அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
1

உள்ளே நுழைந்ததும், தேவர் ஒரு கணம் தமது துக்கத்தைக் கொஞ்சம் மறந்துவிட்டார். சூடாவின் புன்னகை அவருடைய சோகத்தை மாற்றிவிட்டது. கோடையால் தாக்குண்டவன் இளநீர்ப் பருகியதும், இன்பம் பெறுவது போன்றது சூடாவின் புன்சிரிப்பு. ஆம்! இன்று மட்டுமா, என்றுமேதான். அந்தச் சிரிப்பு அவனுக்குக் களிப்பூட்டிற்று. அவனுடைய கோழைத்தனத்தை மாற்றியதும், கட்டுப்பாடு, பொதுஜன எதிர்ப்பு என்று எவை எவையோ அவனை மிரட்டியபோது, அவைகளை ஒரே நொடியிலே ஓட்டியதும், அந்த ஒய்யாரியின் சிரிப்புதான். வாழ்க்கையிலே அவனுக்கேற்பட்ட சலிப்பு, திகைப்பு, யாவும் அந்த ஒரு அற்புதச் சக்தியினால் விரட்டி அடிக்கப்பட்டது.

“சூடா!...” என்று துவக்கினார் தேவர். “ஒரு கப் காப்பி!” என்று, அதே குரலிலே கூறினாள். சூடா, “குறும்பு செய்யாதே! நான் மிக வேதனையுடன் இருக்கிறேன்” என்று தேவர் கூறினார், நாற்காலியில் சாய்ந்தபடி. “வேதனை விருத்தத்தைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்திருங்கள். இன்று வெகு சிரமப்பட்டுத் தயாரித்திருக்கிறேன் காப்பி. அதைச் சாப்பிட்டுவிட்டு என் திறமையைப் பாராட்டி விட்டுப் பிறகு சுந்தரகாண்ட பாராயணம் செய்யும்” என்று கூறிவிட்டு, மானென ஓடினாள் மான்விழியாள். மனவேதனையுடனிருந்த தேவர், கண்களை மூடிக்கொண்டு, சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

“பால்க்காரன் இருக்கிறானே! அவனுக்கு உலகப் பொருளாதார நெருக்கடியே தெரிவதில்லை. அப்பேற்பட்ட இங்கிலாந்தே அமெரிக்காவிடம் கடன்பட்டிருக்கிறதே. இப்படிப்பட்ட காலத்திலே, இந்தக் குடும்பம் நம்மிடம் கடன்பட்டிருப்பது ஒரு ஆச்சரியமாகுமா? என்று துளிகூட நினைப்பதில்லை. எப்படி நினைப்பான்! அவன் ‘தேசவீரன்’ படிப்பவனா?” என்று பேசிக் கொண்டே காப்பி ஆற்றினாள், காதலன் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு.

“பால்காரன் என்று ‘க்’ ஒன்று வைக்கிறாயே, நீ என்ன அந்த ரிப்போர் ஷாப் இலக்கணப் பேர்வழிகளை ஆதரிக்கிறாயா?” என்று தேவர் கேட்டார்.

“ஏன் ஆதரிக்கக் கூடாது? ‘தேசவீரன்’ அதைக் கண்டித்து எழுதுவதாலேயே நானும் கண்டிக்க வேண்டுமா? என்று ராஜம் அண்ணா அதை ஆதரித்திருக்கிறார்” என்று கூறினாள் சூடா, காப்பியைக் கொடுத்துவிட்டு! வெட்டி விவாதத்திலே ஈடுபட இஷ்டமில்லை தேவருக்கு. காப்பியை மௌனமாகவே சாப்பிட்டு முடித்துவிட்டார். “அடுத்த புரோகிராம் என்ன?” என்று கேட்டாள் சூடா.
“அடுத்த புரோகிராமா? அதைத்தான் நானும் உன் அண்ணனைக் கேட்கலாமென்று இருக்கிறேன்” என்று தேவர் கூறினார் கொஞ்சம் கோபத்துடன்.

“அண்ணா புராணம் ஆரம்பமாகி விட்டதா! சரி. இனி அது ஓய்வதேது, நாம் உலாவப் போவதேது!” என்று சூடா சொல்லிவிட்டு, வீட்டு வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

“சூடா! சமையல் நிதானமாகவே செய்யலாம். நானும் உதவிக்கு வருகிறேன் சமையற்கட்டுக்கு” என்று தேவர் கூறினார். சூடா சிரித்தாள். “உதவிக்கு என்று சொல்வானேன். உபத்திரவத்திற்கு என்று சொல்லுங்கள் ஆபீஸ் பாஷையை வீட்டிலே உபயோகிக்கக் கூடாது என்று ஆயிரம் தடவை சொல்லியிருக்கிறேனே” என்று கூறிவிட்டுத் தேவரின் மடிமீது உட்கார்ந்தாள் சிறு குழந்தைபோல்.

“சூடா! நான் கூறப் போவதைக் கேட்டுக் கோபிக்கக் கூடாது. துக்கப்படக் கூடாது. சலித்துக் கொள்ளக் கூடாது. என்ன விஷயம் தெரியுமோ?” என்று ஆரம்பித்த தேவர், அந்தச் சுந்தரியின் கூந்தலைக் கோதிய தன் கரங்கள், விரைந்து கன்னத்திலே உறவாடி, அதரத்தை நெருங்கக் கண்டு, பேச்சை நிறுத்திவிட்டு சிறிதளவு செயலில் இறங்கினார். அப்படியொன்றும் ஆபத்தான செயலல்ல! முத்தமிட்டார்! அவள் எதிர்பார்த்ததும் அதுதானே!! அந்த இன்பமயக்கத்தால் இருவருக்கும் ஒரு நொடி புது உலகப் பிரவேசம் கிடைத்தது!

“பீடிகை பலமாக இருக்கிறதே! என்ன விஷயம்?” என்று கேட்டாள் சூடா.

“நான் வேலையை ராஜிநாமாச் செய்துவிட்டேன்” என்றார் தேவர். அவளுடைய உதடுகள் கொஞ்சம் பிரிந்தன. முகத்திலே தவழ்ந்து கொண்டிருந்த நகை மறைந்தது. “ஏன்?” என்று சற்றுச் சோகக் குரலிலே கேட்டாள்.

“ஏனா! உன் அண்ணனால்!” என்றார் தேவர்.

“அவர் என்ன செய்தார்?” என்று பயந்து கேட்டாள் சூடா.

“வழக்கமாகச் செய்வதைத்தான்! என் வாழ்வைக் கெடுக்கிற காரியத்தைதான் இப்போதும் செய்தான். எப்போதும் எதைச் செய்வானோ அதையேதான் செய்தான்! அந்தக் குணம் எப்படிப் போகும்?” என்று ஆத்திரமாகப் பேசினார் தேவர்.

“விஷயத்தைச் சொல்லுங்கோ, பிரசங்கம் வேண்டாம்” என்று சூடா கேட்க, தேவர், ‘என்ன இருக்கிறது விஷயம். இன்று எழுத வேண்டிய தலையங்க விஷயமாகத் தகராறு எனக்கும் முதலாளிக்கும்! உன் அண்ணனைப் பாராட்டி எழுதும்படி முதலாளி சொன்னார். அதாவது கட்டளையிட்டார். நான் முடியாது என்றேன். எழுதத்தான் வேண்டும் என்றார். அந்த மிரட்டல் என்னிடம் நடவாது, வேறு ஆசிரியரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றேன். வார்த்தை முற்றிவிட்டது. ராஜிநாமாவைத் தந்துவிட்டு வந்துவிட்டேன்” என்று தேவர், கூறிவிட்டுப் பெரும் பாரத்தைக் கீழே தள்ளிவிட்டு வந்துவிட்டேன்” என்று தேவர், கூறிவிட்டுப் பெரும் பாரத்தைக் கீழே தள்ளிவிட்டவன் நிம்மதி அடைவது போலச் சில நிமிஷம் நிம்மதியும் அடைந்தான்.

சோகமாக இருக்கும் கணவனுக்கு ஆறுதல் கூற வேண்டியது துணைவியின் கடைமைதான். ஆனால் அந்தக் கடமையைச் செய்வதற்காக, “என்ன காரணம்! ஏன் முகம் வாட்டமாக இருக்கிறது?” என்னிடம் சொல்லக் கூடாதோ?” என்று துவக்கி, “நான் எது கேட்டால்தான் நீங்கள் உள்ளத்தைக் கூறுகிறீர்கள்? என்னைத்தான் நீங்கள் வீட்டு வேலைக்காரியை விடக் கேவலமாக மதிக்கிறீரே” என்று வளரச் செய்து, “எவளை நினைத்துக் கொண்டு ஏக்கமோ, யார் கண்டார்கள்” என்ற பொறாமைப் பேச்சிலே போய்விடும் “சம்சாரங்கள்” உண்டு. அவர்களின் தொல்லைக்குத்தான் போலும் சம்சாரம். சாகரம் என்று பெயரிட்டார்கள்! சூடாமணி சூட்சம புத்தியுள்ளவள். மனக்கலக்கம் மிகுந்திருக்கும் நேரத்திலே குறுக்குக் கேள்வியும் மறுப்புப் பேச்சும், புண்ணிலே முள் போலாகும் என்று தெரிந்து, தேவர் தமது வேலையை ராஜிநாமச் செய்து விட்டதாகக் கூறிய சொல்லிலே ஆழப் பாய்ந்திருந்த சோகத்தை உணர்ந்து கொண்டு வேறு விதமாகப் பேசி, எந்த விஷயம் தேவருக்குக் கஷ்டத்தைக் கொடுத்ததோ அதை மாற்றத் தொடங்கினாள். சூடாவின் புத்தி கூர்மையைக் கண்ட தேவர் மகிழ்ந்தார். சமயமறிந்து சம்பாஷிக்கவோ, விஷயமுணர்ந்து விவாதிக்கவோ தெரியாதவர்களே அதிகம். சூடா போன்றவர்கள் மிகக் குறைவு என்பது தேவருக்குத் தெரியும். அந்நாளிலேயே அழகாலே மட்டுமல்ல; லலிதமான சுபாவத்தாலேதான், சூடா, தேவரை வெற்றி கொண்டாள். அந்த மான்விழிக்குத் தேவர் ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் அவளுடைய மதுர மொழி அவரைச் சொக்கும்படி செய்தது. எந்த விஷயத்தையும் தெளிவாகப் பேசவும், குறிப்பறிந்து நடக்கவும் சூடாவுக்குத் தெரியும். “பொறுக்க முடியவில்லை. ஒரே புழுக்கம். காற்றே இல்லை” என்று விருந்தாளி கூற, “ஆமாம். அதை ஏன் சொல்கிறீர் போங்கள், தாங்க முடியாத வெப்பம். மருந்துக்கும் காற்றே கிடையாது” என்று சேர்ந்து பேசுவது பலருக்கு வழக்கமே தவிர, புழுக்கம் என்ற சொல் கேட்டதும், முதலிலே அதை ஒரு அளவுக்கேனும் குறைத்துக் கொள்ள விசிறி கொடுத்துவிட்டுப் பிறகு பேசுவோம் என்ற கூர்மையான புத்தியுள்ளவர்கள் குறைவு. வேலை போனது பிரமாதமானதல்ல; ‘இதற்காக விசாரப்பட வேண்டாம். இந்த வேலை போனால் வேறு வேலையா கிடைக்காது. ஏதோ நமக்குப் போறாத வேளை! பொழுது புலராமலா போகும்’ என்ற முறையிலே தைரியமூட்டி, ஆறுதலளிக்கும் ஆரணங்குகள், சோகத்தைக் கிளறிவிடும் சுந்தரிகளைவிட ஒருபடிமேல்! சூடா அதற்கும் ஒருபடி மேலாக இருந்தாள்.

“எடிடர் சார்! எழுந்திருங்கள். இனி வேறு வேலைக்கே போக வேண்டாம். சமையல் டிபார்ட்மெண்ட் சார்ஜ் இனி உங்களிடந்தான்” என்று வேடிக்கை பேசி, இன்று ரவாதோசை போட வேண்டும். ரசகுல்லா மட்டும் ஓட்டலிலே இருந்து தருவித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போடுவதுமாக இருந்தாள். வேலையிலிருந்து தேவர் விலகிவிட்டார் என்ற செய்தியே தெரியாத மாதிரியே நடந்து கொண்டாள். தேவர் களித்தார். இப்படிப்பட்ட இங்கிதமறிந்த இளம் பெண்ணை விதவைக் கோலத்திலே விம்மிக் கிடக்கச் செய்தானே ‘அந்த வெறியன்’ என்று பழைய கதையை எண்ணிக் கொண்டார்.

“சூடா! தமிழ்நாடே கண்டு திடுக்கிடும்படியான கதை ஒன்று எழுதப் போகிறேன்” என்றார் தேவர்.
“கதை எழுதுங்கள்; நிச்சயம் தமிழ்நாடு திடுக்கிட்டுத்தான் போகும்; சந்தேகமே வேண்டாம்” என்றாள் அந்த வேடிக்கைக்காரி.

“அப்படி என்றால்...” என்று கேட்டார் தேவர்.

“எப்படி உங்களாலே கதை எழுத முடியும் என்று நான் கேட்கிறேன் என்று அர்த்தம்” என்று மேலும் குறும்பு பேசினாள் அந்தக் கோமளம்.

“போ, சூடா! போய் பேப்பர் பென்சில் எடுத்துவா. நான் கதை கூறிக்கொண்டு வருகிறேன். நீ எழுது” என்றார் தேவர். சூடா சிரித்துக் கொண்டே ஓடினாள். நொடியிலே வந்து சேர்ந்தாள். பேப்பர் பென்சிலுடன்.

“ஆரம்பிக்கலாம் சார்!” என்றாள். தேவர், சொல்ல ஆரம்பித்தார். “எழுது சூடா, தெளிவாகவே இருக்கட்டும் எழுத்து” என்று பீடிகை போட்டுவிட்டுக் கூறத் தொடங்கினார்.

“நான் ஓர் விதவை. இளமையும் எழிலும் என்னிடம் இருந்தது. சமுதாயக் கட்டுப்பாடு என்ற இரும்புக் கரத்திலே நான் சிக்கித் தவித்தேன்” என்று கூறிவிட்டு, ஒரு நிமிஷம் யோசனையிலாழ்ந்தார். பிறகு “சூடா! எழுதிவிட்டாயா? சரி, ஏதோ படி” என்றார்.

“நான் ஓர் விதவை. என் போல் எண்ணற்றவர்கள்! இளமையும் எழிலும் என்னிடம் இருந்தது. காமப்பித்தமும் கள்ளக்கருத்தும் கொண்டுள்ள சமுதாயத்தைக் கண்டேன். சமுதாயக் கட்டுப்பாடு என்ற இரும்புக் கரத்திலே நான் சிக்கித் தவித்தேன்” என்று படித்தாள் சூடா.

“என்ன இது! உன் இஷ்டம்போல ஏதேதோ சேர்த்துக் கொண்டாய்” என்று ஆசிரியர் குரலிலே பேசினார் தேவர். “என்ன சேர்த்தேன். கொஞ்சம் பெருங்காயம் சேர்த்தேன்” என்றாள் சூடா. பேப்பரும் பென்சிலும் கீழே சிதறின. கதை கூறுவதும், எழுதுவதும் நின்றுவிட்டது. கொஞ்சுதலும் குழைதலும் ஆரம்பமாயின. கதை கூறுவதை ஆசிரியர் நிறுத்திக் கொண்டதும், சூடா தொடங்கினார் கதையை. “அந்த விதவையின் கட்டுகளை உடைத்தெறிந்து அவளைக் காதல் உலகிலே குடியேறச் செய்தார் ஒரு கட்டழகர்! அவருடைய நெட்டையான உருவத்தைக் கண்டு அவள் பயந்ததுண்டு! ஆனால், அவருடைய அணைப்பிலே அவள் கண்ட சுகம்! அச்சத்தை ஓட்டிவிட்டது.” என்று கூற, “ஆமாம்! கண்ணே! ஆயிருரே! இன்பமே!” என்று இன்பமான இடைச்செருகலிலே தேவர் ஈடுபடுவதுமாகக் காட்சி மாறிவிட்டது.

“இது என்ன கதை?” என்று கேட்டாள் சூடா, தேவரின் பிடியிலிருந்து விலகி.

“இதுவா? எந்தக் கதைக்கும் இருந்து தீரவேண்டிய கட்டம். இன்பபுரியின் வாயிற்படி, அன்பின் அறிகுறி, காதலின் கனிவு....” என்று அடுக்கினார் தேவர். வார்த்தைக்கு வார்த்தை முத்தங்களே முற்றுப்புள்ளிகளாயின! அந்த நேரம்போல் எந்த நேரமும் இருக்கக் கூடாதா என்று இருவரும் எண்ணினர்! யாருக்குத்தான் இராது அந்த எண்ணம்!

“இந்தத் தேன் குடத்தை அந்தத் தேள் காவல் புரிந்து வந்ததே” என்றுரைத்தார் தேவர்.

“எந்தத் தேள்?” என்று கேட்டாள் சூடா.

“உன் அண்ணன்” என்றார் தேவர்.

“அப்பாயடினால் நானும் தேள்தானே?” என்று கேட்டாள் சூடா.

“யார் இல்லை என்றார்கள்?” என்று பதிலுரைத்தார் தேவர். “தேன் என்றீரே” என்றாள் சூடா.

“இரண்டுந்தான்! மாதரின் மைவிழியிலே விஷம் உண்டு; தேனும் கிடைக்கும்” என்றார் தேவர்.
“கிடைக்கும், கிடைக்கும்” என்று பாவனைக் கோபத்தைக் காட்டினாள் சூடா.

“இன்பமே! கோபியாதே! உண்மையிலேயே, நமது வாழ்வை நினைக்கும்போது ஆனந்தவல்லியாகிய உன்னை விதவைக் கோலத்திலே இருக்கும்படி சமுதாயக் கட்டுப்பாடு கூறிற்றே! அதன் கொடுமையை என்னென்று கண்டிப்பது என்ற எண்ணமே மேலிடுகிறது” என்று கூறினார் தேவர்.

“எனக்கு மீட்சியளித்த தேவரல்லவா தாங்கள்!” என்று அடி மூச்சுக் குரலிலே அவள் பேசினாள்.

“தேவி!” என்று தழதழத்த குரலிலே கொஞ்சினார் தேவர்.

“நினைவிருக்கிறதோ?” என்று கேட்டாள் சூடா. “எது” என்று கேட்டார் தேவர்.

“முதன் முதல் என்னை நீங்கள் அணைத்துக் கொண்டது எந்தச் சந்தர்ப்பத்திலே என்பது நினைவிலிருக்கிறதா?” என்றுகேட்டாள் சூடா. “எப்படிக் கண்ணே, அதை மறப்பேன். அன்று நல்ல நிலவு! நானும் உன் அண்ணனும் நெடுநேரம் விவாதத்திலே ஈடுபட்டிருந்தோம். இலட்சியங்களைப் பற்றி இடிமுழக்கம் செய்கிறாயே தவிர, காரியத்திலே காட்டக் காணோமே என்று கூறி இடித்தேன் உன் அண்ணனை.”

“என்ன பித்தம் இவருக்கு! கொள்கைப்படி நடக்கவில்லை என்று நமது அண்ணனைக் கோபித்துக் கொள்கிறாரே இவர்! இவர் மட்டும் மகாயோக்யரா, கண்ணால் தாக்குகிறார்; கடமையை மறக்கிறாரே, என்று நானுந்தான் உங்களைப் பற்றி மனதிலே இடித்துரைத்துக் கொண்டிருந்தேன். என் அண்ணன் கிடக்கட்டும். அவர் கொள்கைக்கும் குடும்பப் பொறுப்புக்கும் போர் மூண்டது. அவரால் சமாளிக்க முடியவில்லை. போதிய தைரியமில்லை.உறுதியில்லை. அது தவறுதான். ஆனால் நீங்களுந்தான் என் நெஞ்சிலே நினைப்பை ஊறச் செய்தீர். ஆனால் தைரியமாக என்னை விடுவிக்கத் தெரியாது திண்டாடினீர்” என்று சூடா, அந்த நாள் நிலைமையை விளக்கினாள்.

“அண்ணனை விட்டுக் கொடுக்க மாட்டாய் போலிருக்கிறதே” என்று கேட்டார் தேவர்.

“நானா? நிஜமாகவா கேட்கிறீர், அந்தக் கேள்வியை. நமக்குள் நிகழ்ந்த காதல் விளையாட்டின் ஆரம்ப நாளன்றே, நான் என் அண்ணனை மட்டுமா, அன்னையை, குலத்தை, குடும்பத்தை, உமக்காக விட்டுக் கொடுத்தேனே” என்று கொஞ்சினாள் அந்தக் குமரி. கூந்தலைக் கோதியபடி, அந்தக் கோமளத்தைத் தன் மார்பிலே சாய்த்துக்கொண்டு, “அன்பே! உண்மைதான்! எனக்காக நீ எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கிறாய், அன்றிரவு, நீ...” என்று மீண்டும், பழைய நிகழ்ச்சியைக் கூறலானார் தேவர்.

“ஏது, அண்ணனுடன் சண்டையிட்டு விட்டுப் போய் விடுகிறாரே, மீண்டும் இங்கே வருவாரோ வரமாட்டாரோ என்ற திகில் எனக்கு, அதனால்தான்...”

“வேகமாக வெளியே சென்ற என்னை, “ஒரு வார்த்தை சற்று நில்லுங்கள்” என்று சொன்னாய்.

அவ்வளவுதான் நான் சொன்னது. அந்தச் சிறு தவறுக்காக என்னைக் கட்டிப் பிடித்து, அப்பப்பா! என்ன இருந்தாலும், போக்கிரித்தனமாகத்தான் நடந்து கொண்டீர்கள் அன்றிரவு.”

“எது போக்கிரித்தனம்? என் உரிமையைப் பெறுவதா போக்கிரித்தனம்? என் காதலியைக் கட்டி அணைத்து முத்தமிடுவதா போக்கிரித்தனம்.”

“அண்ணா பார்த்துவிட்டிருந்தால்?”

“ஆண்டவனே பார்த்திருந்தால்தான் என்ன? இருவரும் குருடர்கள்! உன் இளமையையும் எழிலையும் உன் அண்ணன் கண்டானா? கண் இருந்து என்ன பயன்? உன்னைப் போன்ற இளம் பெண்களின் இன்னல் நிறைந்த வாழ்வைத்தான் கண்டாரா ஆண்டவன்! இருவரும் கண்கெட்டவர்கள்.”

இந்த உரையாடலிலே உல்லாசமாகப் பொழுது கடத்திய காதலர் இருவரும் திடுக்கிடும்படியான ஒரு சம்பவம் நேரிட்டது. அதே நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரொருவர் சில கான்ஸ்டேபிள்களுடன் தடதடவென்று உள்ளே நுழைந்தார். காதல் உரையாடலில் களித்துக் கொண்டிருந்தவர்கள். இந்தத் திடீர்ப் பிரவேசத்தால் திடுக்கிட்டுப் போயினர்.

“மிஸ்டர் தேவர்! மன்னிக்க வேண்டும்! என் கடமை, நான் என்ன செய்யட்டும்” என்று கூறினார் இன்ஸ்பெக்டர்.

“என்ன சார் விஷயம்?” என்று பயத்துடன் தேவர் கேட்டார். சூடாவின் கன்னத்திலே கண்ணீர் புரண்டது.

“கோபிநாதர் கோயில் கொள்ளை சம்மந்தமாக உம்மைக் கைது செய்கிறேன்” என்றார் போலீஸ் அதிகாரி.