அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


``ஹிந்துஸ்தான் ஹமாரா!’’
`பாகிஸ்தானை நல்லறிவு படைத்த வர்கள் வெறுத்துத் தள்ளிவிட்டனர். பஞ்சாப், வங்காளம் ஆகிய இடங்களிலுள்ள முஸ்லீம்கள் கூட பாகிஸ்தானை நிராகரித்து விட்டனர். பாகிஸ்தானால் பயன் இல்லை!’ தெரிந்ததா?

இது தெரியாமல் இத்தனை நாட்களாக இருந்து விட்டோம்! இதோ, தோழர் சத்தியமூர்த்தியார் புது டில்லி நகரில் மார்ச் 18-ந் தேதி, இந்த அறபுதமான உண்மைகளைக் கூறியுள்ளார். பாகிஸ்தானை முஸ்லீம்கள் நிராகரித்து விட்டன ராம்!

தீர்மானங்கள் உண்டா? கிடையாது! லீக் தனது கொள்கையை விட்டுவிட்டதா? இல்லை! ஜனாப் ஜின்னா, வார்தாவுக்கு அடிமையானரா? ஒருக்காலும் இல்லை!

எனினும் மூர்த்தியார், பெயர் சத்தியம் என்றிருக்கும்போது, நமக்கென்ன பயம் என்று துணிந்து கூறுகிறார், பாகிஸ்தானை வங்க, பாஞ்சால முஸ்லீம்கள் நிராகரித்து விட்டனர் என்று. என்ன துணிவு! எவ்வளவு பதட்டம்! நிராகரித்து விட்டனராம்! இழந்த கண்களை மீண்டும் பெற்றவன் எனக்கு இவை வேண்டாம் என நிராகரிப்பான் போலும்! வலிய வணைந்த சுகம், புதையல் எடுத்த தனம், நள்ளிரவில் ஒளி, நட்டாற்றில் தோணி, நோய்க்கு மருந்து, நொந்தவனுக்கு ஆறுதல், இவை கிடைக்கப் பெற்றோர், வேண்டாமென்று கூறி நிராகரிப்பரோ! வங்க முஸ்லீம்களும், பாஞ்சாலத்து இஸ்லாமி யரும் பாகிஸ்தானை நிராகரித்து விட்டனர் என்று பச்சைப் புளுகு பேசும் பார்ப்பனத் தலைவர், யாரை ஏய்க்க இங்ஙனம் கூறுகிறார்!

எப்படி நிராகரிப்பார்கள்? அந்த வங்க, பாஞ்சால முஸ்லீம்களுக்கு, கண்ணும் கருத்தும் இல்லையா? சிந்து மாகாணத்தை வென்ற முஹமத் பின் காசீம் எனும் வாலிப வீரனின் சரிதத்தை மறப்பரா? கோரி, கஜனி, கில்ஜி, லோடி வம்ச சுல்தான்கள் ஆண்ட தரணியில், இன்று, கிளிமார்க், குயில் மார்க், `பீடிகளைச் சுற்றும் பிழைப்பிலும், பில்லை சேவகமும், பிடி ஆள் உத்யோகமும் இல்லையேல், காந்தியாருக்குச் சமரசம் வீசும் `கண்ணியமான’ வேலையிலும் ஈடுபட்டுக் கொண்டு, வர்hணஸ்ம வல்லரசின் முன், வளைந்த முதுகினராய், இளைத்த மனத்தினராய், தடித்த தாசராய் இருக்கவா, அவர்கள் விரும்புவர்? அலாவுதின் கில்ஜி எனும் அஞ்சா நெஞ்சன், அணிவகுத்த பட்டாளங் களைத் தலைமை தாங்கி, தில்லியிருந்து துவங்கி, ஒவ்வோர் சிற்றரசனாகப் பணிய வைத்து, மண்டலங்களைப் பிடித்து, சென்றவிடமெங்கும் வெற்றிக்கொடி நாட்டி, மதுரையையும் தாண்டி முன்னேறி, காயல்பட்டிணம் வரை புகுந்து மீண்ட, மாலிக்கபூர் என்ற வீரத் தலைவரின் வெற்றி வரலாறுகளை அவர்கள் மறந்துவிடுவார்களா?

சரிதம் பயில அவர்களுக்கு நேரமும், வசதியும் கிடையாது போகலாம். ஆம்! இன்று அவர்களுள்ள ஏழ்மை நிலையில், அவை கிடைப்பதுமில்லை. ஆனால், அவர்களின் மூதாதையர், கட்டியகோட்டை கொத்தளங்கள், காலத்தால் கலனாக்கப்பட்டிருப்பினும், காண் போரின் கலமான கருத்தையும் கனமாக்குமே! அடிமையாக இருந்து அரசனான குத்புதீன் அன்று எழுப்பிய குதுப்மீனார் இன்று, அரசியல் ஆணவத்தால் கண்மங்கிக் கிடக்கும் மூர்த்தி யாரின் கண்களுக்குத் தோன்றுமே! அதனை இஸ்லாமியர் மறப்பதெப்படி முடியும்? மேதினி யெங்கும் ஜோதி வீசும் புகழுடன்விளங்கி, ஆரிய இதிகாச வர்ணனைகளையும், வெட்கமுறச் செய்யும் வனப்புப் பொருந்திய தாஜ்மஹாலைக் கண்ட பின்னர், தாசர்களாக வாழ அவர்கள் துணிய முடியுமா?

டில்லியில் நின்று கொண்டு தோழர் சத்தியமூர்த்தி இங்ஙனம் பேசினது கேட்க, நாம் பெருவியப்படைகிறோம். வியப்பு மட்டுமல்ல, திடுக்கிடுகிறோம், அலைச்சல் இவ்வளவு அதிகமாக அவரது அறிவைச் சூறையாடி விட்டிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கவே யில்லை.

வங்க முதல் மந்திரி மௌலவி பஜுலுல் ஹக் ஜனாப் ஜின்னாவுக்கு விரோதமாகக் கிளம்பினார் என்பதுண்மையே. ஆனால், எதன் பொருட்டு? பாகிஸ்தானை எதிர்த்தா? இல்லை! அகில இந்திய முஸ்லீம் லீக் மாநாடு, பாகிஸ்தான் தீர்மானத்தை நிறைவேற்றுகையில், கனம். ஹக் அதை ஆதரித்தார். பின்னர், அனேக முறை ஆதரித்துள்ளார். அவருடைய மனதில் பதவிக் கும், பக்திக்கும் இடையே மூண்ட போரில், அவர் பதவியின் பக்கம் நின்றுவிட்டார். சர். சிகந்தரும், பாகிஸ்தானை நிராகரித்தார் என்று எவரும் கூற முடியாது. லீக் கட்டளையை மதித்து, வைசிராய் பாதுகாப்பு சபையில் அவருக்களிக்கப்பட்ட பதவியையும் வேண்டாம் என வெறுத்தொதுக் கிய பாஞ்சால வீரர், பாகிஸ்தானை எதிர்ப்பவ ரல்ல. பாபர், அக்பர், அவுரங்கசீப் போன்ற மன்னாதி மன்னர்கள், அஹ்மத்ஷா அப்தாபலி போன்ற அஞ்சா நெஞ்சு படைத்த தலைவர்கள், ஆகிய யாரை மறப்பர்? ஏன் நிராகரிப்பர் அவர்கள் ஆண்ட தரணியை, மீண்டும் பிறைக் கொடியின் பெருமித ஆட்சியின் கீழ்க் கொண்டு வரும் பாகிஸ்தானை! நல்லறிவுள்ளவர்கள் பாகிஸ்தானை நிராகரிப்பார் என்றுரைப்பது சாதாரண அறிவுக்கும் பொருந்தாத பேச்சு. நல்லறிவு என்பதற்கு, ஆரிய அறிவு என்று மூர்த்தியர் பொருள் கொள்கிறார் போலும்! ஆரிய அறிவு, அகில உலகிலும் காணற்கரியது. காணாத லோகங்களைக் கணக்கெடுக்கும், ஆபாசத்தை அருள் என்றுரைக்கும், ஜாதிச் சனியனை சாத்திரத் தீர்ப்பென்றுரைக்கும். கோத்திரம் குலம் என்று கோள் மூட்டும், கோயில் குளத்தைக் காட்டி ஏமாற்றும், திதி திருவிழா என்றுரைத்த திமிர் வாழ்வுக்கு வழி தேடும், தேவர் என்றும், கின்னரர் என்றும் கூறி தெகிடுதத்தம் பேசும், ஆரிய அறிவு இதில் முதல் தரமானது. ஈடு எதிர்ப்பில் லாதது! ஆனால் சுய அறிவுள்ள எந்த முஸ்லீமும் பாகிஸ்தானை எதிர்க்க மாட்டாரென்பது உறுதி. சுந்தர விலாசத்துக் கந்தரனுபூதியார், விந்தையான சிந்தனையை விட்டுவிடச் கோருகிறோம். பிடிவாதஞ் செய்வது, பெரு நெருப்புடன் விளையாடும் பேதையின் நிலைக்கு அவரைக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

``ஜனாப் ஜின்னா தேசாபிமானி! அவர் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டார்! நெருக்கடி யான இந்த நேரத்தில் அவர் முன் வந்து நாட்டை நடத்திச் செல்ல வேண்டும்’’ என்று தோழர் சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானை எதிர்த்துப் பேசி விட்டு, அதை ஆதரிப்பவர் அறிவிலிகள் என்ற பொருள்பட அகந்தையைக் கக்கிவிட்டு, பிறகு, ஜனாப் ஜின்னாவை, ```அரசே! வாரிர்! அண்ணாவே வாரீர்!’’ என்று அழைப்பது, விஷமங் கலந்த வினயம்!

``கர்னல் அமெரியோ மிஸ்டர் சர்ச்சிலோ அவர்களுக்குப் பாகிஸ்தானைத் தரமுடியாது’’ என்று மூர்த்தியார் கூறுகிறார். உண்மை! அந்த பிரிட்டிஷ் பிரமுகர்கள், எப்படிப் பாகிஸ்தானைத் தர முடியாதோ அதுபோலவே சுயராஜ்யத்தையுந் தர முடியாது! நாட்டுக்கு இனி, எதிர் காலத்தில் எத்தகைய நிலை ஏற்படும் என்பது இங்குள்ளவர் கள் கூடிக் கலந்து பேசி, செய்யும் முடிவைப் பொறுத்திருக்கிறதேயொழிய, கையைக் காட்டியோ, கண்ணைக் காட்டியோ, மிரட்டியோ மயக்கியோ, பிரிட்டிஷாரிடம் பெறும் காகிதச் சுருளையைப் பொருத்தில்லை என்பதைக் கனபாடிகளின் பிரதிநிதி கவனத்திலிருக்கட்டும்.

போர் முடிந்த பின்னர் இந்தியாவுக்குப் பாகிஸ்தான் திராவிடஸ்தான் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட புது அரசியல் திட்டம் வகுக்கப்பட வேண்டும். போர் முடியுமட்டும், அது பற்றிய விவாதத்தை நிறுத்திவிட்டு, போர் சம்பந்தமாக சகல கட்சிகளும் ஒன்றுபட்டு உழைக்கக் கூடிய ஒரு திட்டம் ஏற்படுத்த வேண்டும். இதனை டில்லி சட்டசபைக் கூட்டத் தில், 17ந் தேதி, நவாப் ஸர்டா லியாகத் அலிகான், ``பிரிட்டனுக்குத் தொந்தரவு ஏற்பட்டுள்ள இந்தச் சமயத்தில், அதனிடமிருந்து வசதிகளைப் பிடுங்கிக் கொள்ள லீக் ஒருநாளும் உத்தேசிக்க வில்லை. வருங்கால அரசியல் திட்டத்துக்குப் பாதகமில்லாமல் தற்போதைய அரசியல் திட்டத்தின்படி அரசாங்கத்தில் உண்மையான, சரியான பங்கு கிடைக்குமானால், முஸ்லீம் லீக் இந்தியப் பாதுகாப்பின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தனியாகவோ, மற்றக் கட்சிகளுடன் சேர்ந்தோ ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது’’ என்று கூறிவிட்டு, வருங்கால அரசியல் திட்டத் திலே பாகிஸ்தான் மட்டுமல்ல, திராவிடஸ்தானும் இடம் பெற வேண்டுமென்பதை எடுத்துரைத்துள் ளார். ``திராவிடஸ்தான் கோரிக்கையை லீக் தலைவர் ஆதரிப்பதாக சென்ற வருடம் சென்னையில் கூறியுள்ளார்!’’ என்று லிலியாகத் அலிகான் கூறினார். சென்னைப் பார்ப்பனப் பத்திரிகாசிரியர்களும், பார்ப்பனத் தலைவர் களும், திராவிடஸ்தான் கிளர்ச்சியை மௌனத் தால் முறியடிக்கலாம் என்று எண்ணினார். இதோ, டில்லி சட்டசபையில், கிளம்பி விட்டது, திராவிட நாட்டுப் பிரிவினையின் எதிரொலி! இந்த அரிய சந்தர்ப்பத்தில், திராவிடருக்காக, லியாகத் அலிகான் செய்த சேவையைத் திராவிட நாடு மறக்காது. திராவிடர் சார்பாக நாம் அவரை மனமாரப் பாராட்டுகிறோம்.

இதே டெல்லியில், கடந்த ஜெர்மன் சண்டையின்போது, 1918ம் ஆண்டு மகா கனம் சீனுவாச சாஸ்திரியார் சட்டசபையில் பேசுகை யில், ``பார்ப்பனரல்லாத மக்கள் பிரிட்டிஷ் ஆட்சி போய் பார்ப்பனராட்சி வருவதானால், பார்ப்பன ராட்சியின் கீழ் இருக்க இசைவார்கள்’’ என்று பேசினார்.

மகாகனத்தின் மனப்பான்மையையும் லியாகத்தின் மனப்போக்கையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இப்போது அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியது, போரை வெற்றிகரமாக எப்படி நடத்துவது என்பதாகும். இதற்கு, போர் ஆதரவைப் பூரணமாகத் திரட்ட லீகும், நமது கட்சியும் தயார்! திரட்டிக் கொண்டு வந்திருக்கி றோம். இதுவரை தெருவில் திரிந்தவர்கள், ``இப்போது, தாங்களும் அந்தத் திருத் தொண்டில் பங்கு கொள்ளவருவதானால், தாராளமாக வரட்டும், ஆனால் அதற்காக, மற்றவர்களின் உரிமைகளைத் தன்னிடம் அடகு வைக்க வேண்டுமென்று பிரிட்டிஷாரை வற்புறுத்தினால், அது கொடுமை என்போம். நமது உரிமைகளை அங்ஙனம் அடகு வைக்க பிரிட்டிஷாருக்கு உரிமை கிடையாது. அவசரமான தேவைக்காக, குடும்பத்தைப் பரிபாலிக்கும் கார்டியன், `சொத்துக் களை’ சொந்த உபயோகத்துக்காக அடகு வைத்தாலோ விற்றாலோ, அஃது கடுங்குற்ற மாகும். அத்தகைய நடவடிக்கை செல்லாது என்று மறுத்துரைக்க சொத்துக்குரியவர்களுக்குச் சட்டப்படி உரிமையுண்டு. சாதாரணச் சொத்துக்கே இத்தகைய நிபந்தனைகள் என்றால், பல கோடி மக்களின் எதிர்கால வாழ்க்கையை துச்சமாக மதித்து `துரைமார்’ ஏதோ செய்வார்களாயின், அது நம்மை கட்டுப்படுத்தாது என்பதை எடுத்துரைத்து, நமது சொத்துக்களை நாம் மீட்டுக் கொள்ள நமக்கு தைரியமும் உண்டு, நம்பிக்கையும் உண்டு. போர் முடிந்ததும், நாஜிவசம் சிக்கிய நாடுகள் விடுதலை பெற்று, அதே நேரத்தில் இங்கே நாம், ஓர் வணாஸ்ரம வல்லரசுக்குத் தட்சணையாகத் தரப்பட்டுள்ளோம் என்பதை உணர நேரிட்டால், அது உள்நாட்டிலே, இதுவரை ஏற்பட்டிராத கொந்தளிப்பை உண்டாக்கும் என்பது திண்ணம்.

``பாகிஸ்தானுக்கு இணங்கினால், இந்துக் களில் சிலர் ஜப்பானியருடந் சேர்ந்துவிடும்!’’ ஆகவே நாம் பாகிஸ்தானை ஆதரிக்கக் கூடாது’’ என்று லண்டன், நியு ஸ்டேட்ஸ்மன் அண் நேஷன் ஓர் நூதன வாதம் புரிகிறது. அந்த வாதம் நமக்கு விலா நோகும் சிரிப்பைத் தருகிறது. பாகிஸ்தானை ஆதரித்தால் இந்துக்கள் ஜப்பானி யரை ஆதரிப்பர் என்று வாதமிடுகிறதே இந்த ஏடு, பாகிஸ்தானை மறுத்தால் முஸ்லீம்கள் ஜப்பானியருடன் சேர்ந்துகொள்ளக் கூடும் என்று வேறொருவர் வாதிட முன்வந்தால், இந்த ஏடு என்ன பதில் கூறுமோ தெரியவில்லை! லண்ண்டனில் நாஜி வெடிகுண்டுகள் கட்டிடங் களை மட்டுமே இடித்தன என்று படித்தோம், சில இடங்களில், அறிவையும் அவை இடித்து விட்டன போலும். நாட்டு நலம் கோருவோர், நாளைய அரசியலை நமக்குள் முடித்துக்கொள் வோம் என்று முதலில் தீர்மானித்து விட்டு, இன்றைய ஆபத்திலிருந்து தப்ப, யாவரும் ஒன்று சேர்ந்துழைக்கத் திட்டமிட வேண்டும். அதை விட்டு, பாகிஸ்தான் பயனற்றது என்று பேசினால் உனது சுயராஜ்யம் சூதானது என்று பதில் கிடைக்கும், வாதம் வளரும். பிடிவாதம் மிகக் கொடிய நோய்! மூர்த்தியாரின் பேச்சு அதன் சேட்டைதான் என்று கருதுகிறோம்.

இந்தியாவைப் பாதுகாக்க வேண்டியது, நமது மகத்தான கடமை. இதனை நாம் செய்யத் தவறினால், பிறகு சுதந்திரம் என்ற சொல்லை நாம் வாயால் உச்சரிக்க ஒரு நூற்றாண்டு பிடிக்கும்.

எனவேதான், ஆபத்தான இந்த வேளை யில், எதிர்கால அரசியல் திட்டம் பற்றிய முடிவுகளைச் செய்யாமல், போரில் நாம் வெற்றி பெறும்வழி வகுக்க வேண்டும் என்று கூறுகி றோம். காங்கிரசார், நெருக்கடியைச் சாக்காக வைத்துக்கொண்டு எதிர்காலத் திட்டத்தை இப்போது ஏற்படுத்த முனைந்தால், இதனை மனதில் இறுத்தட்டும். மறப்பது ஆபத்து என்று எச்சரிக்கிறோம்.
இஸ்லாமிய உலகுக்கு புத்துணர்ச்சி யூட்டிய கவிமர்ஹும் இக்பால், ``ஹிந்துஸ்தான் அமாரா!’’ என்று பாடினார். இஸ்லாமியர் அதனை மறக்க முடியாது. ``தமிழ்நாடு தமிழர்க்குத் தமிழர் நாட்டில் சனியாக வந்துள்ள ஆரியர்கள் நமரல்லர்’’ என்று நமது கவி பாரதிதாசன் கூறியுள்ளார். நாம் மகிழ்ச்சியோடு இருந்த நேரத்திலல்ல, மன்னன் பன்னீர்ச் செல்ல்வனை ஓமான் கடலுக்குப் பறிகொடுத்துவிட்டு, உள்ளம் ஒடிந்துகிடக்கும் வேளையில்! அன்று சோகத்தை யும், கவி தந்த சொல்லையும் கலந்து நெஞ்சி லிட்டோம்! நாம் கொண்டுள்ள உறுதியை, மூர்த்தியார், அறியமாட்டார். அது அவர் குற்ற முமல்ல! இன இயல்பு!

(திராவிடநாடு - 22.3.1942)