அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆசிரியர் கடிதம்
“தோழர்களே! ‘திராவிடநாடு’ பத்திரிகை கொந்தளிப்பிலே முளைத்தது. உமது ஆதரவால் வளர்வது. காலமோ நெருக்கடியானது. மார்க்கட் நிலவரமோ மனத்தை மருட்டுகிறது. காகித விலையோ கடு விஷமாகி விட்டது. கஷ்டமோ அதிகம்! உதவியோ, நானும் இதுவரை கேட்கவில்லை. மாடி வீட்டிலிருந்து கொண்டு, பொழுது போக்குக்காக நான் இப்பணியில் ஈடுபடவில்லை. குச்சு வீட்டை மச்சு வீடாக்க வருவாய் தேடவுமல்ல. இந்தப் பணியில் நான் இறங்கியது! வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்ற நிலையிலுமல்ல, இதில் குதித்ததன் காரணம். உங்களோடு வாராவாரம் நேரில் வந்திருந்து பேச முடியாது - திராவிட நாடு நம்மைச் சந்திக்கச் செய்கிறது. கட்சிக்கு, இதுதான் சக்தி. இதற்கு நீங்கள் கை கொடுக்க வேண்டாமா? சந்தா அனுப்ப வேண்டாமா? விற்பனையை உடனுக்குடன் அனுப்பித் தந்தால் பளுவு குறையுமே! அது செய்யக்கூடாதா? உமது செல்வாக்கைச் செலுத்தி, விளம்பரங்கள் அனுப்பினால், இளைத்த உடலுக்கு டானிக் போல், பத்திரிகை விருத்தியடையும். தோழர்களே! அன்பு சில சமயத்தில் பணரூபத்தில் வரவேண்டும். அச்சமயம் இதுதான். எனது தோழர் டி.பி.எஸ். பொன்னப்பன் தந்து வரும் அரிய உதவியே இன்று பத்திரிகையை நடமாட வைக்கிறது. ஆனால், இதையே மட்டும் இறுகப் பிடித்திருக்க இயலுமா? சரியானதாகுமா? இவர் இயக்கத்துக்குச் செய்ய வேண்டிய வேலைகளை இது தடை செய்யுமல்லவா? இவற்றை யோசித்து, இன்றே உங்களாலான உதவியைச் செய்யுங்கள், உள்ளத்தைக் குளிரச் செய்யுங்கள்! திராவிடநாடு அபயக் குரலிடுவதைக் கேளுங்கள், ஆவன செய்யுங்கள்!”

“நாலுபேர் கூடி உரையாடும் மனைபோல் தோன்றுமேயன்றி, கிழமை இதழ், காரியாலயம் மற்ற இடங்களில் இருக்கும் முறுக்குடனும் மினுக்குடனும் இராது. ஒரு புறம், ஓட்டை ஒடிச்சலான ஈருருளை வண்டிகள் சாய்ந்து கிடக்கும்! வட்ட மேஜையும், அதைச் சுற்றி மர நாற்காலிகளும் காணப்படும். கேரம் பலகை ஒரு புறமிருக்கும்! பாயும் தலையணையும் ஒரு புறம் கிடக்கும்! பானையும் அதில் சில சமயம் நீரில்லா வறுமையும் மற்றொரு புறமிருக்கும்! காகிதக் குவியல் ஒருபுறம்! கொட்ட மிருதங்கம் மற்றொரு புறம்! சத்தியாக்கிரகத்தைத் தழுவும் காலங்காட்டி ஒரு புறம்! ஏ.ஆர்.பி. படைக்கலன்களும் வீரரும் வேறொருபுறம்! குடியரசு நிலையம் புத்தகக்கட்டு பிறிதொரு புறம். ஒரு மூலையில் பாக்கு அரைக்கும் இயந்திரம், மற்றொரு புறம் குளிக்கும் அறை ஒரு பக்கம், கூட்டம் நடத்துவதற்கு ஒரு கூடம், கூடிப்பேச ஒரு சிறுபூந்தோட்டம், நல்லதொரு கேணி, நடுவிலே ஓர் அச்சுக்கூடம்! அதனை ஒட்டி ஒரு பழைய அறை! அதிலே புழுதிக்கிடையே மேஜை நாற்காலிகள், சுற்றியுள்ள சுவரெல்லாம் காகிதச் சுருளைகள்! இவற்றுக்கு இடையே நான்! என் மருங்கே, இளமையும் ஏழிலும், செல்வமும் சீர்மிகு குணமும் கொண்ட என் தோழர் டி.பி.எஸ். பொன்னப்பா! ஈழத்தடிகள்! என்ன கவலை? என்ன தேவை? இதோ கொண்டு வந்தேன், தந்தேன் என்று கூறி என்னைக் குளிர்விக்கும் இராசகோபால் என்று மற்றொரு தோழர், இது ‘திராவிடநாடு’ இதழ் வெளியிடும் நிலையத்தின் புறக்காட்சி! அகமோ?”

“கடமையால் பிறக்கும் துணிவின்றி, எனக்கு இந்த இதழ் வெளியிடும் வேறு வசதி கிடையாது. சீர்திருத்த ஏடு நடத்துவது, சொல்லொணாத் தாங்கொணாக் கஷ்டமே தரும் என்பதை நானறிவேன். எனினும், வாழ்க்கையில் வேறு எந்த இலட்சியமும் கொள்ள மறுத்தே, இத்துறை புகுந்தேன். இன்னலைத் தாங்கும் இயல்பு பெற்றேன். இதம் தேடும் ஆவலைச் சுட்டேன். என் கடன் இதுவே என் று தீர்மானித்து விட்டேன்.”

“ஓராண்டுக்கு முன்பு. ‘திராவிடநாடு’ தொடக்கியபோது, பலத்த சந்தேகம்! நடத்த முடியுமா? நடுவிலே ஓடம் கவிழுமா என்று! நானிருக்கப் பயமேன் என்றுரைத்து நண்பர் டி.பி.எஸ். பொன்னப்பா பொருளும் இடமும், யோசனையும், நேரமும் இதற்காக மனமுவந்து செலவிட்டு, இதழ் நடந்து வரப் பேருதவி புரிந்தார். அவராற்றிய உதவி என் சொந்த நலனுக்கெனில், நான் அவருக்கு நன்றி கூறல் முறையாகும். அவர் ஆற்றிய உதவி, தமிழகத்துக்கு! எனவே, தமிழகத்திலுள்ள தன்னுணர்வாளர் யாவருமே, அவரை வாழ்த்த, வளம் பெருகிய அவர் வாழ்வு தமிழ் மணங்கமழ்ந்து வீசுதல் கண்டு பாராட்ட, தமிழர் நலங்கருதி நடத்தப்படும் ஏடு, அவரால் வளர்க்கப்படுதவதற்காக நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறார்கள்!”
(திராவிட நாடு 12. 7. 1942)