அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஊரார் உரையாடல்
கதர்க்கடையிலே காகசஸ்!


இடம் : கதர்க் கடை.
பாத்திரங்கள் : சீனுவாச ஐயர், கந்தசாமிப் பிள்ளை, சுந்தர முதலியார்.
(ஐயர் வெளியே போயிருக்கும் நேரத்தில்)

கந்தசாமிப் பிள்ளை : சுந்தரம்! சாமி எங்கே போனாரு?
சுந்தரம்: எந்தச் சாமியைக் கேக்கறே?

கந்த: நம்ம ஐயரைத்தான்!

சுந்தரம்: அப்படிக்கேளேன். சாமி, சாமின்னு பூசை செய்வானேன். இப்படித் தூக்கித் தூக்கி வைத்தால், அவனுங்க தலை மேலே ஏறிக்கொள்கிறானுங்க, அதோ வாராரு, என்ன விசேஷம்?
(ஐயர் புன்சிரிப்புடனும், கையிலே பேப்பர்க்கட்டுடனும் வருகிறார்.)

சீனு: பிள்ளையவாளா! வாங்கோ, வாங்கோ. என்ன விசேஷம்?

கந்த: நீங்கதான் விசேஷம் சொல்லனும். பேப்பரு படிக்கிறீங்க. சண்டை சங்கதி எப்படி இருக்கு? ரஷியா விஷயம் என்னா நடந்தது?

சீனு: என்னா நடந்தது? அடிஅடின்னு அடிச்சுத் தள்றான். கோரமான சண்டை. இரத்தப்பிரவாகம். ரஸ்டாள் போய் விட்டதேன்னோ, மளமளவென்று, பாய்கிறான்.

சுந்தரம்: நாலு நாளாகக், கொஞ்சம் வேகம் மட்டுப் போலிருக்கே! நாஜிகளுக்கு ஏராளமான நஷ்டமாம்.

சீனு: நஷ்டந்தான்! ஆனாலும் இன்னும் வேகம் குறையக் காணோம். இன்னும் நான் பூராவும் படிக்கல்லே. நீ படித்தாச்சோ?

சுந்தரம்: காலையிலேயே படித்துவிட்டேன். எனக்கொன்றும், திகில் பிறக்கவில்லை.

சீனு:உனக்குப் பிறக்காது. நீ ரஷியாக்கட்சியாச்சே.

கந்த: அப்போ, சாமி என்னா, ஜெர்மன் கட்சியா?

சீனு: அடெடே! அதெல்லாம் இல்லைப்பா. வெளியே ஏதாவது பேசப்போனாலே வம்பாக இருக்கிறது. சுந்தரம், நம்ம சேர்மன் வீட்டுக்கு, உன்னை வரச்சொன்னார். போய்விட்டு வந்துவிடேன்.
(தன்னை வெளியே அனுப்பிவிட்டு, கந்தசாமிப் பிள்ளையிடம் வம்பளக்க ஐயர் கருதுவதைத் தெரிந்து கொண்ட சுந்தரம், ஐயரை முறைத்துப் பார்த்துவிட்டுச் சேர்மன் வீட்டுக்குப் போகப் புறப்பட்டு விட்டான். அவன் போனபிறகு ஐயர் ஆரம்பித்தார்.)

சீனு: ஹிட்லருடைய படைகள் மிக்க உக்கிரமாகச் சண்டையிடுகின்றன. காகசஸ், எண்ணெய்க் கிணறுகளுக்காச் சண்டை நடக்கிறது. பெட்ரோல் இல்லாமல் இந்தக் காலத்துச் சண்டை நடக்காது. அந்தப் பெட்ரோல் பிரதேசத்தைப் பிடித்துக்
கொள்ளவே பெரிய போர் நடக்கிறது.

கந்த: ரஷியர்கள், எப்படிச் சண்டை செய்கிறார்கள்?

சீனு: அவர்களும் விடவில்லை. ரஷியத்தலைவர் ஸ்டாலின், இனிமேல் ஓர் அடிகூட பின்வாங்கக்கூடாது. எதிர்த்து நிற்க
வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டார். அதனாலே வீரமாகப் போரிடுகிறார்கள். ஆனால், ஜெர்மன் சேனை பிரம்மாண்டமானது. எத்தனை இலட்சம் பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து சண்டை போடுகிறார்கள்.

கந்த: ராஸ்டாவைப் பிடித்துவிட்டபிறகு, வேறே எந்த ஊரைப் பிடித்தார்கள்.
(சுந்தரம், வேலையை முடித்துக்கொண்டு வந்து சேருகிறான்.)

சீனு: வேறே ஓர் ஊரையும் பிடிக்கவில்லை. ஆனால், ரஸ்டாவ் பிடித்தது, பெரிய வெற்றி. ஏன்
சுந்தரம், சரிதானே நான் சொல்றது?

சுந்தரம்: ரஸ்டாவிலே, ஜெர்மானியர் வெற்றி பெற்றார்கள் என்பது உண்மைதான். ஆனால், போன வருஷமும், ரஸ்டாவை ஜெர்மானியர் பிடித்தனர். என்ன நடந்தது? ரஷியச் சேனை சீறி விழுந்து மீண்டும் போரிட்டு, ரஸ்டாவைத் திருப்பிப் பிடித்தது. நீங்கள், ஜெர்மன் வெற்றியைச் சொல்கிறீர்களே தவிர, அதற்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சொல்லவில்லை. டான் நதி, இரத்த ஆறாகிவிட்டது. ஜெர்மன் பிணங்கள், கருகிய விமானங்கள், தூளான மோட்டார், எவ்வளவு என்று எண்ணுகிறீர்கள்.

கந்த: ஏன் சாமி சுந்தரம் சொல்வதைப் பார்த்தா, ஜெர்மனி, இப்படிப் பலி கொடுத்து ரொம்ப நாளைக்குத் தாக்குப் பிடிக்காது போல் தோன்றுகிறதே.

சீனு: ஒரு விதத்திலே உண்மை தான் நீ சொல்வது. ஆனால்...

சுந்தரம்: ஆனால், என்ன? வார்னேஷ் களத்திலே, வாட்டி விட்டார்கள். ஜெர்மன் துருப்புகளை, லெனின் கிராட் களத்திலேயும், காலினின் களத்திலேயும், ரஷியரின் கைதான் ஓங்கி இருக்கிறது. காகசஸ் களத்திலே கூட இப்போது ரஷியர்கள் முன் காட்டியதை விடப் பலமடங்கு அதிதமான வீராவேசம் காட்டு
கிறார்கள். பல்கேரியர், ருமேனியர், வாங்கேரியர், போன்ற கூலிப்படைகளைக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. நாஜி பூதம்.

கந்த: ஏனப்பா சுந்தரம்! ரஷியர்கள் வீரமாக போரிட்டு ஏன் தோற்கிறார்கள்?

சுந்தரம்: ஜெர்மன் முழுச் சக்தியும் ரஷியாமீது திரும்பி இருக்கிறது. நான் முன்னே சொன்னபடி பல அடிமை நாடுகளில் பலிக்கடாக் கிடைக்கிறது. வஞ்சகப் போரும் நடக்கிறது. ரஷியப் போர் வீரர்கள்போல உடை உடுத்திக்கொண்டு, ரஷியப் படை வரிசையிலே புகுந்து கொள்ளக்கூட நாஜிகள் முயன்றனர். விடவில்லை ரஷ்யர்கள். வேஷத்தைக் கண்டு பிடித்துவிட்டனர்.

சீனு: சேர்மன் வீட்டுக்குப் போன காரியம் முடிந்து விட்டதோ?

சுந்தரம்: திவ்யமா முடிந்துவிட்டது! அவர் இந்தத்தடவை ஜெயிலுக்குப் போகப்போகிற தில்லையாம். காரியக்கமிட்டி வற்புறுத்
தினால், காங்கிரசிலிருந்தே ராஜிநமாச் செய்துவிடப் போகிறாராம்.

சீனு: சரி! இதை வெளியே எங்கேயும் வம்பளக்க வேண்டாம்.
சுந்தரம்: எனக்குத் தெரியாதே வம்பளக்க.

கந்த: எந்த ஊரு சேதி பேசறிங்க?

சுந்தரம்: நம்ம ஊரு சேதிதான்.

கந்த: இது கிடக்குது, தள்ளப்பா. அலை ஓயரது ஏது? தலை முழுகுவது ஏது? ரஷியா விஷயத்தைச் சொல்லு. ஐயரு சொல்றதைப் பார்த்தால், அடிவயிறு பகீரென்னுது.

சுந்தரம்: நிலைமை கஷ்டமானது தான். திகில் வேண்டிய
தில்லை. காகசஸ் பிரதேசத்தைப் பிடித்து விட்டு ரஷியாவிலே உள்ள மற்றப் பாகத்தோடு தொடர்பு இல்லாதபடி செய்துவிட
வேண்டுமென்பது நாஜிகள் எண்ணம். இரண்டு பிரிவாகப் பாய்கிறார்கள். பக்கு என்ற இடத்தின்மீது மோத ஸ்டாலின் கிராடு மீதும் நாட்டம். வான்பக் இருக்கிறாரே, ஜெர்மன் சேனாதிபதி அவருடைய போர்த்திறமைக்கு, ரஷிய சேனாதிபதி இருக்கிறாரே மார்ஷல் டிமோஷெங்கோ, அவருடைய தீரம் குறைந்ததன்று. தரையிலே சண்டை நடப்பதுபோலவே வானத்திலேயும் சண்டைதான்.

கந்த: அதுவும் நடக்குதா?

சீனு: ஜெர்மனிதானே விமான பலத்திலே கெட்டிக்காரன். லண்டனைப்போன வருஷம் தூளாக்கிவிட்டானே தெரியுமோ!

சுந்தரம்: அது பழையகதை. இப்போ, தலைகீழாக மாறிவிட்டது. பிரிட்டிஷ் விமானபலமே இப்போ முதல் தரம். ஜெர்மன் நகரங்களிலே இராத்தூக்கம் கிடையாது. தொழிற்
சாலைகள்மீது குண்டுமாரி பொழிகிறார்கள். ரஷிய களத்திலே ஆகஸ்ட் இரண்டாந் தேதிக் கணக்குப்படி 286, ஜெர்மன் விமானங்கள் ரஷியரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. ரஷியாவுக்கு 201, விமானம் நஷ்டம். கடுமையான சண்டைதான் வானத்திலும் நடக்கிறது. 3000 சதுரமைல் பிரதேசம் போர்க்களம், இங்கு இனி ஒரு கெஜ தூரம்கூடப் பின் வாங்குவதில்லை என்ற உறுதியுடன் ரஷியப் படைகள் போரிடுகின்றன. வோல்கா, டான், க்யூபான் ஆகிய பிரதேசங்களிலே காசாக் என்ற வகுப்பினர் உண்டு. இவர்கள் குதிரைப் படையினர். உலகக் கீர்த்தி பெற்றவர்கள். இந்தக் காசாக் குதிரைப் படையினர் இப்போது கிளம்பியுள்ளனர். ஜெர்மன் துருப்புகளைத் துரத்தியடிக்கப் பத்துநாட்களாக வாரனேஷிலே எப்படி ஜெர்மனியரால் முன்னேற முடியவில்லையோ அதைப் போலவே காகசசிலும் முடியவில்லை.

கந்த: அப்படின்னா, கொஞ்சம் நம்பிக்கை இருக்குது.

சுந்தரம்: நிச்சயமாக நம்பிக்கை இருக்கிறது. முன்பு நாஜிப்படைகள் மாஸ்கோவரையில் வரவில்லையா?

கந்த: ஆமாம்! உலகமே ரஷியா போச்சு என்று சொல்லி விட்டதே. மழைகாலம் வந்துதானே நிலைமையை மாற்றி
வைத்தது.

சுந்தரம்: அந்த மழைகாலம் வரத்தான் போகிறது. இப்போ ஆகஸ்ட் இந்த மாதம் தீர்ந்தால் செப்டம்பர் மழைகாலம், அப்போ மறுபடியும் ரஸ்டாவ், செபாஸ்டபூல் ஆகிய கோட்டைகளை ரஷியச் சேனை திருப்பிப் பிடித்துவிடும்.

சீனு: ரஷியா தீரமாகத்தான் சண்டை போடுகிறது. பிரிட்டிஷார்தானே கல்லுப்பிள்ளையார் போலே இருக்கிறார்கள். இரண்டாம் போர்முனை ஆரம்பிக்கப்படாதோ?

கந்த: அந்த யோசனை பலமாகிவிட்டதே. அமெரிக்க சேனாதிபதி ஜெனரல் மார்ஷல் இருக்கிறாரே, அவரை நேசநாட்டுப் படைத்தலைவராக நியமித்து, இரண்டாம் போர்முனையை ஆரம்பிப்பர்கள் என்று தெரிகிறது.

கந்த: ஆமாம், பாவம், ரஷியர்கள் எத்தனை நாளைக்குத்தான், இப்படிக் கஷ்டப்படுவது.

சுந்தரம்: சீனர்கள் இப்போ ஜப்பானியர் பிடித்துக்கொண்ட பூச்சௌ நகரைச்சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானியரிடம் பிடிபட்ட எத்தனையோ நகரங்களை மீட்டுவரு
கிறார்கள். அவர்களின் நகரங்கள் நாசமாயின, வயல்கள் மேடு
களாயின, மக்கள் மாண்டனர், ஆனால் மனஉறுதி மட்டும் தளரவில்லை.

கந்த: நம்ம ஊர்மேலே பாயமாட்டானே இந்த ஜப்பான்காரன்?

சுந்த: தீர்மானமாகச் சொல்ல முடியுமா? இந்தியாவை அபகரிக்க வேண்டுமென்பது ஜப்பான் திட்டத்திலே ஒரு பாகம். சீனா சண்டை தீரவில்லை. இங்கு, படைபலமும் திரண்டுவிட்டது. காலை வைத்துவிட்டால், உளையிலே இறங்கிய மாதிரி ஆகிவிடுமோ என்று யோசிக்கிறான் ஜப்பானியன். அவனிடம் பிடிபட்ட பர்மாவிலே, பிரிட்டிஷ், அமெரிக்க விமானங்கள், அக்யாப் முதலிய தளங்களைத் தாக்கிக்கொண்டே இருக்கின்றன. ஆஸ்திரேலியாப்பக்கம் திரும்பினால், அங்கேயும் முஸ்தீப்பு பலமாக இருக்கு, இங்கே திரும்பினாலும், படைபலம் திரண்டு இருக்கிறது. எனவே, என்ன செய்வதென்று யோசிக்கிறான்.

சீனு: ரஷியாவைத்தாக்க ஜப்பான் பிளான் போடுகிறதாமே. மன்சூரியா பக்கமாக ஏராளமான துருப்புகளைக் குவித்திருக்
கிறதாமே?

சுந்த: ஆமாம்! ஆனால், ஏராளமான ரஷியத் துருப்புகளும், அங்கே ரெடியாக இருக்கிறது தெரியுமோ.

கந்த: பரவாயில்லை, நம்ம காந்தி சமாசாரம் எப்படி இருக்கு?

சுந்த: அதைப்பற்றி ஐயரைக் கேளுங்கோ.

சீனு: அது என்ன சுந்தரம், உனக்குத் தெரியாதோ!

சுந்த: தெரியும், ஆனால் சொன்னால் உங்களுக்குக் கோபம் வரும், வம்பு வளரும்.

கந்த: அப்போ, அந்தப் பேச்சு வேண்டாமப்பா. உலக விஷயத்
தோடே நிறுத்துவோம். நான் போய் வருகிறேன்.