ஆவடிக் காங்கிரஸ் மாநாடு
பாண்டுங் மாநாடு. தம்பி ! ஆவடியில் நடைபெற்ற காங்கிரசின்
அலங்காரத்தைக் கண்டதாலே சொக்கிப் போனேன்! அங்கு நேரு
பண்டிதரைப் பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல "தலைவர்கள்''
மொய்த்துக் கொண்டிருந்தனர். மோட்டார்கள் மட்டும், இதுவரை
யாரும் பார்த்திராத அளவு அங்கு! ஏ! அப்பா அப்படிப்பட்ட
ஒரு மகாநாட்டை இதுவரை யாரும் கண்டிருக்க முடியாது. லலிதா
பத்மினியின் நாட்டிய நாடகமென்ன, வேறு பல கலா நிகழ்ச்சிகள்
என்ன-நேர்த்தியான காட்சிகள், மிக நேர்த்தியான காட்சிகள்!
அப்படிப்பட்ட மகத்தான செல்வாக்கை எதிர்த்து வேலை செய்ய
முடியுமென்று எண்ணுகிறீர்களே, அப்பாவிகளே! முடிகிற காரியமா!
இவ்விதம் சில காங்கிரஸ்காரர்கள்
பேசுவது பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறாய்; தம்பி!
நீயேகூட ஆவடியால் ஓரளவுக்கு மயக்கம் அடைந்திருக்கிறாய்
என்று தெரிகிறது. இது சகஜமும் கூட!
இன்று காங்சிரஸ், சர்க்கார்!
எனவே, எப்போதும் சர்க்காரின் தயவினாலே, சொத்து சுகம்
ஆகியவற்றை காப்பாற்றிக் கொள்ளவும் அதிகமாக்கிக் கொள்ளவும்
விரும்பும் "கனதனவான்கள்'' யாவரும் அங்கு சென்று, கட்டியம்
கூறி நின்றனர். அதனாலே அங்கு பெரிய திருவிழா! அதைக் கண்டு
சிலர் சொக்கி விடுவதும் சகஜந்தான்! ஆனால், இலட்சியத்துக்
காகப் போரிடும் யாரும், இத்தகைய திருவிழா கண்டு மயக்க
மடைந்து விடமாட்டார்கள்.
தம்பி! எங்கள் ஊர் "கருட
சேவை'' உற்சவத்துக்கு இலட்சக் கணக்கிலே மக்கள் வருகிறார்கள்!
கும்பகோணம் மகா மகம், மதுரைச் சித்திரைத் திருநாள், திருவண்ணாமலை
தீபம், திருமலை புரட்டாசி, தில்லை ஆருத்ரா இப்படி இருக்கிறது
ஒரு பெரிய பட்டியல்! இதிலே கூடும் மக்கள் இலட்சக் கணக்கில்.
இவைகளைக் கண்ட பிறகும், ஆண்டு தோறும் இவை நடைபெற்றுக்
கொண்டிருப்பது தெரிந்தும் தான், சுயமரியாதை இயக்கம் துவக்கப்பட்டது
என்பதை மறந்துவிடாதே! இவ்வளவு இலட்சம் இலட்சமாக மக்கள்
தேர் திருவிழாவுக்குக் குவியும் போது, சுய மரியாதை இயக்கம்
நடத்துவதாலே பயன் என்ன என்று ஆயாசப்படுவது சரியல்ல - இவ்வளவு
கோலாகலமான திருவிழாக்கள் நடைபெற்றும், சுயமரியாதை இயக்கம்
எழுவது தடைபடவில்லை! அதை எண்ணிப்பார் உண்மை விளங்கும்.
இலட்சக் கணக்கான பொருள் செலவிட்டு இரசமான விழாக்களை நடத்துகிறார்கள்.
தங்க மயிலில் தகப்பன் சாமி வருகிறார் தையல் நாயகியோ தங்கப்
பல்லக்கில்! வெள்ளித்தேர்! தங்க ரிஷபம்! பொற்கவசமிட்ட
கருடன்! இப்படிக் கண்ணுக்குக் கவர்ச்சிகள்! வேத கோஷ்டிகள்!
பஜனைக் கூட்டங்கள்! பக்தர்கள் வெள்ளம்போல்! சீமான்கள்
சீமாட்டிகள்! வேல்விழி சுழற் கண், குழல் அழகி, குயிலி
இப்படிப்பட்ட பட்டாளம் பவனிவரக் காண்கிறோம். அமெரிக்காவில்
ஆறு ஆண்டு, இங்கிலாந்தில் ஏழாண்டு, சென்ற மாதம் ஜெர்மனி,
இப்படி மேல் நாடுகள் சென்று திரும்பிய மேதாவிகள் கலந்துகொள்வதைக்
காண்கிறோம். கவர்னரின் காரியதரிசி, சர்க்காரின் பிரதம
இஞ்சினீயர், டாக்டர், பிரபல வக்கீல், உயர் நீதிமன்றத்தின்
அதிபர் இப்படிப்பட்ட பதவியாளர்களைக் காண்கிறோம். ஆடை
அணிகள் அலங்காரங்கள் அமோகமாக! நாத வெள்ளம்! வாணவேடிக்கை!
- இவ்வளவும் இருந்திடக் காண்கிறோம். எனினும், இவைகளாலே
நாம் மயக்கம் அடையவில்லை சொக்கிப் போகவில்லை, சோர்வு
கொள்ளவில்லை, கும்பலோடு கோவிந்தா போட்டுவிடவில்லை,
இவைகளைக் காண்கிறோம். என்னே இவர்தம் போக்கு! எரியும்
தணலில் கற்பூரக் கட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறார்களே!
என்னே இவர் தம் விசித்திர சித்தம்! என்று எண்ணிக் கொள்கிறோம்.
- இவ்வளவும் வீண் ஆரவாரம், சுவைக்குதவாதவை, என்று எடுத்துக்
கூறுகிறோம். இங்கு சென்றீரே இன்னவிதமாகத் தொழுதீரே,
அங்கு சென்றீரே அந்தத் தேவனை வேண்டிக் கொண்டீரே, வேலழகன்
விழாவிலும் வேழ முகத்தான் உற்சவத்திலும் கலந்து கொண்டீரே,
அன்பரீர்! கண்ட பலன் இன்னது என விண்டிட இயலுமா? உலகுக்குக்
கிடைத்த பலன் இன்னது என எடுத்துரைக்க இயலுமா? என்று கேட்கிறோம்.
திருவிழா சென்று திரும்பியவரும்கூட அசட்டுச் சிரிப்புடன்
- ஆமாம் - ஒரே கூட்டம் - இடியும் இடர்ப்பாடும்தான் கண்டோம்
என்று கூறிடக் கேட்கிறோம். சுயமரியாதைப் பணியினை தொடர்ந்து
நடத்துகிறோம். ஒரு ஆவடி கண்டு, சொக்கிப் போனவர்கள்
பேசுவது கிடக்கட்டும். ஒவ்வோர் தலத்திலும் ஆண்டுக்கோர்
ஆவடி நடை பெற்ற வண்ண மிருக்கிறது எனினும் பகுத்தறிவு பரப்பும்
பணி பட்டுப் போகவில்லை, வளர்ந்த வண்ணம் இருக்கிறது. உனக்குத்
தெரியுமோ தெரியாதோ, இலட்சக் கணக்கான மக்களை இழுக்கும்
வைகுண்ட ஏகாதசி, சீரங்கத்தில் "ரொம்பப் பிரமாதம்'' என்கிறார்கள்
அல்லவா, அந்த ஏகாதசியின்போது, அந்தஊரிலே உள்ள சுயமரியாதை
இயக்கத் தோழர்கள், ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்று
நினைவு, இரயில் நிலையத்துக்கு எதிர்ப்புறத்தில், ஒரு பெரிய
ஓவியம் தயாரித்து வைத்திருந்தனர். என்ன ஒவியம் என்று எண்ணுகிறாய்.
ஏசுநாதர் சிலுவையில் அறைபடும் காட்சி ஒரு புறமும், புன்னைமரத்தில்
அமர்ந்து புல்லாங்குழல் ஊதும் கண்ணனிடம், களவாடிய சேலைகளைத்
தந்தருளும்படி, கோபிகையர் குளத்திலிருந்தபடி கேட்கும்
காட்சி மற்றோர் புறமும்! ஏகாதசி காண வந்தவர்கள், இந்தப்
பகுத்தறிவு ஓவியக் காட்சியைக் கண்டு,
அடே!
அடடே!
இதைப் பாருடோய்!
அட, இப்படித்தான் இருக்கு!
செச்சே, மானத்தை வாங்கித் தொலைக்கிறானுங்க!
இப்படிக் கடவுள் செய்வாரா?
இப்படிச் செய்பவர் கடவுள் ஆவாரா?
இப்படி என கதை கட்டினார்கள்?
நாம் என்னத்தைக் கண்டோம்!
அவரவர் மனப்பக்குவத்திற்குத்
தக்கபடி, பேசிச் சென்றனர்.
ஆவடியில் நடைபெற்ற திருவிழாவைப்
பிரமாதப்படுத்திப் பேசுவதாலே, காங்கிரசிலே மலிந்து கிடக்கும்
குறைபாடுகளை ஒரேயடியாக மறைத்து விடவும் முடியாது; ஆட்சியிலே
காணக் கிடக்கும் அவலட்சணங்களையும் மறுத்துவிட முடியாது.
ஒரு ஊரிலே தொடர்ந்து ஒரு
பத்து நாளைக்கு நாடகம் நடைபெற்றால், அந்த ஊரிலே உள்ள "சபல
புத்தி'' படைத்தவர்கள், நடை நொடிபாவனை, உடை, உரையாடல்
ஆகியவைகளிலே, தங்களையுமறியாமல் நாடக பாணியைக் கலந்து கொள்வார்கள்!
ஒட்டுவார் ஒட்டிபோல, நாடகபாணி வேலை செய்யும் - சில நாளைக்கு
- பலர் பார்த்துக் கேலிபேசி அதைப் போக்கும் வரையில்.
ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்துவிட்டால்
போதும், அந்த ஊரில் உள்ள வாலிபவர்களுக்கு, உடலிலே "காயம்''
ஏற்பட்டே விடும் - உயரத் தாண்டுதல், தாவிக் குதித்தல்,
சைகிள் சவாரியில் வேலை காட்டுவது, இப்படிச் சர்க்கஸ் செய்வதால்!
அதுபோலவே தம்பி, ஆவடி போய்விட்டுவந்தவர்
சில நாளைக்கு அந்தப் பாணியில்தான் பேசுவார்கள். பிறகு,
நிலைமை அவர்களுக்கும் உண்மையை உணர்த்தும்.
நேரு பண்டிதருடைய பிரத்யேகத்
திறமையே, இத்தகைய "சொக்க வைக்கும்'' காரியத்தைச் சோர்வில்லாமல்
செய்வது தான்!
பாண்டுங் மகாநாடு பற்றிப்
பத்திரிகைகளிலே பார்த்தாயல்லவா!
இதிலே காட்டிய வர்ண ஜாலங்களுக்காகச்
செலவழிக்கப் பட்ட தொகையின் அளவு தெரியுமா என்று கேளுங்கள்
காங்கிரஸ் நண்பர்களை!
தலைவர்கள் தங்குவதற்காக
இரண்டு பெரிய ஓட்டல்கள் ஒதுக்கப்பட்டன. அந்த ஓட்டல் அறைகளைப்
புதுப்பித்து வசதிகளைப் பெருக்க 15 இலட்சம் ரூபியா அதாவது
80 இலட்சத்து 60 ஆயிரம் வெள்ளி (மலாய் நாணயம்) செலவிட்டனர்.
மகாநாட்டுக்காக மொத்தம்
6 கோடி ரூபியா, அதாவது 160 இலட்சம் வெள்ளி இதுவரை செலவாகி
இருக்கிறது என்று, ஏப்ரல் 9ஆம் தேதி மலாய் பத்திரிகை ஒன்று
தெரிவித்தது.
இப்படிப் பணத்தை வாரியிறைத்து
நடத்தப்படும் மகாநாடுகள், பவனிகள், கண் காட்சிகள், இவையாவும்,
அடிப்படைக் குறைபாடுகளை மக்கள் சில காலம் உணராமல் இருக்கச்
செய்ய உதவுமே தவிர, கடைசிவரை காப்பாற்றிவிடாது.
திறமைமிக்க ஓவியனொருவன்,
பழக் கொத்து தொங்குவது போலத் திரையிலே தீட்டித் தொங்கவிட்டிருந்தானாம்.
பறவைகள் சில பழத்தைக்கொத்தித் தின்பதற்காக வட்டமிட்டனவாம்!
ஓவியனுடைய கைத்திறனை அனைவரும் பாராட்டத் தானே செய்வர்.
ஆனால், பறவைகளும் பாராட்டுரை வழங்கினோரும், ஓவியத்திலே
கண்ட பழமே போதும் என்றா இருந்து விட முடியும். பாராட்டுவர்,
பிறகோ பழச்சுவை தேடி வேறிடம் செல்வர். பறவைகளே கூடப்
பறந்துபோகும் பழத்தோட்டம் நோக்கி.
அதுபோலத்தான் ஆவடிகள்!
ஆவடிபோல வேறு எந்த கட்சியினாலும் நடத்திக் காட்டவே முடியாது
என்பதல்ல. ஆவடிபோல விமரிசையாக மாநாடுகள் நடத்தவே கூடாது
என்பதல்ல தம்பி! ஆவடி நடத்திக் காட்டிவிட்டு, இத்துடன்
திருப்தி பெருக! இன்னலை மறந்திடுக! இன்பம் பெற்றதாக எண்ணிக்
கொள்க! என்று கூறுவது கூடாது என்பதைத்தான் கூறுகிறேன்.
"ஆவடி கண்டேன், ஆனந்தம் கொண்டேன், இனி நான் காவடி தூக்கி
ஆடிடுவேன், களிப்புச் சிந்து பாடிடுவேன், காங்கிரஸ் கட்சியினருடன்
கூடிடுவேன்' என்ற பேசிடும் போக்கினர் பற்றிக் கவலை கொள்ளாதே.
நமக்கென்று ஒரு மகத்தான குறிக்கோள் இருக்கிறது - அதிலே
வெற்றி பெறுவதற்காகப் பணியாற்றும் நாம், ஆவடி கண்டு அயர
மாட்டோம், பாண்டுங் பசப்புக்கும் பலியாகி விடமாட்டோம்.
ஆவடியிலும் பாண்டூங்கிலும்,
அலங்காரம் கண்டு அன்பர் சிலர் சொக்கிப் போகின்றனர்.
நாமோ இவ்வளவு ஆவடிகளுக்குப் பிறகும்கூட, அங்கோர் சமயம்
இங்கோர் சமயம் என்ற அளவிலாவது, சிலர் பலர், அரசியலில்
இன்று காணப் படும் அவலட்சணத்தையும், வடநாட்டு ஆதிக்கத்தையும்,
கண்டிக்க முன்வருவது காண்கிறோம், மகிழ்ச்சியும் நம்பிக்கையும்
கொள்கிறோம். ஆவடி, அனைவரையுமல்ல, வழி தவறியோர், வழுக்கி
விழுந்தோர், வாழ்த்திப் பரிசு பெறுவோர் ஆகியோரைத்தான்
சொக்கிடச் செய்கிறதே தவிர, கொள்கையில் உறுதி படைத்த
எவரையும் காவடி தூக்கியாக்கிடாது - மாறாக, காவடி தூக்கிடும்
போக்கினை அத்தகையோர் கண்டித்த வண்ணம்தான் இருக்கிறார்கள்.
"ஐயன்மீர்! ஆவடி நடத்திக்
காட்டினீர், இருபது இலட்சம் செலவிட்டீராம்! உங்களிடம்
வசதி இருக்கிறது, செலவிட்டீர்கள்! பாண்டுங் பற்றிப் பேசுகிறீர்கள்
பரவசத்துடன். கோடி என்கிறார்கள் அதற்கான செலவு! சரி!
ஆனால் இவைகளில் பலனாக, ஏழை கண்டது என்ன? இடர்பாடு எது
களையப் பட்டது? எதேச்சாதிகார முறை ஒழிக்கப்பட்டதா! இல்லாமை
இயலாமை துடைக்கப்பட்டதா! ஓவியத்தில் உள்ள பழக்கொத்துதானே,
உங்கள் ஆவடிகள்,'' என்று கேட்கிறார்கள், சொக்குப் பொடியால்
மயக்கமடையாதவர்கள்.
"இங்கே நடைபெறும் ஆவடியைக்
காட்டி, இந்நாட்டிலே செல்வாக்கு எவ்வளவு செழிப்பாக இருக்கிறது
காணீர் என்றும், பாண்டுங் காட்டி வெளிநாடுகளில் கிடைக்கும்
மகத்தான செல்வாக்கைக் காணீர் என்றும் விளம்பரம் பேசி வருகிறீர்கள்
- எனினும் காய்ந்த வயிறுடன் இங்கும், கண்ணீருடன் வெளி
நாடுகளிலும் இந்நாட்டு மக்கள் வதைபடுகின்றனர். அதை இம்மியளவு
போக்கவும் இந்த ஆவடிகளும், பாண்டுங்குகளும் பயன்படக்
காணோமே'', என்று கேட்கின்றனர், திருவிழாக் கண்டு தெளிவை
இழக்காதவர்கள்.
பர்மியப் பிரதமர் இருக்கிறாரே
நூ, அவர் நேரு பண்டிதருக்கு அத்யந்த நண்பர்!
சமயம் கிடைக்கும்போதெல்லாம்
அவர் அங்கு வந்து அளவளாவுகிறார். பண்டிதரும் அந்தப் பக்கம்
போகும் போதெல்லாம், நூவினால் உபசரிக்கப்படுகிறார். பத்திரிகைகள்
பத்தி பத்தியாக இந்த "நேசம்'' பற்றிச் செய்திகளைத் தருகின்றன.
ஆசியாவிலே கொழுந்துவிட்டெரியும்
பிரச்சினைகளை மட்டுமல்ல, ஆப்பிரிக்காவிலே மூண்டு கிடக்கும்
பிரச்சினை களையும் ஒரு சேரத் தீர்த்துவைக்கும் "அபாரமான''
வேலையின் நிமித்தம் கூடினரே, பாண்டுங்கில். அதற்காகப்
புறப்பட்ட போதுகூட நேரு பண்டிதர், இரங்கூனில் தங்கி,
அங்கு நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொண்டார். நூவுடன்
பண்டிதர் பர்மிய உடையில், சிரித்துப் பேசி மகிழும் சினிமாக்
காட்சி போன்ற படம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இவ்வளவு
நேசம், பாசம், இருக்கிறது இரு தலைவர்களுக்கு இது தந்துள்ள
பலன் என்னவென்று கேட்டுப் பார்த்ததுண்டா, தம்பி இவ்வளவு
தோழமையின் விளைவாக, பர்மா வாழ் மக்களுக்குக் கிடைத்துள்ள
உரிமைகள், வசதிகள் சலுகைகள் என்னவென்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா?
"இந்தியர்கள் விட்டுவந்த
பிறகு பர்மாவில் அநேக விஷயங்கள் நடந்து விட்டன. வீடுகளையும்
நிலங்களையும் பர்மியர்கள் வந்து ஏற்றுக் கொண்டு அனுபவிக்கத்
தொடங்கிவிட்டார்கள்; யுத்தம் காரணமாக விட்டுச் சென்ற
நிலபுலன்களை, வீடு வாசல்களை சுவான்தார்கள் ஏற்றுக் கொள்ளலாம்
என்று சட்டம் இருப்பினும், இரங்கூனில் மட்டும் அது செல்லுபடியாகாது.
நகருக்கு வெளியே விஷயம் எப்படியென்றால், வீட்டுக்காரர்களுக்குக்
குடித்தனக்காரர்களை வெளியேற்றும் உரிமை சட்ட பூர்வமாக
மறுக்கப்பட்டது. பார்க்கப்போனால் வீட்டுக் குடையவர்கள்
எல்லாரும் இந்தியர்கள். அதிலே வசிப்பவர்கள் பர்மியர்கள்.
இப்போது இன்னொரு பெரிய கண்றாவி. ஒரு குடித்தனக்காரன்
தன் ஜாகையை மற்றொரு குடித்தனக்காரனுக்கு மாற்றி விடுவான்.
வீட்டுக்காரன் கையைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க
வேண்டும். ஒன்றும் சொல்வதற்கில்லை. அட, வீடே வேண்டாம்,
நிலமே வேண்டாம், விற்றுவிட்டுப் போவோம் என்றாலும், இன்னொரு
சட்டம் இருக்கிறது. பர்மியப் பிரஜைகளுக்குத் தவிர வேறொருவனுக்கு
ஸ்தாவார சொத்துக்களை விற்பனை செய்யவோ அடைமானம் வைக்கவோ
குத்தகைக்கு விடவோ அனுமதிகிடையாது. இந்தியரிடம் விலைக்கு
வாங்கவும் பர்மியர் எவரும் தயாராக இல்லை இதனால் அங்கு
அடைமானத்தில் கடன் வாங்கியுள்ள இந்தியர்கள்கூட தங்கள்
ஸ்தாவரச் சொத்துக்களைக் கடனுக்கு ஈடாக மாற்றிக் கொள்ள
முடியாத நிலையில் செய்வதின்னதென்றறியாமல் இருக்கிறார்கள்.
சுதந்திர சட்ட அரசியல் சட்டப்படி உத்தியோகம் இனி பர்மியர்களுக்கே
என்று ஆகிவிடவே, அனேகர் வேலை இழக்கும் திண்டாட்டத்திலும்
சிக்கியிருக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் சிகரம்
வைத்த மாதிரி ஒரு புதிய பெரிய மசோதாவையும் பர்மியப் பார்லிமெண்டு
கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. விவசாயத்தில் ஈடுபட்டிராத
நிலச்சுவான்தார்களின் நிலங்களை எல்லாம் சர்க்கார் எடுத்துக்
கொண்டு விடுவது என்பதே இதன்சாராம்சம். விவசாயிகளாக இருந்தால்
தலா ஐம்பது ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். இங்கே சுமார்
ஐயாயிரம் இந்தியர் வரை 26 இலட்சம் ஏக்கராவுக்குச் சொந்தக்காரர்கள்.
அதன் வருமானம் நாற்பது கோடி வரை மதிக்கப் படலாம். பர்மிய
விவசாயி மந்திரி சட்டதிட்டமாக, நிலம் எல்லாம் ராஜ்ய சர்க்காருக்கே
சொந்தம்; நிலச்சுவான் தாரருக்கு அதை வைத்துக் கொண்டு
அதில் சாகுபடி செய்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது; சர்க்கார்
உசிதம் போல் இந்த ஏற்பாட்டை ஒழுங்கு செய்யவோ, மாற்றவோ,
ரத்துச் செய்யவோ உரிமை பெற்றது. . . என்றார்.
பொதுவாக இந்தியர் நிலைமை
திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள்
அந்நிய நாட்டவர் களாகவே மதிக்கப்படுகிறார்கள்; வருமானம்
மிகவும் குறைவு; ஆகையால் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுகிறது;
எனவே பர்மியரிடையே அந்தஸ்து என்பது அவர்களுக்கு அதிகம்
இல்லை.
தம்பி! பர்மாவில் உள்ளவர்களில்
தமிழரே அதிகம். பர்மாவில் இன்றுள்ள நிலைமை இது. அறுபது
நாட்களில் ஐந்து நாடுகளைச் சுற்றிவிட்டு வந்த ஆனந்தவிகடன்
எழுத்தாளர் ஒருவர் தீட்டியதைத்தான் தந்திருக்கிறேன்.
இத்தனை இன்னலுக்கு ஆளாகியிருக்கிறீர்களே,
இங்கிருந்து சென்றவர்கள், நேரு பண்டிதருக்கு பர்மிய முதல்வரிடம்
உள்ள நேசமும் பாசமும் என்ன பலன் கொடுத்திருக்கிறது? நேரு
பண்டிதரைக் காணும்போதே, பர்மிய முதல்வரின் முகம் மலருகிறது,
கட்டித் தழுவிக் கொள்கிறார், ஆசியாவின் வழிகாட்டி நீரே
என்று உபசாரம் பொழிகிறார், விருந்து நடத்துகிறார், ஆனால்
தன் சொந்த நாட்டுப் பிரச்சினை எழுகிறபோது, இந்த நேசமும்
பாசமும் ஓடி ஒளிகிறது. பர்மியரின் உரிமைக்களுக்காகவே பணியாற்றுகிறார்.
எமது பண்டிதருக் குள்ள செல்வாக்கினைப் பாரீர், அவர், "செக்கு
மாடென உழைத்திடுவீர், செல்வம் கொழித்திடச் செய்திடுவீர்,
அதை டாடாவும் பிர்லாவும் செல்லாக அரித்தாலும் சீறி எழாதீர்'
என்று கூறினாலும் அதுதான் சோஷியலிசம் என்று எண்ணிப் பூரித்திடுவீர்
என்று பேசுகிறார்கள். ஒரு நாட்டின் தலைவருக்கு வேறொரு
நாட்டிலே அபாரமான செல்வாக்கு இருக்குமானால் செல்வாக்குள்ள
தலைவரின் நாட்டவருக்கு அந்த வேற்று நாட்டிலே, மதிப்பு
உயரும், வசதிகள் கிடைக்கும், சலுகைகள் கூடப் பெறவழி ஏற்படும்.
இவர்களோ, பர்மாவில் பண்டிதருக்கு மிகுந்த செல்வாக்கு
என்று பண் இசைக்கிறார்கள் என்று ஆனந்த விகடனைச் சேர்ந்தவரே
ஆயாசத்துடன் கூறுகிறார். பண்டிதரின் செல்வாக்கின் பொருள்தான்
என்ன?
ஆவடி காட்டியும் பாண்டுங்
பற்றிப் பாராட்டிப்பேசியும் தென்னாட்டவர் காணும் பலன்
என்ன? காவடி தூக்கித்
திரிய வேண்டி இருக்கிறது, எதற்கும் எப்போதும்!
டில்லி நிதி மந்திரி தேஷ்முக்
நாமெல்லாம் ஏதோ விளக்க மறியாதார் என்ற எண்ணத்தோடு பேசுகிறார்.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே வடநாட்டுக்கே அதிகத் திட்டங்கள்
செய்து தரப்பட்டன என்று குறை கூறுகிறார்கள் - ஏன் அப்படிச்
செய்ய நேரிட்டது என்றால், திட்டம் முதலில் வடநாட்டுக்காகத்
தீட்டினோம், என்கிறார். இது சமாதானம் என்று அவர் கருதுகிறார்.
அவ்வளவு பெரியவர் சொல்லுகிறாரே என்பதற்காக, இங்குள்ள
அடிவருடிகளும், "ஆமாம் சாமி'' போடுகிறார்கள். திட்டம்
தீட்டும்போது, ஏன் வடநாட்டின் கவனம் மிகுந்திருந்தது.
தென்னாடுபற்றி ஏன் அக்கறையற்ற போக்கு, அலட்சியம் ஏற்பட்டது
என்பதற்கு அவரும் காரணம் கூறவில்லை; இங்கு உள்ளவர்களும்
கேட்கக் காணோம். உங்களுக்கு இரண்டாவது பந்தியிலே சாப்பாடு
போடப்படும் என்று விருந்து சாப்பிட்ட "தெம்பில்'' ஏப்பம்
விட்டபடி தேஷ்முக் கூறுகிறார். இங்குள்ள "பிக்ஷாந்தேஹி''களும்
ஏதோ பின் கட்டில் உட்காரவைத்துப் போட்டாலும் பரவாயில்லை,
பசி வயிற்றைக் கிளறுகிறது என்று கூறுகிறார்கள்!! இது தானே
ஆவடி தந்த அந்தஸ்து!
"பிக்ஷாந்தேஹி'' என்ற நாம்
சொன்னால் காங்கிரஸ் நண்பர்களுக்குக் கோபம் கொதித் தெழுகிறது.
ஆஹா! எங்களையா பிச்சைக்காரர்கள் என்ற ஏசுகிறீர்கள், என்பார்கள்.
மைசூர் ராஜ்ய முதலமைச்சர் பேசியிருக்கிறார் இது போல!!
டில்லி சர்க்காரின் போக்கை மைசூர் சட்ட சபையில் மிக வன்மையாகக்
கண்டித்துப் பேசுகிறார்! டில்லி, தென்னாட்டுத் தலைவர்களை,
அவர்களை இங்க நாம் பட்டேல் என்று புகழ்ந்தாலும் சரி, திலகர்
என்று கொண்டாடினாலும் சரி, அவருக்காகக் கச்சையை வரிந்து
கட்டிக் கொண்டு மேலே விழுந்து வேலை செய்தாலும் சரி அவர்
மேனியில் துளி தூசி பட்டாலும் என் கண்ணிலே மிளகாய்ப்பொடி
விழுவது போல உருகி இருக்கிறது என்று உருகிப் பேசினாலும்
சரி, "அவருடைய ஆட்சியை ஆதரிப்பதையே என் தவமாகக் கொண்டுவிட்டேன்'
என்று பேசிப் பணியாற்றி வந்தாலும் சரி, எப்படிப்பட்ட செல்வாக்கை
இங்கே பெறக்கூடியவராக இருந்தாலும், அந்தத் தலைவர்களை அங்கு
பிச்சைக்காரர்கள் போலத்தான் நடத்து கிறார்கள் என்பதை
உணர்ந்து, சற்றுக் கோபமாகவே பேசுகிறார்.
"மத்திய சர்க்காரிடம் நாம்
சொல்லும் போதெல்லாம், நாமும் நமது யோசனையைக் கூற வேண்டும்;
ஏதோ பிச்சைக்காக வாங்கப் போகும் போக்கிலே நடந்து கொள்ளக்
கூடாது.''
என்று இடித்துரைக்கிறார்.
இதன் பொருள் விளக்கமாக இருக்கிறதே, தம்பி! ஏன் காங்கிரஸ்
நண்பவர்களுக்கு மட்டும் விளங்கவில்லை! டில்லியில் தென்னகத்துத்
தலைவர்களைப் பிச்சை வாங்க வருபவர்களை நடத்துவதுபோல நடத்துகிறார்கள்
என்பதைத் தோழர் அனுமந்தையா, தனியான தோர் பாணியில் எடுத்துரைக்கிறார்.
"அவ்வப்போது, கடன் வேண்டும்,
மானியம் வேண்டும் என்றெல்லாம், மத்திய சர்க்காரிடம் கெஞ்சிக்
கேட்டபடி இருக்க வேண்டிய நிலைமை எப்படி இருக்கிற தென்றால்,
மத்திய சர்க்கார் "வசதிகளை'' குவித்து வைத்துக் கொண்டிருக்கிறது.
இதை வைத்துக் கொண்டு இராஜ்ய சர்க்காருக்கே உரிமையானதான
விஷயங்களில்கூட, இப்படிச் செய்யுங்கள் அப்படிச் செய்யுங்கள்
என்று வற்புறுத்துகிறது, கடன் தருகிறேன் மானியம் தருகிறேன்
என்று ஆசைகாட்டி!!
தன்னிடம் உள்ள ஏராளமான "வசதிகளை''
வைத்துக் கொண்டு, மத்திய சர்க்கார், மெள்ள மெள்ள, ஆனால்
வெற்றிகரமாக, இராஜ்ய சர்க்காரின் நடவடிக்கைகளிலே புகுந்து,
ஆதிக்கம் செலுத்துகிறது.
மத்திய சர்க்காரின் போக்கு
எப்படி இருக்கிறது என்றால், அமெரிக்கா, பணம் கடனாகவும்
இனாமாகவும் கொடுத்துத் தன் ஆதிக்கத்தை இங்கும் வேறு பல
நாடுகளிலும் புகுத்துகிறதே, அதுபோல இருக்கிறது.''
தம்பி! இவ்வளவும் கூறுபவர்,
வகுப்புவாதி, விஷமி அல்ல. பிற்போக்கு வாதியல்ல; காங்கிரஸ்காரர்
தான்! ஆனால் இவருக்கு முதுகெலும்பு இருக்கிறது. வடநாட்டுத்
தலைவர் களுக்கு வால்பிடித்தால் நமது அரசியல் வாழ்வு ஒளிவிடும்
என்ற அடிமைப் புத்தியில்லை. ஆகவே, அஞ்சாமல் நிலைமையைக்
கூறுகிறார். ஆவடி பார்! அதன் அற்புதம் கேள்! என்று தெம்மாங்கு
பாடிக் காட்டினாலும், காவடி தூக்கித் திரியும் நிலைக்குத்
தென்னாடு வருவது கண்டு மனம் வெதும்பிப் பேசுகிறார்.
பிச்சைக்காரரை நடத்துவது
போல நடத்துகிறார்கள்.
இராஜ்ய விவகாரங்களிலே நுழைந்து
ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
அமெரிக்கா பணத்தை வீசி,
பல்லிளிக்கச் செய்து, தன் படைவீடாகப் பல நாடுகளை அமைத்துக்
கொள்வது போல டில்லியும் செய்கிறது.
இவ்வளவு குற்றச்சாட்டுகளை
ஏவுகிறார் தோழர் அனுமந்தையா!
ஆவடிகள் நடத்துவதால் கிடைக்கும்
பலன் இதுதானே, தம்பி! வேறென்ன?
திருவிதாங்கூர்-கொச்சியில்,
முதலமைச்சராக முன்பு இருந்த தோழர் கேசவன் என்பவர் ஓரிரண்டு
திங்களுக்கு முன்பு மலாய் நாடு சென்றார். கோலாலம்பூரில்
மலையாளிகள் அவருக்கு வரவேற்பும் விருந்தும் நடத்தினர்.
அங்கு அவர் பேசியது என்ன தெரியுமா? ஆவடியின் பெருமையைப்பற்றியும்
அலகாபாத் பண்டிதரின் அளவற்ற செல்வாக்கைப் பற்றியுமா? இல்லை;
இல்லை டில்லியின் மாற்றாந் தாய்ப் போக்கினைக் குறித்துத்தான்
பேசினார். தாயகத்திலிருந்து வந்த தலைவரை, வாழ்த்தி வரவேற்று,
ஏதோ நாங்கள்தான் பிழைப்புக்கு வழிதேடிக் கொண்டு இந்தக்
கண்காணாச் சீமைக்கு வந்து சேர்ந்தோம், அங்கே தாயகம் தலைகள்
ஒடித்தெறியப்பட்ட நிலையில் தன்னரசு நடத்துகிறதே, தரணியெங்கும்
பரணி பாடிவரும் நேரு பண்டிதரின் ஆட்சி நடக்கிறதே, எப்படி
இருக்கிறது? தாயகம் இன்பம் வழிந்தோட வேண்டுமே? என்று
கேட்கிறார்கள். தோழர் கேசவன் முன்னாள் முதலமைச்சர், அதையா
கேட்கிறீர்கள் அன்பர்களே? என்று கூறி பெருமூச் செறிகிறார்.
"நாங்கள் புதிய கைத்தொழில்களைத்
தொடங்க இடையறாது மத்திய சர்க்காரின் உதவியை நாடி வந்திருக்கிறோம்.
ஆனால் ஒவ்வொரு புதிய கைத்தொழிலும் வடஇந்தியாவிலே தொடங்கப்படுகிறது.
பிரம்மாண்டமான பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் தற்போது,
பம்பாய்க்கு அருகில் உள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு
வருவதையும், மண் ஆராய்ச்சிப் பாக்டரியும் அப்பகுதியில்
அமைக்கப்படுவதையும் இதற்கு உதாரணமாகக் காட்டலாம். மத்திய
அரசாங்கம் இத்தகைய மாற்றாந்தாய்ப் போக்கை அனுஷ்டிப்பது
கண்டிக்கத் தக்கதாகும்.'' தோழர் கேசவன் என்பவரின் பேச்சு,
இது!! கண்டிக்கத்தக்கது என்கிறார், காரணமும் காட்டுகிறார்.
கண்டனம் பிறக்கிறது, அது பிறவாதிருக்கத் தான் ஆவடி அலங்காரம்
காட்டப்பட்டது.
ஆவடி மூலம், காவடி தூக்கிகளாக
இருக்கத் தென்னாடு இசைகிறதா, இணங்குகிறதா, என்பதுதான்
பரிட்சை பார்க்கப்பட்டது. இந்தச் சூட்சமத்தைப் புரிந்து
கொள்ளாமல் ஆவடியைப் பார்த்தீர்களா, என்று கண்ணையும் வாயையும்
அகலத் திறந்து கொண்டு, அன்பர் சிலர் கேட்கிறார்கள். என்ன
செய்யலாம் தம்பி! அவர்களின் மனமயக்கம் தெளிய வேண்டும்
- அதற்கான முறையில் நாம் பணியாற்ற வேண்டும்.
அன்புள்ள,

5-6-1955