அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
1
                     

‘வேங்கையைக் கண்டால் பயமிருக்காதோ?’

“வேலிருக்கும் போது!”

“சிறத்தை சீறுமாமே?”

“ஆமாம்; சிரித்துக்கொண்டே அதைத் துரத்திப் பிடிப்பேன்!”

“கண்ணாளா! காட்டிலே நாட்டிலுள்ளோருக்கு என்ன வேலை? ஏன் இந்த வேட்டை? மன்னன் மனமகிழ மதுர கீதம் கேட்கலாம், நடனம் காணலாம்; மிருக வேட்டையாடி ஆபத்தை அணைத்துக் கொள்வதிலே ஓர் ஆனந்தமா?”

“வீரருக்கு வேட்டை வெண்ணிலாச் சோறு! வெஞ்சமரே விருந்து! தோட்டத்துப்பூவைத் தொட்டுப் பறித்துக் கொண்டையில் செருகும் கோதையர் களிப்பதுபோல், வேலால் வேங்கையைக் குத்திக் கொன்று, அதன் தோலையும் நகத்தையும் எடுத்து வரும்போது எமக்குக் களிப்பு.

“ஆபத்தான விளையாட்டு.”

“அஞ்சாதே அஞ்சுகமே! வீரரின் ஆரம்பப்பள்ளி அதுதான்.”

“எனக்கென்னமோ, நீங்கள் எவ்வளவு சொன்ன போதிலும் நெஞ்சிலே துடிப்பு இருக்கிறது.”

“சிற்றிடையே! சோகிக்காதே, சுந்தர முகத்தின் சோபிதம் சிதைகிறது, உன் புன்னகையை எனக்குத் தா, நான் புறப்பட வேண்டும்.”

“புன்னகை போதுமா?”

“வள்ளல்கள், கேட்டதற்கு மேலும் தருவர், தேவீ! நீ உன் பக்தனுக்கு வரந்தர மறுப்பாயா?”

“எவ்வளவு சமர்த்தான பேச்சு! சரசத்தில் நீரே முதல் பரிசு பெறுவீர்.”

“உண்மை! உன்னைப் பெறும் என்னை, ஊரார் அங்ஙனமே கருதுகின்றனர்.

“பூங்காவில் இவ்விதம் பேசி மகிழ்வதை விட்டுப், ‘புறப்படுகிறேன் புலிவேட்டைக்கு’ என்று கூறுகிறீரே! நெஞ்சிலிரக்க மற்றவரே! கொஞ்சுவதை விடும்.”

“வஞ்சி! வதைக்காதே, நேரமாகிறது. நினைப்பிலே ஏதேதோ ஊறுகிறது.”

“ஊறும், ஊறும். ஊஹும், அது முடியாது, நடவாது, கூடாது, என்ன துணிச்சல்! என்ன சை! எவ்வளவு ஆனந்தம்!”

“அணுச் சஞ்சலமேனும் இல்லாத இடம்!”

“கீதாமா?”

“யாழின் நரம்புகள் தடவப்பட்டபின், இசை விழாதோ!”

“அரச அவையிலே புலவராக அமரலாம் நீர்!”

“வேண்டாமம்மா! புலவர்கள் தொழில்கெட்டே விட்டது. முன்பு நம் நாட்டுப் புலவர்கள், ஓடும் அருவி, பாடும் குயில், ஆடுகின்ற மயில், துள்ளும் மான், மலர்ச்சோலை, மாது உள்ளம் முதலியன பற்றிப் பாடி மகிழ்வித்தனர். இப்போதோ, மச்சாவதாரமாம், மாபலி காதையாம், ஏதேதோ கதைகளையன்றோ கூறி வாழ்கின்றனர்; அந்த வேலை எனக்கு ஏன்?”

“நாதா! நீர் என்ன, அவைகளை நம்பவில்லையா. நமது மன்னர்கள், அந்தக் காதைகளைக் கடவுள் அருள் பெறக் கேட்கின்றனரே! நாடு முழுதும் நம்புகிறதே, உமக்கு அது பிடிக்கவில்லையோ?”

“காதுக்கு இனிய கற்பனை என்று, புரட்டரின் பொன்மொழிகளுக்கு நம் நாடு இடந்தந்துவிட்டது. குயிலி! அதை எண்ணுகையில் நெஞ்சங் குமுறுகிறது. நாட்டவரின் நாட்டம் இப்போது மண்ணில் இல்லையே, விண்ணிலன்றோ சென்றுளது.”

“உண்மை! அங்குதானே, தேவர் வாழ்கின்றனர்; மூவர் உறைகின்றனர்!”

“தேவரும், மூவரும் தேன் பூசிய நஞ்சு! விண், வெளி! ஆங்கு உலகம் கற்பிப்பவன் ஓர் சூதுக்காரன். அதை நம்புகிறவன் ஏமாளி!”

“எது எப்படியோ கிடக்கட்டும் என் துரையே! எனக்குத் தேவரும் மூவரும் நீயே!

“வானமுதம் நீ!”

“பார்த்தீர்களா! நீரே இப்போது தேவாமிருதம் என்று, அந்தக் கதையை நம்பித்தான் கூறுகிறீர்?”

“நம்பிக்கையல்ல! என் நரம்பிலும் அந்த வினை மெல்ல மெல்லப் பரவி வருகிறது. அதினின்று நம்மவரில் தப்பினோர் மிகச் சிலரே. இனி வருங்காலத்திலே இந்த நஞ்சு, நந்தமிழ்நாட்டை என்ன பாடுபடுத்துமோ அறியேன். அன்று நம்மவர் வாழ்ந்ததற்கும் இன்று நாம் இருப்பதற்கும் வித்தியாசம் அதிகமாகத்தான் இருக்கிறது. எங்கிருந்தோ இங்கு குடிபுகுந்து போரிடவோ, பாடுபடவோ இசையாமல் பொய்யுரையை மெய்யென்றுரைத்து வாழும் ஆரியருக்கு, அரச அவையிலே இடங் கிடைத்துவிட்டது. மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும்!”

“பாவம்! ஆரியர்கள் என்ன செய்கிறார்கள்? ஏதோ வேள்வி என்றும் வேதமென்றும் கூறிக் கொண்டுள்ளனர். பசுபோல் இருக்கின்றனர். படை எனில் பயந்தோடுகின்றனர். நாம் இடும் பிச்சையை இச்சையுடன் ஏற்று, கொச்சைத் தமிழ் பேசி ஊரிலே ஓர் புறத்தில் ஒதுங்கி வாழ்கின்றனர். எங்கோ உள்ள தமது தேவனைத் தொழுது, உடல் இளைத்து உழல்கின்றனர். நம்மை என்ன செய்கின்றனர்?”

“நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை! மனமிருக்கிறது மார்க்கம் இன்னமும் கிடைக்கவில்லை. நாட்டிலே வீரருக்கே இன்னமும் இடமிருக்கிறது. நாட்கள் பல போயினபின், நம்மவர் நிலை யாதாமோ அறியேன். புலி எலியாகுமோ? தமிழர் தாசராவரோ என்றும் நான் அஞ்சுகிறேன்.

“வீண் பீதி! ஆரியர் ஏதும் செய்யார், நாதா! பலருக்குத் தூதுவராக இருந்து, இருதய கீதத்தை ஒலிவிக்கச் செய்கின்றனர். அவர்கள்மீது ஏனோ உமக்கு வீணான ஓர் வெறுப்பு!”

“கண்ணே! கவலை தரும் பேச்சை விடுவோம். காலம் கடுகிச் செல்கிறது. நான் போகுமுன் கனி ரசம் பருகினால், என் களைப்பு தீராதோ! ஏதோ, இப்படி துடியிடை துவளத் துள்ளாதே மானே! விட மாட்டேன்! இந்த மானைப் பிடிக்காவிட்டால், மதம் பிடித்த யானையையும், மடுவிலே மறையும் புலியையும் வேட்டையாட முடியுமோ? நில்! ஓடாதே!!”

“அதோ, காலடிச் சத்தம். ஆமாம்! அரசிளங்குமரிதான். சுந்தரிதேவியின் சதங்கை ஒலிதான் அது. போய்வாரும் கண்ணாளா! ஜாக்கிரதையாக வேட்டையாடும். மான் வேட்டையல்ல, மங்கையர் வேட்டையுமல்ல, புலி, கரடி, காட்டுப்பன்றி முதலிய துஷ்ட மிருகங்கள் உலவும் காடு.”

“இளைய ராணியாரின் குரலா கேட்கிறது?”

“ஆமாம்! அரசிளங்குமரி அம்மங்கையின் குரல்தான்!”

“பூங்காவிலே நம்மைக் கண்டுவிட்டால்?”

“நாம் இதுவரை அரசிளங்குமரியின் கண்களில் படவில்லை, ஆனால் காதுக்கு விஷயம் எட்டித்தான் இருக்கிறது!”

“யார் சொல்லிவிட்டார்கள்?”

“சொல்வானேன்? என் கண்களின் மொழியை அவள் அறியாது போக முடியுமா? அம்மங்கையும் ஒரு பெண்தானே! அதோ கூப்பிடுகிறார்கள். என்னைத்தான். பூக்குடலை எங்கே? கொடுங்கள் இரு இதோ வந்தேனம்மா! வந்துவிட்டேன்! இது இருபத்திஏழாவது முத்தம்! போதும் காலடிச் சத்தம் கனமாகிவிட்டது விடும், புறப்படுகிறேன்.

“மற்றதைப் பிறகு மறவாதே, நான் வருகிறேன். தஞ்சமடைந்தவனைத் தள்ளமாட்டாய் என்று என் நெஞ்சு உரைக்கிறது.

“சரி! சரி! வேட்டை முடிந்ததும் விரைந்து வாரீர்; மாலை தொடுத்து வைப்பேன்.”

“மதியே! மறவாதே, நான் வருகிறேன்.”

“குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவிலே நடந்த காதற்காட்சி, நாம் மேலே தீட்டியது. அந்தப்புரத்திலே, அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயிர் போன்றிருந்த தோழி, தன் காதலனைக் காண, பூங்கா புகுந்தாள். அவளுக்காக மாமரத்தடியிலே காத்துக் கிடந்த வீரன், தென்றல் கண்டவன்

போல், தாவிக் குதித்தெழுந்து தையலை ஆரத் தழுவினான். கையிலிருந்த பூக்குடலை தரையில் விழ, கூந்தல் சரிய, கோதை குதூகலமாகத் தன் காதலனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். அவர்கள் கிளப்பிய ‘இச்’சொலி கேட்ட பறவைகள், மரக்கிளைவிட்டு மற்றோர் கிளைக்குத் தாவின.

“வானம் துல்லிய நிறத்தோடு விளங்கிற்று. கதிரோன் ஒளிப்பிழம்பாக மட்டுமே இருந்தான், வெப்பத்தை வீசும் வேளை பிறக்கவில்லை. காலை மலர்ந்தது, மாந்தர் கண் மலர்ந்த நேரம். மாலை மலரும் காதல் அரும்பாகி இருந்தது எனினும், என்று அவனுக்குக் காலையிலேயே மலர்ந்து மாலையில் அவன் வீடு திரும்ப நெடுநேரம் பிடிக்கும். வேட்டைக்குச் செல்கிறான் அன்று! வேட்டைக்குப் புறப்படுமுன், வேல்விழியாளைக் கண்டு, விருந்துண்டு போக மனம் தூண்டியது. கால்கள் வேலிகளையும் முட்புதரையும் தாண்டின. கள்ளத்தனமாக உள்ளே நுழைந்தான். காவலன் காணவில்லை என்பது அவன் நினைப்பு.

காவலனுக்குக் கண்ணுமுண்டு, கருத்துமுண்டு! எனவே காதலர் கூடிப் பேசுவதைக் கண்டுங்காணாதவன் போல், பலமுறை இருந்ததுபோல் அன்றும் இருந்தான். மேலும், அந்த வஞ்சி அரசிளங்குமரியின் ஆருயிர்த்தோழி குணவதி. கோல மயில் சாயலும், கிளி மொழியும், கனக நிறமும், கருணை உள்ளமும் பெற்ற பண்பினள். அவளது காதலன் வீரர்க்கோர் திலகம். மன்னன் குலோத்துங்கனின் குதிரைப் படைத்தலைவருள் ஒருவன். வீரத்தாலேயே, இளம்பருவத்திலேயே அந்த உயர் நிலை பெற முடிந்தது. தொண்டைமானிடமிருந்து ‘தோடா’ பரிசு பெற்றவருள் அவன் ஒருவன். எனவே இவ்விருவரும் சந்தித்துப் பேச, மன்னனின் பூங்காவை மன்றலாக்கிக் கொண்டது கண்டு காவற்காரன் களித்தானேயன்றிக் கோபித்தானில்லை.

அவர்கள் சந்திக்கும்போது, அவன் உலகமே காதல்மயமாக இருப்பதை எண்ணுவான்! குக்குக்கூவெனக் குயில் கூவி, காதற்கீதத்தை அள்ளி அள்ளி வீசுவதை நினைப்பான். நெடு நாட்களுக்கு முன்பு, நீர் மொள்ள அருவிக்கு வரும் நீலநிறச் சேலைக்காரி வேலாயியைத் தான் கண்டதும், கனைத்ததும், அவள் முதலில் மிரண்டதும், பிறகு இணங்கியதும் ஆகிய பழைய காதல் நிகழ்ச்சியை எண்ணுவான். “நரைத்தேன் இன்று. ஆனால் நானும் முன்னம் நாடினேன், பாடினேன், ஆடினேன் அணங்குக்காக” என்று மனதில் எண்ணிக் கொள்வான். தோட்டத்து வாசலிலே நின்று, யாரும் உள்ளே நுழையாதபடி பார்த்துக்கொள்ளும் தொழிலைவிட்டு, காதலரைக் காண யாரும் புகாதபடி காவலிருப்பான். இதனைக் காதலர் அறியார். அவர் தம்மையன்றி வேறெதைத்தான் அதுகாலை அறிதல் முடியும்!

அரசிளங்குமரியின் குரல் கேட்டு, அரைகுறையாயிற்று அன்று காதலர் விருந்து. விரைந்தோடி வந்த தோழியைக் கண்ட அம்மங்கை, கோபித்துக் கொண்டு, “காலமும் அறியாய், இடமும் தெரியாய் கடமையையும் மறந்தாய்” என்று கடிந்துரைத்தாள். தோழி தலைகுனிந்து நின்றாள். பூக்குடலை காலியாகவே இருந்ததைக் கண்ட மற்றத் தோழியர், “மனம் பறிக்கும் வேலையிலே மலர் பறிக்க மறந்தாள்” என்று கூற அதுவரை கோபித்தது போல் பாவனை செய்த அரசிளங்குமரி, கலீர் எனச் சிரித்து, தோழியின் கன்னத்தைக் கிள்ளி, ‘கதிரோன் வராவிட்டால் தாமரை மலராது என்பார்களே, அதுபோல் உன் அன்பன் வராவிட்டால், உன் முகம் மலருமோ!’ என்று கேலி செய்தாள். தோழி அப்போதுதான் பயந்தொளிந்தாள். பயம் போனதும் நாணம் ‘நான் உன்னை விடுவேனா?’ என்றுரைத்துக் கொண்டே அவளைப் பிடித்துக் கொண்டது.

“வேட்டையாடக் காட்டுக்குப் போகக் கிளம்பியவன் இங்கே வந்தது ஏனடி?” என்று அரசிளங்குமரி ஒரு தோழியைக் கேட்க, அவள் “இவளைக் கண்டு மானென்று மயங்கி வந்தான் போலும்!” என்று சொல்லிச் சிரித்தாள்.

“வேட்டைக்குக் கணைகள் வேண்டும்; இங்கும் கணைவிடு காட்சிதான் நடந்தது.” என்று கிண்டல் செய்தாள் அரசகுமாரி.

“ஆமாம் தேவி! காதலுக்குச் செலுத்தும் கணைகள் காட்டிலே! காதலுக்குக் கணைகள் காட்டில் அல்லவே!” என்றாள் குறும்புக்காரத் தோழி.

“ஆமாம்! காட்டில் அல்ல! நம் வீட்டுத் தோட்டத்தில்” என்று கூறிக்கொண்டே, அம்மங்கை காதற்குற்றவாளியைக் கைப்பிடித்திழுத்துக் கரகரவெனச் சுற்றி ஆடினாள், களித்தாள். அம்மங்கையும் அதன் வயப்பட்டாளோ, என்று மற்றத் தோழியர் சந்தேகித்தனர்.”

யார் கண்டார்! யார் காணவல்லார்! காதற் கணைகள் அம்மங்கையை மட்டும் விட்டுவிடுமோ! அதன் சக்தியின் முன்பு, பட்டத்தரசியாக வேண்டியவரும் தட்டுக்கெட்டுத் தடுமாறித்தானே தீருவர்! கண்டவர் அஞ்சிடக் கடும் போரில் தன்னிகரற்ற குலோத்துங்கனின் குமரியானாலும், குமரன் தோன்றிக் குறுநகை புரியின் குளிரும் விழியுடன் கொடியெனத் துவண்டு சாயத்தானே வேண்டும்!
“நடனராணி! கூச்சம் இப்போதிருந்து பயன் என்ன? வா, பந்தாடுவோம்” என்று அரசிளங்குமரி கூறினாள். நடனராணி என்ற பெயரே நாம் குறிப்பிட்ட தோழியுடையது. நடனத்திலே மிக்கக் கீர்த்தி வாய்ந்தவள். நாட்டினர் அதுபற்றியே, நடனராணி என்று அவளை அழைத்தனர்.

பந்தாடினர் பாவையர். நடனராணியை விட்டுப் பிரிந்த அவள் காதலன் வீரமணியின் மனம் படும்பாடு, அவர்களாடும் பந்து படாது என்னலாம். கிளியைக் கண்டால் அவள் மொழி நினைவு! குயிலைக் கண்டால் அவள் கீதக் கவனம்! மயிலைக் கண்டால் அவளது நடன நேர்த்தியின் கவனம் அவன் நெஞ்சில் ஊறும். பொல்லாத பறவைகள், சும்மாவும் இல்லை. ஜோடி ஜோடியாகப் பறப்பதும், பாடுவதும், உண்பதுமாக உல்லாசமாகவே இருந்தன. ஊராள்வோன் உல்லாசத்துக்காக வேட்டைக்குக் கிளம்ப, வீரமணியும் உடன் சென்றான்! வேட்டைக்காரர் கிளப்பிய பறையொலியும், ஊதுகுழலொலியும், குதிரைக் குளம்பொலியும், வீரர் முழக்கொலியும் கேட்டு, பேடைக் குயிலும், மாடப் புறாவும், கோல மயிலும், கொக்கும், வக்காவும் பயந்து அலறிப் பறந்தோடின! புதர்களிலே சலசலவெனச் சத்தம் கிளம்பிற்று. தொலைவிலே காட்டு மிருகங்கள் உறுமுவது கேட்டது. மோப்பம் பிடித்துச் செல்லும் நாய்கள், வாலை மடக்கி தலøயைக் குனிந்து தரையை முகர்ந்தன! இடையிடையே புலி சென்ற அடையாளம் காணப்பட்டது. வீரர்கள் இன்று நல்ல வேட்டைதான் என்று களித்தனர். மன்னன் குலோத்துங்கனும் வீரமணியும் மட்டுமே விசாரத்திலாழ்ந்திருந்தனர். வீரமணியின் விசாரம், காதலியிடம் சரசச் சமர் புரிவதை விட்டு, சத்தற்ற வேட்டைக்கு வந்தோமே என்பதனால்! குலோத்துங்கனோ, பகை வேந்தர்களை வேட்டையாட சமயம் கிடைக்கவில்லையே, பயந்தோடும் மிருகங்களைத் தானே வேட்டையாட வேண்டி இருக்கிறது என்று கவலை கொண்டான். குலோத்துங்கச் சோழனின் வீரப்பிரதாபத்தை, வெஞ்சமர் பல நிரூபித்துவிட்டதால் வேந்தர் பலரும் விழியில் வேதனை தோன்றிட வாழ்ந்தனர். பறைஒலிகேட்டு அன்று மிருகங்கள் பயந்தோடியும், பதுங்கிக் கொண்டதும் போலவே, பல மன்னர்கள் குலோத்துங்கனின் படை ஒலி கேட்டஞ்சிப் பயந்துப் பதுங்கினர். மன்னனின் படைத்தலைவன், மாவீரன் கருணாகரத் தொண்டைமான் “கண்டதுண்டமாக்கிக் கழுகுக்கிடுவேன், காயும் எதிரிகள் களத்திலே நிற்பின்” என்று முழங்கினான். எவரே எதிர்ப்படுவர்! உயிரிழக்க, அரசிழக்க, எவரும் ஒருப்படாரன்றோ!

எனவே குறுநில மன்னரும் குலோத்துங்கனுக்கு அடங்கியே வாழ்ந்தனர்! தோள் தினவெடுத்தன, வேட்டை ஒரு சிறு பொழுதுபோக்காகுமென்றே மன்னன் புகுந்தான் காட்டிலே. தினவெடுக்கும் உள்ளத்தைத் திருத்தும் நிலைகாணா வீரமணி, மன்னன் பின் சென்றான், மனதை மங்கை பால் விட்டே வந்தான், வழி நடந்தான்.

இயற்கை எழில் செயற்கைப் பூச்சின்றி பூரித்துக் கிடக்கும் காட்டினுள்ளே, மன்னன் குலோத்துங்கன் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்காகப் புகுந்த காட்சியும், குதிரை மீதமர்ந்து பாய்ந்து சென்ற வீரர்களின் வருகை கண்ட துஷ்ட மிருகங்கள் மிரண்டோடினதும் கண்ட வீரமணிக்கு, குலோத்துங்கன், இளவரசாக இருந்தபோது, வடநாடு சென்ற காலையில், சோழநாட்டிலே சதிகாரர் கூடிக்கொண்டு, குலோத்துங்கனுக்கென்று கங்கை கொண்ட சோழன் குறித்திருந்த மணிமுடியை, கங்கைகொண்ட சோழனுடைய மகன் அதிராசேந்திரனுக்குச் சூட்டியதும், அதுபோது சோழமண்டலமே காட்டுநிலை அடைந்ததும், பிறகு, வாகைசூடி வடநாட்டிலிருந்து குலோத்துங்கன் திரும்பியதும் சதிகாரர் பதுங்கிக் கொண்டதுமான சம்பவமும், சமரும், காட்சியும் நினைவிற்கு வரவே புதர்களிலே மறையும் புலிக்குட்டிகளையும், மரப்பொந்துகளில் ஓடி ஒளியும் மந்திகளையும், வீறிட்டு அலறி ஓடும் வேங்கையையும், உறுமிக்கொண்டே ஓடும் காட்டுப்பன்றியையும், மிரண்டோடும் மான் கூட்டத்தையும் கண்டு களித்தான்.

காட்டிலே கணைகள் சரமாரியாய்க் கிளம்பின. ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் பறை ஒலியும் பலவுமாகக் கலந்து காட்டிலே கலக்கத்தை உண்டாக்கிற்று. வேட்டை விருந்தை மன்னருக்குத் தந்த காடு, வனப்பு வாய்ந்தது. வேங்கை, குறிஞ்சி, தேக்கு, கமுகம், புன்னாகம், முதலிய மரங்கள் நிறைந்து காணப்பட்டன. உலர்ந்து காணப்பட்ட ஓமை மரங்களும், புகைந்து கிடந்த வீரை மரங்களும், காரைச் செடியும், சூரைச் செடியும் காண்போருக்கு இயற்கையின் விசித்திரத்தை விளக்கின.

சந்தன மரங்கள் ஓர் புறம், அதன்மீது தமது உடலை மோதி யானைகள் தேய்த்ததால் உண்டான மணம் ‘கம்’மென்று கிளம்பிற்று. இண்டங்கொடிகள் இங்குமங்குமாகச் சுருண்டு கிடந்தன. மரத்தின் வேரோடு வேர்போல் மலைப்பாம்புகள் உண்ட அலுப்பு தீரப் புரண்டுகிடந்தன. வாகையும் கூகையும், மூங்கிலும் பிறவுமான பல விருட்சங்கள் விண்முட்டுவோம் என்றுரைப்பதுபோல் வளர்ந்துகிடந்தன. சிற்சில இடங்களிலே குலைகுலுங்கும்வரை வாழையும் காணப்பட்டன. வீரர்கள் தமது கணைகளை விடவே, கரிக்குருவியும் கானாங்கோழியும், காடையும், கிள்ளையும், மயிலும், மாடப்புறாவும், உள்ளான், சிட்டு, கம்புள், குருகு, நாரை, குயில் முதலிய பறவைகள், பயந்து கூவி, பல்வேறு திசைகளிலே பறந்தன. பறக்கும்போது பலவித ஒலி கிளம்பியது, புதியதோர் பண் போன்றிருந்தது. கானாறு ஒருபுறம், காட்டெருமைக் கூட்டம் மற்றோர்புறம், யானை ஒரு புறம், புலி கரடி வேறோர்புறம், வீறுகொண்ட மரங்களிலிருந்து கிலிகொண்டு சிறகை விரித்துப் பறந்தன பெரும் பறவைகள்!

குரங்குக் கூட்டம் கீச்செனச் கூவி, கிளை விட்டுக் கிளை தாவி, வீரரின் வாள் வேல் ஒலியால் கிலி கொண்டு குதித்தோடின. வால் சுழற்றின வேங்கைகள், குள்ளநரிகள் ஊளையிட்டன. முட்புதர்களைத் தாண்டிக்கொண்டு சிறுத்தைகள் சினந்தோடின. கருங்கற்களிலே, பிலங்கள் தேடின பாம்புகள், இத்தகைய காட்சிகளைக் கண்டு களித்து வில் வளைத்து, கணைகள் தொடுத்து, விரைந்தோடி வாள்கொண்டு தாக்கி, வேல் எறிந்து வேங்கையையும் வேழத்தையும் வீழ்த்தி, வீர விளையாட்டிலே ஒரு நாள் பூராவும் கழித்தனர். மன்னரும் அவர் தம் பரிவாரமும், வேட்டையிலே கிடைத்த பொருள்களைச் சேகரித்து வீடு திரும்ப மன்னன் கட்டளை பிறக்குமென்று எண்ணிய வீரமணி பொழுது சாய்வதற்குள் ஊர் சென்றால் மீண்டுமோர்முறை பூங்காவிலே நடனராணியைக் கண்டு களிக்கலாம், காட்டிலே கண்ட காட்சிகளை, வேட்டையாடிய செய்திகளைக் கூறிடலாம் என்று கருதினான். மேலும் அவன் பக்குவமாக ஓர் பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்து வைத்திருந்தான், அதனை நடனராணிக்குத் தர விரும்பினான். ஆனால் அவன் எண்ணியது ஈடேறவில்லை. மன்னன் புதியதோர் கட்டளை பிறப்பித்தான். ‘புறப்படுக காஞ்சிக்கு’ என்று கூறிவிட்டான். புரவிகள் காவிரிக் கரைக் காட்டைக் கடந்து கச்சி செல்ல விரைந்தன.

அன்று மாலை. அரசிளங்குமரி அம்மங்கையும், நடனராணியும், மற்றும் சில தோழியரும், வழக்கம் போல் களித்தாடிக் கொண்டிருந்தனர். நடனராணியின் உள்ளம், காட்டிலே; கணைவிடும் காதலன்மீதே இருந்தது. பலவகை விளையாட்டு பாவையர் ஈடுபட்டனர். பரிவாரங்களுடன் காட்டுக் காட்சிகளையும், இடையே உள்ள நாட்டுமாட்சியையும் கண்டுகளித்து கச்சிபோய்ச் சேருமுன்னம், மன்னன் வருகையை முன்கூட்டிக் கச்சிக் காவலனுக்குக் கூறிட, வீரமணியை விரைந்து முன்னாற் செல்லுமாறு மன்னன் கட்டளையிட்டான். மன்னன் மொழிக்கு மாற்றுமொழி கூறல் எங்ஙனம் இயலும்? பஞ்சவர்ணக் கிளியை, தோழனொருவனிடம் தந்து, அதனைத் தன் காதலியிடம் தந்து. தான் கச்சி நகருக்குக் கடுகிச் செல்லுவதைக் கூறுமாறு வேண்டிக்கொண்டான். செவி மந்தமுள்ள அத்தோழன், யாரிடம் கிளியைத் தருவது என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. “நான் மணம் செய்துகொள்ள இருக்கும் அம் மங்கையை நீ அறியாயோ?” என்று வீரமணி அவசரத்துடன் கேட்க, தோழன் “அம்மங்கையை அறியேனா!” என்று கூறிக் கொண்டே கிளியைப் பெற்றுக் கொண்டான். அவன் மன்னன் குமரி அம்மங்கைத் தேவியையே, வீரமணி குறிப்பிடுவதாகக் கருதினான். அவனையே மன்னன் அழைத்து, “ஏ! மருதா! விரைந்து நம் நகர் சென்று, ஏழிசை வல்லியாரைச் சேடியருடன் கச்சி வரச்சொல்லு; நாம் அங்குச் சின்னாட்கள் தங்க எண்ணியுள்ளோம்” என்று கூறிட, மருதன் தலைநகர் புறப்பட்டான்.

பஞ்சவர்ணக் கிளியோடு மருதன் உறையூர் நோக்கியும், கவலையுடன் வீரமணி கச்சி நோக்கியும் விரைகின்ற வேளையிலே, மன்னன் குமரி அம்மங்கை தோழியருடன் பூங்காவிலே விளையாடிக் கொண்டிருந்தாள். பொழுது சாய்கிறது; போனவர் திரும்பக் காணோமே என்று நடனராணி ஏக்கத்துடனேயே விளையாட்டில் விழியும், வீரமணியிடம் மனமும் செலுத்திக் கிடந்தாள்.

நடனராணி, பதுமா என்ற பரத்தையின் வளர்ப்புப்பெண். வனப்பும், வளம்பெற்ற மனமும், இசைத்திறனும், நாட்டியக் கலைத்திறனும் ஒருங்கே பெற்றவள். மன்னன் மனமகிழவும், மற்றோர் கொண்டாடவும் ‘மாதவியோ’ என்று கலைவல்லோர் போற்றவும் வாழ்ந்து வந்தாள். அவளது அரிய குணம், அந்தப்புரத்துக்கு எட்டி, அம்மங்கையின் கருணைக்கண்கள் நடனராணிமீது செல்லும்படிச் செய்தன. நடனராணி அம்மங்கையின் ஆரூயிர்த் தோழியானாள். பதுமா தன் வளர்ப்புப் பெண்ணின் மனப்பாங்கு, பரத்தையராக இருக்க இடந்தராததையும், பல கலை கற்று வாழவே பாவை விரும்புவதையும் அம்மங்கையிடம் கூற, “அதுவே முறை! இனி நடனராணியின் உறைவிடம் நமது அரண்மனையே” என்று கூறி, அவளைத் தன்னுடன் இருக்கச் செய்தாள். நடனராணியை வீரமணி நெடுநாட்களாகவே நேசித்து வந்தான். அவள் அரண்மனைக்கு வந்து சேர்ந்த பிறகு, அடிக்கடிச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கண்கள் பேசின; கனிந்தது காதல். கண் கண்டவர் “சரியே” என்றனர். கேட்டவர் “முறையே” என்றனர். நடனராணியின் நற்குணம் நாடெங்கும் தெரியும். வீரமணியின் திறமும் வேந்தரும் மாந்தரும் அறிவர். “ஆற்றலும் அழகும் ஆரத்தழுவலே முறை” என்று ஆன்றோர் கூறினர். வீரமணியின் தாய் மட்டுமே “பரத்தையரிலேதானே என்பாலனுக்குப் பாவை கிடைத்தாள்? குன்றெடுக்கும் தோளான் என் மகன், குறுநில மன்னன் மகள் அவனுக்குக் கிடைக்காளோ?” என்று கவலையுற்றாள். ஆனால், வீரமணி, நடனராணியிடம் கண்ட கவர்ச்சியை அவனன்றோ அறிவான்!

இருண்டு சுருண்ட கூந்தல், பிறைநுதல், சிலைப் புருவம், நெஞ்சைச் சூறையாடும் சுழற்கண்கள், அரும்பு போன்ற இதழ்கள், முத்துப் பற்கள், பிடிஇடை இவை கண்டு, கரும்பு ரசமெனும் அவள் மொழிச்சுவை உண்டு, கண்படைத்தோருக்குக் காட்சியென விளங்கும் நடனநேர்த்தியைக் கண்டு, மையல் கொண்ட வீரமணி நடனராணியிடம் நெருங்கிப் பழகியதும், சித்திரம் சீரிய குணத்தின் பெட்டகமாகவும் இருப்பதையும், கருத்து ஒருமித்தருப்பதையும் கண்டு, களிகொண்டு, “அவளையன்றிப் பிறிதோர் மாதைக் கனவிலுங் கருதேன்” என்று கூறிவிட்டான். மணவினையை முடித்துக்கொள்ளாததற்குக் காரணம், தாய் காட்டிய தயக்கமல்ல! தாய் தனயனுக்குக் குறுநில மன்னனின் மகள் தேடிட எண்ணினாள். தனயனோ, கோமளவல்லிக்கு மணவினைப் பரிசாக வழங்க குறுநிலம் தேடினான். அதற்காகக் கொற்றவனிடம் தான் கற்ற வித்தையத்தனையும் காட்டிச் சேவை புரிந்துவந்தான். நடனராணியின் வாழ்க்கை நல்வழியிலே அமைய இருப்பதுகண்டு, களித்து, பதுமா நிம்மதியாகவே நீங்கத் துயிலுற்றாள்.

பூங்காவிலே நடனராணி புதிதாகச் சேடியாக அமர்ந்த ஓர் ஆரியக் கன்னியிடம், தமிழர் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தாள். கங்கைக் கரையிலே தனது இனத்தவர் கனல்மூட்ட ஓமத்தீ மூட்டுவதை ஆரியக்கன்னி உரைத்திட, நடனமணி “எம்மவரின் ஓமம் எதிரியின் படை வீட்டைக் கொளுத்துகையில் கிளம்பும்” என்றுரைத்து மகிழ்ந்தாள்.

“சகல கலை வல்லவளே! பேச்சு போதும், பந்தாடுவோம் இனி” என்று அம்மங்கை கூறிட, பாவையர் பந்தாடலாயினர். உற்சாகமற்றிருந்த நடனராணியின் உள்ளத்தையும் பந்தாட்டம் குளிரச் செய்தது. கைவளைகள் ‘கலீல் கலீல்’ என ஒலிக்க, காற்சிலம்புகள் கீதமிட, கூந்தல் சரிய, சூடிய பூ உதிர, மகரக்குழை மானாட்டமாட, இடை திண்டாட, ‘மன முந்தியதோ, விழி முந்தியதோ’. கரம் முந்தியதோ’ என்று காண்போர் அதிசயிக்கும் விதமாக, பாவையர் பந்தடித்துக் களித்தனர். பூங்கொடிகள் துவளத் தொடங்கின. வியர்வை அரும்பினது கண்ட மன்னன் மகள் “பந்தாடினது போதுமடி, இனி வேறோர் விளையாட்டுக் கூறுங்கள். ஓடாமல் அலுக்காமலிருக்க வேண்டும்” என்றுரைத்திட, நடனராணி “பண் அமைப்போமா?” என்று கூற, ஆரிய மங்கை “பதம் அமைப்போம்” என்று கூற ‘சரி’ என இசைந்தனர். ஒருவர் ஒரு பதத்தைக் கூற அதன் ஓசைக்கேற்பவும் தொடர்பு இருக்கவுமான பதத்தை மற்றவர் இசையுடன் உடனே அமைத்திட வேண்டுமென்பது அவ்விளையாட்டு. சிந்தனைக்கே வேலை. சேயிழையார் சுனையில் துள்ளும் மீன்போல், சோலையில் தாவும் புள்ளிமான் போல் தாவாமல் குதிக்காமல் விளையாட வழி இதுவே.

அம்மங்கை துவக்கினாள், பதம் அமைக்கும் விளையாட்டினை. நடனராணியும் ஆரிய மங்கை கங்காபாலாவும் அதிலே கலந்துகொண்டனர். மற்றையத் தோழியர் வியந்தனர்.

அம்மங்கை: நாட்டி

நடனராணி: இணைவிழி காட்டி

கங்கா: இளையரை வாட்டி

அம்மங்கை: மனமயல் மூட்டி

நடனராணி: இசை கூட்டி

கங்கா: விரகமூட்டி

இதைக் கேட்டதும் நடனராணி ‘விரகமூட்டி’ என்றதற்குப் பதில் ‘இன்பமூட்டி’ என்று கூறுவதே சாலச் சிறந்தது என்றாள். “விரகம் விசாரம்” அது வேண்டாமடி கங்கா. அது நடனாவுக்கு நோயூட்டும்; ‘வேறு கூறு’ என்று அம்மங்கை கேலி செய்தாள். “எனக்கொன்றுமில்லயைம்மா, ஆகட்டும் கங்கா, நீ துவங்கிடு இப்போது” என்றாள் நடனம்.

கங்கா: சரசமொழி பேசி

அம்மங்கை: வளை அணி கை வீசி

நடனம்: வந்தாள் மகராசி!

என்று கூறி, கங்காபாலாவைச் சுட்டிக் காட்டிச் சிரித்தாள்.

“நீங்கள் இருவருமே பதம் அமையுங்கள். நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம் உங்கள் சமர்த்தை!” என்று அம்மங்கை கூறினதால், ஆரிய மங்கையும் ஆடலழகியும் பதமமைக்கலாயினர்.

நடனம்: மாலையிலே

கங்கை: மலர்ச்சோலையிலே

நடனம்: மாங்குயில் கூவிடும்போதினிலே

கங்கை: மதிநிறை வதனி!

நடனம்: இதழ்தரு பதனி

கங்கா: பருகிடவரு குமரன்

நடனம்: குறுநகையலங்காரன்

கங்கா: குண்டல மசைந்தாட

நடனம்: கோமளம் விரைந்தோட

கங்கா: மயில்கள் ஆட

நடனம்: மகிழ்ந்த நாடா

“சரியான மொழி! நடனத்தின் நிலை இதுதான் இப்போது” என்று அரசகுமாரி கேலி செய்தாள்.

“கடைசியில் என்னைக் கேலி செய்யத்தானா தேவி இந்த விளையாட்டு?” என்றாள் நடனராணி.

“கேலியல்லவே இது” என்று கூறிக் கன்னத்தைக் கிள்ளி காவலன் குமரி “மற்றொன்று ஆரம்பி பாலா” என்று பணிந்தாள்.

கங்கா: பூங்காவில் பார் அரும்பு

நடனம்: பூவையருக்கே அது கரும்பு

கங்கா: மனமில்லையேல் வேம்பு

என்று கூறினாள். தன்னை மீண்டும் கேலி செய்வதைத் தெரிந்துகொண்ட நடனம், “பாய்ந்து வருகுதே பாம்பு” என்று கூறினாள். பாம்பு என்றதும் கங்காபாலா, பயந்து ‘எங்கே? எங்கே?’ என்று அலறினாள். நடனம் சிரித்துக்கொண்டே, “பதத்திலே பாம்பு, நிசத்தில் அல்ல” என்று கூறிக் கேலி செய்தாள். எல்லோரும் கைகொட்டி நகைத்தனர். கங்காபாலா வெட்கிக் தலைகுனிந்தாள். அதே சமயம் ‘கணீர் கணீர்’ என்று அந்தப்புரத்து மணி அடிக்கப்பட்டது. ‘ஏன்? என்ன விசேஷம்? மணி அடித்த காரணம் என்ன?’ என்று கூறிக்கொண்டே பாவையர் அந்தப்புரத்தை நோக்கி ஓடினர்.