அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஆலிங்கனமும் - அழிவும்!
2

பாரேன், தம்பி, வேடிக்கையை - நான் பம்பரம் ஆடும் பருவத்திலே, அங்காடியில் கண்ட முறையை, என் மகன், "பாட்மின்டன்' ஆடும் பருவம் பெற்றிருக்கிற இன்று, அரசியல் அங்காடியில் பார்க்கிறேன்! விசித்திரமான உலகம், தம்பி, இது!

"என்ன சட்டசபைக்கு சென்றிருக்கிறீர்கள். இதைக் கண்குளிர அப்பா, பார்த்திருப்பார். கொடுத்து வைக்காதவர்கள். நாம் -''

என்று இராமலிங்கனார் இல்லத்தில் எவரேனும் அவரிடம் கூறினால், அவர் பயந்தல்லவா போவார்!

"அப்பாவின் அஞ்சா நெஞ்சு எங்கே! இதோ நான் தஞ்சம் புகுந்து ஒரு இடம் பெற்றேனே - இதுபோலப் பணிந்திட அவர் இசைந்திருந்தால், மந்திரியேகூட அல்லவா ஆகியிருக்க முடியும். புயல் அடித்தாலும் கலத்தைச் செலுத்துவேன் - கலமே மூழ்குவதானாலும், கூடச் சேர்ந்து மூழ்குவேனே அல்லாமல், தலை தப்பினால் போதும் என்று ஓடிவிட மாட்டேன் என்று கூறிடும் வீர மாலுமிக்கு இருந்த உள்ள உரம் அவரிடம் இருந்தது. நான்...! செச்சே! அவர் இருந்து இந்தக் காட்சியைக் காணுவதா? - மகனே! மகனே! இதென்ன, எனக்குத் தெரியாத வித்தை என்று எண்ணிக் கொண்டாயோ! என் உறுதியை உனக்களிக்க முடியாது போய்விட்டதே என்னால்! என்னைக் கேலிசெய்யவா இந்தப் புதியகோலம் பூண்டனை! என்றல்லவா, கேட்பார். நல்லவேளை, அவர் இல்லை'' - என்றல்லவா, இராமலிங்கனார் எண்ணுவார்.

"யார் தெரிகிறதா?''

"யார்? வாலிபப் பருவமாக இருக்கிறார் வசதியானவர் போலிருக்கிறது.''

"பெரிய பிரபுக் குடும்பமையா - பெருநிலக்கிழாராக்கும்!''

"தஞ்சை ஜில்லாவோ?''

"சாட்சாத் தஞ்சையேதான்! நெடும்பலம் சாமியப்பா என்று கேள்விதானே!''

"அடேயப்பா! அசகாயசூரராச்சே!! இந்தப் பன்னீர் செல்வமும் சாமியப்பாவும் கூடிக்கோண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் காங்கிரசைக் கண்ட துண்டமாக்கினார்களே!''

"அந்தச் சாமியப்பாவின் மகன் - நம்ம வலையில் - பார்த்தாயா, புத்தம் புதிய கதர்ச் சட்டை!''

"எமகாதகப் பேர்வழி என்றால், உனக்குத்தானய்யா தகும்! சாமியப்பா மகனையே, காங்கிரசில் இழுத்தாச்சா?''

"கெண்டையை போட்டு, வரால் இழுக்கணும்.'' "ரொம்பக் காலமாக அந்தக் குடும்பம் காங்கிரசுக்கு எதிர்ப்பாயிற்றே - எப்படிக் காங்கிரசில் சேரச் சம்மதித்தார்?

"என்னய்யா, அப்படிக் கேட்கறே! ஆவடியிலே சமதர்மத் தீர்மானம் போட்டுவிட்டு இப்படிப்பட்ட ஆசாமிகளைக் காங்கிரசிலே எப்படிச் சேர்க்கலாம் என்றல்லவா கேட்க வேண்டும்?''

"இரண்டும்தான் கேட்கிறேன் என்று வைத்துக் கொள்ளுமே.''

"சரி, பதில் சொல்லட்டுமா?''

"பதில் சொல்லத்தானே கேட்கிறேன்.''

"நான் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லும்.''

"இதென்ன வேடிக்கை, உம்மை நான் கேள்வி கேட்டால்...''

"நான் கேள்வி கேட்கிறேனே, பதில் கூறாமல் என்கிறீரா? என் கேள்வியிலேயே உமக்குப் பதில் இருக்கிறதய்யா. தேர்தலில் வெற்றிபெறக் கதர்ச்சட்டை மட்டும் போதுமா?''

"போதாது.''

"பணம் வேண்டுமல்லவா?''

"வேண்டும்.''

"சரி! இவரிடம் பணம் இருக்கிறது - நம்மிடம் சட்டை இருக்கிறது! எப்படி!!''

"பலே! பலே! இப்படிப்பட்டவர்கள் கிடைக்கிற வரையில், உமக்கென்ன - யோகம்தான்.'' இவ்விதம் ஒரு வட்டாரத்தில் உரையாடலும், மற்றோர் வட்டாரத்தில்,

"நம்ம நெடும்பலத்து இராமலிங்கமில்லாவிட்டால், நாகையில், காங்கிரஸ் என்ன ஆகியிருக்கும்?''

"மண்ணைக் கவ்வி இருக்கும்?''

"காங்கிரஸ் என்றால் கட்டோடு பிடிக்காதே அவருக்கு. எப்படி அதிலே சேர்ந்தார்?''

"அவராகவா சேர்ந்தார்! கெஞ்சி, கூத்தாடி, கை காலைப்பிடித்துக்கொண்டு, காங்கிரசின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் - உங்களால்தான் அது முடியும் என்று மந்திரிகளே வந்து தூண்டினார்கள். இல்லாவிட்டால், அவராவது காங்கிரசில் சேருவதாவது...''

"காங்கிரசில் சேர்ந்தால் காசுபணம் செலவில்லாமல் ஜெயிக்கலாம் என்று எண்ணினார் போலும்''

"காசு பணமா! செச்சே! மகாத்மாவுக்கு ஜே! என்று சொன்னதால், குரல் கெட்டிருந்ததே, அவர்களுக்குக் காப்பி வாங்கிக் கொடுத்தது தவிர, வேறு செலவு ஏது?''

"என்ன, அவ்வளவு வெறுப்பாகப் பேசுகிறாய்?''

"வேறே எப்படிப் பேசுவது? பணம் கொஞ்சமாகவா கரைந்திருக்கிறது. ஆனந்தம், காங்கிரசுக்கு! அலுப்பு நம்மவருக்கு'' என்றவிதமான பேச்சும்; மற்றோர் இடத்தில்,

"அடிபட, உதைபட, சட்டம் மீற நாம் - சட்டசபை செல்ல சீமான், பூமான்! இந்த இலட்சணத்துக்கு நமக்குச் சமதர்மம் திட்டமாம்,''

என்று மனம் நொந்து பேசுவதுமாக, நிலைமை இருப்பது எனக்குத் தெரிகிறதே, தம்பி, எப்படி, 150 காங்கிரஸ்காரர் என்று கூறத் துணிவு பிறந்திட முடியும்? காங்கிரசால் நிறுத்திவைக்கப் பட்டவர்களைத்தான் நான் இங்கு பெரும்பாலோராக இருக்கக் காண்கிறேன்.

பனைமரத்துண்டுக்குச் சாயமடித்து பீரங்கி போலாக்கித் தரையிலே வைத்துவிட்டு, விமானத்திலிருந்து பார்க்கிற எதிரியை ஏமாற்றுகிறார்கள் என்று, முன்பு பிரிட்டிஷாரைப் பற்றிச் சொன்னார்களே, அதுபோல,

செட்டிநாட்டு ராஜா
இராமநாதபுரம் ராஜா
மதுக்கூர் ஜெமீன்தார்
நெடும்பலம் மிராசுதார்
இராமசாமி படையாச்சி
எல்லைவீரர் வினாயகம்
சேனாபதிக் கவுண்டர்
பழனிச்சாமிக் கவுண்டர்

போன்றோர்களல்லவா, கதர் அணிவிக்கப்பட்டுக் காட்சி அளிக்கின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ்காரர் 150 பேர் அங்கு அமர்ந்திருக்கக் கண்டேன் என்று எங்ஙனம் கூற முடியும்?

எண்ணிக்கை பொருத்திருக்கிறதே தவிர, அது வலிவின் அறிகுறியுமல்ல, பொலிவுக்குகந்ததாகவுமில்லை.

எப்படியேனும் இடம் பெறவேண்டும் என்ற பேராவல் கொண்டோரும், யாரைப் பிடித்தாகிலும் கட்சிக்கு வெற்றி என்ற கணக்கைக் காட்டவேண்டும் என்ற தந்திரம் தெரிந்தோரும், ஒன்றுகூடி நடத்திய "பண்டமாற்று' திறம்படப்பலன் அளித்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிப் பாராட்டலாம்; காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு புதிய வலிவு கிடைத்துவிட்டிருக்கிறது என்று எப்படிக் கூறமுடியும்?

சட்ட மன்றத்தில், என் எதிர்ப்புறம் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும், எனக்கு, அவர்களைக் காணாத முன்பு, வெறும் எண்ணிக்கையை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தபோது, இருந்த அச்சம்கூட நீங்கிவிட்டது.

அச்சப்பட வேண்டியவர்களும், ஆயாசப்படவேண்டியவர் களும் காங்கிரஸ் கட்சியை, அது காடுசுற்றிய காலமுதற்கொண்டு நாடாளத் தொடங்கிய நாள்வரையில் கட்டிக் காப்பாற்றி, அதன் வளர்சிக்காக, கண்ணீரும் செந்நீரும் கொட்டினார்களே அவர்கள்தான்.
T.T.. கிருஷ்ணமாச்சாரிகளல்ல!

காங்கிரஸ் கட்சிக்கு எண்ணிக்கையில் அதிகமாக வெற்றி கிடைத்தது என்றாலும், உண்மைக் காங்கிரஸ், அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைக்கப்பட்டுவிட்டது என்பதை உணருகின்ற சிலர் அச்சப்படுகிறார்கள், ஆயாசப்படுகிறார்கள்.

இன்று காங்கிரசுக்குள் அழிவு சக்திகள் புகுந்துவிட்டன. இதனால் என்றுமில்லாத அளவுக்கு காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது. தக்க சமயத்தில் நாம் தடுக்காவிட்டால், அழிவு நிச்சயம். இது, யாரோ, நிலம் கிடைக்காத தியாகி! - அல்லது காமராஜர் தமிழரின் பாதுகாவலர் என்ற பேருண்மையை உணர மறுக்கும் அப்பாவி, பேசியது என்று எண்ணிவிடப் போகிறார்கள். இவ்வாறு, காங்கிரஸ் அழிந்து கொண்டு வருகிறது என்று கூறுபவர், மொரார்ஜீ தேசாய்.

சென்ற திங்கள் இறுதியில் ராஜ்கோட்டில், காங்கிரஸ் மாநாட்டில் பேசி இருக்கிறார்.

எனக்குத் தம்பி, வலைவீசி ஆள்பிடித்து, சிக்கினோரை ஆட்டிப்படைத்து, ஆதிக்கத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு வல்லவரும் - இந்த இடமாவது கிடைத்ததே, இதுபோதும் இறைவா! இறைத்த பணத்துக்கு இதுவும் கிடைக்காமற் போயிருந்தால் என்ன செய்வது!! - என்று எண்ணிக்கொள்ளக் கூடிய "நல்லவர்கள்' ஏராளமாகவும், அயன் சரக்கோ போலியோ, நமது அங்காடி நிறையச் சரக்கு நிரப்பிக் காட்ட முடிகிறது, அதுபோதும் என்று திருப்திகொள்கிற சிலரும்தான், இங்கு இருப்பது தெரிகிறது. எனவே, தியாகிகளை, வீரதீரப் போராட்டம் நடத்தியவர்களை, காங்கிரசுக்காகக் குருதி கொட்டியவர்களை, ஏராளமாகக் கொண்டதோர் வீரக் கோட்டத்துக்குள்ளே, நாம் ஒரு பதினைந்துபேர் நுழைந்து விட்டோமே, அவர்தம் ஆற்றலுக்கு எங்ஙனம் ஈடுகொடுப்பது - அவர்கள் மத்தியில் அமர்ந்து எங்ஙனம், நமது உரிமைகளுக்காக வாதாடுவது - என்ற அச்சம் எழக் காரணம் இல்லை.

எனவே, நானும் நமது கழகத்தவரும், உள்ளே வந்து பார்த்ததில், புதிய நம்பிக்கையே கொள்கிறோம்; நமது பணியினைத் திறம்படச் செய்ய இயலும் என்ற உற்சாகம் நிரம்ப ஏற்படுகிறது.

எதிர்ப்புறம் இருப்பவர்களிலே, மிகப் பெரும்பாலான வர்கள், அரசியலில் "பல ஜென்மம்' எடுத்தவர்கள். சிலர் "தத்து' எடுக்கப்பட்டவர்கள். வேறு சிலர் எந்தக் கட்சிக்கு வலிவு ஏற்படுகிறதோ, அந்தச் சமயத்தில் அதில் இருப்பவர்கள்.

விளைந்த காட்டுக் குருவிகள் ஏராளம்!
வாடி இருக்கும் கொக்குகளும் உள்ளன!
சொன்னதைச் சொகுசாகச் சொல்லவல்ல பஞ்சவர்ணக் கிளிகள் சில உள!

மரம் பழுத்தது, பழம் நமக்குத்தான் என்றெண்ணிக் கொண்டு வட்டமிட்டு வந்து, கிடைக்கப் பெறாததால், துயரத் துடன் தொங்கிக்கிடக்கும் வௌவால்களைக் காண்கிறேன்.

"மாடப்புறாவுக்குக்
கண்ணிவைத்தேன்!
மரங்கொத்தி
மாட்டிகிட்டுது,
தங்கம் தில்லாலே!'' ]

என்று பாடுவார்களே அதுபோல், எதை எதையோ எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தோரையும் காண்கிறேன்!

ஏராளமாக - மன்றத்தின் பெரும்பகுதியை நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் - ஆனால் அவர்களில், உண்மையான காங்கிரஸ்காரர்களை,

தடியடி
சிறைவாசம்
சத்யாக்கிரகம்
உப்புக் காய்ச்சுதல்
மறியல்
தண்டியாத்திரை

போன்றவைகளைக் குறித்து எண்ணும்போதே, நெஞ்சு நெக்குருக, கண்கள் நீர் துளிக்க, "ஆம்! ஆம்! அந்த வீரதீரப் போராட்டமெனும் தணலில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கக் கட்டிகள் நாங்கள் - என்று உரிமையுடன் கூறிக்கொள்ளக் கூடியவர்கள், மிகச்சிலரே உளர்!

செஞ்சிக்கோட்டை செல்பவரை எல்லாம் தேசிங்குராஜா வென்றா கூறுவது!! இங்கே, இந்தக் கோட்டையிலும், கதர்சட்டை இருக்கிறவர்களை எல்லாம், காங்கிரஸ்காரர் என்று கூறுவதற்கில்லை.

எனவே, எங்கள் எதிரில் உள்ள உண்மையான காங்கிரஸ் காரர்கள், நாங்கள் எவ்வளவோ அந்த எண்ணிக்கை அளவுதான் இருக்கும்.

நாம், 15! இத்துடன் ஒரு "சைபர்' - சேர்க்கப்பட்டு 150 ஆகியிருக்கிறது!! - என்று நான் கூறுவதை நையாண்டி என்று கருதிவிடாதே, தம்பி, அதிலே, இன்றைய அரசியல் நிலைமை தொக்கி நிற்கிறது. சைபருக்குத் தனியாக மதிப்பு இல்லை - வேறு எண்ணுடன் சேரும்போது சைபருக்கென்று புதிய மதிப்பு பிறப்பதுமில்லை - சைபர் எந்த எண்ணுடன் சேருகிறதோ அந்த எண் மட்டும் பெருத்துவிடும்.

இதே முறையிலேதான் எண்ணிக்கை இங்கு பெருத்திருக் கிறது; உண்மையில் வலிவு அல்ல இது; இரவல்!!

நான், வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டுக் காட்டுகிறேன் என்று கூறி, காங்கிரஸ் நண்பர்கள் திருப்தி தேடிக் கொள்வர் - அது அவர்கள் விருப்பம் - நான் குறுக்கிடவில்லை.

52 நிலப்பிரபுக்கள்
14 மில் முதலாளிகள்
21 பெரும் வர்த்தகர்கள்
15 பஸ் முதலாளிகள்
35 மாஜி காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள்

இப்போது சென்னை சட்டசபையில், 150 காங்கிரஸ்காரர்கள் இருப்பதாகப் பேசிப் பெருமைப்படுகிறார்களே - அவர்களை பம்பாய் ஏடு ஒன்று, "ரகவாரியாக'ப் பிரித்துக் காட்டியிருக்கிறது!!

இதற்கு என்ன சொல்லுகிறார்கள்? நான் சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே - பம்பாய் இதழ் பரிகாசம் செய்கிறதே!!

சட்ட மன்றத்தில் அமர்ந்திருக்கும், இந்தக் "கனவான்' களுக்கு, காங்கிரசின் எதிர்காலம் குறித்து என்ன அக்கறை ஏற்பட முடியும்? காங்கிரசின் உள்ளிருந்து கொண்டே, அதனை உருக்குலைய வைத்திடுவது தவிர, இவர்களால் வேறு என்ன "தொண்டு' ஆற்றமுடியும்? கொடிய நோய்களை மூட்டிவிடுகிற "கிருமிகளில்' பார்க்க அழகானவைகளும் உள்ளன என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். காங்கிரசில், "கிருமிகள்' ஏராளமாகப் புகுந்து விட்டிருப்பதுதான் எண்ணிக்கை பெருத்திருப்பதாகத் தோற்றமளிக்கிறது.

ஏற்கனவே, நான் இந்த உண்மையை ஓரளவு அறிந்தவனே என்றாலும், இங்கு உள்ளே வந்து காணும்போது, மிகத் தெளிவாகத் தெரிகிறது - காங்கிரஸ்காரர்கள் அதிகமாக இல்லை - காங்கிரசை வீழ்த்தியவர்கள் - அதிகம் உளர்.

பாரதத்திலே இருந்து ஒரு எடுத்துக்காட்டுத் தருவது கண்டு, ஏனண்ணா, இந்தக்குப்பை என்று சலித்துக்கொள்ளாதே தம்பி. அவர்களுக்காக, "அவர்கள்' அறிந்த "அவர்கள்' கதையிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு.

திருதராஷ்டிரன் - துரியனின் தந்தை - யாரையேனும் அழிக்க வேண்டுமென்றால், வாள், வேல், கதை, சூலம் போன்ற ஆயுதங்கள் தேடுவதில்லையாம் - ஆலிங்கனம் செய்துகொள் வானாம்! அது போதுமாம் அழித்திட!

"திருதராஷ்டிர ஆலிங்கனம்' என்று புராண பாஷையில் கூறுவார்கள்!

ஒரு அணைப்பிலா, ஆளுக்கு அழிவு நேரிட்டுவிடும் என்று கேட்காதே - தம்பி! - ஆலிங்கனங்கள், ஆசாமிகளை என்ன, அரசுகளையே அழித்திருக்கிறது - ரோம் நாட்டு வரலாற்றில் காணலாம் - தம்பி! ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகம் எழுதியவன் என்று நமது நிதி மந்திரி ஏற்கனவே என்மீது கோபித்துக் கொண்டிருக்கிறார் - மேலும் விளக்கம் கூறினால் இந்தக் கோடை காலத்தில் அவருக்குத் தொல்லை - கோபம் வரும் - என்பதற்காக, கோடிட்டுக் காட்டி நிறுத்திவிடுகிறேன்.

சட்டசபையில் நான் இந்தத் திருதராஷ்டிர ஆலிங்கனம் காண்கிறேன்!!

அண்ணன்,

5-5-57