அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


1961 ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?

தி.மு.கழகமும் வளர்ச்சியும் -
கழகத்தில் பாசம்!

தம்பி!

தி.மு. கழகம் துவக்கப்பட்டதும், இது முளைவிடாது என்று பயம் காட்டினர்; அரசியலில், "மிட்டா மிராசு பாத்தியதை' கொண்டாடும் போக்கினர்.

தி.மு. கழகம் முளைவிட்டது; வளர்ந்தது; பசுமை பாங்காகத் தெரிந்தது.

தி.மு. கழகம் நாலுநாள் கூத்து; ஆடி அடங்கிவிடும்; அரூடம் கேளும் என்றார், அரசியலை நடாத்தும் அருங்கலையில் வல்லவர்கள் யாமே என்று ஆர்ப்பரிக்கும் போக்கினர்.

தி.மு. கழகம், ஆண்டுக்காண்டு புதுப் பொலிவுபெற்று வளர்ந்து வரலாயிற்று.

ஏழெட்டுப் பேர்வழிகள் எங்கும் சுற்றி, என்னமோ கழகம் என்று பேசுகின்றார்; ஈதல்லால் இவரின் பக்கம் எவர் சேர்வர். கூறும் என்று, எல்லோர்க்கும் தாமே வழிகாட்டி என்று எண்ணிக் கொண்டோர் ஏளனம் கூறி நின்றார்.

தி.மு. கழகமே எமது இடமாகும் என்று, உழவர் முதல் சிறு வணிகர் வரை கூறலானார்; மாணவரும், நாட்டின் மாண்பு காக்க இப்பாசறையில் யாம் சேர்வோம் என்று வந்தார்; ஆலைதனில் வேலை செய்யும் பாட்டாளித் தோழர், அருங்கலைகளில் ஈடுபட்டு ஏற்றம் பெற்றார் அனைவருமே. இது எங்கள் கழகம் என்று இடம் பெற்று உயிரூட்டம் தந்தனர்; வரலாறு அறிந்தோரும் வந்தார் இங்கு; தமிழர் வாழ்ந்த விதம் கூறி நின்றார் புலவர் பல்லோர்; கவிவல்லோர் இசைவாணர் துணை நின்றார்; கவர்ச்சி மிகு வடிவுடன் கழகம் மிளிர்ந்ததாங்கே.

ஆமப்பா! இதுகளுடன் யார்தான் சேர்வார்? அன்னக் காவடிகள் ஐந்நூறு சேரும்; ஆடிப்பிழைப்போரும் பாடி வாழ்வோரும் கூடினர் அங்கு என்றால், ஆவது என்ன அவரால்? பேசுவர் சுவைசொட்ட; வேறென்ன இயலும்! சாயம் பூசுவர், ஆடுவர் நாடகம்; கண்டோர்க்குச் சிரிப்பு மூளும். அஃதேயன்றி கிளர்ச்சி செய்ய வல்லவரோ கழகத் தோழர்! கிண்கிணியும் கழலாமோ, கூறும், என்று கேட்டுவிட்டு இடிச்சிரிப்பைக் காட்டி நின்றார், எவருக்கும் திறம் இல்லை; தீரம் இல்லை என்று கூறும் மேலோர்.

நாட்டினிலே உள்ள இழிவுதனைத் துடைத்திடத்தான், நாங்கள் எங்கள் குருதியையும் தருவோம் என்று சூளுரைத்துக் கிளர்ந்தெழுந்தார், கழகத் தோழர்; சுடுசொல்லைத் தாங்கி நின்றார். துவளவில்லை; கடுஞ்சிறைக்கு அஞ்சி அவர் ஒளிய வில்லை; கைகால் கண் போயினும் கலங்கவில்லை; இன்னுயிரே போயிற்று, வீரம் மட்டும் இம்மியளவும் குறைவாகிப் போகவில்லை; வீறிட்டுப் பாய்ந்து வந்த விடுதலை வேகம் கண்டு கைபிசைந்து நின்றார் காங்கிரஸ் ஆட்சியாளர்தானும்.

ஈதென்ன பெருவீரம்! சிறையுள் சென்று இருந்துவிட்டு வெளிவந்து பேசுகின்றார். கிளர்ச்சி எனில் தக்கதோர் நியாயம் வேண்டும்; எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்புக்காட்டி வந்தால், எவர் இவரை மதித்திடுவார் கூறும். நாடு ஏற்கும் திட்டம் உண்டு என்றால், நல்லபடி அதனை எடுத்துரைத்து, மக்களிடம் ஒப்பம் பெற்றாலன்றோ, மதித்திடுவர் மாநிலத்தில் உள்ளோர் எல்லாம்; இங்கிதமான இம்முறையைவிட்டு எதற்கெடுத்தாலும் ஒழிக! ஒழிக! என்று இரைச்சலிட்டுப் பலன் என்ன? என்று பேசிக், குன்றனைய மதிபடைத்தோர்போலக் கோலம் காட்டி நின்றார் காங்கிரஸ் ஆட்சியாளர்.

சிறை செல்லமட்டுந்தான் தெரியுமென்று என்ணற்க; நெஞ்சத்துள்ள சிறைக்கதவுதான் திறந்துவைக்கும் அந்தத் தீரமும் எமக்கு உண்டு என்று, செப்பியே கழகத்தார், சுற்றிச் சுற்றி விளக்கமெல்லாம் அளித்தார் விடுதலைப் போரினைப் பற்றி; வீழ்ந்துபட்ட திருஇடமும் மீண்டும் வெற்றிக் கொடி நாட்டி எழுந்திடவே அறப்போர் காணீர் என்றார்; திட்டமெது என்பீரேல், ஒன்று உண்டு; அதனுள்ளே பலப்பலவுமான திட்டம், ஆலின் விதைக்குள்ளே பல்லாயிரம் இருப்பதுபோல உளது என்று, அறைந்தனர் மாற்றார் அதிரும்வண்ணம், திராவிட நாடு திராவிடர்க்கே எனும் முழக்கம்.

முழக்கமாம், முழக்கம்; கேட்டீரோ! இவர் எழுப்பும் முழக்கமெல்லாம், நாடகம்தான்; வேறொன்றில்லை! பழம்பெருமை பேசுகிறார் பார்த்தவர்போல்; படக்காட்சி காட்டுகின்றார் திராவிடம் என்பதாக; நாடகமாடிடும் இவர்கள்தானோ நாடாள வருவார்கள்; முறையோ என்று, நாப்பறையை எழுப்பி நின்றார், நாடாளும் நப்பாசை கொண்டோரெல்லாம்!

நாடகமும் படமும், தொழில்; அறிவீர் ஐயா! நல்ல அந்தத் தொழிலும் நெஞ்சை அள்ளும் திறமுடைத்து; எள்ளி நகையாடும் ஏந்தலெல்லாம், வெள்ளையரை எதிர்த்த காலை, வேண்டிப் பெறவில்லையோ, கலைஞர் தொண்டு! - என்று கழகத்தார் கூறிக் காத்தார், கலையினையும் அஃதளிக்கும் கருத்தோட்டத்தையும். கலைஞர் எனில், எங்கிருந்தோ வந்து சேர்ந்த வியப்பளிக்கும் பொருளல்ல, அவரும் நம்மில் ஓர் அங்கம் அறிந்திடுவீர், அவர்க்கும் உண்டு அன்னைமொழி காத்திடும் உரிமைதானும்; நாடு நமதாக வேண்டும் என்று நல்லோர்கள் கிளம்பிப் போர் புரியும் காலை, நாடகம் நடாத்திடுவோர்க்கும் வேலை உண்டு என்றும் கூறி, நமது கழகத்தோரும் நாடகமே ஆடி மகிழ்வித்தார்கள், நாட்டவரை, கலைஞரையும் கூடத்தானே!

கலை உலகு உமதே என்று கருவம் கொண்டு அலைகின்றீர்கள்; காட்டுகின்றோம் எமது திறம் பாரும் என்று, கதருடைய கலைஞர்களை அழைத்து வந்து, கண் சிமிட்டி நின்றார் காங்கிரஸ் அமைச்சரெல்லாம்; காட்சி கண்டு, கலகலத்துப் போகும் கழக அணி என்றார்.

கலையுலகில் கீர்த்திபெற்ற தோழரெல்லாம், பாடி மகிழ்விக்க மேடை வந்தாரில்லை; கழகம் காட்டும் பாதையினை மற்றவர்க்கு எடுத்துரைக்கும் பணி மேற்கொண்டார்; திரு இடத்தின் சீரெல்லாம் படித்துணரத் தலைப்பட்டார்கள்; வெறும் சிரமசைக்கும் பதுமைகளாய் இல்லை; சிறையும் செல்ல முன்வந்தார்; முக்காடிட்டு ஓடவில்லை; கழக அணி தன்னில் இவர் சேர்ந்த பின்னர், கலைத் துறையில் பணிபலவும் செய்யும் தோழர், பாட்டாளிகள் பலரும் வந்து சேர்ந்தார்; விடுதலைக்குப் பாடுபட முனைந்து நின்றார். கலையுலகில் நிலைபெற்றோர் கழகமதில் வந்ததாலே, கலையுலகப் பிரச்சினையை அலசிப் பார்த்து, எமது நிலை உயர வழிகோலக் கழகம் என்னென்ன திட்டங்கள் கொள்ளும் என்று கேட்டு அவர்கள் இருந்தார் இல்லை. எமக்கு என்று ஏற்பட்ட தொழில் கலை; எனினும் அஃதும், எமது கழகம் காட்டும், வழிநடக்கத் துணை நிற்கும் என்பதால்தான் இருக்கின்றோம் அத்துறையில் தானும் என்றார். அர்ஜுனனாய் வேடமிட்டு, அளிப்பேன் இலட்சம் என்றுரைக்கும் முதலாளியின் முகமும் சுண்ட, எமது பணி விழைவீரேல், இதனைக் கேளும்; எமது கொள்கைக்கு ஊறு நேரா வண்ணம் இருந்தாலன்றி, படமதனில் நாங்கள் நடிக்க மாட்டோம்; நாங்கள் படத்தொழிலுக்காக மட்டுமே உள்ளோம் அல்லோம்; பாங்கான திராவிடம் காணும் நோக்கம் கொண்டுள்ளோம், அறிந்திடுவீர் என்று சொல்லி, பண்பு காத்தார்.

ஈதெல்லாம் கிடக்கட்டும்! சேதி கேறீர்! இவர்க்குள்ளே எத்தனையோ பிளவு; பேதம்! ஆளுக்கோர் திட்டம், மட்டம், அனியாயம்! வெளியே தெரிந்தால் போதும்! இவருக்கு அவர்தான் மேல், அவருக்கு இவரே நிகர் என்றெல்லாம் எத்தனையோ பேச்செல்லாம் எழுந்திட்டது அங்கே. இனி அவர்கள் ஒன்றாக இயங்கமாட்டார்! பிய்த்துக் கொண்டு ஓடுவார் பாரீர் என்று, பேயுள்ளம் கொண்டோர் பேசி வந்தார்.

பேச்சுகளில் எழுத்துகளில் பேதம் தேடி அலைகின்றீர் பித்தர்களே! கருத்துத் தோட்டம், ஓர் மலர்தான் இருக்கும் இடமாகாது: வண்ணப் பூ வகை வகையாய் இருக்கும் ஆங்கே! சிரித்திடும் முல்லைக்கும் சிங்கார ரோஜாவுக்கும், பறித்தெடுக் காமலே பார்த்து மகிழத்தக்க பாங்கான தாமரைக்கும், பகைதான் என்று பேசுவது அறிவீனம் அன்றோ. சேர்ந்து பணியாற்றிடும் காலை; செயல் முறைகள் பலப்பலவும் பேசிடல் வேண்டும்; சீற்றம் எழத்தக்க நிலையும் வரலாம்; சிண்டு முடித்திடுவோர் முந்திக் கொண்டு மனத்தாங்கலாக்கி மகிழ்ச்சி வெறி கொள்வர்; எனினும், எமது இலட்சியமாம், திராவிட நாடு திராவிடர்க்கு என்னும் பிணைப்பு, எமக்குள் முறிவுகளைத் தராது காணீர் என்று சூளுரைத்துக் கழகம் வளர்ந்தது; சூதுமதியினருக்குக் கிலியூட்டிற்று.

உருட்டு விழி, மிரட்டும் பேச்சுக் கொண்டோரன்றோ! இவரால் ஊர்க்கலகம் மூளும், பிணமும் வீழும், பேச்சோடு நின்றிடும் பேர்வழிகளல்ல, பெரும்போர் மூட்டி, நாட்டை இரத்தக் களரியாக்கிப், பேயாட்டம் ஆடத்தான் படை சேர்க்கின்றார்கள். அறவழியில் இவர் நின்று பணியாற்றனார் - அனைவருக்கும் ஆபத்துத் தேடும், பயமளிக்கும், பலாத்காரம் அவிழ்த்துவிட்டு, படுகளமாக்குவார், நாட்டை! பாரும் என்றார்.

கொன்று குவித்துக் கொடிநாட்டிடும் கொடிய முறை எமதல்ல, கூறிவிட்டோம். கூர்வாள் ஏந்திக் குத்திக் குடலெடுக்க முனைந்தோமில்லை - எதிர்ப்படுவோர் எங்கிருந்தோ வந்த வேற்று நாட்டாரல்ல; விலங்கணிந்தும் உணராது உழலும் எமது உடன் பிறப்பாளர் அன்றோ அவர்களும்தான்; ஒருவருக் கொருவர் வெட்டிக் கொண்டு வீழும் அந்த வேட்டுமுறை அல்ல, நாங்கள் கொண்ட முறை அறிவீர் என்று கூறி, குத்துக்கும் வெட்டுக்கும் ஆட்பட்டுக் குருதி கொட்டி, கொடிய செயலில் துளியும் இறங்காமல், கொள்கை கூறி, கண்ணீர்த் துளிகள் நாட்டின் கண்மணிகள் என்று பாராட்டும் நிலையினைக் கழகம் பெற்று, பாமரரும் பற்றுக் காட்டும் ஏற்றம் கொண்டது.

வேட்டுமுறை அல்லவோ உமது! பிழைத்தீர், பயல்காள்! இல்லையென்றால், கூண்டோடு பிடித்தழித்துப் போட்டிருப் போம். தப்பிவிட்டீர். சரி, போகட்டும். வேட்டு முறை வேண்டாம் என்று கூறிவிட்டீர். வேறென்ன முறை உமக்கு? உண்டோ? கூறீர்! என்று காங்கிரசார் கேட்கலுற்றார்.

வேட்டுமுறை ஆகாது; மரபுமல்ல என்பதனால் அதை விடுத்தோம்; அஃதும் இன்று இக்கழகமதை நடாத்திச் செல்வோர், இம்முறை ஆகாது என்பதால், எழவில்லை. வேட்டு முறை தன்னாலன்றி வேறெதாலும் விடுதலையும் கிடைக்கப் போமோ என்று என்று கேட்கும் வீரமிகு போக்கினர்க்குக் குறைவில்லை, அறிவீர் நன்றாய். பாசறைகள் அமைத்தும், பதுங்கிப் போர் செய்தும், வெடிகுண்டுகள் செய்தும், விரைந்து தாக்கிடும் வழி நடந்தும், வடவரின் ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்று, விடுதலைப் போர் வரலாற்றுச் சுவடி காட்டும், சுவை மிக்க சேதிகளை நெஞ்சில் கொண்டு, செயல்புரியத் துடி துடித்து நிற்போர்கள் அறவே இல்லை என்று எண்ணற்க. அவர்கள் இன்று, அந்த முறை ஆகாது என்று கூறும் எண்ணத் தாரிடம் கழகம் இருக்கட்டும் சின்னாட்கள் என்று உள்ளார். எந்நாளில் அவரிடம் கழகம் சேரும் என்பதைக் கூறவல்லோர் அவருமல்ல; உமது ஆணவத்தின் போக்கே, அந்நாளை விரைவாகக் கொண்டு வந்து விடக்கூடும். அறப்போரிட்டு வெற்றி பெற விழைவோர்கள் கழகத்தை நடத்தும் பொறுப்பிலுள்ளார், இந்த உண்மையின் அருமையினை உணராமல், ஆணவத்தால் அடக்குமுறை அவிழ்த்துவிட அவிழ்த்துவிட, அழிவு முறையன்றி வேறொன்று ஆகாது என்று ஆர்த்தெழுவர் பல்லோர்கள் அறிவீர். இன்று வேட்டுமுறை இல்லை, ஓட்டுமுறை மேற்கொண்டுள்ளோம் என்று, அறிவித்திருக்கிறது நம் கழகம், ஆளவந்தார்க்கு!

ஓ! ஓ! ஓட்டுமுறையோ; உமது! மெத்தச் சரி! களத்திலே காட்டுங்கள் கைவரிசை பார்ப்போம் என்று, காங்கிரசார் பெருங்கூச்சலிட்டார், சிரிப்பினூடே; தேர்தலிலே வல்லவர்கள் என்ற பட்டம், தேசத்தார் சூட்டிவிட்டார் என்பதாலே. தேர்தலிலே நிற்பாராம், கேளீர் ஐயா! தெருமுனையில் பேசுவர், கேட்பர், மக்கள், பொழுதுபோக்குப் பல பண்டு, இவர்கள் தருவது பேச்சுக் கச்சேரியன்றோ! இதனைக் கண்டு, மதிமயங்கிப் போனதாலே, இவர்கள் பாரும், தேர்தலிலே நிற்பாராம்! ஐயோ பாபம்! தூள் தூளாகிப் போவர்! பின்னர், கழகம் இருந்த இடம் புல் முளைத்துப் போகும்! சரியான அடி கொடுத்துத் தரைமட்ட மாக்கிடவே; வந்தது சமயம் ஜெய்இந்த் என்று கொக்கரித்துக் கிளம்பினர் கோலேந்திகள், புதிய தெம்புடன்.

எப்புறமும் இத்திறத்தார் எதிர்த்த காலை, எதைக் கண்டு இவர்கள் துணிவு பெற்றார் என்று அவரெல்லாம் ஏங்கும் வண்ணம், தேர்தலிலே கழகம் ஈடுபட்டு, நாடெங்கும் நல்ல பிரச்சாரம் நடாத்தி, வீடெங்கும் கழகம் பற்றிப் பேசுவோர் கூடக் கண்டு, விறுவிறுப்பாய்ப் பணியாற்றி வெற்றிதேடப் பாடுபட முனைந்தது. அந்த நாளில், எவர் கலைஞர் எவர் வழக்கறிஞர் என்ற பேச்சு எழவே இல்லை. கலையுலகில் இருந்த இராஜேந்திரன் தானும், கடும் எதிர்ப்பு மூண்ட தேனி களத்தில் நின்று போட்டியிட்டார். மற்றக் கலைஞரெல்லாம் நாளெல்லாம் சுற்றிச் சுற்றி, கழக வெற்றிக்கு உழைத்தார். ஓட்டுப் பெறுவ தென்பது விளையாட்டல்ல; ஒன்றல்ல இரண்டல்ல நாங்கள் கண்ட தேர்தல்; மன்னாதி மன்னனெல்லாம் மண் கவ்வச் செய்தவர்கள்: எம்மை இந்த மரப்பாச்சிகளோ எதிர்த்து வெற்றி கொளப் போகிறார்; கதை எழுதும் கருணாநிதியும், கவிபாடும் கண்ணதாசனும், படக்காட்சிகட்குக் கதை எழுதிடும் அண்ணாத்துரையும், எமை எதிர்த்து நிற்கப் போமோ என்றெல்லாம் ஏசிவந்தார், இறுமாப்பு மிகக் கொண்டோர்: மக்களோ, சீராட்டி வரவேற்று, நமக்குப் பரிந்து வாக்களித்தார்; பதினேழு இலட்சம் வாக்குகளை நம் கழகம் பெற்றது; ஆட்சி மன்றம் சென்றமர்ந்தனர் நம்மவர்.

எப்படியோ பெற்றுவிட்டார் வெற்றி, அதனால் என்ன? எம்மிடமன்றோ ஆட்சி! இதுகள் பாரீர், எம்மெதிரே இளித்துக் கிடக்கும் காட்சி. எவரெவரோ எமை எதிர்த்தார், இன்று அவரெல்லாம், ஏங்கித் தவம் இருந்து எமது அருள் வேண்டுகின்றார்! பக்குவமில்லாதார், பாலபருவம் அரசியலில், பாகு தெளித்த மொழி பேசினாலே போதும், பாதம் பணிந்திடுவார்: சில நூறு ரூபாய்கள் பெறவல்ல வேலையோ, பல ஆயிரம் தரும் வியாபார அனுமதியோ, ஏதேனும் சுவை, இலாபம், காட்டினால் போதும், கழகம் கலைத்துவிட்டு, எம் கால் வீழ்ந்து கிடப்பார்கள்; உழைப்பாளிக் கட்சி உருக்குலைந்துபோன கதை உலகறியு மன்றோ! பொதுநலக் கட்சிதானும், போதும் "கடை' என்று கூறீ, எம்மிடம் அடைக்கலம் ஆகிவிட்ட, "சேதி' அறியீரோ? பொறுத்திருந்து பாரும், இதுகள் போக்குப் புரிந்துவிடும் என்றுரைத்து வந்தார், கேட்போர் எரிச்சலடையும் வண்ணம்.

கழகத் தோழர்களே, ஆட்சிமன்றம் அமர்ந்தாலும் ஆளடிமையாகாது, கொள்கை பிறழாது, நோக்கம் மாறாது, திருஇடத்தின் விடுதலைக்குப் பாடுபட, போர்முனைகள் பல உண்டு, அதிலே இஃதொன்று; இங்கு வந்து அமர்ந்ததனால், இல்லை இனி வேலை என்று எவர் எண்ணிக் கொண்டாலும், ஏமாளியே அவர்கள் என்று கூறிவிட்டு, மேலும் சுறுசுறுப்பாய் நாடு சுற்றி நடத்தி வந்தார், நம் நாட்டு விடுதலைக்கு பேரார்வம் வளர்ந்திடவும், புத்தார்வம் பூத்திடவும், பெர்மிட்டு, லைசென்சு, காண்ட்ராக்ட், கையூட்டு என்று பல உண்டு, அறமழிக்கும் முறைகள். இன்று வரை எவரும், நம் தோழர் குறித்து, எந்த "மாசுமருவும்' எடுத்துக் கூற இயலாமல், தூய பணியாற்றித் தோழர்கள் வருகின்றார்.

தீர்ந்ததப்பா, தீப்பொறி கொட்டும் வேலை! இனி, திண்டு தனில் சாய்ந்து சில பேசிக் கிடப்பார்கள். போராற்றல் இனி இல்லை; நெஞ்சம் துருப்பிடித்துப் போன நிலை. முழக்கமிட்டு வந்ததெல்லாம் இந்த இடம் பிடிக்கத்தான். அதனால் இனி இவர்கள் ஒடுங்கிக் கிடப்பார்கள், என்று பேசி மகிழ்ந்தார், நீறுபூத்த நெருப்பாகிக் கழகம் இருக்கும் நிலை உணராதார்.

அதுவும் தவறென்று காட்டுவதற்கான வாய்ப்புக் கிடைத்திட்ட போதெல்லாம், கிளர்ந்தெழுந்து நின்றார்கள் கழகத்துத் தோழர்கள். கருப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சியே ஓர் காவியம் போல் வடிவெடுத்தது, நம் கழகத் தோழர்களின் வீரத்தின் விளைவாக, இந்தி வந்துவிடும் என்ற நிலை பிறந்தவுடன், எங்கே? எங்கே? என்று ஆர்த்தெழுந்தனர் வீரர். வீரம் குன்றிவிடும்; இயல்பே மாறிவிடும்; சட்டமன்றம் சென்ற தனால் என்றன்றோ நாமெண்ணி, ஏமாந்து போயிருந்தோம். இந்தக் கழகத்தாரோ, இம்மியும் வீரமதை இழந்திடக் காணோமே! எதேது அவர் போக்கு அதிசயமாய் இருக்கு தென்று, மாற்றார்கள் மனம் மருளும் நிலை எழ உழைக்கலானோம்.

அழிந்துபடத்தக்க நிலை பலவும் தாண்டிவிட்டார், அடித்துக் கொண்டும் சாவர் என்றிருந்தோம், பிழைத்துக் கொண்டார்; இடம் பிடிக்க இவர்க்குள்ளே எழும் பூசல் என்றிருந்தோம், எப்படியோ எதனையும் இலகுவாகத் தீர்த்துக் கொண்டு, ஏறுநடை போடுகின்றார். இன்னும் எத்தனை நாள்? எதுவரையில் இந்நிலைமை? எப்போது பிளவு வரும்? என்று நோட்டமிட்டு, வட்டமிட்டபடி, கழுகு, பிணம் வீழாதா என்றேங்கும் பான்மைபோல, சுற்றித் திரிகின்றார், மோப்பம் பிடித்தபடி. நம்மில் துளியேனும் பேதம் ஏற்பட்டால், சந்துகளில் நுழையும் சர்ப்பம் போலாகிவிட, சந்தர்ப்பம் பார்த்தபடி இருக்கின்றார், மாற்றார்கள்; இன்று இவர்க்கு இருக்கும் வலிவுக்குக் காரணமே, இவர்க்குள்ளே இருக்கின்ற, பாசம்தான் வேறில்லை; எப்பாடுபட்டேனும் இப்பாசம்தனை ஒழித்தால், பிறகு, சாந்து அழிந்த சுவர், சரிந்துபோவது போல், இவர்கள் அணிவகுப்பு, அழிந்துபோகும், நிச்சயமாய்; எனவே, இம்முனையில் இறங்கி வேலை செய்தால், வெற்றி நிச்சயம்காண் என்று வெறி கொண்டு, மாற்றார் உலவுகின்றார்; மரபு அழிக்கத் துடிக்கின்றார். புத்தம் புதுப் பிரச்சினையோ, பழங்காலப் பிரச்சினையோ, தத்துவம் கிளப்புகின்ற பூசலோ புகையோ, தரம் என்ன என்று கேட்கும் தத்தளிப்போ, ஏதோவொன்று, இன்று நமக்குக் கிட்டாதா? எடுத்ததனைப் பெரிதாக்கி, ஊருக்கெல்லாம் காட்டி உருவழிக்க முயல்வேனே! வருகிறதே பொதுத் தேர்தல், வளருகிறதே கழகம்!! மேலிடத்தார் கேட்கின்றார், என்னதான் செய்கிறீர்? இவ்வளவுதானோ திறமை? என்றெல்லாம். எனவே, ஏதேனும் செய்து இவர்தம் ஒற்றுமையைக் குலைத்துவிட, நாளும் வழிதேடி, நாமிருக்க வேண்டுமென்று, நாடாளும் நிலை இழக்க நேரிடுமோ என்பதனால் நடுக்குற்றுக் கிடக்கும், காங்கிரசார் எண்ணுகின்றார். நாம், கழகத்தின் வடிவம் மாற்றிட முனைந்தாலும், கட்டுப்பாடு ஒழுங்குக் காத்திடப் பணி புரிந்தாலும், செம்மைப்படுத்த செயல்முறை புதிதாய் வகுத்தாலும், எவரெவர்க்கு என்ன இடம்? எவரெவர்க்கு என்ன தொகுதி மூன்று 219 220 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பணி? எவரெவர் தொண்டாற்றி ஏற்றம் அளிப்பவர்கள்; எம்முறையில் உள்ளோரைத் தலைமை இருக்கைக்கு ஏற்பது எனும், எதுபற்றி முயன்றாலும், மூச்சைச் சூறாவளி என்றாக்கி, பேச்சைப் பெரும்புயல் என்றாக்கி, நமக்குள் பேதத்தை வளர்த்து விட்டு, பெரும் பிளவு, உண்டாக்கி, உடைத்துக் காட்டிவிட்டு, ஊராள்வோர் உட்கார்ந்து, ஓஹோ! பார்த்தீரா? பன்னிரண்டு ஆண்டுகளாய், பயல்கள் இறுமாந்திருந்தார்; பலப்பல முயற்சி களைப் பக்குவமாய் முறியடித்தார்; என்றாலும் இறுதியிலே, உடைத்தெறிந்தோம் அவர் அமைப்பை; சிதறியது கண்டவர்கள், கண்ணீர் சிந்திக் கிடக்கின்றார்; இனி இதுபோல் ஓர் அமைப்பு. எவர் முயன்று ஆக்கிடுவார்; பயமின்றி நாமினிமேல் வாழ்ந்திடலாம், என்று பாடிடவும், ஆடிடவும், ஆவலுடன் உள்ளார்கள் மாற்றார்கள்.

இதை அறிந்து, நாம் நடந்துவந்த அந்த நீள்வழியையும் நினைந்து, எதிர்ப்பட்ட ஆபத்தை எத்திறத்தால் வென்றோம், ஏனைப் பேச்செல்லாம் எவரெவர் கூறி நின்றார், என்னென்ன பேச்செல்லாம் மாற்றார் உரைத்தார்கள் - சின்னப் பிள்ளைகள் என்றார், சினிமாக் கட்சி என்றார், கூத்தாடும் கும்பல் என்றார், தடி கண்டால் ஓடும் என்றார். சுகபோகம் தேடிடவே சூது நடத்துவோர் என்றார், குடும்பத்திலுள்ளாரைக் குறைகூறாதும் இருக்கவில்லை; என்னென்ன ஏச்சுக்கள்; எவரெவரின் இழிமொழிகள்; இவனுக்கு இந்த வாழ்வு எப்படி வந்ததென்ற கேள்விகள், கேலிகள்; அடுக்கடுக்காய் இத்தனையும் ஆண்டுபல கேட்டோம்; இதயத்துக்கு வீழ்ந்த அடி ஒன்றல்ல இரண்டல்ல; எதையும் தாங்கியது, எற்றுக்கு என்பதனை எண்ணிப் பார்ப்போருக்கு, இன்று எழுந்துள்ள நிலைமையினை உணர்ந்து தெளிவுபெற இயலும். எதிர்வீட்டுப் பலகணியை எட்டிப் பார்க்கும் போக்கு நல்லது அல்ல; தீது! ஆனால், மாற்றார்க்கு இன்று அதுவே, பொழுதுபோக்கு!! இலாபமும் அதில் அவர்க்கு உண்டு! நாம் இன்று எண்ணிப்பார்க்கவேண்டியது ஒன்று உண்டு. கழகத்துக்குப் பெரும் விபத்து வந்து விட்டது என்று கூறித் திரியும் காங்கிரசாரின் பேச்சிலிருந்து, நாம் என்ன பாடம் தெரிந்து கொள்ள வேண்டும்?

உள்ளூர்க் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, உச்சக்கட்டம் வரையிலே, "கோஷ்டிகள், உள்ளன' என்று நேரு பண்டிதர் கூறுகிறார், வருந்துகிறார்.

வீட்டுக்குள்ளே ஏற்பட்டுவிடும் "விரசமான' விஷயத்தை, வெளியே பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர், தாக்கீது பிறப்பித்துள்ளார்.

காலக்கோடுகள் வீழ்ந்து வீழ்ந்து, நரை திரை மேலிட்டுள்ள பருவத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி - அந்தக் கட்சியிலேயே "கோஷ்டிகள்' கூடாது, அது ஆபத்து, என்று உணரப்பட்டு வருகிறது.

தத்துவப் பூக்கள் என்று எடுத்துக் கொண்டால், கூட்டுப் பண்ணையிலிருந்து கூடிவாழும் கொள்கை வரையிலே, இரண்டு காங்கிரஸ்காரர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டில்லை. ஆனால் இன்று; நம்முடைய வீட்டு விவகாரம்தான், பருந்து அடித்துக் கொண்டு வந்து கீழே வீழ்ந்த பழத்தைக் காக்கைகள் கொத்திக் கொண்டு கிடக்கும் நிலைமைக்குக் கொண்டு வரப்படுகிறது. சரியா? முறையா? 1961ஆம் ஆண்டுக்கென்று, நாம் அரும்பாடு பட்டுத் தேடிக் கொள்ளும் திட்டம் இதுதானா?

தம்பி! எண்ணிப்பார்த்து, எமக்கு நல்வழி காட்டு.

அண்ணன்,

19-2-1961