அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கடல் கடக்கும் கண்கள்

``இடது காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே!’’ என்று பாடி ஆடிடும் அணங்கு களுக்குக் குறைவா! அன்று அம்பலத்தில் அரன் ஆடினாராம் இடதுகாலைத் தூக்கி நின்று. இருந்தாலும் இந்தப் புதுக் குட்டியின் திறமை, அவருக்கு வருமா? பார், அவள் கண்கள் சுழல்வதை! கவனி, அந்தக் காலணி சதங்கை யின் ஓசையை! இடை, பிடிதான், அதுவும் வளைகிறது பார்- என்று ஆடிடும் அணங்கின் அங்கவர்ணனைகளைக் கூறி ஆனந்திக்கும் ஆணழகர்களுக்குக் குறைவு உண்டா?

``மகா சன்னிதானம், உமது கலையின் நேர்த்தியைக் கண்டு களித்தார்கள்’’ என்று நீறு பூசிய தூதுவன் கூற, நெடுநாளையக் கனவு பலிக்கும் வேளை பிறந்ததென்று கருதி, ``பகவத் சங்கற்பம்! பெண்சிறிசு அனுபவமில்லை’’ என்று தூதின் நோக்கத்தை உணர்ந்து தாய் கூறிவிட்டு, மகளை நோக்க, மகள் முகமலர்ந்து நிற்க, ``இவ்வளவு இளமையிலே இத்தனை சௌந்தர வதியாயும், சுகசாரீரியாயும், சொர்ண பிம்பமே உருப்பெற்றெழுந்து வந்து சோபிதமாக, சுகானு பவத்தை ஆடிக் காட்டுவது போலவுமிருந்தது நடனம். மிக நேர்த்தி! என்று தூதுவன் கூறிவிட்டு, தோடுடைய செவியன் விடை ஏறிச் சென்றால், இந்த வைரக் கடுக்கண் அணிந்த காதார், மோட்டார் ஏறிக்கொண்டு, ``முடிந்தது காரியம்’’ என்று கருதிற் கொண்டு செல்வதும், செல்கையில், சுந்தரருக்குச் சிவனாரே தூது சென்றாரமே, இதிலே தவறு என்ன? அன்பே சிவம்! தம்பிரான் தயவே யோகம்! என்று கூறிடும் காட்சிக்கு குறைவா?

இவ்வளவும் எங்கே நடைபெறும் காட்சிகள்? சமஸ்தானாபதிகளின் அந்தப்புரங் களிலா? இல்லை. பசு, பதி, பாசம் எனும் பொருளுக்கு விளக்கமும், சத்துக்கும், சித்துக்கும் உள்ள போதனையும், அண்ட சரா சரத்துக்கும் அகண்ட பரிபூரணனந்தத்திற்குமுள்ள அரிய தொடர்புக்கான விளக்கமும், ‘ஓம்’ என்பதற்கு ஒன்பதாயிரம் பொருளும், ஓங்காரம், அகங்காரம், மமகாரம் என்பவைகளுக்கு எண்ணாயிரம் கருத்துரைகளும், தேவார திருவாசகப் பாராயண மும் நடைபெறும். பூலோக கைலாயமாம் சைவமடாலயங்களிலேயும், அதைச் சார்ந்த மிராசுகிராமங்களிலேயும், பக்திப் பண்ணை களிலே நடைபெறும் காட்சிகளாகும்! இன்றும் நடைபெறுகிறது, இளித்த வாயராய், ஏமாளிகளாய், மக்கள் உள்ளனர்.

திருக்கைலாய பரம்பரை ``ஸ்ரீலஸ்ரீ மகா சன்னிதானம்’’ திருவாவடுதுறைத் தம்பிரான் திருவீதியில் உலவும் திருக்கோலத்திற்கு, திருவா வடுதுறை இராசரத்தினமென்ன, திருவெண்காடு சுப்பிரமணியமென்ன, வீருசாமி என்ன, திருவீழி மிழலையார்களென்ன, இத்தனை நாதஸ்வரங்கள், ஜமாக்களுடன்! பல்லக்கிலே அவர்! அவர்மீது ஆபரணச் சுமை! அந்தச் சுந்தரச் சுமை தாங்கியின் சோபிதத்தைக் கண்டு சொக்கிடும் கூட்டமோ ஏராளம்! வைரத்தின் டாலிலே, பதக்கத் தின் பளபளப்பிலே, பட்டாடையின் பதத்திலே, பாமரர் மயங்காதிருக்க முடியுமா! மகாசன்னி தானத்தின் கடைக்கண் பார்வை வீழ்ந்தாலும் போதுமே கனகாபிஷேகங்கிடைக்குமே என்று கருதும் பேர்வழிகளுக்குப் பஞ்சமா! இத்தகைய கோலாகலக் காட்சிகள் மதத்தின் பெயரால் நடத்தப்பட்டு வருகின்றன. ஜீயர்கள் மகந்துகள், தம்பிரான்கள், ஆச்சார்ய புருஷாள் ஆகியோர் கள், சீமான்கள் சிற்றரசர்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி, நஞ்சை புஞ்சை, நகை நட்டு, பேழை பணம், தோட்டம் மடம், பல்லக்கு பரிவாரம், பட்டாடை, கொட்டுமுழக்கு, ரதம் வாகனம், சொர்ணாபிஷேகமும், பெற்று வாழும் இந்த சுரண்டல்காரர்களைக் காணவோ, கண்டிக் கவோ, இந்த முறை போகவேண்டுமென்று கூறவோ, மனமோ, நேரமோ இல்லாதவர்கள், மற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, வல்லரசு ஒழிப்பு, என்றெல்லாம் நடத்தும்போது, நமக்குச் சிரிப்பதா, சித்தஞ் சோர்வதா என்று தெரியவில்லை.

சோவியத் அன்பர்கள், பாசிச எதிர்ப்பாளர் கள், நாசிச ஒழிப்பாளர்கள் என்று நாமம் சூட்டிக் கொண்டு, தோழர்கள் மாநாடுகள் நடத்துந் தோறும், ``அந்தோ! கண்முன் காணப்படும் குப்பையைக் கொளுத்தாது. கடல் கடந்து செல்லத் தம் கருத்தை ஏவுகின்றனரே’’ என்று எண்ணி நாம் ஏங்குகிறோம்.

தம்பிரான்கள் மீது நமக்குக் கோபமா! இல்லை! மகந்துக்கள் மீது துவேஷமா! இல்லை! அந்த முறை முறியாமுன்னம், மக்களின் வளைந்த முதுகு மட்டுமல்ல, குனிந்த உள்ளம் நிமிர மார்க்கமும் கிடையாது. இதனைச் செய்யத் செய்யாமுன்னம், வேறு ``எதிர்ப்புகள்’’ ஏது பயனும் தரா.

அக்கிரமம், ஆபாசம் ஆகியவைகளின் இருப்பிடமாக, மதநிலையங்கள் உள்ளன வெனில், மதமயக்குற்றுக் கிடக்கும் மக்கள், மனத் தெளிவு பெறுவதேது.

சோவியத் அன்பர்களே! ஒன்று கூறுவோம் கேண்மின்! கடல் கடக்கும் கருத்தினோராக மட்டுமிராதீர், இங்கே உள்ள இழிவுகளைக் காண்மின், களையமுன் வருவீர், என்று கூறுகிறோம், அன்பு காரணமாக.

நமது மக்களிடம் புகுத்தப்பட்டுள்ள மதம், ஆபாசக் கதைகளுக்கு இருப்பிடம். மனிதாபி மானத்தை மாய்க்கும் படுகளம், குடி, கொடுமை, கொள்ளை ஆகியவற்றினுக்கு பயிற்சிக் கூடம், இத்தகைய குப்பையை மக்களிடையே விட்டு வைத்து, குன்றேறி நாம், ``மனித சுதந்திரம் சமத்துவம்’’ என்றெல்லாம் பேசினால் பயன் ஏற்படுமா? நாலுதலைச் சாமியும், முக்கண் சாமியும், ஆயிரங்கண்ணனும், ஆனைமுகச் சாமியும், ஆளீவாய்ச் சாமியும், பருந்தேறுபவரும் பாவையரைத் தூக்கித் தலைமீது வைத்திருப்பவ ரும், ரிஷிபத்தினிகளிடம், ரசானுபவத்தை நாடி, நடுநிசியில் செல்பவரும், இத்யாதிதிருவுருவமும், திருக்கல்யாண குணங்களும் கொண்டு கடவுள் களை, மக்கள் `தொழ’ வைத்துவிட்டு, `வீறு கொண்டெழுக! `தோள்தட்டி முன் வருக! முதலாளித்துவத்தை முறியடிமின்!’ என்று கோஷமிட்டுக் காணப்போகும் பயன் என்ன?

சோவியத் அன்பர்கள் கூட்டத்திலே, வீர வாலிபர்கள் கூடுகின்றனர். மகிழ்ச்சிக்குரியதே, வாழ்க்கைப் பொறுப்பு வாட்டத்தைத் தராததால், வளையாத உள்ளமும், உடலும் பெற்று விளங்கி, எது எத்தகைய இடையூறைத் தருமோ என்ற அச்சமும் தோன்றாத பருவத்தினர், நரம்பு முறுக்கேறி, இரத்தம் கொதித்து, தோள் துடித்து, ஆவேசம் எழப்பேசும் இயல்பினர், ஆனால், அத்தகையவர், கண்முன் இருக்கும் காரியத்தைக் கவனியாது வேறு விஷயங்களிலே மனதைச் செலுத்துவதால், முரட்டுப் பேச்சும் வறட்டு ஜம்பமும், நெறித்த புருவமும், நீட்டிய கரங்களும், கொண்டோராய், உரத்த குரலால், உறுமல் மொழியால், உலகையே திருத்தி அமைத்து விடக் கூடும் என்று எண்ணும், எடுப்பார் கைக் குழவிகளாகி விடுகின்றனர்! வாலிபம், வீரம், வல்லமை யாவும் விழலுக்குச் செல்லும் நீராகிறது, காலக் கழனியோ காய்ந்து கிடக்கிறது. அன்பர்களே, உமது ஆற்றலை, சமுதாயத்துச் சாக்கடையை ஒழிக்கச் செலவிட முன் வாருங்கள்! சாதிபேதச் சனியனைத் தொலைக்கச் சாதி ஆணவத்தின் இடுப்பை முறிக்க வைதீகத் தின் விலாவை நொறுக்க, மூடமதியின் முதுகை முறிக்க, வஞ்சகரின் வாழ்க்கையைக் குலைக்க, கொடுங்கோன்மை யாளரைக் குப்புறக் கவிழ்க்க முனையுங்கள். அதற்கு உமது அறிவும், ஆற்றலும், அன்பும், வீரமும் பயன்படட்டும்! புத்துலக சிற்பிகளாவீர், என்று சோவியத் அன்பர் எனும் சுந்தரப் பெயர் தாங்கிடும் தோழர்களுக்குக் கூறுகிறோம். நாடு இன்று ரசாபாசத்தின் மடமாக, வல்லரசின் வெள்ளாட்டியாக இருப்பதற்கு, ஜார் மட்டுமல்ல காரணம், ரஸ்புட்டீனும்தான்!

தோழரே, இதை உணர்மின், உலகு குளிரும்! அவனுடைய கைகால்களிலே சேறு! உடலிலே முடை நாற்றம். தலையோ கள்ளிபூத்த காடு! முகமோ, சோகத்தின் பிம்பம். வயிறோ ஒட்டி உலர்ந்திருக்கிறது. கண்களோ மங்கிக் கிடக்கிறது, ஆடை கந்தல்! உழைத்து அலுத்து வீடு திரும்புகிறான். மாலை மணி ஆறு இருக்கும், இந்நாட்டு உழவன் என்ற உருவம் அது. அவன், மகாசன்னிதானத்தை வணங்குகிறான். மடைத் தனக் கதைகளை மதமெனக் கொண்டுழல்கிறான், ஆபாசக் கதைகளை நம்பி நலிகிறான், கொடுத்து வைத்தபடிதானே கிடைக்கும் என்று பேசுகிறான், அஞ்சி அஞ்சிச் சாகிறான். ஆமை போல் நடமாடுகிறான், ஆற்றுவார் தேற்றுவாரற்று அவதிப்படுகிறான், வேதனை எவ்வளவிருப் பினும், விடுதலை இங்கில்லை, அங்கே மேலே என்று அண்ணாந்து நோக்குகிறான் ஆகாயத்தை! அவனிடம் போயன்றோ சோவியத் சோபிதத் தைப் பற்றிப் பேசுகிறீர்! பலிக்குமா? யோசித்துப் பார்த்து ஆவன செய்யுங்கள் அன்பர்களே!

(திராவிடநாடு - 14.6.1942)