அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நச்சுப் பொய்கை

பசி! பசி! பட்டினி! பஞ்சம்! - என்று அரண்மனைக்கு வெளியிலே ஆயிரம் ஆயிரம் மக்கள் அலறித் துடித்தழுகின்றனர்.

சுவை! சுவை! பண்டமும் பானமும்மிகச் சுவை! - என்று களித்துக் கூறுகின்றனர் ஒருசிலர், அரண்மனைக்குள்ளே.

பசியால் வாடி, பஞ்சத்தால் பதைத்து எலும்புந் தோலுமாக உள்ளனர், அரண்மனைக்கு வெளியே இருந்து அழும் மக்கள்.

பொன்னோ, பூங்கொடியோ, மின்னலோ, கன்னலோ, என்று உள்ளனர் உள்ளே இருக்கும் உல்லாசிகள். வெளியே பெரும்பாலோர் - உள்ளே சிறுகூட்டம்!

பிரான்சு நாட்டிலே இக்காட்சி நடந்தது - மக்களின் புரட்சிப் புயல், மாடமாளிகைகளையும், கூடகோபுரங்களையும் ஆங்கு குடியிருந்து கொண்டிருந்த மமதையாளர்களையும் கவிழ்க்கா முன்னம்.

“ஏன் இதுகள் இப்படிக் கத்துகின்றன” என்று பிரான்ச்சு அரசியார் கேட்டார். தோழியர் “ரொட்டி கிடைக்கவில்லையாம், அதற்காக அழுகிறார்கள்” என்றுரைத்தனர். அரசி கைக்கொட்டி நகைத்துவிட்டு, இதற்காகவா இவ்வளவு ஆர்ப்பரிப்பு? ரொட்டி கிடைக்காவிட்டால், பிஸ்கட் சாப்பிடக் கூடாதோ” என்று கேட்டார்களாம். பஞ்சம், பசியறியாத பரிமளவல்லிக்கு ரொட்டி வாங்கித் தின்னவே காசின்றிக் கதறும் மக்களிடம் பிஸ்கட் வாங்கப் பணம் ஏது என்பது தெரியாது. வெளி உலகில் உள்ள வேதனையைத் தெரிந்த கொள்ளாமல், அரண்மனைக்குள்ளே வாழ்ந்த வனிதைக்குப் பலகோடி மக்கள் படும் கஷ்டம் தெரியாது.

இத்தகைய மனப்பான்மை, பிரான்சுப் புரட்சியினால் சிதறடிக்கப்பட்டது, ரஷிய புரட்சியினால் அழிந்தொழிந்தது என்று கருதிக்கொண்டிருந்தேன், இன்றும் இத்தகைய உலகமறியாத, உழைப்பாளரின் பெயர் தெரியாத, தெரிந்தாலும் தெளிவு பிறக்காத, பேர்வழிகள் உண்டென்பதைச் சென்னை மெயில் விளக்குகிறது.

வெள்ளைக்காரர்கள், திராவிட இனத்தினிடம் அக்கரை கொண்டழைத்தவர்களல்ல. கடந்த 150 ஆண்டுகளாக அவர்கள் ஆண்டு வந்தவிதம், மடிந்து கொண்டிருந்த ஆரியத்துக்கு மறுமலர்ச்சி தந்ததே ஒழிய, திராவிட மக்களை ஈடேற்றியதாக இல்லை என்பதை நான் கூறத் தேவையில்லை. அண்டம்புகழும் ராசதந்திர ஆங்கிலேயர் திராவிடரின் துயர்தீர மார்க்கமெது வென்பதையோ திராவிட மக்கள் முன்னாளில் வாழ்ந்தவிதம் பற்றியோ சிந்தித்ததே கிடையாது. யார் தங்களின் அடிவருடிகளாக இருப்பர், யார் சரியான தரகர்களாக இருப்பார்கள், யாரிடம் நாலு இரண்டு வீசினால் நடுங்கி ஒடுங்கி நடப்பார்கள் என்றதனையே குறிக்கோளாகக்கொண்டு இதுவரை ஆட்சி செய்து வருகின்றனரேயன்றி, இந்நாட்டுப் பழங்குடி மக்களிடம் பரிவு காட்டியதாகவோ, புதுநீதி வழங்கியதாகவோ எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர் கூறட்டும் கேட்போம். நமது இனத்திலுள்ள தரித்திரம், தற்குறித் தன்மை, தன்மான மங்குதல், ஆகியவைகள், 150 ஆண்டுகளாகக் குறையக்காணோம். மூலைக்குச் சென்றிருந்த ஆரியம் முடிசூட்டிக்கொண்டு இன்று வெளிவரக்காண்கிறோம். வேதனை நமக்கு! வருத்தம் நம்மவருக்கு! ஆரியரும் ஆங்கிலேயரும், ஆலிங்கனம் செய்துகொண்டே வாழ்கின்றனர். இடையிடையே சிறு ஊடல்கள் நடக்கின்றன. ஆனால் உரசலுக்கும் உல்லாசத்திற்கும் முடிவு ஏற்படுவதில்லை. இனம் இனத்தோடு தானே!

மெயில் பத்திரிகை இதனை மெய்ப்பிக்கும் விதத்திலே, 29ந்தேதி ஒரு தலையங்கம் தீட்டியிருக்கிறது. அதிலே, நமது இயக்கத்தை வகுப்புவாத இயக்கமென்றும், நமது தலைவர், வகுப்புவாத விஷத்தைப் பெய்பவரென்றும் கண்டிக்கிறது. நமக்குப் புத்திகூறவும் முற்படுகிறது. அதற்காகச் சில காரணங்களையும் கட்டிக்கொண்டு வருகிறது. அதற்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் போக்க வேண்டாமா! பாவம்! நல்ல மனிதருக்கு, திடீரென்று காக்காய்வலிப்பு வந்து, நடுரோட்டில் வீழ்ந்து விட்டால், நாலுபேர் நின்று ஏதாவது சிகிச்சை செய்யத்தானே வருவார்கள். மெயில் பத்திரிகை, மேதாவிகளால் நடத்தப்படுவதாகவும், மேதினியின் விஷயம் பூராவும் தெரிந்தவர்கள் தீட்டுவதாகவும் கூறப்படும் ஏடு. அதுமிகச் சாதாரண மான பேர்வழிகளின் பாணியில் செல்வதைக் கண்டால், உள்ளபடி எனக்கு, கோபத்தைவிட பரிதாபந்தான் பிறக்கிறது.

திராவிடர், ஆரியர் பிரச்சினை இருப்பது தெரியாதவர்கள் சிலர். அவர்கள் மேல்மாடியை வாடகைக்கு விட்டுவிட்ட மெத்தாதிகள்! காலந்தான் அவர்களுக்குக் கருத்தூட்ட வேண்டும். வேறுசிலர், ஆரியர் திராவிடர் பிரச்னையை மிக அலட்சியமாகத் தள்ளி விடுபவர்கள். இந்த ரகத்துக்கு, மூளை உண்டு, ஆனால், அதிலே வேண்டிய அளவு முதிர்ச்சி இருப்பதில்லை. இத்தகையவர்கள் இடிகிடைத்ததும், ‘ஆமாம்’ என்று கூறுவர். மற்றுஞ்சிலர், இந்தப் பிரச்னையை நாம் வேண்டுமென்றே கிளப்பிவிடுகிறோம் என்று பேசுவர். இந்தரகம், குதர்க்கத்தை நம்பி வாழுகிறது. மெயில் பத்திரிகை, இத்தரகங்களின் கூட்டுச் சரக்காகக் காணப்படுகிறது.

எதிரே இருக்கும் பள்ளத்தைக் காணமுடியாதவன் குருடன்! கண் இருந்தும் கருத்துக் குருடாகி, பள்ளமிருப்பதைக் கண்டும் அவ்வழி போய்க்கீழே உருள்பவன் போதையில் உள்ளவன். பலர் தடுத்தும், திமிரிக்கொண்டுபோய் அதிலே வீழ்பவன் பித்தன். அது போலவே ஆரிய திராவிடப் பிரச்னையைத் தெரிந்து கொள்ளாதவன் தெம்மாண்டை! தெரிந்து கொண்டும், அலட்சியப்படுத்துபவன் தெகிடுதத்தக்காரன். குற்றத்தைப் பிறர்மீது சுமத்தப் பார்ப்பவன் குறும்பன். மெயில் பத்திரிகையின் போக்கு, என்னை அகராதியைப் புரட்டிப்பார்க்கச் செய்தது. எந்த அடைமொழி கொடுத்து நான், அதன் இலட்சணத்தை உங்களுக்கு எடுத்துரைப்பது!

பெரும்பான்மையினரான நாம், சிறுபான்மையினரான பார்ப்பனரால் அவதிப்படுவதாகக் கூறுவது மெயிலுக்கு ஆச்சரியமாக இருக்கிறதாம்! இது பழங்கதையாம்!!

பிரான்சு நாட்டிலே பெரும்பாலான மக்கள் வாடி வதங்கியது சிறு கூட்டமான செருக்குப்பிடித்த சீமான்களால், என்பதை துரைமாரின் காகிதத் துப்பாக்கி மறந்துவிட்டது.

சிறு ரோம்பட்டாளம் பெரிய பிரிட்டனை அடக்கி ஆண்ட கதையை ஆங்கில ஏடு அறியும், ஆனால் நாம் அறியோம் என்று எண்ணுகிறது.

“அவர்கள் மிகச் சிறுகூட்டம்! நாமோ மிகப் பெருங்கூட்டம்” என்று ஆங்கிலக்கவி ஷெல்லி கூறிய அழகிய வாசகத்தை மெயில் மறந்துவிட்டது.

இவ்வளவையும் மறந்தபோதிலும், 40 கோடிபேர் வாழும் இந்தப்பெரிய உபகண்டத்தை, மிகச்சிறு கூட்டமாகிய பிரிட்டிஷார் 150 ஆண்டுகளாக ஆண்டு வருவதை, மெயில் பத்திரிகை மறந்துவிட்டதென்று கூறமுடியாது.

இந்திய உபகண்டத்தில் சிறு ஆங்கிலேயக்கூட்டம் ஆதிக்கம் செலுத்துவதற்கு, துப்பாக்கி எனும் ஆயுதம் பயன்படுகிறது. பெரும்பான்மையினரான திராவிடரை, சிறு ஆரியக்கூட்டம் அடக்கி ஆளுவதற்கு, தர்ப்பை ஆயுதமாக உபயோகமாகிறது. இதனை அறியாத ஆங்கில ஏடு, ஏன் சிறுகூட்டத்திடம் பயப்படுகிறீர்கள் என்று அறிவுக்களஞ்சியம்போல் நம் எதிரே நின்று கேட்கிறது.

பெரிய பட்டணங்களைப் பிணக்காடாக்கும் பிளேக் வருவது எலிகள்மீது சவாரிசெய்யும் சிறு பூச்சிகளினால்! காலராகிருமி கண்ணுக்குத் தெரியாத அளவுள்ளது, ஆனால், ஆறடி ஆளையும் அக்கிருமி சாகடித்துவிடும்.

மாபெருங்கூட்டம்! பெரியார் கேட்பவர்மனதை ஆவேசமுறச் செய்யும் பேச்சுப் பேசுகிறார். ஆர்வம் ததும்புகிறது. ஆரியர் வெதும்புகின்றனர். வெண்தாடி காற்றிலே ஆடுகிறது! ஆரஞ்சு நிறச் சால்வை கீழே புரளுகிறது. கூட்டத்திலே நிமிடத்துக்கொரு கரகோஷம்!

வந்ததய்யா ஒரு கேள்வித்... 100-க்கு 97 பேராக இருக்கும் திராவிடர்கள் 3 பேராக உள்ள ஆரியர்களிடம் பயப்படுவது, வெட்க மில்லையா? இது கேள்வி. கேட்ட ஆள்தன்னை மிகமேதாவி என்று எண்ணிக்கொண்டிருந்திருப்பான். “இதிலென்ன ஆச்சரியமப்பா, பத்தாயிரம் பேர் கூடும் சந்தையிலே, முடிச்சவிழ்க்க 10 பேர்தான் வந்திருப்பார்கள். இந்த 10 பேருக்குப் பயந்துகொண்டுதான் 9990 பேரும் சர்வசாக்ரதையாக, தமது பணத்தை ஜேபியிலே வைத்துக் கொண்டு, அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கொண்டு, இருக்கிறார்கள். அதுபோலத்தான் இங்கு நாம் 97 பேராக இருந்தாலும், நமது இனத்தை நெடுநாட்களாகச் சுரண்டிக்கொண்டிருக்கும் 3 பேராக உள்ள கூட்டத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள, தக்க பாதுகாப்புமுறை தேவை என்கிறோம். இதிலே என்ன வெட்கம்!” என்று பதில் கூறினார். பொதுக் கூட்டம் பூராவும் களிப்புக்கடலில் நீந்திற்று. கேள்வி கேட்டவரின் முகம் மூன்றாம் பேஸ்த்தாகிவிட்டது.

அத்தகைய கேள்விகேட்ட கூட்டத்தில் மெயிலையும் சேர்க்கவேண்டி வருகிறது. மெயில் பத்திரிகைக்கும் இதே சந்தேகம்! பெருவாரியாக உள்ள பார்ப்பனரல்லாத இனம், சிறு கூட்டத்திடம் அஞ்சிப் பாதுகாப்புக் கேட்பது விசித்திரமல்லவா? என்று மெயில் கேட்கிறது! என்ன அறியாமை பாருங்கள்!

வானைத்தழுவும் அளவு உயர்ந்த வனப்பும் வலிவும் பொருந்திய கோட்டை கொத்தளங்களைத் தவிடுபொடியாக்கும், “பாம்” கட்டடத்தின் அளவுடன் ஒப்பிட்டால் எவ்வளவு சிறியது! கடற்கோட்டை போலுள்ள பெருங்கப்பல்களை உடைத்தெறியும் டார்ப்பிடோவை ஏவும் சப்மெரைன், கப்பலைவிட மிகச்சிறியது! பிரின்ஸ் ஆப் வேல்ஸ், பிரம்மாண்டமானது, அதனை வீழ்த்திய குண்டுகள், மிகச்சிறியன! இவைகள், நேற்று நடந்தன, நினைப்பு மாறுவதற்கில்லை. என்றாலும், மெயில் கேட்கிறது, பெரிய வகுப்பு, சிறிய வகுப்பிடம் அஞ்சுவானேன் என்று!

உலக சாம்ராச்யங்களிற் சிறந்த ஆங்கில அரசு, வியாபாரத்துறையில் விற்பன்னத்துடன் விளங்கும் ஆங்கில அரசு, விஞ்ஞானத்துறையில் விசேட இடம் பெற்றுள்ள ஆங்கில அரசு, திடீரென ஒருநாள், நீக்ரோக்களால் தோற்கடிக்கப்பட்டு, ஆங்கிலமக்கள், நீக்ரோக்களின் ஆட்சியில் வாழவேண்டியும், நீக்ரோக்கள், தம்மை உயர்ந்த இனமென்றும், ஆங்கில இனம் அடிமை இனமென்றும் கூறி, அதற்கேற்ற கட்டுத்திட்டம், சட்டம் ஏற்படுத்தி விடுகிறதென்று வைத்துக்கொள்வோம். அப்போது, பூர்வபெருமைகளை உணர்ந்த ஓர் ஆங்கிலேயனின் மனம் எவ்வளவு துடிக்கும்! எவ்வளவு பதைக்கும்! அத்துடனில்லாது, நீக்ரோக்கள், ஆண்டவனுக்கு நாங்களே பிரதிநிதி என்றுகூறி, செயின்ட் பீடரின் கையில் இன்று இருப்பதாகப் பைபிள் கூறும் மோட்சலோகத் திறவுகோல் எம்மிடமிருக்கிறது என்றுரைத்து, மோட்சம் புக வேண்டுமானால், எமக்குக் காசுகொடுத்து, காலில் விழுந்து கும்பிட்டு, காலைக்கழுவி அந்த நீரை பயபக்தியுடன் பருகவேண்டுமென்று ஏற்பாடு செய்தால், ஆங்கிலத் தோழர்களே, அரை நிமிடம் அதனை நீங்கள் தாங்குவீர்களா! ஓர் இனமக்கள், பலஜாதிகளாகப் பிரிந்து, சின்னாபின்னப்பட்டு, ஒன்றை ஒன்று பகைத்துக்கொண்டு செத்தவாழ்வில் இருக்கச் சம்மதிப்பீர்களா! இந்த ஏற்பாட்டை உண்டாக்கிய “கடவுள்கள்” என்று விக்ரகங்களைக் காட்டினால், அவைகளை உடைத்துத் தூளாக்க மாட்டீர்களா? இத்தகைய ஏற்பாட்டின் இருப்பிடமாகக் கோயில்கள் இருப்பின், அவைகளைக் குப்பைமேடாக்க மாட்டீர்களா! போப் ஆண்டவரின் போக்கை ஆதரிக்க மறுத்து, புரட்சி செய்தீர்கள்! மமதையோடிருந்தான் என்பதற்காக ஒரு மன்னனை மாளிகைக்கு எதிரே தூக்கிவிட்டீர்கள், மற்றோர் மன்னனை நாடு கடத்தினீர்கள், மகுடாபிஷேகத்திற்கு முன்னாள், ஒரு மன்னனின் காதலுக்கும் கட்டுப்பாடு விதித்தீர்கள்! இத்தகைய நீங்கள், எங்களைப்போல், நடமாடக் கூடாத நாயாடிகளாய், சஞ்சரிக்கமுடியாத செரமர்களாய், தீண்டப்படாத வர்களாய், சூத்திரராய் வாழ்ந்துகொண்டு, ஒரு குலத்தின் பொதிமாடுகளாய், சனாதனத்துக்குச் செக்கு மாடுகளாய், இருக்கச் சம்மதிப்பீர்களா! என்று கேட்கிறேன்.

மாட்டுக்கு மூக்கணாங்கயறிட்டு வேலைவாங்குவதுபோல், குதிரைக்குக் கடிவாளமிட்டு உழைக்க வைப்பதுபோல், யானையை, சிறு அங்குசத்தால் குத்தி அடக்கிவைப்பதுபோல், ஆரியம் எங்களை, பாவபுண்ணியம், மோட்சம் மறுஜென்மம், உயர்ந்தவன் தாழ்ந்தவன், தேவன் மானிடன், என்று பல கற்பனைகளைக்கூறி அவைகளால் எமது இனமக்களின் மனதில் தளை பல பூட்டி அடக்கி ஆளுகிறது. காட்டு அரசனாம் சிங்கம் கூட்டிலடைபட்டால், என்ன செய்யும்! நாங்கள், ஆரியச்சிறையில் இருக்கிறோம். அவதியுறுகிறோம்! வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் வெள்ளைக்காரர்கள், குறும்பன்கோல் கொண்டு சிங்கத்தைக் குத்திப்பார்ப்பதுபோல், கேலியும் கண்டனமும் செய்கிறார்கள்! சிங்கத்தின் சீற்றம் அதிகரிக்கிறது! காலத்தின் வேகத்தால் கூண்டின் கம்பிகள் துருப் பிடித்துள்ளன! ஒரு பெறுமுயற்சிதான் தேவை, கம்பிகள் தவிடுபொடியாக, சிங்கம் வெளிக்கிளம்ப! வெளிவரும்போது, தயவுசெய்து துரைமார்களே, எதிரே நின்று இரையாகாதீர்கள். ஒதுங்கி நில்லுங்கள், ஒய்யாரம் பேசியது போதும்.

சர்வதேச சங்க இலட்சியங்களென்ன, ஜனநாயக நாடுகளின் கூட்டுறவு என்ன, உலக சகோதரத்துவமென்ன, இத்தகைய ஏட்டுச்சுரைக்கு எண்ணாயிரம் வியாக்கியானம் எழுதும் மெயில், இந்த மாகாணத்திலுள்ள, பார்ப்பனர் அல்லாதார் பிணக்குப்போக, இதுவரை அன்போடு அறிவுங்கலந்த உரை எழுதியதுண்டா? இங்கு சேரியில் சிதையும் மக்களிடம் சிரத்தை காட்டிற்றா! ஜாதி அகம்பாவத்தைக் கண்டித்ததுண்டா! எங்கிருந்தோ ஒருமேயோ வருவதும் எள்ளி நகையாடுவதும், அதைக்கண்டு, என்செய்வது இங்கு நிலைமை அப்படித்தான் இருக்கிறது. அதனைச்சரிப்படுத்தவே ஆங்கில அரசு இருக்கிறது என்று கூறிக்கொண்டு, கூடாரமடித்துக் கொண்டிருக்கவும் தெரிகிறதேயொழிய, பிணக்கும் பேதமும், பூசலும் ஏசலும், ஏன், எப்படி எப்போது ஏற்பட்டது என்று எடுத்துரைத்து, அவைபோக வழி கூறியதுண்டா?

ஆச்சாரியாரின் அதிகார மோகம் அனைவரும் அறிந்தது! அவரது சகாக்களும் தெரிந்து கொண்டனர். பசித்தவன் புசிக்க பாயாசமா வேண்டும்? எச்சில் இலைமீதும் தாவுகிறான். ஆச்சாரியாரின் பதவிப்பசி அவரைப் பத்தையும் மறக்கச் செய்து விட்டது. எப்படியேனும் பதவியில் அமரவேண்டு மென்பதற்காக ஏதேதோ திட்டம் தயாரிக்கிறார். அதிலே ஒன்று, பாகிஸ்தானை ஆதரிப்பதாகக் கூறும் பசப்பு மொழி. இதுபற்றிப் பெரியார் ஒரு அறிக்கை வெளியிட்டார்! வேதியர் கூட்டம் சும்மா இருக்கிறது, வெள்ளை ஏடுதான், வெடுக்கெனக் கடிக்க ஓடிவருகிறது. கேளுங்கள் தோழர்களே, “வகுப்பு வாதம், விஷயத்தைப் பரிசீலித்து முடிவு செய்யும் பண்பையும் பாழாக்கிவிடுகிறது என்பதற்குப் பெரியாரின் அறிக்கை ஓர் எடுத்துக்காட்டாம். விஷநீர் பெருக்கெடுத் தோடுகிறதாம் நமது கட்சியில். பார்ப்பனரிடம் பார்ப்பனரல்லாதாருக் குள்ள சந்தேகங்களை பெரியாரின் அறிக்கை மீண்டும் கிளறி விடுகிறதாம், வகுப்புப் பூசலுக்குத் தூபமிடுகிறதாம், 3% மக்கள் 97% மக்களை அடக்கி ஆளும் பழையகதை மீண்டும் பேசப்படுகிறதாம். இவைகள் காலத்துக்கேற்றதல்லவாம். பெரியாரின் அறிக்கை பிறிதோரிடமிருக்கிறது, படித்துவிட்டு, பேதமை ஆங்கில ஏட்டைத் தோழமை கொண்டிருப்பதைக் காணுங்கள். ஆச்சாரியார், பதவி பெறுவதற்காகவே புதியதோர் சூழ்ச்சி செய்கிறார் என்று பெரியார் கூறியிருக்கிறார். மாமனைத் திட்டினால் மார்தட்டிக் கொண்டு சண்டைக்குக் கிளம்பும் மருகன்போல, மெயில் இதற்காகச் சண்டைபிடிக்கிறது. பதவி வேட்டைக்காக ஆச்சாரியார் இப்படிச் செய்தார் என்று எப்படிக் கூறலாம், என்று கொக்கரித்துவிட்டு, பதவிக்காகத்தான் இதனைச் செய்கிறோம் என்று ஆச்சாரியாரின் கூட்டமே கூறிவிட்ட பிறகு, நீங்கள் ஏன் குத்தலாகப் பேசுவது என்று மெயில் கேட்கிறது. உள்ளதைச் சொன்னால், யாருக்கோ கோபம் வரும் என்பார்களே அதற்கு இதோ மெயிலின் வாதம் சிறந்த உதாரணம்!

இந்த நாட்டிலே ஒரு விஷநீர் ஊற்று இருக்கிறது. அதனைப் பருகிப்பருகி, பரம்பரை பரம்பரையாக மக்கள் பாழாகின்றனர், அந்த மாற்றுதான் ஆரியம். அதைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிதான் ஆங்கில அரசு! இதனை எடுத்துரைத்து எச்சரிப்பவரே பெரியார்! விஷயம் வெளியாகி விட்டதால் விபரீதம் நேரிடுமோ என்று வெகுண்டதே மெயில் பத்திரிகையின் பதட்டத்துக்குக் காரணம்.

பார்ப்பனரல்லாதாருக்குப் பாதுகாப்பு இல்லாததால், சட்டசபையிலே 7 ஸ்தானங்களே பெற்றிருக்க வேண்டிய பார்ப்பனர் 49 ஸ்தானங்களைப் பெற்றனர், 10 மந்திரிகளில் நால்வர் அவர்களாயினர், என்று பெரியார் எடுத்துரைத்திருக்கிறார். இதற்கோர் நொண்டிச் சாக்குக் கூறுகிறது இந்த நோய்வாய்! பார்ப்பனர்களிடம் விசேஷ நம்பிக்கைதோன்றி, பார்ப்பனர்களே காரியவாதிகள் என்பதை உணர்ந்து, 49 ஆரியரை பொதுமக்கள் தெரிந்தெடுத்தனராம். நாலுபேர் பார்ப்பனர் மந்திரிகளானதற்குக் காரணமும், அவர்களே வேலைக்குத் தகுந்தவர்கள் என்று பெருவாரியான சட்டசபை மெம்பர்கள், பார்ப்பனரல்லாதார் எண்ணினதேயாம்! வாதத்தின் போக்கைக் கவனியுங்கள்! கடந்த தேர்தல், பார்ப்பனர் ஆள்வதா, ஆளும் தகுதியுடையவர்கள் பார்ப்பனரா, நாமா, என்ற திட்டத்தின்படி நடக்கவில்லை. மனதார பார்ப்பனரின் நோக்கம் எப்படியேனும் ஆரிய அரசை அமைக்கவேண்டும் என்பதே என்ற போதிலும், வெளியே அவர்கள் பேசியது வெள்ளைக்கார ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்பதுதான். இதனை நம்பியவர்களிடம், “ஆளைப்பற்றி யோசிக்காதே, காங்கிரசைக் கவனி! காங்கிரசின் பேரால், கூனோ குருடோ, செவிடோ முடமோ, குதிரையோ பிறவோ, எதுநின்றாலும், ஓட் தருக” என்று கூறினர், ஏய்த்தனர். எனவே இந்தத்திரை மறைவிலே 49 பார்ப்பனர் சட்டசபை புகமுடிந்தது. இதனை, மக்கள் அவர்களிடம் நம்பிக்கைவைத்து, வேலைக்குத் தக்கவர்களென்று தீர்மானித்துத் தெரிந்தெடுத்தனர்” என்று மெயில் கூறுவது, அறியாமை என்று நான்கூறினால் நீங்கள் திருப்திப்படமாட்டீர்கள். வேறு கடுமையான பதத்தைத்தேட எனக்கு அவகாசமில்லை, நீங்களே தேடிக்கொள்ளுங்கள். ஆல்கபோன் அமெரிக்காவில் கொள்ளையிட்டான், பொருள்களுக்கு அவனிடம் ஆசை அதிகரித்து, அவனிடம் போய்ச் சேர்ந்தன, என்றுரைக்க, மெயில் முன் வந்தாலும், நாம் எப்படி இனி ஆச்சரியப்பட முடியும்! ரஸ்புடின் ராஜ குடும்பங்களில் ரசாபாசம் செய்தான் என்றால் அவனுடைய ரமணியத்தில், ராஜகுடும்பங்கள் மோகங் கொண்டன, எனவே ரஸ்புட்டின் மீது தவறில்லை என்று வாதிட மெயில் முன்வரக்கூடும்! ஆல்கபோன் களவில் கைகாரன், ரஸ்புடீன் வேடமணிந்து மக்களை மயக்குவதில் சமர்த்தன், ஆனால் அவர்களின் செயலைக் காலம் கண்டிக்கிறது. ஆரியர், தந்திரத்தில் சமர்த்தர்கள். அதனாலேயே, வெள்ளையரைத் தூற்றுவதாக வெளியே பேசிவிட்டு சட்டசபைக்குள்ளே புகுந்து கொண்டனர், இதனால், மக்கள் அவர்களிடம் நம்பிக்கையும் ஆசையுங் கொண்டனர், என்றுரைப்பது மன்னிக்க முடியாத அளவு வளர்ந்துவிட்ட மமதையின் அறிகுறி என்பேன். நான் கேட்கிறேன் மெயிலை, 49 பார்ப்பனர் சட்டசபை புகுந்தது மக்களின் ஆதரவால். ஆகவே குறைகூறலாகாது என்றுரைக்கும் போது, 8 மாகாணங்களிலே, மக்கள் காங்கிரசைத் தெரிந்தெடுத்து அதன்மூலம் ஆங்கில அரசு கூடாது, தன்னரசு வேண்டுமென்ற தமது விருப்பத்தைக் காட்டினார்கள் என்றுரைப்பது தவறாகாதே! மக்களின் விருப்பத்தை தெரிந்துகொண்டும், ஏன் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் விட்டுவைத்து அதற்கு வேளைக்கோர் சமாதானங் கூறுகிறீர், வெட்கமில்லையா!

பார்ப்பன ஆதிக்கம் என்றால் உடனே பரங்கி, உத்தியோகத் திலே, நாம் பங்கு கேட்கிறோம் என்று குள்ளக்கருத்துடன் கூத்தாடு கின்றனர். பார்ப்பன ஆதிக்கம் என்றுரைக்கும்போது உத்தியோக மண்டத்திலே அவர்கள் ஆட்சி செலுத்துவதை மட்டுமல்ல, நாம் குறிப்பது.

ஜாதியிலே உயர்வு, சமயத்திலே தரகு, சமுதாயத்திலே பாடுபடாத வாழ்வு, பொருளாதாரத்திலே சுரண்டல் கொள்கை, மதத்துறையிலே மடமையை வளர்க்கும் கொடுமை, கல்வித் துறையிலே கற்றோரையும் கசடராக்கும் குரூரம், அரசியலிலே ஆங்கிலரை மாற்றுவதாகக் கூறிக்கொண்டு பேரம்பேசும் போக்கு, வாழ்க்கைத்துறையிலே, இதம், பரம் என்று பிரித்துப் பேசி, உலகம் மாயை என்றுரைத்து வாழ்வு அநித்தியம் என்று வேதாந்தம் போதித்து, மக்களை, எருமை இயல்பு, கொண்டோராக்கும் கோரம், இன்னோரன்ன பிறவற்றையே நாம் குறிப்பிடுகிறோம். உத்தியோக மண்டல விஷயம் இதிலே ஓர் ஒதுக்கிடம், முழுவதும் அதுவல்ல. ஊராள்வோரின் உறவினரான மெயிலுக்கு, உத்தியோக விஷய மட்டுமே கண்ணை உறுத்துகிறது, பிறவற்றைக்காணக் கண் இல்லை.

ஆரியம் ஒரு நயவஞ்சக நாசீசம், பசப்பும் பாசீசம், ஜாலம் பேசிடும் ஜார், சீலம் என்றுரைத்துத் தமிழ்ச்சீமை ஆண்டவரைச் சிதைத்த சதி, வஞ்சக வல்லரசு, இளித்த வாயரை உற்பத்தி செய்து அவர் மீதேறிச் சவாரிசெய்யும் ஏகாதிபத்தியம், தாசர்கூட்டத்தை உண்டாக்கி, அதற்குத் தரகுத்தொழில் செய்யும் தந்திர யந்திரம்!

ஓர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என்று அட்டவணையைப் போட்டுப்பாருங்கள், தெரியும் ஆரிய ஆதிக்கம் எவ்வளவு மறுமலர்ச்சியுடன் இருக்கிறதென்பது! இந்த நேரத்திலே மெயில் கூறுகிறது, உத்தியோக மண்டலத்திலே ஆரிய ஆதிக்கம் படிப்படியாகக் குறைகிறதாம்!

போதாக்குறைக்கு மற்றோர் வாதத்தையும் நீட்டுகிறது மெயில். உத்தியோகத்துறையிலே நம்மவருக்கு விருப்பம் இல்லையாம், வியாபாரம் தொழில் முதலிய துறைகளில் புகுந்து விடுகிறார்களாம்!

வியாபாரம், என்ற உடனே, வேதனையே வளருகிறது எனது உள்ளத்திலே. எங்கே இருக்கிறது வியாபாரம்! நமது ஆடைகள் பிர்லா மில்லில் தயாராகிறது, நமது இரும்புச் சாமான்கள், டாடா கம்பெனியுடையது, நமது சுதேச மருந்துகள் ராய் கம்பெனியுடையது, தாதா கம்பெனியார் விற்பது, கப்பல் கட்ட ஒரு லால் சந்து ஹீராசந்து, வைர வியாபாரத்துக்கு சுராஜ்மல் லல்லுபாய், தங்கம் வெள்ளிப்பணிகளுக்கு பாபாலால், பண்டங்களுக்கு குப்தா ஸ்டோர்ஸ் ஆடைக்குச் செல்லாராம், சிற்றுண்டிக்கு ஆரியபவன், சினிமாவுக்கு ஒரு ராம்லால் நந்தலால், தமிழ் பத்திரிகைக்கு ஒரு கோயங்கா, ஏழைகளை இரட்சிக்கும் வட்டித் தொழிலை வாஞ்சனையுடன் நடத்தவோ, வண்டி வண்டியாக மார்வாடி, குஜராத்திகள், என்று இங்ஙனமிருக்கிறதே வியாபார நிலைமை, தொழில்துறை, இதனை உணர மெயிலுக்கு ஏன் நேரமில்லை என்று கேட்கிறேன்.

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள், சொல்லின்படி செயல் அமைந்திருந்தால், நிலைமை மிக நன்றாக இருந்திருக்கும் என்று மெயில் கூறுகிறது. பார்ப்பனரல்லாத வியாபாரிகள், தமது நிலையங்களிலே ஏராளமாகப் பார்ப்பனரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவில்லையா? பார்ப்பன வக்கீல்களை நாடவில்லையா? பார்ப்பனருடைய யோசனையைத் தேடவில்லையா? அவர்கள் பார்ப்பனரல்லாதவருக்கே வேலை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், என்று மெயில் கேட்கிறது.

எனது கருத்தையோ, உங்கள் எண்ணத்தையோ வெளிப் படுத்த, ஒரு பெருமூச்சு விடுவதைத்தவிர வேறென்ன செய்வது. மெயில், யோசனைகூறும் அளவுக்கு, நிலைமை இந்தத்துறையிலே இருக்கிறதென்பதை நான் மறுக்கமாட்டேன். உங்கள் எண்ணமும் அதுதான் என்பது எனக்குத்தெரியும். ஆரியத்தால் நசுக்கப்பட்டு, ஆங்கிலரால் அலட்சியம் செய்யப்பட்டு, திராவிடச் சீமான்களால் கைவிடப்பட்டு, கலங்கித் தவிக்கிறோம். ஆனால் கலக்கத்தைக் கண்டு கேலிசெய்வது, காருண்ய மற்றது மட்டுமல்ல, மிக்க ஆபத்தானது. வேதனைப்பட்ட உள்ளம் வெடிமருந்துச்சாலைக்குச் சமம்! வெள்ளை ஏடும் எள்ளி நகையாடும் நிலை, தீக்குச்சியைக் கிழித்துக் காட்டுவதாகும்!

“கார் நிறக்கோதையும் மதிபொருவு வதனமுங் கச்சடங்காத தனமுங் கமல வழியுங்கொண்ட” பேர்வழியாக இருப்பினும், உதட்டில் கனிவும் உள்ளத்தில் கட்டாரியுங் கொண்டிருப்பின், மருவிடச்செல்பவன் மாள்வதில் ஆச்சரியமில்லை. அதுபோல், ஆரியம், சாகசமேனியும், சந்தனவாடையும், தெந்தினப்பாடலுங் கொண்டு, கொஞ்சிட வந்தாலும், அதனை ஒரு நச்சுப்பொய்கை என்றுணர்ந்து, வெறுத்தொதுக்கும் வீரம், திராவிடத்தோழர்களுக்கு உண்டாகவேண்டும். அந்த வீரம் உதிக்குமானால் திராவிட நாடு உதயமாகும் என்பது திண்ணம். இடைக்காலத்திலே இங்கிதந்தெரியாத ஏடுகள் எது வேண்டுமானாலும், எழுதட்டும், எதற்கும் அஞ்சோம்; கண்துஞ்சோம் பகைவெல்வோம், வாகை சூடுவோம்!

(3.5.1942)