அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


முத்தமிழ் கற்றோரே!

பார்வதீ! வா இப்படி! இதோ பார், உடனே உன் பிள்ளைகளை அனுப்பி, பூலோகத்தில் உள்ள புராணீகளை அழைத்துவரச் சொல்லு, வர முடியாது என்று சொன்னால், காதைப் பிடித்து இழுத்து வரச் சொல்லு என்று கடுங்கோபத்துடன் சிவபெருமான் கூறினது கேட்டு, பார்வதி பயந்து நிற்க, நாரதரின் தம்பூரு கீழே விழ, நந்தியின் வால் சுழல, கைலாயமே கலங்கிவிட்டது. மயிலேறி முருகள், ரோகம் சென்று புராணீகளை இழுத்து வந்து சிவனார் முன் நிறுத்த, சிவந்த கண்களுடன் கோபித்து நின்ற தோடுடைய செவியனைக் கண்ட புராணீகள் அப்பனே அம்மா! ஒப்பிலாமளியே என்று பதிகம் பாடலானான்.

நிறத்து உன் பாடலை என்றார் சிவனார்

என் மொழியும் வேம்பாமோ! என்று ஆரம்பித்தான் புராணீகன்.

வேம்பு மட்டுமா! காய்ச்சிய இரும்புபோல் பாய்கிறது என் காதிலே. என்னைப்பற்றி நீ தூற்றியதும், பழித்திருப்பதும், புளுகியிருப்பதும் இவ்வளவு அவ்வளவென்று கணக்கிடமுடியுமா! என்னை நம்பும்படி செய்ய என் குணத்தை, மணத்தை எடுத்துரைத்து, நன்னெறி போதிக்காது. என்னைக் காமுகன், பித்தன், கசடன், கபோதி, கொலைகாரன், பிச்சைக்காரன், பேயன் என்றெல்லாம் தூற்றின உன் நாவை இப்போதே துண்டித்து விடுகிறேன். மக்களுக்க என்னிடம் மதிப்பும், அன்பும் வருமாறு செய்வதைவிட்ட உன்னைக் கண்டு துண்டமாக்குகிறேன். விடுவதில்லை இனி உன்னை என்று வெகுண்டார்!

பொன்னார் மேனியனே! இது என்ன புதுமையான பேச்சு? நான் தங்களுக்கு பக்தகோடிகளைத் திரட்டத்தானே, பலப்பல புராணம் பேசினேன், என் பொருட்டா? என்று புராணீகள் பயந்து கேட்டான்.

என் பொருட்டா? பேஷ்! உன் பிழைப்பின் பொருட்டு என்றார் சிவனார்.

பிரபோ! இதே தொழிலில்தானே நான் பல காலமாக இருக்கிறேன். இன்று கோபித்துக்கொண்டால் நான் என்ன செய்வேன்? அப்படி நான் என்ன உம்மை குறை கூறினேன்? நீரே சகலமும, சக்தியும் நீரே, சாரமும் நீரே, பிரம்மம் நீரே, பரப்பிரம்மம் நீரே, காரியம் நீரே, காரணம் நீரே, காரண காரியம் நீரே .... என்று புரளும் நீரைத் துடைத்துக்கொண்டே புராணீகர் கூற, சிவனார் குறுக்கிட்டு போதும் உன் பொருளற்ற பேச்சு, உன் பழங்கதைகளை, முன்பு, மக்களின் பகுத்தறிவு இல்லாதபோது சொன்னாய், கேள்வி கேட்பவர் இல்லை, உன் வயிற்றுப் பாட்டுக்கும் வந்த தில்லைத் தொல்லை. நானும் சும்மா இருந்தேன். இப்போது பகுத்தறிவு உதயமாகி, மக்கள் யோசனை பெற்றுவிட்ட பிறகும், மடத்தன முகாரியை நீ விட்டபாடில்லையே! என்னைப்பற்றி என்ன எண்ணுகிறார்கள் தெரியுமா! உன்னால் வந்த வினை எவ்வளவு! ஏ! புராணீகா, உன்னால் நான் பட்டதுபோதும் இனி படமுடியாது, என்னை சும்மா விடவும் முடியாது. இதோ திறக்கிறேன் முக்கண்ணை என்று முனிந்தார் சிவனார்.

புராணீகள் சிரித்துவிட்டு மகேசுவரா! முக்கண் என்பதும் நன் கட்டிவிட்ட கதைதானே! திறக்கிறேன் என்கிறீரே என்றான்.

பார்த்தாயா! உன் புளுகைக் கேட்டுக்கேட்டு நான் கூட ஏமாந்து விட்டிருக்கிறேன். மூன்று கண் இருப்பதாகவே நான் எண்ணிக்கொண்டேன். அது கிடக்கட்டும், என்னை நீ ஏன் தூற்றினாய்? அதற்குப் பதில் சொல்லு என்று கேட்டார்.

போற்றினேனேயன்றி தூற்றினேனில்லையே என்று புராணீகள் புலம்பினான்.

எவ்வளவு நெஞ்சழுத்தம்! நான் சின்னஞ்சிறு பாலகனைக் கொன்று என்குக் கறியாக்கி உணவளிக்கச் சொல்லி சிறுத்தொண்டனைக் கேட்டேன். அவனும் ஆர போலவே செய்தானென்று சொன்னாயே! அதுபோதாதா என்னைத் தூற்ற! நான் அவ்வளவு கொடியவனா, ஈவு இரக்கமற்றவனா, பேயா, பூதமா, சுசா, பிள்ளைக்குட்டி பெறாதவனா, பிள்ளைக்கறி கேட்டே னென்றாயே, அது கேட்ட மக்கள் என்னை எவ்வளவுக் கொடியவன் என்ற கருதியிருப்பார்கள், எவ்வளவு பயந்திருப்பார்கள்? என்று பரமன் பதறினார் கேட்டுகொண்டே.

சிராளா! சீராளா! என்று சிறுத்ததொண்டன அழைத்ததும் பிள்ளை மீண்டும் உயிர்பெற்று எழுந்து வருவதாகத்தானே கடைசியிலே கதையை முடித்தேன் என்ற புராணீகர் சமாதானம் கூறினார்.
வெகுநன்று பிள்ளை உயிர்பெற்றது இருக்கட்டும், பிள்ளைக்கறி கேட்டதாகக் கூறினாயே, அது எவ்வளவு பேதமை! பக்தன் ஒழுக்கமுள்ளவனாக, பிறருக்குக் கேடு செய்யாதவனாக இருக்கவேண்டுமென்.று நான் கட்டளையிடலாம், அதன்படி பக்தன் நடக்கிறானா என்ற பரிசோதிக்கலாமேயொழிய, அவள் பிள்ளையை அறுத்துச் சமையல் செய்யும்படி கேட்பதா! நான் அவவ்ளவு கொடுமைக்காரனா! அது மட்டுமா சொன்னாய், அறிவிலி! மற்றோர் பக்தனைப் பரிசோதிக்க அவன் மனைவியைக் கேட்டேன்று கூறினாள், அந்த வல்லாளனும் அனுப்பி வைத்தான் என்று கூசாது சொன்னாயே, இது தகுமா? நீ சரியா உன் கடைமையைச் செய்கிறாயா என்று பரிசோதிக்க வேண்டுமானால், நான் உன் கடமையை எப்படி நிறைவேற்றுகிறாய் என்று பார்ப்பேனா, உன் பிள்ளையை அறுக்கச் சொல்வதா, பெண்டைக் கேட்பதா! யாரோ ஒரு ராஜனுக்குப் பன்றிகளி மந்திரிகளாக்கினேன் என்றும் மந்திரிகளின் மனைவி மார்களைப் பன்றி மந்திரிகளுக்கு பெண்டாக்கினேனென்றம் சொன்னாய், இது எவ்வளவு அயோக்யதனம், அக்ரமம். இவ்விதமான சேட்டைகளா நான் செய்கிறேன்? இப்படி செய்பவர் எமது சிவனார், அவரை வளங்குங்கள் என்று சொன்னால், மானமும புத்தியும் உள்ள ஒரு ஆள் என்னை வணங்குவானா! என் விலாசத்தைத் தெரிந்துகொண்டு வந்து விலாவிலே குத்துவானே! என்றால் சிவனார்.

அந்த ஆயிரம் ஆண்டு விஷயத்தைக் கேளுங்கள் என்று பாரிவதியம்மையார் சிவனாரிடம் மெதுவாகக் கூற, கோபத்தால் குதித்து சிவனால், புராணீகா நான் ஆயிரமாண்டுகள் அன்னாகாரமின்றி பார்வதியுடன் படுத்ககினடந்ததாக ஓர் பெரும் புளுகு பேசினயே, அதைக் கேட்ட மக்கள் என்னைப்பற்றி எவ்வளவு கேவலமாக மதித்திருப்பார்கள், பார்வதியை எவ்வளவு பழித்திருப்பார்கள். இப்படியும் சொல்வதா! இது எம்மைப் போற்றும் முறையா? என்று கேட்க புராணீகள் பயந்து கீழே விழுந்து புரண்டு என் பிழை பொறுத்தருள்க! இனி நான் விட்டேன் இத்தொழிலை என்று வேண்டிக்கொண்டு நிற்கையில், இனிப் புராணங்களைக் கொளுத்தி அதிலே உன்னைப் போட்டுப் பொசுக்கும்படி உத்தரவிட்டுவிட்டேன். அதை மாற்றமாட்டேன் என்று சிவனால் சினந்து கூற சித்தம் சோர்ந்த புராணீகள் செய்வதெதுவெனத் தெரியாது மந்திமுகமும் ஆந்தை விழியுங்கொண்டு நின்றான்.

நிலைகுலைந்து நின்ற புராணீகள் அடியற்ற பனைபோல் அரனடியில் வீழ்ந்து மாபாதகமும தீர்த்த மகேசுவரா! மன்னித்தருள்க! என்று இறைஞ்ச, பிறைசூடி இடிபோல் சிரித்து, ஏடா! மூடா! தாயைப் புணர்ந்தோனை நன் மன்னித்தேனென்று புளுகி, மாபாதகம் கூறியதுமின்றி என் எதிரிலேயுமா கூறத் துணிந்தாய், இதோ பிடி சாபம் என்று கூவினார். இதற்குள் பூதகணங்கள் வந்து நின்றன.
தீ மூட்டிவிட்டீர்களா! என்று சிவனார் கேட்டார்.

தேவ தேவா! முப்புறமெரித்த காலையில் மூண்டதே போல் தீ மூண்டுவிட்டது என்றன பூதகணங்கள். முட்டாள்களே! முப்புறமாவது நான் எரிப்பதாவது, அதுவும் இந்த புராணீகள் கட்டிய கதை என்று கூறிவிட்டு, தூக்கிப் போடுங்கள் தீயில் என்றார்! ஆ! அய்யோ! அரகரா! மஹாதேவா! அய்யோ! என்று புராணீகர் அலரினார்.

லேகியம் லேகியம் என்று கூறிக்கொண்டு இந்த அபினைத் தின்று, மயக்கமுண்டாகி, இப்படி தெரு சிரிக்கும்படி, பிதற்றுகிறீரே மானம் போகிறது. எழுந்திருங்கள் என்று புராணீகரின் மனைவி, பிதற்றிய புராணீகளைத் தட்டி எழுப்ப, புராணீகன் எழுந்து, அட சனியனே! இவ்வளவும் களவுதானா! என்று கூறிக்கொண்டே சிரித்தான். என்ன கனவு? ஏன் சிரிக்கிறீர்கள்? என்று மனைவி கேட்க, புராணீகன், வேடிக்கையான கனவு கண்டேனடி வள்ளி! கைலாயம் போனது மாதிரியும், சிவபெருமான என் மீது கோபித்துக்கொண்டு, நெருப்பிலே தூக்கிப்போடும்படி பூதகணங்களை ஏவின மாதிரியும், கனவு கண்டு, கூவினேன் என்றார். எனக்குத் தெரியும், இதுவும் நடக்கும் இதுக்குமேலும் நடக்கும். ஊத்துக்காட்டாளுக்கப் போடவேண்டிய பூஜையைச் செய்யாத குற்றம் இது என்றாள் புராணீகன் மனைவி, ஓஹோ! புதுப்புடவைக்கு அடிபோடுகிறாயா, என்று கூறிவிட்டு, புராணீகர் புறக்கடை போனார்.

தீர்ந்ததா! இது என்ன கதையா, கட்டுரையா, கதம்பமா, காமிக்கா? என்று இதனைப் படித்து முடிந்த வீரனைக் கேட்டேன்.

இது கதையல்ல! நான் மதுரையிலே அரங்கேற்றப் போகும் மதியேகதி என்னும் நூலிலே ஒரு பகுதி என்றான்

மதுரையிலே, நீ நூல் அரங்கேற்றுகிறாயா! இப்போது படித்தது மதியேகதி என்பதா? இது என்ன வீரா, விந்தை! என்கிறேன் நான்.

இது வித்தையோ! நானாவது புராணீகனின் புளுகை வெளிப்படுத்தி, ஒரு முழு முதற்கடவுளுக்கு இத்தகைய மூடக்கதைகள் பிடிக்காது என்பதை எடுத்துககாட்டி, ஆஸ்தீகத்தின் மூது படர்ந்துள்ள அழுக்கைப் போக்கும் அன்பு கலந்த நோக்குடன் இந்நூல் இயற்றினேன். உண்மையிலேயே, சிவனார், புராணீகளைக் கண்டால் சீறமாட்டாரா, நெருப்பிலிடுவென்றுரைக்காரா! உண்மையாகவே ஒவ்வோர் புரணீகரும், தாம் பாராயணம் செய்யும் நூல்கள், புளுகு மூட்டைகள் என்பதைத் தெரிந்து கொள்ளாமலா இருக்கிறார்கள்! என் நூலிலே வரும் புராணீகன் அபின் தின்பவன், ஆகவே கெட்ட கடவு கூறுகிறான்! எனவே இந்தப் புது நூல் இயற்கைக்குப் பொருத்தமானது, உண்மை ஆஸ்தீகத்தின் உறைவிடம், மதியே மக்களுக்குத் தேவை என்பதை விளக்குவது. இதற்கு நீ குறை கூறினால், நான் என்ன சொல்வது? கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், இராமாயணாதி, இதிகாசங்கள் ஆகிவைகளைக் காட்டிலும, நான் கூறினதிலே, ஆபாசமோ, அண்டப் புளுகோ இருபபதாக கூறினதிலே, ஆபாசமோ, அண்டப் புளுகோ இருப்பதாக எடுத்துக்காட்டுபவருக்கு ஆயிரம் ரூபாய் இனாம் அளிப்பேன் என்றான்.

கதையும் கற்பனையும் கிடக்கட்டும் காரியத்தைக் கூறு என்று கேட்க, வீரன் விளம்புகிறான்.

கேள் பரதா! மதுரையிலே ஆகஸ்ட் 1,2,3-ல் முத்தமிழ் மாநாடு கூட்டுகிறார்கள். இயல், இசை, சாடகம் என்று முப்பிரிவு. முத்தமிழ் கற்றோர் கூடுகின்றனர். அவர்களிடையே சென்று, நான் உனக்குப் படித்துக் காட்டிய நூலைப் படித்துக் காட்டி அய்யன்மீர்! எனது நூலுக்குச் சாற்றுக்கவி தருவீர் எனக் கேட்கப்போகிறேன். இதற்கா! இது என்ன கேலிக் கூத்து என்ற கேட்பர். அப்படியானால் தரவேண்டாம். ஆனால், தமிழ் நூல்கள் என்ற, விள்க்கவுரை, விருத்தியுரை, அரும்பதவுரை, பொழிப்புரை என்ற ரூபங்களோடு வெளிவந்துள்ள புராணங்களை நீங்கள் ஒதுக்கித் தள்ள போகிறீர்களா என்று கேட்பேன். ஓங்காரச் சொரூபத்தின் ஒய்யாரத்தை மெய்யாரமாகக் கொண்ட அந்த நூல்களைக் குறை கூறலாகாதே என்றுரைப்பர்.

பழைய புராணத்தைக் கண்டித்து மக்களிடையே அவை பரவாது தடுக்காமுன்னம், முத்தமிழ் கற்றும், சித்திரத்தமிழ் தீட்டியும் பயன் இல்லையே! இதற்கு மாநாடு ஏன்? என்று கேட்கப் போகிறேன் என்று வீரன் கூறினான். சற்றுக் கோபத்துடன் சேச்சே! அதெல்லாம் கூடாது வீரா! முத்தமிழ் மாநாட்டார் பைந்தமிழ் பரவச் செய்யவே இத்தனை பாடுபடுகின்றனர் என்று நான் சமாதானம் கூறினேன். அப்படியானால் அவர்களுக்கு நீ சில யோசனைகள் கூறு. முத்தமிழ் மாநாடு பலன் தருமாறு ஏற்பாடு செய்! பழைய புராணத்தைப்பற்றிப் பேசிப்பாடி ஆடிடக் கூடுவரோல், நான் என் புதுப் புராணத்தைப் படித்து, பொற்காசு தாரும் என்று கேட்பேன், என்றான் வீரன். வீரனும் நானும் பிறகு கலந்து பேசினோம். கற்நோருக்கு முழு அன்புடன் இதனைத் தருகிறோம்.

முத்தமிழ்க் கற்ற வித்தகவே கேண்மின்! இன்று தமிழகத்திலே இயல, இசை, நாடகம் எனும் முப்பிரிவுகளிலும், மக்களிடை, மொத்தத்திலே பரப்பப்படும் அறிவு, கடவுள் கொள்கைக்கும், மார்க்க போதனைக்கும், மன எழுச்சிக்கும் ஏற்றதாகவோ, போற்றி வரவேற்கக் கூடியதாகவோ இல்லை என்பதை வீணில் மறுக்காதீர், மாநாட்டிலே விவாதிக்க மறுக்காதீர், உண்மையை ஊராரிடம் கூறாது மறைத்துவிடாதீர்!
இயல், இசை, நாடகம், மக்களுக்கு அறிவு வளர ஆர்வமூட்ட, மகிழ்ச்சி பிறக்க, நன்னெறியிலே நடக்க வைக்கப் பயன்படவேண்டும். வெளும் கற்பனை, வீண் கனவு, விபசீத புத்தி, வெறுக்கத்தக்க ஆபாசம், மூடத்தனம், கருட்டுக் அகாட்பாடு, கோணர் சேட்டைகளாகும். சடங்குகள், மிரட்சி, பீதி, மன மயக்கம் ஆகிய பீடைகள், பரவாதிருக்கும் சமுதாயமே, புத்துலகு கோருகிறது. முத்தமிழ் இதற்குப் பயன்படும்படி, இன்று உளதா என்பதை ஆராயுங்கள்

முக்கனிச் சாற்றைத் தங்க வட்டிலே ஊற்றி, சதங்கை குலுங்க நடந்து வந்துப் பருகிடத் தந்திடும் பைங்கிளியனையள் போல், கவிகள், தமது கவிதைத்திறனைக் காவியமாக்கித் தருவர், நாம் களிக்க, கனிரசம் பருகிக் கிளிமொழியாளுடன் கொஞ்சிடுதல் போல் கவிதைகள், காவியம் ஆகிய உயர் கலைகளைக் கற்று உள்ளம் குளிர்வோர் உலகோர்.

ஓட்டை மொந்தையிலே, ஈ மிதக்கும் புளித்த கள்ளை ஊற்றி, காரக் கருவாட்டைச் சுவைத்து இதனையும் பருகடா... கந்தா! என்றுரைத்து, கள்ளுக்கடைக்காரன், குடியனுக்குத்தர, அவன் அதனை ஆடிப்பாடிப் பருகி அண்டசராசரம் ஆடதண்ணே! ஆதிசேஷனும் இங்கே ஓடுதண்ணே! என்று கூத்தாடுவான், கெடுவான் அதுபோல் உலுத்துப்போன கொள்கைகளை, மட மடுவில் ஊறிப்போனவைகளை, புராணம் என்று கூறி, மக்களிடம் போதித்தால், பேதை கொண்டோராகி, புதுமை கண்டு மிரண்டு, பழமையில் நெளிந்து, பாசை பிடித்த மனத்தோராகி, மக்கள் பாழ்படுகின்றனர். கலை, மக்களின் அறிவுக்குக் கொலைக் கருவியல்லவே! மக்களின் மாண்புகளை வளரச் செய்யும் வாய்ப்பு! அறிவைத் துலங்க வைக்கும் சக்தி! ஆனந்தபுரிக்கு அமைந்ததோர் வாசல்! பண்பு எனம் பயிருக்கு நீர்! வாய்மை எனும் மரத்துக் வேர்! கற்றோருக்குக் கரும்பு! இளைத்தோரையும் எஃகு உளத்தோராக்கும் மருந்து! காலத்தை மீட்கும், காலத்தைப் புதுப்பிக்கும் வன்மையும் கொண்டது. கலை, இனத்தின் சிறப்புக்கோர் சித்திரச்சாலை! வஞ்சனைக்கு வலையல்ல! ஆபாச அலையாகாது! மூடத்தனம் குடிபுகும் வளையாக, உலுத்தர் அழைத்துக்கொள்ளும் உளையாக, பாம்பியல் பினருக்கோர் புற்றாக, சீலமற்றோரின் சிந்தனைச் சேறாக இருப்பின், அத்தகைய கலை, அதனைக் கற்கும் மக்களின் அறிவை நிச்சயம் கொலை செய்து, வஞ்சக வலையில் விழச் செய்துவிடும் என்பதனை எவர் மறுக்க முடியும்?

கலை வளர்ச்சியிலே கருத்துக் கொண்டோரே! கற்றோ! கூறுமின், இன்று நம் தமிழகத்திலே, இயல், இசை, நாடகமென்னும் துறைகளிலே, போதிக்கப்பட்டு வரும் விஷயங்கள். உன்னதமான கலையா, அன்றி அறிவுக் கொலையா என்பதனை.

ஆன்றோர் தந்தனர், அணியிலக்கணங்கண்டனர், அவைகளின் அழகை என்னென்பேன், உவமைகளின் உயர்வு எத்துணை, காட்சி வருணனை எவ்வளவு களிப்பூட்டுகிறது, நடை அழுகு காணீர் - என்று கூறாதீர்! நஞ்சை, நவமணிப் பெட்டியிலிட்டுத் தந்தாலும், கோல்லுமேயன்றி, விடாது. நர்த்தனமாடிடும் நாகப்பாம்பின் பற்களிலே விஷமே காண்போம். நயவஞ்சகரின் நடை உடை காணக் காட்சியாகத்தானிருக்க்ம், நம்பிடிலோ, நாசமே வந்து நிற்கும். எனவே, நூல்களின் நடை அலங்காரத்தை விரித்துக்ட்டி, மற்றதை மறைப்பது, மக்களைக் கெடுப்பதாகும்.

நான் கூறுகிறேன், கேட்டுவிட்டுப் பிறகு பதில் கூறுமின், இன்றைய நிலையிலே முத்தமிழ் மூலம் மக்கள் கற்றிருப்பது, பலப்பல என்ற போதிலும், விரித்துப பிரித்துத் தொகுப்பின், மூன்று கருத்துக்கள் என்று சுருக்கமாகக் கூறலாம். மக்கள் இயல், இசை, நாடகம் மூலம் இன்று கற்றிருப்பது.

1. விதி
2. மேல் உலக வாழ்வு
3. குலத்துக்கோர் நீதி
என்பனவாகும். இல்லையா என்று கேட்கிறேன். இவன் யார், ஏதுங்கல்லாதான் என்று சினந்து கொள்ளாதீர்! தாண்டவமாடும் தயாநிதியின் இடது கால் தூக்கி நின்றாடும் பெருமையினைக் குறித்து, நீவிர் வெண்ப பாடுவீர், நானறிவேன்! நன் உங்களைக் கேட்பது உங்கள் கல்வியின் திறக் காட்டுங்கள் என்றல்ல! காட்டச் சொன்னால், காளமேகம் போல் வசைபாடி, இரட்டையர் போல் இடித்துக் கூறி, ஒட்டக்கூத்தர் போல் அதட்டி என்னை கம்பதாசனாகிறாயா, எமது கல்வித் திறனைக் கொண்டு உன்னைக் கண்டதுண்டமாக்கட்டுமா என்ற கேட்பீர் என்பது எனக்குத் தெரியும். நன் கேட்பது, உமது கல்வியின் திறமையையல்ல! கல்வியின் தன்மையை!!

எலும்பைப் பெண்ணுருவாக்கிய அற்புதத்தை, எழு சீரடியிலே எதுகை மோனை துலங்க எளிதில் விளங்கா பதங்கள் குலுங்க அமைத்து மக்களிடை வீசினாலும், எலும்பானால் என்ன? எண்ணினால் பெண்ணாகாதோ, பெருந்துறையான் பேறால்! என்று பதம் செய்து இசைபெய்து அளிப்பினும், அன்றி, டர்னிங்சீனும், தபேலா முழக்கமும், எலக்ட்ரிக் ஜோடனையும் கலந்து, நாடக ரூபமாக்கித் தரினும், எலும்பு பெண்ணுருவாயிற்று என்ற கருத்தை முத்தமிழிலே, எத்தமிழில் தருவதாயிருப்பினும், கொச்சைத் தமிழே தெரிந்த நான் சங்கத் தமிழ் கற்ற சான்றோரே! உம்மைக் கேட்கிறேன், மக்கள் கொள்ளக்கூடிய கருத்து என்னவாக இருக்க முடியும். மூட நம்பிக்கையன்றி, இங்கே முத்தமிழ் தந்தது என்ன! இதனைச் சற்று ஆலோசியுங்கள்.

முத்தமிழ் மூலமும இன்று, மக்கன் வாழ்வுக்கும், தாழ்வுக்கும், சந்தோஷத்துக்கும் சஞ்சலத்துக்கும், பிறப்புக்கும், இறப்புக்கும், செல்வ வாழ்வுக்கும் செந்தேள் என கொட்டும வறுமை வாழ்வுக்கும், மாட மாளிகையிலே உலவும் மந்தகாசத்துக்கும், குடிசையிலே குளிர்காய்ச்சலால் குமுறும் கோலத்துக்கும், சுகதுக்கத்துக்கும் மக்களிடம் கூறப்படும் காரணம் என்ன? விதி! விதி! நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தும், கையே தலையணையாய், கட்டாந்தரையே மெத்தையாய், காய்ந்த வயிறே தோழமை கொண்டு கஷ்டப்படும் பாட்டாளியின் பரிதாப வாழ்வுக்குக் காரணம் என்ன? விதி! அது தீருவதெப்படி? ஆண்டவனை பூஜி! அந்த முறை யாது? அந்தணருக்கு வேண்டுவன தந்து அவரடி தொழு! பலன் என்ன? பரமனின் திருவடிநிழல் கிடைக்கும்! பிறகு? வேலுலகம் மேன்மையாய் வாழுவாய்!

இதுதானே அய்யன்மீர், முத்தமிழ் இன்று மக்களிடையே போதித்திருக்கும் கருத்து! மக்களின் மனதிலே, இக்கருத்து வேரூன்றி இருப்பதற்குக் காரணம், இயல், இசை, நாடகமெனும் மூன்றின் மூலமும, ஓய்வின்றி இக்கருது திணிக்கப்படுவதனாலேயன்றோ! விதிவசத்தால், சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமனே, சிரமிழந்தான் பரமனே, பித்தனாகி பிக்சையெடுத்தான். பாற்கடலில் துயில்பவனே, பதினான்காண்டு காட்டிலே திரிந்தான் என்ற கருத்தைப் புகுத்திவிட்டீர்களே. மதுரை மில்லிலே மார் பிளக்க பாடுபட்டும், வயிறாற உணவின்றி வாடும் தொழிலாளியோ, பண்ணையிலே மாடென உழைத்து வாழ வழியின்றி வாடும் உழவரோ, தமது குறைதீர மருந்து எதுவென்றுணர, மார்க்கம் ஏற்படமுடியுமா! மார்கழி மாத நோன்பு முதற்கொண்டு மாரியம்மன் பண்டிகை வரையிலே கற்றுக்கொண்டு, வருகிற வருவாயிலும் பெரும் பகுதியை வஞ்சகருக்கு அளித்து வாட்டத்தை மேலும் பெற்று, காலுக்குச் செருப்புமில்லை! கால் வயிற்றுக் கூழுமில்லை! வீணுக்கு உழைத்தோமடா என் தோழனே!! என்று அவர்கள் லாவணி பாட நாடகத்திலேயோ, பஜனைக் கூட்டத்திலேயோ, புராணீகனின் மாடத்திலேயோ, அத்தகைய பாட்டாளி மக்களைக் கூட்டி வைத்து யாரை விட்டதுகாண் விதிவசம்
எவரை விட்டதுகாண்
ஈசனை சிவகாமிநேசனை விட்டதா?
எம்பெருமான் ரகுராமனை விட்டதா?
யாரை விட்டதுகாண் விதிவசம்
என்று பாடி, அடக்கிட முத்தமிழ் மெத்தப் பயன்படுகிறது உண்டா, இல்லையா?

முத்தமிழ் என்று கூறி மக்களிடையே இன்று பரவச் செய்துள்ள கருத்தின்படி, பார்ப்பனர் என்ற குலம் உயர்ந்து, மற்றவை படிப்படியாகத் தாழ்ந்து குலத்துக்கோர் நீதி உண்டு. அது கோணிடில் உலகு கோணிடும் என்ற வண்ணமும், ஏற்பாடும் நிலைக்கச் செய்துவிட்டனர். ஒரு சிறு கூட்டம், பெரும்பான்மையினரை, இழிகுலமென்று இழித்துப பழித்துப் பேசி, அடக்கி ஒடுக்கி அழித்திடும் கொடுமை, இங்கன்றி வேறு எங்கேனும் உண்டா! இடி பலப்பட்டும் எழுச்சியின்றி ஏழை மக்கள் இருப்பதன் காரணம், என் செய்வது, எல்லாம் பிதிவசம் என்று அவர்கள் எண்ணும்படி செய்து வைத்த சூழ்ச்சியல்லவா! இந்தச் சூழ்ச்சிக்குத் தான் இன்று முத்தமிழ் படைக்கலமாக இருக்கிறது! நான் கூறுவது தவறா, விதி, மேலுலக வாழ்வு, குலத்துக்கோர் நீதி எனும் மூன்று மயக்கம் கலவாது முத்தமிழை இனியேனும் அளிப்பீர்கள் என்று கேட்கிறேன்.

பக்தன் பாடுபடுவான், இடபாவாகன ரூபராகப் பரமன் காட்சியளித்து, உன் கஷ்டம் தீர்ந்தது. இனி சிவரி வா என்று அழைப்பர். இதுதானே முத்தமிழில், மூலக்கருத்தாக மக்களிடை புகுத்தப்பட்டுபிட்டது. வாழ்வை மாயமென்றும், உலகை ஓர் கற்பனைப் பொருள் என்றும், சுகதுக்கத்துக்கு சித்ராபுத்திய சாசனத்தின்படி ஏற்கெனவே போட்டு வைக்கப்பட்ட தலையழுத்து காரணம் என்றும், குல தர்மமே புண்ணியமென்றும், பிறவியே பாவமென்றம் இவ்வுலக வாழ்வே ஒரு கேடு என்றம், மேலுலக வாழ்வே மேம்பாடுடையதென்றும், முத்தமிழாலும் நித்தநித்தங்க கூறிவிட்டுப் பிறகோர் நாள் மக்களைப் பார்த்து மகாஜனங்களே நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? சக்தி வேண்டாமா, தைரியம் வேண்டாமா? சுயராச்சியம் வேண்டாமா? ஜனநாயகம் வேண்டாமா? சமதர்மம் வேண்டாமா? என்று முழக்கம் செய்து பலன் என்ன? அவன் ரயில்வே ஏற்பட்டும், இன்னமும், எத்தனை தூரமோ அறியேன் பண்டரிபுரம் என்றுதானே பாடுகிறான் பஜனைக் கூட்டத்திலே. ரயில்வே கைடு இருக்கிறது. பார்த்தால் பண்டரிபுரம் போக வேண்டிய இடத்திலிருந்து எவ்வளவு மைச், எவ்வளவு நேரத்திலே போகிறது; என்ன சார்ஜ், இவ்வளவும் தெரிந்துகொள்ளலாம்! செய்கிறானா! கிடையாது! பஜனைக் கூட்டத்திலே உட்கார்ந்துகொண்டு எத்தனைத் தூரமோ அறியேன் பண்டரிபுரம், கால்களும் நோகுதே, கடும் பசியாகுதே என்று கதறுகிறானே அத்தகைய மனப்பான்மைக் காரனிடம் போய், காலர்மார்க்ஸ் எழுதிய கேப்பிடலில், 14-ஆம் பக்கதிலே மூன்றாவது பாராவில் முதல் வரியிலே வர்க்கப் போராட்டத்தின், உண்மையை இன்னவிதமாக விவரித்திருக்கிறார். புரட்சி ஓங்குக. உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்என்று பேசினால், என்ன நினைக்கிறான்! பெரிய கூட்டம்! உரத்தக் குரலிலே பேசுகிறான். அடுத்த மாதம் ஸ்டிரைக் நடக்கும் என்று இலைகளை எண்ணிக்கொண்டு வீடு திரும்புகிறான். வழியிலே முச்சந்தி ப்ளிளையாருக்கு மூன்று தோப்புக்கரணம் போட்டுவிட்டு மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்காமல் போவானா? என்று எண்ணிக்கொண்டு வீட நுழையும்போது, எதிர் கடையிலே எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிளெட் காட்டில் வளரும் பல போடி எயிரை, ஊட்டி வளர்ப்பவர்கள் யாரோ. . . என்று இசைவுடன் விதி எனும் எண்ணத்தை கலந்து இன்ஜெக்ஷன் கொடுக்க அவனைக் கண்ட மனைவி இப்போது கெவுளி சொல்லிற்று நீங்களும் வந்தீர்கள் என்ற கூற, இருவரும் இன்றைக்கு இருப்பது போலவே கஷ்டம் இருக்கும். விடியாமல் போகுமா? என்று பேசிக்கொள்ள, மூத்தகுமாரன் சுகவாழ்வு துன்பம், தாழ்வு என்றும் சதம் என்று எண்ணலாமா? அரன் சோதனையினாலே மனதுயர்ப் படலாமா? தலைவிதி விட்டுப் போமா என்று பாடிக்கொண்டே உள்ளே நுழைகிறான். பாட்டாளியின் வாழ்க்கை இதுதானே!

சீழ்ச்சியுறு தமிழகமே எழுச்சி கேட்பாய் விசை ஒடிந்த தேகமே வன்மைகோரு! தாழ்ச்சி நீக்கி எழுச்சி பெறு. தடை எதிர்த்தொழிதது விடுதலை கோரு.

மூடமதியே விலகிநிலி! இருட்டுக் கொள்கையே எம்மை அண்டாதே, எட்ட நில்! மெய்யரிலே எம்மை ஆதரி!

விதிவிதி என்று விம்மாதே! கதி இலையே என்று கதறாதே. மதியிழந்து மனமயக்கில் ஆகாதே. என்னை உணரு! உன் கஷ்டத்தின் காரணத்தைக் கண்டு உலகைத் திருததி அமைப்பேன் என்று முழக்கம் செய்.

இங்கு வாழ்வேன் என்று இயம்பு! இவ்வுலகு மாயை எனில், எனக்கு மட்டுமோ, சிற்றரசர் சீமான்களுக்குமோ என்று கேள். மாயா உலகு அவர்கட்கு மகிழ்ச்சியும் எனக்கு வாட்டமும் தருவானேன்? வெட்டி வீழ்த்துவேன் வேதனை தரும் முறைகளை என்று கூறி வீரனாக வெளியே வா!

உறுதி! உறுதி! உறுதி! ஒன்றே ஒன்றே சமூகம் என்றெண்ணார்க்கு இறுதி! இறுதி! இறுதி! எனும் புரட்சி மொழி பேசு.

முத்தமிழே! இவைகளை என் தோழர்களுக்கு இனியேனும் நீ தரவேண்டும். இது என் விருப்பம். முத்தமிழ் கற்றோரே! திடுககிட வேண்டாம். விதி மேலுலக வாழ்வு என்றுரைக்கம் சரி, குலத்துககோர் நீதி கூறிடும். கெடுமதி, கந்தபுராணம், இதிகாசம், காவியம், கவிதை எதுவாயினுஞ் சரி, அவைகளை இயற்றினோர், கம்பன், கடம்பன், சிம்பன் என்றிருப்பினும் சரியே,. இந்த முழுமோச மூன்று கருத்துகளையும் கொண்ட எங்களை இனி மக்களுக்குத் தாரோம் என்று துணிகரமாக ஓர் துர்மானம் நிறைவேற்றுவீரா! வீரரையும் கோழையாக்கும் விபருதத் தன்மையும், ஆண்டவனை அநாகரீகச் சேட்டைக்களாக்கிக் காட்டும ஆபாசத்தையும், மக்களின் மனவலிமையை மாய்க்கும் கோடுமையையும், பார்ப்பன குலத்துக்கே உயர்வு தந்து மற்றையக் குலத்தவரை அடிமையாக்கும் நேரத்தையும் இவ்வுலகம் பொய். அங்கிருப்பதே மெய் என்றுரைக்கு.ம் வஞ்சகத்தையும் எக்கஷ்டம் வரினும் அவனிருக்கிறான் ஆட்கொள்ள என்று கூறி, வழக்கைக் காலங் குறிப்பிடாது, வாய்தா போடும் வழக்கத்தையும் புகுத்தியுள்ளவை. இயலிலே, இசையிலே நாடகத்திலே எங்கக இருப்பினம் அவைகளை உள்ளடக்கிய வைகளை ஒழித்துவிடும் தீரம் உங்களுக்குப் பிறக்க வேண்டும்.

கலை போய்விடுமே! என்று கண்ணீர் விடாதீர்! அவைகளின் அழகு என்னே! என்னே! எனறு ஏங்காதீர்! ஏழாவது முறையாக இந்தக் காவியத்துக்கு இன்னவிதமான உரை என்டே முக்கால் ரூபாய் விலையில் 7600 காபிகள் அச்சிட்டு விட்டோமே, இப்போது எப்படி கலையிலே உள்ள கரைக்காக அத்தகைய காவியமே வேண்டாம் என்று கூறுவது என எண்ணிப் புத்துலகுக்கு எதிரிகளாகாதீர்!

நீங்கள், புதுக் கருத்துக்கள், சமுதாய நீதி, மக்கள் எழுச்சி ஆகியவைகளைக் கொண்ட காவியங்களை இயற்ற வல்லீர். கவிபாடிட அறிவீர். பண்ணமைக்க முடியும். நாடகம் தீட்டிட இயலும். பழைய கூளத்தைக் கட்டிக்கொண்டு ஆழுவதை நிறுத்திக் கொண்டு, மக்களின் இன்பவாழ்வுக்கு, விடுதலைக்கு, அறிவுக்கு, சமத்துவத்துக்குத் தேவையான புது நூற்களை கவிதைகளை, பண்களை, நாடகங்களை இயற்றும் சக்தி உமக்க உண்டு. ஆனால் பழைமையிலே புராணத்திலே உள்ள பக்தி, உமது சக்தியைச் சாய்க்கிறது. இது கேட்க கோபித்து சு.ம.வின் குயுக்தி வாதம் என்ற தூற்றிவிட்டுத் திருப்தி அடையாதுர் என்று நான் முத்தமிழ் கற்றோரைக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களை நான் மாறச் சொல்கிறேன். இணங்கினால் என் மகிழ்வு எவ்வளவோ இருக்கும். இளைஞர் உலகில் இருப்பவன் நான்! என் எள்ளம் அந்த உலகின் எண்ணம்! புத்துலகப் பூந்தோட்ட வாடை! அவர்கள் இணங்க மறுத்தால், இருகை கூப்பி அவர்களைத் தொழுது, இளைஞர் உலகம், பல கற்ற பெரியோரே, உலக நிலை கற்க மறந்தீரே! இதோ உலகு மாறிக்கொண்டே இருக்கிறது. காணீர்! என்று கூறிவிட்டு இளைஞர் உலகம் வீறுகொண்டு எழும் என்பதிலே எனக்குச் சந்தேகமில்லை.

முத்தமிழ் வல்லோருக்கு நான் இத்தனையும் கூறினது. அவர்களின் மனம் மீண்டும் மீண்டும் புணத்திலே போய்ப் புதைந்து கொள்ளாமலிருக்க வேண்டும், அவர்கள் திறமை, துருப்பிடித்த புராணத்துக்குப் புதுமெருகிடும் பயனற்ற வேலையைவிட்டு, அவர்கள் புத்துலகு அமைக்கும் பணியிலே ஈடுபட வேண்டும் என்ற விருப்பத்தினால்! உலகெங்கும் ஊரெங்கும் புத்துணர்ச்சியும், புதுமலர்க்சியும் எற்பட்டு வருவதால்! விடவே மாட்டேனே! நான் அதனை விடவே மாட்டேனே! என்று கூறிக்கொண்டு நிற்கவும். புல்லாகிப் பூண்டாகி என்ற பதிகத்துக்கு விளக்கவுரை பதிப்பித்து டார்வின் கொள்கையைவிட இதிலே தத்துவ விசேடமுண்டு என்று தர்க்கித்தும் அவர்கள் தங்கள் காலத்தைக் கழிக்க விரும்பினால் நான் அவர்களைத் தடுக்க முடியாது. ஆனால் ஒரு திருப்தி, நம்பிக்கை, உறுதி எனக்கு. அவர்களின் காலம் தீர்ந்துவிட்டது. புதுக்காலம் பிறந்து கொண்டிருக்கிறது! அதன் ஒளி வீசத்தான் போகிறது! மணம் பரவித்தான் தீரும்!!

(திராவிடநாடு - 02.08.1942)