அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மானங்கெட்டது!

“என்ன இருந்தாலும், இதை வெளியே சொல்லியிருக்கக் கூடாது.”

“மூடிவைக்க வேண்டுமா? உடந்தையாக இருக்க வேண்டுமா? நடந்த சேட்டை தெரிந்திருந்தும் நமக்கென்னவென்று இருந்திருக்க வேண்டுமா? வெகுநன்று! அவள் சோரநாயகனுடன் சோலையிலே சொகுசாக விளையாடிக்கொண்டிருந்ததை நான் கண்களால் கண்டேன், கண்டதை விண்டேன், இவள் இத்தகைய காதகி என்பது தெரியட்டும். ஊர் இவளுடைய நடத்தையை அறியட்டும் என்று, இது எப்படிக் குற்றமாக முடியும்? அவள் பூசிய மஞ்சளும், குங்குமப் பொட்டை கோணலின்றி வைத்ததும், நாணியதும் கோணியதும் நாடறியும். அண்டை வீட்டுக்காரனையோ எதிர் வீட்டுக்காரனையோ பார்த்துவிட்டால் பயப்படுவது போல், அவள் செய்த பாசாங்கு கொஞ்சமா? அந்த வேடத்தைக் கண்டநானே இதே கண்களால் அவள் முள்வெலியைத் தாண்டியதையும், கொஞ்சியதையும் குலுக்கியதையும், கொடிபோல அவனைத் தழுவிக்கொண்டதையும் கண்டேனே, கண்டதைக் கூறாதிருக்க என் மனம் இடந்தரவில்லை.”

“சரிதான்ப்பா! ஏதோ இலைமறை காயாக எதுவோ நடந்துவிட்டது, அதை வெளியே சொல்லிவிட்டாயே அவள் மானம் போயிற்றே, அதைக்கவனி.”

“போகட்டுமே, எனக்கென்ன.”

கள்ளப்புருடனைக்கூடிய ஒரு கள்ளி, வேடத்தால் பத்தினி, நடத்தையாலோ நாசகாலி, அவளது செயலைக் கண்டவன், ஊராரிடம் கூறிட அவன் நண்பன், இதை ஏன் வெளியே சொன்னாய், அவளுக்கு வேதனை உண்டாயிற்றே என்று கேட்கிறான் கள்ளியின் கபட வேடம் கலைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே கண்ணால் கண்டதைக் கூறினேன் என்று கூறுகிறான் நண்பன். இருவரின் உரை எங்ஙனமிருக்குமோ அதுவே முதலிலே நாம் தீட்டினோம்.

காங்கிரஸ் காரியக்கமிட்டியின் விவாதங்கள் அடங்கிய தஸ்தாவேஜுகளைச் சர்க்கார் கைப்பற்றி, அவைகளைத் தமது குறிப்புரையோ விளக்க உரையோ கருத்துரையோ கலவாமல், அப்படியே பிரசுரித்து விட்டனர். இதுகண்ட காங்கிரஸ் தலைவர்களும், ஏடுகளும், கடகடவெனக் கீழே புரண்டழுவதம், தடதடவெனத் தலைமீது கைகளால் மோதிக் கொள்வதும், தகதிமி என்று குதித்துக் கூவுவதுமாக உள்னன. கள்ளியின் கபடம் வெளியான கதைப் போலக், காங்கிரஸ் தஸ்தாவேஜு காங்கிரசின் உண்மையான உள்ளத்தை உலகுக்கு உரைத்துவிட்டது. கள்ளிக்குப் பரிந்து பேசியவன், “கண்ணால் கண்டாலும் வெளியே சொல்லி அவளுக்கு வேதனை மூட்டலாமோ” என்று வாதாடினதுபோலக், காங்கிரஸ் எடுகள், காங்கிரஸ் தாஸ்தாவேஜுகளைச் சர்க்கார் வெளியிட்டதுபற்றி, வாதாடுகின்றன.

காங்கிரசிடமிருந்து கைப்பற்றப்பட்டதாம் தஸ்தாவேஜுகள். ஆகவே அது திருட்டுச் சொத்தாம். எனவே, அதைச் சர்க்கார் வெளியிட்டது, திருட்டுச் சொத்தைக் கையாண்டது போலாகுமாம். இது காங்கிரசாரின் கோணல்வாதம். சர்க்கார் காங்கிரசின் வேடம் கலைந்து, மக்களும் உலகமும் அதன் உண்மைச் சொரூபத்தைச் சுரண்டும் என்றே இதனைச் செய்தனர்.

இதனால் தெளிவானது, ஒன்று, காந்தியாருடைய கோரிக்கையைக் காங்கிரஸ் தலைவர்களிலே பலர் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது திணறியிருக்கிறார்கள் என்பது. இரண்டாவது, காங்கிரசும் குறிப்பாகக் காந்தியாரும் ஐந்தாம் படை வேலையில் நாட்டங் கொண்டுள்ளனர் என்பது.

காந்தியாரின் இயக்கத்தைபற்றிய விவாதத்தின்போது, பண்டித நேரு, பச்சையாகவே இதனை எடுத்துக் காட்டிவிட்டார். அச்சுநாடுகள் வெற்றி பெறுமென்ற ஆபத்தான எண்ணத்தைக் காந்தியார் கொண்டுள்ளார் என்பதும், பிரிட்டிஷார் வெளி ஏறினதும், ஜப்பானியருடன் பேரம் பேசவும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கவும் காந்தியாரின் தீர்மானம் இடங் கொடுக்கிறதென்பதும், பண்டிதரின் கருத்து. இது விவாதத் தஸ்தாவேஜுக்களிலிருந்து நன்கு புலனாகி விட்டது.

இதனை வெளியிட்ட சர்க்கார், குறிப்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ரஷியாவுக்கும் விரோதமாக வார்தா முனிவர் பெர்லின் பேயனுக்கும், டோக்கியோக் கபடனும் உடந்தையாக இருக்கவும் துணிந்துவிட்டார் என்பதை உணர்த்தி விட்டனர். காங்கிரஸ் தேச பக்த வேடம், கள்ளியின் பத்தினிக் கோலத்தைப் போன்றதே யாகும் என்பது விளங்கிவிட்டது. இத்தகைய ஒரு கூட்டம் நாட்டிலே இருப்பதைப் போல, மானக்கேடு, ஆபத்து, அக்ரமம் வேறு இல்லை என்போம்.
சர்க்கார், இந்தத் தஸ்தாவேஜுகளை வெளியிட்டது “மானங் கெட்ட பிரசாரம்” என்று ஒரு மரமண்டை கொண்ட ஏடு கூறுகிறது. பிரசாரம், சர்க்கார் செய்யவில்லை! மானங்கெட்டதை, மக்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். காங்கிரசின் மானம்கெட்டு விட்டது என்பதைத்தான் சர்க்கார் காட்டிவிட்டனர். ஆம்! மானங்கெட்ட அரசியல் விபசார மடமாகி விட்டது வார்தா! மக்களின் எதிர்காலத்துக்கு உலை வைக்கும். உலுத்தரின் இடமாகி விட்டது! ஜனநாயகத்தை மாய்க்கும் கொலைக்களம், வர்ணாஸ்ரமிகளின் வாசஸ்தலம், வடநாட்டு முதலாளிகளின் இருப்பிடம், கபட வேடதாரிகளின் காவற்கூடம், ஏமாளிகளுக்கு ஏதேதோ கூறி ஏய்க்கும் இயந்திரம் ஓயாது வேலை செய்யும் இடமாகிவிட்டது, வார்தா! எனவே தான், வார்தாவின் தீர்மானத்தை, டோக்கியாவும், பெர்லினும் வரவேற்கிறது. சர்க்கார் தக்க சமயத்தில் காங்கிரசின் கபட வேடத்தை கலைத்தது மிகச் சரியான காரியம்! மானங்கெட்டதே என்று கள்ளி கண் பிசைந்துகொண்டால் கவலை என்ன? சோலையிலே சோரநாயகனுடன் சொகுசாகத் திரிந்து, பிறர் கண்ணில் சொக்குப் பொடிவீசி, மஞ்சள் பூசி, நாணிக்கோணி நடந்து, உத்தமி என்று ஊரை ஏய்த்தது வருபவளின் கள்ளத்தனம் வெளிப்பட்டது, ஊருக்கு நல்லது தானே! வார்தா வனிதையும் இத்தகையவளே! அவளின் “சோர நாயகர்கள்” பெர்லின், டோக்கியோவில் உள்ளனர்! அது வெளியாகி விட்டது!!

9.8.1942