கிப் போட்டு முத்தமிட எனக்கு உரிமை இல்லையா, முடியாதா என்னால்...”

“முடியும், நான் ஏமாந்தால்!” என்று சொல்லிக்கொண்டே மலர்க்கொடி, சங்கரன் தாடையிலே வைத்தாள் ஓர் அறை. அதே நேரத்திலே அவள் கண்களிலே நீர் ததும்பிற்று. மங்கம்மாளும் அந்த அறைக்கு வந்தாள். “அம்மா நான் ஏமாந்தேன் - இவனை நம்பினேன். இவன் கடைசியில் என்னை வெறும் காமப் பொருளாகக் கருதுகிறான். நீ சொன்னது உண்மை. முற்றிலும் உண்மை. என்னை இந்த இடத்தை விட்டு அழைத்துக்கொண்டு போய்விடு” என்று அழுது தாயின் மார்பிலே சோர்ந்து கொண்டிருந்த சங்கரனை உற்று நோக்கினாள். “சங்கரா! ஜாதியை நீ காப்பது போலத்தான் நானும் என் மகளைக் காப்பேன். மலர்க்கொடியும் தன் மானத்தைக் காப்பாள்” என்று கூறினாள். தாயும் மகளும் வீடு சென்றனர். சங்கரன் சோர்ந்து படுக்கையில் சாய்ந்தான், தன் சாகசம் தோற்றதே - சாயம் வெளுத்ததே, மலர்க்கொடியை இழந்தோமே என்று.

“சங்கர்! என்ன, என் யோசனைப்படி முடித்துவிட்டாயோ! மலர்க்கொடி வரும்போது நான் பார்த்தேன்” என்று கேட்டான், சங்கரனுக்கு யோசனை கூறிய சதாசிவம்.